ஞானரதம் (9- 11)

ஐயோ! என்ன உலகமடா, இந்த மண்ணுலகம்! ஒழியாத ஏமாற்று, ஒழியாத வஞ்சனை, ஒழியாத கவலை, ஸாரமில்லை, ஸத்துக் கிடையாது: உள்ளூரப் பூச்சியரித்துக் குழலாய் இருக்கும் வாழ்க்கை; ஒவ்வொருவனும் மற்றவன் மீது பழி கூறுகின்றான். ஒவ்வொருவனும் தன்னிஷ்டப்படி விட்டுவிட்டால் எல்லாம் நேராக நடக்குமென்ற நம்பிக்கையுடனே தான் இருக்கிறான், ஆனால், “நான் ஒருவன் சரியாக இருந்தால் போதுமா? மற்றவர்களை நம்புவதற்கிடமில்லையே” என்று நினைக்கிறான். பிறரை நம்புவதற்கிடமில்லையென்றெண்ணி ஏமாற்றுகிறான். ஐயோ மூடா நீ ஏமாற்றுவதனால், முன்னைக் காட்டிலும் பரஸ்பர நம்பிக்கை அதிகரித்து விடுமென்றா நினைக்கிறாய்? மனித ஜாதிக்கு தீராத நோய் ஒன்று பிடித்திருக்கிறது. மாறாத சாபம். இறங்காத விஷம். இதன் பெயர் பணம். (மகாகவி பாரதியின் ஞானரதத்தில் இருந்து)...

ஞானரதம்  (1-8)

மகாகவி பாரதியின் ’ஞானரதம்’ பாரதியின் உரைநடைக் கதை; குறும் புதினம்; அற்புதமான தத்துவ விசாரணை. ஆங்காங்கே தேசத்தின் வீழ்ச்சி குறித்த புலம்பலுடன் விழிப்புணர்வூட்டும் கடமையுணர்வும் உண்டு.... வாழ்வின் உன்னதக் கணமொன்றைத் தேடியலையும் பாரதியின் ஆன்மா, தன்னையே கதையின் நாயகனாக்கி, மன ரதமேறி வெவ்வேறு உலகங்களில் சஞ்சாரம் செய்கிறது. கற்பனைகளுக்கும், நினைவுகளுக்கும் தூரம் என்பது ஒரு பொருட்டாகுமா, என்ன? துன்பங்களை ஊடறுத்துச் சென்றுவர பாரதி தேர்வு செய்த ஐந்து உலகங்களும் உலகின் ஒவ்வொரு மனிதனுக்கானவையே....தற்காலத்தில் ‘டைம் மெஷின்’ (கால இயந்திரம்) என்ற கருதுகோளுடன் புதினங்கள் புனையப்படுகின்றன. இதற்கு ஒப்பான ஒரு சிந்தனையை நூறாண்டுகளுக்கு முன்னமே தமிழ் இலக்கியத்தில் தனது ஞானரதம் வாயிலாக அறிமுகப்படுத்தியவர் பாரதி என்று சொல்லலாம். அதிலும் தன்னையே கதையின் நாயகன் ஆக்கிக்கொண்டு, சுய எள்ளலுடன் எதையும் அணுகும் சமநிலைப் பார்வை, இந்தப் படைப்பை பேரிலக்கியம் ஆக்குகிறது.....