பாரதியின் வசன கவிதை – 4

-மகாகவி பாரதி

4 கடல்

1.

கடலே காற்றைப் பரப்புகின்றது.
விரைந்து சுழலும் பூமிப்பந்தில் பள்ளங்களிலே தேங்கியிருக்கும் கடல்- நீர் அந்தச் சுழற்சியிலே தலைகீழாகக் கவிழ்ந்து திசைவெளியில் ஏன் சிதறிப் போய்விடவில்லை?
பராசக்தியின் ஆணை.
அவள் நமது தலைமீது கடல் கவிழ்ந்துவிடாதபடி ஆதரிக்கிறாள்.
அவள் திருநாமம் வாழ்க.

கடல் பெரிய ஏரி; விசாலமான குளம்; பெருங் கிணறு.
கிணறு நம் தலையிலே கவிழ்கிறதா?
அது பற்றியே கடலும் கவிழவில்லை.
பராசக்தியின் ஆணை.
அவள் மண்ணிலே ஆகர்ஷணத் திறமையை நிறுத்தினாள்.
அது பொருள்களை நிலைப்படுத்துகின்றது.
மலை நமது தலைமேலே புரளவில்லை.
கடல் நமது தலைமேலே கவிழவில்லை.
ஊர்கள் கலைந்து போகவில்லை.
உலகம் எல்லா வகையிலும் இயல்பெறுகின்றது.
இஃதெல்லாம் அவளுடைய திருவருள்.
அவள் திருவருளை வாழ்த்துகின்றோம்.

2.

வெம்மைமிகுந்த பிரதேசங்களிலிருந்து வெம்மைகுன்றிய பிரதேசங்களுக்குக் காற்று ஓடி வருகிறது.
அங்ஙனம் ஓடிவரும்போது காற்று மேகங்களையும் ஓட்டிக் கொண்டு வருகிறது.
இவ்வண்ணம் நமக்குவரும் மழை கடற்பாரிசங்களிலிருந்தே வருகின்றது.
காற்றே, உயிர்க்கடலிலிருந்து எங்களுக்கு நிறைய உயிர் மழை கொண்டு வா.
உனக்குத் தூப தீபங்கள் ஏற்றிவைக்கிறோம்.
வருணா, இந்திரா, நீவிர் வாழ்க.
இப்போது நல்ல மழை பெய்யும்படி அருள்புரிய வேண்டும்.
எங்களுடைய புலங்களெல்லாம் காய்ந்து போய் விட்டன.
சூட்டின் மிகுதியால் எங்கள் குழந்தைகளுக்கும் கன்று காலிகளுக்கும் நோய்வருகிறது. அதனை மாற்றியருள வேண்டும்.
பகல் நேரங்களிலே அனல் பொறுக்கமுடியவில்லை.
மனம் ‘ஹா ஹா’ வென்று பறக்கிறது.
பறவைகளெல்லாம் வாட்டமெய்தி நிழலுக்காகப் பொந்துகளில் மறைந்து கிடக்கின்றன.

பல தினங்களாக, மாலைதோறும் மேகங்கள்வந்து கூடுகின்றன.
மேக மூட்டத்தால் காற்று நின்றுபோய், ஓரிலைகூட அசையாமல், புழுக்கம் கொடிதாக இருக்கிறது.
சிறிதுபொழுது கழிந்தவுடன் பெரிய காற்றுக்கள் வந்து
மேகங்களை அடித்துத் துரத்திக்கொண்டு போகின்றன.
இப்படிப் பலநாட்களாக ஏமாந்து போகிறோம்.
இந்திரா, வருணா, அர்யமா, பகா, மித்திரா – உங்கள்
கருணையைப் பாடுகிறேன்.
எங்கள் தாபமெல்லாந் தீர்ந்து உலகம் தழைக்குமாறு
இன்ப மழை பெய்தல் வேண்டும்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s