-சேக்கிழான்

பகுதி-9: செங்கோலை விடக் குளிர்ந்த என்னவளின் தோள்கள்
.
10. எட்டுத்தொகை அக நூல்களில் செங்கோல்
சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகை நூல்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இதில் அடங்கிய ஒவ்வொரு நூலும், பலரால் பல காலகட்டங்களில் எழுதப்பட்டு, பின்னர் ஒருசேரத் தொகுக்கப்பட்டது. இதன் தொகுப்பு வரிசையைக் காண்கையில், மிகச் சிறந்த கற்றறிந்தோர் குழுவிடம் புலவர்களின் படைப்புகள் முன்வைக்கப்பட்டு, தேர்ந்த திறனாய்வின் அடிப்படையில் இவை தொகுக்கப்பட்டிருப்பதை உணர முடிகிறது.
எட்டுத்தொகை நூல்களில், 2,352 பாடல்களை 700 புலவர்கள் பாடியுள்ளனர். இவர்களில் 25 அரசர்களும், 30 பெண்பாற் புலவர்களும் உண்டு. ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்களின் எண்ணிக்கை 102.
எட்டுத்தொகை நூல்கள்: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு.
இவற்றில் பதிற்றுப்பத்தும் அகநானூறும் புறப்பாடல்களைக் கொண்டவை. பரிபாடல் அகமும் புறமும் கொண்டது. மீதமுள்ள ஐந்து நூல்களும் அகப் பாடல்களால் ஆனவை. இவற்றில் கலித்தொகை கலிப்பாவால் ஆனது. பரிபாடல், துள்ளலோசை மிகுந்த தனித்த யாப்பு வகையாகவும் நான்கு பா வகை இணைந்தும் அமைந்தது. பிற நூல்கள் அனைத்தும் ஆசிரியப்பாவால் அமைந்தவை.
இந்த அத்தியாயத்தில் நாம், எட்டுத்தொகை நூல்களில் அகப்பாடல்கள் கொண்ட ஐந்து நூல்களில் (நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு) பயின்று வரும் செங்கோல் குறித்த செய்திகளைக் காணலாம்…
***
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும் ‘திணை’ என்னும் பெயரும் சேர்ந்து நற்றிணை என்னும் பெயரால் இந்நூல் வழங்கப்படுகிறது. இந்நூல் 9 அடி முதல் 12 அடிகள் வரை அமைந்த 400 பாடல்களைக் கொண்டது. இதைத் தொகுத்தவர் யார் என தெரியவில்லை; தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி ஆவார். இதனை ‘நற்றிணை நானூறு’ என்றும் கூறுவர்.
நற்றிணைப் பாடல்கள் அக்காலச் சமூகத்தை அறிய பெரிதும் துணை புரிகின்றன. மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, கொடைத்தன்மை, கல்வியாளர்களின் சிறப்பு, மக்களின் வாழ்க்கை முறைகள், நம்பிக்கைகள், சடங்குகள் போன்றவற்றை இவை உணர்த்துகின்றன.
—
4 அடி முதல் 8 அடிகளால் ஆன 401 சிறிய அகப் பாடல்களின் தொகுப்பே குறுந்தொகை. இதனைத் தொகுத்தவர் பூரிக்கோ. இத்தொகுப்பில் உள்ள பாடல்களை 206 புலவர்கள் பாடியுள்ளனர். எட்டுத்தொகை நூல்களுள் முதலில் தொகுக்கப்பட்ட நூல் இதுவே. இந்நூலுக்கு கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
—
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணைகள் ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம், 500 அகத்திணைப் பாடல்கள் கொண்ட நூல் ஐங்குறுநூறு. இந்நூலில் உள்ள பாடல்களின் அடிகள் 3 அடி முதல் 6 அடி வரை. ஆசிரியப்பாவால் ஆன இந்நூலுக்கு கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். தொகுத்தவர்: புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்; தொகுப்பித்தவர்: யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்ற சேர மன்னன்.
—
கற்றறிந்தார் புகழும் கலித்தொகை, ஐந்து திணைகள் தொடர்பாக, ஒவ்வொரு திணைக்கும் ஒரு புலவர் பொறுப்பேற்று எழுதிய, மொத்தம் 150 பாடல்களைக் கொண்டது. பிற அகத்திணை நூல்கள் கூறாத கைக்கிளை (ஒருதலைக் காமம்), பெருந்திணை (பொருந்தாக் காமம்), மடலேறுதல் ஆகியவை கலித்தொகையில் மட்டுமே இடம்பெறுகின்றன.
36 பாலைக்கலிப் பாடல்களை பெருங்கடுங்கோவும், 29 குறிஞ்சிக்கலிப் பாடல்களை கபிலரும், 35 மருதக்கலிப் பாடல்களை மதுரை மருதன் இளநாகனாரும், 17 முல்லைக்கலிப் பாடல்களை சோழன் நல்லுருத்திரனாரும், 33 நெய்தற்கலிப் பாடல்களை நல்லந்துவனாரும் பாடியுள்ளனர். கடவுள் வாழ்த்தைப் பாடியவர் நல்லந்துவனார்.
—
அகத் திணையில் 13 அடி முதல் 31 அடி வரை கொண்ட பெரிய 400 அகப் பாடல்கள் அடங்கியது அகநானூறு. இது ‘நெடுந்தொகை’ என்றும் அழைக்கப்படுகிறது. இதனைத் தொகுத்தவர்: மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர்; தொகுப்பித்த மன்னன்: பாண்டியன் உக்கிரப் பெருவழுதி. இதில் 145 புலவர்களின் பாடல்கள் உள்ளன. இதன் கடவுள் வாழ்த்தைப் பாடியவர் பெருந்தேவனார்.
***
நற்றிணையில் சில குறிப்புகள்:
நற்றிணையில் மன்னரின் செங்கோல் தொடர்பான குறிப்புகள் நேரிடையாக எங்கும் இடம் பெறவில்லை. எனினும் சில பாடல்களில் ‘செங்கோல்’ என்ற சொல் வேறு பொருளில் இடம் பெற்றுள்ளது. அவற்றில் சில:
…மா மலை நாட! மருட்கை உடைத்தே-
செங் கோல், கொடுங் குரல், சிறு தினை வியன் புனம்
கொய் பதம் குறுகும்காலை எம்
மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவே.
(நற்றிணை - 57: 7-10 - பொதும்பில் கிழார்)
பொருள்: பெரிய மலைநாடனே! நிமிர்ந்த தண்டினையும் வளைந்த கதிர்களையும் கொண்ட சிறுதினையின் அகன்ற கொல்லைக்காடு கதிர் அறுக்கும் பருவத்தை அடையும் இந்த நேரத்தில், எமது கருத்த கூந்தலைக் கொண்டவளின் சிறப்பு மிக்க நலம் சிதைந்துவிடுமே என்று என் மனம் மருட்சியடைகிறது.
இப்பாடலில் செங் கோல் என்பது வளைந்த கதிர் என்ற பொருளில் வந்துள்ளது.
மற்றொரு பாடல்:
செங்கோல் வாளிக் கொடு வில் ஆடவர்
வம்ப மாக்கள் உயிர்த் திறம் பெயர்த்தென…
(நற்றிணை- 164 : 6-7)
பொருள்: வளைந்த வில்லையுடைய ஆறலைக் கள்வர் செம்மையுற்ற கோல் வடிவாகிய அம்பினாலே தூது செல்லும் ஏதிலாளரைக் கொன்று உயிரைப் போக்கினமையாலே…
இப்பாடலில் செங்கோல் என்பது பாலைவழியில் உள்ள கள்வரின் கரத்தில் உள்ள அம்பைக் குறிக்கிறது.
இன்னொரு பாடல்:
… தெண் கடல் வன் கைப் பரதவர் இட்ட செங்கோல் கொடுமுடி அவ் வலை பரியப் போக்கி... (நற்றிணை - 303: 8-10 - மதுரை ஆருலவியநாட்டு ஆலம்பேரி சாத்தனார்)
பொருள்: தெளிந்த கடலில் வலிமையான கைகளைக் கொண்ட பரதவர் வீசிய நேரான கோலையும் வளைந்த முடிச்சுகளையும் கொண்ட அழகிய வலையைக் கிழித்துக்கொண்டு தப்பிச் சென்று கடுமையாக முரண்பட்டுப் பாய்ந்து செல்லும் சுறா மீன்கள்…
இப்பாடலில், மீனவரின் தொழிற் கருவியாக செங்கோல் என்னும் நேரான கோல் கூறப்படுகிறது.
***
குறுந்தொகையில் செங்கோல் அவையம்
குறுந்தொகையின் 276வது பாடல், தலைவியுடனான தனது காதலைக் கூறும் வகையில் அமைந்துள்ளது. “மூங்கிலைப் போன்ற தோள்களையுடைய என்னவளுக்காக பாவை செய்ததையும், அதற்காக பலவாறாகச் சுற்றி வந்ததையும், அவளது மார்பில் வரைந்த தொய்யிலையும், அவளைக் காத்து நிற்போர் அறிய மாட்டார்கள். (அதை நான் மட்டுமே அறிவேன்). இதுதொடர்பாக, நீதியாட்சி செலுத்தும் மன்னனின் செங்கோன்மையுடைய அரசவைக்குச் சென்று நான் அத் தலைவியைக் கேட்டால் என்னவாகும்? பெரும் ஆரவாரத்தையுடைய இந்த ஊர் (காதலை) அறியாத ஊராக இருக்கிறது” என்கிறார்.
தனது தலைவியுடனான உறவை நிலைநாட்ட, செங்கோல் வேந்தன் அவையத்தில் சென்று பேசுவேன் என்று மன்னனையே தனது அக ஒழுக்கத்திற்கு சாட்சியாக இழுக்கும் இனிமையை என்னென்று சொல்வது?
இதோ அப்பாடல்:
பணை தோள் குறு மகள் பாவை தைஇயும்
பஞ்சாய் பள்ளம் சூழ்ந்தும் மற்று இவள்
உருத்து எழு வன முலை ஒளி பெற எழுதிய
தொய்யில் காப்போர் அறிதலும் அறியார்
முறை உடை அரசன் செங்கோல் அவையத்து
யான் தன் கடவின் யாங்கு ஆவது-கொல்
பெரிதும் பேதை மன்ற
அளிதோ தானே இ அழுங்கல் ஊரே
(குறுந்தொகை-276; கூழி கொற்றன்)
குறிஞ்சித் திணை
நற்றிணையில் வந்தது போலவே, குறுந்தொகையிலும், சில இடங்களில் மன்னரின் செங்கோல் என்ற பொருளில் அல்லாது வேறு தொழிற்கருவியாகவும் இச்சொல் வருகிறது. இதோ சில பாடல்கள்:
செம் களம் பட கொன்று அவுணர் தேய்த்த
செம் கோல் அம்பின் செம் கோட்டு யானை
கழல் தொடி சேஎய் குன்றம்
குருதி பூவின் குலை காந்தட்டே
(குறுந்தொகை - 1; திப்புத்தோளார்)
குறிஞ்சித் திணை
பொருள்: போர்க்களம் சிவப்பாகும்படி கொன்று அசுரர்களை அழித்த சிவந்த கோலையுடைய அம்பினையும், சிவந்த கொம்புகளையுடைய யானையையும் காலில் வீரக்கழலையும் தோளில் தொடியையும் கொண்ட முருகனின் குன்றம் குருதிநிறம் வாய்ந்த காந்தள் பூக்குலைகளை உடையது.
இங்கு செங்கோல் என்பது சிவந்த கோல் என்ற முருகனின் ஆயுதமான வேலினைக் குறிப்பதாக இருக்கிறது.
மற்றொரு பாடல்:
தீண்டலும் இயைவது கொல்லோ மாண்ட
வில் உடை வீளையர் கல் இடுபு எடுத்த
நனம் தலை கானத்து இனம் தலைப்பிரிந்த
புன்கண் மட மான் நேர்பட தன் ஐயர்
சிலை மாண் கடு விசை கலை நிறத்து அழுத்தி
குருதியொடு பறித்த செம் கோல் வாளி
மாறு கொண்டு அன்ன உண்கண்
நாறு இரும் கூந்தல் கொடிச்சி தோளே
(குறுந்தொகை- 272; ஒருசிறைப்பெரியன்)
குறிஞ்சித் திணை
சிறந்த வில்லை உடைய சீழ்க்கை ஒலியை எழுப்பும் வேடுவர் கற்களை வீசி விலங்குகளை விரட்டும் இந்தப் பரந்த காட்டில், தன் இனத்தைவிட்டுப் பிரிந்த துன்பத்தைக் கொண்ட இளையமான் நேரே இருக்க, மிகுந்த வேகத்தையுடைய ஆண்மானின் மேல் அழுந்துமாறு எய்த, குருதியோடு பிடுங்கிய சிவந்த கோலையுடைய அம்பானது தன் முந்தைய நிலையிலிருந்து மாறுபட்டது போல, மாறுபட்ட மையுண்ட கண்களையும் மணக்கின்ற கரிய கூந்தலையும் கொண்ட தலைவியின் தோள்களைத் தொடுவதற்கும் வாய்க்குமோ?
இப்பாடலில் செங்கோல் என்பது வேடுவரின் அம்பாகவும் தலைவியின் கண்களாகவும் ஒரே சமயத்தில் இரு பொருள் தரும் வகையில் அமைந்திருப்பது, ரசிக்கத் தக்கதாகும்.
***
ஐங்குறுநூற்றில் அழகிய கற்பனை:
மிகவும் சிறிய, செறிவான பாடல்கள் ஐங்குறுநூறில் உள்ள பாடல்கள். அதில், செங்கோல் சிறப்பைக் கூறும் இரு பாடல்களை இங்கே காணலாம்…
தோளும் கூந்தலும் பலபா ராட்டி
வாழ்தல் ஒல்லுமோ மற்றே செங்கோல்
குட்டுவன் தொண்டி யன்ன
என்கண்டும் நயந்துநீ நல்காகக் காலே.
(ஐங்குறு நூறு- 178 – தொண்டிப்பத்து - அம்மூவனார்)
பொருள்: இது தலைவன் தலைவியின் பாங்கிக்கு (தோழி) கூறுவதாக அமைவது. “செங்கோலையுடைய மன்னன் குட்டுவனின் தொண்டியைப் போன்ற (மன்னன் விரும்பும் நகரான தொண்டியைப் போன்ற) பாங்கியாகிய நீ, என் நிலை கண்டு உதவாவிடில், தலைவியின் தோளையும் கூந்தலையும் நான் பலபடப் பாராட்டி வாழ்வது வாய்ப்பது எங்ஙனம்?” என்று தலைவியின் தோழியிடம் வினவுகிறான் தலைவன்.
இங்கும் தலைவன் – தலைவியிடையிலான காதல் உறவுக்கு செங்கோல் மன்னனை வம்பாக இழுக்கும் புலவரின் கற்பனையைக் கண்டு உவக்கிறோம்.
இன்னொரு பாடலில், தலைவன் கிளியிடம் பேசுவது போல தனது விருப்பத்தை வெளிப்படுத்துகிறான். “அறம் செய்யும் செங்கோல் அரசனால் நன்மை விளையும். கிளியே, நீயும் அவன் போல நன்மை செய்கிறாய். என் காதலி கொடிச்சி போல அழகுடன் திகழ்கிறாய். அவள் தினைப்புனம் காக்க வரும்படித் தினையைக் கவர்கிறாய்” என்கிறான். இது கிளியைப் பாராட்டும் வார்த்தை மட்டுமல்ல என்பது தலைவிக்குத் தெரியும். இதோ அப்பாடல்:
அறம்புரி செங்கோல் மன்னனின் தாம்நனி
சிறந்தன போலும் கிள்ளை பிறங்கிய
பூக்கமழ் கூந்தல் கொடிச்சி
நோக்கவும் படும்அவள் ஒப்பவும் படுமே.
(ஐங்குறுநூறு - 290 - கிள்ளைப் பத்து - கபிலர்)
***
கலித்தொகையில் கவின்மிகு காட்சி:
மருதக்கலி பாடல் ஒன்று, தனது தலைவியை மறந்த மன்னனுக்கு அவனது செங்கோலையும் முரசத்தையும் வெண்கொற்றக் குடையையும் நினைவுபடுத்தி, தலைவியைக் காணுமாறு அறிவுறுத்துகிறது. இதோ அந்த கவின்மிகு பாடலின் விளக்கம்:
கள்ளை நீக்கின தேவர்க்கும், அதனை நீக்காத அசுரர்க்கும், வழிகாட்டும் அந்தணராகிய வியாழன், வெள்ளி (குரு பகவானும் சுக்கிர பகவானும்) ஆகிய இருவரும் வெவ்வேறு வகையாகச் செய்த அரசியலைக் கூறும் நூல் நெறியிலிருந்து பிறழாது, குழந்தையைப் பார்த்து அதற்குப் பாலூட்டும் தாயைப் போல, இந்த உலகத்தில் மழையைப் பொழிந்து அருள்செய்து பாதுகாக்கும் நல்லூழான விதியை எல்லார்க்கும் தப்பாமல் கிடைக்கச் செய்தலை, உனது செம்மையான ஆட்சி காரணமாக உலகத்துக்குத் தர வாய்த்த, அணிகலன்கள் அணிந்த கொடியை உடைய அழகிய தேரையும், மணிகள் ஒலிக்கும் யானைக் கூட்டத்தையும் உடையவனே!
அழகிய வெண்கொற்றக் குடையின் நிழலை அறத்தின் சாயலாகக் கொண்டவனே, அந்தக் குடையின் நிழலுக்குப் புறம்பே நிற்பவளோ இவள்? பிறை போன்ற நெற்றியில் பசலை படர வேதனையில் ஆழ்ந்த இவளைப் பார்!
பொய்யாமையைச் சொல்கிறது உன் செங்கோல்; அந்தச் செங்கோலின் நல்லாட்சிக்கு ஒதுக்கப்பட்டவளோ இவள்? இவளைப் பார்! அனைவரையும் காப்போம் என்று முழங்குகிறது உன் ஓங்கியடிக்கும் முரசு; அந்த முரசின் காப்பெல்லையைக் கடந்து நிற்கிறாளோ இவள்? காம நோய் வருத்த, தான் வாழ்கின்ற நாளையே வெறுத்துவிட்டவளைப் பார்!
நீண்ட தொலைவுக்கு அப்பால் இருப்பவற்றைக் கண்டாலும், தன்னிடம் உள்ள குறையை மற்றவர் காட்டினாலொழிய அதனை கண் (கண்ணைக் கண்ணே காணாது) பார்க்க முடியாது! அதுபோல என் தோழியின் வளையல்கள் கழன்று விழும்படியாக நீ அவளைக் கைவிட்டுச் சென்ற கொடுமையைக் கொடியது என்று நீ உணராதிருப்பது சான்றோரால் கடியப்பட்டதன்றோ உனக்கு?
இதுவே அப்பாடல்:
நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும் அவை எடுத்து
அற வினை இன்புறூஉம் அந்தணர் இருவரும்
திறம் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது
குழவியை பார்த்து உறூஉம் தாய் போல் உலகத்து
மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி யாவர்க்கும்
பிழையாது வருதல் நின் செம்மையின் தர வாய்ந்த
இழை அணி கொடி திண் தேர் இன மணி யானையாய்
அறன் நிழல் என கொண்டாய் ஆய் குடை அ குடை
புற நிழல் கீழ்ப்பட்டாளோ இவள் இவண் காண்டிகா
பிறை நுதல் பசப்பு ஊர பெரு விதுப்பு உற்றாளை
பொய்யாமை நுவலும் நின் செங்கோல் அ செங்கோலின்
செய் தொழில் கீழ்ப்பட்டாளோ இவள் இவண் காண்டிகா
காம நோய் கடைக்கூட்ட வாழும் நாள் முனிந்தாளை
ஏமம் என்று இரங்கும் நின் எறி முரசம் அ முரசின்
ஏமத்து இகந்தாளோ இவள் இவண் காண்டிகா
வேய் நலம் இழந்த தோள் கவின் வாட இழப்பாளை
ஆங்கு
நெடிது சேண் இகந்தவை காணினும் தான் உற்ற
வடு காட்ட கண் காணாது அற்று ஆக என் தோழி
தொடி கொட்ப நீத்த கொடுமையை
கடிது என உணராமை கடிந்ததோ நினக்கே.
(கலித்தொகை - 99 - மருதன் இளநாகனார்)
மருதக்கலி
மேலும் பல கலித்தொகைப் பாடல்களில் செங்கோல் ஆட்சி சிறப்பித்துக் கூறப்படுகிறது; அதேபோல, கொடுங்கோலாட்சியின் கொடுமை விளக்கப்படுகிறது. அவற்றில் சில:
ஆள்பவர் கலக்குற அலைபெற்ற நாடு போல்,
பாழ்பட்ட முகத்தோடு, பைதல் கொண்டு, அமைவாளோ?
(கலித்தொகை -5: 12-13 - சேரமான் பெருங்கடுங்கோ)
பாலைக்கலி
பொருள்: நாட்டை ஆள்பவர் அழிவு பல செய்ய, அவரால் அலைக்கழிக்கப்பட்ட நாட்டு மக்கள் போல, பாழ்பட்டுப்போன முகத்தோடு பரிதவித்து இருப்பாளோ என்னவள்?
அலவுற்றுக் குடி கூவ, ஆறு இன்றிப் பொருள் வெஃகிக்
கொலை அஞ்சா வினைவரால், கோல் கோடியவன் நிழல்
உலகுபோல், உலறிய உயர் மர வெஞ்சுரம்;
(கலித்தொகை – 10: 5-7 - சேரமான் பெருங்கடுங்கோ)
பாலைக்கலி
பொருள்: குடிமக்கள் துன்புற்று அலறும்படி அறமற்ற வழியிலே அவர்களிடம் பொருளை விரும்பி கொலைக்கஞ்சாமல் ஆளும் அதிகாரிகளைக் கொண்டு கொடுங்கோலாட்சி புரியும் மன்னவனுடைய நாடு பாழாகும். அதுபோல உலர்ந்து போன உயர்ந்த மரங்களையுடைய பாலைவனம் காணப்படுகிறது.
குடிமக்களிடம், அளவுக்கு மீறி வரி வாங்கி அதிகார வர்க்கத்தாலும், அவர்களுக்கு ஆதரவளிக்கும் அரசாங்கத் தலைவராலும் நாடு பாழாகும் என்பதை இதனால் அறியலாம்.
நிறை தளராதவர் தீமை மறைப்பென்மன் மறைப்பவும்,
முறை தளர்ந்த மன்னவன் கீழ்க் குடி போலக் கலங்குபு,
பொறை தளர்பு பனி வாரும் கண்ஆயின், எவன் செய்கோ;
(கலித்தொகை – 34: 13-15 - சேரமான் பெருங்கடுங்கோ)
பாலைக்கலி
பொருள்: நீதிமுறைகளிலே சோர்வடைந்த மன்னவன் ஆட்சியிலே வாழ்கின்ற குடிகளைப்போலக் கலக்கமடைந்து…
நீதியற்ற ஆட்சியிலே வாழும் மக்களுக்கு என்றும் அமைதியில்லை; அல்லற்படுவார்கள். இதனை இவ்வரி விளக்குகிறது.
தன் உயிர் போலத் தழீஇ, உலகத்து
மன் உயிர் காக்கும் இம் மன்னனும் என் கொலோ
இன் உயிர் அன்னானைக் காட்டி, எனைத்து ஒன்றும்
என் உயிர் காவாதது;
(கலித்தொகை - 143: 52-55 - நல்லந்துவனார்)
பாலைக்கலி
பொருள்: தன் உயிரைப் போலவே உலகத்தில் உள்ள எல்லா உயிர்களையும் எண்ணிப் பாதுகாக்கின்ற இந்த நாட்டு மன்னவன், எனக்கு இனிய உயிர் போன்றவனை எனக்குக் காட்டிச் சிறிதளவும் என் உயிரைக் காக்காமல் இருப்பது ஏன்? (தலைவி கூறுவதாக அமைகிறது).
இதனால் ஒரு அரசனுடைய முதற்கடமை இன்னதென்று கூறப்பட்டது. தனது நாட்டில் வாழும் உயிர்களையெல்லாம் தன்னுயிரைப் போலவே எண்ணிப் பாதுகாப்பவனே மக்களால் மதிக்கப்படும் மன்னவன்; நல்லதோர் அரசியல் தலைவன்.
நடுவு இகந்து ஒரீஇ நயன் இல்லான் வினை வாங்க,
கொடிது ஓர்த்த மன்னவன் கோல் போல, ஞாயிறு
கடுகுபு கதிர் மூட்டிக் காய் சினம் தெறுதலின்,
உறல் ஊறு கமழ் கடாத்து ஒல்கிய எழில் வேழம்,
வறன் உழு நாஞ்சில் போல், மருப்பு ஊன்றி நிலம் சேர,
விறல் மலை வெம்பிய போக்கு அரு வெஞ் சுரம்
சொல்லாது இறப்பத் துணிந்தனிர்க்கு ஒரு பொருள்
சொல்லுவது உடையேன்; கேண்மின், மற்று ஐஇய!
(கலித்தொகை – 8: 1-8)
பாலைக்கலி
பொருள்: நடுவுநிலைமையோ, நன்மையோ இல்லாத கொடிய அரசன் போல ஞாயிறு வெயிலால் காய்ச்சுவதால் துன்புற்று, மதம் ஒழுகும் ஆண்யானை தன் தும்பிக்கையையும் தந்தங்களையும் ஊன்றிக்கொண்டு நிலத்தில் வீழ்ந்து கிடக்கிறது. அந்தக் காய்ந்த மலைக்காட்டு வழியே என்னிடம் கூடச் சொல்லாமல் செல்லத் துணிந்தவரே! ஒன்று சொல்கிறேன், கேளுங்கள்!
இப்பாடலில் கடும் வெய்யில் வாட்டும் கதிரவனுடன், கொடுங்கோல் வேந்தன் உவமிக்கப்படுகிறான்.
***
அகநானூற்றில் அழகிய புலம்பல்
பிரிந்து சென்ற காதலனை நினைந்து புலம்பும் பெண் ஒருத்தி, மன்ன்ன் நன்னனின் செங்கோல் ஆட்சியை, தனது புலம்பலின் இடையே கூறுகிறாள், பாருங்கள்….
தோழி! திருமணம் செய்துகொண்ட அவர் என்னைத் தனியே விட்டுவிட்டு நன்னன் நாட்டுக் காட்டைத் தாண்டி ஏன் சென்றாரோ?
சங்கை அரத்தால் அறுத்துச் செய்த வளையலை அணிந்திருக்கும் என் கைகளைப் பற்றி அவர் என்னை மணந்துகொண்டார். அந்தக் கை தன் அழகை இழக்கும்படிச் செய்துவிட்டு அவர் பிரிந்து சென்றுவிட்டார். தோழி! அது ஏன்?
அரசன் நன்னன் எமனைப் போல நடுவுநிலை பிறழாத செங்கோல் தாங்கி ஆட்சி புரிபவன்; சொன்ன சொல் தவறாதவன். அஞ்சாநெஞ்சம் கொண்டு பல ஊர்களை வென்று, தான் கொண்டுவந்து வைத்திருந்த அரிய செல்வத்தையெல்லாம், அவனைப் பாடிக்கொண்டு வருபவர்களுக்கு எதையும் எண்ணிப் பார்க்காமல் ஊற்றுநீர் சுரப்பது போல வழங்குபவன்.
அவன் நாட்டில் ‘ஏழில் குன்றம்’ என்னும் மலைப்பிரிவு உள்ளது. அங்குள்ள வேங்கை மர இலைகளை வளைத்துத் தின்ற யானை, வலிக்கும் தன் கையை, தன் மடிப்பு வரி கொண்ட நெற்றியில் வைத்துக்கொண்டு தேம்பும். அது கல்லில் பாம்பு இறங்குவது போலத் தோன்றும். இந்தக் காட்டின் வழியே சென்றுவிட்டாரே என்னவர்!
இதோ அப்பாடல்:
அரம் போழ் அவ் வளை செறிந்த முன்கை
வரைந்து தாம் பிணித்த தொல் கவின் தொலைய,
எவன் ஆய்ந்தனர்கொல் தோழி! ஞெமன்ன்
தெரி கோல் அன்ன செயிர் தீர் செம் மொழி,
உலைந்த ஒக்கல், பாடுநர் செலினே, . . . .
உரன் மலி உள்ளமொடு முனை பாழாக,
அருங் குறும்பு எறிந்த பெருங் கல வெறுக்கை
சூழாது சுரக்கும் நன்னன் நல் நாட்டு,
எழிற் குன்றத்துக் கவாஅன், கேழ் கொள,
திருந்து அரை நிவந்த கருங் கால் வேங்கை
எரி மருள் கவளம் மாந்தி, களிறு தன்
வரி நுதல் வைத்த வலி தேம்பு தடக் கை
கல் ஊர் பாம்பின் தோன்றும்
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே?
(அக நானூறு- 349 – மாமூலனார்)
தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
அகநானூறில் செங்கோன்மை என்ற பொருள் அல்லாது வேற்றுப் பொருளில் அமைந்த, செங்கோல் என்ற சொல்லமைந்த சில பாடல்களையும் இங்கு காணலாம்:
தொடுதோல் கானவன் கவை பொறுத்து அன்ன
இரு திரி மருப்பின் அண்ணல் இரலை
செறி இலை பதவின் செம் கோல் மென் குரல்
மறி ஆடு மருங்கின் மட பிணை அருத்தி
(அகநானூறு- 34 : 3-6 - மதுரை மருதன் இளநாகனார்)
பொருள்: முல்லை நிலத்தில் செருப்பு அணிந்த வேட்டுவன் இரண்டாகப் பிளப்புண்ட கோலைத் தோளில் சுமப்பதைப் போல, பெரிய முறுக்குண்ட கொம்புகளையுடைய ஆண்மான்கள்…
இப்பாடலில் வேடனின் கோலாக செங்கோல் குறிக்கப்படுகிறது.
தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர்,
திறன் இல் சிதாஅர் வறுமை நோக்கி,
செங் கோல் அம்பினர் கைந் நொடியாப் பெயர,
(அகநானூறு- 337: 11-13 - சேரமான் பெருங்கடுங்கோ)
பொருள்: பார்ப்பானை அறியாமல் வீழ்த்திய கொடுமையையுடைய மறவர், கந்தையை உடுத்தியிருக்கும் அப் பார்ப்பானின் வறுமையைப் பார்த்து, குருதியால் சிவந்த காம்பினையுடைய அம்பினை எடுத்துக்கொண்டு கையை நொடித்துக்கொண்டு சென்றுவிட்டனர்.
இப்பாடலில் அறியாமல் கொல்லப்பட்ட பாலை வழியில் சென்ற அந்தணன் ஒருவனின் வறுமை பேசப்படுகிறது. அவனைக் கொன்ற மறவரின் கொடிய அம்பாக செங்கோல் குறிக்கப்படுகிறது.
வேடுவரின் அம்பாகவும், இடையரின் வளைக்கோலாகவும், பரதவரின் நெடுங்கோலாகவும், எயினரின் கொலைக்கருவியாகவும் பல பாடல்களில் செங்கோல் என்ற சொல் பயின்று வருவது குறித்து நாம் கவனிக்க வேண்டும். பின்னாளில் சமூக வளர்ச்சியால், இந்தத் தொழிற்கருவியே மன்னனின் செங்கோலாக உயர்வடைந்திருக்க வேண்டும் என்ற ஆய்வாளர்களின் கருத்தை மறுக்க இயலாது.
$$$
2 thoughts on “தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 10”