-சேக்கிழான்
மகாகவி பாரதியின் படைப்புகளில் மிகவும் முக்கியமான தொகுப்பு, பாரதியின் கருத்துப் படங்கள் என்ற இந்த அற்புதமான தொகுப்பாகும். ‘இந்தியா’ பத்திரிகையில் மகாகவி பாரதி அறிமுகம் செய்த கருத்துப்படங்கள் குறித்த விவரங்களுடன், அரிதின் முயன்று சேகரித்த கருத்துப்படங்களைத் தொகுத்து நூலாக்கி இருக்கிறார் ஆ.இரா.வேங்கடாசலபதி.

பாரதியின் கருத்துப்படங்கள் ‘இந்தியா’ 1906- 1910 பதிப்பாசிரியர்: ஆ.இரா.வேங்கடாசலபதி முதற்பதிப்பு: 1994 விற்பனை உரிமை: நர்மதா பதிப்பகம், சென்னை. 210 பக்கங்கள் / விலை: ரூ. 50-
மகாகவி பாரதியின் இதழியல் மேதைமையை வெளிப்படுத்தும் அற்புதமான ஆவணம் இந்த நூல். பேராசிசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி தனது இளமைப்பருவத்தில், 27 வயதில் நடத்திய சீரிய ஆராய்ச்சியும் தேடுதலும் விளைவித்த அரிய ஆபரணம் இந்த நூல். உண்மையில் இதனை அரசு சார்ந்த ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் செய்திருக்க வேண்டும். ஆனால், நமது நாட்டில் இதுபோன்ற அரும்பணிகளை பல்கலைக்கழகங்களால் செய்ய இயலாது என்பதுதான் நிதர்சனம்.
மகாகவி பாரதியை ஒரு கவிஞராக அறிந்துள்ள அளவிற்கு அவரது பிற துறை சார்ந்த எழுத்துலக ஆளுமையை தமிழகம் இன்னமும் அறியவில்லை. அதிலும் குறிப்பாக, அவரது இதழியல் பணிகள் தன்னிகரற்றவை. 1904 முதல் 1921 வரை அவரது இதழியல் எழுத்துகள் அந்நிய ஆதிக்கத்திற்கு எதிரான முழக்கமாகவும், சமுதாய மேம்பாட்டிற்கான கனவுகளாகவும், எதிர்கால நாட்டிற்குப் பிறப்பித்த ஆணைகளாகவும் அமைந்திருக்கின்றன.
பிற நாடுகளின் பத்திரிகைகளில் நிகழும் செய்தி பரப்பும் தன்மைகளையும் மாற்றங்களையும் நூறு ஆண்டுகளுக்கு முன்னமே அவதானித்து, அவற்றை தான் நடத்திய பத்திரிகைகளிலும் நடைமுறைப்படுத்தி, தமிழ் எழுத்துலகிற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் மகாகவி பாரதி. அதில் ஒரு சிறப்பான அம்சம்தான், தமிழ் இதழியலுக்கு மகாகவி பாரதி அறிமுகம் செய்த கருத்துப்படங்கள் (கார்ட்டூன்கள்).
1906 மே 9இல் சென்னையில் பாரதி நண்பர்களுடன் இணைந்து தொடங்கிய ‘இந்தியா’ வாரப் பத்திரிகை ஏகாதிபத்திய ஆங்கிலேய அரசுக்கு எதிரான அரசியல் விழிப்புணர்வுப் பத்திரிகையாக விளங்கியது. ஆங்கிலேய அரசால் தடை செய்யப்பட்டு, 1908 செப்டம்பர் 5ஆம் தேதி இதழுடன் சென்னையில் ‘இந்தியா’ பத்திரிகையின் சுவாசம் நிறுத்தப்பட்டது.
ஆயினும், புதுவைக்குத் தப்பிச் சென்ற மகாகவி பாரதி, அங்கிருந்து 1908 அக்டோபர் 10இலிருந்து ’இந்தியா’ இதழை வெளிக்கொணர்ந்தார். ஆங்கிலேய அரசின் அடக்குமுறைகளால் நிறுத்தப்படும் வரை (1910 மார்ச் 12) ‘இந்தியா’ இதழ்கள் வெளியாகி வந்தன. எனினும், அவற்றின் பல பிரதிகள் இப்போது நமக்குக் கிடைக்கவில்லை.

பாரதியின் இதழியல் பணிகளை ஆராய்வது தமிழில் தனியொரு ஆராய்ச்சித் துறையாகவே வளர்ந்துள்ளது. வ.ராமசாமி, ரா.அ.பத்மநாபன், பெ.சு.மணி, பெரியசாமி தூரன், சேக்கிழார் அடிப்பொடி டி.என்.ராமசந்திரன், பிரேமா நந்தகுமார், சீனி.விஸ்வநாதன் என ஒரு பெரும் ஆய்வாளர் தலைமுறையே இப்பணியில் தன்னை ஒப்புக்கொடுத்து ஈடுபட்டுள்ளது. அதன் அடுத்த தலைமுறையில் வருபவர்களில் ய.மணிகண்டன், ஆ.இரா.வேங்கடாசலபதி, கடற்கரை மத்தவிலாச அங்கதம் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்கள் பாரதியின் எழுத்துலகப் பணிகளை வியந்து பாராட்டும் பிற எழுத்தாளர்கள் போலல்லாது, பாரதியின் படைப்புகளைத் தேடித் தேடி தொகுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள். இத்தகையோரின் முயற்சியால்தான், பாரதியின் அரிய பல பொக்கிஷங்கள் நமக்கு தொடர்ந்து கிடைத்து வந்துள்ளன.
அவற்றில் மிகவும் முக்கியமான தொகுப்பு, பாரதியின் கருத்துப் படங்கள் என்ற இந்த அற்புதமான தொகுப்பாகும். ‘இந்தியா’ பத்திரிகையில் மகாகவி பாரதி அறிமுகம் செய்த கருத்துப்படங்கள் குறித்த விவரங்களுடன், அரிதின் முயன்று சேகரித்த கருத்துப்படங்களைத் தொகுத்து நூலாக்கி இருக்கிறார் ஆ.இரா.வேங்கடாசலபதி.
இந்த கருத்துப்படங்களின் பின்னணி, வெளியான இதழின் தேதி, அதன் அருகில் பாரதி அளித்த சித்திர விளக்கம், தலைப்பு, விரிவான செய்தி விளக்கம் ஆகியவை இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. பாரதியின் கருத்துப்பட இதழியலை அறிவதற்கான முதல் நூல் இதுவே.
‘இந்தியா’ இதழின் முதல் பக்கத்தில் ஓவியம் வரைபவரைக் கொண்டு கருத்துப்படம் வரையச் செய்து, சித்திர விளக்கத்துடன் வெளியிட்ட மகாகவி பாரதி, அதுகுறித்த விரிவான செய்தியையும் இதழின் உள்ளே குறிப்பிட்டிருக்கிறார். இவ்வாறு நமக்குக் கிடைத்த /இந்தியா’இதழ்களிலிருந்து தொகுக்கப்பட்ட கருத்துப்படங்களின் அரிய சேகரிப்பு நூல் இது. ஹிந்தியில் வெளியான ‘ஹிந்தி பன்ச்’ பத்திரிகை, பாரதிக்கு இவ்விஷயத்தில் உந்துசக்தியாக இருந்திருக்கலாம் என்று தெரிகிறது.
‘தமிழ் இதழியலில் கருத்துப் படங்கள், பாரதியின் கருத்துப் படங்கள்: வரலாற்றுப் பின்னணி’ ஆகிய முன்னுரைக்கும் அத்தியாயங்களில் ஆராய்ச்சியாளர் சலபதியின் கடின உழைப்பும் நுண்மாண் நுழைபுலமும் புலப்படுகின்றன. இந்நூலில் 87 கருத்துப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
தனது கருத்துப்பட உத்தி குறித்து மகாகவி பாரதியே ‘இந்தியா’ இதழில் (புதுவை – 13 மார்ச் 1909) எழுதியிருப்பதை கீழே கானலாம்:
தமிழ்நாட்டு வர்த்தமானப் பத்திரிகைகளிலே நமது பத்திரிகையொன்றுதான் விகட சித்திரங்கள் பதிப்பித்து வருவதென்ற விஷயம் நேயர்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் அடுத்த வாரம் முதல் இன்னுமொரு புதிய அலங்காரம் நமது பத்திரிகைக்குச் செய்ய கருதியிருக்கிறோம். அதாவது, தலைப்பக்கத்திலுள்ள ஒரு சித்திரம் மட்டுமேயன்றி, பக்கத்துக்குப் பக்கமுள்ள முக்கியமான வர்த்தமானங்களை விளக்குவதன் பொருட்டு அங்கங்கே சிறிய படங்களும் சித்திரங்களும் போடுவதாக உத்தேசம். தென்னிந்தியாவிலே இம்மாதிரி ஏற்பாடு தமிழ், இங்கிலீஷ், தெலுங்கு, கன்னடம் முதலிய எந்த பாஷைப் பத்திரிகையிலும் இதுவரை கிடையாது. நாம் நூதனமாகச் செய்யப் போகிறோம். ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சம்தான் செய்ய முடியும். நாளாக நாளாக மிகுந்த அபிவிருத்தியாகும். ஆனால் இது போன்ற காரியங்களுக்கு பணம் மிகுதியாகச் செலவாகும். அதுபற்றி நாம் சந்தாத் தொகையை உயர்த்தப்போவது கிடையாது. நமது சந்தாதாரர்களில் ஒவ்வொருவரும் இன்னும் அனேகரைச் சேர்த்து விடுவத்ற்கு மனதோடு உழைக்க வேண்டுமென்ற ஒரு விண்ணப்பம் மட்டும் செய்து கொள்கிறோம்.
கால ஊழியில் மாயமாகிவிட்ட ‘இந்தியா’ இதழ்களைக் கண்டறிந்து இவற்றைத் தொகுப்பதென்பது இமாலயப்பணி என்பது சொல்லாமலே விளங்கும். திரு. ஸி.எஸ்.சுப்பிரமணியம், திரு. ரா.அ.பத்மநாபன், திரு. கி.வா.ஜகந்நாதன் ஆகியோர் வைத்திருந்த இதழ்த் தொகுப்புகள், புதுவை மகாகவி பாரதி அருங்காட்சியகம், மறைமலையடிகள் நூலகம், கல்கத்தா தேசிய நூலகம் எனப் பல இடங்களில் தேடிக் கண்டறியப்பட்டவை இந்தக் கருத்துப்படங்கள். எனினும் சுமார் 60 ‘இந்தியா’ இதழ்கள் கிடக்கப் பெறவில்லை என்று சலபதி குறிப்பிட்டிருப்பது, நமது பெருஞ்செல்வத்தின் இழப்பே.
இந்த நூலை மேலும் சிறப்பாக அச்சிட்டு இதழியல் பயிலும் மாணவர்களுக்கு பாடத்திட்ட நூலாக வைக்க வேண்டும். இது அரசின் கடமை. ஆ.இரா.வேங்கடாசலபதியின் ஆய்வுப் பணிகளில் இந்நூல் ஒரு மணிமகுடம் எனில் மிகையில்லை.
$$$