மகாவித்துவான் சரித்திரம்- 1(24-இ)

மாயூரம் சிறந்த சிவஸ்தலமாதலாலும் கல்விமான்களாகிய பல பிரபுக்களும் தமிழபிமானிகளும் வித்துவான்களும் நிறைந்திருந்த நகரமாதலாலும் இவருக்கு அவ்வூர் வாழ்க்கை ஏற்றதாகவும் உவப்புள்ளதாகவும் இருந்தது. அங்கே இருந்துகொண்டு அடிக்கடி திருவாவடுதுறை சென்று ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரைத் தரிசித்துச் சிலநாள் அங்கே இருந்துவிட்டு வருவார். இவருடைய வீடு ஒரு கலைமகள் நிலயமாகத் திகழ்ந்தது. பல மாணாக்கர்களுக்குப் பாடஞ் சொல்வதும், தம்மைப் பார்க்க வந்த பிரபுக்களிடம் தமிழ் நூல்களிலுள்ள அருமையான செய்திகளைக் கூறி மகிழ்வித்தலும், புதிய செய்யுட்களை இயற்றுதலும் ஆகிய தமிழ்த் தெய்வ வழிபாடுகளே காலை முதல் இரவு நெடுநேரம் வரையில் இவருடைய வேலையாக இருந்தன. (முதல் பாகம் முற்றிற்று)...

மகாவித்துவான்-சரித்திரம்-1(24ஆ)

காசியாத்திரை பலமுறை செய்தவரும் அக்காலத்தில் திருவிடைமருதூர்க் கட்டளை அதிகாரம் பெற்றுப் பார்த்து வந்தவருமான ஸ்ரீ சுப்பிரமணியத் தம்பிரானவர்களுடைய விருப்பத்தின்படி ஸ்ரீ காசியின் தலவரலாறுகளைக் கூறும் நூல்களுள் ஒன்றாகிய ஸ்ரீ காசி ரகசியமென்னும் நூல் இவரால் தமிழிற் செய்யுள் வடிவாக இயற்றப்பட்டது.

மகாவித்துவான் சரித்திரம்- 1(24அ)

அட்சய வருஷம் வைகாசி மாதத்திற்குமேல் (1866) பாண்டி நாட்டின்கண் உள்ளனவாகிய சூரைக்குடி (சூரைமாநகர்), கண்டதேவி என்னும் இரண்டு ஸ்தலங்களின் புராணங்கள் வடமொழியிலிருந்து மொழிபெயர்த்துத் தமிழிற் செய்யுள் நடையாக இவராற் செய்யப்பட்டன. அவ்விரண்டு ஸ்தலங்களிலுமுள்ள செல்வர்களுக்கு இவருடைய பெருமையை எடுத்துக் கூறி இவரைக் கொண்டு புராணங்கள் செய்விக்கும்படி தூண்டியவர் கோயிலூர்ச் சிதம்பர ஐயாவும் இவருடைய மாணாக்கராகிய நாராயண செட்டியாரும் ஆவர். ....

மகாவித்துவான் சரித்திரம்- 1(23)

இவர் சில தினம் கும்பகோணத்திலேயே இருந்து வருகையில் ஒருநாள், அவ்வூரில் வராகக் குளத்தின் கரையிலுள்ள ரங்கசாமி ஐயங்காரென்னும் ஸ்ரீமானொருவர் இவருடைய கவித்துவத்தையறிந்து, "விஷ்ணு புராணத்தை வடமொழியிலிருந்து தமிழில் செய்யுள் நடையாக மொழிபெயர்த்து நீங்கள் செய்து தரவேண்டும். செய்து தந்தால் ஐயாயிரம் ரூபாய்க்குக் குறையாமல் நாங்கள் தொகுத்துத் தருவோம். எங்களைச் சேர்ந்தவர்கள் இவ்விஷயத்தில் மிக்க விருப்பத்தோடிருக்கின்றனர்” என்றார். இவர், “நான் சைவனாதலின் அவ்வாறு செய்தல் கொண்ட கோலத்திற்கு மாறாகும். ஆதலால் அது செய்ய என்னால் இயலாது. சென்னையைச் சார்ந்த எழும்பூரில் திருவேங்கடாசல முதலியாரென்னும் வைணவ வித்துவானொருவர் இருக்கின்றார்; அவர் வைணவ நூல்களில் நல்ல பயிற்சியுள்ளவர்; நூல் இயற்றுதலிலும் வன்மையுடையவர். அவரைக் கொண்டு உங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம்'' என்று சொல்லி விட்டார்.

மகாவித்துவான் சரித்திரம்- 1(22)

அப்பால் அம்பலவாண தேசிகருக்குப் பிள்ளையவர்களிடத்து மிக்க மதிப்பும் கருணையும் உண்டாயின. ''இவர் இருப்பது மடத்திற்குக் கெளரவமென்று சின்னப் பண்டாரம் சொன்னது சரியே. இவருக்கு என்னதான் செய்விக்கக் கூடாது!'' என்று எண்ணிக் காறுபாறு முதலிய மடத்து உத்தியோகஸ்தர்கள் பலரையும் அழைத்து, ''இவருக்கு எந்தச்சமயத்தில் எது வேண்டுமாயினும் குறிப்பறிந்து கொடுக்கவேண்டும்; யாதொரு குறையுமின்றி இவரைப் பாதுகாத்து வரவேண்டும்'' என்று கட்டளையிட்டார்.....

மகாவித்துவான் சரித்திரம்- 1(21 ஆ)

திருவாவடுதுறையிலிருக்கையில் சில அன்பர்களுடைய வேண்டுகோளின்படி அந்த ஆதீனத்து முன்னோர்களாகிய ஸ்ரீ மெய்கண்டதேவர் முதல் வேளூர்ச்சுப்பிரமணிய தேசிகரிறுதியாக இருந்த ஞானாசிரியர்கள் சிவபதமடைந்த மாதம், நட்சத்திரம், சமாதித்தல மென்பவற்றை முறையே யமைத்து, ‘திருவளர் கைலைச் சிலம்பு’ என்னும் தலைப்பையுடைய அகவலொன்றை இயற்றி அளித்தனர். அது குரு பரம்பரை அகவலென வழங்கும்; அவ்வகவல் அச்சிற் பதிப்பிக்கப் பெற்றுள்ளது.....

மகாவித்துவான் சரித்திரம்- 1(21-அ)

வாளொளி புற்றூரென்னுந்தலம் அரதனபுரமெனவும் வழங்கும்; தேவாரம் பெற்றது. இத்தலத்து ஸ்வாமியின் திருநாமம் மாணிக்கலிங்கரென்பது; அம்பிகையின் திருநாமம் வண்டுவார்குழல் நாயகி யென்பது. இத்தல விருட்சம் வாகை. குசகேதுவென்னும் ஒரு சோழவரசன் பொருட்டு அரதனப்பாறையிலிருந்து சிவபெருமான் சிவலிங்க வடிவாகத் தோற்றினமையால் இத்தலம் அரதனபுரமெனப் பெயர்பெற்றது. வாசுகி யென்னும் மகாநாகம் இத்தலத்தையடைந்து சிவபெருமானை வழிபட்டு ஆபரணமாகும் பேறு பெற்றது. அப்பாம்பு ஒரு புற்றிலுறைந்தமையால் புற்றூரென்று முதலில் ஒரு பெயருண்டாயிற்று.....

மகாவித்துவான் சரித்திரம்- 1(20)

அப்பால் ஒரு விசேடகாலத்தில் திருவாவடுதுறையில் அம்பலவாண தேசிகர் முன்னிலையில் பல வித்துவான்களும் பிரபுக்களும் சூழ்ந்த மகாசபையில் அந்நூல் அரங்கேற்றப்பட்டது. அதைக் கேட்ட எல்லோரும் அதிசயித்தார்கள். திருவாவடுதுறை சம்பந்தமாகப் பல பிரபந்தங்கள் இருந்தாலும் அக் கலம்பகம் எல்லாவற்றிலும் சிறந்ததாகவும் பொருள் நயம் செறிந்ததாகவும் சைவ சம்பிரதாயங்களையும் ஆதீன சம்பிரதாயங்களையும் விளக்கிக் கொண்டிருப்பதாகவும் உள்ளதென்று கொண்டாடினார்கள். அப்பொழுது பெரிய காறுபாறாகவும், ஆதீன வித்துவானாகவுமிருந்து விளங்கிய கனகசபைத் தம்பிரான் முதலியோர்கள் இவருடைய புலமைத் திறத்தைக் கண்டு மகிழ்ந்து, “இவர்களுக்குச் சந்நிதானம் தக்க மரியாதை செய்தருள வேண்டும்” என்று தலைவரிடம் விண்ணப்பித்துக் கொண்டார்கள். அதனைக் கேட்ட அம்பலவாண தேசிகர் மேலகரம் சுப்பிரமணிய தேசிகரோடும் ஆலோசித்து ‘மகாவித்துவான்’ என்னும் பட்டத்தை இவருக்கு வழங்கினார். எல்லோரும், “அத்தகைய பட்டத்திற்கு இவர் ஏற்றவரே” என்று கூறிச் சந்தோஷித்தார்கள். ....

மகாவித்துவான் சரித்திரம்- 1(19)

வேதநாயகம் பிள்ளை அக்காலத்திற் பல சங்கீத வித்துவான்களோடு மாயூரத்திற் பழகி வந்தனர். அவர்கள் சொல்லும் தியாகராசையர் கீர்த்தனம் முதலிய பலவகையான கீர்த்தனங்களைக் கேட்டு மகிழ்வடைவார். அக்கீர்த்தனங்களுள் தமக்குப் பிரீதியான மெட்டில் தாமும் தமிழ்மொழியிற் பல கீர்த்தனங்களைச் செய்தார். அவற்றை இசையில் வல்லவர்களைக் கொண்டு பாடுவித்துக் கேட்டும் கேட்பித்தும் பொழுது போக்குவது அவருக்கு வழக்கமாக இருந்தது. அவருக்குக் கீழ் இருந்த உத்தியோகஸ்தர்களிலும் வக்கீல்களிலும் பாடக்கூடியவர்கள் அவருடைய பாடல்களைப் பாடியும் தம் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுத்துப் பாடச்செய்தும் வந்தனர். பிள்ளையவர்களுக்கும் அப்பொழுதப்பொழுது தாம் செய்த கீர்த்தனங்களை வேதநாயகம் பிள்ளை பாடிக்காட்டச் செய்வதுண்டு.

மகாவித்துவான் சரித்திரம்- 1(18)

சீகாழிக் கோவையை அரங்கேற்றுவித்தற்கு நிச்சயித்து ஒரு நல்ல தினம் குறிப்பிட்டு, சீகாழியிலிருந்த பிரபுக்களும் வித்துவான்களும் அயலூரிலுள்ள பிரபுக்களுக்கும் வித்துவான்களுக்கும் சொல்லியனுப்பினார்கள். கேட்க விருப்பமுற்ற ஒவ்வொருவரும் வந்து சீகாழியில் இருப்பாராயினர். ஸ்ரீ பிரமபுரேசர் திருக்கோயிலின் தெற்குப் பிராகாரத்திலுள்ள வலம்புரி மண்டபம் அரங்கேற்றுதற்குரிய இடமாகப் பலராலும் நிச்சயம் செய்யப்பெற்றது. அம்மண்டபத்தில் இருந்து இவர் அரங்கேற்றத் தொடங்கினார். அப்பொழுது மூலத்தைப் படித்தவர் சாமிநாத கவிராயர். மூன்று காப்புச் செய்யுட்களும் முடிந்தன. நூலில் இரண்டு செய்யுட்கள் நிறைவேறின. இவர், செய்யுளின் நயத்தையும் பல நூல்களிலிருந்து அருமையான செய்யுட்களை மேற்கோளாகக் கூறி யாவருக்கும் விளங்கும்படி பொருள் உரைக்கும் அழகையுங் கேட்டுக்கேட்டு யாவரும் ஆனந்தக்கடலில் ஆழ்ந்தனர்; ‘இந்த வித்துவானைக் காண்டற்கும் இவர் கூறும் இனிய அரிய மொழிகளைக் கேட்பதற்கும் நாம் என்ன புண்ணியம் செய்தோம்!’ என்று ஒவ்வொருவரும் தம்மிற் கூறி வியந்தனர்.....

மகாவித்துவான் சரித்திரம்- 1(17)

விநாயக முதலியார் இவர் செய்த தியாகராசலீலை, உறையூர்ப் புராணம் முதலியவற்றைக் கேட்டு வியந்து, “திருமயிலைக்கு நீங்கள் ஒரு புராணம் செய்ய வேண்டும்” என்று வற்புறுத்திக் கூறி அத்தலத்தின் வடமொழிப் புராணத்தையும் கொடுத்தனர். அக்காலத்தில் திருமயிலைக் கைக்கோளத் தெருவில் இருந்த சாமி முதலியாரென்னும் அன்பர் ஒருவர், “இப்புராணத்தைச் செய்து முடித்தால் விநாயக முதலியார் தக்க ஸம்மானம் செய்வார்; அன்றியும் நாங்களும் எங்களாலியன்றதைச் செய்வோம்” என்று நூறு ரூபாய் செலவுக்குக் கொடுத்தார். அவர்களுடைய வேண்டுகோளின்படி பாயிரமும் நாட்டுப்படலம் நகரப்படலங்கள் மட்டும் செய்யப்பட்டன. அப்பகுதி இப்பொழுது கிடைக்கவில்லை. அதிலுள்ள சில அருமையான பாடல்களை நான் கேட்டிருக்கிறேன். இச்செய்தி நடைபெற்றது இவரது 39-ஆம் பிராயத்திலாகும்....

மகாவித்துவான் சரித்திரம்- 1(16)

புதுச்சேரியில் இயன்றவரையில் தமிழ்ப்பாடங்களைக் கற்றுப் பாடப் படிக்கப் பிரசங்கிக்க ஒருவாறு பயிற்சியுற்றிருந்த செ.சவராயலு நாயகரென்னும் கிறிஸ்தவர் இவர் படிப்பிக்கும் நலத்தைக் கேள்வியுற்று திரிசிரபுரம் வந்து தியாகராச செட்டியார் முதலியோர் முகமாகக் கையுறைகளுடன் இவரைக் கண்டு, வீரமாமுனிவ ரென்னும் புனைப்பெயர் கொண்ட டாக்டர் பெஸ்கியாற் செய்யப் பெற்ற தேம்பாவணி, திருக்காவலூர்க் கலம்பகம் முதலியனவாய தங்கள் சமய நூல்களைப் பாடஞ்சொல்ல வேண்டுமென்று வேண்டிக் கொண்டனர். அதற்கிசைந்த இவர் அவரைப் பரீட்சித்து அவருடைய தமிழ்க் கல்வியின் நிலையை அறிந்து சில கருவி நூல்களை முதலிற் பாடஞ் சொல்லிவிட்டுப் பின்பு அவர் விரும்பிய வண்ணம் தேம்பாவணி முதலியவற்றிற்குப் பொருள் கூறித் தமிழில் நல்ல பயிற்சியை உண்டாக்கி அனுப்பினர். அதன் பின்பு சவராயலு நாயகருக்குக் கிறிஸ்தவர் குழாங்களில் உண்டான மதிப்பும் பெருமையும் அதிகம்.

மகாவித்துவான் சரித்திரம்-1(15)

கல்விப் பெருமை மிக்குடைய இவர் கீழ்வேளூர்ச் சுப்பிரமணிய தேசிகரிடம் பணிவுடன் பாடங்கேட்டதை நினைக்கும்பொழுது, துறைமங்கலம் சிவப்பிரகாச ஸ்வாமிகள், சிறந்த கல்விமானென்று பெயர் பெற்ற பின்பு, திருநெல்வேலியிற் சிந்துபூந்துறையிலிருந்த தருமை வெள்ளியம்பலத் தம்பிரானவர்கள்பால் தொல்காப்பியம் பாடங்கேட்ட செய்தி ஞாபகத்திற்கு வருகின்றது.....

மகாவித்துவான் சரித்திரம்- 1(14)

இவருடைய சிறந்த கல்வியாற்றலையறிந்த பல வித்துவான்களும் பிரபுக்களும் இவருக்கு ஏதேனும் ஒரு பட்டம் அளிக்க வேண்டுமென்று தம்முள்ளே நிச்சயித்தார்கள். ஒவ்வொருவரும் தத்தமக்கு அந்த அபிப்பிராயம் நெடுநாளாக இருந்ததாகவும் யாரேனும் ஒருவர் தொடங்கினால் தாமும் அக்கருத்தை ஆதரிக்க வேண்டுமென்று எண்ணியதாகவும் கூறித் தம்முடைய உடன்பாட்டைத் தெரிவித்தனர். பின்பு நல்ல நாளொன்றில் ஒரு மகாசபை கூட்டி இவருடைய கல்வித் திறமையைப் பற்றிப் பேசி இவருக்கு வித்துவானென்ற பட்டத்தை அளித்து அதற்கு அறிகுறியாகச் சால்வை முதலிய மரியாதைகளையும் செய்தார்கள். அதுமுதல் இவரை வித்துவான் பிள்ளையவர்களென்றே குறிப்பித்து வரலானார்கள். அதன் பின்பு பதிப்பிக்கப்பெற்ற குசேலோபாக்கியானத்தில் இவர் பெயருக்கு முன்பு 'வித்துவான்' என்பது காணப்படும்.....

மகாவித்துவான் சரித்திரம்- 1(13)

சூதசங்கிதையென்பது ஸ்கந்த புராணத்திலுள்ள ஆறு சங்கிதைகளில் ஒன்று. சிவமான்மிய காண்டம், ஞானயோக காண்டம், முக்தி காண்டம், எக்கியவைபவ காண்டமென்னும் நான்கு பிரிவுகளை உடையது; சிவபெருமானுடைய பலவகைப் பெருமைகளையும், பல தலவரலாறுகளையும், தீர்த்த வரலாறுகளையும், பல உபநிஷத்துக்களின் கருத்தையும் விளக்கிக் கூறுவது. சிவபிரான் புகழைப் பாடிப் பாடிச் சுவைகண்ட பிள்ளையவர்களுடைய அன்புப் பெருக்கு, சூதசங்கிதையில் நன்கு வெளிப்படும். தலவரலாறுகளைக் கூறுவதிலும், அவற்றைப் பலவகையாகச் செய்யுட்களிற் பொருத்தி அணி செய்வதிலும் இவருக்கு விருப்பம் அதிகம். ஆதலின் இந்நூலில் தலவரலாறுகள் கூறப்படும் இடங்களில் அத்தலப் பெயர்களைத் திரிபிலமைத்தல், அத்தலவிசேடங்களைச் சுருக்கி ஒரு செய்யுளிற் கூறல், அத் தலப்பெயர்க்கு ஏற்ற சந்தத்தை எடுத்தாளல் முதலியன காணப்படும்.....