காசி தமிழ் சங்கமம்: ஒரு மகத்தான அனுபவம்

-சந்திர.பிரவீண்குமார்

மத்திய கல்வி அமைச்சகத்தின் ஏற்பாட்டில் வாராணசியில், நவம்பர் 17-இல் தொடங்கி  ‘காசி தமிழ் சங்கமம்’  டிசம்பர் 16 வரை தொடர்ந்து கலாச்சார பரிமாற்ற விழாவாக நடைபெறுகிறது. காசியையும் தமிழகத்தையும் இணைக்கும் பாரம்பரிய வேர்களை நினைவுறுத்தும் இந்த அற்புதமான நிகழ்வில் பங்கேற்க தமிழகத்திலிருந்து எழுத்தாளர்கள் பலர் சென்றுள்ளனர். அவர்களுள் ஒருவரான விஜயபாரதம் துணை ஆசிரியர் திரு. சந்திர.பிரவீண்குமாரின் அனுபவங்கள் இவை...

பாரத நாட்டில் பிறந்த ஒவ்வொருவருக்கும் வாராணசி என்ற காசிக்குச் செல்ல வேண்டும்; அங்கு ஓடும் கங்கை நதியில் புனித நீராடிவிட்டு விஸ்வநாதர் ஆலயத்தையும், 52 சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்கும் காசியின் அன்னை விசாலாட்சியையும் தரிசிக்க வேண்டும் என்ற ஆசை எழுவது இயல்பானது. நானும் அதில் விதிவிலக்கல்ல. காசிக்குச் செல்ல வேண்டும் என்று பல ஆண்டுகளாகத் திட்டமிட்டுக் கொண்டிருந்தேன்.

மொகலாய அரசனான ஔரங்கசீப், காசி மீது படையெடுத்து அப்போதிருந்த விஸ்வநாதர் ஆலயத்தை இடித்து ஞானவாபி மசூதி கட்டியதையும் ராணி அஹல்யாபாய் தற்போதைய காசி விஸ்வநாதர் ஆலயத்தை நிர்மாணித்ததையும் வரலாற்றில் படித்தபோது துணுக்குற்றேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஸ்வநாதர் கோயில் வளாகத்தைப் புதுப்பித்து பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த நிகழ்ச்சியை தொலைக்காட்சிகளில் பார்த்தபோது, வாராணசி மண்ணுக்குச் சென்றாக வேண்டும் என்று உறுதி பூண்டேன்.

அக்டோபர் மாதம் தீபாவளிக்கு முன்பு பணியில் மூழ்கியிருந்த நேரத்தில் ஒரு நண்பர் அழைத்து, “காசி தமிழ் சங்கமத்துக்காக மத்திய அரசு அழைத்துச் செல்கிறதாம். நீயும் பதிவு செய்; நண்பர்களுக்கும் சொல்” என்று குறுந்தகவலை அனுப்பி வைத்தார்.

முன்பதிவு செய்ததோடு மறந்துவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். நவம்பர் 17ஆம் தேதி “நீங்கள் காசி தமிழ் சங்கமத்துக்கு 22ஆம் தேதி புறப்பட வேண்டும். அடுத்த 24 மணிநேரத்தில் அதை உறுதி செய்யுங்கள்” என்று மின்னஞ்சல் வந்தது. ஆச்சரியத்துடன், உடனடியாக காப்புத் தொகை செலுத்தி முன்பதிவு செய்தேன். புறப்படுவதற்கு முதல் நாள், மூத்த பத்திரிகையாளர்கள் பத்மன், கோலாகல ஸ்ரீனிவாஸ், விஜயபாரதம் முன்னாள் ஆசிரியர் குரு.சிவகுமார் உள்ளிட்டோரும் என்னுடன் வருகிறார்கள் என்று தெரியவந்தது.

நவம்பர் 22ஆம் தேதி காலை 9.15 மணிக்கு சென்னையில் கிளம்பிய கயா எக்ஸ்பிரஸ் தான் எங்களுக்கான வண்டி. காலையில் சீக்கிரமாக சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைந்தேன். மகாபாரதத்தை எட்டாண்டுகள் உழைத்து எளிய தமிழில் கொண்டு வந்த எழுத்தாளர் அருட்செல்வன் பேரரசனைக் கண்டு, அறிமுகம் செய்து கொண்டோம். ஐ.ஐ.டி சார்பில் பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவரிடமும் பொறுமையாக இந்தப் பயணம் குறித்து விளக்கிய சகோதரிகள் கலைசெல்வியும் ஸ்வேதாவும் எங்களை வழியனுப்ப வந்திருந்தார்கள். பா.ஜ.க.வின் தமிழக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி உள்ளிட்ட பிரமுகர்கள் குடிநீர் பாட்டில், பிஸ்கட்டுடன் ‘ஒரேநாடு’ சிறப்பிதழையும் தந்து வழியனுப்பி வைக்க, எங்களுக்குரிய பெட்டிகளில் அமர்ந்துகொண்டோம்.

காசி தமிழ் சங்கமத்துக்காகத் தயாரிக்கப்பட்டிருந்த மூன்று பிரத்யேகப் பெட்டிகள் அவை. பலத்த பாதுகாப்புடன் உற்சாகமாகப் பயணத்தைத் துவங்கினோம். பா.ஜ.க சார்பில் சௌதாமினி, ஸ்ரீகலா தலைமையிலான நான்கு சகோதரிகள் உடன் பயணித்து, எங்களின் தேவைகளை அவ்வப்போது நிறைவேற்றினர்.

எங்கள் குழுவின் எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், பத்திரிகையாளர்களுடன் புதுவை மத்தியப் பல்கலைக்கழகத்தின் 30 மாணவ மாணவியரும் வந்திருந்தனர். ரயிலிலேயே பேச்சு, கவியரங்கம் என களை கட்டத் துவங்கியது.

சென்னையில்தான் என்றில்லை. தமிழுக்குச் செல்லுமிடமெல்லாம் வரவேற்பு கிடைக்கச் செய்துள்ளார் நமது பிரதமர் மோடி. விஜயவாடாவில் ஆந்திரப் பிரதேச மாநில பாஜக பொதுச் செயலாளர் சத்தியநாராயண ராஜு ஒவ்வொரு பெட்டிக்கும் வந்து உற்சாகப்படுத்தினார்.

இரண்டாவது நாள் மத்தியப் பிரதேசத்துக்குள் ரயில் நுழைந்தது. ஜபல்பூர், சத்னா என எல்லா இடங்களிலும் மாலை மரியாதைதான். அன்று இரவு பண்டிட் தீனதயாள் உபாத்யாயா ரயில் நிலையத்தை அடைந்தோம். மொகல்சராய் என்ற அந்த இடத்தின் அருகே பாரதிய ஜனசங்கத்தின் தலைவர் தீனதயாள் உபாத்யாய 1968இல் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். அந்த ரயில்நிலையத்திற்கு தற்போது அவரது பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. அந்த ரயில் நிலையத்தை அடைந்ததுமே வாராணசி மாவட்ட பா.ஜ.க தலைவர் அபிமன்யூ சிங் தலைமையில் பா.ஜ.க தொண்டர்களும் பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். ‘வணக்கம் காசி’ என்று தமிழில் கூறி வரவேற்றதோடு, மலர் தூவி கொண்டாடிவிட்டனர். அந்த மக்கள் கடலில் இருந்து மின்சார பேருந்தை அடைய ஒரு மணிநேரமாகி விட்டது. எங்கள் 214 பேரையும் 28 பேர் கொண்ட குழுவினராகப் பிரித்திருந்தனர். ஒவ்வொரு குழுவும் பேருந்தில் ஏறிக்கொண்டோம். (எங்கள் குழுவின் பெயர் ‘பாரதி’) இரவு உணவுக்காக அனைவரும் ஹோட்டல் யுக் என்ற இடத்தை அடைந்தோம். தமிழகத்தில் இருந்து சமையல் கலைஞர்களை அழைத்து வந்து, சிறப்பான உணவைப் பரிமாறினார்கள். எங்கள் குழுவினரை அங்கேயே தங்கிவிட ஐ.ஆர்.சி.டி.சி அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள். இரண்டு பேருக்கு ஓர் அறை. பலருக்கு இது போன்ற சொகுசு அறைகளில் தங்கி பழக்கமே இல்லை.

மறுநாள்… காசியில் முதல் நாள். காலையில் எழுந்து குளித்துவிட்டு சிற்றுண்டிக்குப் பிறகு ஒன்பது மணிக்குத் தயாரானோம். காசி விஸ்வநாதர் ஆலயத்தை அடைந்தோம். எத்தனை தவமிருந்தோம் இந்தத் தலத்தைக் காண! விடுவிடுவென காசி விஸ்வநாதரை நோக்கி நடந்தோம். எங்களுக்காக உள்ளூர் தரிசனத்தை நிறுத்திவைத்திருந்தார்கள். நாங்கள் சென்றது முக்கிய பிரமுகர்களுக்கான வி.வி.ஐ.பி வழி. காசி விஸ்வநாதரை தரிசித்ததும் அங்கிருந்த பார்வையாளர் வளாகத்தில் அமர வைக்கப்பட்டோம். அண்மையில் கோயில் அறங்காவலராக நியமிக்கப்பட்ட வெங்கட்ரமண கனபாடிகள், காசியில் ஐந்தாவது தலைமுறையாக வாழும் தமிழர். அவரும் கோயில் நிர்வாக அதிகாரி சுனில்குமாரும் கோயில் வளாகம் பற்றி விளக்கினார்கள். இங்குள்ள விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி கோயில்களும் அங்கிருந்து கங்கா ஆரத்தி எடுக்கப்படும் தசாசுவமேத காட் பகுதியும் திசைக்கு ஒன்றாக, நடுவில் 400க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருந்தனவாம். அவற்றைக் கையகப்படுத்தி பிரம்மாண்ட கோயில் வளாகமாக மாற்றியிருக்கிறார் பிரதமர் மோடி. இந்த வளாகத்துக்குள்ளேயே ராணி அஹல்யாபாய்க்கும் ஆதிசங்கரருக்கும் சிலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தசாசுவமேத காட் (படித்துறை) சென்று கங்கையைத் தரிசித்துவிட்டு, அன்னை விசாலாட்சியையும் அன்னபூரணியையும் தரிசித்தோம். அன்னபூரணி கோயிலில் மந்திரங்கள் ஓத எங்களுக்கு அறுசுவை உணவும் பரிமாறப்பட்டது. அந்தச் சத்திரத்தை தமிழகத்தின் நாட்டுக்கோட்டை செட்டியார்கள்தான் பராமரிக்கிறார்கள்.

அங்கிருந்து கால பைரவர் கோயில். காசியின் காவல் தெய்வம் அவர். அங்கு காசிக் கயிறுகளை வாங்கிக்கொண்டோம். அங்கிருந்து கங்கை ஆரத்தி பார்க்கச் சென்றோம். பரவசமடைந்தோம்.

மறுநாள் காலை கங்கா ஸ்நானம். தீபாவளிக்கு கங்கை நம் இல்லம் தேடி வருகிறாள். ஆனால், இப்போதோ நாம் அன்னையைத் தேடிச் செல்கின்றோம் என்ற உணர்வு மேலிட்டது. மகாகவி பாரதியார் நடமாடிய அதே ஹனுமன் காட். கங்கையில் இறங்கியபோது, ‘என் மூதாதையரின் பலனால் இறங்கியிருக்கிறேன் அன்னையே’ என்ற என்னை உச்சி முகர்ந்து தூய்மைப்படுத்தினாள் கங்கை. 2011ஆம் ஆண்டு எனது உறவினர்கள் கங்கையில் குளிக்கச் சென்றபோது, அதன் நிறத்தைப் பார்த்துவிட்டு, தலையில் நீர் தெளித்துவிட்டு ஓடி வந்துவிட்டார்களாம். ஆனால், ‘நமாமி கங்கா’ திட்டத்தால் கங்கை சுத்தமாகக் காட்சியளித்தாள். முதல் நாள் புது ஊருக்குள் வந்ததால் எனக்கு இருந்த அயர்ச்சி, கங்கையில் காணாமல் போய்விட்டது.

அங்கிருந்து பாரதியார் வாழ்ந்த வீட்டையும், பாரதியார் சிலையையும் தரிசித்தேன். பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தை அடைந்தோம். அங்கேதான் காசி தமிழ் சங்கம மாநாடு. நாங்கள் சென்றிருந்தபோது தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், மூத்த பத்திரிகையாளர் மாலன், புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் ராஜா ஆகியோர் உரையாற்றினார்கள். நமது குழுவைச் சேர்ந்தவர்களும் மேடையை அலங்கரிக்கலாம் என்று அறிவித்ததுதான் தாமதம், நமது குழுவைச் சேர்ந்தவர்கள் கவிதை பாடித் தள்ளிவிட்டார்கள்.

காசி விஸ்வநாதர் கோயில் முன்பு கட்டுரையாளர்…

அந்த வளாகத்தைச் சுற்றிப் பார்த்தேன். செம்மொழி தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் போன்ற இலக்கியம் சார்ந்து மட்டுமல்ல, காஞ்சிபுரம் பட்டு போன்ற – காசியையும் தமிழகத்தையும் வர்த்தக ரீதியாக இணைத்த விஷயங்களையும் காட்சிப்படுத்தியிருந்தார்கள். அங்கிருந்த உள்ளூர் மாணவ, மாணவியர் காசி தமிழ் சங்கமத்தின் சின்னத்துக்கு முன்பு நின்று படமெடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அங்கிருந்து புகழ்பெற்ற பௌத்தத் தலமான சாரநாத் சென்றோம். அதுவும் வாராணசி தொகுதியில்தான் வருகிறது. உள்ளே பௌத்த விகாரங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு வெளியே வந்தோம். இரண்டு உள்ளூர்வாசிகள் எதிர்ப்பட்டார்கள். நம்மை அறிமுகம் செய்துகொண்டோம். அவர்களின் பெயர் ரவி துபே, ராஜேந்திர பாண்டா. “காசி தமிழ் சங்கமமா?” என்று அவர்கள் கேட்க, “ஆமாம்” என்றவன், “உங்கள் தொகுதி எம்.பி. எப்படி?” என்ற கேள்வியை முன்வைத்தேன். “அவரால் மட்டுமே இத்தனை வளர்ச்சிகள்” என்றார் ரவி துபே. (உண்மைதான் என்பதை காசி வீதிகளில் பார்த்தோம். அத்தனை சுத்தம்! வாராணசியில் நாம் சந்தித்தவர்களும் மோடி, யோகி மீது வைத்துள்ள பாசம் அளப்பரியது.)

அன்று இரவு பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற ஒயிலாட்டத்தை ரசித்தோம். மத்திய கலாசாரத் துறை செயலாளர் எங்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கினார்.

மறுநாள், பிரயாக்ராஜில் திரிவேணி சங்கமத்தில் நீராடிவிட்டு, அங்கிருந்த அக்‌ஷயவடம் கோயிலை தரிசித்தோம். சுவாமி நாராயண் மந்திரில் மதிய உணவு, சுதந்திரப் போராட்ட புரட்சி வீரர் சந்திரசேகர ஆசாத் நினைவுப் பூங்காவைப் பார்த்துவிட்டு அயோத்தி பயணமானோம்.

சொல்ல மறந்துவிட்டேனே, திரிவேணி சங்கமத்தில் ஒருவர் தமிழிலும் ஹிந்தியிலும் அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்தார். அவர் கோவிந்தராஜ். தஞ்சை மண்ணைச் சேர்ந்த அவர், கடந்த 15 ஆண்டுகளாக அலகாபாத் வாசி. தொடக்க விழாவில் பிரதமர் மோடி வெளியிட்ட திருக்குறள் 13 மொழிபெயர்ப்பு நூல்களில் ஒன்றான திருக்குறள்- ஹிந்தி மொழிபெயர்ப்பு நூலைத் தயாரித்தவர் இவரேதான்.

அயோத்தியை இரவு 10 மணிக்கு அடைந்தபோது ஆச்சரியம் காத்திருந்தது. அயோத்தி தொகுதி எம்.பி. லஜ்ஜன் சிங் தலைமையில் ஆட்டம் பாட்டத்துடன் உள்ளூர் மக்கள் வரவேற்க, நம்மவர்கள் இணைந்து ஆடத் துவங்கிவிட்டார்கள். காசியிலாவது தமிழர்கள் இருக்கிறார்கள்; ராமன் பிறந்த அயோத்தியில் முழுவதும் ஹிந்தி பேசும் மக்களே. அவர்கள் எந்தவித வெறுப்புக்கும் இடம் கொடுக்காமல் நம்மை வரவேற்றதை பூரிப்புடன் பார்த்தேன். ‘ச்சே… இவர்களைத்தானே நம்மூரில் பானிபூரி என்று கிண்டல் செய்கிறோம்” என்று நினைத்து, வெட்கமடைந்தேன். அயோத்தி ரயில் நிலையம் விமான நிலையம் போல இருக்கிறது. பிரமித்து விட்டேன்.

மறுநாள் அங்கிருந்த 10வது நூற்றாண்டைச் சேர்ந்த ஹனுமன் கோயிலை (இங்கு பிரசாதமாகத் தரப்பட்டும் இனிப்பின் சுவை அப்பப்பா!) தரிசித்துவிட்டு, அயோத்தி ராம ஜென்மபூமியை அடைந்தோம். எங்கள் குழுவில் இருந்த தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மாணவர் ஆறுமுகம் ராம நாமத்தின் மகிமை குறித்து விளக்க, ராம் லல்லாவை தரிசித்தோம். அயோத்தி ராமர் கோயில் கட்டுமானம் குறித்து எங்களுக்கு எல் அண்ட் டி பொறியாளர்கள் விளக்கினார்கள். சரயூ நதியைத் தரிசித்துவிட்டு, இரவு 8 மணிக்கு பனாரஸ் ரயில் நிலையத்தை அடைந்தோம்.

இத்தனை பயணங்களிலும் முழு பாதுகாப்புடன் காவலர்கள். வரும் வழியிலும் வரவேற்புகள் தொடர்ந்தன. குறிப்பாக சங்கம் பிறந்த நாகபுரியில் மாலை போட்டு வரவேற்று, நாகபுரி ஆரஞ்சு கிடைத்தபோது அகமகிழ்ந்து போனேன்.

நாங்கள் சென்ற வழியில் கணேஷ் பாண்டா என்பவர், “நாங்கள் ராமேஸ்வரம் வந்தால் இதே போன்ற வரவேற்பு கிடைக்குமா பையா?” என்று கேட்க, நான் சிரித்தபடியே, “இனிமேல் நிச்சயம் கிடைக்கும் சகோதரா. இது நம்ம நாடு” என்றேன்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s