பாரதியின் வசன கவிதை – 5

-மகாகவி பாரதி

5. ஜகத் சித்திரம்

(சிறு நாடகம்)

முதற் காட்சி

இடம்- மலையடி வாரத்தில் ஒரு காளி கோயில்.
நேரம்- நடுப்பகல்.

காக்கை யரசன்– (கோயிலை எதிர்த்த தடாகத்தின் இடையிலிருந்த தெப்ப மண்டபத்தின் உச்சியில் ஏறி உட்கார்ந்துகொண்டு சூர்யனை நோக்கிச்
சொல்லுகிறான்:-)

“எங்கோ வாழ்!
நீல மலைகள் நிரம்ப அழகியன.
வானம் அழகியது. வான்வெளி இனிது.
வான வெளியை மருவிய நின்னொளி
இனியவற்றுள் எல்லாம் இனிது.

‘எங்கே,’ ‘எங்கோ,’ எனவும்; அன்றி
‘கிலுகிலு கிலுகிலு’ எனவும்; ‘கிக்கீ;
கிக்கீ’ என்றும்; ‘கேக்க,’ ‘கேக்க’
‘கேட்க, கேட்க’ எனவும்; ‘கெக்கெக்கே’ –
‘குக்குக் குக்குக் குக்குக் குக்குக
குக்கூவே!’ என்றும்; ‘கீச்கீச், கீச்கீச்,’
‘கிசு, கிசு, கிசுகீச்’ என்றும்; ‘ரங்க, ரங்க’ –
என்றும் பல்லாயிர வகையினில் இசைக்கும்
குயில்களும், கிளிகளும், குலவுபல ஜாதிப்
புட்களும் இனிய பூங்குர லுடையன.
எனினும்,
இத்தனையின்பத் தினிடையே, உயிர்க் குலத்தின்
உளத்தே மாத்திரம் இன்ப முறவில்லை.
இஃதென்னே! – காக்கா! காக்கா; எங்கோவாழ்!”

இதைக் கேட்டு, மற்றப் பக்ஷிகளெல்லாம் கத்துகின்றன:-

“ஆம், ஆம், ஆமாம், ஆமாம். ஆமாமடா!
ஆமாமடா! ஆமாம். எங்கோ வாழ். எங்கோ வாழ்.
நன்றாக உரைத்தாய். மனந்தான் சத்துரு. வேறு
நமக்குப் பகையே கிடையாது. மனந்தான் நமக்குள்ளேயே
உட்பகையாக இருந்துகொண்டு, நம்மை வேரறுக்கிறது. அடுத்துக் கெடுக்கிறது.

மனந்தான் பகை.

அதைக் கொத்துவோம் வாருங்கள். அதைக் கிழிப்போம் வாருங்கள். அதை வேட்டையாடுவோம் வாருங்கள்.”

***

இரண்டாம் காட்சி

வானுலகம்- இந்திர சபை

தேவேந்திரன் கொலுவீற்றிருக்கிறான்.

தேவ சேவகன்:- தேவ தேவா!

இந்திரன்:- சொல்.

தேவ சேவகன்:- வெளியே நாரதர் வந்து காத்திருக்கிறார். தங்களைத்
தரிசிக்க வேண்டுமென்று சொல்லுகிறார்.

இந்திரன்:- வருக.

(நாரதர் பாடிக்கொண்டு வருகிறார்).

“நாராயண, நாராயண, நாராயண, ஹரி, ஹரி, நாராயண, நாராயண”

இந்திரன்:- நாரதரே! நாராயணன் எங்கிருக்கிறான்?

நாரதர்:- நீ அவனைப் பார்த்தது கிடையாதோ?

இந்திரன்:- கிடையாது.

நாரதர்:- ஸர்வ பூதங்களிலும் இருக்கிறான்.

இந்திரன்:- நரகத்திலிருக்கிறானா?

நாரதர்:- ஆம்.

இந்திரன்:- துன்பத்தி லிருக்கிறானா?

நாரதர்:- ஆம்.

இந்திரன்:- மரணத்திலிருக்கிறானா?

நாரதர்:- ஆம்.

இந்திரன்:- உங்களுடைய ஸர்வ நாராயண சித்தாந்தத்தின்
துணிவு யாது?

நாரதர்:- எல்லா வஸ்துக்களும், எல்லா லோகங்களும், எல்லா நிலைமைகளும், எல்லாத் தன்மைகளும், எல்லா சக்திகளும், எல்லா ரூபங்களும், எல்லாம் ஒன்றுக்கொன்று சமானம்.

இந்திரன்:- நீரும் கழுதையும் சமானந்தானா?

நாரதர்:- ஆம்.

இந்திரன்:- அமிருத பானமும், விஷபானமும் சமானமா?

நாரதர்:- ஆம்.

இந்திரன்:- சாதுவும், துஷ்டனும் சமானமா?

நாரதர்:- ஆம்.

இந்திரன்:- அசுரர்களும், தேவர்களும் சமானமா?

நாரதர்:- ஆம்.

இந்திரன்:- ஞானமும், அஞ்ஞானமும் சமானமா?

நாரதர்:- ஆம்.

இந்திரன்:- சுகமும், துக்கமும் சமானமா?

நாரதர்:- ஆம்.

இந்திரன்:- அதெப்படி?

நாரதர்:- சர்வம் விஷ்ணுமயம் ஜகத்-
(பாடுகிறார்) நாராயண, நாராயண, நாராயண, நாராயண.

***

மூன்றாம் காட்சி

இடம்:- மண்ணுலகத்தில் ஒரு மலையடிவாரத்தில் ஒரு காளி கோயிலுக் கெதிரே சோலையில்.

கிளி பாடுகிறது:- தைர்யா, தைர்யா, தைர்யா-
தன்மனப் பகையைக் கொன்று
தமோ குணத்தை வென்று
உள்ளக் கவலை யறுத்து
ஊக்கந் தோளிற் பொறுத்து
மனதில் மகிழ்ச்சி கொண்டு
மயக்க மெலாம் விண்டு
சந்தோஷத்தைப் பூண்டு
தைர்யா, ஹுக்கும், ஹுக்கும்!
ஹுக்கும், ஹுக்கும்!
ஆமடா, தோழா!
ஆமாமடா,
எங்கோவா, எங்கோவா!
தைர்யா, தைர்யா, தைர்யா!

குயில்கள்:- சபாஷ்! சபாஷ்! சபாஷ்!

குருவிகள்:- ‘டிர்ர்ர்ர்ர்ர்ர்ர்’, ‘டிர்ர்ர்ர்’

நாகணவாய்:- ஜீவ, ஜீவ, ஜீவ, ஜீவ, ஜீவ, ஜீவ,

குருவிகள்:- சிவ, சிவ, சிவ, சிவ, சிவ சிவா, சிவ சிவா.

காக்கை: எங்கோ வாழ்! எங்கோ வாழ்!

கிளி:- கேளீர், தோழர்களே! இவ்வுலகத்தில் தற்கொலையைக் காட்டிலும் பெரிய குற்றம் வேறில்லை. தன்னைத்தான் மனத்தால் துன்புறுத்திக் கொள்வதைக் காட்டிலும் பெரிய பேதைமை வேறில்லை.

காக்கை:- அக்கா! அக்கா! காவு! காவு!

குருவி:- கொட்டடா! கொட்டடா! கொட்டடா!

கிளி:- ஹுக்குக்கூ!

கிளி:- காதலைக் காட்டிலும் பெரிய இன்பம் வேறில்லை.

அணிற் பிள்ளை:- ஹுக்கும், ஹுக்கும், ஹுக்கும், ஹுக்கும்.

பசுமாடு:- வெயிலைப்போல் அழகான பதார்த்தம் வேறில்லை.

அணில்:- பசுவே, இந்த மிக அழகிய வெயிலில் என் கண்ணுக்குப் புலப்படும் வஸ்துக்களுக்குள்ளே உன் கண்ணைப் போல் அழகிய பொருள் பிறிதொன்றில்லை.

நாகணவாய்:- டுபுக்! பாட்டைக் காட்டிலும் ரசமான தொழில் வேறில்லை.

எருமை மாடு:- பக்ஷி ஜாதிகளுக்குள்ள சந்தோஷமும், ஜீவ ஆரவாரமும், ஆட்ட ஓட்டமும், இனிய குரலும் மிருக ஜாதியாருக்கும், மனுஷ்ய ஜாதியாருக்கும் இல்லையே? இதன் காரணம் யாது?

நாகணவாய்:- டுபுக்! வெயில் காற்று, ஒளி இவற்றின் தீண்டுதல் மிருக மனிதர்களைக் காட்டிலும் எங்களுக்கதிகம். எங்களுக்கு உடம்பு சிறிது. ஆதலால் தீனி சொற்பம்; அதைச் சிறிது சிறிதாக நெடுநேரம் தின்கிறோம். ஆதலால் எங்களுக்கு உணவின்பம்
அதிகம். மிருக மனிதஜாதியார்களுக்குள் இருப்பதைக்காட்டிலும் எங்களுக்குள்ளே காதலின்பம் அதிகம். ஆதலால் நாங்கள் அதிக சந்தோஷமும், பாட்டும், நகைப்பும், கொஞ்சு மொழிகளுமாகக் காலங்கழிக்கிறோம். இருந்தாலும், கிளியரசு சொல்லியது போல், காலனுக்குத் தூதனாகிய மனக்குறையென்னும் பேய் எங்கள் குலத்தையும் அழித்துவிடத்தான் செய்கிறது. அதற்கு நிவாரணம் தேடவேண்டும். கவலையைக் கொல்வோம் வாருங்கள். அதிருப்தியைக் கொத்துவோம், கொல்லுவோம்.

மற்ற பக்ஷிகள்:- வாருங்கள், வாருங்கள், வாருங்கள் துயரத்தை அழிப்போம், கவலையைப் பழிப்போம், மகிழ்வோம், மகிழ்வோம், மகிழ்வோம்.

***
நான்காம் காட்சி

இடம்:- கடற்கரை.

நேரம்:- நள்ளிரவு; முழுநிலாப் பொழுது.

இரண்டு பாம்புகள் ஒரு பாலத்தடியே இருட் புதரினின்றும் வெளிப்பட்டு நிலா வீசி ஒளிதரும் மணல்மீது வருகின்றன.

ஆண் பாம்பு:- உன்னுடன் கூடிவாழ்வதில் எனக்கின்பமில்லை. உன்னால் எனது வாழ்நாள் விஷமயமாகிறது. உன்னாலேதான் என் மனம் எப்போதும் அனலில்பட்ட புழுவைப் போலே துடித்துக் கொண்டிருக்கிறது.

பெண் பாம்பு:- உன்னுடன் கூடிவாழ்வதில் எனக்கின்பமில்லை. உன்னால் எனது வாழ்நாள் நரகமாகிறது. உன்னால் என் மனம் தழலிற்பட்ட புழுவைப்போல் இடையறாது துடிக்கிறது.

ஆண் பாம்பு:- நான் உன்னைப் பகைக்கிறேன்.

பெண் பாம்பு:- நான் உன்னை விரோதிக்கிறேன்.

ஆண் பாம்பு:- நான் உன்னைக் கொல்லப்போகிறேன்.

பெண் பாம்பு:- நான் உன்னைக் கொல்லப்போகிறேன். ஒன்றையொன்று கடித்து இரண்டு பாம்புகளும் மடிகின்றன.

***

ஐந்தாம் காட்சி

கடற்கரை

தேவதத்தன் என்ற மனித இளைஞன்:- நிலா இனியது; நீல வான் இனியது. தெண்டிரைக் கடலின் சீர், ஒலி இனிய; உலகம் நல்லது. கடவுள் ஒளிப்பொருள். அறிவு கடவுள்; அதனிலை மோக்ஷம்.

விடுதலைப் பட்டேன். அசுரரை வென்றேன்.

நானே கடவுள். கடவுளே நான்.

காத லின்பத்தாற் கடவுள்நிலை பெற்றேன்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s