-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
22. மனங்கவர் கள்வன்
.
ப்ரலோபாத்யை ரர்த்தாஹரண பரதந்த்ரோ தனிக்ருஹே
ப்ரவேசோ’த்யுக்தஸ்ஸன் ப்ரமதி பஹுதா தஸ்கரபதே/
இமம் சேதச்’சோரம் கதமிஹ ஸஹே ச’ங்கர விபோ
தவாதீனம் க்ருத்வா மயி நிரபராதே குரு க்ருபாம்//
.
பேராசை வசப்பட்டு பிறர்பொருளைக் கவர்ந்திடவே
பணக்காரர் வீடுநோக்கி பரிதவிக்கு தென்மனமே
மனக்கள்ளனைச் சகிப்பேனோ மனங்கவர் கள்வரே?
அடக்கியருள் புரிந்து அடியேனைக் காப்பீரே.
.
ஆண்டவன் என்பவன் ஒருசாராருக்கு மட்டும் அருள்பாலிப்பவன் அல்லன், அனைத்துத் தரப்பினரையும் அரவணைப்பவன். கடையனுக்கும் கடைத்தேற்றம் தருபவனே கடவுள். நமது பார்வையில் கெட்டவர்களாகத் தெரிபவர்கள்கூட ஆண்டவனை வணங்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் மீதும் அருள்பார்வை வீசி, தேவையான நேரத்தில் நற்பாதையில் திருப்புகிறான் ஆண்டவன். சிவபெருமான், மனிதர்களுக்கும், தேவர்களுக்கும் மட்டுமல்ல, அரக்கர்களுக்கும்கூட அருள் பொழிந்துள்ளதை பல புராணக் கதைகள் மூலம் தெரிந்துகொண்டிருக்கிறோம். மனிதர்களிலும் பாகுபாடின்றி திருடர்கள், கள்வர்களுக்குக்கூட அவர் கடவுளாயிருக்கிறார். நமது மனத்தை நமக்குத் தெரியாமலே கொள்ளையடிப்பவர் அல்லவா அவர்?
நமது மனத்தில்தான் எத்தனை கள்ளத்தனம் ஒளிந்து கொண்டிருக்கிறது? பேராசை வசப்பட்டு பிறர் பொருளைக் கவர்ந்திடத் துடிக்கிறதே? கொள்ளையடிக்காவிட்டாலும், நம்மைவிடப் பணக்காரர்கள் மீது பேராசைப்பட்டு எப்படியாவது அவர்பொருளைக் கவர முடியுமா என்று கவலைப்படுகிறதே மனம்? இப்படிப்பட்ட மனக்கள்ளனை எப்படிச் சகித்துக் கொள்ள முடியும்? ஆகையால், மனங்கவர் கள்வனாகிய சிவபெருமானே, பொருளாசையிலிருந்து எனது மனத்தைக் காப்பாற்றி அருளுங்கள் என்று நமக்காக ஆதிசங்கரர் வேண்டுகிறார். காம இச்சையிருந்து விடுதலை பெற சிவபெருமானைச் சரண் புகச் சொன்னதுபோல, மிகு பொருளாசையில் இருந்து விடுதலை பெறவும் அவரது திருவருளையே நாடச் சொல்கிறார்.
$$$