அக்கினிக் குஞ்சுகள்- நூல் அறிமுகம்

பத்திரிகையாளர் வ.மு.முரளி, தினமணியின் இணைப்பிதழான  'இளைஞர் மணி'யில் 2015 அக்டோபர் 27 இல் தொடங்கி 2018 டிசம்பர் 20 வரை 120 வாரங்கள் தொடர்ந்து எழுதிய கட்டுரைத் தொடரின் தொகுப்பு இது.  “வாரந்தோறும் படித்தாலும் அப்பொழுது ஏற்படாத மலைப்பு நூல் வடிவில் தொகுப்பாக படிக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது”  என்று தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் குறிப்பிட்டுள்ளார். அது பொருத்தமான பாராட்டுத் தான்.

ஸ்ரீ அரவிந்தரின் எரிக்கன்- நூல் அறிமுகம்

அரவிந்தர் எழுதிய ‘எரிக்’ என்ற கவிதை நாடகம், ஸ்காண்டிநேவிய நாட்டுக் கதையின் செம்மை வடிவம். அவரது ஆங்கில நடை, ஆங்கிலேயர்களே வியந்த தனித்தன்மை கொண்டதாகப் போற்றப்படுகிறது.  இதன் மூலம் எதுவென்று அவர் குறிப்பிடவில்லை. எனினும், நார்வே தேச மன்னன் எரிக் பற்றிய சித்திரம் இதுவென்பது நாடகத்திலிருந்து தெரிய வருகிறது.

இதனை, அழகுத் தமிழில், இனிய யாப்புச் செய்யுள்களில் அரவிந்தரின் மூலத்துக்கு தகுந்த வகையில்,  ‘எரிக்கன்’ என்ற கவிதை நாடகம் ஆக்கி இருக்கிறார் வங்கி மேலாளராகப் பணிபுரிந்த சிவ.சூரியநாராயணன். அரவிந்தரின் ஆங்கில நடையில் தனது மனதைப் பறிகொடுத்த எழுத்தாளர், அதனை உள்வாங்கி தமிழுக்கேற்ற செம்மாந்த நடையிலும், நமது பண்பாட்டுக்கேற்ற இன்சொற்களிலும், மூலமா, மொழிபெயர்ப்பா என்று  புலப்படாதவாறு தமிழாக்கி இருக்கிறார்.

பாகிஸ்தான்: இந்தியப் பிரிவினை- நூல் அறிமுகம்

டாக்டர் அம்பேத்கர் 1945-ல், பிரிவினைக்கு முன்பாக எழுதிய புத்தகம் THOUGHTS ON PAKISTAN. அதன் தமிழாக்கம், கிழக்கு பதிப்பக வெளியீடாக வெளியாகி உள்ளது. மொழிபெயர்த்தவர் பி.ஆர்.மகாதேவன். அரிய சரித்திர ஆவணம் இந்நூல்.

இந்துத்துவ அம்பேத்கர்- நூல் அறிமுகம்

இன்று அம்பேத்கரை உரிமை கொண்டாடாதவர்கள் இல்லை. அம்பேத்கரை அவரது வாழ்நாளில் எதிர்த்த காங்கிரஸாரும், கம்யூனிஸ்டுகளும் இன்று அவரது பெயரை உச்சரிப்பதுதான் அம்பேத்கரின் வெற்றி. அதேசமயம், இந்து மதத்தை கடுமையாக நிராகரித்த அம்பேத்கரை இந்துத்துவர்கள் மிகவும் போற்றுவது எப்படி? அம்பேத்கரியலில் தீவிர ஆராய்ச்சியாளரான ம.வெங்கடேசனின் இந்நூல் இக்கேள்விக்கு விளக்கமளிக்கிறது.... 22 அத்தியாயங்களில் அம்பேத்கரின் கருத்துகளைக் கொண்டே கட்டி எழுப்பப்பட்ட ஆராய்ச்சி நூலாக இந்நூல் விளங்குகிறது. எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டனின் அறிமுக உரையும் சிறப்பாக உள்ளது. நூலாசிரியரின் கடின உழைப்பு வியக்க வைக்கிறது. இந்துத்துவர்களின் சிந்தனைப் போருக்கு ஒரு கருவியாக இந்நூல் வெளியாகி இருக்கிறது.

Phiosopher Saint – நூல் அறிமுகம்

நாராயண குருவின் நூல்களைப் பற்றி, அதில் உள்ள கருத்துக்களைப் பற்றி நன்கு புரியும்படி பல கட்டுரைகளை சுவாமி ஜான் ஸ்பியர்ஸ் எழுதியுள்ளார். அதில் சில இந்நூலில் உள்ளன. நாராயண குருவுடன் நெருக்கமாக பழகியவரும் சீடருமான கவிஞர் குமரன் ஆசான் எழுதியுள்ள ‘நாராயண குருவின் வாழ்க்கைச் சுருக்கம்’ இந்த நூலில் உள்ளது. நாராயண குருவை தத்துவார்த்த ரீதியில் முன்வைத்த நடராஜ குரு எழுதிய ‘குருவின் சொல்’ என்ற நூலில் இருந்து இரண்டு அத்தியாயங்களும் இதில் உள்ளன. நாராயண குருவின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் காலவரிசைப் பட்டியல் இதில் உள்ளது. அவர் எழுதிய நூல்கள், மொழிபெயர்ப்புகளின் பட்டியலும், அவரைப் பற்றி புரிந்துகொள்ள மற்றவர்கள் எழுதிய நூல்களில் முக்கியமானவற்றின் பட்டியலும் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ளது.

நாராயண குருவின் வாழ்க்கையையும் தத்துவத்தையும் சொல்வதென்பது, சுவாமி ஜான் ஸ்பியர்ஸ் வார்த்தையில் சொல்வதென்றால், கடலைக் குவளையால் அளப்பது போலத் தான்....

திராவிட இயக்கம் – புனைவும் உண்மையும்: நூல் அறிமுகம்

பிராமணரல்லாதோர் இயக்கம் எவ்வாறு தென்னிந்திய லிபரல் கூட்டமைப்பாக மாறியது? அது எவ்வாறு ஜஸ்டிஸ் கட்சியாகப் பெயர் மாற்றம் பெற்றது? அதில் இருந்த பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர் போன்றவர்கள் எவ்வாறு தடம்புரண்டனர்? ஜஸ்டிஸ் கட்சித் தலைவராக ஈ.வெ.ராமசாமி எப்போது உருவானார்? ஜஸ்டிஸ் கட்சியை திராவிடர் கழகம் எவ்வாறு விழுங்கியது? உண்மையிலேயே திராவிட இயக்கம் உள்ளதா? இருந்தால் அதன் வயது 100 தானா?

இவ்வாறு பல கேள்விகளை எழுப்பி இந்நூலில் சரித்திரச் சான்றுகளுடன் பதில் அளித்திருக்கிறார் மலர்மன்னன். திராவிட இயக்கம் என்ற சொல்லாட்சியே ஒரு மோசடியான புனைவு, தமிழகத்தில் இருப்பது திராவிட அரசியல் மட்டுமே என்று முடிக்கிறார். சுள்ளெனச் சுடும் உண்மைகள் நிறைந்த நூல் இது.

வால்காவிலிருந்து கங்கை வரை- நூல் அறிமுகம்

பன்மொழிப் புலவரும், புத்தத் துறவியும், ஹிந்தி பயண இலக்கியத்தின் தந்தையுமான ராகுல சாங்கிருத்தியாயன், மார்க்சியத் தத்துவம் இந்திய இலக்கியங்களில் ஆதிக்கம் செலுத்தக் காரணமான முன்னோடிகளுள் ஒருவர். இவர் சிறையிலிருந்தபடி எழுதிய  ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ புதினம் 1944ல் வெளியானது. அப்போதே பலத்த எதிர்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்திய இந்நாவல், இதன் உள்ளடக்கத்தாலும், இடதுசாரிப் பார்வையாலும் பிரபலம் அடைந்தது.... ஒருவர் ராகுலின் கருத்துக்களுடன் முரண்படலாம்; ஆனால் அவரை நிராகரிக்க முடியாது. அவரது தர்க்க ஆற்றலும், நுண்ணறிவும், பகுத்தறியும் திறனும் இன்றைய ஆய்வாளர்களுக்கும் வழிகாட்டக் கூடியவை....

தீராத விளையாட்டு விட்டலன்: நூல் அறிமுகம்

பாரதம் அருளாளர்களின் ஜென்மபூமி. இமயம் முதல் குமரி வரை எங்கு சென்றாலும், ஏதாவது ஒரு அருளாளரின் புனிதத்தலத்தை தரிசிக்க முடியும். இந்த அருளாளர்கள் அனைத்து வகுப்பினரிலும் அவதரித்திருப்பதையும் காண முடியும்; சமுதாயத்தை ஒருங்கிணைக்க இறைவனே நடத்திய திருவிளையாடல்களின் பல கதைகளை நாம் கேட்க முடியும். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் மராட்டிய மண்ணில் உதித்து பக்திப்பயிர் வளர்த்த பக்தப் பரம்பரை தான்....

நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம்: நூல் அறிமுகம்

அரசே அராஜகத்தில் ஈடுபடும்போது பெரும்பாலோர் ஊமையாகி விடுகின்றனர். ஆனால், விதிவிலக்குகளாக அமைந்த தளகர்த்தர்கள் ஆட்சிக்கு எதிராக சத்தியாகிரகம் நடத்தியதுடன், தேசிய அளவிலும் உலக அளவிலும் நெருக்கடி நிலைக்கு எதிரான கருத்தை உருவாக்குவதில் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டனர். அவர்களில் ஒருவரான, இந்து முன்னணியின் நிறுவனர், அமரர் இராம.கோபாலன், மிகுந்த பொறுப்புணர்வுடனும்,  அனுபவ அறிவுடனும் தொகுத்து வழங்கியுள்ள நூல் இது....

பத்மாவதி சரித்திரம் – நூல் அறிமுகம்

‘நாவல்‘ எனப்படும் புதினம் தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகமாகி நூறாண்டு ஆகிறது; ஆங்கில இலக்கியத்தின் தாக்கத்தால் புதிய உரைநடையில் நெடுங்கதைகளை வடிப்பது தமிழிலும் துவங்கியது. அந்த வகையில் தமிழின் முன்னோடி நாவலாக, அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் விளங்குகிறது. தமிழ் நாவல்கள் பட்டியலில் மூன்றாவது நாவலான இந்நூல், தரத்தில் நூறாண்டு கடந்தும் முதன்மை வகிப்பது, மாதவையாவின் சமகால நோக்கிற்கு உதாரணம். தமிழ் இலக்கிய உலகில் பெரும் மாற்றங்களுக்கு வித்திட்ட அ.மாதவையாவின் முதல் நாவலான பத்மாவதி சரித்திரம், மூன்று காலகட்டங்களில் மூன்று பாகங்களாக எழுதப்பட்டது. இதில் முதல் இரு பாகங்களே பெரும்பாலான பதிப்பாளர்களால் வெளியிடப்பட்டுள்ளன. காவ்யா பதிப்பகம், இதுவரை வெளியாகாமல் இருந்த, முற்றுப்பெறாத மூன்றாவது பாகத்தையும் இணைத்து செம்மையான பதிப்பாக வெளியிட்டுள்ளது. மாதவையாவின் சமுதாய நோக்கு, இலக்கிய பரிச்சயம், சீர்திருத்தச் சிந்தனை, மெல்லிய நகைச்சுவை உணர்வு ஆகியவை நாவல் முழுவதும் விரவிக் கிடப்பதைக் காண முடிகிறது. பழமையின் பிடியில் சமுதாயம் தத்தளித்த காலத்தில், விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல், பெண்ணுரிமைகளை வலியுறுத்தி துணிவுடன் நாவல் எழுதிய அ.மாதவையா இன்றைய எழுத்தாளர்களுக்கு ஆதர்சமாக விளங்குகிறார்....

அழகிய இந்தியா – நூல் அறிமுகம்

பேரறிஞர் தரம்பால் தாம் எழுதிய - அழகிய மரம், அழகிய நதி, அழகிய போராட்டம், அழகிய கிராமம் ஆகிய 4 நூல்களின் சாராம்சத்தை எளிய நடையில் அந்தந்தப் புத்தகங்களுக்கான முன்னுரையாக எழுதி இருக்கிறார். ’அழகிய இந்தியா’ என்ற இந்தப் புத்தகம் அப்படியான முன்னுரைகளின் தொகுப்புதான். தரம்பால் தொகுத்த ஆவணங்களை வேறு யாரேனும் ஒருவர் சுருக்கி எழுதுவதைவிட அவர் எழுதிய முன்னுரைகளின் தொகுப்பான இந்த நூல் அதிகாரபூர்வ ஆவணத்துக்கான முழு மதிப்புடனே உருவாகியிருக்கிறது. அனைத்துத் துறைகளிலும் பிரிட்டிஷார் வருவதற்கு முந்தைய பாரதம் எப்படி உயரிய நிலையில் இருந்தது என்பதை பிரிட்டிஷாரின் ஆவணங்களைக் கொண்டே நிரூபித்த மகத்தான சாதனையின் கையடக்க அறிமுகம் இது.

அந்தமான் சிறை அனுபவங்கள் – நூல் அறிமுகம்

விடுதலைப் போராட்ட வீரர்களுள் பிற எல்லோரையும் விட கொடிய தண்டனைகளையும் கடும் சித்ரவதைகளையும் பெற்றவர் வீர சாவர்க்கர் என்று அழைக்கப்படும் விநாயக தாமோதர சாவர்க்கர் (1883- 1966).... பூனாவில் சாவர்க்கர் துவங்கியிருந்த அபிநவ பாரத இயக்கம் நடத்திய பல வன்முறை நிகழ்வுகளையும், லண்டனில் நிகழ்ந்த ஆங்கிலேய அதிகாரி கொலையையும் விசாரித்த ஆங்கிலேய அரசின் நீதிமன்றம், சாவர்க்கருக்கு இரட்டை ஆயுள் தண்டனையை (50 ஆண்டுகள்- 1910- 1960) அளித்து, தீவாந்திர (நாடுகடத்தல்) தண்டனையாக அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.... தனது தண்டனைக் காலத்தை, சிறைவாச அனுபவங்களை அவரே பின்னாளில் ’கேசரி’ வார இதழிலும், ’ஷ்ரத்தானந்த்’ என்ற பத்திரிகையிலும் தொடராக எழுதினார். அவை பின்னர் தொகுக்கப்பட்டு 1927இல் எனது அந்தமான் சிறை அனுபவங்கள்’ என்ற நூலாக வெளிவந்தது. இந்த நூலின் பல பகுதிகள் ஆங்கிலேய அரசுக்கு எதிராக இருந்ததால் தடை செய்யப்பட்டது. 1946இல் இந்தத் தடை விலகியது..... அந்த நூல் தற்போது வழக்குரைஞர் எஸ்.ஜி.சூர்யாவால்  தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அழகிய நூலாக கிழக்குப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. நூலின் பல பக்கங்களைப் படிக்கும்போது கண்களில் நீர்திரண்டு படிக்க முடியாமல் செய்து விடுகிறது. எத்தனை வேதனைகள்! எவ்வளவு அவமானங்கள்! கொடுமைகளின் கூடாரமான அந்தமான் சிறையில் சாவர்க்கர் அடைந்த கஷ்டங்களை அவருள் இருக்கும் எழுத்தாளனும் தத்துவ அறிஞரும், கவிஞரும், அற்புதமான மனிதரும் பல கண்ணோட்டங்களில் காண்பதை அவரது எழுத்தே புலப்படுத்துகிறது.

மகான்களின் பொன்மொழிகள் 1000 பாகம்1 – நூல் அறிமுகம்

இந்நூலில் மகான்கள் சொன்ன பொன்மொழிகள் 11  பகுதிகளில் 147 தலைப்புகளில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இத்தனை மகான்கள், இத்தனை நூல்களிலிருந்து தொகுக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கும்போதே மலைப்பு ஏற்படுகிறது.  இதனைத் தொகுத்தவர், மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்த மஹராஜ் அவர்கள்.