மகாவித்துவான் சரித்திரம்- 1(5)

-உ.வே.சாமிநாதையர்

5. திருவாவடுதுறைக்கு வந்தது


சிவதீட்சையும் க்ஷணிகலிங்க பூஜையும் பெற்றது

இவர் தல தரிசனங்கள் முதலியவற்றில் மிக்க விருப்புடையவராக இருந்தனர். அன்றியும் சிவபெருமானை விதிப்படியே தினந்தோறும் பூசித்து வர வேண்டுமென்னும் அவா இவருக்கு உண்டாகி வளர்ந்து வந்தது. அதனால் இவர் சிவ தீட்சை செய்துகொள்ள விரும்பினார். அப்பொழுது திரிசிரபுரம் கீழைச் சிந்தாமணியில் இருந்த செட்டி பண்டாரத்தையா என்னும் அபிஷிக்தர் ஒருவர் இவருக்குத் தீட்சை செய்வித்து க்ஷணிகலிங்க பூஜையும் எழுந்தருளச் செய்வித்தார். அதுமுதல் இவர் பூஜையை அன்போடு நாடோறும் செய்து வருவாராயினர்.

கச்சியப்ப முனிவர் நூல்களைப் படித்தது

இவர் புத்தகங்களைத் தேடுகையில் திருவானைக்காக்கோயில் தர்மகர்த்தாவின் வீட்டில், திருவாவடுதுறை யாதீனத்து வித்துவானாகிய ஸ்ரீ கச்சியப்ப முனிவராற் செய்யப்பெற்ற நூல்களுள் ஒன்றாகிய திருவானைக்காப் புராணம் கிடைத்தது. அதை முறையே படித்து வருகையில் கடவுள் வாழ்த்தின் அழகும், நாட்டுச்சிறப்பு முதலிய காப்பிய உறுப்புக்களின் அமைதியும், அவற்றிற் பழைய நூற் பிரயோகங்களும், இலக்கண அமைதிகளும், தம்மால் அது வரையில் அறியப்படாத சைவ சாஸ்திரக் கருத்துக்களும், சைவ பரிபாஷைகளும், புதிய புதிய கற்பனைகளும் நிறைந்து சுவை ததும்பிக் கொண்டிருத்தலையறிந்து இன்புற்றுப் பன்முறை படித்து ஆராய்ச்சி செய்வாராயினார். அதைப் படிக்கப் படிக்க அதுவரையிற் படித்த பல நூல்களினும் வேறு தலபுராணங்களினும் அது மிக்க சுவையுடையதென்று அறிந்துகொண்டார். பின்னர், கச்சியப்ப முனிவர் செய்த வேறு நூல்கள் எவையென்று ஆராய்ந்து தேடிய பொழுது, விநாயக புராணத்தில் சில பகுதிகளும், பூவாளூர்ப் புராணமும், காஞ்சிப் புராணமும் கிடைத்தன. அந்த நூல்களையும் வாசித்து இன்புறுவாராயினர். இடையிடையே ஐயங்கள் சில நிகழ்ந்தன. அவற்றைத் தீர்ப்பவர்கள் அந்தப்பக்கத்தில் இல்லை. ஆதலின் தமக்கு உள்ள ஐயங்களைத் திருவாவடுதுறை யாதீனத்திற்குச் சென்று தீர்த்துக்கொள்ள வேண்டுமென்ற எண்ணமும், அவ் வாதீனத்தின் தொடர்பை எந்த வழியாகவேனும் பெற வேண்டுமென்னும் விருப்பமும் இவருக்கு உண்டாயின. அப்பொழுது இவருடைய பிராயம் இருபத்தொன்று.

பட்டீச்சுரம் வந்தது

அப்பால் திருவாவடுதுறை செல்ல நினைந்து அன்புள்ள மாணாக்கரொருவரை உடன் அழைத்துக்கொண்டு வழியிலுள்ள தலங்களைத் தரிசனம் செய்பவராய் அங்கங்கேயுள்ள தமிழபிமானிகளையும் தமிழ் வித்துவான்களையும் கண்டு அளவளாவி பட்டீச்சுரம் என்னும் தலத்திற்கு வந்தார். அங்கே, திருச்சத்திமுற்றப் புலவர் பரம்பரையினராகிய அப்பாப்பிள்ளை யென்பவருடைய வீட்டுக்குச் சென்றார். அவர் பட்டீச்சுரயமகவந்தாதி யென்னும் நூல் முதலியவற்றை இயற்றியவர். இவரும் அவரும் தாம் தாம் இயற்றிய செய்யுட்களை ஒருவர்க்கொருவர் கூறித் தம்முள் மகிழ்ந்தனர். இளமையில் இவருக்கிருந்த கல்விப்பெருமையை அறிந்து அவர் பாராட்டுவாராயினர். அவர் இவரை அவ்வூரிலிருந்த பெரிய செல்வவானும் உபகாரியுமாகிய நமச்சிவாயபிள்ளை யென்பவரிடம் அழைத்துச் சென்றார்.

அந்த நமச்சிவாய பிள்ளை அபிஷிக்த மரபினர். வருவோரைத் தக்கவண்ணம் உபசரித்துப் பொருளுதவி செய்து அனுப்பும் இயல்பினர். வந்தவர்களுக்கெல்லாம் அன்புடன் உணவு அளிப்பவர். தமிழறிஞர்பால் மிக்க அன்புடையவர். இவர்கள் இருவரும் ஒருவரை யொருவர் பாராதவர்களாக இருந்தாலும் கேள்வியினால் ஒருவரை யொருவர் பார்த்துப் பழகவேண்டுமென்ற விருப்பம் உடையவர்களாகவிருந்தார்கள். ஆதலால், நமச்சிவாய பிள்ளை தம் வீட்டுக்கு வந்த இவரை உபசரித்து அளவளாவிக் கொண்டிருந்தார்.

பசுபதிபண்டாரம் பரீட்சித்தது

அப்போது அங்கே *1 ஆவூர்ப் *2 பசுபதிபண்டார மென்பவர் வந்திருந்தனர். அவ்விடத்தில் இருந்தவர்களுட் சிலர் அவரைக் கொண்டு இவருடைய படிப்பை அளந்தறிய எண்ணி நமச்சிவாயா பிள்ளையிடம் தங்கள் கருத்தைக் குறிப்பித்தார்கள். அதனையறிந்த நமச்சிவாய பிள்ளையும் பிறரும் பசுபதி பண்டாரத்தைப் பார்த்து, “ஐயா! இவர்களைப் பரீட்சிக்க வேண்டுமானால் ஏதாவது கேட்டிடுக” என்றனர். இவருடைய அளவையறியாத அவர்,

*3 "நன்கொடிச் சிக்கை யருந்தரி சேய்க்குற்ற நாகவல்லி
மென்கொடிச் சிக்கை விடுக்கு மயிலை விமலர்வெற்பில்
என்கொடிச் சிக்கை புரிந்தாய் தினையுண் டிலையுடுக்கும்
புன்கொடிச் சிக்கைய நின்போல் பவர்க்கிது பொற்பல்லவே"

(மயிலை யந்தாதி, 56)

என்னும் செய்யுளைச் சொல்லி, “இப்பாட்டுக்குப் பொருள் சொல்லும்” என்றார். தம்மைப் பரீட்சிக்கச் செய்தவர்களிடத்தாவது கேள்வி கேட்டவரிடத்தாவது சிறிதேனும் மனவருத்தம் அடையாமல் இவர், அச் செய்யுளை இரண்டாமுறை மெல்லச் சொல்லும்படி செய்து அச்செய்யுள் அகத்திணைத் துறைகளுள் பாங்கி குலமுறை கிளத்தலென்பதற்கு இலக்கியமாக உள்ளதென்பதை முதலிற் கூறினார்; அப்பாற் பதங்களைப் பிரித்துக்காட்டிப் பொருளும் சொன்னதன்றி அச்செய்யுளைப்போன்ற வேறு செய்யுட்கள் சிலவற்றையும் மேற்கோளாக எடுத்துக்கூறி விளங்கச்செய்தனர்.

அப்போது உடனிருந்து கேட்டுக்கொண்டிருந்த வித்துவான் *4 தேவிபட்டணம் முத்துசாமி பிள்ளை, வெள்ளைவாரணம் பிள்ளை, அப்பாப்பிள்ளை முதலியோர் இவருடைய ஆராய்ச்சியையும் பல நூற்பயிற்சியையும் இன்றியமையாதவற்றை விளங்கும்படி சொல்லுதலையும் பெருமிதமின்மையையும் அடக்கத்தையும் பார்த்து, “இவருடைய காட்சி எம்போலியர்களுக்குக் கிடைத்தற்கரியது!” என்று வியந்து புகழ்ந்தனர். வினவிய பசுபதி பண்டாரம் விம்மிதமுற்றுச் சிறிதேனும் பெருமிதமின்றி இவரிடம் மரியாதையோடு ஒழுகுவாராயினர்.

இங்ஙனம் சில நாட்கள் அங்கே சென்றன. அவ்வூரில் அப்பொழுது இருந்தவர்களும் இச்செய்தியைக் கேட்ட பிறரும் அடிக்கடி வந்து அளவளாவி மகிழ்ந்து செல்வாராயினர்.

பழசைப் பதிற்றுப்பத்தந்தாதி

அப்போது அவ்வூரார் வேண்டுகோளின்படி பட்டீச்சுரம் ஸ்ரீ தேனுபுரேசர்மீது ஒரு பதிற்றுப்பத்தந்தாதி இவரால் இயற்றி அரங்கேற்றப்பெற்றது. அது *5 பழசைப் பதிற்றுப்பத்தந்தாதியென வழங்கும்.

இவர் அவ்வந்தாதியில் இடையிடையே தாம் படித்த திருவாசகம் முதலிய பிரபந்தங்கள், திருவிளையாடல் முதலிய காப்பியங்களென்பவற்றிலுள்ள சொல்லையும் பொருளையும் விரவ வைத்திருப்பதைக் காணலாம். கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி, அருணைக் கலம்பகம், கந்தரனுபூதி, சிவப்பிரகாச ஸ்வாமிகள் பிரபந்தங்கள் முதலியவற்றிலும், நளவெண்பா, பிரபுலிங்க லீலை, திருவிளையாடற் புராணம் முதலியவற்றிலுமுள்ள கருத்துக்கள் சில அந்நூலிற் காணப்படுகின்றன:

"பூவாய் நெடுங்கோட் டுறுபசுந்தேன் கைகான் முடங்கு பொறியிலிதன்
நாவா யொழுகிற்றென"
என்ற பிரபுலிங்கலீலையின் அடிகளை,

“........ கைகான் முடங்கு மறிவிலிவாய்த்
தண்டே னெடுங்கோட் டிருந்தொழுகுந்
தன்மை யெனக்கண் டுளங்களிப்புக் கொண்டேன்" (9)
என வேற்றுருவில் அமைத்திருப்பதும்,

"குடங்கை நீரும் பச்சிலையு மிடுவார்க் கிமையாக் குஞ்சரமும்
படங்கொள் பாயும் பூவணையுந் தருவாய் மதுரைப் பரமேட்டீ”
என்ற பரஞ்சோதி முனிவர் வாக்கை,

"நலம்புனை குடங்கை நீரு நறியபச் சிலையு மிட்டோர்க்
கலம்புபாற் கடலு மென்பூ வணையுநாற் கோட்டு மாவும்
இலங்கிட வளிப்பாய்" (42)
எனச் சொற்பொரு ளொப்புமை யிலங்க அமைத்திருப்பதும்,

"திணியான மனோசிலை மீதுனதாள்
அணியாரர விந்த மரும்புமதோ"
என்னுங் கந்தரனுபூதிச் செய்யுட் கருத்தை,

"தாவின் மெல்லடித் தாமரை வாழுமே,
தீவி னைச்சிறி யேனுட் சிலையினே" (65)

எனப் பெயர்த்து வைத்திருப்பதும்,

“காமனை முனிந்து நெடுஞ்சடை தரித்துக் கவின்றகல் லாடைமேற் புனைந்து
யாமெலாம் வழுத்துந் துறவியா யிருந்து மொருத்தித னிளமுலைச் சுவடு
தோமுறக் கொண்டார்"

என்ற காஞ்சிப் புராணச் செய்யுட் கருத்தின் பெரும்பாகத்தை,

“செய்யிருக்குங் கழைகுழைக்கு மைங்கணைக்கா ளையைவிழியாற் சினந்து சுட்டீர்
ஐயிருக்குஞ் சடைதரித்தீர் விற்கருஞ்செங் கற்றோய்த்த வாடை கொண்டீர்
மையிருக்கு மணிமிடற்றீர் துறவியர்சூழ் பழசைநகர் வாழ்வீர் நீவிர்
பொய்யிருக்கு மருங்குலாண் முலைச்சுவடு கொண்டதென்னை புகலு வீரே" (87)

என வைத்தும் இருத்தல் காண்க.

இராமனாற் சிவபெருமான் அத்தலத்திற் பூசிக்கப் பெற்றதும், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் முத்துப் பந்தர் பெற்றதும், அவருடைய கோலத்தைச் சிவபெருமான் காணுதற்பொருட்டு அவர் கட்டளையின்படி நந்திதேவர் விலகியதுமாகிய அத் தலவரலாறுகளை இடைப்பெய்து பாடியுள்ள செய்யுட்கள் சில அவ்வந்தாதியில் உண்டு.

*6 "என்னிது விடையு நீவீற் றிருந்தருள் பொருப்பும் வெள்ளி
மன்னிய கலையும் வில்லு மாதங்க மதிண்மூன் றெய்யப்
பொன்னிற வாளி கொண்ட புராதனா பழசை வாணா
சென்னியி லிரந்துண் பாய்நன் செய்கைநின் செய்கை தானே” (45)

என்று சிவபெருமானை வினாவுதல் போன்ற செய்யுட்கள் சில அந்நூலின்கண் நயம்பெற விளங்குகின்றன.

"........................ கடையே னாகித் திரிவேனைத்
தெள்ளு தமிழ்நற் றொடைப் பாடல்
செய்து பணியப் பணித்தாண்டான்" (5)

எனவும்,

"............ அலைவேனைக்
கருப்பை நீக்கித்தன் றாள்களிற் செந்தமிழ்க்
கண்ணிசூட் டிடச் செய்தான் " (13)

எனவும்,

"..............யான்றன்
மணங்கமழ் மலர்த்தாள் பாடி வழிபட வருளி னானே"

எனவும் காணப்படும் பகுதிகள் இவர் சிவபெருமானை பாமாலைகள் புனைந்து வழிபடும் பேரார்வம் பூண்டிருந்தனரென்பதும், அதற்கேற்ற செவ்விவாய்த்துச் செய்யுளியற்றியதால் இவருள்ளத்தே இன்பம் ஊறிப்பெருகியதென்பதும் புலனாகின்றன.

"மூவாதானை மூத்தானை" (8)
"ஆனமருங் கொடிவலத்தா னழகமருங் கொடியிடத்தான்" (34)

என்னும் முரண்களும்,

"............ கூறானை நீறானைக் கொன்றை வேய்ந்த
பொன்றிகழ்செஞ் சடையானை விடையானை" (90)

என்னும் வழியெதுகையும் அந்நூலிற் காணப்படும் சில நயங்களாம்.

திருவாவடுதுறையை அடைந்தது

பழசைப் பதிற்றுப்பத்தந்தாதியை அரங்கேற்றிய பின்னர் இப் புலவர் கோமான் தாம் திருவாவடுதுறைக்குச் செல்லவேண்டுமென்று வந்ததை அவ்வூராரிடம் கூறி விடை பெற்றுக்கொண்டார். அவர்கள், “நீங்கள் அடிக்கடி இவ்வூருக்கு வந்து எங்களை உவப்பிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்கள்; நமச்சிவாய பிள்ளை, “இந்த வீட்டினை உங்கள் சொந்த இடமாகவே எண்ணி அடிக்கடி வந்து எங்களை மகிழ்விக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டனர். அப்படியே செய்வதாக அவர்களுக்கு வாக்களித்து விட்டுப் புறப்பட்டுத் திருவலஞ்சுழி, ஸ்வாமிமலை, கும்பகோணம், திருவிடைமருதூர் முதலிய தலங்களையடைந்து ஸ்வாமி தரிசனம் செய்து கொண்டு அங்கங்கேயுள்ளவர்களாற் பாராட்டப்பெற்றுத் திருவாவடுதுறையை அடைந்தார்; தக்கவர்களுடைய உதவியைப் பெற்று அங்குள்ள மடத்துக்குச் சென்றார்.

அந்த மடம் ஸ்ரீ நமச்சிவாயமூர்த்தி காலத்தில் ஸ்தாபிக்கப் பெற்றது. அங்கே சென்றவுடன் அங்குள்ள காட்சிகளைக் கண்டு இவர் மிக்க வியப்பையும் மனமகிழ்ச்சியையும் அடைந்தார். சிவ வேடமும் தவவேடமும் உடைய பல துறவிகள் காஷாய உடை அணிந்தவர்களாகித் தூய்மையே உருவெடுத்தாற் போன்ற தோற்றப் பொலிவுடன் அங்கே நிறைந்திருப்பதையும், அடிக்கடி பல ஊர்களிலிருந்து அடியார்களும் பிரபுக்களும் வித்துவான்களும் வந்து வந்து சென்று கொண்டிருப்பதையும் கண்டார். வித்துவான்கள் தங்கள் தங்கள் ஆற்றலையும் தாங்கள் பெற்ற பரிசுகளையும் கூறி அங்கங்கேயிருந்து மகிழ்ந்து கொண்டிருத்தலையும் கவனித்தார். மலர்மாலைகளும் சிவார்ச்சனைக்குரிய பத்திர புஷ்பங்களும் பழங்களும் உரிய இடங்களில் நிறைந்திருத்தலை நோக்கினார். அங்கங்கே பல தொண்டுகளைச் செய்பவர்கள் தங்கள் கடமைகளைத் திருத்தமாகச் செய்துகொண்ருடித்தலைப் பார்த்தார். இவற்றையெல்லாம் பார்த்த இவர், “இத்தகைய காட்சியை இதுவரையில் நாம் கண்டிலோமே. எங்கே பார்த்தாலும் சிவமணமும் தமிழ் மணமும் உள்ள இந்த இடத்தைப்போன்ற வேறு ஓர் இடம் உலகத்தில் இருக்குமோ! ஸ்ரீ சிவஞான முனிவர், ஸ்ரீ கச்சியப்ப முனிவர் முதலியவர்கள் இத்தகைய இடத்தில் இருக்கப்பெற்றதனால்தானே சுவை மிகுந்த நூல்களை இயற்றினார்கள்” என்று எண்ணி விம்மிதமுற்று நின்றார். பின்னும் அங்குள்ள பல காட்சிகளையும் தனித்தனியே கண்டு மகிழ்ந்தார்.

வேளூர் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் இயல்பு

அப்பொழுது, நமச்சிவாய மூர்த்திக்குப்பின் 14-ஆம் பட்டத்தில் வேளூர் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரென்பவர் ஆதீனகர்த்தராக வீற்றிருந்தார். அவர் வடமொழி, தென்மொழி நூல்களிலும் சிவாகமங்களிலும் மெய்கண்ட சாஸ்திரம், பண்டார சாஸ்திரம், சித்த நூல்கள் முதலியவற்றிலும் பயிற்சி மிக்கவர்; பரம்பரையே பாடங்கேட்டவர்; பாடஞ் சொல்லுதலில் மிக்க ஆற்றலுடையவர்; பிரசங்க சக்தி வாய்ந்தவர்; வடமொழி வித்துவான்கள் தென்மொழி வாணர் பலருடைய இடையே இருந்து தினந்தோறும் அவர்களுடன் சல்லாபம் செய்து கொண்டு மகிழ்ச்சியோடு காலங் கழிப்பவர். அவர் அப்பொழுதப்பொழுது சமயோசிதமாகப் பேசிவந்த வார்த்தைகளும், சிலேடையான மொழிகளும், வாக்கியங்களும் இன்றும் அங்கங்கே பலரால் மிகவும் பாராட்டி வழங்கப்படுகின்றன. அம்மடத்தில் இப்பொழுது பலவகையாக எழுதப்படும் திருமுக ஸம்பிரதாயங்களும், கடித வக்கணைகளும், உள்ள சட்ட திட்டங்களும் அவர் புதுப்பித்தனவேயென்பர். தமக்குப் பட்டமாவதற்கு முந்திய வருஷத்தில் ஸ்ரீ கச்சியப்ப முனிவரால் நன்கு படித்து வரும்படி செவியறிவுறுத்தப் பெற்றவரென்று கேள்வி.

ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரைத் தரிசித்தது

அவரைத் தரிசிக்கவேண்டுமென்னும் பேரவா பிள்ளையவர்களுக்கு உண்டாயிற்று. தாம் தரிசித்தற்கு வேணவாவுற்றிருத்தலை மெல்ல அங்கேயிருந்த தக்காரொருவரிடம் தெரிவித்துக் கொண்டார். அவர் தலைவருடைய சமயமறிந்து சொல்லி அனுமதி பெற்று வந்து அழைப்ப, இவர் கையுறைகளுடன் சென்று அவரை ஸாஷ்டாங்கமாக வணங்கித் திருநீறு பெற்றுத் தாம் அவர் விஷயமாக இயற்றிக்கொண்டு வந்த சில செய்யுட்களைக் கண்களில் நீர்வார நாக்குழற விண்ணப்பித்துக் கொண்டார். அச்செய்யுட்களை இவர் சொல்லுகையில் அவற்றினது இனிய கருத்தையறிந்தும் இவருடைய பயபக்தியைக் கண்டும் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் இவர் சிறந்த கல்விமானென்பதை உடனே தெரிந்து கொண்டார்; மிக்க அன்போடு இவருடைய வரலாற்றை விசாரித்தார். இவர் சுருக்கமான மொழிகளால் பணிவுடன் மெல்ல அதனைக் கூறினார். பின் தாம் படித்த நூல்களையும் ஸ்ரீ கச்சியப்ப முனிவருடைய நூல்களில் தமக்கு உள்ள ஈடுபாட்டையும் தெரிவித்துக்கொண்டனர். தேசிகர் இவரோடு அன்புடன் பேசி ஆதரிக்க இவர் சிலதினம் அங்கேயிருந்து வருவாராயினர்.

அப்பொழுது அங்கே ஆதீன வித்துவான்களாகக் *7 கந்தசாமிக் கவிராயரென்பவரும் *8 சரவண ஓதுவாரென்பவரும் வேறு சிலரும் இருந்தார்கள். தமிழிற் சைவ- வைணவ சமயச்சார்பான கருவி நூல் படிப்பவர்களும் கந்த புராணம், பெரிய புராணம், கம்ப ராமாயணம் முதலிய நூல்கள், திருமுறை முதலியவைகள், ஸ்தல புராணங்கள், சைவ சாஸ்திரங்கள் முதலியவற்றைப் படிப்பவர்களும் அங்கே உண்டு. மடத்தில் உணவிற்குரிய பண்டங்களைப் பெற்றுத் திருவாலங்காடு, திருக்கோடிகா, பாஸ்கரராசபுரம், குற்றாலம் முதலிய ஊர்களிலுள்ள வடமொழி வித்துவான்களிடம் சென்று படித்துவந்த அந்தண மாணவர்களும் பலர் இருந்தனர். உக்கிராணம், களஞ்சியம், பந்திக்கட்டு, பண்ணை முதலிய எல்லா இடங்களின் விசாரணை வேலைகளில் தம்பிரான்களே அதிகாரிகளாக இருந்து பக்தி சிரத்தையோடும் நம்பிக்கையோடும் தங்களுக்குக் கிடைத்த பணியையே செய்து கொண்டிருந்தார்கள்; அவர்களுட் பலர் படித்தவர்கள். அதனால் தலைவர் தம்முடைய நேரத்திற் பெரும்பான்மையான பாகத்தைப் படிப்பு சம்பந்தமாகவே செலுத்தி இன்புற்று வந்தார்.

இவர் ஆதீன கர்த்தரைத் தரிசித்தற்குக் காலை மாலைகளில் போகுங்கால் அருமை பாராட்டி இவருடைய கல்வியின் அளவை ஆராய்வாராய்ச் சிலசில பாடல்களைச் சொல்லி, “இவற்றிற்குப் பொருள் சொல்லும்” என்று அவர் கேட்பதுண்டு. இவர் அச் செய்யுட்களை மனத்திற்கொண்டு ஒருமுறை இருமுறை மும்முறை ஆலோசித்து அவசரப்படாமல் விடை சொல்லுவர். வினாவுங் காலத்துப் பொருள் புலப்படாதபடி தேசிகர் செய்யுளைக் கூறுவர்; இப் புலவர்பிரான் மயக்கமடையாமல் அச்செய்யுளை நன்றாக ஆராய்ந்து செவ்வனே பொருள் கூறுவர். அவற்றுள் இரண்டு செய்யுட்கள் வருமாறு:-

*9 1. "இந்தவசம் அந்தவசந் தன்மலைதற் கேதுசெயும்
நொந்தவச முற்றாட்கே நோக்குங்காற் - பைந்தொடியாய்
ஆண்டகுருத் தென்றுறைசை யம்பலவா ணன்புயத்திற்
பூண்டநிறச் செங்கழுநீர்ப் பூ."

2. "இத்தை யனையவுரு வில்லான் விடுமலரே
வைத்தகரை யோதடுக்க மாட்டாதே - நித்தநித்தம்
அங்கமுகங் காத்துறைசை யம்பலவா ணன்புயத்திற்
செங்கழுநீர்த் தாரனையே தேடு."

தெரிந்தவற்றை மட்டும் விளங்கச் சொல்லிவிட்டுத் தெரியாதவற்றிற்குப் பொருள் கேட்டுத் தெரிந்துகொள்வர். இவருக்கு இருந்த சந்தேகங்களிற் பல அக்காலத்தில் அவரால் தீர்ந்தன. விநாயகபுராணத்தின் பாயிரத்தில் உள்ள,

"மரந்துளைத்த கணையானுஞ் சோவெறிந்த திறலானு மதிக்குந் தோறும்
சிரந்துளக்க வலைகடலுஞ் சேணிகந்த பெருவரையுந் திறத்திற் குன்றக்
கரந்துளக்குங் குறுமுனிக்குங் கருத்தின்மயல் பூட்டியகை தவஞ்சால் வெற்பின்
உரந்துளைத்த சேயிலைவேல் வலனுயர்த்த விளையவனை யுளத்துள் வைப்பாம்”

என்னும் செய்யுளிலுள்ள, ‘கரந்துளக்குங் குறுமுனிக்கு’ என்னும் பகுதிக்கு இவருக்கு நெடுநாளாகப் பொருள் விளங்காமலிருந்தது. பலரிடத்தும் இதைப்பற்றி வினவியதுண்டு. அவர்கள் சொல்லிய பொருள்களில் ஒன்றேனும் இவருடைய புத்திக்குப் பொருந்தவேயில்லை. அச்செய்யுளை ஒருபொழுது தேசிகர்பால் இவர் விண்ணப்பம் செய்தனர். உடனே அவர் உள்ளங்கையையேந்தி மறித்துக் காட்டிக் கடலை உண்டது கையை ஏந்தினமையாலென்றும் விந்தத்தை அழுத்தியது கையைக் கவித்தமையாலென்றும் பொருள் கூறவே, உயர்ந்தோர்களிடத்துச் சில பொழுதேனும் பழகுதலாலுண்டாகும் பெரும்பயனை இவர் அறிந்து அவரிடம் ஈடுபட்டு, “இந்தப் பெரியவர்களை இதுகாறுந் தரிசியாமல் பலரிடத்தும் அலைந்தலைந்து வீணே காலங்கழித்து விட்டோமே” என்று மனம் வருந்தினர். ‘கரந்துளக்கும்’ என்பதற்கு அவர் பொருள் கூறிய அருமைப்பாட்டையும் பிற நிகழ்ச்சிகளையும் இவர் அடிக்கடி சொல்வதுண்டு. இவ்வாறு காலை மாலைகளிற் சமயம் பார்த்துச் சென்று அவர்பாற் கேட்டுக் கேட்டு இவர் தீர்த்துக்கொண்ட ஐயங்கள் பல. தமக்கு நெடுநாளாகப் பொருள் விளங்காதிருந்த ஒலியல், கழுவாய், சைலாதி, வரூதினி, வாதராயணரென்னும் சொற்களுக்கு முறையே ஈயோட்டி என்னும் விருது, பிராயச்சித்தம், திருநந்திதேவர், சேனை, வியாசர் என்று பொருள் தெரிந்து கொண்டது அவரிடத்தே தான் என்பர். முல்லையந்தாதியிலுள்ள,

*10 "கட்டோம் புதலெனக் காமாதி யாறுங் கரிசறுத்தோம்
உட்டோம் புதவு திறந்தின்ப வீடுபுக் குச்சரித்தோம்
சிட்டோம் புதல்விமண் ணோருந்தி கஞ்சந் தெளிவின்முன்பின்
விட்டோம் புதலுறு நள்ளெழுத் தான்முல்லை மேவப்பெற்றே"
என்னும் செய்யுளிலுள்ள நடுவெழுத்தலங்காரப் பொருளையும்,

*11 "பொருதவி சாகரஞ் சத்தியுங் கும்பனும் பொற்பழிக்க
விருதவி சாகரந் தானும் வருத்து மெய் யன்பருள்ளம்
ஒருதவி சாகரந் தென்முல்லை யாவுடை யாரருளார்
இருதவி சாகர நெஞ்சேயல் லாற்செய லியாதுனக்கே",

*12 “வரையேற விட்டமுதஞ் சேந்தனிட வருந்தினைவல் லினமென் றாலும்
உரையேற விட்டமுத லாகுமோ வெனைச்சித்தென் றுரைத்தா லென்னாம்
நரையேற விட்டமுத னாளவனாக் கொண்டுவட புலிசை மேவும்
கரையேற விட்டமுதல் வாவுனையன் றியுமெனக்கோர் கதியுண் டாமோ"

என்பன போன்ற செய்யுட்களின் பொருளைத் தெரிந்துகொண்டதும் அவரிடத்தேதான். அவருடைய தரிசனத்தின் பின்புதான் தமிழின் பரப்பும் பெருமையும் இவருக்கு விளங்கின; தமிழில் பல நூல்களும் அவற்றில் ஆழ்ந்த கருத்துக்கள் அமைந்த பகுதிகளுமுள்ளன வென்றறிந்தனர். ‘இந்த மடத்தின் சம்பந்தத்தைப் பெற்றது பெரும் பாக்கியம்’ என்றும், ‘இத்தொடர்பை எப்பொழுதும் பெற்றுய்யவேண்டும்’ என்றும் இவர் எண்ணினார்.

திரிசிரபுரம் மீண்டது

அப்பால் அடிக்கடி வந்து தரிசிப்பதாக விண்ணப்பித்துப் பிரியா விடை பெற்றுத் திரிசிரபுரம் வந்து சேர்ந்தார். பின்னர், இடையிடையே திருவாவடுதுறை சென்று ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரைத் தரிசித்து வேண்டியவற்றைத் தெரிந்துகொண்டு வருவதுண்டு.

—————————

அடிக்குறிப்பு மேற்கோள்கள்:

1.  ஆவூர்: பட்டீச்சுரத்தின் தென்பாலுள்ளதும் தேவாரம் பெற்றதுமான ஒரு சிவஸ்தலம்.
2.  அவர் தேவாரம் முதலியவற்றிற் பயிற்சியுற்று அவற்றைப் பண்ணோடு ஓதுபவர்; பெரியபுராணம், திருவிளையாடல் முதலிய சைவ நூல்களிலும் பிரபந்தங்களிலும் முறையான பயிற்சியும் பிரசங்கம் செய்யும் வன்மையும் பெற்றவர்; சுற்றுப் பக்கங்களில் உள்ளவர்களால் தமிழ் வித்துவானென்று மதிக்கப்பெற்றவர்.
3.  நன்கு ஒடிச்சு இக்கை அருந்து அரி; இக்கு – கரும்பு ; அரி – குரங்கு. நாகவல்லி மென்கொடி – வெற்றிலைக்கொடி. மென்கொடியினது பிணக்கை. என் கொடு இச்சிக்கை புரிந்தாய்; இச்சிக்கை – விரும்புதல். என்கொடு – என்ன விசேடத்தை யறிந்து. புன்கொடிச்சிக்கு இச்சிக்கை புரிந்தாய்; கொடிச்சிக்கு – கொடிச்சி யின்பால்.
4.  அவர் பட்டீச்சுரம் நமச்சிவாய பிள்ளையால் ஆதரிக்கப்பட்ட வித்துவான்களுள் ஒருவர்; சிறந்த தமிழ்க்கவிஞரென்று புகழ்பெற்றவர்; சிவஸ்தலங்கடோறும் சென்று சென்று ஸ்வாமி தரிசனம் செய்து ஒவ்வொரு நேரிசை வெண்பா இயற்றிக் காலங்கழித்தவர். அவ்வெண்பாக்கள் தலத்தின் பெயரையாவது ஸ்வாமியின் பெயரையாவது திரிபிலேனும் யமகத்திலேனும் எதுகையிற் பெற்றுப் பொருட் சிறப்புடையனவாய் விளங்கும். அவர் அங்ஙனம் செய்த வெண்பாக்கள் நூற்றுக் கணக்கானவையென்பர். அவற்றுட் சில பாடல்களே கிடைக்கின்றன.
5.  பட்டீச்சுரம் முதலிய பல தலங்களைத் தனக்குள் அடக்கிக்கொண்டிருக்கிற பழையாறு என்னும் பழைய நகரத்தின் மரூஉவாகிய பழசை யென்னும் பெயர் பட்டீச்சுரத்திற்குத் தலைமை பற்றி வழங்கும்.
6.  வெள்ளி – வெள்ளை நிறமுடையது, வெள்ளியென்னும் உலோகம். மாதங்கம் – யானைத்தோல், பெரிய தங்கம் (மேரு.) பொன்நிறவாளி – திருமகளை மார்பிலே உடைய திருமாலாகிய அம்பு, நிறத்தையுடைய பொன்னாலாகிய அம்பு.
7.  இவர் உடையார்பாளையத்தில் ஜமீந்தாராக இருந்த கச்சிக் கல்யாணரங்கதுரையென்பவர் மீது ஒரு கோவை பாடிப் பரிசும் சர்வ மானியமாகப் பத்துக்காணி நிலமும் பெற்றவர்.
8.  இவர் பிற்காலத்தில் கோயம்புத்தூரையடைந்து அங்கே உள்ள பிரபுக்களாலும் வித்துவான்களாலும் ஆதரிக்கப்பெற்றுப் பலருக்குப் பாடஞ் சொல்லிப் புகழ் பெற்றவர்.
9.  குறிப்பு: (1) இந்த அசம் – இந்த ஆடு. வசந்தன் – மன்மதன். பைந்தொடி: விளி. செங்கழுநீர்ப் பூவை ஆய்வாயாக; ஆய்தல், ஈண்டுத்தேடிக் கொணர்தல்.
(2) இத் தையல் நைய – இப்பெண் மெலியும்படி. மலர் ஏவை – மலர்ப் பாணத்தை, தகர் – ஆடு. அம்பலவாணன்: இவர் இந்த ஆதீனத்தில் 13 – ஆம் பட்டத்தில் தலைவராக வீற்றிருந்தவர். அன்னையே செங்கழு நீர்த் தாரைத் தேடு.
இச்செய்யுட்கள் இரண்டும் வெறி விலக்கு. இவை தொட்டிக் கலைச் சுப்பிரமணிய முனிவர் வாக்கு.
10.  குறிப்பு: காமாதி ஆறும் கட்டோம்; கட்டோம் – களைந்தோம். உள் தோம் கரிசு அறுத்தோம் – அகக் குற்றமாகிய ஆணவ மலத்தை அறுத்தோம். புதவு – கதவு. சிட் ஓம் உச்சரித்தோம் – ஞானமயமாயுள்ள பிரணவத்தை உச்சரித்தோம். புதல்வி, மண், ஓர் உந்தி (ஆறு), கஞ்சம், தெளிவு என்பவற்றின் முதலெழுத்தையும் ஈற்றெழுத்தையும் விட்டுப் பாதுகாக்கப்பெற்ற நடுவெழுத்துக்களால்; இது நடுவெழுத்தலங்காரம். இதனாற் குறிப்பிக்கப்பட்ட தொடர் மாசிலாமணி என்பது; குமாரி (புதல்வி), காசினி (மண்), பாலாறு (ஓர் உந்தி), தாமரை (கஞ்சம்), துணிவு (தெளிவு) என்னும் ஐந்து சொற்களின் நடுவெழுத்துக்கள் ஐந்தும் சேர்ந்தால் மாசிலாமணியென்றாதல் காண்க. மாசிலாமணியென்பது வடதிருமுல்லைவாயிற் சிவபெருமான் திருநாமம். முல்லை – திரு முல்லைவாயில். முல்லை மேவப்பெற்று மாசிலாமணியால் கட்டோம், அறுத்தோம், உச்சரித்தோம் என இயைக்க. இது திருமுல்லைவாயி லந்தாதியிலுள்ள 50 – ஆம் பாட்டு.
11.  பொருத விசாகர் அம் சத்தியும் கும்பனும் பொற்பு அழிக்க; விசாகர் – முருகக்கடவுளுடைய; சத்தி – வேல்; கும்பன் – அகத்திய முனிவர். விருது அவி சாகரம்தானும்; விருது – வெற்றி. சாகரம் வருத்தும் – அன்பர் உள்ளத்தை ஒரு தவிசாகவும் தென்முல்லையை ஆகரமாகவும் உடையவர்; ஆகரம் – இருப்பிடம். இரு, தவி, சா, கர – இருந்தால்தான் இரு, தவித்தால்தான் தவி, செத்தால்தான் சா, ஒளித்தால்தான் ஒளி; இங்ஙனம் செய்வதன்றி வேறு செயல் உனக்கு என்ன இருக்கின்றது! அவர் அருளாமையின் நீ என்ன நிலை அடைந்தால்தானென்னவென்ற படி. இஃது அவ்வந்தாதியிலுள்ள 33 – ஆம் பாட்டு. இது தலைவியின் கூற்று.
12.  வரையேல் – என்னை நீக்காதே. சேந்தன் தவிட்டமுதம் இட அருந்தினை; தவிட்டமுதம் – தவிட்டாலாக்கிய களியை. உரையே – சொல்வாயாக. ‘ற’ இ ‘ட’ வல்லினம் என்றாலும் முதலாகுமோ – றகரமும் இந்த டகரமும் வல்லினமாக இருந்தாலும் மொழிக்கு முதலாகுமோ; ஆகா. உன்னைப்போல எனக்குச் சித்தென்னும் பெயர் வழங்கினும் நான் முதன்மை உறுவேனா; அடிமைத் தன்மையையே உடையேன் என்றபடி. அவிட்டம் முதல் நாளவனை நரையேறாகக்கொண்டு; அவிட்ட நட்சத்திரத்திற்கு முதல் நாளாகிய திருவோணத்திற்குரிய திருமாலை இடப வாகனமாகக் கொண்டு. வடபுலிசை – திருப்பாதிரிப்புலியூர். கரையேறவிட்டவரென்பது அந்தத் தலத்திலெழுந்தருளியுள்ள இறைவன் திருநாமம்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s