‘குடியுரிமைச் சட்டத்தால் முஸ்லிம்களுக்கு பாதிப்பு இல்லை’

-சுப்பிரமணியன் சுவாமி

கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன்பு இந்தியாவில் அடைக்கலம் புகுந்த ஹிந்துக்கள், சீக்கியர்கள், பௌத்த மதத்தினர், சமண மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்தச் சட்டம் வழிவகுக்கிறது.  இந்தச் சட்டம் இயற்றப்பட்டு 4 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இச்சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது

குடியுரிமை பெற மதம் முக்கிய காரணியாக இருப்பதாகவும், இஸ்லாமியர்கள் இதில் புறக்கணிக்கப்படுவதாகவும்  கூறி இச்சட்டத்துக்கு நாடு முழுவதும் சிலரால் சர்ச்சை கிளப்பப்பட்டது.

இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு இச்சட்டம் குறித்து பாஜக (முன்னாள்) எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி விளக்கிப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் சுப்பிரமணியன் சுவாமி கூறி இருப்பதாவது:

இந்தியா – பாகிஸ்தான் பிரிக்கப்பட்ட போது, பிரிட்டிஷ் அரசு “நாங்கள் இரண்டு நாடுகளை உருவாக்குகிறோம். ஒன்று, பாகிஸ்தான். அது முஸ்லிம் ஆட்சியிலான நாடு. இரண்டாவது இந்தியா. அது ஹிந்து ஆட்சியிலான நாடு” என்று கூறியது.

ஆனால், மகாத்மா காந்தி மற்றும் பல காங்கிரஸ் தலைவர்கள் அப்போது “முஸ்லிம்கள் இந்தியாவிலேயே வாழ விரும்பினால் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்கிறோம்” என்று சொன்னார்கள்.

இப்படித்தான் சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவின் பயணம் ஆரம்பமானது. பாகிஸ்தானில் ஹிந்துக்கள் துன்புறுத்தப்பட்டனர். அவர்களது சொத்துகள் சூறையாடப்பட்டன. பெண்கள் கடத்தப்பட்டனர்.

அந்த சமயத்தில் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு, பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகானை சந்தித்தார். “நாங்கள் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பை உறுதி செய்கிறோம். அதற்கான சட்டங்களை உருவாக்குகிறோம். நீங்களும் அதேபோல பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று ஒப்பந்தம் மேற்கொண்டார். ஆனால், பாகிஸ்தான் அதைப் பின்பற்றவில்லை. லியாகத் அலிகானே சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தச் சூழலில், பாகிஸ்தானில் மத ரீதியான துன்புறுத்துலுக்கு உள்ளான மக்கள், அங்கிருந்து இந்தியாவுக்கு வரத் தொடங்கினர். பிற்பாடு, பாகிஸ்தானிலிருந்து வங்கதேசம் பிரிந்த பிறகும் அங்கிருந்து மக்கள் இங்கு வந்தனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆதிக்கம் அதிகரித்ததைத் தொடர்ந்து அங்கிருந்தும் மக்கள் இந்தியா வந்தனர்.

அந்தச் சமயத்தில் அவர்களை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ், “நீங்கள் இந்தியாவில் வசிக்கலாம். ஆனால், குடியுரிமை பெற முடியாது” என்று கூறியது. அம்மக்களிடம் அடையாள அட்டை இல்லாததால், அவர்களுக்கு இந்தியாவில் வேலை கிடைக்கவில்லை. அவர்களது குழந்தைகள் நல்ல கல்வி கற்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இந்நிலையில் “இம்மக்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான நடவடிக்கையை எடுங்கள்” என்று என்று 2003-ஆம் ஆண்டு அப்போது மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் பாஜகவை நோக்கிப் பேசினார். ஆனால், இன்று அவர்கள் இந்தச் சட்டம் தொடர்பாக பல்டி அடித்துள்ளனர். இந்தச் சட்டத்தை எதிர்த்து பிரசாரம் செய்கின்றனர்.

ஆனால், நாங்கள் (பாஜக) மதத் துன்புறுத்தலால் இந்தியாவில் குடியேறிய மக்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை வழங்க விரும்புகிறோம். அதற்காகவே குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டு வருகிறோம். இந்தச் சட்டத்தில் ஏன் முஸ்லிம்கள் சேர்க்கப்படவில்லை என்று எதிர்த்தரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தால் முஸ்லிம்களுக்கு பாதிப்பு இல்லை.

மத்திய அரசின் கணக்கீட்டின்படி, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து மதத் துன்புறத்தலால் இந்தியாவில் குடியேறி, குடியுரிமை இல்லாமல் வசித்து வருபவர்களின் எண்ணிக்கை 31,300 அளவிலேயே உள்ளது. இவர்களில் 25,000 பேர் இந்துக்கள்; 5,000 பேர் சீக்கியர்கள்; 1,000 பேர் கிறிஸ்துவர்கள். தவிர, புத்த மதத்தினரும், பார்சிகளும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர். ஆனால், இந்தப் பட்டியலில் ஒரு முஸ்லிம் கூட இல்லை. பிறகு எப்படி, இந்தச் சட்டத்தில் முஸ்லிம்களை உள்ளடக்குவது?

இந்தச் சட்டத்தில் சமத்துவம் கடைபிடிக்கப்படவில்லை என்று விமர்சிக்கின்றனர். நான் பிராமணன்.  “பட்டியலினத்தவருக்கு வழங்கும் இடஒதுக்கீட்டை ஏன் பிராமணர்களுக்கு வழங்கவில்லை; ஏன் பாரபட்சம் காட்டுகிறீர்கள்? அவர்களைப் போல எங்களுக்கும் இடஒதுக்கீடு தாருங்கள்” என்று நான் கோரிக்கை வைக்க முடியுமா? பட்டியலினத்தவர்கள் எதிர்கொண்ட சிரமங்களை பிராமணர்கள் எதிர்கொள்ளவில்லை. இருவருக்குமான வாய்ப்புகள் சமமானதாக இல்லை. எனவேதான், பட்டியலினத்தவர்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் பலமுறை கூறியுள்ளது.

அதேபோலத் தான், பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தானில் மத்த் துன்புறுத்தல்களால் முஸ்லிம்கள் பாதிக்கப்படவில்லை. அதனால், அவர்கள் குடியுரிமைச் சட்டத்தில் சேர்க்கப்படவில்லை.

இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி குடியுரிமைச் சட்டம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

$$$

Leave a comment