-திருநின்றவூர் ரவிகுமார்

திருமலை திருப்பதியில் நின்று அருள்பாலிக்கும் ஸ்ரீனிவாசப் பெருமாளை நினைக்கும்போது உடனடியாக மனதில் தோன்றுவது நெற்றியை நிறைக்கும் திருமண்ணும், அவரது வைரக் கிரீடமும், குண்டலமும், சங்கு சக்கரமும், வரதஹஸ்தமும் தான். சட்டென்று பெரியவர்கள் சொன்னது ஞாபகம் வர பார்வை பாதத்தைத் தேட அதுவும் ஜொலிக்கும். கூப்பிய கரங்களை சிரம் மேல் உயர்த்தி ‘‘கோவிந்தா’ என்று சரணாகதி செய்ய, ஜருகண்டி என்று இழுத்துத் தள்ளப்படுவோம். வைகுண்ட வாசலில் தேவர்கள் மட்டுமல்ல, கிங்கரர்களும் நிற்பார்கள் போலிருக்கிறது. அதனால் தான் குலசேகர ஆழ்வார் படியாய் கிடந்து உன் பவள வாயைக் காண்பேனோ என்று (குறுக்கு வழியை) வரமா கேட்டார் போலும்.
திருமலை திருப்பதி கோயில்களை நிர்வாகிக்க 1932-இல் தேவஸ்தான போர்டு ஏற்படுத்தப்பட்டது. தமிழகத்தின் (மெட்ராஸ் ராஜதானி) ஒரு பகுதியாக திருப்பதி அப்பொழுது இருந்தது. ஆறு பேர் கொண்ட குழு, நடைமுறை நிர்வாகத்தைப் பார்த்துக் கொள்ள ஒரு கமிஷனர் என்று ஆரம்பமானது. பின்னாளில்,1969- இல், அதை ஆந்திரா அரசின் அறநிலையத் துறை எடுத்துக் கொண்டது. ஆரம்பத்தில் கோயிலின் நிதி நிலை இப்பொழுது உள்ளது போல் இல்லை. கோவில் நிர்வாகமும் சரியில்லை என்ற நிலை. அந்த நிலையில் முதல் கமிஷனராக பொறுப்பேற்றுக் கொண்டார் ரங்கநாத முதலியார்.
நான்கு ஆண்டுகள் அவர் கமிஷனராக இருந்தார். உண்டியலில் சேரும் பணத்தை அந்தந்த நாளிலேயே எண்ணவும், அதை சீனிவாசப் பெருமாள் முன் சமர்ப்பித்து அதன் பிறகு கருவூலத்தில் சேர்க்கவும் ஒரு முறையை ஏற்படுத்தினார். பின்னாளில் நிதிவரத்து அதிகரித்ததால் வரவு – செலவு கணக்கு சமர்ப்பிப்பதாக அது மாறியது. ரங்கநாத முதலியார் பதவி ஏற்கும் போது காலியாக இருந்த கருவூலம் பிறகு நிரம்பத் தொடங்கியது. அவரது பதவிக் காலத்தின் இறுதியில் பிரபல நகை வியாபாரிகளான சூரஜ்மல் நிறுவனத்திற்கு சீனிவாசப் பெருமாளுக்கு வைர கிரீடம் செய்ய பணம் கொடுத்தார். அந்த அளவுக்கு கஜானா நிரம்பத் தொடங்கியது. இதற்குக் காரணம் அவர் ஏற்படுத்திய நிதி சீர்திருத்தங்கள், நிர்வாக சீர்திருத்தங்கள் என்றால் மிகை ஆகாது.
திருப்பதிக்குச் செல்ல அந்தக் காலத்தில் சிரமங்கள் அதிகமாக இருந்தன. வாகனத்தில் செல்லும்படியாக நல்ல சாலை வசதிகள் இல்லை. ரங்கநாத முதலியார் அதற்கான முயற்சியில் இறங்கினார். கானன் டங்கர்லி போன்ற பிரபல கட்டுமானத் துறை நிறுவனங்களைக் கொண்டு சாலை வசதிகளை ஏற்படுத்தினார். அவரது தொடர் முயற்சியாலும் நேரடிக் கண்காணிப்பினாலும் நல்ல சாலைகள் அமைக்கப்பட்டன. இவரை நினைவுகூரும் விதமாக திருப்பதி சாலை முகப்பில் ரங்கநாத முதலியார் வளைவு அமைக்கப்பட்டது. பிற்காலத்தில் அது அகற்றப்பட்டது என்பது வேறு விஷயம்.
பிறப்பும் படிப்பும்
ரங்கநாத முதலியார் 1879- ஆம் ஆண்டு ஜூன் 29-ஆம் தேதி பிறந்தார். அப்போதைய மெட்ராஸ் பிரசிடென்சியின் ஒரு பகுதியாக இருந்த பெல்லாரியில் (இன்று கர்நாடக மாநிலத்தில் உள்ளது) பிறந்தார். ஆற்காடு முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர். சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் பட்டப் படிப்பும் பிறகு சென்னை சட்டக் கல்லூரியில் சட்டமும் பயின்றார். வழக்கறிஞராக பதிவு செய்த பிறகு நீதிமன்றத்துக்குச் சென்ற ஆரம்ப நாட்களிலேயே, அங்கு வழக்கில் வெற்றி பெற பொய்கள் பேச வேண்டிய கட்டாயம் இருப்பதை பார்த்து மனம் நொந்து, வக்கீல் தொழிலையே விட்டுவிட்டார். உறுதியான நேர்மையாளர். திறந்த மனம் கொண்டவர். ஏற்ற பணியை திறம்பட நிறைவேற்றுபவர் ரங்கநாத முதலியார்.
குடும்பம்
1901- இல் அரசுப் பணியில் சேர்ந்தார். பிறகு படிப்படியாக முன்னேறி பெல்லாரியின் துணை ஆட்சியராக விளங்கினார். தனது 23 வயதிலேயே மனைவியை இழந்தார். மனைவியின் பெயர் கங்கா. அதன்பிறகு அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவருக்கு யதிராஜன் என்ற மகனும் ஜெயா என்ற மகளும் இருந்தனர். அவர்களை தனது தங்கை ஆண்டாளின் பராமரிப்பில் வளர்த்தார். அவர் வாழ்வில் நடந்த இரு சம்பவங்கள் அவரது நேர்மையையும் பரந்த மனத்தையும் காட்டுவதாக உள்ளன.
ரங்கநாத முதலியார் பனகல் ராஜாவின் அமைச்சரவையில் கல்வித் துறை அமைச்சராக இருந்தார். பொதுவாக பணக் கையாடலை ‘ஊழல்’ என்பார்கள். ரங்கநாத முதலியார் ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கவில்லை. அரசுப் பணத்தை தவறாகக் கையாடவில்லை. அரசு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதும் ஊழல் தான். அவர் அரசு அதிகாரத்தை தன் குடும்பத்தினருக்காகவோ உறவினருக்காகவோ பயன்படுத்தவில்லை. அவரது மகன் யதிராஜன் மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லவும் உதவித்தொகை பெறவும் தகுதி பெற்றார். அப்போதைய பிரிட்டிஷ் அரசு அவரைத் தேர்வு செய்திருந்தது. ஆனால் ரங்கநாத முதலியார் தலைமைச் செயலாளரிடம் கூறி அதை நிறுத்தி விட்டார். மகனுக்கு உரிய சான்றாவணங்களையும் கொடுக்க மறுத்தார். தான் அமைச்சராக இருக்கும்போது மகன் வெளிநாட்டுக்கு மேற்படிப்புக்குச் செல்வது முறையான செயலாகாது என்று அவர் கருதினார். தனது நேர்மையை, தூய்மையை செயலில் காட்டினார்.
டாக்டர் அன்னிபெசன்ட்டுக்கு அணுக்கமான தொண்டராக அவர் இருந்தார். பிரம்ம ஞான சபையில் (Theosophical Society) தீவிரமாக ஈடுபட்டார். சைவ (மரக்கறி) உணவையே இறுதிவரை சாப்பிட்டார். பரந்த மனப்பான்மை கொண்டவராக இருந்தார். அதனால் குமார் என்ற பஞ்சாபி இளைஞனுக்கு தன் மகள் ஜெயாவை திருமணம் செய்து வைத்தார். அந்தக் காலத்தில் இது மிக அரிதான செயல். தான் ஏற்றுக்கொண்ட (பிரம்ம ஞான) கொள்கையில் உறுதி மட்டுமல்ல, அதை செயலிலும் காட்டும் துணிவு அவருக்கு இருந்தது.
தொழில்துறையில்…
ரங்கநாத முதலியார் ஹோஸ்பேட் / பெல்லாரி பகுதியில் சர்க்கரை ஆலையை ஆரம்பித்தார். அவரது சம்பந்தியான வி.ஆர்.ராமலிங்க முதலியாரை கூட்டாளியாகச் சேர்த்துக் கொண்டார். வி.எஸ்.திருவேங்கடசாமி முதலியார் (சென்னை, அண்ணா சாலையில் உள்ள விஎஸ்டி மோட்டார்ஸ்) அதில் முதலீடு செய்துள்ளார். ரங்கநாத முதலியார் சர்க்கரை ஆலைத் துறையில் முன்னோடியாக்க் கருதப்படுகிறார்.

சமூக சேவை
பிரம்ம ஞான சபையில் தீவிரமாகச் செயல்பட்ட போது டாக்டர் அன்னிபெசன்ட்டுக்கு அணுக்கமானவராக ரங்கநாத முதலியார் இருந்தார் என்பதைப் பார்த்தோம். அந்த அம்மையார் நாடாளுமன்ற ஜனநாயக முறைக்கு பயிற்சி அளிப்பதற்காக இந்திய இளைஞர்கள் அமைப்பை (Young Men Indian Association – YMIA) ஏற்படுத்தினார். அதில் இளைஞர்களைச் சேர்த்து இந்திய த் தெரிந்து கொள்ள, பேச, விவாதிக்க, பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த அமைப்பின் தலைவராக முதலியார் நியமிக்கப்பட்டார். மூன்று ஆண்டுகள் அவர் அந்த பொறுப்பில் திறம்பட சேவை செய்தார்.
இளைஞர்கள் கூடி விவாதிக்க அரங்கு தேவைப்பட்டது. அமைப்பிற்கும் அலுவலகம் தேவைப்பட்டது. அந்த அமைப்பின் தென்னிந்திய தலைமையகத்தை ரங்கநாத முதலியார் கட்டினார். அதுவே சென்னை, பாரிமுனைக்கு அருகில் உள்ள கோகலே ஹால். அங்கு உத்வேகம் உள்ள இளைஞர்கள் கூடி நாட்டு நடப்பைத் தெரிந்து கொள்ளவும் விவாதிக்கவும் வழி ஏற்பட்டது. முதலியார் ஆங்கிலத்தில் சிறப்பாக உரையாற்ற வல்லவர். அது மட்டுமின்றி தெலுங்கிலும் நன்றாக மேடைப்பேச்சு நிகழ்த்துவார். அந்தக் காலத்தில் தெலுங்கில் பிரபலப் பேச்சாளராக இருந்த டாக்டர் ராமலிங்க ரெட்டிக்கு அடுத்தபடியாக தெலுங்கில் சிறப்பாக பேசக்கூடியவர் இவர்தான் என்று புகழப்பட்டார்.
ரங்கநாத முதலியார் பிரம்ம ஞான சபையின் ஆவணக் காப்பக செயலாளராக இருந்தார். தலைவர்களின் ஞான உரைகளைப் பதிவு செய்வதும், அதை அச்சிட்டு ஆவணமாக்குவதும், ஆவணங்களைப் பாதுகாப்பதும் என, பிரம்ம ஞான சபையின் ஞானக்கருவூலத்தை உருவாக்கியவர் அவர். அந்த சபையில் சேர்ந்து பயிற்சி பெற்றவர்களுக்கு உரிய காலத்தில் ரகசிய தீட்சை வழங்குவார்கள். அது போல் தீட்சை பெற்றவர்களின் சபைக்கு செயலாளராக தனது இறுதிக் காலம் வரை இருந்தார்.
அடையாறில் உள்ள பிரம்ம ஞான சபை வளாகத்தில் ‘ரங்க விலாஸ்’ என்ற பெயரில் மாளிகை கட்டி அதில் அவர் வாழ்ந்தார். அங்குதான் அவரது பேரக் குழந்தைகளுடன் கடைசிக் காலம் வரை இருந்தார். தனது மகன் மூலம் நான்கு, மகள் மூலம் நான்கு என எட்டு பேரக் குழந்தைகளுடன் அவர் அங்கு வாழ்ந்தார்.
அவர் சிறந்த கதைசொல்லி. அவர் வீட்டில் இருக்கும்போது பேரக் குழந்தைகள் எப்போதும் அவரை சூழ்ந்துகொண்டு கதை க் கேட்பார்கள். அவரும் சளைக்காமல் புராண, இதிகாசங்களை சின்ன சின்னக் கதைகளாகச் சொல்லுவார். அவரது தனது மனைவியின் பெயரான ‘கங்கா’ என்பதை தனது பேத்தி ஒருத்திக்கு இட்டு மகிழ்ந்தார். பிரிட்டிஷ் அரசை நிர்பந்தித்து டாக்டர் அன்னிபெசண்டிற்கு சிலை வைத்தார். அவரது முயற்சியால் தான் 1945-இல் மெரினா கடற்கரையில் அரசால் டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையாருக்கு சிலை நிறுவப்பட்டது.
அரசியல், ஆட்சியில்…
நேர்மையும் சமூக சேவையும் பொதுவாழ்வில் தூய்மையும் கொண்டிருந்த ரங்கநாத முதலியார் தனது காலத்தில் ஏற்பட்ட தேச விடுதலைப் போராட்டத்தின்பால் ஈர்க்கப்பட்டது இயல்பானதே. காந்தியின் குருவான கோபாலகிருஷ்ண கோகலே ஆரம்பித்த ‘சர்வென்ட் ஆஃப் இந்தியா சொசைட்டி’யில் முதலியார் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகியாகச் செயல்பட்டார். அது அவரை அரசியலுக்குக் கொண்டு சென்றது.
பொது வாழ்வில் ஈடுபட்ட அவர் பலமுறை பெல்லாரி தொகுதியில் இருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பனகல் அரசரின் தலைமையிலான அமைச்சரவையில் (நீதிக்கட்சி அரசு) அவர் கல்வித்துறை அமைச்சராக இருந்தார். அவருடன் (இப்போது ஆந்திராவில் உள்ள) பெப்பிலி அரசரும், மதுரை பி.டி.ராஜனும் (இன்றைய தமிழ்நாடு நிதியமைச்சரான தியாகராஜனின் தாத்தா), கோவையைச் சேர்ந்த சி.எஸ்.ரத்தினசபாபதி முதலியாரும் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தனர்.
இந்தியர்களுக்கு சிறிய அளவில் சுதந்திரம் அளிப்பதைப் பேசி முடிவெடுக்க (பேசி ஏமாற்ற) சைமன் தலைமையிலான கமிஷனை நியமித்தது பிரிட்டிஷ் அரசு. அதற்காக லண்டன் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி குழுவில் ரங்கநாத முதலியார் இடம் பெற்றிருந்தார். ஆனால், அது நிறைவேறாமல் போகவே சைமன் கமிஷன் இந்தியாவுக்கு வந்து தலைவர்களைச் சந்தித்துப் பேசுவதாக முடிவானது. சைமன் கமிஷன் இந்தியா வந்தது. ஆனால், முழுமையான சுதந்திரமே வேண்டும் என்றும், ‘சைமன் திரும்பிப் போ’ என்றும், சைமன் கமிஷனைப் புறக்கணிப்பதாகவும் அரசியல் சூழல் மாறிப்போனது. அதேவேளையில் சைமன் கமிஷனை தமிழகத் தலைவர்கள் ரகசியமாக சந்திப்பதாகவும் ஏற்பாடானது. நீதிக்கட்சி அரசின் இந்த இரட்டை நிலைப்பாட்டை ஏற்க முடியாத முதலியார் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
அமைச்சரவையில் இருந்து விலகிய பிறகு அவர் காங்கிரஸ் உடன் இணைந்து செயல்படத் தொடங்கினார். பிரம்ம ஞான சபையின் தேசிய மாநாடு காசியில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ரங்கநாத முதலியார் அங்கே நோயுற்றார். அதிலிருந்து அவர் மீளாமல் 1950 –ஆம் ஆண்டு ஜூலை 8-ஆம் தேதி காலமானார்.
அவரது விருப்பப்படியே அவரது மறைவுக்குப் பிறகு அவர் வாழ்ந்த ரங்க விலாஸ் மாளிகை பிரம்ம ஞான சபைக்கு தானமாகக் கொடுக்கப்பட்டது. அரசியலில் தூய்மை, பொதுவாழ்வில் நேர்மை என்பது காண அரிதான தமிழகச் சூழ்நிலையில், ரங்கநாத முதலியாரின் நினைவு போற்றத்தக்கதாக இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
- நன்றி: விக்கிப்பீடியா + மெட்ராஸ் மியூசிங் இதழ்.
$$$