உஜ்ஜியினி

-மகாகவி பாரதி

நூறாண்டுகளுக்கு முன்னமே, பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்த இதழாளர் மகாகவி பாரதி. ”பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி பேணி வளர்த்திடும் ஈசன்; மண்ணுக்குள்ளே சில மூடர் - நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார்...” என்று முரசுப் பாட்டில் முழங்கும் கவிஞர், பெண் விடுதலைக்காக பல கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதி இருக்கிறார். ஆணும் பெண்ணும் நிகர் என்று அன்றே அறிவுறுத்திய மகாகவியின் கதை இது...

“கண்ணே, நாம் சக்தி தர்மத்தைக் கைக்கொண்டோம். நமக்கு நீ சக்தி, நீ இறந்தால் நான் உடன்கட்டை ஏறுவேன்” என்று விக்கிரமாதித்த ராஜன் தன்னுடைய பிரியதனமாகிய ஸ்ரீமுகியினிடம் சொன்னான். அப்போது அவள் “உஜ்ஜயிநீபுரத்து மாகாளி அருளாலே உனக்கு ஆயிரம் வயதுண்டு. அப்படி ஆயிரத்தில் ஒன்று குறைய நானும் இருப்பேன்” என்றாள்.

“எனக்கு வயது தொளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது தான் போலும்;” என்று விக்கிரமாதித்தன் பெருமூச்சு விட்டான். அப்பொழுது ஸ்ரீமுகி சொல்லுகிறாள்:-

“காந்தா, நீ எனது கணவன். என் சொற்படி கேள். தர்மம் பெண்ணால் ஏற்படுத்தப்பட்டது. விரதம், தவம், பூஜை, ஆகாரம், வீடு, பள்ளிக்கூடம் அனைத்தும் ஏற்படுத்திக் கொடுத்தது பெண். தர்மம் பெண்ணால் உண்டானது. பெண் தாய். பெண்ணைத் தன்னில் பாதியென்று கருதாமல், தனக்கு அது பகுதிப்பட்டிருக்கவும் வேண்டும். ஆனால் தான் அதைத் தன் பகுதியாகத் தானாக, நேசிக்கவும் மாட்டேன் என்று ஆண் நெடுங்காலமாகச் சொல்லி வருகிறது. அதற்காகப் பெண் பழி வாங்குகிறது. ஆணைப் பழி வாங்கி அந்தத் துயரத்தில் தானும் மடிகிறது.

“சிவன் பாதி, சக்தி பாதி போலச் சரி பாதியாக எப்போது ஆண் பெண்ணை ஒப்புக்கொள்ளுகிறதோ, அப்போது ஆணுக்குப் பெரிய வலிமை சித்திக்கிறது. கலியுக முடிவில் இது முற்றிலும் பரிபூரணமாக நிகழும்” என்றாள்.

“அப்போது நமது மகாகாளி தேவிக்கு நாமமென்ன?” என்று விக்கிரமாதித்தன் கேட்டான்.

அப்போது ஸ்ரீமுகி சொல்லுகிறாள்:

“அப்போது மகாகாளி தேவிக்கு நித்ய கல்யாணீ உஜ்ஜயிநீ என்று பெயர்.”

“இதற்கு யாரெல்லாம் சாட்சி?” என்று விக்கிரமாதித்தன் கேட்டான்.

“இதற்குத் தேவர் சாட்சி; பஞ்ச பூதங்கள் சாட்சி; மனுஷ்ய, மிருக, பட்சி, கீடாதி ஜந்து கணங்கள் சாட்சி; இதற்கு அந்த மகா காளியே சாட்சி” என்று ஸ்ரீமுகி சொன்னாள். “சரி” என்று சொல்லி விக்கிரமாதித்தன் இருந்து விட்டான்.

மறுநாள் காலையில் இருவரும் ஆலயத்துக்குச் சென்றனர். அங்கே தேவியின் முடிமீது ‘நித்திய கல்யாணீ உஜ்ஜயிநீ’ என்று வயிர எழுத்துக்களால் எழுதியிருந்தது. அதனைக் கண்டு இருவரும் தொழுது மகிழ்ச்சியுற்றனர். மற்றை நான் விக்கிரமாதித்தன் தனது அரண்மனையில் ஒரு பொற்றூண் நாட்டி அதில், “பெண்ணைப் பேணுவோர் கண்ணைப் பேணுவார். பெண்ணுக்குக் கண் உண்டு. பெண் தாய். வந்தே மாதரம்” என்று எழுதி வைத்தான்.

மேற்படி கதை சாக்த சாத்திரத்திலே கூறப்பட்டது. அதை லோகோபகாரமாக வெளிப்படுத்துகிறேன்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s