-எஸ்.எஸ்.மகாதேவன்

சங்கிதான் சமுதாயமே!
பெங்களூரு நகரில் உறவினர் வீட்டில் அண்மையில் சில காலம் தங்கி இருந்தேன். கன்னடக் குடும்பங்களுக்கு நடுவில் தமிழ் பேசும் குடும்பங்கள் கணிசமாக உள்ள பகுதி அது. தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீடுகளில் பாத்திரம் தேய்த்துக் கொடுக்கும் தமிழ் மூதாட்டி பேசுகிற தமிழ் தங்களுக்குப் புரியவில்லை என்றார்கள். வேலைக்காக அந்த மூதாட்டி என் உறவினர் வீட்டுக்கும் வருவார். ஒரு நாள் அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். பண்பான தென்னார்க்காடு வட்டார கிராமப்புறத் தமிழ் அவரது தமிழ். கள்ளக்குறிச்சி பக்கத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து இன்னொரு கிராமத்தில் வாழ்க்கைப்பட்டு … என்ற ரீதியில் தன்னைப் பற்றி சொல்லிக் கொண்டே போனார். திருமணமாகி புருஷன் ஊருக்கு இடம் மாறியது பற்றி சொல்லும்போது “அங்க பொறந்தேன், மனை விளங்க இங்க (புக்ககம்) வந்தேன்” என்றாரே பார்க்கலாம்! இந்த பண்பான தமிழ் இன்றைய தமிழ்க் குடும்பங்களுக்கு எப்படிப் புரியும்? அந்த மூதாட்டி இலக்கியம் படித்தவர் அல்ல, வாழ்க்கையை சரியாகப் படித்தவர் என்று எனக்குப் புரிந்தது. மனை விளங்க என்று அவர் சொன்னது உயர்வு நவிற்சியாக அல்ல, அது ஊரகத் தமிழ், கலாச்சார உயிர்ப்புள்ள தமிழ்.
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த உடுமலையில் 60 ஆண்டுகளுக்கு முன் நான் பள்ளி மாணவன். என் வகுப்புத் தோழன் வெங்கிடுபதி பக்கத்தில் ஒரு குக்கிராமத்தில் இருந்து வருபவன். ஒரு நாள், “இன்னைக்கு எங்க வீட்ல மோர் இல்லாமப் போச்சு. பள்ளிக்கூடம் வர லேட் ஆகும் போல இருந்தது. என்ர அம்மா பக்கத்து வீட்ல குறியாப்பையா மோர் வாங்கி மோர்ச் சோறு கட்டிக் கொடுத்தாங்க” என்று மதியம் சாப்பாட்டின் போது பேசிக்கொண்டே போனான். அதை இன்று நினைத்துப் பார்க்கும்போது, “குறியெதிர்ப்பை நீரது உடைத்து” என்று குறள் (221) இயற்றிய திருவள்ளுவர் கொங்கு மண்டலத்துக்காரரோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது! (குறியெதிர்ப்பு – அளவு குறித்து வாங்கி அவ்வாறே திருப்பிக் கொடுக்கும் பொருள்). வள்ளுவர் தொடங்கி வெங்கிடுபதி வரை நமது தமிழ் ஆயிரக்கணக்கான ஆண்டுகளைத் தாண்டி மக்கள் பேச்சில் பழுதில்லாமல் விளையாடுகிறது. இது ஒரு மொழியின் கதை அல்ல. சிரஞ்சீவியான ஹிந்துப் பண்பாடு கட்டமைத்த மொழிப் பாரம்பரியம்.
வீடு கட்டும்போது சாஸ்திரம் அறிந்த கொத்தனார், வீட்டில் வசிக்கப் போகிற குடும்பத்தைச் சேர்ந்த கணவன் அல்லது மனைவி அல்லது மூத்த மகன் கையைக் கொண்டு முழம் (ஹஸ்தம்) அளந்து கொள்வார். அதுதான் வீட்டின் பல்வேறு அறைகள் முதலியவற்றின் அளவைக் குறிக்கும் அடிப்படை அலகு (ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் மூத்த துறவிப் பெருந்தகை அமரர் சுவாமி ஹர்ஷானந்தர் தொகுத்த A CONCISE ENCYCLOPAEDIA OF HINDUISM என்ற மூன்று தொகுதி கலைக்களஞ்சியத்தின் இரண்டாம் தொகுதியில் கிடைத்த தகவல்). வீடு என்றால் செங்கல்லும் காரையும் அல்ல; வீட்டில் வசிக்கும் குடும்பம் பேணிப் பாதுகாக்கும் கலாச்சாரம் என்பார்கள். எந்த அளவுக்கு வீட்டையும் குடும்பத்தையும் ‘ஹஸ்தம்’ என்ற சாஸ்திரம் பிரித்தறிய முடியாதபடி ஆக்கி வைத்திருக்கிறது பாருங்கள்!
கை ரேகை பார்த்துக் குறி சொல்லும் பெண் தெருவோடு போகும் போது “சாஸ்திரங்க சொல்லுறது … சோஸியங்க பாக்கிறது” என்று பெருங்குரலெடுத்து சொல்லிக் கொண்டே போவார். குறவஞ்சி என்ற பெயரில் தமிழ் இலக்கியத்தில் ஒரு பிரபந்த வகை தோன்றக் காரணமான சுத்தத் தமிழ்க் குலத்தில் வந்த அந்தப் பெண்மணிக்கு ‘சாஸ்திரம்’ என்ற சொல் அந்நியம் அல்ல.
பாரதநாடு நெடுக கைவினைஞர்கள் தங்களுக்கு சாஸ்திரம் அருளிய அதிதேவதை விஸ்வகர்மா என்று கொண்டாடுகிறார்கள். குறிப்பாக பழங்குடி சமூகங்கள் நிறைந்த மேகாலய மாநிலத்தில் மக்கள் பக்தி சிரத்தையோடு பகவான் விஸ்வகர்மாவை வழிபடுகிறார்கள். ஒரு கட்டிடம் கட்ட வேண்டுமானால் அதன் வரைபடத்தை பூஜையில் வைத்து அங்கீகரிக்குமாறு விஸ்வகர்மாவை வேண்டுகிறார்கள். விஸ்வகர்மா நேரில் வந்து அங்கீகரிப்பதாக இன்றும் அந்த மக்கள் நம்புகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். தமிழகத்தில் தச்சர், பத்தர், கன்னார், கொல்லர், சிற்பி முதலிய கைவினை வல்லுநர்கள் கொண்ட குடும்பங்கள் விஸ்வகர்மா வழிவந்தவர்கள் என்று பெருமிதம் கொள்வதைப் பார்க்கலாம். சாமி படங்களுக்கு பிரேம் போட்டு விற்கும் தமிழகக் கடைகளில் விஸ்வகர்மா சித்திரமும் சில ஆண்டுகள் முன்பு வரை காட்சி அளித்து வந்தது.
‘எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்’ என்று பாரதி பாடிவிட்டுப் போயிருக்கலாம். பாரதி சொல்வது சரி என்று அத்தாட்சி தருபவர் யார் தெரியுமா, தமிழக சலவைத் தொழிலாளர். பல்வேறு தொழில்கள் செய்வோர் ஆயுத பூஜை அன்று தங்கள் தொழில் கருவியை பூஜித்து வருகிறார்கள். சலவைத் தொழில் செய்பவர்? ஆற்றங்கரை படித்துறை தான் அவரது தொழில் கருவி. எனவே அவர் வைக்கும் பொங்கல் ’துறைப் பொங்கல்’ என்கிறது தமிழ் லெக்சிகன் என்ற பேரகராதி.
சுமார் ஒரு நூற்றாண்டு காலமாக பாரத நாடு நெடுக ஆர்.எஸ்.எஸ் அன்பர்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றிக் கலந்து பழகி ஹிந்து ஒருங்கிணைப்புப் பணியை வெற்றிகரமாக்கி வருகிறார்கள். அவர்களில் ஒருவனாக ஒருமுறை பரமக்குடி சென்றேன். நெசவாளர்களின் கிராமம் அது. நாகநாதன் என்ற நெசவாளர் இல்லத்தில் தங்கினேன். தறியின் கீழேயே படுக்கை. எனக்கு பாய் கிடைத்தது. அவருக்கு மேல் துண்டு தான் விரிப்பு. ஒரு ஓரமாக சில அட்டைகள் கிடந்தன. அவற்றை விரித்துக் கொள்ளலாமே என்றேன். “அது சோறு போடுற சாமி ஆச்சே?” என்றார் அவர். சேலை டிசைன் கம்ப்யூட்டரில் பதிவு செய்த அட்டைகள் அவை. அன்றும் இன்றும் பாரதத்தின் மக்கள் மனது அப்படியேதான் இருக்கிறது அதில் நிறைந்திருப்பது பக்தியும் சிரத்தையும் தான். இது எனக்கு அன்று கிடைத்த பாடம். (ஐ.டி. நிறுவன அலுவலரான ஒரு அன்பர் ஆயுதபூஜை சமயத்தில் கம்ப்யூட்டர் மவுஸ் மீது மூன்று விபூதி பட்டை அடித்து குங்குமப்பொட்டு வைத்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு போட்டார். தமாஷுக்கோ அல்லது நிஜமாகவோ, தெரியவில்லை. ஆனால் போட்டார்).
‘பச்சை விளக்கு’ என்ற திரைப்படத்தில் சிவாஜி கணேசன் ரயில் என்ஜின் டிரைவராகவும் நாகேஷ் ஃபயர்மேனாகவும் நடித்திருப்பார்கள். இப்போதெல்லாம் ஆயிரக்கணக்கான மைல் நம்மை அதிவேகமாக கொண்டு செல்லும் டீசல் எலக்ட்ரிக் லோகோமோட்டிவ் என்ஜின் டிரைவர்களை இந்திய ரயில்வே துறை லோகோ பைலட் என்று கம்பீரமாக அழைக்கிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒரு முறை பார்த்தேன்: ஒரு லோகோ பைலட் தயாராக நின்ற நெடுந்தொலைவு அதிவேக ரயில் முகப்பில் இணைத்திருந்த என்ஜின் அருகில் வந்து நின்று என்ஜின் படியை தொட்டு கண்ணில் ஒற்றிக்கொண்டு ஏறி ரயிலை இயக்கி புறப்பட்டுச் சென்றார். இது பாரதிய வாழ்க்கை தரும் பண்பாட்டுப் பாடங்களில் ஒன்று.
அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் பற்றி சொல்லவே வேண்டாம். ஆயுதபூஜை வந்துவிட்டால் போதும். பஸ்ஸில் மாவிலைத் தோரணம் என்ன, வாழைக்கன்று கட்டுவது என்ன, முன்புறக் கண்ணாடியில் சந்தனம் குங்குமம் சாத்துவது என்ன… என்று நமது பேருந்துகள் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் போல, ஆனால் வேகமாக, பவனி வருவதைப் பார்க்கலாமே? எந்த ராஜா எந்தப் பட்டணத்தில் தர்பார் நடத்தினால் என்ன, பாரத மக்கள் மனசெல்லாம் பக்தி தான், சிரத்தைதான்.
ஆயிரம் ஆண்டு அன்னியர் ஆண்டாலும் முக்கால் நூற்றாண்டு நம்மவர் (மதச்சார்பின்மை பேசிக்கொண்டு) ஆண்டாலும் பாரத மக்கள் வாழ்க்கையில் ஆன்மிகம் இதுபோல ஊடும் பாவும் போல சங்கமித்திருப்பது தற்செயல் அல்ல. தொன்மையான ஸ்ரீ ருத்ரம், சிவனைப் போற்றும் துதி. அது, “கர்மாரேப்ய குலாலேப்ய வோ நமோ நம” என்று சமுதாயத்தின் எல்லா அங்கங்களையும் சிவ சொரூபமாக பார்க்கச் சொல்கிறது. “யோகோ ஞானம் ததா ஸாங்க்யம் வித்யா சில்பாதி கர்ம ச, வேதா சாஸ்த்ராணி விஞ்ஞானம் ஏதத் ஸர்வம் ஜனார்த்தனாத்” என்று விஷ்ணு சஹஸ்ரநாம மங்கள ஸ்லோகமோ கை நுணுக்கம் தேவைப்படும் எல்லாத் தொழில்களும் விஞ்ஞானமும்கூட மகாவிஷ்ணு அருளியவை என்று வலியுறுத்துகிறது. அப்புறம் கேட்பானேன்?
$$$