-ச.சண்முகநாதன்

22. கண்டேன் சீதையை!
சீதையிடம் “கவலையை விடுங்கள் தாயே. நான் சென்று நீங்கள் இருக்குமிடம் சொன்ன மறு கணம் ராமன் புயலெனப் புறப்பப்பட்டு வருவான். தீயவரை அழித்து உங்களை மீட்பான் ஆண்மையின் இலக்கணமான நம் ராமன்” என்று சொல்லிவிட்டு விடைபெறுகிறான்.
“..யான், விரைவின் வீரனைக் காண்டலே குறை; பினும் காலம் வேண்டுமோ?”
ஊர் திரும்பும் முன் “அன்னை சீதையை கொடுமைக்கு ஆளாக்கியவனை இப்படியே சும்மா விட்டுவிட்டு போகக் கூடாது. ரெண்டு அப்பாவது அப்பி விட்டு போகணும்” என்று மனதுக்குள் ஒரு சஞ்சலம் அனுமனுக்கு. ஒரு ‘காட்டுக் காட்டுவது’ என் கடமை. அதுவே இந்தப் போருக்கு நல்லதொரு ஆரம்பமாகட்டும். என்று நினைத்து அசோகவனத்தை அழிக்க நினைக்கிறான்.
“ஓட்டி இவ் அரக்கரை உலைத்து, என் வலி எல்லாம் காட்டும் இதுவே கருமம்; அன்னவர் கடும் போர் மூட்டும் வகை யாவதுகொல்?”
ராமனின் சிறந்த பக்தன் அல்லவா அனுமன்? கோபத்தில், உண்டு இல்லை என்று பண்ணிவிடுகிறான். ராவணன், சீதைக்கும் ராமனுக்கும், செய்த கொடுமைக்குப் பதில் சொல்லும் விதமாய் துவம்சம் செய்கிறான். அனுமனின் பராக்கிரமத்தை கம்பன் (at his best) தமிழில் வானளாவிய கவிதை செய்து வைத்திருக்கிறான்.
கால்சட்டையிலேயே one bathroom போகும் அளவுக்கு நடுங்கிப் போய் விட்டனர் ராவணனின் காவலர்கள்.
கம்பன் அவர்களை ‘நீரிடு துகிலர்’ என்றழைக்கிறான்.
பயந்து போன காவலர்கள் ராவணனிடம் சென்று நடந்ததைக் கூற, ராவணன் “சுத்த கோழைகளாக இருக்கிறீர்களே! அது ஒரு குரங்குதானே. போய் பிடித்து வாருங்கள்” என்று அலட்சியமாக ஆணையிடுகிறான்.
காலர்களுக்கு அனுமனின் ஆற்றல் தெரிந்ததால் அவர்கள் பெரும்படை திரட்டிக்கொண்டு அனுமனைப் பிடிக்க ஓடி வருகிறார்கள். அனுமனுக்கு அவர்கள் ஓடி வரும் சத்தம் நன்றாக கேட்கிறது.
“வயிர் ஒலி, வளை ஒலி, வன் கார் மழை ஒலி முரசு ஒலி, மண்பால் உயிர் உலைவுற நிமிரும் போர் உறும் ஒலி, செவியின் உணர்ந்தான்;”
தன்னுடைய திட்டம் பலித்ததற்கு மகிழ்ச்சி கொள்கிறான் அனுமன். சுழன்று அடிக்கிறான் ராமதூதன். ராவணனுக்கு செய்தி போய்க்கொண்டே இருக்கிறது, அனுமனின் சாகசம் பற்றி. இந்திரஜித் போரில் அனுமனை எதிர்கொண்டு இறுதியில் பிரம்மாஸ்திரத்தைப் பிரயோகிக்க அனுமனை அது கட்டிச் சாய்க்கிறது.
அனுமனைக்கட்டி இழுத்துச் செல்கின்றனர், வீதி வழியே. ராவணன் சபைக்கு அனுமன் இழுத்துச் செல்லப்படுகிறான். ராவணன் அனுமனைப் பார்த்து ” “யாரை நீ? என்னை, இங்கு எய்து காரணம்? ஆர் உனை விடுத்தவர்?” என்று கேட்கிறான்.
அனுமன் “நான் ராமதூதன். ராமன் உன்னிடத்தில் சொன்ன செய்தி ‘சீதையைத் தருக’ என்ற ஒற்றைச்செய்தி” என்று சொல்ல, ராவணன் கோபம் கொண்டு ‘கொல்லுங்கள்’ என்று ஆணையிட, விபீஷணன் ‘தூதுவரைக் கொல்லக் கூடாது’ என்று நீதி சொல்ல, “அதுவும் சரிதான், இவன் வாலில் தீ வைத்து நகரின் எல்லையில் விட்டு விடுங்கள்” என்கிறான் ராவணன்.
‘தொல்லை வாலை மூலம் அறச் சுட்டு, நகரைச் சூழ்போக்கி, எல்லை கடக்க விடுமின்கள்’ என்றான்;
கயிற்றால் கட்டி அனுமனை நகரம் முழுவதும் இழுத்து சென்று அவன் வாலில் தீவைத்தனர் தீயவர். தூயவள் சீதையின் காதுக்கு செய்தி எட்ட, அவள் மனம் வருந்தி அக்கினி பகவானை நோக்கி “தொழுகின்றேன் எரியே! -அவனைச் சுடல்” என்று வேண்டிக் கொள்கிறாள். கற்புக்கரசி சீதை சொல் கேட்டு நெருப்பு அனுமன் உடலை சுடவில்லை. “தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை” என்று வள்ளுவர் சொன்னது ராமாயணம் படித்துத் தானோ!
இதுதான் சமயம் என்று அனுமன் வெகுண்டு எழுகிறான். வாலில் ஒட்டி இருந்த தீயை “பொன் நகர் மீதே, தன் போர் வாலினைப் போக விட்டான்” இலங்கையை எரியூட்டிய பின்னர் அங்கிருந்து ராமன் இருக்குமிடம் வருகிறான் அனுமன்.
நெகிழ்ச்சியான தருணம். ராமனிடம் “கண்டேன் சீதையை!” என்று சொல்ல வேண்டும். உணர்ச்சிகள் மேலோங்கும் இடம். தன் உயிரான சீதை எங்கிருக்கிறாள் என்று தெரியாமல் தடுமாறும் ராமனிடம் “சீதாபிராட்டி இருக்குமிடம் கண்டுகொண்டேன்” என்பதை எப்படி வார்த்தைகளால் சொல்வது?
அந்த உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளால் ஒலி வடிவம் கொடுக்க முடியுமா? கண்கள் மட்டும் பேசிக் கொண்டது ராமாயணத்தில் பல இடங்களில். அவற்றில் இது மிக முக்கியமான காட்சி.
அனுமன் வந்த சேதி கேட்டு ராமன் “என்ன செய்தியாக இருக்குமோ?” என்று பயம் கலந்த ஐயத்துடன் அனுமனைப் பார்க்கிறான். அனுமன் உணர்ச்சி மிக்கவனாய் கண்ணில் நீர் வர, எதுவும் பேசாமல், சீதை இருக்கும் தென் திசையை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டு, விழுந்து வணங்கினான்.
“கண்டேன் சீதையை!” என்ற செய்தியை முதலில் வார்த்தையாகச் சொல்லவில்லை, கண்ணீரால் செய்தி கடத்தினான் அனுமன். அது கண்ட ராமனும் கண்களை மூடி, பெருமூச்சு விட்டவனாய், “இவன்
கண்டதும் உண்டு; அவள் கற்பும் நன்று” என்று மகிழ்ச்சி கொண்டான்.
“கண்டனென், கற்பினுக்கு அணியை, கண்களால், தெண் திரை அலை கடல் இலங்கைத் தென் நகர்”
என்று சீதையின் சிறை இருக்குமிடம் சொல்ல “இது போதும். Ravanan will pay for it dearly” என்று மனதில் சீதையின் மீது காதல் பெருக்கி, அரக்கர் குலம் அழிய வேண்டிய நேரம் வந்து விட்டது என்று எண்ணி நடக்கவேண்டிய காரியங்களைச் செய்கிறான்.
தெற்கு கடல் நோக்கி விரைகின்றது ராம சேனை.
(தொடர்கிறது)
$$$