குறைப் பிறவி

மனிதன் வெளிப்புற உடல் அழகில் லயிக்கிறான். அதேசமயம், அதே தோற்றம் குரூரமாக இருந்தால் குமைகிறான். இவையெல்லாம், அறிவு முதிர்ந்த மனிதர்களுக்குத் தான்; பச்சிளம் குழந்தைகளுக்கும், விலங்குகளுக்கும் அழகு- குரூரம் என்ற பேதம் இருப்பதில்லை. அதன் காரணம், ஒருவேளை அவற்றின் அறிவு முதிர்ச்சி வழக்கமான மனிதர் போல இல்லாததால் தானோ என்னவோ? இச்சிறுகதையில், கோர சொரூபத்தால் விலக்கி வைக்கப்பட்ட வீட்டு வேலைக்காரி செல்லியின் தியாகம் மூலமாக, ஜெயகாந்தன் எந்த உபதேசமும் செய்யாமலே, மனிதத்தன்மை என்னவென்று புரிய வைக்கிறார்….

நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ?

இது வெறும் சிறுகதை அல்ல… கண்களைக் குளமாக்கும் இல்லறச் சிறப்பின் கதை. அந்த லாட்டரிச் சீட்டை இக்கதையின் நாயகி கிழித்தெறிந்துவிடக் கூடாது என்று நம் மனம் துடிக்கிறது. நாமாக இருந்தால் அதையே செய்வோம். உஞ்சவிருத்தி வாழ்க்கையையே தனக்கு விதிக்கப்பட்ட தர்மமாகக் கொண்ட வேதவித்தான கணவரின் நிழல் அல்லவா இத்தாய்? “நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ?” என்று அவள் கேட்கும் கேள்வி நெக்குருக வைக்கிறது. ஜெயகாந்தன் ஏன் இன்றும் சிறுகதைக் கோயிலின் மூலவராக இருக்கிறார் என்பது இக்கதையைப் படித்தால் தான் தெரிகிறது.

யந்திரம்

மானுட உணர்வுகளின் ஆதி ஆழத்தை அறிபவர் யாரும் இருக்க முடியாது. புனைவிலக்கியம் அந்த வெற்றிடத்தை நோக்கிய பாய்ச்சல். ஜெயகாந்தன் அவர்கள் கூறுவது போல சஹ்ருதயர்களால் மட்டுமே பிறரது உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியும். அதற்கு அவரே இச் சிறுக்கதையில் சொல்வது போல, கூடு விட்டு கூடு பாயும் திறன் வேண்டும். முத்தாயியின் கதை உங்களுக்குள்ளும் சிறு சலனத்தை ஏற்படுத்தினால், உங்களாலும் கூடு விட்டு கூடு பாய முடிகிறது என்று பொருள்.

யுக சந்தி

எரிந்து தகிக்கும் அவ்வெம்மையின் நடுவே சுகம் தரப் படர்ந்த அந்த நிழல் போலும், யந்திரங்களைத் தவிர எதையுமே நம்பாத இவ்விருபதாம் நூற்றாண்டில் - சென்ற நூற்றாண்டின் சின்னமாய்த் தன் சொந்தக் கால்களையே நம்பி நிற்கும்- காண்பதற்கரிதான அந்தக் கிழவியின் பிரசன்னம் போன்றும் மெல்லென வீசிய குளிர்காற்றில் வேப்பங் குழைகள் சிலிர்த்தன....

நடைபாதையில் ஞானோபதேசம்

எழுத்தாளர் என்ற சொல்லுக்கு ஏற்றம் தந்தவர் அமரர் ஜெயகாந்தன். தமிழ்ச் சிறுகதை உலகில் அவரது தாக்கம் மிகவும் பெரியது. ஆரம்பத்தில் இடதுசாரியாக இருந்த அவர் பின்னாளில் கனிந்த தேசியவாதியானார். ஆனால், பின்னாளில் தானே ஏற்றுக்கொண்ட விரதம் காரணமாக அவரது பிற்காலச் சிந்தனைகள் அதிக அளவில் எழுத்துவடிவம் பெறவில்லை. திரைத் துறையிலும் பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டவர்; அரசியல்வாதிகளுக்கு அஞ்சாமல் தனது மனசாட்சிப்படி பேசியவர்; எழுத்துகளால் கிடைத்த வருவாயைக் கொண்டே வாழ முடியும் என்று வாழ்ந்து காட்டியவர் ஜெயகாந்தன். ஞானபீடம் (2002), சாஹித்ய அகாதெமி (1972) விருதுகளைப் பெற்றவர்.அவரது சொந்த அனுபவம் இங்கு சிறுகதை வடிவில் பதிவாகிறது....