பாரதியின் சித்திர விளக்கங்கள் – 1

-மகாகவி பாரதி

மிகப் பெரிய கட்டுரையில் தெரிவிக்க வேண்டிய கருத்தை ஒரே கருத்துப்படம் மூலமாகத் தெரிவித்து விடலாம். எனவேதான் அது கருத்துப்படம் அல்லது ‘கார்ட்டூன்’ எனப்படுகிறது. தமிழில் கார்ட்டூன்களை அறிமுகப்படுத்தியவர், நமது இதழியல் தந்தை மகாகவி பாரதியே.

அவர் தமது ‘இந்தியா’ இதழில் முகப்புப் பக்கத்தில் வெளியிட்ட சித்திர விளக்கங்களே, தமிழ் இதழியலில் கார்டூன்களின் துவக்கம். இங்கு அவரது மூன்று சித்திர விளக்கங்கள் (27.04.1907, 04.05.1907, 06.04.1907) கொடுக்கப்பட்டுள்ளன…

இந்தியா (27.04.1907) சித்திர விளக்கம்

20 வருஷ காலமாக நமது காங்கிரஸ் வெகு ஸமாதானமாகப் பிரதிவருஷமும் கூடி, ராஜாங்க நடத்தைகளைப் பற்றியும் மற்ற நன்மைகளைப் பற்றியும் ஆலோசித்துக் குறைகள் அனைத்தையும் எடுத்துக்காட்டி விண்ணப்பப் பத்திரிகைகள் ராஜாங்கத்தாருக்கு விடுத்து வந்தது.

இடைவழியில் சிலர் அவ்வகையான விண்ணப்பமெழுதும் முறைமை சிறிதும் பயன்படாததைச் சீக்கிரம் உணர்ந்து இனி அந்த வழியில் செல்லுதல் பயனில்லை என்று தீர்மானித்து ‘நமக்கு நாமே துணை’ என்னும் கோட்பாட்டைப் பற்றியொழுக ஆரம்பித்தனர். அவர்கள்தாம் புதுக் கட்சியார். அதன் தலைவர் திலகர், விபின பாலர் முதலியவரே.

பழங்கட்சியையே அனுஸரித்து வருபவர் கோகலே, மேத்தா முதலியவராவர்.
இப்போது வரைந்திருக்கும் சித்திரத்தில் இருக்கும் வண்டியானது காங்கிரஸை உணர்த்துகிறது. அதில் பூட்டியிருக்கும் இரண்டு காளைகளில் ஒன்று புதுக்கட்சியைச் சேர்ந்தவரையும், மறறொன்று விண்ணப்பமெழுதும் பழங்கட்சிக்காரரையும் உணர்த்துகின்றன.

அதாவது, ஒன்றைப் பாலகங்காதர திலகராகவும், மற்றொன்றை மேத்தாவாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அவை இவ் வண்டியை ‘ஸ்வராஜ்யம்’ என்னும் இடத்தை நாடி இழுத்துச் செல்லுகின்றன.

திலகருடன் ஈடுகொடுக்க முடியாமல் தட்டுக் கெட்டுத் தடுமாறி இடைவெழியில் மேத்தா என்கிற காலை படுத்துக் கொண்டு நகர முடியாமல் கையில் பேனா எடுத்துக் கொண்டு விண்ணப்பம் எழுத ஆரம்பித்து விட்டது.

திலகரைக் குறிக்கும் காளையோ அதிக உற்சாகத்துடனும் இறுமாப்புடனும் தலைநிமிர்ந்து ஸ்வராஜ்யமாகிய இடத்தைக் கண்டு முக்காரம் போடுகிறது.

-இந்தியா (27.04.1907)

$$$

இந்தியா (04.05.1907) சித்திர விளக்கம்

‘பயம் என்னும் பெயர்கொண்ட கிழவி ‘நிதானம்’ என்ற பெயர்கொண்ட தொட்டிலிலே குழந்தைகள் போட்டு ஆட்டுகிறார். இந்தக் குழந்தைகள் யாவரெனில், சென்னை நிதானக் கட்சித் தலைவர்களாகிய வி.கிருஷ்ணசாமி அய்யர், கோவிந்த ராகவய்யர் முதலியவர்களே.

இதன் குறிப்பென்ன வென்றால், இந்த நிதானக் கட்சித் தலைவர்கள் பயம், சந்தேகம் முதலிய குணங்களின் வசப்பட்டு தேசபக்திக் கட்சியினின்றும் விலகி நிற்கிறார்கள். இதற்கு இப்போது ஒரு சரியான திருஷ்டாந்தம் கிடைத்திருக்கிறது.

விபின சந்திரபாபு இப்போது சென்னைக்கும் வந்திருப்பதில் இவர்க ளெல்லாம் அவருக்கு மரியாதை செய்யும் கூட்டத்திலே சேராமல் பிரிந்திருக்கிறார்கள். இவர்கள் இவ்வாறு விலகி இருப்பதால் எவ்விதமான நஷ்டமும் நேர்ந்து விடவில்லை.

லக்ஷக்கணக்கான ஜனங்கள் சென்னையிலே விபின பாபுவைத் தெய்வம் போலக் கொண்டாடுகிறார்கள்.

குடித்தனக்காரர்களிடம் பணம் இறுக்கி வாங்குவதிலே நாட்களையும் சிந்தனையையும் செலவிட்டு வருவோர்களாகிய சில வக்கீல்கள் பிரிந்து நிற்பதினாலே குடிகெட்டுப் போய்விடுமா?

அபிப்பிராயங்களிலே வித்தியாசமேற்பட்ட போதிலும் தேசபக்தி என்ற பொதுக் கருத்துக் கொண்டேனும் இந்த வக்கீல் கூட்டத்தார் அவருக்கு மரியாதை புரிய முற்படாதிருந்தமை மிகவும் வினோதமாக விருக்கின்றது. இவர்க ளெல்லாம் ஜனத்தலைவர்க ளென்றும், தேசபக்தர்க ளென்றும் நடித்துக் கொள்கிறார்களே, இதன்றோ வியப்பு!

-இந்தியா (04.05.1907)

$$$

இந்தியா (06.04.1907) சித்திர விளக்கம்

நமது சித்திரத்திலே வலை விரித்திருக்கின்ற தல்லவா? அது கிறிஸ்து மார்க்க வலை. அதைப் பற்றிக்கொண்டு ஒரு வேடன் காணப்படுகிறான். அதுதான் சென்னை லார்ட் பிஷப். இவர் ஹிந்துக்களாகிய பஷிகள் மேற்படி வலையிலே வந்து விழ வேண்டுமென்று எவ்வளவோ பிரயத்தனம் செய்து வலையிலே அனேக தின்பண்டங்க ளெல்லாம் வைத்திருக்கிறார். அவ்வாறிருந்தும், ஹிந்து பஷிகள் மேலே வந்து சுற்றுகின்றனவே யல்லாமல் சரியானபடி வலைக்குள் விழமாட்டோ மென்கின்றன.

அதன் பேரில் இவர் காடு வழியாகப் போய்க் கொண்டிருந்த வேறொரு வேடனை நோக்கி “அண்ணே! உனக்குப் பஷி மந்திரங்கள் ஜாஸ்தியாகத் தெரியும். உன்னுடைய உதவி யிருந்தால் எனக்கு எத்தனையோ பட்சிகள் சேரும். இப்போது பட்சிகள் வந்து விழுவது மிகவும் ஆபூர்வமாக இருக்கிறது. கொஞ்சம் உதவி பண்ணக்கூடாதா?” என்று கேட்கிறார்.

மற்றொரு வேடன் யாரென்றால் சென்னை கவர்னரவர்கள். இந்த வேடன் சொல்லுகிறார்: “தம்பி, உனது வலையிலே பஷிகள் விழுந்தால் எனக்கும் திருப்திதான். ஆனால், நான் உனக்கு மந்திரங்களைச் சொல்லிவிடும் பட்சத்தில் என்னை எனது பெரியார்கள் கோபித்துக் கொள்வார்களே? என்ன செய்வேன்?” என்கிறார்.

அதாவது கவர்னர் கிறிஸ்தவப் பாதிரிகளிடம் மிகவும் அன்பிருந்த போதிலும் பகிரங்கமாக உதவி செய்வது ஸர்க்கார் முறைமைக்கு விரோத மென்பதை அறிந்திருக்கிறா ரென்பது கருத்து.

இந்த வினோத சித்திரம் நாம் சென்ற வாரம் பிரசுரம் புரிந்த  ‘சென்னை கவர்னரும் சென்னை பிஷப்பும் செய்த கிறிஸ்து மார்க்கத்து உபதேசம்’ என்ற குறிப்பைத் தழுவியது.

எஸ்.பி.ஜி. காலேஜில் நடந்த வருஷாந்த சபையிலே சென்னை கவர்னரும் பிஷப்பும் சொல்லிய வசனங்களை அந்தக் குறிப்லே விஸ்தாரமாக எழுதி யிருக்கிறோம். எனினும், ஞாபகார்த்தமாக மேற்படி வசனங்களை இங்கு மறுபடியும் குறிப்பிடுகின்றோம்.

கவனர் தாம் செய்த பிசங்கத்தினிடையே, “தாம் கிறிஸ்து மார்க்கதைச் சேர்த்தவ ராதலால், தமது தேசத்திலிருந்து ஆண்களும், பெண்களுமாகிய பல பாதிரிக் கூட்டத்தார், எவ்வித உலக நலத்திலும் இச்சை யற்றவர்களாய், பரோபகார சிந்தை கொண்டு இந்நாட்டுக்கு வந்து கிறிஸ்து மார்க்க போதனை செய்வது பற்றி அவர்கள் மீது தமக்கு மிகுந்த அன்பு விளைகிறதென்றும், நிர்க்கதியாக வாழும் மனுஷ ஜாதிக்கு இவ் வுலகத்தில் உண்மையான நன்மை கிடைப்பதற்குக் கிறிஷ்து மார்க்கம் ஒன்றே தகுதியான வழி” யென்றும் சொன்னார்.

அப்பால் லார்டு பிஷப், “மதராஸ் கவர்ன்மெண்டாரே ஆரம்பத்தில் முதலாம் சுதேசியைக் கிறிஸ்து மார்க்கத்திலே சேர்த்தார்கள். 1624-ம் வருஷத்தில் மசூலிப்பட்டணத்திலே கிறிஸ்து மார்க்க சம்பந்தமான பாதிரித் தொழிலுக்குக் கவர்ன்மெண்டாரே அஸ்திவாரம் போட்டார்கள். அந்த மாதிரி நற்காலம் இப்பொழுது திரும்புமானால் இந்தப் பள்ளிச்கூடத்திலிருந்தே ஏராளமான பிள்ளைகளைக் கிறிஸ்து மார்க்கத்தில் சேர்ந்து விடலாம்” என்றார்.

கிறிஸ்து மார்க்கத்திற்கு விரோதமாக எழுத வேண்டுமென்ற நோக்கம் நமக்குச் சிறிதேனும் கிடையாதென்பதையும், கவர்னரும் லார்ட் பிஷப்பும் மேற்கண்டவாறு பேசியது தப்பென்பதே நமது அபிப்பிராய மென்பதையும் இங்கு மறுபடியும் தெரிவித்துக் கொள்கிறோம். 

-இந்தியா (06.04.1907)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s