அதிகமான் நெடுமான் அஞ்சி-15

அதிகமானுடைய நாட்டில் யாருக்கும் எதனாலும் அச்சமே இல்லாமல் இருந்தது. காடுகளில் மாட்டு மந்தைகள் கன்றுகளோடு தங்கும் யாரும் அவற்றை அடித்துச் செல்லமாட்டார்கள். கவலையில்லாமல் அவை புல்லைத் தின்று இன்புறும். நெடு வழியிலே போகும் அயலூரார் எங்கே வேண்டுமானாலும் தங்கலாம். வழிப் பறிக்காரர்கள் வருவார்களோ என்று சிறிதும் அஞ்ச வேண்டுவதில்லை. நெற்களங்களில் நெல் குவியல் குவியலாகக் காவலே இல்லாமல் போட்டது போட்ட படியே கிடக்கும்; ஒரு துரும்புகூடக் களவு போகாது. மக்களுக்குப் பகைவரே யாரும் இல்லை. இப்படித் தன் நாட்டில் அமைதியும் நற்பண்பும் நிலவும் படி செங்கோலோச்சினான் அதிகமான். உலகமே அவனைப் புகழ்கிறது. வீரத்தில் குறைந்தவனா? அவன் வாள் தன் குறியிலே சிறிதும் தப்பாது. இத்தகைய குரிசில் இப்போது களத்தில் கிடக்கிறான். தாயைப் பிரிந்த குழந்தையைப்போலச் சுற்றத்தார் மூலைக்கு மூலை வருந்திப் புலம்ப, அவனைக் காணாமல் இனிப் பசி வந்து வருத்துமே என்று அஞ்சும் மக்கட் கூட்டம் புலம்பும். அப்படித் துன்புற்று வைகும் உலகம் இழந்ததைவிட, அறம் இல்லாத கூற்றுவனே, நீ இழந்தது தான் மிகப் பெரிது. விதைத்துப் பயிரிட்டு விளைவு செய்யும் வயலின் பெருமையை அறியாமல் வீழுங் குடியை உடைய உழவன் விதை நெல்லையே சமைத்து உண்டதுபோல நீ செய்து விட்டாயே! இந்த ஒருவனுடைய ஆருயிரை நீ உண்ணாமல் இருந்திருந்தாயானால் அவன் அமர் செய்யும் களத்தில் அவன் கொன்று குவிக்கும் பகைவர்களுடைய உயிரைப் பருகி நிறைவு பெற்றிருப்பாயே!' (கி.வா.ஜ.வின்/ அதிகமான் நெடுமான் அஞ்சி’ நூலின் நிறைவுப் பகுதி.

அதிகமான் நெடுமான் அஞ்சி-14

-கி.வா.ஜகந்நாதன் 14. போர் மூளுதல் தகடூர்க் கோட்டைக்குள்ளே இதுகாறும் இருந்த அமைதி இப்போது குலைந்தது. உண்மையான ஆபத்து இப்போதுதான் வந்து நிற்கிற தென்று அதிகமான் உணர்ந்தான். சுருங்கை வழியைப் பகைவர்கள் அடைத்தது தெரிந்து, அவர்களுக்கு அவ்வழி எப்படித் தெரிந்தது என்று ஆய்ந்தான். அதைப்பற்றி இப்போது ஆராய்ந்து பயன் இல்லையென்று விட்டுவிட்டான். இனிமேல் தான் மெய்யான போருக்கு ஆயத்தம் செய்ய வேண்டும். இனியும் கோட்டைக்குள் நெடுநாள் தங்க முடியாது. பட்டினி கிடந்து வாடிக் கதவைத் திறப்பதற்கு முன்னாலே, உடம்பில் … Continue reading அதிகமான் நெடுமான் அஞ்சி-14

அதிகமான் நெடுமான் அஞ்சி-13

காரியும் சேரனும் கூடிப் பேசினார்கள். அன்று இரவில் அந்தக் காட்டுக்குச் சென்று சுருங்கையின் வாசலைப் பார்த்தறிவது என்று திட்டமிட்டார்கள். சில வீரர்களை அழைத்துக்கொண்டு, காரியும் மன்னனும் புறப்பட்டார்கள். வஞ்சப்பெண்ணும் உடன் சென்றாள்...காட்டுக்குள் சென்று மறைந்து நின்றார்கள். நள்ளிரவில் சிலர் தீப்பந்தங்களுடனும் தலையில் மூட்டைகளுடனும் அங்கே வந்து கீழே இறங்குவதைக் கண்டார்கள். உடனே வீரர்கள் அவர்களைப் போய்ப் பற்றிக் கொண்டார்கள். அவர்களைச் சிறைப்படுத்தினார்கள். காவலர் சிலரை அங்கே நிறுத்திவிட்டுப் பாசறைக்கு வந்தார்கள். அதிகமானை வென்றுவிட்டது போன்ற மகிழ்ச்சிப் பெருக்கில் ஆழ்ந்தான் பெருஞ்சேரல் இரும்பொறை. அந்தப் பெண்ணுக்குச் சில பரிசிலை அளித்து அவளை வீட்டுக்குக் காவலுடன் அனுப்பினான். தான் அறிந்த இரகசியத்தை எப்படிப் பயன்படுத்துவது என்ற ஆராய்ச்சியில் அவன் இப்போது இறங்கினான்; காரியையும் உசாவினான்.... (கி.வா.ஜ.வின் ‘அதிகமான் நெடுமான் அஞ்சி’ நூலின் 13வது அத்தியாயம்)...

அதிகமான் நெடுமான் அஞ்சி-12

அந்தப் பெண்ணுக்கு அதிகமானிடத்திலும் அவனைச் சேர்ந்தோரிடத்திலும் கட்டுக்கடங்காத வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. பழிவாங்க வேண்டும் என்ற துடிப்பும் உண்டாயிற்று. யாரேனும் அதிகமானைப் புகழ்ந்தால் அவள் அங்கே நிற்பதில்லை. 'கற்பின் பெருமையை உணராத, பெண்மையின் உயர்வைக் காப்பாற்றாத, அரசன் அரசனா? அரக்கன் அல்லவா?' என்று எண்ணி எண்ணிப் பொருமினாள். பாவம்! யாருக்கும் நினைந்து தீங்கு புரியாத அதிகமான் ....அந்தப் பெண்ணளவில் பொல்லாதவன் ஆகி விட்டான். அதை ஊழ்வினைப் பயன் என்று சொல்வதையன்றி வேறு என்ன வென்பது? (கி.வா.ஜ.வின் ‘அதிகமான் நெடுமான் அஞ்சி’ நூலின் 12வது அத்தியாயம்)...

அதிகமான் நெடுமான் அஞ்சி-11

ஒளவையார் சிறிது பேசாமல் இருந்தார். உவமையை எதற்காகச் சொன்னார் என்று முன் இருந்தவர்கள் சிந்திக்கத் தொடங்கினார்கள். அப் புலமைப் பிராட்டியாரே உவமையை விளக்க முன்வந்தார்: "அந்தத் தீக் கடைகோல் வீட்டின் இறப்பிலே செருகி யிருக்கும்போது தன் ஆற்றல் தோன்றாமல் வெறும் கோலாக இப்பதுபோல, மிடுக்கு அற்றவனைப் போல் அமைந்திருக்கும் இயல்பும் நம் அரசனிடம் உண்டு. தான் தோன்றாமல் இருக்கவும் வல்லவன் அவன். செவ்வி நேர்ந்தபோது அந்தக் கடைகோலில் எரி முறுகி எழுந்து கொழுந்து விட்டுப் புறப்படுவது போல் அவன் புறப்படவும் வல்லவன். இன்ன காலத்தில் இது செய்ய வேண்டும் என்பதை உணர்ந்தவன் அவன். கிடக்கும்போது கிடந்து பாயும்போது நன்றாகப் பாயவல்ல பெரு வீரனை யல்லவா நாம் மன்னனாகப் பெற்றிருக்கிறோம்?" பேச்சை முடித்த மூதாட்டியார் பொருள் செறிந்த பாடல் ஒன்றைச் சொன்னார்.... (கி.வா.ஜ.வின் ‘அதிகமான் நெடுமான் அஞ்சி’ நூலின் 11வது அத்தியாயத்திலிருந்து)...

அதிகமான் நெடுமான் அஞ்சி-10

அதிகமான் தனக்கு அவசியமாக இருந்தால் வேண்டிய மன்னர்களைத் துணையாகக் கூட்டிக்கொள்ளலாம் என்று கருதினான். சோழ மன்னனுக்கும் பாண்டியனுக்கும் ஆள் அனுப்பினான். பெருஞ்சேரல் இரும்பொறை போருக்கு வரப் போகிறானென்றும், தான் கோட்டையிலிருந்தபடியே போர் செய்யப் போவதாகவும் தெரிவித்தான். ’கோட்டைக்குள் இருக்கும் வரைக்கும் எங்களுக்கு ஊறுபாடு யாதும் நேராது. ஒருகால் கோட்டைக்கு வெளியே வந்து போரிட வேண்டிய நிலை வந்தால் அப்போது உங்கள் உதவியை எதிர்பார்ப்பேன்' என்றும் எழுதியனுப்பினான். ஒளவையார் தூது சென்று நட்பு உண்டாக்கிய தொண்டைமானுக்கும் இப்படி ஓர் ஓலை போக்கினான். அவர்களிடமிருந்து இசைவான விடையே வந்தது. பாண்டிய சோழ மன்னர்களுக்குச் சேரனிடம் நட்பு இல்லை. ஆதலின் இந்தப் போர் பெரிதானால் தாமும் சேர்ந்து இரும்பொறையை வீழ்த்த வேண்டுமென்று அவர்கள் விரும்பினார்கள்.... (கி.வா.ஜ.வின் ‘அதிகமான் நெடுமான் அஞ்சி’ நூலின் 10வது பகுதி)...

அதிகமான் நெடுமான் அஞ்சி-9

தனக்காக ஓரியைக் கொன்றதுதான் காரியின் இன்றை நிலைக்குக் காரணம் என்பதைப் பெருஞ் சேரலிரும்பொறை உணர வேண்டுமென்றே இப்படிப் பேசினான் மலையமான். அவ்வரசன் அதை நன்கு உணர்ந்தான். "எனக்குக் கொல்லிக் கூற்றத்தை ஓரியினிடமிருந்து கைப்பற்றித் தந்த வீரத்தை நான் மறப்பவன் அல்லன். எப்பாடு பட்டாவது உம்முடைய கோவலூரை அதிகமானிடமிருந்து உம்முடைய ஆட்சிக்கு வரச்செய்து பழையபடி உம்மை மலாட்டின் தலைவனாக ஆக்குவேன். நான் சேரர் குலத்தில் தோன்றியது உண்மையாயின் இந்தச் சொல்லை நிறைவேற்றுவேன்" என்று வீறுடன் வஞ்சினம் கூறினான் சேரன்.... (கி.வா.ஜ.வின் ‘அதிகமான் நெடுமான் அஞ்சி’ நூலின் 9வது அத்தியாயம்)....

அதிகமான் நெடுமான் அஞ்சி-8

முடியுடை மன்னர்கள் தம் படைக்கு வலிமை போதாதென்று கருதினால் துணையாக வரவேண்டுமென்று காரியை அழைப்பார்கள். காரியின் துணை யிருந்தால் வெற்றி தமக்கே கிடைக்குமென்று நினைப்பார்கள். அத்தகையவனுடைய வீரத்தையும் படை வலிமையையும் எப்படி அளந்து சொல்ல முடியும்? அந்தப் பெரு வீரனை ஊரை விட்டு ஓடச் செய்தான் அதிகமான் என்ற செய்தியை முடி மன்னர்கள் கேட்டார்கள். சோழன் அதிகமானைப் பாராட்டி மகிழ்ந்தான். பாண்டியன் தன் நண்பன் இத்துணை வலிமையுடையவனாக இருக்கிறானே என்று எண்ணிப் பெருமிதம் கொண்டான். பெருஞ்சேரல் இரும்பொறையோ ஒன்றும் தோன்றாமல் மயங்கினான்; வருந்தினான். வீரருலகம் அதிகமானைக் கொண்டாடிப் போற்றியது. புலவர்கள் அவன் வெற்றியைப் பாடினார்கள்.... (கி.வா.ஜ.வின் ‘அதிகமான் நெடுமான் அஞ்சி’ நூலின் 8வது பகுதி)....

அதிகமான் நெடுமான் அஞ்சி- 7

அதிகனின் கையில் வேல்; காலில் கழல்; உடம்பிலே வேர்வை; அவன் கழுத்திலே பச்சைப்புண். அவன் தலையிலே பனைமாலை;  போர் செய்ய அணிந்த வெட்சி மாலை, வேங்கைக் கண்ணி இவற்றை அவன் முடியிலே சூடியிருந்தான். புலியோடு பொருத ஆண் யானையைப்போல இன்னும் அவனுக்குப் பகைவர்பால் உண்டான சினம் அடங்க வில்லை. அவனோடு பொருதவர்களில் யார் உய்ந்தார்கள்? பகைவர்களைக் கண்டு சினத்தாற் சிவந்தகண் இன்னும் சிவப்புத் தீரவில்லை; ஆம், தன் தவக்கொழுந்தாகிய மகனைப் பார்த்தும் கண் சிவப்பு வாங்கவில்லை. வீரமே இப்படி உருவெடுத்து வந்ததோ என்று வியந்தார் ஒளவையார். அவருடைய வியப்புணர்ச்சி உடனே பாடல் வடிவத்தை எடுத்தது.... கி.வா.ஜ.வின் ‘அதிகமான் நெடுமான் அஞ்சி’ நூலின் 7வது அத்தியாயம்)...

அதிகமான் நெடுமான் அஞ்சி-6

“இங்கே உள்ள கருவிகள் செல்வப் பிள்ளைகளைப் போலப் பளபளவென்று விளங்குகின்றன; பீலியை அணிந்தும் மாலையைச் சூட்டிக் கொண்டும் அழகாகக் கிடக்கின்றன. பிடிகளை நன்றாகச் செப்பஞ் செய்து திருத்தமாக வைத்திருக்கிறீர்கள். துருவேறாமல் அடிக்கடி நெய் பூசி வருகிறீர்கள். இந்தக் கொட்டிலில் இவை. பாதுகாப்பாக உள்ளன. ஆனால் அதிகமானுடைய படைக்கலங்களோ முனை முறிந்து போயிருக்கும். பலவற்றிற்குக் கங்குகள் ஒடிசலாக இருக்கும்.கைவர்களைக் குத்தி அப்படி ஆயின. ஒரு கருவியாவது முழு உருவோடு இராது. எல்லாம் சிதைந்து உருக்குலைந்திருக்கும்...” (கி.வா.ஜ.வின் ‘அதிகமான் நெடுமான் அஞ்சி’ நூலின் 6ஆம் அத்தியாயம்)....

அதிகமான் நெடுமான் அஞ்சி-5

ஒரு கொடையாளியிடம் பரிசில் பெற்ற பாணன் வேறு ஒரு பாணனைச் சந்தித்தால், தான் பெற்ற இன்பத்தை அவனும் பெறட்டும் என்று எண்ணி, அந்தக் கொடையாளியின் சிறப்டை அவனுக்கு எடுத்துரைப்பான்; அவன் இருக்கும் இடத்துக்குப் போக வழி இன்னது என்று கூறுவான். இப்படி வழிகாட்டுவதாகப் புலவர்கள் பாடல்கள் பாடி வள்ளல்களை வாழ்த்துவார்கள். அந்த வகையில் அமைந்த பாடலை  ‘ஆற்றுப்படை’ என்று சொல்வர். ஒரு புலவன் வேறொரு புலவனிடம் தனக்குப் பரிசில் வழங்கிய வள்ளலிடம் செல்ல வழிகாட்டுவதானால் அதற்குப்  ‘புலவராற்றுப்படை’ என்று பெயர் அமையும். கூத்துக்கலையில் வல்லவனுக்கு மற்றொரு கூத்தன் சொன்னால் அது  ‘கூத்தராற்றுப்படை’ என்ற பெயர் பெறும். அப்படியே பாணனைப் பார்த்துச் சொல்வதை ‘பாணாற்றுப்படை’யென்றும், விறலிக்கு வழி காட்டுவதை  ‘விறலியாற்றுப்படை’யென்றும் பெயரிட்டு வழங்குவர். நேரே ஒருவனுடைய புகழைச் சொல்வதைவிட இப்படி ஆற்றுப்படை உருவத்தில் பாடுவது சுவையாக இருக்கும். (கி.வா.ஜ.வின் அதிகமான் நெடுமான் அஞ்சி’ நூலின் 5ஆம் அத்தியாயம்)...

அதிகமான் நெடுமான் அஞ்சி-4

அதுமுதல் ஒளவையாருக்கு அதிகமானிடத்தில் அளவிறந்த மதிப்பும் அன்பும் பெருகின. நரை திரை மூப்பைப் போக்கும் கனியைத் தனக்கென்று வைத்துக் கொள்ளாமல் ஒளவையாருக்கு ஈந்த இந்த நிகழ்ச்சியைப் புலவர்கள் அறிந்து பாராட்டினார்கள். மன்னர்கள் அறிந்து மனம் நெகிழ்ந்தார்கள். தமிழுலகமே அறிந்து வியந்தது. அதிகமானை, ”அமுதம் போன்ற கனியை ஔவைக்கு ஈந்தவன்" என்று குறித்து மக்கள் புகழ்ந்தார்கள். நெல்லியைப் பற்றிய பேச்சு வரும் இடங்களிலெல்லாம் அதிகமானுடைய பேச்சும் தொடர்ந்து வந்தது. பிற்காலத்திலும் அதிகமானை உலகம் நினைவுகூர்ந்து வருகிறதற்குக் காரணம் அவனுடைய வீரம் அன்று; அவனுடைய ஆட்சித் திறமையன்று; பிற வகையான கொடைகளும் அன்று; அமிழ்து விளை தீங்கனியை ஔவையாருக்கு ஈந்த மாபெருஞ் செயலே. (கி.வா.ஜ. எழுதிய அதிகமான் நெடுமான் அஞ்சி’ நூலின் 4வது அத்தியாயம்)...

அதிகமான் நெடுமான் அஞ்சி-3

"உம்முடைய மன்னன் இதைக் கொடுத்து அனுப்பும்படி சொன்னானா? அவனுடைய புகழைக் கேட்டு அவனைக் கண்டு இன்புற வேண்டுமென்று நெடுந் தூரத்திலிருந்து நான் வருகிறேன். சிறிய குன்றுகளையும் பெரிய மலைகளையும் கடந்து வந்திருக்கிறேன். நான் பரிசிலைப் பெற்றுக்கொண்டு செல்வதற்காகவே வந்திருக்கிறேன் என்று என்பால் அன்பு வைத்தருளி, இதைப் பெற்றுக் கொண்டு இப்படியே போகட்டும் என்று சொல்லி அனுப்பினானே; அவன் என்னை எப்படி அறிந்திருக்கிறானோ, அறியேன். என்னைக் காணாமல் வழங்கிய இந்தப் பொருளைக் கொண்டு செல்ல நான் வாணிக நோக்கமுடைய பரிசிலன் அல்லேன். பணம் ஒன்றே குறியாக நினைத்து நான் இங்கே வரவில்லை. மனம் மகிழ்ந்து முகம் மலர்ந்து கண்டு அளவளாவி, தரம் அறிந்து கொடுத்தனுப்புவதாக இருந்தால், அவர்கள் கொடுப்பது தினையளவாக இருந்தாலும் எனக்கு இனியது" என்று பாட்டினாற் சொல்லிப் புலவர் புறப்பட்டுச் செல்வதற்காக எழுந்துவிட்டார். (கி.வா.ஜ.வின் ’அதிகமான் நெடுமான் அஞ்சி’ நூலின் 3வது பகுதி)...

அதிகமான் நெடுமான் அஞ்சி-2

அதிகமான் இளம் பருவத்திலேயே அரசாட்சியை மேற்கொண்டான். துடிதுடிப்புள்ள இளமையும் உடல் வன்மையும் உள்ளத்துறுதியும் உடையவனாக அவன் விளங்கினான். தகடூர்க் கோட்டையை விரிவுபடுத்தி மிக்க வலிமையை உடையதாக்கினான், புதிய புதிய ஊர்களைத் தன் செங்கோலாட்சிக்குள் கொண்டு வந்தான். சிறிய சிறிய நாடுகளை வைத்துக்கொண்டு வாழ்ந்திருந்த குறுநில மன்னர்கள் கொங்கு நாட்டிலும் அதற்கு அருகிலும் இருந்தார்கள். அவர்களிற் பலர் கொடுங்கோலர்களாக இருந்தார்கள். அவர்களால் மக்களுக்கு விளைந்த தீங்கை உணர்ந்த அதிகமான் அத்தகையவர்களைப் போர்செய்து அடக்கினான். இப்படி அவன் தன்னுடைய இளமைப் பருவத்தில் ஏழு பேர்களை அடக்கி, அவர் ஆண்ட இடங்களைத் தன் ஆட்சிக்கீழ்க் கொண்டுவந்தான். அவனுக்கு முன்பும் அவன் முன்னோர்கள் ஏழு பேர்களை வென்றதுண்டு. அவர்கள் ஏந்தியிருந்த ஏழு கொடிகளையும் தம் கொடிகளாகப் பிடித்துத் தாம் பெற்ற வெற்றியைக் கொண்டாடினார்கள். அதிகமான் இப்போது தன் வலிமையினால் வேறு ஏழு பேர்களை வென்றான். (அதிகமான் நெடுமான் அஞ்சி- அத்தியாயம் 2இல்)...

அதிகமான் நெடுமான் அஞ்சி-1

அமரர் திரு. கி.வா.ஜகந்நாதன் என்ற கிருஷ்ணராயபுரம் வாசுதேவ ஜகந்நாதன், சென்ற நூற்றாண்டின் மூத்த தமிழறிஞர்களுள் ஒருவர்; தமிழ் அறிஞர், எழுத்தாளர், மேடைச் சொற்பொழிவாளர், கவிஞர், நாட்டுப்புறவியலாளர், பத்திரிகையாளர் எனப் பன்முகங்களை உடையவர். இவரது ‘அதிகமான் நெடுமான் அஞ்சி’ என்னும் நூல் இங்கு கருவூலம் பகுதியில் பதிவாகிறது. கடையேழு வள்ளல்களுள் ஒருவனான அதியமான் குறித்த நூல் இது....