சிவகளிப் பேரலை – 42

-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்

தமிழ் வடிவமும் விளக்கமும்)

*

42. மனக்கோட்டை நாயகன்

.

காம்பீர்யம் பரிகாபம் த்ருதி: ப்ராகாரஉத்த்குண-

ஸ்தோமச்’சாப்தலம் னேந்த்ரியசயோ த்வாராணி தேஹே ஸ்தித:/

வித்யா வஸ்து ஸ்ம்ருத்திரித்யகில ஸாமக்ரீ-ஸமேதே ஸதா

துர்காதிப்ரியதேவ மாமக மனோதுர்கே நிவாஸம் குரு.

.

பேராழ அகழியாம் பெருவுறுதி மதிலாம்

நற்குணங்கள் படைகளாம் கட்டுறுதி வாயில்களாம்

ஞானமே நிறைபொருளாம் வாய்த்ததென் மனக்கோட்டை

துருக்கையின் நாயகரே மனத்துருக்கம் வசிப்பீரே!  

.

     துர்(ரு)க்கம் என்றால் கோட்டை என்று பொருள். அரசனின் கோட்டையானது, நீர் நிறைந்த அகழி, மதில் சுவர், காவல் படைகள், உறுதியான வாயில்கள் ஆகியவற்றால் சூழப்பட்டு மிகுந்த பாதுகாப்புடன் திகழும். மேலும் பல காலம் அங்கே தங்கினாலும் தடையின்றி பயன்படுத்துவதற்கேற்ற பொருளும் அந்தக் கோட்டையிலே நிறைந்திருக்கும். அதுபோல, ஆழம் காணவியலாத பக்தி என்ற நீர் நிறைந்த அகழியும், அந்த பக்தியிலே அசைவிலாத உறுதி என்ற தன்மை வாய்க்கப் பெற்ற மதிலும், நற்குணங்களாகிய படைகளும், உடல் – மனம் ஆகியவற்றை கட்டுப்படுத்தியதால் ஏற்பட்ட உறுதி வாய்ந்த கோட்டைச் சுவர்களும், ஞானத்தையே நிறைவான பொருளாகவும் கொண்டது பக்தனின் மனதாகிய கோட்டை.  

. துர்க்கையின் (சக்தியின்) நாயகராகிய சிவபெருமானை பக்தனின் மனதாகிய இந்தக் கோட்டைக்குள் நிரந்த வாசம் செய்ய வர வேண்டும் என நமக்காக இங்கே கோருகிறார் சங்கர பகவத்பாதர்.

$$$

Leave a comment