பாரதியின் தேசியத் தலைவர்கள் மீதான பாடல்கள்

-மகாகவி பாரதி

மகாகவி பாரதி தமது அரசியல் குருவாக மதித்த பெருந்தலைவர்களை வாழ்த்திப் பாடிய பாடல்கள் இவை. ‘தேசிய கீதங்கள்’ பகுப்பில், ‘தேசீயத் தலைவர்கள்’ என்ற் உள்பகுப்பில் இடம் பெற்றுள்ள 9 கவிதைகள் இவை.

அந்நாளில் தமது நலன் கருதாமல் வாழ்வையே நாட்டுக்கு அர்ப்பணித்த பெரியோரை மட்டுமே மகாகவி பாரதி பாடி இருப்பது, அவர்தம் எண்ணத் துணிவையும் கொள்கைப் பற்றையும் வெளிப்படுத்துகிறது. இதோ அக்கவிதைகள்….

தேசீயத் தலைவர்கள்

1. மகாத்மா காந்தி பஞ்சகம்

வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டி லெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க, வாழ்க! 1

அடிமை வாழ்வ கன்றிந் நாட்டார் விடுதலை யார்ந்து, செல்வம்
குடிமையி லுயர்வு, கல்வி ஞானமும் கூடி யோங்கிப்
படிமிசைத் தலைமை யெய்தும் படிக்கொரு சூழ்ச்சி செய்தாய்!
முடிவிலாக் கீர்த்தி பெற்றாய, புவிக்குள்ளே முதன்மை யுற்றாய்! 2

வேறு

கொடியவெந் நாக பாசத்தை மாற்ற
மூலிகை கொணர்ந்தவன் என்கோ?
இடிமின்னல் தாங்கும் குடை செய்தான் என்கோ?
என்சொலிப் புகழ்வதிங் குனையே?
விடிவிலாத் துன்பஞ் செயும் பராதீன
வெம்பிணி யகற்றிடும் வண்ணம்
படிமிசைப் புதிதாச் சாலவும் எளிதாம்
படிக்கொரு சூழ்ச்சி நீ படைத்தாய்! 3

தன்னுயிர் போலே தனக்கழி வெண்ணும்
பிறனுயிர் தன்னையும் கணித்தல்
மன்னுயி ரெல்லாம் கடவுளின் வடிவம்
கடவுளின் மக்களென் றுணர்தல்
இன்னமெய்ஞ் ஞானத் துணிவினை மற்றாங்கு
இழிபடு போர், கொலை, தண்டம்
பின்னியே கிடக்கும் அரசிய லதனில்
பிணைத்திடத் துணிந்தனை பெருமான்! 4

பெருங்கொலை வழியாம் போர்வழி இகழ்ந்தாய்
அதனி லுந் திறன்பெரி துடைத்தாம்
அருங்கலை வாணர் மெய்த்தொண்டர் தங்கள்
அறவழி யென்று நீ அறிந்தாய்

நெருங்கிய பயன்சேர் ஒத்துழை யாமை!
நெறியினால் இந்தியா விற்கு
வருங்கதி கண்டு பகைத்தொழில் மறந்து
வையகம் வாழ்கநல் லறத்தே! 5

$$$

2. குரு கோவிந்தர்

ஆயிரத் தெழுநூற் றைம்பத் தாறு
விக்ரம னாண்டு வீரருக் கமுதாம்
ஆனந்த புரத்தி லார்ந்தினி திருந்தனன்;
பாஞ்சா லத்துப் படர்தரு சிங்கக்
குலத்தினை வகுத்த குருமணி யாவான். 5

ஞானப் பெருங்கடல், நல்லிசைக் கவிஞன்,
வானம்வீழ்ந் துதிரினும் வாள்கொடு தடுக்கும்
வீரர் நாயகன், மேதினி காத்த
குருகோ விந்த சிங்கமாங் கோமகன்,
அவந்திருக் கட்டளை அறிந்துபல் திசையினும் 10

பாஞ்சா லத்துறு படைவலோர் நாடொறும்
நாடொறும் வந்து நண்ணுகின் றாரால்,
ஆனந்த புரத்தில் ஆயிர மாயிரம்
வீரர்கள் குருவின் விருப்பினைத் தெரிவான்
கூடிவந் தெய்தினர் கொழும்பொழி லினங்களும், 15

புன்னகைப் புனைந்த புதுமலர்த் தொகுதியும்,
பைந்நிறம் விரிந்த பழனக் காட்சியும்,
”நல்வர வாகுக நம்மனோர் வரவு” என்று
ஆசிகள் கூறி ஆர்ப்பன போன்ற
புண்ணிய நாளிற் புகழ்வளர் குரவன் 20

திருமொழி கேட்கச் செறிந்தனர் சீடர்கள்.
”யாதவன் கூறும்? என்னெமக் கருளும் ?
எப்பணி விதித்தெம தேழேழ் பிறவியும்
இன்புடைத் தாக்கும்?” எனப்பல கருதி
மாலோன் திருமுனர் வந்துகண் ணுயர்த்தே 25

ஆக்கினை தெரிவான் ஆவலொடு துடிக்கும்
தேவரை யொத்தனர் திடுக்கெனப் பீடத்து
ஏறிநின் றதுகாண்! இளமையும் திறலும்
ஆதிபத் தகைமையும் அமைந்ததோர் உருவம்.
விழிகளில் தெய்வப் பெருங்கனல் வீசிடத் 30

திருமுடி சூழ்ந்தோர் தேசுகாத் திருப்ப
தூக்கிய கரத்தில் சுடருமிழ்ந் திருந்தது
கூறநா நடுங்குமோர் கொற்றக் கூர்வாள்.
எண்ணிலா வீரர் இவ்வுரு நோக்கி,
வான்நின் றிறங்கிய மாந்திரி கன்முனர்ச் 35

சிங்கக் கூட்டம் திகைத்திருந் தாங்கு
மோனமுற் றடங்கி முடிவணங் கினரால்
வாள்நுனி காட்டி மாட்சியார் குரவன்
திருவுள நோக்கஞ் செப்புவன், தெய்வச்
சேயித ழசைவுறச் சினந்தோர் எரிமலைக் 40

குமுறுதல் போல்வெளிக் கொண்டன திருமொழி:
“வாளிதை மனிதர் மார்பிடைக் குளிப்ப
விரும்புகின் றேன்யான்; தீர்கிலா விடாய்கொள்
தருமத் தெய்வந் தான்பல குருதிப்
பலவிழை கின்றதால் பக்தர்கள் நும்மிடை 45

நெஞ்சினைக் கிழித்து நிலமிசை யுதிரம்
வீழ்த்தித் தேவியின் விடாயினைத் தவிர்ப்ப
யார்வரு கின்றீர்!” என்னலும் சீடர்கள்
நடுங்கியோர் கணம்வரை நாவெழா திருந்தனர்
கம்மென ஓர்சிறு கணங்கழி வுற்றது 50

ஆங்கிருந் தார்பல் லாயிர ருள்ளொரு
வீரன்முன் வந்து விளம்புவான் இஃதே:
“குருமணி! நின்னொரு கொற்றவாள் கிழிப்ப
விடாயறாத் தருமம் மேம்படு தெய்வதத்து
இரையென மாய்வன் ஏற்றருள் புரிகவே!” 55

புன்னகை மலர்ந்தது புனிதநல் வதனம்
கோயிலுள் அவனைக் குரவர்கோன் கொடுசெல,
மற்றதன் நின்றொர் மடுவின்வந் தாலெனக்
குருதிநீர் பாயக் குழாத்தினர் கண்டஜர்
பார்மின்! சற்குரு பளீரெனக் கோயிலின் 60

வெளிப்போந் தாங்கு மேவினோர் முன்னம்
முதற்பலி முடித்து முகமலர்ந் தோனாய்
மின்னெனப் பாய்ந்து மீண்டுவந் துற்றனன்.
மீண்டுமவ் வுதிரவாள் விண்வழி தூக்கிப்
பின்வரு மொழிகள் பேசுபவன் குரவன்கோன்: 65

“மானுடர் நெஞ்சிலிவ் வாளினைப் பதிக்கச்
சித்தம்நான் கொண்டேன்; தேவிதான் பின்னுமோர்
பலிகேட் கின்றாள்! பக்தர்காள்! நும்முளே
இன்னும்இங் கொருவன் இரத்தமே தந்துஇக்
காளியை தாகங் கழித்திட துணிவோன் 70

எவனுளன்?” எனலும் இன்னுமோர் துணிவுடை
வீரன்முன் நின்று விருப்பினை உணர்த்தினன்.
இவனையுங் கோயிலுள் இனிதழைத் தேகி
இரண்டாம் பலிமுடித் தீண்டினன் குரவன்
குருதியைக் கண்டு குழாத்தினர் நடுங்கினர். 75

இங்ஙன மீண்டுமே இயற்றிப்
பலியோ ரைந்து பரமனங் களித்தனன்.
அறத்தினைத் தமதோர் அறிவினாற் கொண்ட
மட்டிலே மானிடர் மாண்பெற லாகார்
அறமது தழைப்ப நெஞ்சகம் காட்டி 80

வாட்குத்து ஏற்று மாய்பவர் பெரியோர்
அவரே மெய்மையோர்; முத்தரும் அவரே.
தோன்றுநூ றாயிரம் தொண்டர் தம்முள்ளே
அத்தகை நல்லரை அறிகுதல் வேண்டியே
தண்ணருட் கடலாந் தகவுயர் குரவன் 85

கொடுமைசேர் சோதனை புரிந்திடல் குறித்தனன்.
அன்பின் மிகையால் ஆருயிர் நல்குவோர்
ஐவரைக் கண்டபின் அவ்வியல் உடையார்
எண்ணிலர் உளரெனத் துணிந்துஇன்பு எய்தினன்
வெய்யசெங் குருதியின் வீழ்ந்துதா மிறந்து 90

சொர்க்கமுற் றாரெனத் தொண்டர்கொண் டிருக்கும்
ஐந்துநன் மணியெனும் ஐந்துமுத் தரையும்
கோயிலு ளிருந்துபே ரவைமுனர்க் கொணர்ந்தான்!
ஆர்த்தனர் தொண்டர்! அருவியப் பெய்தினர்!
விழிகளைத் துடைத்து மீளவும் நோக்கினர்! 95

“ஜயஜய குருமணி ஜயகுரு சிங்கம்!”
எனப்பல வாழிகள் இசைத்தனர், ஆடினர்.
அப்போழ் தின்னருள் அவதரித் தனையான்,
நற்சுடர்ப் பரிதி நகைபுரிந் தாங்கு
குறுநகை புரிந்து குறையறு முத்தர் 100

ஐவர்கள் தம்மையும் அகமுறத் தழுவி
ஆசிகள் கூறி அவையினை நோக்கிக்
கடல்முழக் கென்ன முழங்குவன்- “காணீர்!
ஏகாளியும் நமது கனகநன் னாட்டுத்
தேவியும் ஒன்றெனத் தேர்ந்தநல் அன்பர்காள்! 105

நடுக்கம் நீரெய்த நான்ஐம் முறையும
பலியிடச் சென்றது பாவனை மன்ற.
என்கரத் தாற்கொலோ நும்முயிர் எடுப்பன்?
ஐம்முறை தானும் அன்பரை மறைத்துநும்
நெஞ்சகச் சோதனை நிகழ்த்தினன் யானே! 110

தாய்மணி நாட்டின் உண்மைத் தனயர் நீர்
என்பது தெளிந்தேன், என்கர வாளால்
அறுத்ததிங் கின்றைந் தாடுகள் காண்பீர்;
சோதனை வழியினுந் துணிவினைக் கண்டேன்;
களித்ததென் நெஞ்சம்; கழிந்தன கவலைகள்.” 115

குருகோ விந்தன் கொண்டதோர் தருமம்
’சீடர்தம் மார்க்கம்’ எனப்புகழ் சிறந்தது
இன்றுமம் மார்க்கத் திருப்பவர் தம்பெயர்
’காலசா’ என்ப, ‘காலசா’ எனுமொழி
முத்தர்தம் சங்க முறையெனும் பொருளது. 120

முத்தர்தம் சபைக்கு மூலர்க ளாகமற்று
ஐவரன் னோர்தமை அருளினன் ஆரியன்
சமைந்தது ‘காலசா’ எனும் பெயர்ச் சங்கம்
பாரத மென்ற பழம்பெரு நாட்டினர்
ஆவிதேய்ந் தழித்திலர். ஆண்மையிற் குறைந்திலர்; 125

வீரமுஞ் சிரத்தையும் வீந்தில ரென்று
புவியினோர் அறியப் புரிந்தனன் முனிவன்.
அந்நாள் முகுந்தன் அவதரித் தாங்கு ஓர்
தெய்விகத் தலைவன் சீருறத் தோன்றி
மண்மா சகன்ற வான்படு சொற்களால் 130

எழுப்பிடுங் காலை, இறந்துதான் கிடக்கிலள்;
இளமையும் துணிவும் இசைந்துநம் அன்னை
சாதியின் மானந் தாங்கமுற் படுவளென்று
உலகினோ ரறிவிடை யுறுத்தினன் முனிவன்.
ஐம்பெரும் பூதத் தகிலமே சமைத்த 135

முன்னவ னொப்ப முனிவனும் ஐந்து
சீடர்கள் மூலமாத் தேசுறு பாரதச்
சாதியை வகுத்தனன்; தழைத்தது தருமம்.
கொடுங்கோல் பற்றிய புன்னகை குரிசிலர்
நடுங்குவ ராயினர்; நகைத்தனள் சுதந்திரை. 140

ஆயிரத் தெழுநூற் றைம்பத் தாறு
விக்கிர மார்க்க னாண்டினில், வியன்புகழ்க்
குருகோ விந்தன் கொற்றமர் சீடரைக்
கூட்டியே தெய்வக் கொலுவொன் றமைத்தனன்
காண்டற் கரிய காட்சி! கவின் திகழ் 145

அரியா தனத்தில் அமர்ந்தனன் முனிவர்கோன்
சூழ்ந்திருந் தனர் உயிர்த் தொண்டர்தாம் ஐவரும்
தன் திருக் கரத்தால் ஆடைகள் சார்த்தி
மாலைகள் சூட்டி மதிப்புற இருத்திக்
கண்மணி போன்றார் ஐவர்மேற் கனிந்து 150

குழைவுற வாழ்த்திக் குழாத்தினை நோக்கி,
“காண்டிரோ! முதலாங் ‘காலசா” என்றனன்;
நாடும் தருமமும் நன்கிதிற் காப்பான்
அமைந்ததிச் சங்கம் அறிமின்நீர் என்றான்
அருகினில் ஓடிய ஆற்றின்நின் றையன் 155

இரும்புச் சிறுகலத் தின்னீர் கொணர்ந்து
வாள்முனை கொண்டு மற்றதைக் கலக்கி
மந்திர மோதினன், மனத்தினை அடக்கிச்
சித்தமே முழுதுஞ் சிவத்திடை யாக்கிச்
சபமுரைத் திட்டான், சயப்பெருந்திரு அக் 160

கொலுமுனர் வந்து குதித்துநின் றிட்டாள்.
ஆற்றுநீர் தனையோ அடித்ததந் திருவாள்
அயர்ந்துபோய் நின்ற அரும்புகழ் பாரதச்
சாதியின் திறல்கள் தம்மையே இயக்கி
நல்லுயிர் நல்கினன், நாடெலாம் இயங்கின. 165

தவமுடை ஐவரைத் தன்முனா நிறுத்தி
மந்திர நீரை மாசறத் தெளித்து
அருள்மய மாகி அவர்விழி தீண்டினன்;
பார்மினோ உலகீர்! பரமனங் கரத்தால்
அவர்விழி தீண்டிய அக்கணத் தன்றே 170

நாடனைத் திற்கும் நல்வழி திறந்தது!
சீடர்கள னைவரும் தீட்சை இஃதடைந்தனர்.
ஐயன் சொல்வன்: “அன்பர்காள்! நீவிர்
செய்திடப் பெற்ற தீட்சையின் நாமம்
’அமிர்தம்’ என்று அறிமின்! அரும்பே றாம் இது 175

பெற்றார் யாவரும் பேரருள் பெற்றார்
நுமக்கினித் தருமம் நுவன்றிடக் கேண்மின்.
ஒன்றாம் கடவுள் உலகிடைத் தோன்றிய
மானிடரெல்லாஞ் சோதரர்; மானிடர்
சமத்துவ முடையார், சுதந்திரஞ் சார்ந்தவர். 180

சீடர்காள்! குலத்தினும் செயலினும் அனைத்தினும்
இக்கணந் தொட்டுநீர் யாவிரும் ஒன்றே.
பிரிவுகள் துடைப்பீர்! பிரிதலே சாதல்
ஆரியர் சாதியுள் ஆயிரஞ் சாதி
வகுப்பவர் வகுத்து மாய்க, நீர் அனைவரும் 185

தருமம், கடவுள், சத்தியம், சுதந்திரம்
என்பவை போற்ற எழுந்திடும் வீரச்
சாதியொன் றினையே சார்ந்ததோ ராவிர்.
அநீதியும் கொடுமையும் அழித்திடுஞ் சாதி;
மழித்திடலறியா வன்முகச் சாதி; 190

இரும்புமுத் திரையும் இறுகிய கச்சையும்
கையினில் வாளும் கழன்றிடாச் சாதி;
சோதர நட்புத் தொடர்ந்திடு சாதி;
அரசன் இல்லாது தெய்வமே யரசா
மானுடர் துணைவரா, மறமே பகையாக் 195

குடியர சியற்றுங் கொள்கையார் சாதி;
அறத்தினை வெறுக்கிலீர், மறத்தினைப் பொறுக்கிலீர்;
தாய்த்திரு நாட்டைச் சந்ததம் போற்றிப்
புகழொடு வாழ்மின்! புகழொடு வாழ்மின்!”
என்றுரைத் தையன் இன்புற வாழ்த்தினன்; 200

அவனடி போற்றி ஆர்த்தனர் சீடர்கள்.
குருகோ விந்தக் கோமகன் நாட்டிய
கொடிஉயர்ந் தசையக் குவலயம் புகழ்ந்தது
ஆடியே மாய்ந்தது அரங்கசீப் ஆட்சி. 204

$$$

3. தாதாபாய் நௌரோஜி

முன்னாளில் இராமபிரான் கோதமனா
      தியபுதல்வர் முறையி னீன்று
பன்னாடு முடிவணங்கத் தலைமைநிறுத்
      தியஎமது பரத கண்ட
மின்னாள் இங் கிந்நாளின் முதியோளாய்ப்
      பிறரெள்ள வீழ்ந்த காலை
அன்னாளைத் துயர் தவிர்ப்பான் முயல்வர்சில
      மக்களவ ரடிகள் சூழ்வாம். 1

அவ்வறிஞ ரனைவோர்க்கும் முதல்வனாம்
      மைந்தன், தன் அன்னை கண்ணீர்
எவ்வகையி னுந்துடைப்பேன் இன்றே லென்
      உயிர் துடைப்பேன் என்னப் போந்து,
யௌவன நாள் முதற்கொடுதான்
      எண்பதின்மேல் வயதுற்ற வின்றுகாறும்
செவ்வியுறத் தனதுடலம் பொருளாவி
      யானுழைப்புத் தீர்த லில்லான் 2

கல்வியைப் போல் அறிவும் அறிவினைப்போலக்
      கருணையும்அக் கருணை போலப்
பல்விதவூக் கங்கள்செயுந் திறனுமொரு
      நிகரின்றிப் படைத்த வீரன்.
வில்விறலாற் போர்செய்தல் பயனிலதாம்
      எனஅதனை வெறுத்தே உண்மைச்
சொல்விறலாற் போர்செய்வோன் பிறர்க்கின்றித்
      தனக்குழையாத் துறவி யாவோன். 3

மாதா, வாய் விட்டலற அதைச்சிறிதும்
      மதியாதே வாணாள் போக்குந்
தீதாவார் வரினுமவர்க் கினியசொலி
      நன்குணர்த்துஞ் செவ்வி யாளன்,
வேதாவா யினுமவனுக் கஞ்சாமே
      உண்மைநெறி விரிப்போன் எங்கள்
தாதாவாய் விளங்குறுநல் தாதாபாய்
      நவுரோஜி சரணம் வாழ்க! 4

எண்பஃதாண் டிருந்த வன்இனிப் பல்லாண்டு
      இருந்தெம்மை இனிது காக்க!
பண்பல்ல நமக்கிழைப்போர் அறிவுதிருந்
      துக! எமது பரதநாட்டுப்
பெண்பல்லார் வயிற்றினுமந் நவுரோஜி
      போற்புதல்வர் பிறந்து வாழ்க!
விண்புல்லு மீன்களென அவனன்னார்
      எவ்வயினும் மிகுக மன்னோ!

$$$

4. பூபேந்திர விஜயம்

பாபேந்திரியஞ் செறுத்த எங்கள்
      விவேகானந்தப் பரமன் ஞான
ரூபேந்திரன் தனக்குப் பின்வந்தோன்
      விண்ணவர்த முலகை யாள்ப்ர-
தாபேந்திரன் கோப முறினுமதற்கு
      அஞ்சியறந் தவிர்க்கி லாதான்
பூபேந்திரப் பெயரோன் பாரதநாட்
      டிற்கடிமை பூண்டு வாழ்வோன். 1

வீழ்த்தல்பெறத் தருமமெலாம் மறமனைத்துங்
      கிளைத்துவர மேலோர் தம்மைத்
தாழ்த்ததமர் முன்னோங்க நிலைபுரண்டு
      பாதகமே ததும்பி நிற்கும்
பாழ்த்த கலியுகஞ்சென்று மற்றொருதம்
      அருகில்வரும் பான்மை தோன்றக்
காழ்த்தமன வீரமுடன் யுகாந்திரத்தின்
      நிலையினிது காட்டி நின்றான் 2

மண்ணாளு மன்ன ரவன் றனைச் சிறைசெய்
      திட்டாலும் மாந்த ரெல்லாம்
கண்ணாகக் கருதியவன் புகழோதி
      வாழ்த்திமனங் களிக்கின் றாரால்
எண்ணாது நற்பொருளைத் தீதென்பார்
      சிலருலகில் இருப்ப ரன்றே?
விண்ணாரும் பரிதியொளி வெறுத்தொருபுள்
      இருளினது விரும்பல் போன்றே! 3

இன்னாத பிறர்க்கெண்ணான் பாரதநாட்
      டிற்கிரங்கி இதயம் நைவான்
ஒன்னாரென் றெவருமிலான் உலகனைத்தும்
      ஓருயிரென் றுணர்ந்த ஞானி.
அன்னானைச் சிறைப்படுத்தார் மேலோர்தம்
      பெருமையெதும் அறிகி லாதார்,
முன்னாளில் துன்பின்றி இன்பம்வரா
      தெனப் பெரியோர் மொழிந்தா ரன்றே?

$$$

5. வாழ்க திலகன் நாமம்!

பல்லவி

வாழ்க திலகன் நாமம்! வாழ்க! வாழ்கவே!
வீழ்க கொடுங் கோன்மை! வீழ்க! வீழ்கவே!

சரணங்கள்

நாலுதிசையும் ஸ்வாதந்தர்ய நாதம் எழுகவே!
நரக மொட்த அடிமை வாழ்வு நைந்து கழிகவே!
ஏலுமனிதர் அறிவை யடர்க்கும் இருள் அழிகவே!
எந்தநாளும் உலகமீதில் அச்சம் ஒழிகவே! (வாழ்க) 1

கல்வி யென்னும் வலிமை கொண்ட
கோட்டை கட்டினான் – நல்ல
கருத்தினா லதனைச் சூழ்ந்தோர்
அகழி வெட்டினான்
சொல் விளக்க மென்ற தனிடைக்
கோயி லாக்கினான்
ஸ்வாதந் தர்யமென்ற தனிடைக்
கொடியைத் தூக்கினான் (வாழ்க) 2

துன்பமென்னும் கடலைக் கடக்குந்
தோணி யவன் பெயர்
சோர்வென்னும் பேயை யோட்டுஞ்
சூழ்ச்சி யவன் பெயர்
அன்பெனுந்தேன் ஊறித் ததும்பும்
புதுமலர் அவன்பேர்
ஆண்மையென்னும் பொருளைக் காட்டும்
அறிகுறி யவன்பேர். (வாழ்க) 3

$$$

6. திலகர் முனிவர் கோன்

நாம கட்குப் பெருந்தொண் டியற்றிப்பல்
      நாட்டி னோர்தம் கலையிலும் அவ்வவர்
தாம கத்து வியப்பப் பயின்றொரு
      சாத்தி ரக்கடலென விளங்குவோன்,
மாம கட்குப் பிறப்பிட மாகமுன்
      வாழ்ந்திந் நாளில் வறண்டயர் பாரதப்
பூம கட்கு மனந்துடித் தேயிவள்
      புன்மை போக்குவல் என்ற விரதமே. 1

நெஞ்ச கத்தோர் கணத்திலும் நீங்கிலான்
      நீத மேயோர் உருவெனத் தோன்றினோன்,
வஞ்ச கத்தைப் பகையெனக் கொண்டதை
      மாய்க்கு மாறு மனத்திற் கொதிக்கின்றோன்,
துஞ்சு மட்டுமிப் பாரத நாட்டிற்கே
      தொண்டிழைக்கத் துணிந்தவர் யாவரும்
அஞ்செ ழுத்தினைச் சைவர் மொழிதல்போல்
      அன்பொ டோதும் பெயருடை யாவரின். 2

வீர மிக்க மராட்டியர் ஆதரம்
      மேவிப் பாரத தேவி திருநுதல்
ஆர வைத்த திலகமெனத் திகழ்
      ஐயன் நல்லிசைப் பாலகங் காதரன்,
சேர லர்க்கு நினைக்கவுந் தீயென
      நின்ற எங்கள் திலக முனிவர்கோன்
சீர டிக்கம லத்தினை வாழ்த்துவேன்
      சிந்தை தூய்மை பெறுகெனச் சிந்தித்தே. 3

$$$

7. லாஜபதிராய் துதி

விண்ணகத்தே இரவிதனை வைத்தாலும்
      அதன்கதிர்கள் விரைந்து வந்து
கண்ணகத்தே ஒளிதருதல் காண்கிலமோ?
      நினையவர் கனன்றிந் நாட்டு
மண்ணகத்தே வாழாது புறஞ்செய்தும்
      யாங்களெலாம் மறக்கொ ணாதெம்
எண்ணகத்தே, லாஜபதி! இடையின்றி
      நீவளர்தற் கென்செய் வாரே? 1

ஒருமனிதன் தனைப்பற்றிப் பலநாடு
      கடத்தியவர்க்கு ஊறு செய்தல்
அருமையில்லை; எளிதினவர் புரிந்திட்டா
      ரென்றிடினும் அந்த மேலோன்
பெருமையைநன் கறிந்தவனைத் தெய்வமென
      நெஞ்சினுளே பெட்பிற் பேணி
வருமனிதர் எண்ணற்றார் இவரையெலாம்
      ஓட்டியெவர் வாழ்வ திங்கே? 2

பேரன்பு செய்தாரில் யாவரே
      பெருந்துயரம் பிழைத்து நின்றார்?
ஆரன்பு நாரணன்பால் இரணியன்சேய்
      செய்ததனால் அவனுக் குற்ற
கோரங்கள் சொலத் தகுமோ? பாரதநாட்
      டிற்பக்தி குலவி வாழும்
வீரங்கொள் மனமுடையார் கொடுந்துயரம்
      பலவடைதல் வியத்தற் கொன்றோ? 3

$$$

8. லாஜபதியின் பிரலாபம்

கண்ணிகள்

நாடிழந்து மக்களையும் நல்லாளை யும்பிரிந்து
வீடிழந்திங் குற்றேன் விதியினையென் சொல்கேனே? 1

வேதமுனி போன்றோர் விருத்தரா மெந்தையிரு
பாதமலர் கண்டு பரவப் பெறுவேனோ? 2

ஆசைக் குமரன் அர்ச்சுனனைப் போல்வான்றன்
மாசற்ற சோதி வதனமினிக் காண்பேனோ? 3

அன்றிலைப்போன் றென்னை அரைக்கணமே னும்பிரிந்தால்
குன்றிமனஞ் சோர்வாளிக் கோலம் பொறுப்பாளோ? 4

வீடும் உறவும் வெறுத்தாலும் என்னருமை
நாடு பிரிந்த நலிவினுக்கென் செய்கேனே? 5

ஆதிமறை தோன்றியநல் லாரியநா டெந்நாளும்
நீதிமறை வின்றி நிலைத்த திருநாடு. 6

சிந்துவெனுந் தெய்வத் திருநதியும் மற்றதிற்சேர்
ஐந்துமணி யாறும் அளிக்கும் புனல்நாடு. 7

ஐம்புலனை வென்ற அறவோர்க்கும் மாற்றலர் தம்
வெம்புலனை வென்ற எண்ணில் வீரருக்குந் தாய்நாடு. 8

நல்லறத்தை நாட்டுதற்கு நம்பெருமான் கௌரவராம்
புல்லியரைச் செற்றாழ்த்த புனிதப் பெருநாடு. 9

கன்னாணுந் திண்டோட் களவீரன் பார்த்தனொரு
வின்னா ணொலிகேட்ட மேன்மைத் திருநாடு. 10

கன்ன னிருந்த கருணை நிலம் தர்மனெனும்
மன்னன் அறங்கள் வளர்த்த புகழ்நாடு. 11

ஆரியர்தம் தர்மநிலை ஆதரிப்பான் வீட்டுமனார்
நாரியர்தங் காதல் துறந்திருந்த நன்னாடு. 12

வீமன் வளர்த்த விறல்நாடு வில்லசுவத்
தாம னிருந்து சமர்புரிந்த வீரநிலம். 13

சீக்கரெனும் எங்கள்விறற் சிங்கங்கள் வாழ்தருநல்
ஆக்கமுயர் குன்றம் அடர்ந்திருக்கும் பொன்னாடு. 14

ஆரியர் பாழாக தருமறையின் உண்மைதந்த
சீரியர் மெஞ்ஞான தயாநந்தர் திருநாடு. 15

என்னருமைப் பாஞ்சாலம் என்றேனும் காண்பேனோ?
பன்னரிய துன்பம் படர்ந்திங்கே மாய்வேனோ? 16

ஏதெல்லாம் பாரதத்தே இந்நாள் நடப்பனவோ?
ஏதெல்லாம் யானறியாது என்மனிதர் பட்டனரோ? 17

என்னை நினைத்தும் இரங்குவரோ? அல்லாது
பின்னைத் துயர்களிலென் பேரும்மறந் திட்டாரோ? 18

தொண்டுபட்டு வாடுமென்றன் தூயபெருநாட்டில்
கொண்டுவிட்டங் கென்னையுடன் கொன்றாலும் இன்புறுவேன். 19

எத்தனை ஜன்மங்கள் இருட்சிறையி லிட்டாலும்
தத்துபுனற் பாஞ்சாலந் தனில்வைத்தால் வாடுகிலேன். 20

$$$

9. வ.உ.சி.க்கு வாழ்த்து

வேளாளன் சிறைபுகுந்தான் தமிழகத்தார்
      மன்னனென மீண்டான் என்றே
கேளாத கதைவிரைவிற் கேட்பாய் நீ
      வருந்தலைஎன் கேண்மைக்கோவே!
தாளாண்மை சிறினுகொலோ யாம்புரிவேம்
      நீஇறைக்குத் தவங்கள் ஆற்றி,
வேளாண்மை நின் துணைவர் பெறுகெனவே
      வாழ்த்துதிநீ வாழ்தி! வாழ்தி!

$$$

One thought on “பாரதியின் தேசியத் தலைவர்கள் மீதான பாடல்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s