-சேக்கிழான்

பன்மொழிப் புலவரும், புத்தத் துறவியும், ஹிந்தி பயண இலக்கியத்தின் தந்தையுமான ராகுல சாங்கிருத்தியாயன், மார்க்சியத் தத்துவம் இந்திய இலக்கியங்களில் ஆதிக்கம் செலுத்தக் காரணமான முன்னோடிகளுள் ஒருவர். இவர் சிறையிலிருந்தபடி எழுதிய ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ புதினம் 1944ல் வெளியானது. அப்போதே பலத்த எதிர்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்திய இந்நாவல், இதன் உள்ளடக்கத்தாலும், இடதுசாரிப் பார்வையாலும் பிரபலம் அடைந்தது.
கி.மு. 6000 முதல், கி.பி. 1942 வரையிலான காலகட்டத்தில் ரஷ்யாவின் வோல்கா நதிதீரத்திலிருந்து பூர்வீக மனிதர்கள் கிழக்கு நோக்கிப் பரவி, இந்தியாவின் கங்கை வரை படர்ந்த நிகழ்வை தனித்தனிக் கதைகளின் தொகுப்பால் கற்பனையில் புனைந்திருக்கிறார், ராகுல சாங்கிருத்தியாயன். இதற்கு அவரது பன்மொழி அறிவும், 45 ஆண்டுகால வெளிநாட்டுப் பயண அனுபவங்களும் துணை புரிந்திருக்கின்றன.
அடிப்படையில் இப்புதினம், பல்வேறு காலகட்ட நிகழ்வுகளின் அறுந்த கண்ணிகளின் தொடராகவே உள்ளது. மானிட வளர்ச்சியின் பல்வேறு நிலைகளை தனது கற்பனை வளத்தால் தீட்டிக் காட்டும் ராகுல், ஆரிய- திராவிட இனவாதம் என்ற வழக்கொழிந்த வரலாற்றுவாதத்தின் மீது இப்புதினத்தைக் கட்டமைத்திருக்கிறார். தற்காலத்தில் கிடைத்துள்ள பல ஆதாரங்கள் இந்த சிந்தனைப்போக்கைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.
எனினும், இப்புதினம் வெளிவந்த காலத்தைக் கருத்தில் கொண்டால், சமூகத்தில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்திய ராகுலின் எழுத்துத் திறமை புலப்படும். ஒருவர் ராகுலின் கருத்துக்களுடன் முரண்படலாம்; ஆனால் அவரை நிராகரிக்க முடியாது. அவரது தர்க்க ஆற்றலும், நுண்ணறிவும், பகுத்தறியும் திறனும் இன்றைய ஆய்வாளர்களுக்கும் வழிகாட்டக் கூடியவை.
கண.முத்தையாவால் சிறப்பாக மேற்கொள்ளப்பட்ட இப்புதினத்தின் தமிழாக்கம், தமிழ்ப் புத்தகாலயத்தின் 31ம் பதிப்பாக இப்போது வெளிவந்திருக்கிறது. இளம் தலைமுறையினர் அறிவு விரிவடையப் படிக்க வேண்டிய அரிய நூல் இது.
$$$
நூல் விவரம்:
வால்காவிலிருந்து கங்கை வரை
-ராகுல சாங்கிருத்தியாயன்
தமிழில்: கண.முத்தையா
600 பக்கங்கள், விலை: ரூ. 350,
வெளியீடு: தமிழ்ப் புத்தகாலயம்,
பு.எண்: 34, ப.எண்: 35, சாரங்கபாணி தெரு,
திருமலை சாலை குறுக்கே (காமராஜர் நினைவில்லம் அருகே),
தி.நகர், சென்னை- 600 017.
$$$