உலகெலாம் பதிப்பகம்

அனைவருக்கும் வணக்கம்.

நல்ல நூல்கள் சமுதாயத்தின் திசைகாட்டிகள் என்று சொல்லப்படுவதுண்டு. பஞ்சிலிருந்து நூல் நூற்று அதனைக் கொண்டு தனது இடையறா உழைப்பால் துணியை நெசவு செய்யும் தொழிலாளி போல, தமது  எண்ணங்களை எழுத்தாக்கி சமுதாயத்துக்கான அணியாக, நூலாக நெசவு செய்பவர்கள் எழுத்தாளர்கள்.  

எழுத்தாளர்களின் படைப்புகள் அச்சு வாகனம் ஏறும்போதுதான் அவை தேவையானோருக்குப் பயன்படும் சாதனமாக அமைய முடியும்.அப்போதுதான் அவை காலம் கடந்த ஆவணமாகும். அதற்கான வாய்ப்புகள் அனைவருக்கும் அமைவதில்லை. இந்நிலையை மாற்ற வேண்டும் என்பதற்கானது எமது பதிப்பக முயற்சி.

இன்று மகாகவி பாரதி உலக அளவில் தமிழ் மொழியின் அடையாளமாகவே மாறி இருக்கிறார். ஆனால், அவர் வாழ்ந்த காலத்தில் அவரது எழுத்துகள் அதற்குரிய முழுமையான மதிப்பைப் பெற்றதில்லை. இன்றும்கூட அவரது எழுத்துத் திறனின் பூரணத்தை தமிழகம் உணர்ந்துள்ளதா என்பது சந்தேகமே. அதுபோலவே, தகுதியற்ற பலர் வேறு காரணிகளால் எழுத்தாளராகப் பிராபல்யம் அடைவதும், திறமையுள்ள நூல் வல்லவர்கள் மறைந்து கிடப்பதும் இம்மண்ணில் தொடர்ந்து நிகழ்கிறது.

இதன் காரணமாக, நமது நூலக அடுக்குகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளிடையே நல்ல நூல்களை அணுகுவதே சவாலான செயலாக மாறிவிட்ட அவலச் சூழலில் நாம் வாழ்கிறோம். வாசிப்பவர்கள் அருகிவரும் காலத்தில், தமக்குத் தாமே மேடை அமைத்து மெச்சிக் கொள்வோர் பெருகிவரும் வறட்டுச் சூழலில், நமது மொழிக்கு நலம் விளைக்கும் அருஞ்செயலை நிகழ்த்த வேண்டும் என்ற விருப்பமே ‘உலகெலாம்’  பதிப்பகமாக உதயமாகி இருக்கிறது.

எங்கள் குல முதல்வர் சேக்கிழார் பெருமான் திருத்தொண்டர் சரிதத்தை பெரிய புராணமாக ஆக்கிட விரும்பி சிதம்பரம் கோயிலுறை ஈசனிடம் இறைவாக்குக் கேட்டபோது “உலகெலாம்” என்று இறைவனே முதலடியை எடுத்துக் கொடுத்தார். அந்த முதலடியையே எமது பதிப்பகத்தின் பெயராகக் கொள்கிறோம். 

எமது உலகெலாம் பதிப்பகத்துக்கு ஓர் இணைய முகவரியாக இந்த ‘பொருள் புதிது’ இணையதளம் செயல்படும். இதில் நாம் படிக்க வேண்டிய நூல்கள் கருவூலமாக சேமிக்கப்படும். தவிர பாரதி இலக்கியத்தை முழுமையாகத் தொகுக்கும் பணியும் இங்கு நிகழும். இத்தளத்தில் வெளியாகும் தொடர்கள் பிற்பாடு நூல் வடிவம் பெறும்.

உங்கள் மதிப்பு மிகுந்த ஆலோசனைகளும் நல்லாதரவும் எமது பதிப்பகத்தையும் இணையதளத்தையும் செம்மைப்படுத்தும். தமிழுக்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் பல நூல்களை வெளியிட, அன்பர்களின் ஆதரவும் இறையருளும் துணை புரியட்டும்.

-அ.ராதிகா

(பதிப்பாளர்)