மகாவித்துவான் சரித்திரம்- 1(12)

ஒருநாள் சுந்தரம்பிள்ளை பிள்ளையவர்களிடம் வந்து, “இது சிவதருமோத்திரம்” என்று சொல்லிப் புத்தகத்தைக் கொடுத்தனர். இவர், “இப்புத்தகம் எங்கே கிடைத்ததப்பா?” என்று மிக்க வேகமாக அதனைப் பிரித்துப் பார்த்துவிட்டு அவரை நோக்கி, “உன்னுடைய வீட்டில் என்ன விசேஷம்? வீசையை ஏன் எடுத்துவிட்டாய்? உனக்கு நேர்ந்த துக்கம் எனக்குத் தெரியாது போயிற்றே! ஏன் எனக்குச் சொல்லியனுப்பவில்லை?” என்று வினவினர். சுந்தரம்பிள்ளை, “அந்த விஷயத்தைப் பின்பு சொல்லுவேன். இந்தப் புஸ்தக முழுவதையும் ஒரு வாரத்திற்குள் பிரதிசெய்துகொண்டு என்னிடம் கொடுத்து விடக்கூடுமானால் மிகவும் நலமாயிருக்கும்; பிரதி செய்வது ஒருவருக்கும் தெரிய வேண்டாம்” என்றார். ...

மகாவித்துவான் சரித்திரம்- 1(11)

அவ்வக்காலத்திற் பிள்ளையவர்கள் தம் உள்ளத்தில் ஆராய்ந்து தொகுத்து வைத்திருந்த அரிய கருத்துக்களும் இனிய கற்பனைகளும் நிறைந்து விளங்கும் இத் தியாகராசலீலை தேனீக்கள் பல மலர்களில் உள்ள தேனைப் பலநாள் தொகுத்து அமைத்த தேனிறாலைப்போல உள்ளது. இவராற் செய்யப்பெற்ற முதற் காப்பியமாதலின் இதில் ஒரு தனியான அழகு அமைந்திருக்கின்றது. அக்காலத்திலே இவரோடு பழகிய பலர் இத் தியாகராசலீலைப் பாடல்களை அடிக்கடி அங்கங்கே எடுத்தெடுத்துப் பாராட்டி மகிழ்வதுண்டு.

மகாவித்துவான் சரித்திரம்- 1(10)

பலரிடத்தும் சென்று சென்று அவர்களுக்கு வேண்டியவற்றைச் செய்து பலமுறை அலைந்து ஒவ்வொரு நூலையும் சிறிது சிறிதாகக் கற்றுக்கொண்டு வந்தவராதலின், யாதொரு வருத்தமுமின்றி மாணாக்கர்களைப் பாதுகாத்து அவர்களை அலைக்கழியாமல் அவர்களுக்கு வேண்டியவற்றை உடனுடன் கற்பித்துவர வேண்டுமென்ற எண்ணம் இவருக்கு இருந்துவந்தது. அதனால், பாடங்கேட்க வரும் செல்வர்களுக்கும் ஏனையோருக்கும் விரும்பிய நூல்களைத் தடையின்றிப் பாடஞ்சொல்லி ஆதரிக்கும் இயல்பு அக்காலந்தொடங்கி இவருக்கு முன்னையினும் அதிகமாக ஏற்பட்டது. சில ஏழைப் பிள்ளைகளுக்கு ஆகாராதிகளுக்கும் உதவிசெய்து வருவாராயினர். தம் நலத்தைச் சிறிதும் கருதாமல் மாணாக்கர்களுடைய நன்மையையே பெரிதாகக் கருதும் இயல்பு இப்புலவர்பெருமானிடத்து நாளடைவில் வளர்ச்சியுற்று வந்தது.....

மகாவித்துவான் சரித்திரம்- 1(9)

அம்பலவாண முனிவர் , வடமொழி தென்மொழி  யிரண்டிலும் முறையான பயிற்சியுடையவர். பல சிவபுராணங்களிலும் பல பிரபந்தங்களிலும் சைவ சாஸ்திரங்களிலும் அவருக்கு நல்ல ஆராய்ச்சி உண்டு. சிறந்த ஒழுக்கமுடையவர். இடைவிடாமற் படித்தலிலேயே காலத்தைப் போக்குபவர். மடத்திற் பல தமிழ்நூல்கள் கிடைக்குமாயினும் ஒவ்வொன்றையும் ஒரே அளவுள்ள சுவடிகளில் எழுதி வைத்துக் கொள்வதில் அவருக்குத் திருப்தியதிகம். அவ்வாறு அவர் எழுதிய சுவடிகள் மிகப் பல. அவர் கல்வி கேள்விகளிற் சிறந்தவராக விருந்தாலும் உலகப்பயிற்சியே இல்லாதவர். யாருக்கேனும் பாடஞ்சொல்லுதலில் அவர் பழகவில்லை. அவர் 96 பிராயத்திற்கு மேற்பட்டு வாழ்ந்திருந்தவர். ஸ்ரீ சூரியனார் கோயிலிலுள்ள ஸ்ரீ சிவாக்கிரயோகிகள் மடத்துத்தலைவராக அம்பலவாண தேசிகராற் பின்பு நியமிக்கப்பெற்றவர்....

மகாவித்துவான் சரித்திரம்- 1(8)

-உ.வே.சாமிநாதையர் 8. கல்வியாற்றாலும் செல்வர் போற்றலும் அப்பால் திரிசிரபுரத்தில் இருந்து வழக்கம்போலவே இக்கவிஞர்பிரான் தாம் செய்ய வேண்டியவற்றை ஒழுங்காகச் செய்தும் பிறரைக் கொண்டு செய்வித்தும் வருவாராயினர். சென்னையில் இருந்தபோது பழகிய அறிஞர்களுள் ஒவ்வொருவரிடத்தும் இன்னஇன்னவிதமான திறமைகள் உள்ளனவென்று கவனித்து அவற்றைத் தாமும் பயில வேண்டுமென்று பயின்றுவந்தார். அதனால், செய்யுட்களுக்குப் பொருள் கூறுதல், இலக்கண விஷயங்களை எடுத்தாளல், பதச்சரம் சொல்லுதல், நூல்களை ஆராய்தல் முதலிய பலவகையான பயிற்சிகள் இவர்பால் முன்னையிலும் சிறந்து விளங்கின. பலவகை மாணாக்கர்கள் வந்து வந்து … Continue reading மகாவித்துவான் சரித்திரம்- 1(8)

மகாவித்துவான் சரித்திரம்- 1(7)

சபாபதி முதலியார், திருவேங்கடாசல முதலியார், திருவம்பலத்தின்னமுதம் பிள்ளை யென்னும் மூவரும் ஒருவருடைய வீட்டிற்கு ஒருவர் போய் நூலாராய்ச்சியின் விஷயமாக ஒருவரோடொருவர் அளவளாவி இன்புறுவது வழக்கம். அக்காலங்களிலெல்லாம் அவர்கள் பிள்ளையவர்களுக்குத் தமிழ் நூல்களிலுள்ள வேட்கைப் பெருக்கத்தையும் இயற்கையறிவினையும் முன்னரே இவருக்கு அமைந்திருக்கும் அகன்ற நூலாராய்ச்சிப் பெருமையையும் ஞாபக சக்தியையும் அடக்கத்தையும் தருக்கின்மையையும் நட்புடைமை முதலியவற்றையும் குறித்து வியந்தார்கள். இவர் சந்தேகமென்று வினவுகின்ற வினாக்களில் பெரும்பாலன அவர்களுக்குப் புதிய விஷயங்களை அந்தச் சமயங்களில் தோன்றச்செய்யும்; விடைதர வேண்டி மேன்மேலும் பல நூல்களை ஆராயும்படி அவர்களை அவை தூண்டும். இவருடைய பாடல்களையும் அவற்றிலுள்ள நயங்களையும் அவர்களறிந்து இவருடைய ஆற்றலைப் பாராட்டினார்கள். இளமையிலே இவ்வளவு நல்லாற்றல் வாய்ந்தமை யாருக்குத்தான் வியப்பைக்கொடாது?

மகாவித்துவான் சரித்திரம்- 1(6)

இவர் சில அன்பர்களுடன் ஒரு தினம் திருவானைக்காவிற்குச் சென்று சுவாமி தரிசனம் செய்வதற்காகப் புறப்பட்டுக் காவிரியின் தென்பாலுள்ள ஓடத்தில் ஏறியபொழுது உடனிருந்த சிதம்பரம்பிள்ளை யென்னுங் கனவான் இவரை நோக்கி ஸ்ரீ அகிலாண்டேசுவரியின் மீது ஒரு மாலை இயற்ற வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர்; அப்பொழுது உடன் சென்றவருள் ஒருவர், "முன்னமே திருவண்ணாமலையை வலம் வரத் தொடங்கிய துறைமங்கலம் சிவப்பிரகாச ஸ்வாமிகள் ஒருமுறை வருவதற்குள் சோணசைலமாலையைப் பாடிமுடித்தது போல் நீங்கள் சம்புநாதரைத் தரிசனஞ் செய்து திரும்புவதற்குள் அம் மாலையைச் செய்வதற்கு இயலுமா?" என்று கேட்டார். இவர் நேருமானாற் செய்யலாமென்று சொல்லிப் பாடத்தொடங்கி, எழுதியும் எழுதுவித்துக்கொண்டும் சென்று கோயிலுக்குப்போய்த் தரிசனம் செய்த பின்பு, சில நாழிகை அங்கே ஓரிடத்தில் தங்கிப் பாடல்களைச் செய்துகொண்டே இருந்துவிட்டுத் திரும்பி வீடுவந்து சேர்வதற்குள் அந்நூலை முடித்தனரென்று சொல்வார்கள்.

மகாவித்துவான் சரித்திரம்- 1(5)

இவர் புத்தகங்களைத் தேடுகையில் திருவானைக்காக்கோயில் தர்மகர்த்தாவின் வீட்டில், திருவாவடுதுறை யாதீனத்து வித்துவானாகிய ஸ்ரீ கச்சியப்ப முனிவராற் செய்யப்பெற்ற நூல்களுள் ஒன்றாகிய திருவானைக்காப் புராணம் கிடைத்தது. அதை முறையே படித்து வருகையில் கடவுள் வாழ்த்தின் அழகும், நாட்டுச்சிறப்பு முதலிய காப்பிய உறுப்புக்களின் அமைதியும், அவற்றிற் பழைய நூற் பிரயோகங்களும், இலக்கண அமைதிகளும், தம்மால் அது வரையில் அறியப்படாத சைவ சாஸ்திரக் கருத்துக்களும், சைவ பரிபாஷைகளும், புதிய புதிய கற்பனைகளும் நிறைந்து சுவை ததும்பிக் கொண்டிருத்தலையறிந்து இன்புற்றுப் பன்முறை படித்து ஆராய்ச்சி செய்வாராயினார். அதைப் படிக்கப் படிக்க அதுவரையிற் படித்த பல நூல்களினும் வேறு தலபுராணங்களினும் அது மிக்க சுவையுடையதென்று அறிந்துகொண்டார். பின்னர், கச்சியப்ப முனிவர் செய்த வேறு நூல்கள் எவையென்று ஆராய்ந்து தேடிய பொழுது, விநாயக புராணத்தில் சில பகுதிகளும், பூவாளூர்ப் புராணமும், காஞ்சிப் புராணமும் கிடைத்தன. அந்த நூல்களையும் வாசித்து இன்புறுவாராயினர். ...

மகாவித்துவான் சரித்திரம்-1(4)

ஒரு தலத்திற்கு நண்பர்களுடன் சென்றால் அத்தலத்திலுள்ளார் இவரது கவித்துவத்தை அறிந்து அத்தல விஷயமாகத் தனிப்பாடல்களையோ பிரபந்தங்களையோ இயற்றும் வண்ணம் கேட்டுக்கொள்வார்கள். செய்யுள் இயற்றுவதற்குரிய சமயம் வாய்க்கும்போதெல்லாம் அந்த ஆற்றலை வளர்ச்சியுறச் செய்து கொள்ள வேண்டுமென்னும் அவாவுடையவராக இருந்தமையால், இவர் அவர்களுடைய விருப்பத்தின்படியே பாடல்கள் முதலியன இயற்றுவதுண்டென்பர். ....

மகாவித்துவான் சரித்திரம்- 1(3)

அக்காலத்தில் திரிசிரபுரத்திலும் அதனைச் சூழ்ந்துள்ள ஊர்களிலும் தாங்களறிந்தவற்றை மாணாக்கர்களுக்குப் பாடஞ்சொல்லும் தமிழ்ப்புலவர்கள் சிலர் இருந்து வந்தனர். ஒவ்வொருவரும் சில நூல்களையே பாடஞ்சொல்லுவார். பல நூல்களை ஒருங்கே ஒருவரிடத்திற் பார்ப்பதும் பாடங்கேட்பதும் அருமையாக இருந்தன. இவர் அவ்வூரிலும் பக்கத்தூர்களிலும் இருந்த தமிழ்க்கல்விமான்களிடத்திற் சென்று சென்று அவர்களுக்கு இயைய நடந்து அவர்களுக்குத் தெரிந்த நூல்களைப் பாடங்கேட்டும் அவர்களிடம் உள்ள நூல்களைப் பெற்றுவந்து பிரதி செய்துகொண்டு திருப்பிக் கொடுத்தும் வந்தனர். இவருடன் பழகுவதிலும் இவருடைய ஆற்றலை அறிந்து கொள்வதிலும் வேண்டிய நூல்களை இவருக்குக் கொடுத்து உதவுவதிலும் இவர் விரும்பிய நூல்களைப் பாடஞ் சொல்வதிலும் மகிழ்ச்சியும், இவரைப்போன்ற அறிவாளிகளைப் பார்த்தல் அருமையினும் அருமையென்னும் எண்ணமும் அவர்களுக்கு உண்டாயின. ....

மகாவித்துவான் சரித்திரம் – 1 (2)

அக்காலத்தில் நூல்கள் பெரும்பாலும் அச்சிற் பதிப்பிக்கப்படாமையாற் படிப்பவர்கள் அவற்றைப் பிரதிசெய்து படித்தல் இன்றியமையாத வழக்கமாக இருந்தது; ஆதலால் இவர் தந்தையார் நன்றாக ஏட்டில் எழுதவும் இவரைப் பழக்குவித்தார். அதனால் இவர், தாம் படிக்கப் புகுந்த நூல்களை, எழுதி எழுதித் தனியே வைத்துக்கொள்வார். அன்றியும் தம் தந்தையார் கட்டளையின்படி தாம் படிக்கும் நூல்களிலுள்ள இனிய செய்யுட்களைச் சமயோசிதமாகப் பிறர்க்குச் சொல்லிக் காட்டுவதற்குத் தொகுத்துத் தனியே எழுதி வைத்துக்கொண்டு மனனம் செய்வதும், தமக்கு மனனமான பாடல்களின் அடிவரையறையைத் தனியே குறித்து வைத்துக்கொள்வதும் உண்டு. இங்ஙனம் செய்வது அக்கால வழக்கம். தம் தந்தையார் கற்பித்தவற்றையெல்லாம் பேரவாவுடன் இவர் கற்று விரைவில் அந்நூல்களிற் சிறந்த பயிற்சியை அடைந்தார்.

மகாவித்துவான் சரித்திரம் -1(1)

பண்டைக் காலத்தில் தமிழ்நாட்டில் ஊர்கள்தோறும் பள்ளிக்கூடங்கள் இருந்தன. திண்ணைப் பள்ளிக்கூடங்களென்னும் பெயரால் அவை வழங்கப் பெறும். அங்கே தமிழ் நூல்களைப் படித்து இன்புறுதற்குரிய அறிவு பெறுவதற்குக் கருவிகளாகிய நிகண்டு, நீதி நூல்கள், பிரபந்தங்கள் முதலியன கற்பிக்கப்பட்டன. கணிதத்துக்கு அடிப்படையான எண்சுவடி முதலியவற்றையும் கற்பித்தனர். அவற்றின் உதவியால் மிகச் சிறிய பின்னங்களையும் அமைத்துக் கணக்கிடும் ஆற்றல் மாணாக்கர்களுக்கு உண்டாகும். குடும்பத்துக்கு வேண்டிய வைத்திய முறைகளும், நாள் பார்த்தல், சாதகம் பார்த்தல் முதலிய சோதிட நூல் வழிகளும், ஆலய வழிபாட்டு முறை, குலாசாரங்கள் முதலியனவும், ஞாபக சக்தியை வளர்ப்பதற்குரிய பயிற்சிகளும் கற்பிக்கப்பட்டன. உபாத்தியாயர்கள் மாணவர்களுள் ஒவ்வொருவரையும் தனித்தனியே கவனித்துத் தக்க உணர்ச்சியையடையும்படி செய்தார்கள்......

மகாவித்துவான் சரித்திரம்- முகவுரை

தமிழ்த் தாத்தா என்று அன்புடன் அனைவராலும் அழைக்கப்படும் உ.வே.சாமிநாதையரை உருவாக்கியவர், திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள். அவரது வீட்டில் குருகுலவாசம் இருந்து தமிழ் கற்ற உ.வே.சா. பிற்காலத்தில், தமிழுக்கு அணியாகத் திகழும் பல இலக்கியங்களை கால வெள்ளத்தில் மறையாமல் பதிப்பித்துக் காத்தார். உ.வே.சா. தனது குருநாதரின் வாழ்க்கை வரலாற்றை விரிவாகவும் தகுந்த ஆதாரங்களுடனும் எழுதிய நூல் இது. ”திருவாவடுதுறை யாதீனத்து மகாவித்துவான் திரிசரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்” என்பதே ஐயர் அளித்த தலைப்பு. இங்கு நமது வசதிக்காக, ’மகாவித்துவான் சரித்திரம்’ என்று குறிக்கப்படுகிறது. இந்நூலில் தனது குரு மீதான பக்தியை சீடர் வண்ணமுற வெளிப்படுத்துகிறார். வாழையடிவாழையென வந்துதித்த மரபால் நமது தாய்த் தமிழ் மொழி காக்கப்பட்டு வந்துள்ளது என்பதற்கு மிகச் சரியான சான்றான இந்நூல், நமது தளத்தில் தொடர்ந்து வெளியாகும்.