அகல்யை

புராணக் கதைகளை மீள்பார்வை செய்வது இலக்கியத்தில் ஒரு புதிய போக்கு. தமிழ்ச் சிறுகதை உலகின் முடிசூடா மன்னரான புதுமைப் பித்தனும் இதில் விலக்கல்ல. அவரது ‘சாப விமோசனம்’ சிறுகதை, அது வெளிவந்த காலத்தில் (1943) பெரும் விவாதத்தையும் சிந்தனைப் புரட்சியையும் உருவாக்கியது. அக்கதையில், அகலிகையின் பார்வையில் “ஆணுக்கு ஒரு நீதி, பெண்னுக்கு ஒரு நீதியா?” என்று கேட்ட புதுமைப் பித்தன், அதே அகலிகை கதையை மீண்டும் ‘அகல்யை’ என்ற சிறுகதையாகத் தீட்டுகிறார். இதில் அகலிகையின் கணவரான கௌதமனை நியாய உணர்வுள்ள ஆணாகச் சித்தரிக்கிறார். இனி கதைக்குள் செல்லுங்கள்!

இது மிஷின் யுகம்

கூலிக்கு வேலை செய்யும் உழைப்பாளிகளின் இயந்திரத்தனமான வாழ்க்கையை சில நிமிட நிகழ்வுகளில் ஒரு சிறுகதையாக இங்கே பதிவு செய்கிறார் புதுமைப்பித்தன். ஓர் உணவகத்தில் நிகழும் சம்பாஷனைகள், காட்சிகளை செதுக்கிவைத்த வரிகளில் படிமம் ஆக்கி இருக்கிறார். பெரிய உபதேசம் இல்லை... படித்து முடிக்கும்போது அந்த ‘சர்வர்’ நமது மனதில் பதிந்து விடுகிறான்....

கயிற்றரவு

வாழ்வின் பொருளின்மையை சிறுகதைக்குள் அடக்க முயலும் புதுமைப் பித்தனின் மேதமையை வெளிப்படுத்தும் அற்புதமான படைப்பு இது. கண்ணுக்குப் புலப்படும் வாழ்க்கை, கயிறா, அரவமா? கடிக்கும் வரை கயிறு... கடித்த பிறகு அரவம். இது அனுபவ ஞானம். ஆனால், அந்த அரவத்தைக் கயிறென்று துணிந்தே வாழ்ந்தாக வேண்டி இருக்கிறது. பொறுமையுடன் நிதானமாகப் படிக்க வேண்டிய வேதாந்தக் கதை இது...

கடவுளின் பிரதிநிதி

கோயில்களுக்குள் பட்டியலின (தாழ்த்தப்பட்ட) மக்களும் செல்வது இன்று இயல்பாகி இருக்கலாம். ஆனால், அதற்கு வித்திட்டது மகாத்மா காந்தி விடுதலை இயக்கத்தில் ஹரிஜன முன்னேற்றத்தை ஓர் ஆதார விஷயமாகக் கொண்டதுதான். ஆயினும், இதில் உடனே நமது சமூகம் திருந்திவிடவில்லை. அதற்கு பெருத்த போராட்டங்கள் நடத்தப்பட வேண்டி இருந்தது. இறுதியில் சட்டப்படி கோயிலுக்குள் ஹரிஜனங்கள் செல்லும் உரிமை பெற்றனர் என்றால் அதற்கு வழிவகுத்தது அன்றைய காங்கிரஸ் பேரியக்கம் தான் எனில் மிகையில்லை. இதற்கான போராட்டம் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை  என்பதற்கான நிரூபணம் புதுமைப்பித்தன் எழுதி, ‘மணிக்கொடி’யில் (1934) வெளியான இச் சிறுகதை…இலக்கியம் வரலாற்றின் பதிவும் கூட என்பது உண்மைதான்.  

மனித யந்திரம்

அன்றாட வயிற்றுப்பாட்டுக்காக உழைத்து ஓடாய்த் தேய்பவனும்கூட தன்னிலை மாறுவதில்லை என்ற அரிய உண்மையை வெளிப்படுத்தும் சிறுகதை (1937) இது. இதன் நாயகன் மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு பொய்க்கணக்கு எழுதும் வாய்ப்பு இருந்தும் அதனைச் செய்வதில்லை; ஒரே இடத்தில் 45 ஆண்டுகள் வேலை பார்ப்பதே மனித யந்திரமான அவருக்கு கௌரவம். அவருக்கும் சிறு சபலம் வருகிறது. ஆனால், அச்சம் அந்த சபலத்தை வென்று விடுகிறது. ஏழைக்கு தவறு செய்யும் வாய்ப்பு கூட கிடையாது என்கிறாரோ புதுமைப்பித்தன்? நேர்மையாக இருப்பவன் யாரைக்கண்டும் அஞ்ச வேண்டியதில்லை என்பது தான் இந்த சிறுகதையின் நீதியா? அக்காலத்திய வெளிப்புறச் சித்திரங்கள், நாணய விகிதங்கள், நெல்லைத் தமிழ் ஆகியவற்றையும் இக்கதையில் தரிசிக்கலாம்...

பிரம்ம ராக்ஷஸ்

-புதுமைப்பித்தன்      நித்தியத்துவத்திற்கு ஆசைப்பட்டு, இடர்ப்பட்டு அழிவுற்றவர்களின் கடைசி எச்சரிக்கையாக இருந்தது அவன் கதை.      அவன் பொன்னை விரும்பவில்லை. பொருளை விரும்பவில்லை. போகத்தை விரும்பவில்லை. மனக் கோடியில் உருவம் பெறாது வைகறைபோல் எழும் ஆசை எண்ணங்களைத் துருவியறியவே ஆசைப்பட்டான். மரணத்தால் முற்றுப்புள்ளி பெறாது, ஆராய்ச்சியின் நுனிக் கொழுந்து வளர வேண்டுமென்ற நினைப்பினால் அவன் ஏற்றுக்கொண்ட சிலுவை அது. அன்றுமுதல் - ஆம், அது நடந்து வெகுகாலமாகிவிட்டது - இன்றுவரை, ஆசைகள் உந்த, அழிவு அவனைக் கைவிட, மரணம் என்ற … Continue reading பிரம்ம ராக்ஷஸ்

செல்லம்மாள்

சாமானியனுக்கு வாழ்க்கையே போராட்டம் தான். அன்றாடம் வேலை செய்தால் தான் வயிற்றுக்குச் சோறு என்ற நிலையில் வாழ்வோரின் ஆரோக்கியம் கெட்டால், அவர்களது வாழ்வே நித்தமும் நரகம் தான். அத்தகைய நிலையிலும் வாழ்க்கையை ஒரு பிடிப்புடன் நடத்தும் இரு சாமானிய ஜீவன்களின் கதை இது. 80 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுப் பதிவுகள் ஆங்காங்கே தூலமாய்த் தெரியும் இக்கதையில், வறுமையின் கோரம் மிகத் தெளிவாகவே வெளிப்படுகிறது. புதுமைப்பித்தனின் சிறுகதைகளில் முத்திரைக் கதையாக இக்கதை கொண்டாடப்படுவது ஏன் என்று, இதைப் படிக்கும்போதுதான் உணர முடியும். ஹூஊம்....

கபாடபுரம்

சந்திரோதயம் இதழில் புதுமைப்பித்தன் எழுதிய தொடர் சிறுகதை இது... புதுமைப்பித்தனின் புனைவுத் திறனும் நகைச்சுவை உணர்வும் இக்கதையில் போட்டியிடுகின்றன...

சாப விமோசனம்

இந்திய மொழி இலக்கியங்களில் மிகுந்த தாக்கம் செலுத்தும் பண்டைய இலக்கியங்களில் ராமாயணமும் மகாபாரதமும்  முக்கியமானவை. இன்றும் தொடரும் இந்த இழையறாத பண்பாட்டு உறவு இல்லாத எழுத்தாளர்களைக் காணல் அரிது. அந்த வகையில், தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் பிரதான இடம் வகிக்கும் புதுமைப்பித்தன், ராமாயணத்தின் தாக்கத்துடன் 'சாப விமோசனம்' கதையை எழுதியது வியப்பில்லை; ஆனால், கால மாற்றத்துக்கேற்ப தனது சிந்தனையில் எழுந்த கேள்வியையே மையமாக்கி இந்த சிறுகதையைப் புனைந்திருக்கிறார். கதை வெளியான காலத்தில் (1943) பெரும் புயலை உருவாக்கிய கதை இது. கணவரான கௌதம மகரிஷியின் சாபத்தால் கல்லான அகலிகை, ராமனின் பாதத் தூளி பட்டு பெண்ணான கதை நமக்குத் தெரியும்; அதே அகலிகை சீதையை அக்னிப்பிரவேசம் செய்யுமாறு ஸ்ரீராமன் சொன்னான் என்று கேட்ட மாத்திரத்தில் மீண்டும் கல்லாகிறாள்- புதுமைப்பித்தனின் கதையில்....

மகாமசானம்

வாழ்வின் நிலையாமையை 70 ஆண்டுகளுக்கு முந்தைய நடையில் எழுதி இருக்கிறார் சிறுகதைச் சக்கரவர்த்தி புதுமைப்பித்தன். வாழ்வை முடிக்கப்போகும் கிழட்டுப் பிச்சைக்காரனும், வாழ்வு என்றால் என்னவென்றே அறியாத சிறு குழந்தையும் இயல்பாக சந்திக்கிறார்கள். இருவருக்கும் அந்தச் சந்திப்பு புரிவதாகத் தெரியவில்லை. அதைப் படிக்கும் நமக்குத் தான் நிலையாமை புரிகிறது. அற்புதமான உருவகக் கதை இது...