-திருநின்றவூர் ரவிகுமார்

3. ஏர் மார்ஷல் ரவீந்திரகுமார் தீர்
மிக் 21 என்பது ரஷ்யாவில் 1960களில் உருவாக்கப்பட்ட போர் விமானம். அதை ‘பறக்கும் சவப்பெட்டி’ என்றே கூறுவார்கள். அந்த அளவுக்கு குறைபாடுகளைக் கொண்ட பழைய விமானம். காங்கிரஸ் ஆட்சியில் அதைத் தான் வாங்கினார்கள். காரணம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
1979 இல் புனேவில் உள்ள நேஷனல் டிஃபன்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்று இந்திய விமானப்படையில் சேர்ந்தவர் ரவீந்திரகுமார் தீர். போர் விமானங்களில் பலவகை உண்டு. போனோமா, குண்டைப் போட்டுவிட்டு வந்தோமா (Bomber) என்பது ஒருவிதம். எதிரியின் விமானத்தை இடைமறித்து தாக்குவது (Interceptor) வேறு விதம். இரண்டாம் வகை விமானத்திற்கு பலவிதமான திறன்கள் இருக்க வேண்டும். அதை ஓட்டும் விமானிக்கு திறன் பயிற்சி மட்டுமல்ல, சமயோசிதமும் தைரியமும் வேண்டும். ரவீந்திரகுமார் தீர் இரண்டாம் வகையைச் சார்ந்த போர் விமானி.

தொழில்நுட்பப் பிரிவில் வல்லுனர். விமான பாகங்களைச் சோதிப்பது, ஒட்டுமொத்த விமானத்தைச் சோதிப்பது, விமானத்தில் பறந்து அப்போது அதைச் சோதிப்பது, அப்போது பிரச்னைகளைக் கண்டறிவது என்று பல்வேறு சோதனைகளைச் செய்வதில் வல்லவர். சுமார் 38 ஆண்டுகாலப் பணியில் அவர் 25 விதமான விமானங்களை ஓட்டியுள்ளார். 3,200 மணி நேரம் பறந்துள்ளார். இவர் மிக் 21 வகை விமானத்தில் ரஷ்யாவுடன் கலந்து பல்வேறு மாற்றங்களை, முன்னேற்றங்களைக் கொண்ட ‘பைசன்’ என்ற விமானத்தை வடிவமைத்தார். அந்த விமானங்களை இந்தியா ரஷ்யாவிடமிருந்து வாங்கியபோது பைசன் விமானப் படைப்பிரிவுக்கு தலைவராகப் பொறுப்பேற்றார். பஞ்சாபில் உள்ள அம்பாலாவில் அந்த படைப்பிரிவு நிறுவப்பட்டது.
பல போர்களில் பங்குபெற்று வாயு சேனா பதக்கம், அதி வைசிஷ்ட சேவா மெடல், பரம விசிஷ்ட சேவா பதக்கம் என பல பதக்கங்களைப் பெற்றுள்ளார். ஏர் மார்ஷலாக உயர்வு பெற்று ஓய்வு பெற்றார். இந்திய விமானப் படையின் தென்மேற்கு பிராந்தியத் தலைவராக இருந்து (2018 ல்) இவர் ஓய்வு பெற்ற அடுத்த நாளே, குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி இவரை மாநில அரசின் ஆலோசகராக நியமித்தார். டிபன்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் தொழிலுக்கான ஆலோசகராக இவர் நியமிக்கப்பட்டார். இன்று குஜராத்தில் தனியார் துறையில் பாதுகாப்பு சார்ந்த தொழிற்சாலைகள் பல துவங்கப்பட்டுள்ளன.
இங்கு தமிழகத்தில் ‘ திரும்பிப் போ’ என்று கருப்பு பலூன் விட்டவர்கள் அமைச்சர்களாகி விட்டார்கள். அதனால் திரும்பிப் போன தொழில்களால் குஜராத் தொழில் வளர்ச்சியில் முதலிடத்தை நோக்கித் திரும்புகிறது. அங்கு திறமையானவர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் திறமையான தலைமை உள்ளது.
$$$