-மகாகவி பாரதி

முன்னுரை…
மகாகவி பாரதியின் பார்வை தம் நாடு, தம் மக்கள் என்று குறுகி நிற்கவில்லை. உலகில் எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் விடுதலை வேண்டும் என்ற உலகளாவிய நோக்கம் கொண்டதாக இருந்தது. ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற புலவனின் வழிவந்தவர் அல்லவா?
அவரது உலகம் தழுவிய பார்வைக்கு, பிற நாடுகள் மீது அவர் பாடிய இந்த நான்கு கவிதைகளும் உதாரணம். அந்த நாடுகள்: 1 இத்தாலி, 2 பெல்ஜியம், 3. ரஷ்யா, 4. பிஜி தீவுகள்.
சுதந்திர இத்தாலியை நிறுவப் போராடிய மாவீரர் மாஜினியின் சபதம், ஜெர்மனியிடம் வீழ்ந்தாலும் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடிய பெல்ஜியத்துக்கு வாழ்த்து, கொடுங்கோலன் ஜாரின் அரசை வீழ்த்திய ரஷ்யப் புரட்சியால் பெருமிதம், பிஜித் தீவுகளில் கரும்புத் தோட்டத் தொழிலாளர்களாக அவதிப்படும் ஹிந்து ஸ்திரீகளுக்காகக் கண்ணீர் என்று – இக்கவிதைகளில் மகாகவி பாரதியின் அதியுயர் மானுடம் வெளிப்படுகிறது.
- மாஜினியின் பிரதிக்கினை
நூற்றாண்டுக்கு முந்தைய இத்தாலி என்பது இன்றைய பல ஐரோப்பிய நாடுகளின் பல பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. பழமையான ரோமப் பேரரசின் அங்கமாக அது இருந்தது. ஆனால் பிற்காலத்தில் அந்நாடு வீழ்ச்சி கண்டு அடிமைப்பட்டது. அடிமைப்பட்ட இத்தாலியின் பல பகுதிகளை விடுவிக்கவும், அவற்றில் மக்களாட்சியை நிறுவவும், ஒன்றுபட்ட நாட்டைக் கட்டியமைத்து குடியரசாக்கவும் தம் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்து உழைத்தவர் ‘ஜோசஃப் மாஜினி’ என்ற மாபெரும் வீரர்.
மாஜினியின் இந்த உழைப்பையும், இத்தாலியின் அக்கால அரசியலையும் ‘மாஜினியின் பிரதிக்கினை’ எனும் கவிதை வாயிலாக நம் மக்களிடம் கொண்டுசேர்க்கும் பணியில் பாரதி ஈடுபடுகிறார். இதன் மூலமாக இந்தியாவிலும் சுதந்திரச் சிந்தனை பரவும் என்பதே அவரது நம்பிக்கை.
நவீன இந்திய தேசிய மறுமலர்ச்சிக் காலகட்டத்தில் வாழ்ந்த பெரும்பாலான தேசபக்த சிந்தனையாளர்களும் புரட்சியாளர்களும், மாஜினி, கரிபால்டி, பிஸ்மார்க் போன்ற நவீன ஐரோப்பிய தேசிய நாயகர்களை ஆதர்ச வீரர்களாகக் கருதினார்கள். இக்கவிதை அதன் ஓர் அம்சமே.
2. பெல்ஜியம் நாட்டிற்கு வாழ்த்து
1914 மற்றும் 1940 ல் ஜெர்மனி நாடு பெல்ஜியத்தை ஆக்கிரமித்திருந்தது. பெல்ஜியத்தை வீழ்த்திய ஜெர்மனி இந்தியா மீது கரிசனம் கொண்டதாகவே இருந்தது. இந்திய தேசபக்தர்களில் பலரும்கூட ஜெர்மனியின் வெற்றியையே விரும்பினர். இந்த நேரத்தில்தான் ஜெர்மனியால் வீழ்த்தப்பட்ட பெல்ஜியத்திற்கு வாழ்த்துக் கவி பாடி இருக்கிறார் பாரதி. இங்கு அவரது தேசாபிமானத்தையும் வென்று நிற்கிறது மனிதாபிமானம்.
அது மட்டுமல்ல, அக்காலத்தில் ஜெர்மனிக்கு ஐரோப்பா கண்டம் பேரளவில் ஆதரவளித்தது. என்றபோதும், மிகுந்த மனிதாபிமானத்தோடு பெல்ஜிய நாட்டு மக்களைப் பார்த்து, பாரதி பாடுவது அவருடைய மனிதநேயத்தைக் காட்டுகிறது.
ஜெர்மனியிடம் கண்ட வீழ்ச்சியால் வருந்தி அந்நாட்டு மக்கள் படும் துயரை மிகுந்த மனவலியுடன் உலகுக்கு உணர்த்தியவர் பெல்ஜிய நாட்டுக் கவிஞர் எமிலி வெர்ஹேரன். 1915ஆம் ஆண்டு இதுகுறித்து அவர் எழுதிய கவிதை, 1916ஆம் ஆண்டு நூலாக வெளியானது. அந்த நூல் வெளிவரும் முன்னமே, 1915ஆம் ஆண்டு ‘பெல்ஜியத்திற்கு வாழ்த்து’ என்ற கவிதையை எழுதி வெளியிட்டு, அந்நாட்டு அரசியல் சூழ்நிலைகளை விளக்கும் மகாகவி பாரதி, பெல்ஜியம் மீண்டும் ஜெர்மனியின் பிடியிலிருந்து விடுதலையாகி உயர்ந்து நிற்கும் என்றும் உறுதிபட உரைக்கிறார். அவரது உலக ஞானமும், சுதந்திர தாகமும் வெளிப்படும் கவிதை இது.
3. புதிய ருஷியா
அதேபோலத் தான், ரஷ்யாவில் ஜார் மன்னன் வீழ்ந்ததையும் மகாகவி பாரதி கொண்டாடுகிறார். ஐப்பானிய யுத்தத்தின் ஆரம்பம் முதலாகவே ரஷ்யாவில் உள்நாட்டுக் குழப்பம் தொடங்கி விட்டது. அதுமுதல் புரட்சிக் குழுசுக்கு பலம் அதிகரித்து வந்தது. ‘நமது உருசியத் தோழர்கள் செய்து வரும் உத்தமமான முயற்சிகளின் மீது கடவுள் பேரருள் செலுத்துவாராக’ என்று ரஷ்யப் புரட்சி பற்றிப் பாரதியார் செய்தியாக எழுதி இருக்கிறார். இதற்குக் காரணம் வெளிநாட்டில் நடைபெறும் நிகழ்வுகளின் செய்திகளை எல்லாம் தமிழர்கள் அறிந்து சுதந்திர உணர்வு பெற வேண்டும் என்ற எண்ணமே.
மக்களை மாய்க்கும் கொடுங்கோலர்களின் ஆட்சி மறைய வேண்டும், நல்லாட்சி மலர வேண்டும் என்ற துடிப்பில் இப்பாடலைப் பாடியிருக்கிறார். ரஷ்ய நாடு புரட்சியில் 1917-இல் வெற்றியடைந்ததை நினைத்து மகிழ்ச்சியடைகிறார். அதை நினைத்து ஆனந்தமாகப் பாடிக் களிக்கிறார். இப்பாடல் சுதந்திரம் கிடைக்குமா என்று அவநம்பிக்கை கொள்ளும் இந்தியர் மனத்தில் நம்பிக்கையூட்டும் வகையில் உள்ளது. இந்திய மக்கள் அனைவரும் தம் வேற்றுமை மறந்து ஒன்றுபட்டு நின்றால் ரஷ்யா கண்ட யுகப் புரட்சியை இங்கும் காண முடியும்; ஆங்கில ஆட்சியை வீழ்த்த முடியும்; மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியும் என்று பாரதி எண்ணினார்.
சமூக மாற்றத்துக்கு இறையருளும் தேவை என்ற பாரதியின் கருத்தும் இப்பாடலில் வெளிப்படுகிறது. அதேசமயம், ரஷ்யாவில் வன்முறை மூலமாக அரசை நிலைநாட்டும் ஸ்ரீமான் லெனினின் முயற்சிகள் நிலைக்காது என்பதையும் தனது செய்தி விமர்சனக் கட்டுரையில் பாரதி குறிப்பிட்டிருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
4. கரும்புத் தோட்டத்திலே
பசிபிக் பெருங்கடலில், ஆஸ்திரேலியக் கண்டத்தின் அருகே இருக்கும் சிறு தீவுக் கூட்டம் பிஜித் தீவுகள். 1874-ல் இத்தீவுகளைக் கைப்பற்றிய ஆங்கிலேயர், அதனை தமது குடியேற்ற நாடாக அறிவித்தனர். அது மட்டுமல்ல, அங்கு கரும்புத் தோட்டங்களை உருவாக்கினர். அங்கு பணியாற்ற, தமது காலனி நாடாக இருந்த இந்தியாவிலிருந்து, குறிப்பாக தமிழகத்திலிருந்து பல்லாயிரம் மக்களை அடிமைகளாக அழைத்துச் சென்றனர். அந்த கரும்புத் தோட்டங்களில் இந்தியப் பெண்கள் – ஹிந்து ஸ்திரீகள் பட்ட கொடுமையைக் கேள்வியுற்ற மகாகவி பாரதி எழுதிய கவிதை தான் ‘கரும்புத் தோட்டத்திலே’.
இதுகுறித்த அவரது வாழ்க்கை வரலாறு கூறும் நிகழ்வு இது….
பிஜித் தீவில் இந்தியர்கள் படும் கஷ்டங்களைப் பற்றி யாரோ ஒருவர் ஆங்கிலத்தில் பிரசங்கம் செய்திருந்தாராம். அதைப் பற்றி தமிழில் ஒரு கவிதை செய்யும்படி பாரதியாரைப் பத்திராதிபர்கள் கேட்டார்கள்.
ஒரு நாள் மாலை நேரம், வ.வெ.சு.ஐயர், மண்டையம் ஸ்ரீநிவாசாச்சாரியார் அவர் மகள் யதுகிரி ஆகிய மூன்று பேரும் பாரதியாரின் வீட்டில் இருந்தார்கள். பாரதி ‘நம் இந்து அடிமைகள் பிஜித் தீவில் படும் கஷ்டத்தைப் பற்றி யாரோ பிரசங்கம் செய்திருக்கிறார்களாம். அந்த அடிமைகளின் நிலைமையை விளக்கிக் கவிதை செய்து அனுப்பும்படி கேட்டிருக்கிறார்கள்’ என்று சொன்னார்.
வ.வெ.சு.ஐயர் கேட்டார், பாட்டுக்கு என்ன பெயர் வைத்தீர்கள் என்று. பிஜித்தீவு உங்கள் பாட்டால் பிரபலமாகிவிடும் என்றார். அதற்கு பாரதி சொன்னார், “அதை நினைத்தே ‘கரும்புத் தோட்டம்’ என்ற பெயரிட்டிருக்கிறேன் அந்தக் கவிதைக்கு. பாட்டைக் கேளுங்கள்” என்று, ‘கரும்புத் தோட்டத்திலே” என்ற பாடலைப் பாடினார் பாரதியார்.…
காண்க: பாரதி பயிலகம் வலைப்பூ
உலகில் எங்கு இந்தியர் ஒருவர் பாதிக்கப்பட்டாலும் அவரது நெஞ்சம் துடிதுடித்ததை இக்கவிதையில் காண்கிறோம். உலகம் தழுவிய பார்வையுடன், நமது இந்திய சகோதரர்களின் உரிமை வாழ்வுக்காகவும் பாரதியின் கவிதை நெஞ்சம் பரிதவிப்பதை இப்பாடலில் காணலாம்.
$$$
பிற நாடுகள்
1. மாஜினியின் பிரதிக்கினை
பேரருட் கடவுள் திருவடி யாணை,
பிறப்பளித் தெமையெலாம் புரக்கும்
தாரணி விளக்காம் என்னரு நாட்டின்
தவப்பெய ரதன்மிசை யாணை.
பாரவெந் துயர்கள் தாய்த்திரு நாட்டின்
பணிக்கெனப் பலவிதத் துழன்ற
வீரர், நம்நாடு வாழ்கென வீழ்ந்த
விழுமியோர் திருப்பெய ராணை. 1
ஈசனிங் கெனக்கும் என்னுடன் பிறந்தோர்
யாவர்க்கும் இயற்கையின் அளித்த
தேசமின் புறுவான் எனக்கவன் பணித்த
சீருய ரறங்களி னாணை.
மாசறு மென்நற் றாயினைப் பயந்தென்
வழிக்கெலாம் உறையுளாம் நாட்டின்
ஆசையிங் கெவர்க்கும் இயற்கையா மன்றோ
அத்தகை யன்பின்மீ தாணை. 2
தீயன புரிதல், முறைதவி ருடைமை,
செம்மைதீர் அரசியல், அநீதி
ஆயவற் றென்னஞ் சியற்கையின் எய்தும்
அரும்பகை யதன்மிசை யாணை.
தேயமொன் றற்றேன் நற்குடிக் குரிய
உரிமைகள் சிறிதெனு மில்லேன்,
தூயசீ ருடைத்தாம் சுதந்திரத் துவசம்
துளங்கிலா நாட்டிடைப் பிறந்தேன். 3
மற்றை நாட்டவர்முன் நின்றிடும் போழ்து
மண்டுமென் வெட்கத்தி னாணை.
முற்றிய வீடு பெறுகெனப் படைப்புற்று
அச்செயல் முடித்திட வலிமை
அற்றதால் மறுகும் என்னுயிர்க் கதனில்
ஆர்ந்த பேராவலி னாணை.
நற்றவம் புரியப் பிறந்த தாயினுமிந்
நலனறு மடிமையின் குணத்தால், 4
வலியிழந் திருக்கும் என்னுயிர் கதன்கண்
வளர்ந்திடும் ஆசைமீ தாணை.
மலிவுறு சிறப்பின் எம்முடை முன்னோர்
மாண்பதன் நினைவின்மீ தாணை.
மெலிவுடன் இந்நாள் யாங்கள் வீழ்ந்திருக்கும்
வீழ்ச்சியி னுணர்ச்சிமீ தாணை.
பொலிவுறு புதல்வர் தூக்கினி லிறந்தும்
புன்சிறைக் களத்திடை யழிந்தும், 5
வேற்று நாடுகளில் அவர் துரத் துண்டும்
மெய்குலைந் திறந்துமே படுதல்
ஆற்ற கிலாராய் எம்மரு நாட்டின்
அன்னைமார் அழுங்கணீ ராணை.
மாற்றல ரெங்கள் கோடியர்க் கிழைக்கும்
வகுக்கொணாத் துயர்களி னாணை.
ஏற்ற இவ்வாணை யனைத்துமேற் கொண்டே
யான்செயுஞ் சபதங்கள் இவையே. 6
கடவுளிந் நாட்டிற் கீந்ததோர் புனிதக்
கட்டளை தன்னினும், அதனைத்
திடனுற நிறுவ முயலுதல் மற்றித்
தேசத்தே பிறந்தவர்க் கெல்லாம்
உடனுறு கடமை யாகுமென் பதினும்
ஊன்றிய நம்புதல் கொண்டும்
தடநில மிசையோர் சாதியை இறைவன்
சமைகெனப் பணிப்பனேல் அதுதான். 7
சமைதலுக் குரிய திறமையும் அதற்குத்
தந்துள னென்பதை யறிந்தும்
அமையுமத் திறமை ஜனங்களைச் சாரும்
அன்னவர் தமக்கெனத் தாமே
தமையல தெவர்கள் துணையு மில்லாது
தம்மருந் திறமையைச் செலுத்தல்
சுமையெனப் பொறுப்பின் செயத்தினுக் கதுவே
சூழ்ச்சியாம் என்பதை யறிந்தும், 8
கருமமுஞ் சொந்த நலத்தினைச் சிறிதும்
கருதிடா தளித்தலுந் தானே
தருமமாம் என்றும், ஒற்றுமை யோடு
தளர்விலாச் சிந்தனை கொளலே
பெருமைகொள் வலியாம் என்றுமே மனத்திற்
பெயர்ந்திடா உறுதிமேற் கொண்டும்,
அருமைசால் சபத மிவைபுரி கின்றேன்
ஆணைக ளனைத்து முற்கொண்டே. 9
என்னுடனொத்த தருமத்தை யேற்றார்
இயைந்தஇவ் ’வாலிபர் சபை’ க்கே
தன்னுடல், பொருளும், ஆவியு மெல்லாம்
தத்தமா வழங்கினேன்; எங்கள்
பொன்னுயர் நாட்டை ஒற்றுமை யுடைத்தாய்ச்
சுதந்திரம் பூண்டது வாகி
இன்னுமோர் நாட்டின் சார்வில தாகிக்
குடியர சியன்றதா யிலக. 10
இவருடன் யானும் இணங்கியே யென்றும்
இதுவலாற் பிறதொழி லிலனாய்த்
தவமுறு முயற்சி செய்திடக் கடவேன்.
சந்ததஞ் சொல்லினால், எழுத்தால்,
அவமறு செய்கை யதனினால் இயலும்
அளவெல்லாம் எம்மவ ரிந்த
நவமுறு சபையி னொருபெருங் கருத்தை
நன்கிதன் அறிந்திடப் புரிவேன். 11
உயருமிந் நோக்கம் நிறைவுற ‘இணக்கம்’
ஒன்றுதான் மார்க்கமென் பதுவும்
செயம்நிலை யாகச் செய்திடற் கறமே
சிறந்ததோர் மார்க்கமென் பதுவும்,
பெயர்வர எங்கள் நாட்டினர் மனத்திற்
பேணுமா றியற்றிடக் கடவேன்;
அயலொரு சபையி லின்றுதோ றென்றும்
அமைந்திடா திருந்திடக் கடவேன். 12
எங்கள்நாட் டொருமை என்னொடுங் குறிக்கும்
இச்சபைத் தலைவரா யிருப்போர்
தங்களாக் கினைக ளனைத்தையும் பணிந்து
தலைக்கொளற் கென்றுமே கடவேன்;
இங்கென தாவி மாய்ந்திடு மேனும்
இவர்பணி வெளியிடா திருப்பேன்;
துங்கமார் செயலாற் போதனை யாலும்
இயன்றிடுந் துணையிவர்க் களிப்பேன். 13
இன்றும் எந்நாளும் இவைசெயத் தவறேன்;
மெய்யிது, மெய்யிது; இவற்றை
என்றுமே தவறு யிழைப்பனேல் என்னை
ஈசனார் நாசமே புரிக.
அன்றியும் மக்கள் வெறுத்தெனை இகழ்க;
அசத்தியப் பாதகஞ் சூழ்க;
நின்றதீ யெழுவாய் நரகத்தின் வீழ்ந்து
நித்தம்யா னுழலுக மன்னோ! 14
வேறு
பேசி நின்ற பெரும்பிர திக்கினை
மாசி லாது நிறைவுறும் வண்ணமே
ஆசி கூறி யருளுக! ஏழையேற்கு
ஈசன் என்றும் இதயத் திலகியே. 15
$$$
2. பெல்ஜியம் நாட்டிற்கு வாழ்த்து
அறத்தினால் வீழ்ந்து விட்டாய்;
அன்னியன் வலியனாகி
மறத்தினால் வந்து செய்த
வன்மையைப் பொறுத்தல் செய்யாய்;
முறத்தினால் புலியைத் தாக்க்ம்
மொய்வரைக் குறப்பெண் போலத்
திறத்தினான் எளியை யாகிச்
செய்கையால் உயர்ந்து நின்றாய்! 1
வண்மையால் வீழ்ந்து விட்டாய்!
வாரிபோற் பகைவன் சேனை
திண்மையோடு அடர்க்கும் போதில்
சிந்தனை மெலித லின்றி
ஒண்மைசேர் புகழே மேலென்று
உளத்திலே உறுதி கொண்டாய்;
உண்மைதேர் கோல நாட்டார்
உரிமையைக் காத்து நின்றாய். 2
மானத்தால் வீழ்ந்து விட்டாய்!
மதிப்பிலாப் பகைவர் வேந்தன்
வானத்தாற் பெருமை கொண்ட
வலிமைதான் உடைய னேனும்,
ஊனத்தால் உள்ள மஞ்சி
ஒதுங்கிட மனமொவ் வாமல்
ஆசனத்தைச் செய்வோ மென்றே
அவன்வழி யெதிர்த்து நின்றாய்! 3
வீரத்தால் வீழ்ந்து விட்டாய்!
மேல்வரை யுருளுங் காலை
ஓரத்தே ஒதுங்கித் தன்னை
ஒளித்திட மனமொவ் வாமல்
பாரத்தை எளிதாக் கொண்டாய்;
பாம்பினைப் புழுவே யென்றாய்;
நேரத்தே பகைவன் தன்னை
’நில்’லென முனைந்து நின்றாய். 4
துணிவினால் வீழ்ந்து விட்டாய்!
தொகையிலாப் படைக ளோடும்
பிணிவலர் செருக்கி னோடும்
பெரும்பகை எதிர்த்த போது
பணிவது கருத மாட்டாய்;
பதுங்குதல் பயனென் றெண்ணாய்
தணிவதை நினைக்க மாட்டாய்;
நில் லெனத் தடுத்தல் செய்தாய். 5
வெருளுத லறிவென் றெண்ணாய்;
விபத்தையோர் பொருட்டாக் கொள்ளாய்;
சுருளலை வெள்ளம் போலத்
தொகையிலாப் படைகள் கொண்டே
மருளுறு பகைவர் வேந்தன்
வலிமையாற் புகுந்த வேளை,
’உருளுக தலைகள், மானம்
ஓங்குகெ’ன் றெதிர்த்து நின்றாய். 6
யாருக்கே பகையென் றாலும்
யார் மிசை இவன்சென் றாலும்
ஊருக்குள் எல்லை தாண்டி
உத்திர வெண்ணி டாமல்,
போருக்குக் கோலம் பூண்டு
புகுந்தவன் செருக்குக் காட்டை
வேருக்கும் இடமில் லாமல்
வெட்டுவேன் என்று நின்றாய். 7
வேள்வியில் வீழ்வ தெல்லாம்
வீரமும் புகழும் மிக்கு
மீள்வதுண்டு டுலகிற் கென்றே
வேதங்கள் விதிக்கும் என்பர்,
ஆள்வினை செய்யும் போதில்,
அறத்திலே இளைத்து வீழ்ந்தார்
கேள்வியுண் டுடனே மீளக்
கிளர்ச்சிகொண் டுயிர்த்து வாழ்தல். 8
விளக்கொளி மழுங்கிப் போக
வெயிலொளி தோன்றும் மட்டும்,
களக்கமா ரிருளின் மூழ்குங்
கனக மாளிகையு முண்டாம்,
அளக்கருந் தீதுற் றாலும்
அச்சமே யுளத்துக் கொள்ளார்,
துளக்கற ஓங்கி நிற்பர்,
துயருண்டோ துணிவுள் ளோர்க்கே? 9
$$$
3. புதிய ருஷியா
(ஜார் சக்கரவர்த்தியின் வீழ்ச்சி)
மாகாளி பராசக்தி உருசியநாட்
டினிற்கடைக்கண் வைத்தாள், அங்கே
ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி,
கொடுங்காலன் அலறி வீழ்ந்தான்;
வாகான தோள்புடைத்தார் வானமரர்;
பேய்க ளெல்லாம் வருந்திக் கண்ணீர்
போகாமற் கண்புதைந்து மடிந்தனவாம்,
வையகத்தீர், புதுமை காணீர்! 1
இரணியன்போ லரசாண்டான் கொடுங்கோலன்
ஜாரெனும்பே ரிசைந்த பாவி
சரணின்றித் தவித்திட்டார் நல்லோரும்
சான்றோரும்; தருமந் தன்னைத்
திரணமெனக் கருதிவிட்டான் ஜார்மூடன்;
பொய்சூது தீமை யெல்லாம்
அரணியத்திற் பாம்புகள்போல் மலிந்துவளர்ந்
தோங்கினவே அந்த நாட்டில். 2
உழுதுவிதைத் தறுப்பாருக் குணவில்லை;
பிணிகள் பலவுண்டு; பொய்யைத்
தொழுதடிமை செய்வாருக்குச் செல்வங்க
ளுண்டு; உண்மை சொல்வோர்க் கெல்லாம்
எழுதரிய பெருங்கொடுமைச் சிறையுண்டு,
தூக்குண்டே யிறப்ப துண்டு;
முழுதுமொரு பேய்வனமாஞ் சிவேரியிலே
ஆவிகெட முடிவ துண்டு. 3
இம்மென்றால் சிறைவாசம்; ஏனென்றால்
வனவாசம்; இவ்வா றங்கே
செம்மையெல்லாம் பாழாகிக் கொடுமையே
அறமாகித் தீர்ந்த போதில்,
அம்மைமனங் கனிந்திட்டாள், அடிபரவி
உண்மைசொலும் அடியார் தம்மை
மும்மையிலும் காத்திடுநல் விழியாலே
நோக்கினாள்; முடிந்தான் காலன்.
இமயமலை வீந்ததுபோல் வீழ்ந்துவிட்டான்
ஜாரரசன்; இவனைச் சூழ்ந்து
சமயமுள படிக்கெல்லாம் பொய்கூறி
அறங்கொன்று சதிகள் செய்த
சுமடர் சடசடவென்று சரிந்திட்டார்,
புயற்காற்றுங் குறை தன்னில்
திமுதிமென மரம்விழுந்து காடெல்லாம்
விறகான செய்தி போலே!
குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி
கடியொன்றி லெழுந்ததுபார்; குடியரசென்று
உலகறியக் கூறி விட்டார்;
அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது
அடிமையில்லை அறிக என்றார்;
இடிபட்ட சுவர்போலே கலிவிழுந்தான்,
கிருத யுகம் எழுக மாதோ!
$$$
4. கரும்புத் தோட்டத்திலே
ஹரிகாம்போதி ஜன்யம்
ராகம்- ஸைந்தவி
தாளம்- திஸ்ரசாப்பு
பல்லவி
கரும்புத் தோட்டத்திலே – ஆ!
கரும்புத் தோட்டத்திலே
சரணங்கள்
கரும்புத் தோட்டத்திலே – அவர்
கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி
வருந்து கின்றனரே! ஹிந்து
மாதர்தம் நெஞ்சு கொதித்துக் கொதித்துமெய்
சுருங்குகின்றனரே – அவர்
துன்பத்தை நீக்க வழியில்லையோ? ஒரு
மருந்திதற் கிலையோ? – செக்கு
மாடுகள் போலுழைத் தேங்குகின்றார், அந்தக்
(கரும்புத்தோட்டத்திலே) 1
பெண்ணென்று சொல்லிடிலோ – ஒரு
பேயும் இரங்கும் என்பார்; தெய்வமே! – நினது
எண்ணம் இரங்காதோ? – அந்த
ஏழைகள் அங்கு சொரியுங் கண்ணீர்வெறும்
மண்ணிற் கலந்திடுமோ? – தெற்கு
மாகடலுக்கு நடுவினிலே, அங்கோர்
கண்ணற்ற தீவினிலே – தனிக்
காட்டினிற் பெண்கள் புழுங்குகின்றார், அந்தக்
(கரும்புத்தோட்டத்திலே) 2
நாட்டை நினைப்பாரோ? – எந்த
நாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை
வீட்டை நினைப்பாரோ? – அவர்
விம்மி விம்மி விம்மி விம்மியழுங் குரல்
கேட்டிருப்பாய் காற்றே! துன்பக்
கேணியிலே எங்கள் பெண்கள் அழுதசொல்
மீட்டும் உரையாயோ? – அவர்
விம்மி யழவுந் திறங்கெட்டும் போயினர்
(கரும்புத்தோட்டத்திலே) 3
நெஞ்சம் குமுறுகிறார் – கற்பு
நீங்கிடச் செய்யும் கொடுமையிலே அந்தப்
பஞ்சை மகளிரெல்லாம் – துன்பப்
பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு
தஞ்சமு மில்லாதே – அவர்
சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினில்
மிஞ்ச விடலாமோ? – ஹே
வீரமா காளி சாமுண்டி காளீஸ்வரி!
(கரும்புத்தோட்டத்திலே) 4
$$$