ராமாயண சாரம்- 32

-ச.சண்முகநாதன்

32. பலசுருதி

“இராவணன் தன்னை வீட்டி, இராமனாய் வந்து தோன்றி,
தராதலம் முழுதும் காத்து, தம்பியும் தானும் ஆகப்
பராபரம் ஆகி நின்ற பண்பினைப் பகருவார்கள்
நராபதி ஆகி, பின்னும் நமனையும் வெல்லுவாரே.”

ராமன் கதை கேட்டவர்கள், சொன்னவர்கள், இந்த நல்ல செயலினால், மனிதருக்குத் தலைவராகி, யமனை வெல்லும் தன்மையும் பெறுவார்கள்.

இந்த ராமாயண மாதம் (ஆடி மாதம்) முழுவதும் ராமாயண, ராம சிந்தனையில் மனம் செல்ல வேண்டும் என்கிற எண்ணம் தோன்றியது. இதை அனைவரிடமும் பகிர்ந்து, கூடியிருந்து, ராம சிந்தனையில் திளைப்பது இன்னும் தித்திப்பானது.

தொடர்ந்து படித்து வந்த அனைவருக்கும் நன்றி.

இப்பெருங்காப்பியத்தை, நமக்களித்த வாலமீகி முனிவருக்கு குரு வந்தனங்கள்.

கம்பன் – உள்ளமெல்லாம் நிறைகிறது, இந்தப் புண்ணியன் பெயரைச் சொன்னாலே.

அனுமனுக்கு சீதையைப் பார்த்த மாத்திரத்தில் பேச்சு வரவில்லை, அதே போல கம்பன் என்ற சிந்தனை வரும் பொழுதே மனம் நிறைகிறது.

நன்றி கம்பரே!

கம்பனின் தமிழ் ஒரு பக்கம், தியாகராஜ ஸ்வாமிகளின் கீர்த்தனைகள் மறுபக்கம் என்று நம்மை செம்மைப்படுத்தும் இரண்டு விஷயங்கள் நம்மைச் சுற்றிலும் இருக்கின்றன. இரண்டையும் படித்து, கேட்டு வாழ்வை இனிதாக்குவோம்.

தியாகராஜரின்  “சரச சாம, தான, பேத, தண்ட சதுர” என்ற காபிநாராயணி ராகக் கீர்த்தனையில்,  

“ராமா, இணையில்லாதவனே. சாம, தான, பேத, தண்டத்தை எப்பொழுது உபயோகப்படுத்த வேண்டும் என்று தெரிந்து, எதிரியை வெல்ல வல்லவன் நீ. ராவணன் உண்மையைப் புரிந்துகொள்ளவில்லை. அவனுக்கு தூது அனுப்பினாய். சமாதானம் செய்ய அழைப்பு விடுத்தாய். அவன் எதற்கும் செவி சாய்க்கவில்லை. எனவே தண்டத்தை எடுத்து தண்டித்தாய்; விபீஷணனை இலங்கைக்கு மன்னனாக முடிசூட்டி வைத்தாய். சாம, தான, பேத, தண்டத்தை எப்பொழுது உபயோகப்படுத்த வேண்டும் என்று  தெரிந்து, எதிரிகளை வெல்ல வல்லவன் நீ. என்னையும் காப்பாயாக”

-என்று பாடுகிறார்.

ராமாயணத்தின் யுத்த காண்டத்தின் சுருக்கமே இந்தக் கீர்த்தனை.

இந்தத் தொடரை, இந்தக் கீர்த்தனையை வாசிப்பதுடன் நிறைவு செய்யலாம் என்ற எண்ணம் தோன்றியது.

வாழிய, சீர் இராமன்! வாழிய, சீதை கோமான்!
வாழிய, கௌசலை மணி வயிற்று உதித்த வள்ளல்!
வாழிய, வாலி மார்பும் மராமரம் ஏழும் சாய,
வாழிய கணை ஒன்று ஏவும் தசரதன் மதலை வாழி!

நன்றி.

சுபம்!

$$$

Leave a comment