-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
3. சிவத்தியானம்
.
த்ரயீவேத்யம் ஹ்ருத்யம் திரிபுரஹரமாத்யம் த்ரிநயனம்
ஜடாபாரோதாரம் ஜலதுரகஹாரம் ம்ருகதரம்/
மஹாதேவம் தேவம்மயி ஸதயபாவம் பசு’பதிம்
சிதாலம்பம் ஸாம்பம் சி’வமதிவிடம்பம் ஹ்ருதிபஜே//
.
மும்மறையோன் முப்புரமெரி முதலினி முக்கண்ணன்
முடியழகன் நெளிநெடு பாம்பணியோன் மானேந்தி
மகாதேவன் தேவனென்பால் தயைநோக்கி பசுபதி
மதியுறை மாதன்சிவன் மாநடிகனை துதிமனமே.
.
ரிக், யஜுர், சாமம் ஆகிய மூன்று வேதங்களாலும் அறியப்படுபவர், அவற்றின் உட்பொருளாக இருப்பவர் சிவபெருமான். தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி ஆகிய 3 அரக்கர்களால் வானில் சுற்றித் திரியும்படி அமைக்கப்பட்ட 3 நகரங்களையும், தமது நகைப்பு என்ற ஒற்றைக்கணையால் அழித்தவர் சிவபெருமான். இந்தத் திரிபுர தகனத்தை, காமம், குரோதம், லோபம் (பொறாமை) ஆகிய மும்மலங்களை எரிப்பவர் சிவபெருமான் எனப் பொருள் கொள்ளலாம். ஆணவம் (அகங்காரம்), கன்மம் (வினைப்பயன்), மாயை ஆகிய முப்புரங்கள் என்றும் எடுத்துக்கொள்ளலாம். ஸ்தூல உடல், சூக்கும உடல், காரண உடல் ஆகிய மூன்றையும் எரித்து முக்தியைத் தருபவர் சிவபெருமான் என்றும் வேறொரு பொருள் கொள்ளலாம்.
புறநானூற்றில், புலவர் மதுரை மருதன் இளநாகனார், பாண்டியன் நன்மாறனைப் புகழும் பாடலில், “ஓங்கு மலைப் பெரு வில் பாம்பு ஞாண் கொளீஇ, ஒரு கணை கொண்டு மூஎயில் உடற்றி” என்று சிவபெருமானின் திரிபுர தகனத்தை வர்ணிக்கிறார். மேரு மலையை வில்லாக்கி, வாசுகி என்னும் ஆண் பாம்பை நாணாகக் கொண்டு கணை தொடுத்து முப்புரங்களை எரித்தவர் என்று இதற்குப் பொருள். சிவபெருமான் எல்லாவற்றிற்கும் முதன்மையானவர் (ஆத்யம்), மனத்திற்கு இனிமையானவர் (ஹ்ருத்யம்).
சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய மூன்றையும் கண்களாகக் கொண்ட முக்கண்ணன். சுருள் சுருளான சடைகள் தொங்குகின்ற முடியழகன். நெளிந்து நெளிந்து செல்லக்கூடிய நீண்ட பாம்பையே அணிகலனாக (உரகஹாரம்) கொண்டவர். மானைக் கையில் தரித்தவர் (ம்ருகதரம்). தேவர்களுக்கெல்லாம் தேவராக விளங்கும் மகாதேவர். சுயஒளி வீசுகின்ற தெய்வீக வடிவினர். அப்படிப்பட்ட சிவபெருமான் என் மீது தயை பொழிபவர். பசுக்களாகிய அனைத்து ஜீவன்களுக்கும் தலைவனாக விளங்குகின்ற பசுபதி. அறிவுக்கு உறைவிடம் ஆனவர் (சித் + ஆலம்பம் = மதியுறை). உலகின் மாதாவாகிய அம்பிகையை ஒரு பாகத்தில் கொண்ட மாதன் (ஸ+அம்பன் = ஸாம்பன்). பக்தர்களுக்காக பல்வேறு வடிவங்களில் தோன்றுகின்ற அந்தப் பரம்பொருள், பல்வேறு திருவிளையாடல்களை நிகழ்த்துகின்ற சிறந்த நடிகர் (அதிவிடம்பர்). அப்படிப்பட்ட சிவபெருமானை மனமே துதிப்பாயாக!
(அலைகள் தொடரும்)
$$$