கதவு

அன்பே வழி என்ற கருத்துடைய ‘கதவு’ என்ற இக்கதை 1917-ஆம்‌ ஆண்டு டிஸம்பர்‌ 12-ஆம் தேதி வெளியான ‘சுதேசமித்திரன்‌’ வருஷ அனுபந்தத்தில்‌, காளிதாசன்‌ எழுதுவது என்ற குறிப்புடன் பிரசுரமாயிற்று. பின்னாளில், ‘கல்‌கி’ தீபாவளி மலரில்‌ 1957-ஆம்‌ ஆண்டு வெளியாயிற்று.

ஆவணி அவிட்டம்‌

வாழ்க்கையில்‌ அன்றாடம்‌ நடக்கும்‌ விஷயங்களைக் கதை போலே எழுதுவதில்‌ மகாகவி பாரதி சமர்த்தர்‌. நம்‌ தமிழ்நாட்டுச்‌ சமூகத்தின்‌ உயர்வும்‌ தாழ்வும்‌ யாவும்‌ இந்தக் கதைகளில்‌ பளிச்செனத்‌ தெரிகின்றன. ‘ஆவணி அவிட்டம்‌’ என்ற இக்கதை முதலில்‌ சுதேசமித்திரனில்‌ வெளியாகி, பிறகு மித்திரன்‌ காரியாலயம்‌ 1920-இல்‌ வெளியிட்ட ‘கதாமாலிகா’ நூலில்‌ பிரசுரமாயிற்று.

வேணு முதலி விசித்திரம்‌

வேணு முதலி என்ற ஒருவரைப்‌ பற்றி முந்தைய கதையில்‌ பாரதி குறிப்பிடுகிறார்‌. இந்த வேணு முதலியின்‌ ஞானானுபவங்‌களைப்‌ பற்றியது இந்தக்‌ கதையும்‌. வேதபுரமென்பது புதுவையின்‌ பெயர்‌. இக்‌ கதையும்‌ முதலில்‌ ௬தேசமித்திரனிலும்‌, பிறகு 1920-ஆம்‌ ஆண்டு நவம்பர்‌ மாதம்‌ மித்திரன்‌ காரியாலயம்‌ வெளியிட்ட ‘கதாமாலிகா’ என்ற நூலிலும்‌ பிரசுரமாயிற்று.

வேணு முதலி

வேதபுரம்‌ என்று புதுவை நகரத்துக்கு ஒரு மாற்றுப்‌ பெயர்‌ உண்டு. பாரதியார்‌ வேதபுரம்‌ என்ற பெயரைப்‌ பல இடங்களில்‌ உபயோகித்துளளார்‌. வேணு முதலி என்ற நபரைப்‌ பற்றியும்‌ பல கதை, கட்டுரைகளில்‌ குறிப்பிடுகிறார்‌. இக்‌ கதை ‘சுதேசமித்திரனில்’ முதலில்‌ வெளிவந்தது; ‘காளிதாசன் எழுதுகிறார்’ என்ற குறிப்புடன் இக்கதை வெளியாகி இருக்கிறது. பிறகு மித்திரன்‌ அலுவலகம்‌ 1920-ஆம்‌ ஆண்டு நவம்பர்‌ மாதம்‌ வெளியிட்ட ‘கதாமாலிகா’ என்ற நூலில்‌ வெளியாயிற்று.

பாம்புக்‌ கதை

மனிதனைப்‌ பற்றி ஒரு பாம்புக்கும்‌ காக்கைக்கும்‌ பேச்சுப்‌ போல அமைந்துள்ள இந்தக்‌ குட்டிக்‌ கதை, ‘சுதேசமித்திரன்‌’ தினசரியில்‌, 1919-ஆம்‌ ஆண்டு வெளியாயிற்று. திரு. ரா.அ.பத்மநாபன் தொகுத்த ‘பாரதி புதையல்- முதல் பாகம்’ நூலில் இக்கதை இடம் பெற்றிருக்கிறது.

ஸ்வர்ண குமாரி

மகாகவி பாரதியின் இரண்டாம் சிறுகதை இது. - இந்தக் கதை  ‘இந்தியா’ (2-2-1907) இதழில் பிரசுரமானது. இந்தக் கதை காதல்வயப்பட்ட ஸ்வர்ண குமாரி - மனோரஞ்ஜனன் ஆகிய இருவர் வாழ்க்கைச் சூழல்களுக்கிடையே, காதலைக் காட்டிலும் சுதேசாபிமானமே மாணப் பெரிது என்பதை மிக அழகாக- ஆழமாக எடுத்துச் சொல்கிறது. தேசபக்தி, திலகர் பக்தி - இந்த இரண்டையும் பாரதி இரு கண்களாகப் பாவித்தார் என்பதை இந்தக் கதை மூலம் நாம் அறிகிறோம்.

ரெயில்வே ஸ்தானம் – சிறுகதையும் மறுப்பும்

மகாகவி பாரதி, தனது வாழ்வின் இறுதிக்கட்டத்தில், ‘சுதேசமித்திரன்’ இதழில் சமகால உலகம், அரசியல், சமயம், பண்பாடு தொடர்பான கட்டுரைகள், கவிதைகள், நையாண்டிக் கதைகள், சிறுகதைகளை எழுதி வந்தார். அந்த வகையில்  ‘சுதேசமித்திரன்’ (22-5-1920) இதழில் அவர் எழுதிய கதை, ‘ரெயில்வே ஸ்தானம்’. இஸ்லாமிய மக்களிடையே உள்ள பலதார மணத்தை விமர்சிக்கும் வகையிலும்,  முஸ்லிம் மாதரின் பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுப்பதாகவும் இக்கதையை எழுதியுள்ளார் பாரதி. எனினும், இக்கதையில் சிறு தகவல் பிழை இருப்பதாக அவரது இஸ்லாமிய நண்பர் கூறியதையும் ‘சுதேசமித்திரன்’ இதழில்  'முகமதிய ஸ்திரீகளின் நிலைமை' என்ற கட்டுரையாக வெளியிட்டு, தனது பிழைக்கு வருத்தமும் தெரிவித்திருக்கிறார். என்றபோதும், முஸ்லிம் மாதரின் உரிமைக்காக தனது இஸ்லாமிய நண்பரிடம் தொடர்ந்து வாதிடுகிறார். சமூக மாற்றத்துக்காகத் துடித்த மகாகவி பாரதியின் இதயம், மதம் கடந்து சிந்தித்ததையும் இந்த சிறுகதை மற்றும் கட்டுரையில் காண முடிகிறது. 

காந்தாமணி

காதலின் புகழ் குறித்து தனிக் கவிதைகளே (பாரதி அறுபத்தாறு- 49-53) எழுதியவர் மகாகவி பாரதி. காதல் என்பது கண்ணுக்குத் தெரியாத கடவுளின் அருள் என்பதே அவரது பார்வை. வயது, மதம், மொழி, பிரதேச வேறுபாடுகள் காதலுக்கு ஒருபொருட்டாக மாட்டாது என்பதை இக்கதையிலும் வெளிப்படுத்தி இருக்கிறார் பாரதி, தனக்கே உரித்தான குறும்பான மொழிநடையில்…

சந்திரத் தீவு

தனது உயரிய கனவான 'ஜீவகாருண்ய ஒழுக்கத்தை வலியுறுத்தி மகாகவி பாரதி எழுதிய இந்தக் கதை, பாரதி பிரசுராலயத்தார் பதிப்பித்த கட்டுரைகள் தொகுதியில் இடம்பெற்றுள்ளது. தம்முடைய தரும போதனையை இக் கதையில் வரும் கதாபாத்திரங்களான கங்காபுத்திரன், ராஜகோவிந்தன், ஸுதாமன் ஆகியவர்களுடைய உரையாடல்கள் மூலம் விளக்குகிறார், பாரதி.  

கோபந்நா

மகாகவி பாரதியின் சமூக உணர்வு, அவரை பழமைக்கும் புதுமைக்கும் இடையே ஊசலாடச் செய்தது. பாரம்பரியத்தில் ஊறிய பாரதிக்கு நாட்டு மக்களின் ஏழ்மையும் தேக்கமும் மிகுந்த வேதனை அளித்தன. அது அவரது கதை, கவிதை, கட்டுரைகளில் வெளிப்பட்டுக் கொண்டெ இருந்தது. அதற்கு இக்கதையும் ஒரு உதாரணம்...

வேதபுரத்தின் இரகஸ்யம்

மகாகவி பாரதி எழுதிய ‘கிரைம் கதை’ இது. இக் கதை  ‘கதா ரத்னாகரம்’ மாதப் பத்திரிகையில் 1920 ஆகஸ்ட், செப்டம்பர் இதழ்களில் பிரசுரமானது. பின்னர், நூலாக்கம் பெற்ற  ‘கால வரிசைப் படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்’ தொகுதியில் இடம்பெற்றது. பாரதி எழுதிய கதைகளில் இது ஒரு வித்தியாசமான கதை. சூழ்நிலை ஒரு மனிதனை எப்படியெல்லாம் மாற்றி விடுகின்றது என்பதே கதையின் முக்கியக் கருத்தாக அமைந்துள்ளது. குற்றத்தைப் புலனாய்வு செய்ய வந்த காவல் அதிகாரி கடைசியில் அந்த விவகாரத்தையே மறந்துவிட்டார் என்று முடிக்கும் பாரதியின் குறுப்பு ரசிக்கத் தக்கது....

வேப்ப மரம்

இக் கதையை முதன்முதலாகக் கண்டறிந்து தமது ‘பாரதி தமிழ்’ நூலில் திரு. பெ.தூரன் அவர்கள் பதிப்பித்தார். வேப்ப மரம் பேசுமா? பேசினால் என்ன பேசும்? அற்புதமான கற்பனை... அகஸ்த்ய மஹரிஷியும், தாம்ரபர்ணி யம்மனும் ஜலக்கிரீடை செய்வதாக எழுதும் கற்பனைவளத்தை மீறும் வகையில், மகாகவி பாரதிக்கே உரித்தான வேதாந்தச் சாயல் இக்கதையில் உண்டு.

கொட்டையசாமி

இக் கதை பாரதி பிரசுராலயத்தார் வெளியிட்ட கட்டுரைகள் தொகுதியில் இடம் பெற்றது. அந்தக் காலத்து ஜமீன்தார்களின் பொதுவான குணாதிசயங்களை விளக்க பகடியாக எழுதிய இந்தக் கதையில் கொட்டையசாமி என்பவன் ஜமீன் சபையில் நிகழ்த்திய ஆட்ட பாட்டங்களைப் படித்து ரசிக்கலாம். பொழுதுபோக்குக் கதைகளில் இதுவும் ஒன்று.நெட்டையபுரம் வேறு- எட்டயபுரம் வேறல்ல என்பது பாரதியை அறிந்தோருக்குத் தெரியும்.

தாஸியும் செட்டியும்

பாரதி எழுதிய பொழுதுபோக்குக் கதைகளில் இதுவும் ஒன்று. இந்தக் கதையில் நீதி போதனையும் சொல்லப்படுகின்றது. இந்தக் கதை  ‘சுதேச மித்திரன்’ காரியாலயமே நடத்தி வந்த  ‘கதாரத்னாகரம்’ மாதப் பத்திரிகையில் 1920 ஆம் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் இதழ்களில் பிரசுரமானது.

பேய்க் கூட்டம்

இது ஒரு கற்பனைக் கதைதான். அதிலும் தன்னையே ஒரு கதாபாத்திரமாக்கிக் கொண்டு, மேலும் தன்னைத் தானே பகடி செய்துகொண்டு, நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார் மகாகவி பாரதி. இரு பகுதிகளாக வெளியான இக்கதை, இங்கு ஒரே பகுதியாக்கிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யப் புரட்சி, கந்த புராணம், திருவாசகம், ஆற்காடு நவாபின் சரண், அச்சமில்லை என்ற மகாகவியின் பாட்டு- இவை எல்லாம் சமத்காரமாக கதையினிடையே உலா வருவதைப் படியுங்கள், ரசியுங்கள்!