-மகாத்மா காந்தி

மூன்றாம் பாகம்
6. தொண்டில் ஆர்வம்
என்னுடைய வக்கீல் தொழில் நன்றாகவே நடந்து வந்தது. ஆனால், அதைக் கொண்டு மாத்திரம் நான் திருப்தி அடைந்து விடவில்லை. மேற்கொண்டும் என்னுடைய வாழ்க்கையை எளிமை ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதும், என்னுடைய சகோதர மக்களுக்கு உருப்படியான தொண்டு எதையாவது செய்ய வேண்டும் என்பதும் என் மனத்தில் இடையறாத ஆர்வமாக இருந்து வந்தன. அந்தச் சமயத்தில் ஒரு குஷ்டரோகி என் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். ஒரு வேளைச் சாப்பாட்டோடு அவரை அனுப்பிவிட எனக்கு மனம் இல்லை. எனவே, என் வீட்டிலேயே அவரை இருக்கச் சொல்லி அவருடைய புண்களுக்குக் கட்டுக் கட்டினேன். அவருக்கு வேண்டிய மற்ற சௌகரியங்களையும் கவனித்து வந்தேன். ஆனால், நான் நிரந்தரமாக இப்படிச் செய்துகொண்டு போக முடியாது. இது என்னால் ஆகாது. எப்பொழுதுமே அவரை என்னுடன் வைத்துக் கொள்ளுவதற்கான உறுதியும் என்னிடம் இல்லை. ஆகவே, ஒப்பந்தத் தொழிலாளருக்காக இருந்த அரசாங்க வைத்திய சாலைக்கு அவரை அனுப்பினேன்.
ஆனால், என் மனம் மாத்திரம் அமைதி இல்லாமலேயே இருந்தது. நிரந்தரமான ஜீவகாருண்யத் தொண்டு செய்ய வேண்டும் என்று என் மனம் அவாவுற்றது. செயின்ட் எயிடானின் மிஷனுக்கு டாக்டர் பூத் தலைவராக இருந்தார். அவர் அன்பு நிறைந்த உள்ளம் படைத்தவர். தம்மிடம் வரும் நோயாளிகளுக்கு இலவசமாக அவர் வைத்தியம் செய்து வந்தார். பார்ஸி ருஸ்தம்ஜியின் தருமத்தைக் கொண்டு, டாக்டர் பூத்தின் நிர்வாகத்தின் கீழ், ஒரு சிறு தரும வைத்திய சாலையை ஆரம்பிக்க முடிந்தது. அந்த வைத்திய சாலையில் நோயாளிகளுக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எனக்குப் பலமாக இருந்தது. மருந்து கலந்து கொடுக்கும் வேலை தினமும் இரண்டொரு மணி நேரத்திற்கு இருக்கும். அந்த அளவுக்கு என் காரியாலயத்தின் வேலையைக் குறைத்துக்கொண்டு, அங்கே ‘கம்பவுண்ட’ராக இருப்பது என்று தீர்மானித்தேன். என் வக்கீல் தொழில் சம்பந்தமான வேலை, பெரும்பாலும் என் ஆபீஸிலேயே கவனிக்க வேண்டிய வேலைதான். சாஸனப் பத்திரங்களை எழுதுவதும் மத்தியஸ்தம் செய்வதுமே இந்தத் தொழிலில் என் முக்கியமான அலுவல். மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் எனக்குச் சில வழக்குகள் இருக்கும். ஆனால், அவை பெரும்பாலும் அதிக விவாதத்திற்கு இடம் இல்லாதவைகளாக இருக்கும். என்னுடன் தென்னாப்பிரிக்காவுக்கு வந்து, அப்போது என்னோடேயே வசித்து வந்த ஸ்ரீ கான், நான் இல்லாத சமயத்தில் என் வழக்குகளைக் கவனித்துக் கொள்ளுவதாக கூறியிருந்தார். ஆகவே, அச் சிறு வைத்திய சாலையில் சேவை செய்வதற்கு எனக்கு அவகாசம் இருந்தது. அதாவது, காலையில் வைத்திய சாலைக்குப் போகவும் வரவும் உள்ள நேரத்தைச் சேர்த்து, தினம் இரண்டு மணி நேரம். இந்த ஊழியம் என் மனத்திற்குக் கொஞ்சம் சாந்தியை அளித்தது. வரும் நோயாளிகளின் நோயைக் குறித்து விசாரிப்பது, அந்த விவரங்களை டாக்டருக்குக் கூறுவது, மருந்துகளைக் கலந்து கொடுப்பது ஆகியவையே அந்த வேலை. அது துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்தியருடன், நான் நெருங்கிப் பழகும்படி செய்தது. அவர்களில் அநேகர் ஒப்பந்தத் தொழிலாளர்களான தமிழர், தெலுங்கர் அல்லது வட இந்தியர் ஆவர்.
போயர் யுத்தத்தின் போது நோயுற்றவர்களுக்கும் காயம் அடைந்தோருக்கும் பணிவிடை செய்வதற்கு, என் சேவையை அளிக்க நான் முன்வந்தபோது, இந்த அனுபவம் எனக்கு அதிக உதவியாக இருந்தது.
குழந்தைகளை எவ்விதம் வளர்ப்பது என்ற பிரச்சனை எப்பொழுதும் என் முன்பு இருந்து வந்தது. தென்னாப்பிரிக்காவில் எனக்கு இரு புதல்வர்கள் பிறந்தார்கள். அவர்களை வளர்ப்பது சம்பந்தமான பிரச்னையைத் தீர்க்க நான் வைத்தியசாலையில் செய்து வந்த தொண்டு பயனுள்ளதாயிற்று. என்னுடைய சுயேச்சை உணர்ச்சி, எனக்கு அடிக்கடி சோதனைகளைக் கொடுத்து வந்தது. என் மனைவியின் பிரசவ காலத்தில் சிறந்த வைத்திய உதவியை ஏற்பாடு செய்து கொள்ளுவது என்று நானும் என் மனைவியும் தீர்மானித்திருந்தோம். ஆனால், சமயத்தில் டாக்டரும் தாதியும் எங்களைக் கைவிட்டுவிட்டால் நாங்கள் என்ன செய்வது? அதோடு தாதி, இந்தியப் பெண்ணாகவும் இருக்க வேண்டும். பயிற்சி பெற்ற இந்தியத் தாதி கிடைப்பது இந்தியாவிலேயே கஷ்டம் என்றால் தென்னாப்பிரிக்காவில் எவ்வளவு கஷ்டம் என்பதைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. எனவே, பிரசவ சிகிச்சை சம்பந்தமாகத் தெரிந்திருக்க வேண்டியவைகளை யெல்லாம் நானே படித்துக் கொண்டேன். டாக்டர் திரிபுவனதாஸ் எழுதிய ‘தாய்க்குப் புத்திமதி’ என்ற நூலைப் படித்தேன். மற்ற இடங்களில் அங்கும் இங்குமாக நான் பெற்ற அனுபவங்களையும் வைத்துக்கொண்டு, அந்த நூலில் கூறப்பட்டிருந்த முறைகளை அனுசரித்து என் இரு குழந்தைகளையும் வளர்த்தேன். ஒவ்வொரு பிரசவ சமயத்திலும் குழந்தையைக் கவனிக்க ஒரு தாதியை அமர்த்துவோம். ஆனால், இரண்டு மாதங்களுக்கு மேல் அந்தத் தாதியை வைத்துக் கொள்ளுவதில்லை. தாதியை அமர்த்துவதும் என் மனைவியைக் கவனித்துக் கொள்ளுவதற்கே அன்றி, குழந்தைகளைப் பராமரிப்பதற்கு அன்று. அந்த வேலையை நானே பார்த்துக் கொண்டேன்.
கடைசிக் குழந்தையின் பிரசவந்தான் என்னை மிகவும் கடுமையான வேதனைக்கு உள்ளாக்கி விட்டது. திடீரென்று பிரசவ வேதனை ஏற்பட்டது. உடனே வைத்தியர் கிடைக்கவில்லை. மருத்துவச்சியை அழைத்து வரவும் கொஞ்ச நேரம் ஆகிவிட்டது. அவள் வந்திருந்தாலும் பிரசவத்திற்கு அவள் உதவி செய்திருக்க முடியாது. சுகப்பிரசவம் ஆகும்படி நானே கவனித்துக்கொள்ள வேண்டியதாயிற்று. டாக்டர் திரிபுவன தாஸின் நூலை நான் நன்றாகப் படித்து வைத்திருந்தது எனக்கு அதிக உதவியாக இருந்தது. எனக்குக் கொஞ்சமேனும் பயமே ஏற்படவில்லை.
குழந்தைகளைச் சரியானபடி வளர்க்க வேண்டுமானால், சிசுக்களைப் பேணும் முறை, பெற்றோருக்குத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம் என்று நான் நிச்சயமாகக் கருதுகிறேன். இது விஷயமாக நன்றாகப் படித்திருந்தது எவ்வளவு பயன் உள்ளதாக இருந்தது என்பதை ஒவ்வொரு கட்டத்திலும் நான் பார்த்திருக்கிறேன். இதைக் குறித்து நான் ஆராய்ந்து, அந்த அறிவைப் பயன்படுத்தியிராது போனால், என் குழந்தைகள் இன்று இருப்பதைப் போல் இவ்வளவு உடல் நலத்துடன் இருந்திருக்க மாட்டார்கள். குழந்தை, அதன் ஐந்து வயது வரையில் கற்றுக்கொள்ள வேண்டியது எதுவும் இல்லை என்ற ஒரு மூடநம்பிக்கை நமக்கு இருந்து வருகிறது. இதற்கு மாறாக உண்மை என்னவென்றால், ஒரு குழந்தை அதன் முதல் ஐந்து வயதிற்குள் கற்றுக் கொள்ளாததைப் பின்னால் எந்தக் காலத்திலும் கற்றுக்கொள்ளுவதே இல்லை. கருவில் இருக்கும் போதே ஒரு குழந்தையின் படிப்பு ஆரம்பம் ஆகிவிடுகிறது. கருத்தரிக்கும் போது, பெற்றோருக்கு இருக்கும் உடல், மன நிலைகளே குழந்தைக்கும் ஏற்பட்டு விடுகின்றன. கர்ப்பத்தில் இருக்கும்போது தாயின் மனநிலைகள், ஆசாபாசங்கள், தன்மைகள் ஆகியவைகளால் குழந்தை பாதிக்கப்படுகிறது. பின்னர், குழந்தை பிறந்ததும், பெற்றோர்களைப் போலவே எதையும் செய்ய அது கற்றுக்கொள்கிறது. அப்புறம், அதிக காலம் வரையில் குழந்தையின் வளர்ச்சி, பெற்றோரைப் பொறுத்ததாகவே இருக்கிறது.
இந்த உண்மைகளையெல்லாம் அறிந்துகொள்ளும் தம்பதிகள், தங்களுடைய காம இச்சையைத் தீர்த்துக் கொள்ளுவதற்காக உடற்கலப்பு வைத்துக்கொள்ளவே மாட்டார்கள். குழந்தைப் பேறு வேண்டும் என்று விரும்பும்போது மாத்திரமே கூடுவார்கள். உண்பதையும் உறங்குவதையும் போல் ஆண்- பெண் சேர்க்கையும் அவசியமான செயல்களில் ஒன்று என நம்புவது அறியாமையின் சிகரமே ஆகும் என்று நான் கருதுகிறேன். உலகம் நிலைத்திருப்பது, சந்ததி விருத்திச் செயலைப் பொறுத்திருக்கிறது. உலகமோ ஆண்டவனின் திருவிளையாட்டு ஸ்தலம்; அவனுடைய மகிமையின் பிரதிபிம்பம். எனவே, இந்த உலகத்தின் ஒழுங்கான வளர்ச்சிக்கு ஏற்ற வகையிலேயே சந்ததி விருத்திச் செயல் இருக்க வேண்டும். இதை உணருகிறவர்கள், எப்பாடுபட்டும் தங்கள் காம உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக் கொள்ளுவார்கள்; தங்கள் குழந்தைகளின் உடல் நலனுக்கும் மன நலனுக்கும் ஆன்ம நலனுக்கும் வேண்டிய அறிவைப் பெற்றுக் கொள்ளுவார்கள்; பெற்றுக்கொண்ட அறிவின் பயனைச் சந்ததிகளுக்கு அளிப்பார்கள்.
$$$
7. பிரம்மச்சரியம் – 1
இவ் வரலாற்றில், பிரம்மச்சரிய விரதத்தை மேற்கொள்ளுவதைப் பற்றி நான் தீவிரமாக நினைக்கத் தொடங்கிய கட்டத்திற்கு இப்பொழுது நாம் வந்திருக்கிறோம். எனக்கு மணமான காலத்தில் இருந்தே நான் ஏக பத்தினி விரதத்தில் உறுதிகொண்டிருந்தேன். என் மனைவியிடம் உண்மையோடு நடந்துகொள்ளுவது என்பது, சத்தியத்தினிடம் நான் கொண்டிருந்த பக்தியின் ஒரு பகுதியாயிற்று. ஆனால், என் மனைவி சம்பந்தமாகக்கூட பிரம்மச்சரியத்தை அனுசரிக்க வேண்டியது முக்கியம் என்பதைத் தென்னாப்பிரிக்காவிலேயே நான் உணர ஆரம்பித்தேன். இந்த வழியில் என் எண்ணத்தைத் திருப்பியது எந்தச் சந்தர்ப்பம் அல்லது நூல் என்பதை என்னால் திட்டமாகக் கூற முடியாது. ராய்ச்சந்திர பாயைக் குறித்து நான் முன்பே எழுதியிருக்கிறேன். அவருடைய நட்பே இதில் முக்கியமான அம்சமாக இருந்திருக்கக் கூடும் என்பது என் ஞாபகம். ஸ்ரீமதி கிளாட்ஸ்டன், தமது கணவரிடம் வைத்திருந்த அபார பக்தியைக் குறித்துப் புகழ்ந்து ஒரு சமயம் ராய்ச்சந்திர பாயிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். ஸ்ரீ கிளாட்ஸ்டன் பார்லிமெண்டுக் கூட்டத்தில் இருக்கும்போது கூட, அவருக்குத் தம் கையினாலேயே தேயிலைப் பானம் தயாரித்துக் கொடுக்க வேண்டும் என்று அவர் மனைவி வற்புறுத்தி வந்தார் என்று நான் எங்கோ படித்திருந்தேன். புகழ்பெற்ற இத் தம்பதிகளின் ஒழுங்குபடுத்தப்பட்ட வாழ்க்கையில் இது ஒரு நியதியாக ஆகிவிட்டதாம். இதைக் கவிஞரிடம் நான் கூறியதோடு, சாதாரணமாக சதிபதிகளின் காதல் வாழ்வைப் பற்றியும் புகழ்ந்து பேசினேன். அதன் பேரில் ராய்ச்சந்திர பாய் என்னைப் பின்வருமாறு கேட்டார்: ‘ஸ்ரீமதி கிளாட்ஸ்டன், மனைவி என்ற முறையில் தம் கணவரிடம் கொண்ட அன்பு பெரிதா? ஸ்ரீ கிளாட்ஸ்டனிடம் அவருக்கு உள்ள உறவு எதுவானாலும் அதைப் பற்றிய சிந்தனையின்றி ஸ்ரீமதி கிளாட்ஸ்டன் அவருக்குப் பயபக்தியோடு செய்து வந்த சேவை பெரிதா? இந்த இரண்டில் எதைப் பெரிது என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்? அப் பெண்மணி, அவருடைய சகோதரி என்றோ, வேலைக்காரி என்றோ வைத்துக் கொள்ளுவோம். இதே கவனிப்போடு அப்போதும் தொண்டு செய்திருந்தால் அப்பொழுது நீங்கள் அந்தச் சேவையைப் பற்றி என்ன கூறுவீர்கள்? இத்தகைய அன்புள்ள சகோதரிகளையும் வேலைக்காரர்களையும் பற்றி நாம் கேள்விப்பட்டதில்லையா? அதே அன்பு நிறைந்த பக்தியை ஒரு வேலைக்காரனிடம் காண்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுவோம். அப்பொழுது ஸ்ரீமதி கிளாட்ஸ்டனின் விஷயத்தில் திருப்தியடைவதைப் போல் திருப்தியடைவீர்களா? நான் கூறிய இக் கருத்தைக்கொண்டு, விஷயத்தைச் சிந்தித்துப் பாருங்கள்.’
ராய்ச்சந்திர பாயும் விவாகம் ஆனவரே. அவர் கூறியவை, கொஞ்சம் கடுமையாக இருந்ததாக அப்பொழுது எனக்குத் தோன்றின என்பது என் நினைவு. ஆனால், அவர் கூறியவை என் உள்ளத்தில் மிகவும் ஆழப் பதிந்துவிட்டன. கணவனிடம் மனைவி கொள்ளும் பக்தி விசுவாசத்தைவிட, வேலைக்காரனின் பக்தி, ஆயிரம் மடங்கு போற்றற்கு உரியது என்று நான் எண்ணினேன். கணவனுக்கும் மனைவிக்கும் இடையே பிரிக்க முடியாத பந்தம் இருக்கிறது. ஆகையால் கணவனிடம் மனைவி பக்தி கொள்ளுவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. இந்தப் பக்தி முற்றிலும் இயற்கையானது. ஆனால், எஜமானனுக்கும் வேலைக்காரனுக்கும் இடையே இதற்கு இணையான ஒரு பக்தியை வளர்ப்பதற்கே விசேட முயற்சி அவசியம் ஆகிறது. கவிஞரின் கருத்து எனக்கு மெள்ள மெள்ள விளங்கலாயிற்று.
‘அப்படியானால், எனக்கும் என் மனைவிக்கும் இடையே இருக்கும் உறவு, எப்படி இருக்கவேண்டும்?’ இவ்வாறு என்னை நானே கேட்டுக்கொண்டேன். அவளிடம் உண்மையோடு நடந்துகொள்ளுவது என்பதில், என்னுடைய காம இச்சைக்கு அவளைக் கருவியாக்கிக் கொள்ளுவது என்பதும் அடங்கியிருக்கிறதா? காம இச்சைக்கு நான் அடிமையாக இருக்கும் வரையில், மனைவியிடம் நான் உண்மையான அன்போடு இருக்கிறேன் என்பதற்கு மதிப்பே இல்லை. என் மனைவியைப் பொறுத்த வரை, நேர்மையாகச் சொல்லுவதானால், காம இச்சைக்கு என்னைத் தூண்டுபவளாக அவள் என்றுமே இருந்ததில்லை என்றே கூற வேண்டும். ஆகையால், எனக்குத் திடமான உறுதி மாத்திரம் இருந்திருந்தால், பிரம்மச்சரிய விரதம் கொள்ளுவது எனக்கு மிக எளிதான காரியம். எனக்கு மன உறுதி இல்லாததுதான் அல்லது காம இச்சைதான் இதற்குத் தடையாக இருந்தது.
இவ்விஷயத்தில் என் மனச்சாட்சி விழிப்படைந்து விட்டபிறகும் கூட, இரு தடவைகளில் நான் தவறிவிட்டேன். முயற்சிக்குத் தூண்டுதலாக இருந்த நோக்கம், உயர்வானதாக இல்லாது போனதனாலேயே நான் தவறினேன். மேற்கொண்டு குழந்தைகளைப் பெறாமலே இருக்க வேண்டும் என்பதே என் முக்கியமான நோக்கமாக இருந்தது. இங்கிலாந்தில் இருந்தபோது, செயற்கைக் கர்ப்பத்தடை முறைகளைக் குறித்து ஏதோ படித்திருந்தேன். சைவ உணவைப் பற்றிய அத்தியாயத்தில் டாக்டர் அல்லின்ஸனின் கர்ப்பதடைப் பிரசாரத்தை குறித்து, முன்பே கூறியிருக்கிறேன். அப் பிரச்சாரத்தினால் என் மனம் செயற்கைக் கர்ப்பத்தடை முறைகளில் சிறிதளவு சென்றிருந்தாலும், அத்தகைய முறைகளை ஸ்ரீ ஹில்ஸ் எதிர்த்துக் கூறியது என் மனத்தை உடனே மாற்றி விட்டது. ‘வெளி உபாயங்களுக்குப் பதிலாக உள் முயற்சியே, அதாவது புலன் அடக்கமே சிறந்தது’ என்று அவர் கூறியது, என் மனத்தில் ஆழப் பதிந்ததோடு, நாளாவட்டத்தில் மனத்தை ஆட்கொண்டும் விட்டது. ஆகையால், மேற்கொண்டும் குழந்தைகள் வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை என்பதைக் கண்டதும், புலனடக்கத்திற்கான முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தேன். ஆனால், இம் முயற்சியில் கணக்கில்லாத கஷ்டங்கள் இருந்தன. தனித் தனிப் படுக்கைகளில் தூங்க ஆரம்பித்தோம். நாளெல்லாம் நன்றாக உழைத்துக் களைத்துப் போன பிறகே படுக்கைக்குப் போவது என்று தீர்மானித்தேன். இந்த முயற்சிகளெல்லாம் அதிகப் பலன் தரவில்லை. ஆனால், வெற்றி பெறாதுபோன இத்தகைய எல்லா முயற்சிகளின் ஒருமித்த பயனே, முடிவான தீர்மானமாக உருவாகியது என்று, அக் காலத்தைப் பற்றி நான் இப்பொழுது எண்ணிப் பார்க்கும்போது உணருகிறேன்.
இப்படியே காலம் கடந்து வந்து, 1906, ஆம் ஆண்டில்தான் இறுதியான தீர்மானத்திற்கு வர என்னால் முடிந்தது. சத்தியாக்கிரகம் அப்பொழுது ஆரம்பம் ஆகிவிடவில்லை. அப்போராட்டம் வரும் என்ற எண்ணங்கூட எனக்குச் சிறிதும் இல்லை. போயர் யுத்தத்தைத் தொடர்ந்து, நேட்டால், ‘ஜூலுக் கலகம்’ ஆரம்பம் ஆயிற்று. அப்பொழுதுநான் ஜோகன்னஸ்பர்க்கில் வக்கீல் தொழில் நடத்திக் கொண்டிருந்தேன். அச்சமயம் எனது சேவையைத் தேசிய சர்க்காருக்கு அளிக்க வேண்டும் என்று எண்ணினேன். என் சேவை ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதைக் குறித்து மற்றோர் அத்தியாயத்தில் கவனிப்போம். ஆனால், அவ்வேலை, புலன் அடக்கத் துறையில் என்னை வெகு தீவிரமாகச் சிந்திக்கச் செய்தது. வழக்கம்போல இதைக் குறித்தும் என் சக ஊழியர்களுடன் கலந்து ஆலோசித்தேன். பிள்ளைப்பேறும், அதன் விளைவாக ஏற்படும் குழந்தை வளர்ப்பும் பொது ஜன சேவைக்கு உகந்தவை அல்ல என்பது எனக்கு உறுதியாகப்பட்டது. கலகத்தின்போது சேவை செய்வதற்குச் சௌகரியமாக இருப்பதற்காக ஜோகன்ஸ்பர்க்கில் இருந்த என் குடித்தனத்தைக் கலைத்துவிட வேண்டியதாயிற்று. சேவை செய்ய நான் ஒப்புக்கொண்ட ஒரு மாதத்திற்குள், எவ்வளவோ சிரமப்பட்டு வேண்டிய வசதிகளையெல்லாம் நான் செய்து வைத்திருந்த வீட்டை காலி செய்துவிட வேண்டி வந்தது. என் மனைவியையும் குழந்தைகளையும் போனிக்ஸூக்குக் கொண்டுபோய் விட்டுவிட்டு, நேட்டால் படையுடன் சேர்க்கப்பட்டிருந்த இந்திய வைத்தியப் படைக்குத் தலைவனாகச் சென்றேன். அதிகக் கஷ்டங்களுடன் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அணி வகுத்துச் செல்ல நேர்ந்த அச் சமயத்தில்தான், முடிவான எண்ணம் என் மனத்தில் பளிச்சென்று உதயமாயிற்று. அதாவது, சமூகத்தின் சேவைக்கே என்னை இந்த வகையில் அர்ப்பணம் செய்து கொள்ள விரும்பினால், பிள்ளைப் பேற்றில் அவாவையும் பொருள் ஆசையும் அறவே ஒழித்துவிட்டுக் குடும்பக் கவலையினின்றும் நீங்கியதான வானப்பிரஸ்த வாழ்க்கையை நான் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உதயமாயிற்று.
அக் ‘கலகம்’ சம்பந்தமாக எனக்கு ஆறு வார காலமே வேலை இருந்தது. ஆனால், இந்தக் குறுகிய காலம், என் வாழ்க்கையில் மிக முக்கியமானதாயிற்று. விரதங்களின் முக்கியத்துவம், முன்பு இருந்ததைவிட எனக்கு இன்னும் அதிகத் தெளிவாக விளங்கியது. ஒரு விரதம், உண்மையான சுதந்திரத்தின் கதவை அடைத்து விடுவதற்குப் பதிலாக அக் கதவைத் திறந்து விடுகிறது என்பதை உணர்ந்தேன். போதிய அளவு உறுதி என்னிடம் இதற்கு முன்னால் இல்லை; என்னிடத்திலேயே எனக்கு நம்பிக்கை இல்லை. கடவுளின் அருளிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. என் மனம், சந்தேகமாகிய அலை பொங்கும் கடலில் அங்கும் இங்கும் அலைப்புண்டு, அல்லல்பட்டுக் கொண்டிருந்தது. இதனாலேயே அச்சமயம் வரையில் நான் வெற்றியடையவில்லை. ஒரு விரதத்தை மேற்கொள்ள மறுப்பதனால் மனிதன் ஆசை வலைக்கு இழுக்கப்பட்டு விடுகிறான். ஒரு விரதத்தினால் கட்டுண்டுவிடுவது, நெறியற்ற வாழ்க்கையிலிருந்து உண்மையான ஏகபத்தினி மண வாழ்வுக்குச் செல்வதைப் போன்றது என்பதை அறிந்துகொண்டேன். ‘முயற்சி செய்வதில் எனக்கு நம்பிக்கை உண்டு. அதனால் விரதங்களினால் என்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை’ என்பது பலவீனத்தின் புத்திப் போக்கு. எதை விலக்க வேண்டும் என்று இருக்கிறோமோ அதனிடம் உள்ளுக்குள் ஆசை இருந்து வருகிறது என்பதையே இது வெளிப்படுத்துகிறது. இல்லையானால், முடிவான தீர்மானத்திற்கு வந்து விடுவதில் என்ன கஷ்டம் இருக்க முடியும்? பாம்பு என்னைக் கடித்து விடும் என்பது எனக்குத் தெரியும். அதனிடமிருந்து ஓடிவிடுவது என்று விரதம் கொள்ளுகிறேன். அதனிடமிருந்து ஓடிவிட வெறும் முயற்சி செய்வதோடு நான் இருந்துவிடுவதில்லை. வெறும் முயற்சிதான் என்றால், பாம்பு என்னைக் கட்டாயம் கடித்துவிடும் என்ற நிச்சயமான உண்மையை அறியாமல் இருக்கிறேன் என்பதுதான் பொருள். ஆகையால் வெறும் முயற்சியைக் கொண்டே நான் திருப்தி அடைந்து விடுவது, திட்டமான செயலின் அவசியத்தை நான் இன்னும் உணர்ந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.
‘வருங்காலத்தில் என் கருத்துக்கள் மாறிவிடுகின்றன என்று வைத்துக் கொள்ளுவோம். அந் நிலைமையில் என்னை விரதத்தினால் எப்படிக் கட்டுப்படுத்திக் கொள்ளுவது?’ இத்தகைய சந்தேகமே நம்மை அடிக்கடி தடுத்து விடுகிறது. குறிப்பிட்ட ஒன்றைத் துறந்தாக வேண்டும் என்பதில் தெளிவான எண்ணம் இன்னும் ஏற்படவில்லை என்பதையே அந்தச் சந்தேகம் காட்டுகிறது. இதனாலேயே, ‘ஒன்றில் வெறுப்பு ஏற்படாத துறவு நிலைத்திராது’ என்று நிஷ்குலானந்தர் பாடியிருக்கிறார். எங்கே ஆசை அற்று விடுகிறதோ அங்கே துறவின் விரதம் இயல்பான, தவிர்க்க முடியாத பலனாக இருக்கும்.
$$$
8. பிரம்மச்சரியம் – 2
தீர விவாதித்து, ஆழ்ந்து சிந்தித்த பிறகே, 1906-ஆம் ஆண்டில் நான் பிரம்மச்சரிய விரதத்தை மேற்கொண்டேன். இது சம்பந்தமாக எனக்கு இருந்த எண்ணங்களைக் குறித்து, அதுவரையில் என் மனைவியிடம் நான் எதுவும் கூறவில்லை. விரதத்தை மேற்கொண்ட சமயத்தில் மாத்திரமே அவளைக் கலந்து ஆலோசித்தேன். அவளுக்கு எவ்வித ஆட்சேபமும் இல்லை. ஆனால், முடிவான தீர்மானத்திற்கு வருவதில் எனக்கு அதிகக் கஷ்டம் இருந்தது. அதற்கு வேண்டிய மனபலம் என்னிடம் இல்லை. எனது சிற்றின்ப இச்சையை அடக்குவது எப்படி? ஒருவன் தன்னுடைய மனைவியிடம் கூடச் சிற்றின்ப உறவைப் போக்கிக் கொண்டுவிடுவது என்பது விசித்திரமானதாகவே அப்பொழுது தோன்றிற்று. ஆனால், ஆண்டவனின் அருள் பலத்தில் பூரண நம்பிக்கை வைத்து, துணிந்து விரதத்தை மேற்கொண்டேன்.
அந்த விரதத்தை அனுசரித்து வந்திருக்கும் இருபது ஆண்டு காலத்தை நான் இப்பொழுது எண்ணிப் பார்க்கும்போது எனக்கு அளவற்ற ஆனந்தமும் ஆச்சரியமுமே உண்டாகின்றன. புலன் அடக்கத்தில் ஏறக்குறைய வெற்றிகரமாக அனுசரித்து வந்திருக்கும் பயிற்சி 1901-ஆம் ஆண்டிலிருந்தே நடந்து வருகிறது. ஆனால், விரதத்தை அனுசரித்த பிறகு எனக்கு ஏற்பட்ட சுதந்திரத்தையும் ஆனந்தத்தையும் 1906-ஆம் ஆண்டிற்கு முன்னால் நான் அனுபவித்ததில்லை. விரதம் கொள்ளுவதற்கு முன்னால் எந்தச் சமயத்திலும் ஆசைக்கு அடிமை ஆகிவிடக்கூடும் என்ற நிலையில் நான் இருந்தேன். ஆனால், இப்பொழுதோ எந்த ஆசையினின்றும் என்னைக் காக்கும் நிச்சயமான கேடயமாக விரதம் இருந்து வருகிறது. பிரம்மச்சரியத்தின் அபார சக்தி, நாளுக்கு நாள் எனக்குப் புலனாகி வந்தது. நான் போனிக்ஸில் இருந்தபோது, இவ்விரதத்தை மேற்கொண்டேன். வைத்தியப் படைவேலை நீங்கியதும் போனிக்ஸுக்குப் போனேன். பிறகு ஜோகன்னஸ்பர்க்கிற்குத் திரும்பிவிட வேண்டியதாயிற்று. நான் அங்கே திரும்பிய ஒரு மாதத்திற்கெல்லாம் சத்தியாகிரகப் போராட்டத்திற்கு அடிகோலப்பட்டது. பிரம்மச்சரிய விரதம், எனக்குத் தெரியாமலே என்னைச் சத்தியாகிரகத்திற்குத் தயார் செய்து கொண்டிருந்தது போல் இருந்தது. சத்தியாக்கிரகம், முன்னாலேயே யோசித்துச் செய்யப்பட்ட திட்டம் அன்று. நான் விரும்பாமலே அது தானாக வந்தது. ஆனால், என்னுடைய காரியங்களெல்லாம் அந்த லட்சியத்தில் கொண்டு போய் விட்டன என்பதைக் காண்கிறேன். ஜோகன்னஸ்பர்க்கில் அதிகமாக இருந்து வந்த வீட்டுச் செலவுகளையெல்லாம் குறைத்து விட்டேன். பிரம்மச்சரிய விரதத்தை மேற்கொள்வதற்கென்றே போனதைப் போல போனிக்ஸுக்குச் சென்றேன்.
‘பிரம்மச்சரியத்தைப் பூரணமாக அனுசரிப்பதே பிரம்மத்தை அடைவதற்கு மார்க்கம்’ என்ற அறிவு, சாத்திரங்களைப் படித்ததனால் ஏற்பட்டதன்று. அனுபவத்தினால் இந்த அறிவு எனக்கு நாளாவட்டத்தில் மெள்ள மெள்ள வளர்ந்தது. இது சம்பந்தமான சாத்திர நூல்களை என் வாழ்க்கையில் பின்னால்தான் நான் படித்தேன். உடல், மனம், ஆன்மா ஆகியவைகளைக் காப்பதிலேயே பிரம்மச்சரியம் இருக்கிறது. விரதத்தின் ஒவ்வொரு நாளும் என்னை இந்த அறிவுக்குப் பக்கத்தில் கொண்டுபோயிற்று. ஏனெனில், பிரம்மச்சரியம், ஒரு கடுமையான தவமுறையாக எனக்கு இல்லை. ஆறுதலையும், ஆனந்தத்தையும் எனக்கு அளிப்பதாகவே அது இருந்தது. ஒவ்வொரு நாளும் அதில் ஒரு புதிய அழகைக் கண்டேன்.
தினந்தோறும் ஆனந்தத்தை அதிகமாக்கும் விஷயமாகவே அது இருந்தாலும், அது எனக்கு எளிதாக இருந்துவிட்டது என்று யாரும் எண்ணிவிட வேண்டாம். எனக்கு ஐம்பத்தாறு வயது ஆகிவிட்ட பிறகும்கூட, அது எவ்வளவு கஷ்டமான காரியம் என்பதை அறிகிறேன். கத்தியின் முனைமீது நடப்பதைப் போன்றது அது என்பதை, ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் அதிகமாக உணருகிறேன். என்றைக்குமே விழிப்புடன் இருந்து வர வேண்டியது அவசியம் என்பதையும் காண்கிறேன்.
இந்த விரதத்தை அனுசரிப்பதில் அவசியமான முதல் காரியம், ருசி உணர்ச்சியை அடக்குவதாகும். ருசியை முற்றும் அடக்கி விடுவது, பிரம்மச்சரிய விரதத்தை அனுசரிப்பதை எளிதாக்கி விடுகிறது என்று கண்டேன். ஆகவே, சைவ உணவுக்காரன் என்ற வகையில் மாத்திரம் அன்றி பிரம்மச்சாரி என்ற வகையிலும் எனது உணவுப் பரிசோதனைகளை மேற்கொண்டும் நடத்தலானேன். இந்தச் சோதனைகளின் பலனாக, பிரம்மச்சாரியின் உணவு, ஓர் அளவுக்கு உட்பட்டதாகவும், எளிமையானதாகவும், மசாலை முதலியவைகள் கலக்காததாகவும், சாத்தியமானால் சமைக்கப்படாததாகவும் இருக்க வேண்டும் என்பதைக் கண்டேன்.
பிரம்மச்சாரிக்கு ஏற்ற சிறந்த உணவு, பழங்களும் கொட்டைப் பருப்பு வகைகளுமே என்பதை ஆறு வருட அனுபவத்தில் அறிந்து கொண்டேன். இத்தகைய ஆகாரம் மாத்திரமே சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, சிற்றின்ப இச்சை இல்லாத நிலையை நான் அனுபவித்ததைப்போல அந்த உணவை மாற்றிவிட்ட பிறகு நான் அனுபவித்ததில்லை. தென்னாப்பிரிக்காவில் பழங்களையும் கொட்டைப் பருப்புகளையும் மாத்திரமே நான் புசித்து வந்தபோது, பிரம்மச்சரியத்திற்கு என் அளவில் எந்தவித முயற்சியும் தேவைப்படவில்லை. ஆனால் நான் பால் சாப்பிட ஆரம்பித்த பிறகு அதிக முயற்சியின் பேரிலேயே பிரம்மச்சரிய விரதத்தைக் காக்க வேண்டியிருந்தது. என் பழ ஆகாரத்திலிருந்து திரும்பவும் பால் சாப்பிட வேண்டிய நிலைமை எப்படி ஏற்பட்டது என்பதைக் குறித்து அதற்கு உரிய இடத்தில் பிறகு கவனிப்போம். பால் ஆகாரம் பிரம்மச்சரிய விரதத்தை அதிகக் கஷ்டமானதாக்குகிறது என்பதை மாத்திரம் இங்கே சொன்னால் போதுமானது. இதிலிருந்து ‘பிரம்மச்சாரிகளெல்லாம் பால் சாப்பிடுவதை விட்டுவிட வேண்டும்’ என்ற முடிவுக்கு யாரும் வந்துவிட வேண்டாம். பலவகையான ஆகாரங்களும், பிரம்மச்சரியத்தை எவ்விதம் பாதிக்கின்றன என்பதை, அநேக சோதனைகளின் பிறகே முடிவு செய்ய முடியும். பாலைப் போல் தசையை நன்றாக வளர்க்கக் கூடியதும், எளிதில் ஜீரணிக்கக் கூடியதுமான பழம் எதையும் நான் இன்னும் கண்டுபிடித்து விடவில்லை. இது சம்பந்தமாக டாக்டர்கள், வைத்தியர்கள், ஹக்கீம்கள் முதலிய பலரைக் கேட்டும் என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை. ஆகையால், பால், காம உணர்ச்சியைத் தூண்டக் கூடியதுதான் என்றாலும், பாலை விட்டுவிடுமாறு இப்போதைக்கு யாருக்கும் நான் யோசனை கூற மாட்டேன்.
பிரம்மச்சரியத்திற்கு உணவைத் தேர்ந்தெடுப்பதும், கட்டுப்படுத்துவதும் எவ்விதம் அவசியமோ, அதேபோல் அதன் புற உதவிக்கு, உண்ணாவிரதம் அவசியம். புலன் உணர்ச்சிகள் கட்டுக்கு அடங்காதவை. மேலும், கீழும், எல்லாப் பக்கங்களிலும் சரியாகத் தடுத்து வைத்தால்தான் அவற்றை அடக்கிவைக்க இயலும். பசி வந்திடப் பத்தும் பறந்து போம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆகையால், உண்ணா விரதம் இருப்பது புலன்களை அடக்குவதில் அதிக உதவியாக இருக்கும் என்பதில் எனக்குச் சிறிதும் சந்தேகமே இல்லை. ஆனால், சிலர் விஷயத்தில் பட்டினி விரதம் பயன் படுவதில்லை. ஏனெனில், சாப்பிடாமல் இருப்பதனால் மாத்திரம் புலன் அடக்கம் கைகூடிவிடும் என்று இவர்கள் நினைத்து விடுகிறார்கள். இவர்கள் உடம்பைத்தான் பட்டினி போடுகிறார்களே அன்றி, உள்ளத்திற்கு விருந்து அளித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ‘பட்டினி விரதம் முடிந்ததும் என்ன என்ன ருசியான ஆகாரங்களைத் தின்பது, என்ன என்ன ருசியான பானங்களைப் பருகுவது?’ என்பதைக் குறித்து எண்ணியவாறே இருக்கிறார்கள். இத்தகைய பட்டினி விரதங்கள், ருசியைக் கட்டுப்படுத்தவோ, காம இச்சையைக் கட்டுப்படுத்தவோ அவர்களுக்கு உதவுவதில்லை. பட்டினி கிடக்கும் உடலோடு, உள்ளமும் ஒத்துழைத்தால்தான் பட்டினி விரதம் பயனுள்ளதாகும். அதாவது உடலுக்கு எவை மறுக்கப்படுகின்றனவோ அவைகளின் மீது பட்டினி விரதம் வெறுப்பை வளர்க்க வேண்டும். எல்லாப் புலன் உணர்ச்சிகளுக்கும் வேராக இருப்பது மனம். ஆகையால், பட்டினி விரதம் ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் பயன்தரும். பட்டினி விரதம் இருக்கும் ஒருவர், காமக்குரோத உணர்ச்சிகளுக்குத் தொடர்ந்து வயப்பட்டிருப்பவராகவே இருந்துவிடவும் கூடும். என்றாலும், பட்டினி விரதத்தை அனுசரிக்காமல் சிற்றின்ப இச்சையை அழித்து விடுவது சாத்தியமில்லை என்பது பொதுவான விதி என்று சொல்லலாம். அது பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பதற்கு அத்தியாவசியம் என்றும் சொல்லலாம்.பிரம்மச்சரியத்தை அனுசரிக்க முற்படுகிறவர்களில், பலர் தவறிவிடுகின்றனர். இவர்கள் மற்ற புலன்களை உபயோகிப்பதில் பிரம்மச்சாரிகளாக இல்லாமல் இருப்பது தான் இவர்கள் தோல்வியடைவதற்குக் காரணம். ஆகவே, இவர்களுடைய முயற்சி, தகிக்கும் வெயில் காலத்தில், குளிர் காலத்தின் நடுக்கும் குளிரை அனுபவிக்கச் செய்யும் முயற்சியைப் போன்றதாகிறது. பிரம்மச்சாரியின் வாழ்க்கைக்கும், பிரம்மச்சாரிகள் அல்லாத மற்றவர்கள் வாழ்க்கைக்கும் தெள்ளத்தெளிவான வேறுபாடு இருக்க வேண்டும். இவ்விரு பிரிவினரின் வாழ்க்கையும் ஒன்றுபோல இருப்பதெல்லாம் வெளித்தோற்றத்தில் தான். ஆனால், வித்தியாசம் பட்டப்பகல்போல வெட்ட வெளிச்சமாக இருந்தாக வேண்டும். பிரம்மச்சாரி, பிரம்மச்சாரி அல்லாதவர் ஆகிய இருவரும் கட்புலனை உபயோகித்தே பார்க்கின்றனர். கடவுளின் மகிமையைக் காண்பதற்கே, பிரம்மச்சாரி கட்புலனைப் பயன்படுத்துகிறான். ஆனால், மற்றவனோ, தன்னைச் சுற்றிலும் உள்ள அற்பத்தனங்களைப் பார்க்கவே அதை உபயோகிக்கிறான். இருவரும் தங்கள் காதுகளை உபயோகிக்கின்றனர். இதில் ஒருவன், கடவுளின் புகழுரையைத் தவிர வேறு எதையும் செவிகொடுத்துக் கேட்பதில்லை. மற்றவனுக்கோ, ஆபாசப் பேச்சுக்களைக் கேட்பதே செவிக்கு விருந்தாக இருக்கிறது. இருவரும் இரவில் நீண்டநேரம் கண் விழிக்கின்றனர். ஒருவன், அந்நேரத்தைப் பிரார்த்தனையில் செலவிடுகிறான்; மற்றவனோ, வெறித்தனமான வீண் களியாட்டங்களில் பாழாக்குகிறான். அந்தராத்மாவுக்கு இருப்பிடமான உடலாகிய திருக்கோயிலுக்கே இருவரும் உணவளிக்கின்றனர். ஒருவன், ஆண்டவனின் திருக்கோயிலைப் பழுதுபடாமல் நல்ல நிலையில் வைத்திருப்பதற்கே அதைச் செய்கிறான். மற்றொருவனோ, கண்டவைகளையெல்லாம் அதில் போட்டு நிரப்பி, அந்தத் தெய்வீகப் பாத்திரத்தைத் துர்நாற்றம் அடிக்கும் சாக்கடை ஆக்கிவிடுகிறான். இவ்விதம் ஒருவருக்கொருவர் எவ்விதச் சம்பந்தமும் இன்றித் தொலைவிலேயே வாழ்கின்றனர். நாளாக ஆக இவ்விருவருக்கும் இடையே இருக்கும் தூரம் அதிகமாகுமே அன்றிக் குறையாது.
பிரம்மச்சரியம் என்பது மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றிலும் புலன்களை அடக்குவதேயாகும். மேற்கண்டதைப் போன்ற புலன் அடக்கத்தின் அவசியத்தை ஒவ்வொரு நாளும், மேலும் மேலும் நான் நன்றாக அறிந்துவருகிறேன். பிரம்மச்சரியத்திற்கான சாத்தியங்கள் எவ்விதம் எல்லையற்று இருக்கின்றனவோ, அதே போல் துறவுக்கும் எல்லையில்லாச் சாத்தியங்கள் உண்டு. அத்தகைய பிரம்மச்சரியத்தை ஒரு வரையறைக்கு உட்பட்ட முயற்சியினால் அடைந்துவிடுவது சாத்தியம் அல்ல. அநேகருக்கு அது வெறும் லட்சியமாக மாத்திரமே இருக்க முடியும். பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்து ஒழுக விரும்புகிறவர், தம்மிடம் உள்ள குறைபாடுகளை எப்பொழுதும் உணர்ந்தவராக இருப்பார். தமது அடிமனத்தின் மூலை முடுக்குகளில் இருக்கும் ஆசைகளைத் தேடிப் பிடித்து, அவற்றைப் போக்கிக் கொள்ளுவதற்கு இடைவிடாது பாடுபட்டு வருவார். எண்ணங்கள் முற்றும் உறுதி பெற்றாலன்றிப் பூரணமான பிரம்மச்சரியம் சித்திக்காது. தானாகத் தோன்றும் எண்ணம், உள்ளத்தின் ஓர் இச்சையாகும். ஆகையால், எண்ணத்தை அடக்குவது என்பது மனத்தை அடக்குவதுதான் என்று ஆகிறது. மனத்தை அடக்குவதோ, காற்றை அடக்குவதைவிட இன்னும் அதிகக் கஷ்டமானது. என்றாலும், உள்ளத்தினுள் ஆண்டவன் இருந்து வருவதால் மனத்தை அடக்குவதும் சாத்தியமாகிறது. ‘அது கஷ்டமாக இருப்பதால் அது சாத்தியமானதே அல்ல’ என்று யாரும் எண்ணிவிட வேண்டாம். அது மிக உயர்வான லட்சியம். ஆகவே, அதை அடைவதற்கு மிக அதிகமான முயற்சி தேவையாவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.
ஆனால், அத்தகைய பிரம்மச்சரியத்தை மனிதப் பிரயத்தனத்தினால் மட்டும் அடைந்துவிடுவது முடியாத காரியம் என்பதை நான் இந்தியாவிற்கு வந்த பிறகே அறியலானேன். ‘அது வரையில், பழ ஆகாரத்தினால் மாத்திரமே, எல்லா ஆசைகளையும் போக்கிக் கொண்டுவிட முடியும்’ என்ற மயக்கத்தில் இருந்து விட்டேன். அதற்குமேல் நான் செய்ய வேண்டியது எதுவும் இல்லை என்ற நம்பிக்கையில், எனக்குள் நானே பெருமையும் பட்டுக் கொண்டேன்.
என்னுடைய போராட்டங்களைப் பற்றிய அத்தியாயத்தை நான் முன்கூட்டி இங்கே விவரித்து விடக் கூடாது. இதற்கு மத்தியில் ஒரு விஷயத்தைத் தெளிவாகக் கூறி விடுகிறேன். கடவுளை அடைவது என்ற நோக்கத்துடன் பிரம்மச்சரியத்தை மேற்கொள்ளுகிறவர்களுக்குத் தங்களுடைய முயற்சியில் எவ்வளவு நம்பிக்கை இருக்கிறதோ அவ்வளவு நம்பிக்கை கடவுளிடம் இருக்குமாயின், அவர்கள் மனச் சோர்வு அடைய வேண்டியது இல்லை.
‘இந்திரியங்களைத் தடுத்து வைப்பவனுக்கு விஷயானுபவங்கள் இல்லை; ஆனால் ஆசை மட்டும் இருக்கும். பரமாத்மாவைத் தரிசித்த பிறகு அவனுடைய ஆசையும் அழிகிறது.’
ஆகவே, மோக்ஷத்தை நாடுகிறவனுக்கு ஆண்டவனுடைய திருநாமமும், ஆண்டவனுடைய பேரருளுமே கடைசி ஆதாரங்கள். இந்தியாவுக்குத் திரும்பிய பின்னரே இந்த உண்மை எனக்குப் புலனாயிற்று.
$$$
9. எளிய வாழ்க்கை
எனது ஆரம்ப வாழ்க்கை சுகமானதாகவும் சௌகரிய மானதாகவுமே இருந்தது. ஆனால், அந்தப் பரிசோதனை நீடித்து நிற்கவில்லை. அதிகக் கவனத்துடன் வசதிக்கான சாமான்களை எல்லாம் வீட்டில் வாங்கிப் போட்டிருந்தேன். என்றாலும், அவற்றில் எனக்குப் பற்று ஏற்படவில்லை. ஆகவே, அந்த வாழ்க்கையை ஆரம்பித்ததுமே செலவுகளைக் குறைக்கவும் ஆரம்பித்துவிட்டேன். சலவைச் செலவு அதிகமாகிக் கொண்டிருந்தது. அதோடு ஒழுங்காகக் காலாகாலத்தில் வராமல் இருப்பதிலும் அந்தச் சலவைக்காரர் பெயர் பெற்றவர். இதனால் இருபது முப்பது சட்டைகளும் காலர்களும் இருந்தாலும் அவையும் எனக்குப் போதா என்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது. காலர்களைத் தினந்தோறும் மாற்றியாக வேண்டும். சட்டையைத் தினமும் மாற்றாவிட்டாலும் ஒன்று விட்டு ஒரு நாளாவது மாற்றியாக வேண்டும். இதனால் எனக்கு இரட்டிப்புச் செலவு ஆயிற்று. அது அனாவசியமான செலவு என்று எனக்குத் தோன்றிற்று. ஆகையால், அந்தப் பணத்தை மிச்சப்படுத்துவதற்காக நானே சலவைச் சாமான்களைச் சேகரித்துக் கொண்டேன். சலவையைப் பற்றிய ஒரு புத்தகத்தை வாங்கிப் படித்து, அக் கலையைக் கற்றுக்கொண்டதோடு, என் மனைவிக்கும் சொல்லிக் கொடுத்தேன். இதனால் எனக்கு வேலை அதிகமாயிற்று என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அத் தொழில் எனக்குப் புதுமையானதாகையால் அதைச் செய்வது இன்பமாகவே இருந்தது.
நானே சலவை செய்து போட்டுக்கொண்ட முதல் கழுத்துப் பட்டை (காலர்)யை நான் என்றும் மறந்துவிட முடியாது. தேவைக்கு அதிகமாகக் கஞ்சி போட்டுவிட்டேன். தேய்க்கும் பெட்டியின் இரும்பில் போதுமான சூடு இல்லை. கழுத்துப்பட்டை எங்கே பொசுங்கிவிடுமோ என்ற பயத்தில் அதைச் சரியாக நான் அழுத்தித் தேய்க்கவும் இல்லை. இதன் பலன் என்னவெனில், கழுத்துப்பட்டை ஓரளவு விரைப்பாகத் தான் இருந்தது என்றாலும், அதிகப்படியாக அதற்குப் போட்டுவிட்ட கஞ்சி, அதிலிருந்து உதிர்ந்துகொண்டே இருந்தது. அந்தக் கழுத்துப்பட்டையைக் கட்டிக்கொண்டு கோர்ட்டுக்குப் போனேன். மற்ற பாரிஸ்டர்களின் பரிகாசத்துக்கு ஆளானேன். ஆனால், அந்த நாளிலேயே நான் பரிகாசத்துக்குப் பயப்படாதவன் ஆகிவிட்டேன்.
“என் கழுத்துப்பட்டைகளை நானே சலவை செய்து கொள்ளுவதில், இது என் முதல் பரிசோதனை. அதனால்தான் கஞ்சி உதிர்ந்து கொண்டிருக்கிறது. அது எனக்கு எவ்விதத் தொல்லையையும் கொடுக்கவில்லை. அதோடு நீங்கள் இவ்வளவு சிரித்து, இன்புறுவதற்கு இது காரணமாகவும் இருக்கிறது” என்றேன்.
“ஆனால், இங்கே சலவைக் கடைகளுக்குப் பஞ்சமே இல்லையே?” என்று ஒரு நண்பர் கேட்டார்.
“சலவைச் செலவு அதிகமாகிறது. ஒரு கழுத்துப்பட்டையின் விலை எவ்வளவோ அவ்வளவு ஆகிவிடுகிறது அதைச் சலவை செய்யும் கூலி. அப்படியானாலும் ஆகட்டும் என்றால், என்றென்றைக்கும் சலவைத் தொழிலாளியையே நம்பி வாழ வேண்டியதாக இருக்கிறது. ஆகையால், என் துணிகளை நானே சலவை செய்து கொள்ளுவது மேல் என்று எண்ணுகிறேன்” என்றேன்.
ஆனால், தம் வேலைகளைத் தாமே செய்து கொள்ளுவதில் உள்ள இன்பத்தை என் நண்பர்கள் உணரும்படி செய்ய என்னால் ஆகவில்லை. என் சொந்த வேலையைப் பொறுத்த வரையில், நாளாவட்டத்தில் சலவைத் தொழிலில் நான் அதிகத் தேர்ச்சி பெற்றவன் ஆகிவிட்டேன். என்னுடைய சலவை, சலவைத் தொழிலாளியின் சலவைக்கு எந்தவிதத்திலும் குறைவானதாகவும் இல்லை. என்னுடைய கழுத்துப் பட்டைகள், மற்றவர்களுடைய கழுத்துப்பட்டைகளை விட விறைப்பிலும் பளபளப்பிலும் குறைந்தனவாகவும் இல்லை.
கோகலே, தென்னாப்பிரிக்காவுக்கு வந்தபோது, அவர் ஓர் அங்கவஸ்திரம் வைத்திருந்தார். அதை மகாதேவ கோவிந்த ரானடே, அவருக்கு அன்பளிப்பாகத் தந்திருந்தார்; அந்த அருமையான ஞாபகச் சின்னத்தை கோகலே மிகவும் போற்றிக் கவனத்துடன் பாதுகாத்து வந்தார். விசேட சமயங்களில் மாத்திரமே அதை அவர் உபயோகிப்பார். அப்படிப்பட்ட விசேட சந்தர்ப்பம் ஒன்று வந்தது. ஜோகன்னஸ்பர்க் இந்தியர், கோகலேக்கு அளித்த விருந்துபச்சாரமே அந்தச் சந்தர்ப்பம். இதற்கு அந்த அங்கவஸ்திரத்தைப் போட்டுக் கொண்டு போக, கோகலே விரும்பினார். ஆனால், அது கசங்கிப் போயிருந்ததால் ‘இஸ்திரி’ போடவேண்டி இருந்தது. சலவைத் தொழிலாளியிடம் அனுப்பி, ‘இஸ்திரி’ போட்டுக்கொண்டு வருவதற்கு நேரம் இல்லை. எனவே, அதில் என்னுடைய கைத்திறமையைக் காட்டுவதாகக் கூறினேன்.
“வக்கீல் தொழிலில் என்றால் உம்முடைய திறமையில் நான் நம்பிக்கை வைக்க முடியும். ஆனால் சலவைத் தொழிலில் உமக்குத் திறமை இருப்பதாக நம்புவதற்கில்லை” என்றார் கோகலே. “அதைக் கெடுத்து விடுவீராயின் என்ன செய்வது? அது எனக்கு எவ்வளவு அருமையான பொருள் தெரியுமா?” என்றும் கூறினார். இவ்விதம் சொல்லி, அந்த அன்பளிப்பு தமக்குக் கிடைத்த வரலாற்றையும் அதிக ஆனந்தத்தோடு கூறினார். நானே அவ்வேலையைச் செய்வதாக மீண்டும் வற்புறுத்தினேன். வெகு நன்றாகச் செய்து கொடுப்பதாகவும் வாக்களித்தேன்! பிறகு அதை, ‘இஸ்திரி’ போட அனுமதி கிடைத்தது. அதைச் செய்து முடித்து அவருடைய பாராட்டையும் பெற்றேன். அதற்குப் பிறகு அவ்வேலைத் திறமைக்கு எனக்கு நற்சாட்சிப் பத்திரம் அளிக்க உலகமே மறுத்து விட்டாலும் எனக்குக் கவலை இல்லை.
சலவைத் தொழிலாளிக்கு அடிமையாக இருப்பதிலிருந்து என்னை நான் விடுவித்துக் கொண்டதைப் போலவே க்ஷவரத் தொழிலாளியை எதிர்பார்ப்பதையும் போக்கிக்கொண்டு விட்டேன். இங்கிலாந்துக்குப் போகிறவர்கள் எல்லோரும் க்ஷவரம் செய்து கொள்ளவாவது கற்றுக்கொள்ளுகின்றனர். ஆனால், நான் அறிந்தவரையில், தங்கள் தலைமுடியையும் தாங்களே கத்தரித்துக் கொள்ளுவது என்பதை யாரும் கற்றுக் கொண்டதில்லை. நான் இதையும் கற்றுக்கொண்டு விட வேண்டியதாயிற்று. நான் ஒரு சமயம் பிரிட்டோரியாவில் ஆங்கிலேயர் ஒருவரிடம் முடி வெட்டிக்கொள்ளப் போனேன். அவர், அதிக வெறுப்புடன் என் தலைமுடியை வெட்ட மறுத்துவிட்டார். எனக்கு இது அவமரியாதையாக இருந்தது. உடனே முடிவெட்டும் கத்திரி ஒன்றை வாங்கினேன். கண்ணாடி முன்பு நின்றுகொண்டு, என் தலைமுடியை கத்தரித்துக் கொண்டேன் முன் முடியை வெட்டுக்கொள்ளுவதில் ஓரளவுக்கு வெற்றி பெற்றேன். ஆனால், பின்பக்கத்து முடியை வெட்டிக் கெடுத்து விட்டேன். கோர்ட்டில் இருந்த நண்பர்கள் அதைப் பார்த்துவிட்டுக் குலுங்கக் குலுங்கச் சிரித்தார்கள்.
“உமது தலை முடிக்கு என்ன ஆபத்து வந்தது, காந்தி? எலிகள் ஏதாவது வேலை செய்துவிட்டனவா?” என்று கேட்டனர்.
“அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. வெள்ளைக்காரரான க்ஷவரத் தொழிலாளி என் கறுப்பு முடியைத் தொட இஷ்டப்படவில்லை. ஆகவே, எவ்வளவு மோசமாக இருந்தாலும் சரி, என் முடியை நானே வெட்டிக்கொள்ளுவது என்று வெட்டிக்கொண்டு விட்டேன்” என்றேன்.
என் பதில் அந்த நண்பர்களுக்கு ஆச்சரியத்தை உண்டாக்கவில்லை. தலைமுடியை வெட்ட மறுத்தது அந்த க்ஷவரத் தொழிலாளியின் குற்றமல்ல. கருப்பு மனிதருக்கு அவர் முடி வெட்டி விடுவாரானால் வெள்ளைக்காரர்கள் அவரிடம் முடி வெட்டிக்கொள்ள வர மறுத்துவிடக் கூடும். நமது தீண்டாத சகோதரர்களுக்கு க்ஷவரம் செய்ய, நம் க்ஷவரத் தொழிலாளியை நாம் அனுமதிப்பதில்லையே! இந்தப் பாவத்திற்கு உரிய பலனை நான் தென்னாப்பிரிக்காவில் ஒரு தடவை அல்ல, பல தடவைகளில் அனுபவித்தேன். ‘இதெல்லாம் நாம் செய்த பாவத்திற்குத் தண்டனையே’ என்ற நம்பிக்கை எனக்கு இருந்ததால் நான் கோபம் அடையவில்லை.
எனக்கு வேண்டியவைகளை யெல்லாம் நானே செய்து கொள்ளுவது என்பதிலும், எளிய வாழ்க்கையிலும், எனக்கு இருந்த ஆர்வம் எவ்வளவு தீவிரமான முறைகளில் வெளியிடப்பட்டது என்பதைப் பற்றிய விவரங்களை அதற்குரிய இடம் வரும்போது கூறுகிறேன். விதை, நீண்ட காலத்திற்கு முன்பே போடப்பட்டு விட்டது. வேர் இறங்கி, அது பூத்துக் காய்க்க, அதற்குத் தண்ணீர் ஊற்ற வேண்டியதே பாக்கியாக இருந்தது. அதற்குத் தண்ணீர் பாய்ச்சுவதும் உரிய காலத்தில் நடந்தது.
$$$
10. போயர் யுத்தம்
1894-ஆம் ஆண்டுக்கும் 1899-ஆம் ஆண்டுக்கும் இடையே ஏற்பட்ட மற்றும் பல அனுபவங்களையெல்லாம் விட்டுவிட்டு நேரே போயர் யுத்தத்திற்கு வரவேண்டும்.
அந்தப் போர் ஆரம்பம் ஆனபோது என் சொந்தக் கருத்துக்களை வற்புறுத்தும் உரிமை எனக்கு இல்லை என்றே நான் நம்பினேன். இது சம்பந்தமாக என் உள்ளத்தில் அப்பொழுது ஏற்பட்ட போராட்டத்தைக் குறித்து, நான் எழுதியிருக்கும் ‘தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரக சரித்திர’த்தில் விவரமாகக் கூறியிருக்கிறேன். அந்த வாதங்களை இங்கே திரும்பவும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அதை அறிய விரும்புவோர் அப் புத்தகத்தில் பார்த்துக் கொள்ளுவார்களாக. பிரிட்டிஷ் ஆட்சியிடம் நான் சொண்டிருந்த விசுவாசம், அப்போரில் பிரிட்டிஷ் பக்கம் என்னைச் சேரும்படி செய்துவிட்டது என்பதைச் சொல்லுவது மட்டும் இங்கே போதுமானது. பிரிட்டிஷ் பிரஜை என்ற வகையில் நான் உரிமைகளைக் கோரினால், அந்த பிரஜை என்ற வகையில், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பாதுகாப்புக்காகப் போரில் ஈடுபட வேண்டியதும் என் கடமை என்றே நான் கருதினேன். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் தயவினாலேயே அந்த ஏகாதிபத்தியத்துக்கு உட்பட்டு, தனது பூர்ணமான கதிமோட்சத்தை இந்தியா அடைய முடியும் என்பதும் அப்பொழுது என் கருத்து. ஆகையால், என்னால் முடிந்த வரையில் தோழர்களைத் திரட்டினேன். அவர்களைக் கொண்டு வைத்திய உதவிப் படையும் அமைத்து, கஷ்டப்பட்டு, அப்படையின் சேவையைப் பிரிட்டிஷார் ஏற்றுக்கொள்ளும் படியும் செய்தேன்.
‘இந்தியன் பயங்காளி, ஆபத்துக்குத் துணியாதவன், உடனடியான தனது சொந்த நன்மையைத் தவிர வேறு எதையும் எண்ண மாட்டான்’ என்பதே பொதுவாக ஆங்கிலேயர்களின் அபிப்பிராயம். ஆகையால், நான் என் யோசனையைக் கூறியதும், பல ஆங்கில நண்பர்கள் என்னை அதைரியப்படுத்தினர். ஆனால், டாக்டர் பூத், என் திட்டத்தை மனமார ஆதரித்தார். வைத்திய உதவிப் படை வேலைக்கு, அவர் எங்களுக்குப் பயிற்சியும் அளித்தார். சேவைக்குத் தகுதி வாய்ந்தவர்கள் என்பதற்கு வைத்திய அத்தாட்சிப் பத்திரம் எங்களுக்குக் கிடைக்கவும் உதவினார். ஸ்ரீ லாப்டனும், காலஞ்சென்ற ஸ்ரீ எஸ்கோம்பும் இத்திட்டத்திற்கு உற்சாகத்துடன் ஆதரவளித்தார்கள். கடைசியாகப் போர்முனையில் சேவை செய்வதாக மனுச் செய்து கொண்டோம். அரசாங்கம், வந்தனத்துடன் எங்கள் மனுவை ஏற்றுக்கொண்டது. ஆனால், எங்கள் சேவை அப்போதைக்குத் தேவையில்லை என்று கூறிவிட்டது.
இந்த மறுதலிப்புக் கிடைத்ததோடு திருப்தியடைந்து நான் சும்மா இருந்துவிடவில்லை. டாக்டர் பூத்தின் உதவியின் பேரில் நேட்டால் பிஷப்பிடம் (பாதிரியாரிடம்) சென்றேன். எங்கள் வைத்திய உதவிப் படையில் இந்தியக் கிறிஸ்தவர்கள் பலர் இருந்தனர். என் திட்டத்தை அறிந்து, பிஷப் மகிழ்ச்சியடைந்தார். எங்கள் சேவை அங்கீகரிக்கப் படுவதற்கு உதவி செய்வதாகவும் வாக்களித்தார். காலமும் எங்களுக்கு உதவியாக இருந்தது. எதிர் பார்த்ததைவிட அதிகத் தீரத்தோடும், உறுதி உடனும், திறமையாகவும் போயர்கள் போராடினார்கள். ஆகவே, முடிவில் எங்கள் சேவையும் அவசியமாயிற்று.
எங்கள் படை 1,100 பேரையும் 40 தலைவர்களையும் கொண்டது. இவர்களில் சுமார் முந்நூறு பேர் சுயேச்சையான இந்தியர்; மற்றவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள். டாக்டர் பூத்தும் எங்களுடன் இருந்தார். படையும் நன்றாக வேலை செய்து புகழ் பெற்றது. துப்பாக்கிப் பிரயோக எல்லைக்கு வெளியில்தான் எங்கள் வேலை என்று இருந்தும், செஞ்சிலுவைய் படையின் பாதுகாப்பு எங்களுக்கு இருந்தும், நெருக்கடியான சமயம் வந்தபோது, துப்பாக்கிப் பிரயோக எல்லைக்குள்ளும் போய்ச் சேவை செய்யும்படி எங்களுக்குக் கூறப்பட்டது. மேலே கூறப்பட்ட வரையறை, நாங்கள் விரும்பிப் பெற்றது அன்று. துப்பாக்கிப் பிரயோக எல்லைக்குள் நாங்கள் இருப்பதை அதிகாரிகள் விரும்பவில்லை. ஸ்பியன் காப் என்ற இடத்தில் பிரிட்டிஷ் படைகள் முறியடிக்கப்பட்டதும் அந்த நிலைமை மாறிவிட்டது. ஜெனரல் புல்லர் ஒரு செய்தி அனுப்பினார். ‘ஆபத்திற்கு உடன்பட நீங்கள் கடமைப்பட்டிராவிடினும், நீங்கள், அவ்விதம் செய்து, போர்க்களத்திலிருந்து காயம்பட்டவர்களைக் கொண்டு வருவீர்களானால் அரசாங்கம் நன்றியறிதல் உள்ளதாக இருக்கும்’ என்று அச்செய்தி கூறியது. இதற்கு நாங்கள் தயங்கவே இல்லை. இவ்விதம் ஸ்பியன் காப் யுத்தத்தின் பயனாக, நாங்கள் துப்பாக்கிப் பிரயோக எல்லைக்குள்ளாகவே வேலை செய்யலானோம். காயம்பட்டவர்களை, டோலியில் வைத்துத் தூக்கிக்கொண்டு, அந்த நாட்களில் நாங்கள் தினந்தோறும் இருபது, இருபத்தைந்து மைல் தூரம் நடக்க வேண்டியிருந்தது. காயம் அடைந்தவர்களில் ஜெனரல் வுட்கேட் போன்ற போர்வீரர்களைத் தூக்கிச் சென்ற கௌரவமும் எங்களுக்கு கிடைத்தது.
ஆறு வாரங்கள் சேவை செய்த பிறகு, எங்கள் படை கலைக்கப்பட்டுவிட்டது. ஸ்பியன் காப்பிலும், வால்கிரான்ஸிலும் ஏற்பட்ட தோல்விகளுக்குப் பிறகு, லேடி ஸ்மித் என்ற இடத்தையும் மற்ற இடங்களையும் அவசர நடவடிக்கைகளினால் மீட்பதற்கு முயல்வதை பிரிட்டிஷ் தளபதி கைவிட்டுவிட்டார். இங்கிலாந்திலிருந்தும் இந்தியாவில் இருந்தும் மேற்கொண்டு உதவிக்குப் படைகள் வந்து சேரும் வரையில் மெதுவாகவே முன்னேறுவது என்று முடிவு செய்தார்.
எங்களுடைய சொற்ப சேவை, அச்சமயம் வெகுவாகப் பாராட்டப்பெற்றது. இந்தியரின் கௌரவமும் உயர்ந்தது. ‘எப்படியும் நாம் எல்லோரும் ஏகாதிபத்தியத்தின் புத்திரர்களே’ என்பதைப் பல்லவியாகக் கொண்ட பாராட்டுப் பாடல்களைப் பத்திரிகைகள் பிரசுரித்தன. இந்திய வைத்தியப் படையின் சேவையை, ஜெனரல் புல்லர், தமது அறிக்கையில் பாராட்டியிருந்தார். இப்படையின் தலைவர்களுக்கும் யுத்தப் பதக்கங்களை வழங்கினார்கள்.
இந்திய சமூகம் அதிகக் கட்டுப்பாடுடையதாயிற்று. ஒப்பந்தத் தொழிலாளருடன் எனக்கு நெருக்கமான பழக்கம் உண்டாயிற்று. அவர்களும் அதிகமாக விழிப்படைந்தார்கள். ‘ஹிந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், தமிழர்கள், குஜராத்திகள், சிந்திகள் என்ற எல்லோரும் இந்தியரே; ஒரே தாய் நாட்டின் மக்களே’ என்ற உணர்ச்சி இவர்களிடையே ஆழ வேர் ஊன்றியது. இந்தியரின் குறைகளுக்கு இனி நிச்சயமாகப் பரிகாரம் ஏற்படும் என்ற நம்பிக்கை ஒவ்வொருவருக்கும் உண்டாயிற்று. வெள்ளைக்காரரின் போக்கும் தெளிவாக மாறுதலை அடைந்துவிட்டது என்றே அச்சமயம் தோன்றியது. யுத்த சமயத்தில் வெள்ளையருடன் இந்தியருக்கு இனிமையான வகையில் நட்பும் ஏற்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான வெள்ளைக்காரச் சிப்பாய்களுடன், அப்பொழுது நாங்கள் பழகினோம். அவர்கள் எங்களுடன் நண்பர்களாகப் பழகினர்; தங்களுக்குச் சேவை செய்வதற்காக நாங்கள் அங்கே இருப்பதைக் குறித்து நன்றியுள்ளவர்களாகவும் இருந்தனர்.
சோதனை ஏற்படும் சமயங்களில், மனித சுபாவம் எவ்வளவு உயர்ந்த விதத்தில் தென்படுகிறது என்பதற்கு, நினைத்தாலும் இன்பம் தருவதாக உள்ள ஒரு சம்பவத்தின் உதாரணத்தை நான் இங்கே குறிப்பிடாமல் இருப்பதற்கில்லை. சீவ்லி முகாமை நோக்கி நாங்கள் போய்க்கொண்டிருந்தோம். லார்டு ராபர்ட்ஸின் மகனான லெப்டினெண்டு ராபர்ட்ஸ் அங்கே படுகாயமடைந்து இறந்தார். போர்க்களத்திலிருந்து அவருடைய சவத்தைத் தூக்கி வந்தது எங்கள் படையே. அன்று வெயிலின் புழுக்கம் அதிகமாக இருந்தது. ஒவ்வொருவரும் தாகத்தினால் தண்ணீருக்குத் தவித்துக் கொண்டிருந்தனர். தாகத்தைத் தணித்துக்கொள்ள வழியில் ஒரு சிற்றோடை இருந்தது. ஆனால், அதில் யார் முன்னால் இறங்கித் தண்ணீர் குடிப்பது? ‘வெள்ளைக்காரச் சிப்பாய்கள் குடித்துவிட்டு வந்த பிறகே நாங்கள் நீர் அருந்துவது’ என்று தீர்மானித்திருந்தோம். ஆனால், அவர்கள் முன்னால் போகவில்லை. முன்னால் இறங்கி நீர் அருந்துமாறு எங்களை வற்புறுத்தினர். இவ்விதம் யார் முன்னால் போய்த் தண்ணீர் குடிப்பது என்பது பற்றிக் கொஞ்ச நேரம் அங்கே மகிழ்ச்சி தரும் போட்டியே நடந்தது.
$$$