ஆன்மிகமும் தேசியமும்

இந்தியாவின் அடையாளம் ஆன்மிகமே என்பார் சுவாமி விவேகானந்தர். அவரது குருநாதர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரைப் பற்றி எழுதும் மகரிஷி அரவிந்தர், இந்திய ஆன்மிகத்தின் புதிய ஒளியாக ராமகிருஷ்ணரை வர்ணிக்கிறார். அவரது அற்புதமான கட்டுரை, இங்கே இனிய தமிழில்…

அரவிந்தரின் உத்தர்பாரா பேருரை

1908இல் அனுசீலன் சமிதியைச் சேர்ந்த குடிராம் போஸும், பிரஃபுல்ல சாகியும் ஆங்கிலேய அதிகாரி கிங்ஸ்ஃபோர்டைக் கொல்ல முயன்றனர். இந்த  வழக்கில் குடிராம் போஸ் கைதானார்; பிரஃபுல்ல சாஹி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இவ்வழக்கு ‘அலிப்பூர் சதி வழக்கு’ என்று பெயர் பெற்றது. இந்த வழக்கில் பிரதானக் குற்றவாளிகளாக அரவிந்தர், அவரது தம்பி உள்பட 38 பேர் கைது செய்யப்பட்டனர். எனினும், இவ்வழக்கில் பிற்பாடு அரவிந்தர் விடுதலையானார். பரீந்திர கோஷ் உள்பட பலர் பலவேறு சிறைத் தண்டனைகளைப் பெற்றனர்; குடிராம் போஸ் தூக்கு தண்டனை பெற்றார். இதுவே இந்தக் குற்ற வழக்கின் சாரம். இவ்வழக்கில் 1908 மே 2-இல் கைது செய்யப்பட்ட அரவிந்தர், 1908 மே 5 முதல் 1909 மே 6 வரை அலிப்பூர் சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கபட்டிருந்தார்; அங்கு பல சித்ரவதைகளை அனுபவித்தார். எனினும், இவ்வழக்கில் அரவிந்தர் மீதான குற்றச்சாட்டை அரசுத் தரப்பால் நிரூபிக்க இயலாததால் அவர் விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு 1909 மே 30இல் உத்தர்பாரா என்ற நகரில் தனது ஆதரவாளர்கள் கூட்டிய கூட்டம் ஒன்றில் அரவிந்தர் உரை நிகழ்த்தினார். அதுவே, புகழ்பெற்ற ‘உத்தர்பாரா பேருரை’ என்று அழைக்கப்படுகிறது. விடுதலை வீரரான அரவிந்தர் ஆன்மிகவாதியாக மலர்ந்ததன் பின்னணியை அவரே இந்த உரையில் மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமல்ல, ‘சநாதன தர்மமே தேசீயம்’ என்ற அறைகூவலையும் அரவிந்தர் இந்த உரையின் இறுதியில் தெரிவித்திருக்கிறார்.

அரவிந்தர் தனது மனைவிக்கு எழுதிய கடிதம்

1901 ஏப். 30-இல் அரவிந்த கோஷ்- மிருணாளினி போஸ் திருமணம் நடைபெற்றது. அரசு அதிகாரியும் செல்வந்தருமான பூபால் சந்திர போஸின் மூத்த மகள் மிருணாளினி. அப்போது அவருக்கு வயது 14 மட்டுமே; அரவிந்தரின் வயது 28. இவர்களது இல்லற வாழ்வு நீண்ட நாள் நிலைக்கவில்லை. சுதந்திர தாகம் கொண்ட அரவிந்தரால் மற்றையோர் போல வாழ முடியவில்லை. கல்வியாளரான தனது கணவர் அரசுக்கு எதிராகப் போராடுவதை அவரது மனைவியால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. புரட்சியாளர்களுடன் தொடர்பு கொண்டிருந்த அரவிந்தரால் மனைவிக்கு நேசத்தைக் காட்ட முடியவில்லை. இதனால் இருவரிடையே மனக்கசப்பு நேரிட்ட வேளையில், அரவிந்தர் தனது மனைவி மிருணாளினிக்கு 1905 ஆக. 30 இல் எழுதிய கடிதம் இது…