பாரதியின் தனிப்பாடல்- 12

-மகாகவி பாரதி

 “கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி” என்பது மகாகவி பாரதியின் வாக்கு. எனவேதான் கவிதையையே தனது மனைவிக்கு நிகராக அவரால் வைக்க முடிகிறது. இக்கவிதை,  கவிதையின் மகாசக்தியை வியக்கிறது.

12. கவிதைத் தலைவி

வாழ்க மனைவியாம் கவிதைத் தலைவி!
தினமும்இவ் வுலகில் சிதறியே நிகழும்
பலபல பொருளிலாப் பாழ்படு செய்தியை
வாழ்க்கைப் பாலையில் வளர்பல முட்கள்போல்
பேதை யுலகைப் பேதைமைப் படுத்தும்
வெறுங்கதைத் திரளை, வெள்ளறி வுடைய
மாயா சக்தியின் மகளே! மனைக்கண்
வாழ்வினை வகுப்பாய், வருடம் பலவினும்
ஓர்நாட் போலமற் றோர்நாள் தோன்றாது
பலவித வண்ணம் வீட்டிடைப் பரவ
நடத்திடுஞ் சக்தி நிலையமே! நன்மனைத்
தலைவீ! ஆங்கத் தனிப்பதர்ச் செய்திகள்
அனைத்தையும் பயன்நிறை அனுபவ மாக்கி,
உயிரிலாச் செய்திகட்கு உயிர்மிகக் கொடுத்து,
ஒளியிலாச் செய்திகட்கு ஒளியருள் புரிந்து
வான சாத்திரம், மகமது வீழ்ச்சி,
சின்னப் பையல் சேவகத் திறமை;
எனவரு நிகழ்ச்சி யாவே யாயினும்,
அனைத்தையும் ஆங்கே அழகுறச் செய்து,
இலௌகிக வாழ்க்கையில் பொருளினை இணைக்கும்
பேதை மாசக்தியின் பெண்ணே! வாழ்க!
காளியின் குமாரி! அறங்காத் திடுக!
வாழ்க! மனையகத் தலைவி வாழ்க!

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s