ரா.பி.சேதுப்பிள்ளையின் ‘தமிழ் விருந்து’: பகுதி -4

அரசர்க்குரிய சிறந்த அங்கங்களில் தூதும் ஒன்றாகும் என்று திருவள்ளுவர் கருதுகின்றார். இரு மன்னர்க்கிடையே மாறுபாடு நிகழ்ந்தால் அப் பிணக்கத்தைத் தீர்த்து இணக்கத்தை உண்டாக்கும் பொறுப்பு. தூதர்க்கே உரியதாகக் கூறப்படுகின்றது. இதனாலேயே அன்பும், அறிவும், ஆராய்ந்த சொல்வன்மையும் தூதருக்கு இன்றியமையாத நலங்கள் என்று திருக்குறள் கூறுவதாயிற்று. இத்தகைய தூதர் பெருமையைக் காவியங்களிலும் காணலாம். பாண்டவர்க்கும் கெளரவர்க்கும் பிணக்கம் நேர்ந்த பொழுது பாண்டவர்க்காகத் துரியோதனனிடம் தூது சென்றான் கண்ணன். அப் பெருமான் தூது நடந்த செம்மையை சிலப்பதிகாரம் பாராட்டுகின்றது. பாண்டவர் தூதனாகிய கண்ணனைப் போன்று இராம தூதனாயினான் அனுமன். நிறைந்த பேரன்பும், சிறந்த கலைஞானமும் நிகரற்ற சொல்வன்மையும் வாய்ந்த அநுமன் இராமனுக்காகத் தூது சென்று, அரும் பெருஞ் செயல்களைச் செய்தான்.... ரா.பி.சேதுப்பிள்ளையின் தமிழ் விருந்து- நூலின் நான்காம் (இறுதி) பகுதி....

ரா.பி.சேதுப்பிள்ளையின் ‘தமிழ் விருந்து’: பகுதி -3

'யாழ்ப்பாணம்' என்பது நல்ல தமிழ்ப் பெயர். அப் பெயரின் வரலாறு அறியத் தக்கதாகும். தமிழ்நாட்டுப் பழங்குடிகளில் 'பாணர்' என்பார் ஒரு வகுப்பார். பண்ணோடு பாட வல்லவர் பாணர் என்று பெயர் பெற்றார் என்பர். வைணவ சமய ஆழ்வார்களுள் ஒருவராகிய திருப்பாணாழ்வார் பாணர் குலத்தைச் சேர்ந்தவர். பாணர் குலத்தில் 'யாழ்ப்பாணர்' ஒரு பிரிவினர். இன்னிசைக் கருவியாகிய யாழைக் கையிலேந்திப் பாடிய பாணர் யாழ்ப்பாணர் எனப்பட்டனர். பெரிய புராணத்திற் போற்றப்படுகின்ற சிவனடியார்களுள் ஒருவராகிய திருநீலகண்ட யாழ்ப்பாணர் இவ் வகையைச் சேர்ந்தவர். யாழ்ப்பாணர்கள் குடியேறித் திருத்திய நகரமே 'யாழ்ப்பாணம்' என்று பெயர் பெற்றது. இவ் வழகிய ஊர்ப்பெயர் ஆங்கிலத்தில் 'ஜாப்னா' என்று சிதைந்து வழங்கு கின்றது. யாழ்ப்பாண நகருக்கு அருகே திருநெல்வேலி என்ற ஊர் உண்டு. பாண்டி நாட்டிலுள்ள திருநெல்வேலியினின்றும் ஈழநாட்டிற் குடியேறிய மக்கள் தம் ஊர்ப் பெயரிலுள்ள ஆசையால் அதனை ஆண்டு அமைத்து வழங்கினார்கள் என்று தோன்றுகிறது. இவ்வாறு இலங்கையில் குடியேறிய தமிழர், தம்மை இலங்கையராகவே கருதி வாழ்ந்து வருகின்றனர்..... திரு. ரா.பி.சேதுப்பிள்ளையின் ’தமிழ் விருந்து’ நூலின் மூன்றாம் பகுதியில் இருந்து....

ரா.பி.சேதுப்பிள்ளையின் ‘தமிழ் விருந்து’: பகுதி -2

...கலையறிந்த புலவர்களை அக் காலத்து மன்னரும் செல்வரும் மதித்தார்கள்; கற்றோரைப் போற்றாத நாடு ஒரு நாளும் கடைத்தேற மாட்டாது என்னும் உண்மையை நன்றாக அறிந்திருந்தார்கள். சேரநாட்டை யாண்ட பெருஞ்சேரலை நாடிச் சென்றார், ஒரு தமிழ்ப் புலவர். அப்பொழுது மன்னன் மாளிகையில் இல்லை. நெடுந்தூரம் நடந்து, வெயிலால் உலர்ந்து, பசியால் வருந்திய புலவர் அங்கிருந்த மெல்லிய மஞ்சத்தில் படுத்துறங்கிவிட்டார். சேரமான் வந்தான்; மஞ்சத்தில் உறங்கிய அறிஞரைக் கண்டு நெஞ்சம் குளிர்ந்தான். அவர் நன்றாக உறங்குமாறு வெண்சாமரம் எடுத்து வீசுவானாயினன். சேரன் உள்ளத்தில் அமைந்த தமிழார்வம் இதனால் தெள்ளிதின் விளங்குகின்றதன்றோ? வாள் எடுத்து, மாற்றார் தலைகளை வீசிய கைகளால் சேரமான் புலவர்க்குச் சாமரம் வீசினான். தகடூர்க் கோட்டையைத் தகர்த்த சேரன், தமிழ்ப் புலமைக்குத் தாழ்ந்து பணி செய்வானாயினான். ரா.பி.சேதுப்பிள்ளையின் தமிழ் இன்பம்- இரண்டாவது பகுதி....

ரா.பி.சேதுப்பிள்ளையின் ‘தமிழ் விருந்து’: பகுதி-1

ரா.பி.சேதுப்பிள்ளை (1896- 1961), தமிழ் அறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப்பேச்சாளர் எனப் பன்முகம் கொண்ட படைப்பாளி.  தமிழ் இலக்கியத்தில் ஆழங்காற்பட்ட புலமை கொண்ட இவர் மேடைச் சொற்பொழிவிலும், கட்டுரை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர். தமிழின் எழுத்து நடை வளர்ச்சியில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. உரைநடையில் அடுக்குமொழியையும், செய்யுள்களுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றையும் கொண்டு வந்தவர் இவரே. சேதுப்பிள்ளையின் ‘தமிழின்பம்’ என்னும் நூலுக்கு சாஹித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. கவியோகி சுத்தானந்த பாரதியார், ரா.பி.சேதுப்பிள்ளையை “செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை” என்று பாராட்டினார். அடுக்குமொழி, எதுகை, மோனை, இலக்கியத் தொடர் மூன்றையும் உரைநடைக்குள் கொண்டுவந்த சேதுப்பிள்ளையின் பேச்சாற்றலைப் பாராட்டித் தருமபுர ஆதீனம் 1950ஆம் ஆண்டு ‘சொல்லின் செல்வர்’ என்னும் விருதினை வழங்கியது.  அவரது ’தமிழ் விருந்து’ நூல் இங்கு 4 பகுதிகளாக வெளியாகிறது....