ஞானகங்கை

-குருஜி கோல்வல்கர்

ஸ்ரீ குருஜி கோல்வல்கர் என்று அழைக்கப்படும் பரமபூஜனீய குருஜி மாதவ சதாசிவ கோல்வல்கர், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) இரண்டாவது தலைவராக இருந்தவர்; பெரும் தபஸ்வி; சிந்தனையாளர்; சுவாமி விவேகானந்தர் கனவு கண்ட இயக்கச் செயல்வீரர்; தேசிய மறுமலர்ச்சிப் பணியில் தனது வாழ்வையே அர்ப்பணமாக்கியவர். ‘ஞானகங்கை’ என்ற நூல் தொகுப்பு குருஜியின் சிந்தனைக் களஞ்சியமாகும். இக்கட்டுரை ‘தியாகபூமி’ வார இதழில் வெளியானதாகும்.

பல நூற்றாண்டுகளாக நமது சமுதாயமானது மகாத்மாக்களைப் பெற்றெடுத்திருக்கிறது. உலக சிந்தனையாளர்களின் வான அரங்கத்திலே அவர்கள் ஒவ்வொருவரும் ஒளி மின்னும் நட்சத்திரங்களாவர். இன்றளவும் நம்நாடு ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரைப் போன்ற மகான்களை வாரி வழங்கிக் கொண்டே இருக்கிறது.

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், மனிதர்களின் சுகதுக்கங்களில் மட்டுமே பங்கெடுக்கவில்லை. உயிருள்ள, உயிரற்ற எல்லாப் பொருள்களுடன் கூடவும் அவர் தம்மை இணைத்து வாழ்ந்தார்! ஒரு பசு சாட்டையால் அடிக்கப்படுவதைக் கண்டு அவர் வேதனையால் கதறினார். அவரது முதுகில் பட்டை பட்டையாகச் சிவந்து சாட்டையடி காணப்பட்டது! மற்றொரு சந்தர்ப்பத்தில் புல்வெளியொன்றில் மேய்ந்துகொண்டிருந்த எருதைக் கண்டதும், புல்மீது ஏற்பட்ட அந்தச் சுவடு அவரது மார்பில் குளம்படிச் சுவடாகப் பதிந்து காணப்பட்டது. ஆத்மீக விஞ்ஞானத்தை உபதேசித்த மகான்களான நமது ஆச்சார்ய புருஷர்கள் அந்த அளவுக்கு உயர்நிலை எய்தியும், உபதேசித்தும் வந்தார்கள்.

நமது முன்னோர்கள் ‘நமது மக்களே நமது தெய்வம்’ என்று கூறினார்கள். மனித குலத்துக்கே மகத்தான குருநாதர்களாக விளங்கியவர்களில் ஒருவரான ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், ‘மனிதனுக்குத் தொண்டாற்று’ என்று உபதேசித்தார். மகானாக விளங்கிய அவரது சீடரான சுவாமி விவேகானந்தரும் அதையே ஆணித்தரமாக எடுத்துக் கூறினார்.

நாற்புறமும் நம்மைச் சூழ கோடிக் கணக்கான மக்கள் பட்டினியிலும், ஏழ்மையிலும் பரிதவித்து வாழ்கிறார்கள். உயிர் வாழ அத்தியாவசியமான பொருள்களும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. துயர் நிறைந்த அவர்கள் வாழ்க்கைக் கதையானது கல்மனத்தையும் கரைத்துவிடும். நிராதரவான ஏழைகள், துயருறும் மக்கள் இனம் ஆகியோரின் வடிவத்தில் சாக்ஷாத் பரம்பொருளே வந்திருக்கிறார். எதற்காக? அவருக்குத் தேவையானது ஏதாவதிருக்கிறதா? சக்திகளனைத்துக்கும், அறிவுக் கலைகளனைத்துக்கும் அவரே உறைவிடம், அனைவருக்கும் எஜமானர் அவரே. அப்படியிருக்கும்போது அவருக்கு வேண்டுவதென்ன? அந்த வடிவங்கள் மூலமெல்லாம் வந்து தெய்வத் தொண்டாற்ற அவர் நமக்கு வாய்ப்பளித்திருக்கின்றார். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அத்தகையோரை ‘தரித்ர நாராயணர்கள்’ என்றழைத்தார்.

ஒரு சாரார் ஆடல், பாடல், சினிமா, நாடகம் ஆகிய அனைத்தும் தான் ‘கலாச்சாரம்’ என்று கருதுகின்றார்கள். இத்தகைய கலாச்சார நிகழ்ச்சிகள் நாட்டின் எல்லா இடங்களிலும் நிகழ்ந்து வருவதை நாம் பார்க்கின்றோம். தரக்குறைவான கேளிக்கைகளுக்கு மறுபெயராக கலாச்சாரம் என்பது ஆகிவிட்டது. இது எத்தகைய முட்டாள்தனமான அவமானகரமான நிலைக்குத் தாழ்ந்து விட்டதென்றால், ஒழுக்கக் கேடான நடத்தைகளில் மூழ்கிப் புரண்டு நெளியும் இழிபெயரெடுத்த சினிமா நட்சத்திரங்கள் அன்னிய நாடுகளுக்குச் செல்லும் ‘கலாசார தூது கோஷ்டி’யில் இடம் பெறுகிறார்கள்! ஒரு ராமனையும் சீதையையும் ஈன்றெடுத்த நாடு; கடந்த காலத்தில் மிக உயர்ந்த ஞானிகளையும், தத்துவதரிசிகளையும் தனது கலாசாரத் தூதுவர்களாக உலகுக்கு அனுப்பிய நாடு; சமீப காலத்தில் உலகனைத்தின் அன்பையும் பக்தியையும், தாமாகப் பொங்கியெழுந்த வணக்கத்தையும் பெற்ற விவேகானந்தர், ராமதீர்த்தர் ஆகியோரின் நாடு- இந்நாட்டின் கலாச்சாரப் பிரதிநிதிகளாக மேற்குறிப்பிட்ட கோஷ்டிகள் செல்வது இன்றைய பயங்கரமான இழிநிலைக்கு உதாரணமாகும்.

அத்துடன் பிரபலமான ‘கலாச்சாரப் புருஷர்கள்’ பலர் ‘மிஸ் இந்தியா’ அழகிப்போட்டியில் நீதிபதிகளாகச் சென்று கலந்து கொள்வதையும் காண்கின்றோம். அவர்களது ‘கலாச்சாரப்  பொதுக்கருத்தில்’ நம் நாட்டுப் பெண்மையின் லட்சியங்களான சீதை, சாவித்ரி, பத்மினி, நிவேதிதை ஆகியோருக்கு இடமே இல்லை போலும்! அந்தப் போட்டியில் பாரதத்தின் உண்மையான அழகை நாம் காண முடிவதில்லை.

முதற்தேவை வெல்ல முடியாத உடல் பலமாகும். உலகில் எவரும் நம்மை மிரட்டவும் கீழடக்கவும் முடியாத அளவுக்குச் சக்தி படைத்தவர்களாக நாம் ஆக வேண்டும். அதற்காக நாம் வலிமையும் வளமும் வாய்ந்த உடல்களைப் பேண வேண்டும். மனித உருவில் வந்த அவதாரங்கள் அனைவரும் அவ்வாறே வாழ்ந்தார்கள்.  ‘வலிமையே வாழ்வு; வலிவின்மையே மரணம்’ என்பதே நமது புனித நூல்களனைத்தின் சாரம்.

‘இரும்பையொத்த தசைகளும் எஃகினையொத்த நரம்புகளும் வாய்ந்த மனிதர்கள் எனக்குத் தேவை’என்று சுவாமி விவேகானந்தர் கூறுவது வழக்கம். அவரும் அவ்வாறே வாழ்ந்தார். உடனிருந்த சீடர்கள், எப்பொழுதும் உட்கார்ந்து கண்ணீர் வடித்துக்கொண்டிருப்பதைக் கண்டபோது அவர் இடிபோல முழங்கினார்; ‘இது பக்தியே அல்ல, இது நரம்புக்கோளாறு பலவீனம் தான். சிறு பெண் குழந்தைகள் போல உட்கார்ந்துகொண்டு, அழுது கொண்டிராதீர்’ என்றார்.

முதன்முதலாக “ஹிந்து என்பதைப் பற்றி என்ன வரையறை விளக்கம் சொல்கிறீர்கள்?” என்று கேட்கிறார்கள். ஆம், உண்மையில் அது கடினமான காரியந்தான். ஒரு கனவான் ஒருமுறை கூறினார். முஸ்லிம், கிறிஸ்தவர் என்றால் யார் என்று என்னால் வரையறுத்து விளக்க முடியும். ஆனால் ஹிந்து என்றால் யாரென்று விளக்க முடியவில்லையே என்றார். அப்படி அவர் கூறியது சரி தான். நம்மால் சூரியனையும் சந்திரனையும் வரையறுத்து விளக்க முடியும். ஆனால் எந்த ஆதிக்காரணப் பொருளிலிருந்து இவையெல்லாம் வெளித்தோன்றினவோ அதனை வரையறுத்து விளக்க முடியாது. அப்படியானால் அது இல்லையென்று பொருளா? அடையாளச் சின்னங்களால் மூடி மறைக்கப்படவும், வரையறை விளக்கங்களால் விளக்கப்படவும் அது அனுமதிப்பதில்லை என்பதற்காக, அது இல்லை என்று நிரூபணமாகிவிடுகிறதா?

இறைவன் ஒருவனே அனுச்சிஷ்டன் (எச்சிற்படாதவன்) என்று ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறினார். அவன் தூயவன், மாசுபடுத்தப்படாதவன். ஏனெனில் அவன் ஒருநாளும் விளக்கப்படவில்லை;எந்த நாவினாலும் எச்சிற்படுத்தப்படவில்லை.  மற்ற எல்லாவற்றையும் விளக்கி வரையறுக்க முடியும். ஆனால் ‘பேருண்மை’ என்று அழைக்கப்படும் அனைத்தையும் அரவணைக்கும் பொருளை மட்டும் விளக்க முடியாது.

ஸ்ரீ ராமன்,  சிவாஜி,  விவேகானந்தர் ஆகியோரெல்லாம் ‘நவநாகரிக பாணி’யின் சிருஷ்டி அல்ல என்பதை மறக்க வேண்டாம். ராமாயணம், மஹாபாரதம் இவற்றில் கோயில் கொண்டுள்ள லட்சியங்களால் சிவாஜி தெய்வீக ஊக்கம் பெற்றார். நமது ஹிந்து வாழ்க்கை முறையில் அவருக்கிருந்த இணையற்ற பக்தியும், மக்களை ஒன்றுதிரட்டி இணைப்பதில் அவருக்கிருந்த தன்னிகரற்ற அறிவுக் கூர்மையும் இணைசேர்ந்து நடைமுறைக்கொத்த செயல் துடிப்பு மிக்க வடிவம் பெற்றது. அது அவரை பெருஞ்சக்தியாக மாற்றி நமது வரலாற்றின் போக்கு முழுவதையுமே திருப்பிவிட்டுவிட்டது.

வேதரிஷிகள் முதல் அண்மையில் ஸ்ரீ ராமகிருஷ்ணர், விவேகானந்தர், ராமதீர்த்தர் போன்ற நவயுக வல்லமையாளர் வரை அனைவரும் தமது ஆக்கரீதியான அன்புவழி வாழ்க்கையாலும், புராதன லட்சியங்களை வாழ்வில் நடத்திக் காட்டியதன் மூலமும் தெய்வீக ஊக்கமளித்து நமது மக்களின் வாழ்வில் தமது சக்தி நிரம்பிய அழியாத முத்திரையைப் பதித்துச் சென்றிருக்கிறார்கள். எதிர்ப்புச் சக்திகள் அனைத்தும் தடுத்தாலும், அவர்களின் தலையுயர்த்தி நிமிர்ந்து நின்று சவால் விடுகின்ற முறையில் உலகத்தை நோக்கிப் பேசமுடிந்தது.

அவர்களது குழந்தைகளாகிய நாம் எவ்வளவு பரிதாபமான நிலைக்குத் தாழ்ந்துவிட்டோம்! அந்த மாவீர ஆன்மாக்களை ஊக்கிச் செயல்படுத்தியும் உருவாக்கியும் வந்த லட்சியங்களைப்  பற்றிய ஆரம்பப்பாட எழுத்துக்களைக் கூட நாமறியோம்!

பிரிட்டிஷார் நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட காலத்தில், அதற்கு எதிராகத் தோன்றிய தேசிய புத்தெழுச்சியில் ஆத்மிக உட்பொருளைக் கண்டோம். ஆத்மிக ஆதவன் முழுப் பேரொளியுடன் வங்கத்தில் ஸ்ரீராமகிருஷ்ண- விவேகானந்த இயக்க வடிவத்திலும், பஞ்சாபில் சுவாமி தயானந்தர், ராமதீர்த்தர் வடிவங்களிலும், தெற்கில் மகரிஷி ரமணர், யோகி அரவிந்தர் வடிவங்களிலும் கதிர் பரப்பி வெளிவந்தான். அவர்களனைவரும் தேசியத்தின் ஆத்மிக உட்பொருளை மக்கள் மனதில் பாய்ச்சிப் புகட்டினார்கள்.

விழுமிய மேன்மையான தெய்வீகக் காட்சி நமது உள்ளங்களில் ஆழப் பதிந்து இருக்கும்போது, அரசியல் சக்தி என்னும் கானல்நீரை நோக்கி நாம் எதற்காக ஓட வேண்டும்? ஒருமுறை தட்சிணேசுவரம் கோயிலில் களவு நிகழ்ந்தது. ராதாகாந்த சுவாமியின் மேலிருந்த நகைகள் திருடப்பட்டன.  “தனது சொந்த நகைகளையே காப்பாற்றிக் கொள்ள முடியாதவர் என்ன கடவுள்?’’ என்று ஒரு ஒருவர் வினவினார். ஸ்ரீ ராமகிருஷ்ணர் அவரைக் கண்டித்து, “இதுபோன்ற அபத்தமான நோக்கை வைத்திருப்பது வெட்ககரமானது ஆகும். ஏனெனில் செல்வங்களுக்கெல்லாம் நாயகியான ஸ்ரீ லட்சுமியைத் தன் வேலைக்காரியாகக் கொண்டிருக்கும் இறைவன், பயனற்ற இந்தத் துண்டுக் கற்களையும் உலகத்தையும் எப்படி, எவ்வளவு தூரம் மதிக்க முடியும்?” என்று பதிலளித்தார். அதுபோலவே தேசிய வாழ்க்கை முழுவதையும் இணைத்துக் கோர்த்த முழுப்பார்வையும் பெற்றுள்ள நாம், தோன்றி மறையும் அரசியல் சக்தி போன்ற ஒன்றன்பின் எதற்காக ஓட வேண்டும்?

நம் முன்னோர் இப்பாரத பூமியை உலகிலேயே மிகப் புனித பூமியாகக் கொண்டாடினர். இங்கு செய்யப்படும் ஒவ்வொரு சிறு நற்செயலும், நூறு மடங்கு பன்மடங்கு பலன் தரும் என்பதை உணர்ந்தனர்.

இதே கருத்தோடு  தான் சுவாமி விவேகானந்தர் “இவ்வுலகில் எவனொருவன்  இறைபதம்நோக்கி, ஆன்மிக வாழ்வில் முன்னேற்றம் அடைந்து தனது இறுதிப் பிறப்பைக்கழிக்கும் நிலையில் உள்ளானோ, அவன் இப்பாரதப் பூமியில் பிறப்பெடுப்பான்.ஆகவே உலகில் எந்த நாடாவது புண்ணிய பூமி என்றழைக்கும் பேறு பெற்றுள்ளதுஎன்றால் அது பாரதமேயாகும்” என்று கூறினார்.

பாரம்பரியம் தொடருகிறது

நம் நாட்டிற்கே விசேஷமான குறிப்பு பண்டைக்காலத்தோடு நின்றுவிடவில்லை. இன்றைய நவீன காலத்திலும், ஸ்ரீ ராமகிருஷ்ணரும், ஸ்ரீ நரேந்திரரும் (பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தர்) சந்தித்த சந்தர்ப்பம் இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

நரேந்திரன் கல்லூரி மாணவனாக இருக்கும்போது, இளமை மிடுக்கும், அறிவு விளக்கமும் பொருந்திய மேனாட்டு, கீழ்நாட்டு தத்துவ விசாரணைகளில் ஆழ்ந்து ஈடுபட்டிருந்தார். இருப்பினும் உண்மை ஞானத்தைத் தேடித் திரியும் அவர் ஆத்மா அதில் திருப்தியடையவில்லை. அவர் தம் காலத்தில் வாழ்ந்த கற்றறிந்த பெரியார்கள் பலரையும், பக்தர்கள் பலரையும் சந்தித்தார். அவர்களும் அவரது ஆத்மதாகத்தைத் தீர்க்க முடியவில்லை.

ஒருசமயம் நரேந்திரர் தட்சிணேசுவரக் கோவிலில் ஒரு பரமஹம்சர் (சுகானுபவம் பெற்ற ஆத்மா) இருப்பதாகத் தெரிந்து கொண்டார். நரேந்திரர் அவரிடம் சென்று பல ஆண்டுகளாகத் தன் மனதை உலுக்கிவரும் அக்கேள்வியை அப்பட்டமாகக் கேட்டார். “சுவாமி! தாங்கள் கடவுளைக் கண்டதுண்டா?” என்று அவர் கேட்டார். உடனே ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஒரு கணமும் தயங்காமல் “ஆம்! உன்னை நான் காண்பது போல் கடவுளை நான் காண்கிறேன். அதைவிடச் சற்று திவ்யமாகவும் தெளிவாகவும் காண்கிறேன். அவரை உனக்கும் காண்பிக்க முடியும்” என்றார். ஸ்ரீ ராமகிருஷ்ணர் நரேந்திரரக்குத் தாம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவும் செய்தார்.

நரேந்திரர், நவீனகாலத்துப் பிறவி. உயர்ந்த அறிவும் அசைக்க முடியாத மனோதிடமும் பெற்றவர். அவர், ஏதோ மனோவயத்தில் அடிபட்டுக் கண்மூடித்தனமாக விஷயங்களை நம்பும் கோஷ்டியைச் சேர்ந்தவரல்லர். கடவுளையே நேருக்கு நேர் கண்கூடாகக் கண்டபொழுது, கடவுள் உள்ளார் என்ற உண்மையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ளாமல் இருக்க முடியவில்லை. இவ்வாறு தெய்வ தரிசனம் பெற்ற பலபுருஷர்கள் தொடர்ந்து நம் நாட்டை ஆத்மஞானம் பெறும், முக்தி பெறும் தர்ம பூமி என்றும், மோட்ச பூமி என்றும் அழைத்து வந்துள்ளனர்.

சுவாமி விவேகானந்தர் இங்கிலாந்திலிருந்து பாரத நாட்டிற்குத் திரும்பவிருந்த சமயத்தில் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. “செல்வத்திற் சிறந்த நாடுகளான இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்குத் தாங்கள் விஜயம் செய்துள்ளீர்கள். இப்போது உங்கள் தாய்நாட்டைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்பதே அக்கேள்வி.

அதற்குப் பதில் கூறுகையில், சுவாமி விவேகானந்தர்,    “ பாரத  நாடு!    அதனை நான் முன்பு நேசித்தேன்.   ஆனால்  இப்பொழுது  அதன்  ஒவ்வொரு  தூசும்  எனக்குப் புனிதமானது.அது புண்ணிய ஸ்தலமாகும்” என்றார்.

ஒருசமயம் விவேகானந்தரின் குருவான  ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர், ஒருவன் காலைக்கடனை முடித்துவிட்டு கங்கையிலே கால்கழுவுவதைப் பார்த்தார். உடனே, “புனித கங்கை நீரை பாழ்படுத்தும் வகையில் ஈனமாகப் பயன்படுத்துகிறாயே” என்று பதறிக் கேட்டார். அவ்வாறு உயர்ந்த தூய்மையான, தாய்மையைத் தாய்நாட்டில் கண்டு போற்றும் தன்மையை நம்நாட்டுப் பெருமக்கள் வாழ்ந்து காட்டினார்கள். அவர்களுடைய ஜீவனுடைய உதாரணம், சமுதாயத்தில் எல்லாத்தரத்தில் இருப்பவர்கள் உள்ளத்திலும் உறைந்தது.

எல்லாச் சம்பிரதாயங்களையும் தன்னுள் கொள்ளும் விசேஷத் தன்மையை நமது ஆச்சார்யர்கள் அனைவரும் கடைப்பிடித்துள்ளனர். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்  “எவ்வளவு நோக்கங்கள் உண்டோ, அவ்வளவு மார்க்கங்களும் உண்டு” என்று கூறியுள்ளார். தனி மனிதனின் ருசிக்கும், மனப்போக்கிற்கும் ஏற்ப பல்வேறு மதங்களோ சம்பிரதாயங்களோ இருக்க முடியும்.

சாதி அமைப்பு நிறைந்த சமுதாயம் என்று அழைக்கப்படும் ஹிந்து சமுதாயம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, கிரேக்கர்கள், சகர்கள், ஹூணர்கள், இஸ்லாமியர்கள், ஐரோப்பியர்கள் போன்ற பல இனத்தவர் படையெடுத்த அழித்தபோதிலும் கூட சிரஞ்சீவியாக, இறவாது, அழிக்க முடியாத சமுதாயமாக இன்றும் ஒரு ஸ்ரீ ராமகிருஷ்ணர், விவேகானந்தர், திலகர், காந்தி போன்றோரை உருவாக்கும் ஜீவனுடையதாய் விளங்குகிறது. அதற்கு மாறாக சாதிப் பிரிவினையற்ற சமுதாயம் என்று கருதப்படும் சமூகங்கள் ஒரே படையெடுப்பிற்குப் பின் மீண்டும் எழ முடியாதவாறு மண்ணோடு மண்ணாகிப் போய்விட்டன.

நவீன காலத்தில் தேசிய மறுமலர்ச்சி முன்னோடியாக விளங்கிய சுவாமி விவேகானந்தர், அடிக்கடி பல தடவைகளில் சந்தேகத்திற்கு இடமில்லாத சொற்களில், இது ஹிந்து ராஷ்ட்ரம் தான் என்று அறிவித்ததுடன் குரு கோவிந்த சிம்மன், சத்ரபதி சிவாஜி ஆகியோரின் உயர்ந்த லட்சியங்களை நம்முன் வைத்துள்ளார். உண்மையில் ஒரே ஆத்மிக ராகத்திற்கு இசைய, தான் இசைக்கின்ற உள்ளங்களால் உருவானதே நம் ராஷ்ட்ரம் என்ற சொல் – விளக்கவுரை அளித்துள்ளார்.

பணக்காரர் ஒருவர் அழகிய தமது தோட்டத்திற்கு நடுப்பகல் வேளையில் தினந்தோறும் சென்று, அங்குள்ள குளுமையான நிழலில் உட்கார்ந்திருப்பது வழக்கம். ஒரு நாள் மயில் ஒன்று அங்கு வந்து மரத்தின் மீது உட்கார்ந்து கொண்டு தனது எழில் மிகுந்த தோகையை விரித்தது. “தினந்தோறும் இதே நேரத்தில் அது வருமாயின் எவ்வளவு அருமையாக இருக்கும்!” என்று அந்த எஜமானன் நினைத்தான். உடனே தின்பண்டங்கள் சிலவற்றைத் தயாரித்து அதில் சிறிதளவு அபினைக் கலந்து அம்மயிலின் முன் வீசினான். மயில் அதனைத் தின்றுவிட்டு கிறுகிறுப்பு அடைந்தது. மறுநாளும், முன்னாள் அடைந்த கிறுகிறுப்பினை நினைத்துக்கொண்டு அம்மயில் வந்தது. அம்மனிதர் மீண்டும் அபினை அதற்கு ஊட்டினார். முடிவாக அபினே இல்லாமற்கூட, அங்கு தினந்தோறும் அந்த நேரத்தில் வருகின்ற அளவுக்கு அந்த மயிலுக்குப் பழக்கமாகிவிட்டது. (*1)

மனத்தின் இயல்பு இப்படிப்பட்டது ஆகும். சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும், மீண்டும் மீண்டும் ஒரு கருத்தை வலியுறுத்தும்போது அது பழக்கமாகிவிடுகிறது.

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் கங்கா ஸ்நானத்திற்குச் செல்கின்ற மக்களைப் பற்றி வேடிக்கையாக ஒன்று கூறுவார். “இம்மனிதர்கள் கங்கை கரையை அணுகும்போதே, அவர்களுடைய பாவங்கள்  உடலிலிருந்து வெளிவந்து தொலைவிலுள்ள மரக்கிளைகளில் ஏறி உட்கார்ந்து விடுகின்றன. ஆனால் ஸ்நானம் முடிந்த பிறகு, அவர்கள் திரும்பி வந்தவுடன் மறுகணமே அந்த பாவங்கள் மீண்டும் பாய்ந்து தொத்திக் கொள்கின்றன” என்பார். மனிதனுடைய ஒழுக்கப் பண்பாட்டை வெறும் தற்காலிக, ஆவேச எழுச்சிகளால் உருவாக்க முடியாது என்பதே இதிலிருந்து நாம் கற்கின்ற நீதி.

நம்மைச் சுற்றி, பல்வேறு தீய தன்மைகள் உள்ளன. உள்ளமானது அவற்றுடன் இடைவிடாத தொடர்பு கொண்டிருப்பதால் அதனைத் தூய்மைப்படுத்துவது குறிப்பாக அவசியமாகின்றது. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் அத்வைத குருவாக விளங்கிய தோதாபுரியிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதாவது அனுபூதி பெற்ற சித்த புருஷராகிவிட்ட பிறகும் கூட, அவர் தினசரி சம்சார சடங்குகளை ஏன் கடைபிடிகின்றார் என்பது கேள்வி. அதற்கு அவர் அளித்த பதில், “உள்ளமானது இந்த உலகத்தில் தொடர்பு கொண்டிருக்கின்ற காலம்வரை, அதனை தினந்தோறும் தூய்மைப்படுத்தியாக வேண்டும். தண்ணீர் குடிப்பதற்காகப் பயன்படுத்துகின்ற பாத்திரத்தை தினந்தோறும் தேய்த்துக் கழுவுவது போல உள்ளத்தையும் கழுவியாக வேண்டும்” என்பதே.

ஸ்ரீ ராமகிருஷ்ணரின் வாழ்க்கையில் படிப்பினை அளிக்கின்ற ஒரு உதாரணம் உள்ளது.

ஒருமுறை ஒரு அம்மையார் தமது குழந்தையை அவரிடம் கொண்டுவந்து, அக்குழந்தை மிட்டாய் சாப்பிடுவதில் மிக அதிகமான ஆசை கொண்டிருப்பதாகவும், அதனால் அதன் உடல்நிலை கெட்டுவிடுவதாகவும் குறிப்பிட்டு, அதனை குணப்படுத்துமாறு அவரை வேண்டினாள். ஸ்ரீ ராமகிருஷ்ணர் அவளை ஒரு வாரம் கழித்து வரச் சொன்னார். அவளும் வந்தாள். மீண்டும் சில நாட்கள் கழித்து வரச் சொன்னார்.

அவள் மீண்டும் வந்தபோது ஸ்ரீ ராமகிருஷ்ணர் அந்தக் குழந்தையை அருகில் அழைத்து, “எனதன்புக் குழந்தாய்! அதிகமான மிட்டாய் சாப்பிடுவது நல்லதல்ல, விட்டுவிடு” என்றார். குழந்தையும் உடனே விட்டுவிடுவதாக வாக்களித்தது.  அந்த நாள்முதல் அக்குழந்தை மிட்டாயை விட்டுவிட்டது.

இதைக் கவனித்துக் கொண்டிருந்த சிஷ்யர்கள் அவரை வினவினார்கள். “சுவாமி! நீங்கள் அந்தக் குழந்தையிடம் மிட்டாய் சாப்பிடக் கூடாதென்று முதல்நாளே ஏன் கூறவில்லை? அந்த அம்மையாரை இவ்வளவு தொலைவிலிருந்து மூன்று முறை வரச் சொல்லக் காரணமென்ன? என்றார்கள். அதற்குப் பதிலளிக்கையில் ஸ்ரீ ராமகிருஷ்ணர், “எனக்கும் கூட மிட்டாய் அதிகம் சாப்பிடுகின்ற பலவீனம் இருந்தது. ஆகவே அந்தக் குழந்தையிடம் அந்த பலவீனத்தைக் கைவிடும்படி எப்படிக் கூற முடியும்? அப்படியே நான் உபதேசம் செய்தாலும் எனது சொற்களால் அக்குழந்தை எந்த மாற்றமும் அடையாது. ஆகவே அந்த அம்மையாரை மீண்டும் வரும்படி கோரினேன். எனினும் அந்தக் காலஅளவுக்குள் இந்த விஷயத்தில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. ஆகவே, அவளை மீண்டும் அழைக்க நேர்ந்தது. அதன் பின்னர் மிட்டாய் ஆசையை நான் அறவே கைவிட்டேன். அப்பொழுது அந்தக் குழந்தைக்கு உபதேசம் அளிக்கக்கூடிய தகுதி என்னிடம் இருப்பதாக நான் கண்டுகொண்டேன்”.

ஒருமுறை சுவாமி விவேகானந்தரின் முக்கிய சிஷ்யையான சகோதரி நிவேதிதை அம்மையார் பின்வருமாறு கூறியுள்ளார்: “ஹிந்துக்கள் அனைவரும் கூட்டு நீதியில் தினந்தோறும், காலையிலும் மாலையிலும் 10 நிமிடங்கள் கூட்டுப் பிரார்த்தனை நடத்தினால் – வெறுமனே இதை மாத்திரம் செய்தாலும் ஹிந்து சமாஜமானது வெல்லுவதற்கரிய சமூகமாக ஆகிவிடும்”.

ஒருமுறை ஸ்ரீ ராமகிருஷ்ணரது சிஷ்யர்களில் சிலர் ஏழைகளுக்கு உதவுவது பற்றியும், அவர்களிடம் இரக்கம் காட்டுவது பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணர் பகவத் பிரேமையில் மூழ்கிய நிலையில் அங்கு வந்து அவர்களைக் கண்டித்துவிட்டு, “ஏழைகளிடம் தயவு காட்டவும், அவர்களுக்கு உதவி புரியவும் நீங்கள் யார்? அவர்கள் ஸ்ரீமந் நாராயணனின் நடமாடும் வடிவங்களாயிற்றே! அவர்களுக்குத் தொண்டு செய்கின்ற உரிமை ஒன்று தான் உங்களுக்கு உண்டு” என்று கூறினார்.

சுவாமி விவேகானந்தர் கூறுவது வழக்கம்:   

“மஹான்  குரு கோவிந்த சிங்கைப் போல மக்கள் தொண்டிற்காக  அனைத்தையும் சகித்துக்  கொள்வதற்காக  ஆயத்தமாக இருங்கள். தமது சொந்த ரத்தத்தையும்,  நமக்கு நெருங்கியவர்கள்,  இனியவர்கள் ஆகிய  உறவினர்களின் ரத்தத்தையும் சிந்திய பிறகு  களத்திலிருந்து அமைதியாக அவர் வெளியேறினார்.  தெற்கே அவர் மரணமடைந்தார். ஆனால் மிகுந்த மோசமான நன்றி கொன்ற தன்மையுடன்  தம்மைக்  கைவிட்டவர்களைப் பற்றிச் சாபமாக ஒருசொல் கூட அவர் வாயிலிருந்து வெளிவரவில்லை”

பிரிட்டிஷார் வெளியேறியவுடன் சீனா பாரதத்தின் மீது படையெடுக்கும் என்று சுவாமி விவேகானந்தர் 70 ஆண்டுகளுக்கு முன்னரே எச்சரித்துள்ளார்.

ஒருமுறை துறவி ஒருவர் ஒரு நாயைத் தன் மடியில் வைத்துக் கொண்டு தெரு ஓரத்தில் எச்சில் இலைகளில் எறியப்பட்டிருந்த பொருள்களை அன்புடன் அதனோடும் பங்கு போட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். தெருவழியே சென்ற ஒருவன் இறைவனைக் கண்டுணர்ந்த மஹான் என்று தெரிந்துகொண்டு அவர் அருகே சென்றான். ஆனால் அவனைக் கண்டதும் அவர் ஓடிக்கொண்டே கற்களை எடுத்து வீசித் தம்மைப் பின் தொடராமல் தடுக்க முயன்றார். ஆனால், விடாப்பிடியாக தொடர்ந்து வருகின்ற அவனைக் கண்டதும் அந்தச் சாது நின்று அவனை, “எதற்காக நீ என் பின்னால் வருகின்றாய்?’ என்று கேட்டார்.

குருஜி கோல்வல்கர்

”சுவாமி! நீங்கள் இறைவனைக் கண்டு உணர்ந்திருக்கின்றீர்கள் என்று எனக்குத் தெரியும். எனக்கும் அந்தப் பாதையில் வழிகாட்டி அருள வேண்டும்” என்று கோரினான். அதற்குச் சாது, “சரி; இந்த ஊரின் சாக்கடை நீர், இங்கே ஓடிக் கொண்டிருந்ததை நீ காண்கிறாயா? என்றைய தினம் இந்தத் தண்ணீர் கங்கை நீரிலிருந்து எவ்விதத்திலும் வேறுபட்டதல்ல என்ற அனுபூதி உனக்கு ஏற்படுகின்றதோ அன்று நீ இறைவனைக் கண்கூடாக காண்பதற்கு தகுதி பெற்றவனாய்” என்று கூறினார். (*2)

இரு யோகியர்களைப் பற்றிய கதையொன்று உண்டு. அவ்விருவரும் பரம்பொருளை எய்துவதற்காகக் கடுமையான தவமியற்றி வந்தார்கள். அந்த வழியாக நாரதர் இறைவனின் இருப்பிடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அவ்விரு யோகியர்களும் நாரதரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார்கள். “தாங்கள் இறைவனை தரிசித்துவிட்டுத் திரும்பும்போது, அவரை நாங்கள் கண்கூடாகக் காண இன்னும் எத்தனை பிறவிகள் தவம் செய்ய வேண்டும் என்று விசாரித்து வாருங்கள்” என்று கேட்டனுப்பினார்கள். திரும்பி வந்தபோது நாரதர் அவ்விரு யோகியரையும் மீண்டும் சந்தித்தார். “இன்னும் நான்கே ஜென்மங்கள் தான்” என்று முதலாவது யோகியிடம் நாரதர் கூறினார். அது கேட்டு அந்த யோகி மனமுடைந்து “இறைவனே! இன்னும் நான்கு பிறவிகளா?” என்று அங்கலாய்த்து ஓலமிட்டார். அடுத்த யோகியிடம் நாரதர், அதோ அங்கே இருக்கின்ற புளிய மரத்தில் எத்தனை இலைகள் இருக்கின்றன்வோ அத்தனை பிறவிகள் நீ எடுக்க வேண்டும்” என்று கூறினார். அது கேட்டு அவர் ஆனந்தக் கூத்தாடுவதைக் கண்டு நாரதர் வியப்படைந்தார். அதன் காரணத்தை நாரதர் வினவியபோது, இனி நான் இறைவனை அடைவதற்கு திட்டவட்டமாக எத்தனை பிறவிகள் எடுக்க வேண்டும் என்ற எண்ணிக்கை தெரிந்துவிட்டது. அவற்றிற்குப் பிறகு நான் நிச்சயமாகவே இறைவனைக் காண்பேன். இது மனதுக்கு எவ்வளவு ஊக்கமும் தெம்பும் தருகின்றது!” என்று விடையளித்தார். அவ்வாறு அந்த யோகி கூறி முடித்ததும் அசரீரியான ஒரு குரல் ஒலித்தது. “இந்தக் கணமே நீ ஆத்ம ஞானியாகிவிட்டாய்” என்று அது கூறிற்று.

இதைப் போன்று வாழ்நாள் முழுவதும் விடாமுயற்சியுடனும், பூரண நம்பிக்கையுடனும், அசைக்க முடியாத மன உறுதியுடனும் பாடுபட்டு உழைத்தால் மட்டுமே பெரும் அற்புதங்களைச் சாதிக்க முடியும்.

அனைத்தையும் தியாகம் செய்ய வல்ல தூய தொண்டர்களைக் குறித்து, சுவாமி விவேகானந்தரின் சொற்கள் இவை:  “அவர்கள் பயங்கரத்தை வழிபடுகின்றார்கள். அபாயங்களுக்கிடையே  வாழ்க்கை நடத்த அவர்கள் ஆசைப்படுகிறார்கள்”.

அடிக்குறிப்பு:

*1- இது ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் கூறிய உபகதைகளுள் ஒன்று.

*2- இதுவும் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் கூறிய உபகதைகளுள் ஒன்று. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹமஸரின் ஜீவிதத்தில் வரும் நிகழ்ச்சி இது. ஸ்ரீ ராமகிருஷ்ணர், அந்த்த் துறவியைப் பார்த்தவுடனேயே அவர் ஞானம் வாய்க்கப் பெற்றவர் என்பதைப் புரிந்துகொண்டார். பிறகு தனது உறவினரான இருதயரை அத்துறவியிடம் அனுப்பி வைத்தார். ‘தெருவழியே சென்ற ஒருவன்’ என்று குறிப்பிடப்படுபவர் இருதயரே ஆவார்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s