உள்ளொளி – திரு.வி.க. (பகுதி- 4)

அத்தியாயம்3

 உள்ளொளி

தோழர்களே! இன்று வருவது ‘உள்ளொளி.’  ஒளி இருளைப் போக்குவது. இஃது எவரும் காண்பதொன்று. ஒளி இருவகை. ஒன்று புறவொளி; மற்றொன்று உள்ளொளி. இருளும் இருவகை. ஒன்று புறவிருள்; மற்றொன்று உள்ளிருள். புற ஒளி புற இருளை அகற்றுவது; உள் ஒளி உள் இருளை அகற்றுவது. உள்ளிருள் ஒழிந்தால் எல்லா இருளும் ஒழியும். ஆகவே உள்ளிருளை ஒழிக்க வேண்டுவது நமது கடமை. உள்ளிருளை நீக்குவது உள்ளொளி.

ஒளி இருள்

ஒளி – இருள் என்னும் இரண்டும் பொருளா? அல்லவா? ஒளி பொருள் என்பது உறுதி செய்யப்பெற்ற உண்மை. இருள் பொருளா அன்றா என்பதில் கருத்து வேற்றுமை உண்டு. தத்துவருள் சிலர் இருளைப் பொருள் என்பர். வேறு சிலர் அதைப் பொருளன்று என்பர். விஞ்ஞான உலகின் கருத்து யாது? விஞ்ஞான உலகம் முழுமை எய்தாதது; வளர்ந்து வருவது; அதன் ஆராய்ச்சி சடத் தளவில் நிற்பது. இத்தகைய ஒன்றன் கருத்தை ஓரளவிலேயே கொள்ளுதல் வேண்டும். இருளைப்பற்றி ஆராய ஆராய அஃது ஒரு நிலையில் பொருளாகத் தோன்றும்; இன்னொரு நிலையில் பொருளாகத் தோன்றாது. அவ்வாராய்ச்சியில் தலைப்பட்டுத் தலைப்பட்டுப் பட்ட பாடு போதும்; போதும்.

யான் இரவையும் பார்க்கிறேன்; பகலையும் பார்க்கிறேன். இரவில் விளக்கொளியின் துணையை நாடுகிறேன் அத்துணையைப் பகலில் நாடுகின்றேனில்லை. காலையில் ஞாயிற்றின் ஒளி பரவியதும் இருள் இரிந்து ஓடுகிறது. இது கண்கூடு. ஒளியை இருளாகக் காணும் உயிர்களு முண்டு. அவைகளைப்பற்றிய ஆராய்ச்சி இங்கே வேண்டுவதில்லை .

அறியாமை இருள்

புற இருள் இருத்தலை யான் காண்கிறேன்; அக இருள் இருத்தலை யான் உணர்கிறேன். எனக்கு அறியாமை இருக்கிறது. அறியாமையே அக இருள் என்பது. அறிவு ஒளி எழ எழ அறியாமை இருள் அகல்வதை யான் அநுபவத்தில் அறிகிறேன். முழு அறிவு விளங்கினால் அறியாமை இருள் முற்றும் விலகும். இந்நிலையில் அறியாமை இருள் எங்குற்றது என்று ஆராயத்தக்க அவசியம் ஏற்படாது. அஃது ஆராய்ச்சி கடந்ததுமாகும். ஆகவே இருள் பொருளா அன்றா என்னும் ஆராய்ச்சியில் யான் ஏன் புகல் வேண்டும்? இருளை அகற்றி ஒளி பெறவே யான் முயலுதல் வேண்டும். இதுவே எனது கடமை. ஒளி காண முயல்வோர், இருள் விசாரத்தில் மூழ்கி, அதில் கருத்து வைத்து, இருளடைதல் விரும்பத்தக்கதன்று.

முப்பொருள்

தீயொளி, விளக்கொளி, மின்னொளி, உடுக்களொளி, திங்களொளி, ஞாயிற்றொளி, ஒளிப் பிழம்பு முதலியன புறவொளிக் கூறுகள். புறவொளி, மண் புனல் வளி வெளி ஆகியவற்றிலும் உண்டு. அவ்வொளி உடல், உள்ளம், பிராணன், விந்து, நாதம் ஆகியவற்றிலும் இருக்கிறது புறவொளி ஒன்று. அது பலமுகங்கொண்டு நிற்கிறது. புறவொளி அறிவற்றது; சடம். அதற்கு ஆதாரமா யிருப்பது உள்ளொளி, உள்ளொளி. பரவொளி – பரவெளி – கடவுள் – முதலிய பல பெயர்களால் போற்றப்படுவது. உள்ளொளி அறிவு; முழு அறிவு; அறியாமையே இல்லாதது: சித்.

சடம் அறிவில்லாதது; தானே இயங்காதது. சித் முழு அறிவு. முழு அறிவு புது விளக்கம் பெற வேண்டுவதில்லை. இவ்விரண்டுமே பொருளாயின் உலக நிகழ்ச்சிக்கு இடம் ஏது? உலகம் நிகழ்ச்சியற்றா கிடக்கிறது? உலகம் நிகழ்கிறது. உலக நிகழ்ச்சிக்கு மூன்றாவது பொருளொன்று வேண்டப்படுகிறது. அது தானே இயங்காத சடமாகவும் இருத்தல் கூடாது; முழு அறிவாகிய சித்தாகவும் இருத்தல் கூடாது. இடைப்பட்ட ஒன்றா யிருத்தல் வேண்டும். அதுவே உயிர் என்பது. உயிர் சடத்தைச் சாரும் போது அம்மயமாகும்; சித்தைச் சாரும் போது அம்மயமாகும். அது [1] சார்ந்ததன் வண்ணமாகும் இயல்புடையது. உயிர் சடமா? சித்தா? உயிர் சித்தே. ஆனால் அஃது இருளால் விழுங்கப்பெறுதலால், அஃது அறிவற்றது போல் கருதப்படுகிறது. உயிரைச் சூழும் இருளே அறியாமை. அறியாமை – அஞ்ஞானம் – அவித்தை – ஆணவம் – முதலிய பல பெயர்களால் வழங்கப்படுகிறது. இருள் அறிவில்லாததாதலின், அது சடத்துள் சேர்க்கப் பட்டது. உயிர் அறியாமையினின்றும் விடுதலையடைந்தால் அது கித்தாகும்; முழு அறிவாகும்; ஒளியாகும்.


-——————————-
[1] வந்தெனுடல் பொருளாவி மூன்றுந் தன்கை
வசமெனவே அத்துவா மார்க்க நோக்கி
ஐந்து புலன் ஐம்பூதங் கரண மாதி
அடுத்த குணம் அத்தனையும் அல்லை அல்லை
இந்தவுடல் அறிவறியா மையுநீ யல்லை
யாதொன்று பற்றின் அதன் இயல்பாய் நின்று
பந்தமறும் பளிங்கனைய சித்து நீ உன்
பக்குவங்கண் டறிவிக்கும் பான்மை யேம்யாம்.       – தாயுமானார்

-——————————-

பாடியங்கள்

இங்கே சடம் – உயிர் – கடவுள் என்னும் மூன்று பொருளுண்மை தெரிகிறது. இம் மூன்றைப்பற்றி உலகம் இன்னும் ஆய்ந்த வண்ணம் இருக்கிறது. மூன்றும் ஒன்றே என்றும், வேறு வேறு என்றும், கலப்புற்ற ஒன்று என்றும் அறிஞர்களால் பலவாறு சொல்லப்படுகின்றன. முதல் நாள் உள்ளத்தைப்பற்றிப் பேசிய போதும், இரண்டாம் நாள் வழிபாட்டுள் அறிவைப்பற்றிப் பேசியபோதும் சட சித்துக்களைக் குறித்துச் சில உரை பகர்ந்தேன்; ஈண்டும் இரண்டோர் உரை பகர விரும்புகிறேன். பரம்பொருள் ஒன்றே என்றும், அதற்கு வேறாக இரண்டாவது பொருளே கிடையாது என்றும், நெருப்புக் கட்டியினின்றும் பொறிகள் எழுவது போலப் பரம்பொருளினின்றும் உயிர்கள் தோன்றுகின்றன என்றும், அவ்வுயிர்களை இருள் பற்றுகிறது என்றும், அதனால் நாமரூபங்கள் தோற்றமுறுகின்றன என்றும், அவை யாவும் கானற்சலம் போன்றன என்றும், அவை பொருளல்ல என்றும், உயிர் இருளினின்றும் விடுதலையடைந்ததும் அது பரமே யாகும் என்றும், அந்நிலையில் எல்லாம் சூந்யமாகும் என்றும் ஒருசாரார் கூறும்; இன்னொரு சாரார் முப்பொருளும் ஒன்றல்ல என்றும், தனித்தனி வெவ்வேறு இருப்புடையன என்றுங் கூறும்; வேறொரு சாரார் முப்பொருளும் எப்பொழுதும் இருப்பன என்றும், ஆனால் தனித்தனியே வேறுபட்டில்லை என்றும், மூன்றும் கடலும் நீரும் உப்பும் போலக் கலந்துள்ள ஒருமை என்றுங் கூறுப. இன்னும் பலவாறு கூறுவோரும் உளர். இக் கொள்கைகளின் விரிவுகளை நீலகண்டர், சங்கரர், இராமாநுஜர், மத்துவர் முதலியோரின் பாடியங்களிற் காணலாம். இவரனைவரும் பேரறிஞர். இவர்தம் பாடியங்கட்கெல்லாம் மூலம் பிரமசூத்திரம். பிரமசூத்திரம் உபநிடதங்களின் சாரம். மூலம் ஒன்று. பாடியங்கள் பல. பாடியங்களிலுள்ள கருத்து வேற்றுமைகள் பல. அறிஞரால் காணப்பெற்ற பாடியங்களுள் எதைக் கொள்ளுவது? எதைத் தள்ளுவது? உலகம் பலவிதம்; உள்ளம் பலவிதம்; வாழ்க்கை பலவிதம்; ஒழுக்கம் பலவிதம். பலவிதங்கட்கு ஏற்றபடி பாடியங்கள் காணப்பட்டன. ஒருவர்க்கு ஒருபோது ஒரு பாடியம் பொருத்தமாகவும், அவர்க்கே இன்னொரு போது இன்னொன்று பொருத்தமாகவும், வேறொரு போது வேறொன்று பொருத்தமாகவும், மற்றொரு போது மற்றொன்று பொருத்தமாகவும் தோன்றலாம். எப்பாடியமும் தன்னை அடைவோரைத் தனக்கு மூலமாகவுள்ள ஒன்றனிடத்திலேயே கொண்டு போய்ச் சேர்க்கும். வழி பல. ஊர் ஒன்று. எல்லாப் பாடியக் கொள்கைகளுந் தேவை என்பது எனது கருத்து. பாடியங்களெல்லாம் விடுதலை வேட்கையை எழுப்புவனவே. விடுதலை வேட்கையை எழுப்பாததொன்றில்லை. ஓருண்மை, காலதேச வர்த்தமானங்கட் கேற்றவாறு பலவிதமாக வெளி வருதல் இயற்கை. [1]  ‘உங்கள் பேதமின்றியே உண்மை பேதம் இல்லையே.’
-——————————-
[1] சிவவாக்கியர்.

-——————————-

விஞ்ஞான உலகம்

ஒளி இருளைப்பற்றிப் பலதிறக் கருத்துக்கள் தத்துவ உலகில் வெளிவந்துள்ளன. இங்கே விஞ்ஞான உலகத்தை மறப்பது நல்லது. விஞ்ஞான உலகங் கூறும் ஒளிவகைகட்கு மேற்பட்ட ஒளிவகைகள் தத்துவ உலகில் காணப்படுகின்றன. அவ்வுலகில் காணக்கூடாத – உணரக்கூடாத – ஒளி வகைகளும் சொல்லப்படுகின்றன; அவ்வாறே காணக் கூடாத – உணரக்கூடாத – இருள்வகைகளும் சொல்லப் படுகின்றன. உலகில் ஒளி இருள் என்றும், நினைப்பு மறப்பு என் றும், அறிவு அறியாமை என்றும் வழங்கப்படுதல் உங்களுக்குத் தெரியும். ஒளி – நினைப்பு – அறிவு – இவை ஒன்றே. இருள் – மறப்பு – அறியாமை – இவை ஒன்றே.

கலக்கம்

நாம் ஒளியையும் பார்க்கிறோம்; இருளையும் பார்க்கிறோம். ஒளி மறையும் போது இருள் படர்கிறது; இருள் மறையும் போது ஒளி படர்கிறது. இவ்வாறு ஒளியும் இருளும் மாறி மாறி வருதலைக் காண்கிறோம். மாறி மாறிவரும் ஒளி இருளைக்கொண்டு முழு ஒளி இருத்தல் வேண்டுமென்றும், முழு இருள் இருத்தல் வேண்டுமென்றும் ஊகித்து உணரலாம். ஆனால் முழு ஒளியும் முழு இருளும் எப்படி இருத்தல் கூடும் என்னும் ஐயமும் பக்கத்தே தோன்றா நிற்கிறது. இருப்பது முழு ஒளியாயின், அதில் இருள் எங்கு இடம் பெறும்? அங்ஙனே இருப்பது முழு இருளாயின் அதில் ஒளி எங்கு இடம் பெறும்? இரண்டும் ஓரிடத்தில் எப்படி இடம் பெறும்? இரண்டில் ஒன்றே இருத்தல் வேண்டும். ஆனால் நாம் இரண்டின் கூறுகள் மாறி மாறி வருதலைக் கண்கூடாகப் பார்க்கிறோம். எப்படி ஒன்றற்கே இருப்புக் கூறுதல் கூடும்? இம்முட்டுப் பாட்டை உணர்ந்த அறிஞர் சிலர் இருள் பொருளன்று என்ற முடிவுக்கு வந்தனர் போலும்! ஒளியும் இருளும் தத்துவ உலகையுங் கலங்கச் செய்தல் காண்க.

அநுபூதிமான்கள்

அநுபூதிமான்கள் என்ன அருளி யிருக்கிறார்கள்? அவர்கள் மொழிகளில் (1) இரவு பகலற்ற வெளி – நினைப்பு மறப்பு அற்ற இடம் – அறிவு அறியாமையற்ற நிலை – என்பன காணப்படுகின்றன. இவை யாவும் வெவ்வேறல்ல. ஒன்றே. சொற்கள் வேறு. பொருள் ஒன்று. இரவு பகலற்ற வெளியினின்றும், ஒளியும் தோன்றுகிறது; இருளுந் தோன்றுகிறது. இரண்டும் காணக்கூடாதவாறு – உணரக் கூடாதவாறு – தோன்றிப், படிப்படியே காணக்கூடிய – உணரக்கூடிய – நிலையை அடைகின்றன. இரண்டும் விராவி நிற்பன. ஒளியில் இருள் உண்டு; இருளில் ஒளி உண்டு. சிலபோது ஒளியினின்றும் இருள் தோன்றும்; சிலபோது இருளினின்றும் ஒளி தோன்றும்.

-——————————-

பொங்கும் இருள் நீக்கும் ………
கங்குல் பகலினுங் காணாத கூத்தனை ………       -திருமூலர்

சினந்தனை அற்று …………
நினைந்ததும் அற்று நினையாததும் அற்று…       -பட்டினத்தார்

அறியாமை அறிவகற்றி அறிவினுள்ளே அறிவுதனை
அருளினால் அறியாதே அறிந்து …………       -அருணந்திசிவம் (சித்தியார் )

இரவுபக லில்லா இன்ப வெளியூடே….       -உய்யவந்ததேவர் (திருவுந்தியார்)

தந்தை தாய் ………
இரவுபக லில்லா இடத்து ஏகமாய் நின்றநின் அருள் வெள்ள மீதிலே …..
      —
தாயுமானார்
-——————————-


உயிர் விளக்கம்

உயிர் ஒளியுடையது. அஃது ஆணவ இருளால் விழுங்கப் படுகிறது. அதனால் அது தானே ஒளி பெற இயலாமற் கிடக்கிறது. இறைவன் ஒளிவண்ணன்; அன்பாயிருப்பவன். அன்பின் இயல்பு பிறர் துன்பங்கண்டு இரங்கி அதைக் களைவது. அன்பாகிய இறைவன் உயிரின் நிலை கண்டு இரங்கி, அதன் இருளை அகற்றி, அதைத் தன்னைப் போலாக்கத் திருவுள்ளங் கொள்கிறான். கொண்டதும், அவனினின்றும் பிரியாத அருட்சக்தி, உயிருடன் மாயா சக்தியைச் சேர்க்கிறது. மாயை உடலாகவுங் கரணமாகவும் உலகாகவும் போகமாகவும் பரிணமித்து உயிர்க்குச் சிறு ஒளியை (சிற்றறிவையும் சிறு தொழிலையும்) வழங்குகிறது.

கலப்பு

ஒளியுடைய உயிர் ஆணவ இருளால் விழுங்கப்படுவது. இந்நிலை ஒளியும் இருளும் கலந்த ஒன்று. அருட்சக்தி மாயாசக்தியை உயிருடன் சேர்க்கிறது. மாயை ஒருவித இருள்; ஆணவ இருளைச் சிறிது ஒடுக்கும் பண்புடையது. அஃது உடல் உலகம் முதலியனவாகி, உயிரைச் சேரும் போது, உயிர் சிறிது ஒளி பெறுகிறது. உயிரில் இயற்கையாயுள்ள ஒளியே சிறிது விளக்கம் பெறுகிறது. ஆனாலும் உயிரின் சிறு விளக்கத்துக்குத் துணை நிற்கும் மாயா இருளிலும் ஒருவித ஒளியிருத்தல் வேண்டும். இல்லையேல் உயிரின் ஒளி சிறிதளவாதல் விளக்கம் பெறுவதாகாது . மாயையின் இயல்புணர்ந்த ஆன்றோரும், அதை ‘மாயா தனுவிளக்கு என்றே கூறிப்போந்தனர். அவர்க்கு மாயை விளக்காகத் தோன்றியது ஈண்டுக் கருதற்பாலது. ஆகவே, மாயா இருளில் ஒளி மிகு நுண்மையாகக் கரந்திருத்தலை உன்னிப் பார்க்க.

மாயை என்னும் இருளொளியை உயிருடன் சேர்க்கும் அருட்சக்தி நீல நிறமுடையது; கருமை – இருள் கலந்தது. அருட்சக்தி பேரொளியாகிய இறைவனிடம் நீக்கமற நிற்பது. பேரொளியாகிய [*] இறைவனிடத்திலும் நீல இருள் திகழ்கிறது. திங்களின் ஒரு பகுதியில் பௌர்ணமியும் (முழு நிலவும்), மற்றொரு பகுதியில் அமாவாசையும் (முழு இருளும்) உறுகின்றன. நெருப்புக் கனன்று நாவிட்டு எரியும் போது, அதன் விளிம்பில் நீலம் திகழ்கிறது, நமது உடலில் வலப்பக்கத்தில் வெம்மையும் (சிவப்பும்). இடப்பக்கத்தில் தண்மையும் (நீலமும்) உள்ளன. யோகியர் முதலில் கருநீலங் கண்ட பின்னரே சிவப்பொளியைக் காண்பர். இன்னும் பல கூறலாம். எவ்வழியில் பார்த்தாலும் ஒளியும் இருளும் ஒவ்வொரு நிலையில் ஒவ்வொருவிதமாகக் கலந்தும், மாறியும், ஒன்றினின்று ஒன்று பிறந்தும் இயங்கி வருதல் தெளிவாகும்.


-——————————-
[*] நள்ளிருளில் நட்டம் பயின்றாடு நாதனே – திருவாசகம் : சிவபுராணம் : 89.

-——————————-
சிவப்பும் நீலமும்

கடவுளுக்குரிய நிலை இரண்டில் சொருபம் (நிர்க்குணம்), குணங் குறி நிறம் முதலியன இல்லாதது – வாக்கு மனங் கடந்தது; தடத்தம் (சகுணம்) – இயற்கையை உடலாக் கொண்டது – அருள் முதலிய குணங்களை யுடையது. அருட்குணத்துக்கு (நீல) நிறம் உண்டு. நிறங்கள் பலவற்றுள்ளும் அடிப்படையா யிருப்பன இரண்டு. ஒன்று சிவப்பு; மற்றொன்று நீலம். இவ்விரண்டும் தந்தை தாயாக நின்று பிற நிறங்களை ஈனுகின்றன. மூலமாகவுள்ள நிறங்கள் இரண்டும் முறையே வெம்மை – தண்மை என்றும், ஆண்மை – பெண்மை என்றும் அழைக்கப்படுகின்றன. இவ்விரண்டையுங் கொண்டது அர்த்தநாரீசுரம். இவ்வடிவிலுள்ள நுட்பம் நேற்றுப் பேசப்பட்டது. முதற்பொருளின் தடத்த நிலையிலுள்ள சிவப்பும் [1]  நீலமும் முறையே [2] ஒளியாகவும் இருளாகவும் உயிரிலும், உள்ளத்திலும், உடலிலும், உலகிலும் படிந்துள்ளன. எல்லாவற்றலும் ஒளியும் இருளும் எவ்வாறாதல் இருக்கை பெறுமென்க. அவைகளைக் கடந்த ஒரு நிலை சொரூபம்; இரவுபகலற்றது. அதை அடைதற்கு உள்ளொளி விளங்குதல் வேண்டும்.


-——————————-
[1] நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்
      –
பெருந்தேவனார் (ஐங்குறு நூறு )
வேதமும் வேள்வியும் ………
[2]
சோதியு மாய் இரு ளாயி னார்க்கு …       – மாணிக்கவாசகர்

கார்க்குன்ற மழையாய்ப் பொழிவானை
பகலுங் கங்குலு மாகிநின் றானை – சுந்தரர்
தெருளாகி மருளாகி….. இருளாகி ஒளியாகி ……….       – தாயுமானார்
-——————————-

இறைவன் நினைப்பு

இரவு பகலற்ற உள்ளொளி விளக்கத்துக்கென்று, இரவு பகலுள்ள உலகம் நமக்கு இறைவனால் கொடுக்கப் பட்டிருக்கிறது. இவ்வுலகை நல்வழியில் பயன்படுத்தினால், இரவு பகலற்ற உள்ளொளியைப் பெறலாம். உள்ளொளி விளக்கத்துக்கென்று , இறைவன் அளித்த அருட் பெருங் கொடையை மறத்தலாகாது. இறைவனது கொடை – அருட்பெருங் கொடை – நமது நல்னை நாடியே நிற்கிறது. அதை மறந்தால் நாம் எப்படி நலம் பெறுவோம்? இறைவனது நினைப்பை ஊட்டு தற்கென்று அவனது படைப்புக்கள் காட்சியளித்த வண்ணமிருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் இறைவன் நினைப்பை ஊட்டுதல் அனுபவத்தில் உணரத் தக்கது. எவ்விதக் கைம்மாறுங் கருதாது, இவ்வளவு துணை புரிந்துள்ள இறைவனை மறப்பதிலும் நன்றி கொல்வது வேறொன்றுண்டோ?

இறைவனது இயற்கைப் படைப்புக்கள் பலப்பட நம்மைச் சூழ்ந்திருக்கின்றன. அவைகளுள் ஒன்றை – ஒன்றன் சினையை – ஒரு சிறு புல்லை – புல்லின் நுனியை – நினைந்து நினைந்து, அதில் ஒன்றினும், அஃது உள்ளொளியை விளங்கச் செய்யும். இறைவன் படைப்பு ஒவ்வொன்றும் நமக்குத் துணைபுரியக் காத்துக்கொண்டிருக்கிறது. அதன்மீது கருத்துச் செலுத்தவேண்டுவது நமது கடமை.

ஒன்றா? இரண்டா?

இயற்கைக்கூறு ஒவ்வொன்றும் தன்னைப் பற்றுவோர்க்கு உள்ளொளியை விளங்கச் செய்யும். இவ் விளக்கத்துக்குத் துணை புரியும் இயற்கைக்கூறு அந்நிலையில் யாண்டுச் செல்கிறதோ தெரியவில்லை. தன்னைக் காட்டிப் பெருமை பெற அதற்கு விருப்பம் இல்லை போலும்! இயற்கை அன்னை எவ்விதக் கைம்மாறுங் கருதாது உயிர்கட்கு நலஞ் செய்கிறாள். இயற்கை மாயா உலகம் தோன்றும் போது, உள்ளொளி தோன்றுவதில்லை; இது தோன்றும் போது அது தோன்றுவதில்லை. இஃதென்ன வியப்பு? பொருள் ஒன்றா இரண்டா என்று சொல்லலும் இயலவில்லை. இரண்டுக்கும் உள்ள உறவு என்னே!

தியான யோகம்

இங்கே அப்பர் அருளிய திருப்பாட்டொன்று நினைவுக்கு வருகிறது.

விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே.

இப்பாட்டின் கருத்தை நோக்குங்கள். ‘விறகில் தீயும், பாலில் நெய்யும், மணியில் ஒளியும் மறைந்திருப்பது போல, இறைவன் இயற்கையில் மறைந்திருக்கிறான். உறவு என்னும் அன்புக்கோலிட்டு, உணர்வு என்னும் ஞானக் கயிறு பூட்டிக் கடைந்தால், மறைந்துள்ள இறைவன் தோன்றுவன்’ என்பது பாட்டின் சாரம் … உறவுகோல் நட்டு உணர்வு கயிற்றினால் கடைவதே அகவழிபாடு அல்லது தியான யோகம் என்பது. உள்ளொளி விளக்கத்துக்குத் தியான யோகம் வேண்டும் என்றபடி. தியான யோகம் முன்னரும் பேசப்பட்டது.

நல்லுடல்

தியான யோகத்துக்குத் தூய உள்ளந் தேவை. தூய உள்ளத்துக்கு நல்லுடல் தேவை. நல்லுடல் இயற்கையோ டியைந்த வாழ்வில் – பொருந்திய உணவில் – ஒழுக்கம் ஓம்பலில் – இன்ன பிறவற்றில் அமையும். உடல் நலம் பெறின் உள்ளந் தூயதாகும். தூய உள்ளத்தால் இயற்கைக் கூறுகளையாதல், அவைகளின் நுட்பங்கள் அடங்கிய ஓவிய உருவங்களையாதல் தியானஞ் செய்யச் செய்யப் பலதிற ஒளிகள் படிப்படியே தோன்றித் தோன்றி, மறைந்து மறைந்து, இறுதியில் வாடாத உள்ளொளி விளங்கப் பெறும். உள்ளொளி, நெஞ்ச மலரில் கோயில் கொள்ளும்; எங்கும் கோயில் கொள்வதாகும்.

ஒளி வகை

புறமனம் குறிக்கோளில் ஒன்ற ஒன்ற அது குவியும்;  நடுமனம் எழும். நடுமனம் குறிக்கோளில் ஒன்றுபடும் போது, ஒருவித ஒளி தோன்றும். நடுமனமும் அவ்வொளியும் குவிந்து அடிமனத்திற் படியும். அடிமனத்தில் ஒருவித ஒளி தோன்றும். அடிமனமும் ஒளியும் மறைந்து பிராணனில் ஒடுங்கும். அங்கே பிராண ஒளி தோன்றும். அஃது விந்துவில் ஒடுங்கி ஒளியாகும். அவ்வொளி நாதத்தில் புகுந்து ஒருவித ஒளியா யெழும். இவ்வொளிகள் யாவும் மாயா சம்பந்தம் பெற்றவை; மாறுந்தகையன; ஒடுங்குந் தகையன. நாதங் கடந்தால் ஓர் ஒளி விளங்கும். அதுவே மாயா சம்பந்தமற்ற தூய தனி ஒளி – உள்ளொளி. அஃது இரவற்றது; பகலற்றது.

ஒழுக்கம்

தியான யோகத்தின் அடியில் ஒழுக்கக்கா லிருத்தல் வேண்டும். அக் கால் கொண்டு நடப்பது தியானயோகம். ஒழுக்கமற்ற உள்ளம் தியானத்துக்கு உரியதாகாது. அவ்வுள்ளம் நிலைபெறாது; அலைந்து கொண்டே இருக்கும். தியானத்துக்கு அலைவற்ற நெஞ்சம் தேவை. ‘ நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்’  நெஞ்சைப் பலவழியிலும் பண்படுத்தும். பண்பட்ட நெஞ்சம் தியான யோகத்தால் திரையற்ற நீர் போலாகும். பாழ்மனத்தைப் பண்படுத்தவல்லது ஒழுக்கம் என்று உணராதார் – அதைக் காக்கும் ஆற்றல் இல்லாதார் – தமது மனத்தை நிலைபெறுத்த, மூர்க்க அரக்க யோகங்களில் தலைப்படுவர். அவ்யோகங்கள் மேலும் மேலும் தீயொழுக்கத்தைப் பெருக்கி நெருப்பாகி மக்களை எரிக்கும். மூர்க்க யோகிகள் ஒழுக்கம் அநாவசியம் என்றும், தியான யோகம் விழுமியதன்று என்றும் பேசிப் பேசி, மூச்சைப் பிடித்து முகத்தைச் சிவக்கச் செய்வர். அவரது ஏமாற்றம் அவரைத் தாக்காமற் போகாது.

ஒழுக்கக் கூறுகள் பல. அவைகளைத் திருவள்ளுவர் முறை முறையே உலகுக்கு விரித்தருளினர். ஒழுக்கக் கூறுகளின் சாரத்தை இளங்கோ அடிகள் ஓரிடத்தில் தேங்க வைத்துள்ளனர். அதை நோக்குவோம்:

பரிவும் இருக்கணும் பாங்குற நீங்குமின்
தெய்வந் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின்
பொய்யுரை அஞ்சுமின் புறஞ்சொற் போற்றுமின்
ஊனூண் துறமின் உயிர்க்கொலை நீங்குமின்
தானஞ் செய்ம்மின் தவம்பல தாங்குமின்
செய்ந்நன்றி கொல்லன்மின் தீநட் பிகழ்மின்
பொய்க்கரி போகன் மின் பொருண்மொழி நீங்கன்மின்
அறவோர் அவைக்களம் அகலா தணுகுமின்
பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்
பிறர்மனை அஞ்சுமின் பிழையுயிர் ஓம்புமின்
அறமனை காமின் அல்லவை கடிமின்
கள்ளுங் களவுங் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்
இளமையுஞ் செல்வமும் யாக்கையும் நிலையா
உளநாள் வரையா தொல்லுவ தொழியாது
செல்லுந் தேஎத்துக் குறு துணை தேடுமின்
மல்லன்மா ஞாலத்து வாழ்வீ ரீங்கென.

முறையீடு

ஒழுக்கத்துக்குக் கேடு சூழவல்ல அரக்க நீர்மைகள் பல உண்டு. அவைகளுள் மிகக் கொடியதொன்று உள்ளது. அஃது எது? அது புறங்கூறல், புறங்கூறலை யொழிக்க முயல்வோன் அற ஒழுக்கத்துக்குக் கால் கொள்வோனாவன். புறங்கூறலை ஒழித்த நெஞ்சம் பொய்ம்மைக்கு அஞ்சும். இவ்வச்சம் பொய்ம்மையின் வேரைப் பையப் பையக் கல்லிக் கல்லிச் சாய்க்கும். அங்கே மெய்ம்மை என்னும் அற ஒழுக்கத் தெய்வம் கோயில் கொள்ளும். ‘ மனத்துக்கண் மாசில னாதல் அனைத்தறம்’ என்றார் திருவள்ளுவர். மாசற்ற மனம் தீயொழுக்கத்துக்கு இரையாகாது. அது பிறர் குற்றத்தைப் பாராட்டும் நீசத்தைப் போக்கும்; தன் குற்றத்தைக் கருதிக் கருதி அழச்செய்யும். அவ்வழுகையே முறையீடு என்பது. முறையீடு தியான யோகத்தின் உயிர் நாடி.

மனித உலகம்

மனித உலகம் விலங்கு உலகுக்கும் தெய்வ உலகுக்கும் இடையில் நிற்பது. மனிதன் முழு விலங்குமல்லன்; முழுத் தெய்வமுமல்லன்; இரண்டுக்கும் நடுவில் நிற்பவன். அவனிடத்தில் இழிந்த விலங்கியல்பும் இருக்கிறது; உயர்ந்த தெய்வ இயல்பும் இருக்கிறது. அவா பொறாமை இகல் பகை முதலியன விலங்கியல் பின் கூறுகள்; அன்பு அருள் தியாகம் மன்னிப்பு தொண்டு முதலியன தெய்வ இயல்பின் கூறுகள். இவ்விருவகை இயல்புகளும் மனிதனிடத்தில் இருத்தல் வெளிப்படை. மனிதன் விலங்கினின்றும் தோன்றினமையால், அவன் பால் விலங்கியல்பும் இருக்கிறது; அவன் விலங்கை விடுத்து வெளி வந்தமையால், அவன்பால் தெய்வ இயல்பும் முகிழ்த்திருக்கிறது. மனிதன் விலங்கியல்பிலிருந்து விடுதலையடைந்து, தெய்வ இயல்பிலேயே ஒன்றல் வேண்டும். இதற்கு அவன் முயற்சி மட்டும் போதுமா? வேறு துணையும் வேண்டுமா?

அருட்டுணை

விலங்குத் தன்மை மகனை விடுத்துத் தானே அகல்வதில்லை. மகனாலும் அத்தன்மையினின்றும் விலக இயல்வதில்லை. இதனால் மகன் பாவ வினைகளைச் செய்பவனாகிறான். நாளுக்கு நாள் பாவ வினைகள் பெருக்கெடுக்கின்றன. பாவப் பெருக்கில் வீழ்ந்த மனிதன் இறக்கிறான். பாவ வினைகள் அவனை மீண்டும் பிறக்கச் செய்கின்றன. பழைய வினைகளை அவன் அனுபவிக்கிறான். மகன் குறையுடையவன். பழைய வினைகளை அனுபவிக்கும் போது எப்படியாவது அவன் புதுப் பாவங்களைச் செய்துவிடுகிறான்; சாகிறான்; பிறக்கிறான். இவ்வாறு வினைகன் தொடர்ந்து தொடர்ந்து வளர்ந்து பெருகுகின்றன. வினைகள் அறுந்தால் விலை தலை உண்டாகும். வினைகள் வளர்க்கின்றனவேயன்றித் தேய்ந்து ஒழிவதில்லை. பாவவினைகளினின்றும் விடுதலையடைய மனிதன் விரத மிருக்கிறான்; தவங் கிடக்கிறான்; காடு மலைகளில் நுழைந்து வாடுகிறான்; கோர யோகங்கள் செய்கிறான். பழைய வினைகள் அறுவதில்லை. விடுதலை கிடைப்பதில்லை. எவ்வழியில் சுற்றிச் சுற்றிச் சிந்தித்தாலும், மனிதன் தன் முயற்சியால் மட்டும் தனது பாவ வினைகளைச் சிதைத்துக் கரையேற இயல்வதில்லை என்பது செவ்வனே வினங்கும். [1] அவனது முயற்சியுடன் வேறு ஒரு துணை அவனுக்குத் தேவையாகிறது. அத் துணை பாவமே இல்லாததாய், பாவத்துக்கு அப்பாற் பட்டதாய், பாவங்களைக் களைந்தெறிய வல்லதாய் இருத்தல் வேண்டும். அதை ஆண்டவன் அருட்டுணை என்று உலகஞ் சொல்கிறது. அத் துணை பெற மனிதன் என் செய்தல் வேண்டும்? அவன் தன் சிறுமையை யுணர்ந்து, ஆண்ட வனை நினைந்து நினைந்து, தனது குறைபாடுகளை உண்மையாக முறையிடுதல் வேண்டும். முறையீடு நேரியதாயின், அவனைக் காக்க ஆண்டவன் அருட்டுணை வந்தே தீரும்.

-——————————-
மனமெனுந் தோணி பற்றி மதியெனுங் கோலை யூன்றிச்
சினமெனுஞ் சரக்கை ஏற்றிச் செறிகடல் ஓடும் போது
மதனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணாது
[1]
உனையுனும் உணர்வை நல்காய் ஒற்றியூ ருடைய கோவே.
      –
அப்பர்.

-——————————-

அழுகை

விலங்குக்கு ஐந்தறிவு. அதனினின்றும் வெளிவந்த மனிதனுக்கு மற்றுமோர் அறிவு அரும்புகிறது. அதுவே ஆறாவ தறிவு; பகுத்தறிவு. பகுத்தறிவால் மகன் மேனிலை எய்த முயலுதல் வேண்டும். ஆனால் அவன் வழுக்கி வழுக்கி வீழ்ந்து வீழ்ந்து, விலங்குக்கே இரையாகிப் பாவ வினைகள் புரிந்து கெடுகிறான். இது மனிதனிடத்துள்ள குறைபாட்டை உணர்த்துகிறது. மனிதன் தெய்வமல்லன்: குறைபாடுடையவன். அவன் குறைபாட்டால் கெடுதல் விளைத்துக்கொள் கிறான். கெடுதல் விளைத்துக்கொள்ளும் குற்றம் யாருடையது. மனிதனுடையது. ஆதலால், குறைபாடு குறித்தும், குற்றங் குறித்தும் வருந்தத்தக்கவன் அவனே. மைந்தன் தனது குறைபாடுகளையும் குற்றங்களையும் ஒளியாமல் ஆண் டவனை நோக்கி முறையிட்டு வருந்துகிறான்; கசிந்து கசிந்து உருகுகிறான்; அழுகிறான். அழுகை – உண்மை அழுகை – ஆண்டவன் திருச்செவிக்கு எட்டுகிறது. ஆண்டவன் கன்னெஞ்சனல்லன்; வன்னெஞ்சனல்லன்; அவன் தண்டனை அறியாதவன்; அருளாளன்; மன்னிக்க விரைந்து நிற் பவன். மைந்தன் அழுகை கேட்டு அவன் வாளா இருப்பனோ? அவன் அருள் வாளா கிடக்குமோ? ஆண்டவன் மைந்தன் மீது அருள் சுரக்கிறான். ஆண்டவன் அருள், மைந் தனுக்கு இருவிதத் துணை செய்கிறது. அவ்வருள், மைந்தனது பழைய பாவங்களை மன்னிப்பதாகிறது. அவன் இனிப் பாவஞ் செய்யாதிருக்கும் வல்லமையையும் அவனுக்கு நல்குவதாகிறது.

வினை

செய்த வினையை அனுபவித்தே தீர்தல்வேண்டும் என்னுங் கொள்கையுடையவரும் இருக்கிறார். செய்த வினையை அநுபவிக்குங்கால், புது வினைகள் பொருந்துவதை அக் கொள்கையர் மறுப்பதில்லை. மீண்டும் மீண்டும் புதுமை பழமையாகிப் பழமையாகி வளர்ந்தே சென்றால் வினை முடிவடையும் இடம் எங்கே? வினை தன் விருப்பப்படி உலகை அலைத்து வருவதாயின், இறைவன் எற்றுக்கு இருக்கிறான்? அவன் அருளாளன் – கருணைக்கடல் – முதலிய பெயர்களால் எற்றுக்கு அழைக்கப்படுகிறான்? கடவுளுண் மையில் உறுதியில்லாதார் பழைய வினை, புதிய வினை, தண்டனை முதலியவற்றைப் பேசிக்கொண்டிருக்கலாம். சீலம் விரதம் முதலியன ஒரோவழியில் துணைபுரியுமன்றி, வினைகளை முற்றும் அறுக்க அவை துணைபுரியா. ஆண்டவன் அருளொன்றுக்கே வினைகளை முற்றும் அறுக்கும் ஆற்றல் உண்டு.

போலி

‘ஆண்டவன் மன்னிப்பவன்’ என்று நினைந்து, மக்கள் ஒரு பக்கம் பாவஞ் செய்து செய்து, இன்னொரு பக்கம் அதுகுறித்து முறையிட்டு முறையிட்டு வந்தால் பாவம் தேயுமா? வளருமா? என்னும் ஐயம் பிறக்கலாம். இவ்வாறு ஐயுறுவோருள் யானும் ஒருவனாயிருந்த காலம் உண்டு. பாவி மனந்திரும்பி முறையிட்டு அழுவோனாதல் வேண்டும். மனந் திரும்பாமல் முறையிடுவதும் அழுவதும் போலியாகவே முடியும். ஆண்டவன் எங்கும் இருப்பவன்; எல்லாம் உணர்பவன். அவனுக்குப் பொய்ம்மை மெய்ம்மை நன்கு தெரியும். பொய்ம்மை முறையீடும் அழுகையும் மன் னிப்புப் பெறமாட்டா. அவை மேலும் மேலும் பாவத்தைப் பெருக்கிக்கொண்டே போகும். பொய்ம்மை, நல்லறிவால் மெய்ம்மையாகத் திரும்புதலும் உண்டு. மனந் திரும்பிய முறையீட்டினின்றும் எழும் அழுகையே, ஆண்டவன் மன்னிப்பைப் பெற்றுப் பாவத்தைக் கழுவும் ஆற்றல் வாய்ந்தது.

மனந்திரும்பல் என்பது எனது ஐயத்தைப் போக்கியது. அது மற்றவரது ஐயத்தையும் போக்கும் என்று நம்பு கிறேன். மனந்திரும்பித் தமது பாவங் குறித்து ஆண்டவனை நோக்கி அழுவோர் தமது பாவச் செயல்களைப் பகிரங்க மாக முறையிட அஞ்சார். அவரை அறியாமலும் அவர்தம் வாய் பாவச் செயல்களை முறையிட்ட வண்ண மிருக்கும். மெய்ஞ்ஞானிகள் தங்கள் பாவங்களை முறையிட்ட மொழிகள் மலையெனவும் கடலெனவும் கிடக்கின்றன. இங்கே இரண்டொன்றை எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

[$] குலம்பொல்லேன் குணம் பொல்லேன் குறியும் பொல்லேன்
குற்றமே பெரிதுடையேன் கோல மாய
நலம்பொல்லேன் நான் பொல்லேன் ஞானி யல்லேன்
நல்லாரோ டிசைந்திலேன் நடுவே நின்ற

விலங்கல்லேன் விலங்கல்லா தொழிந்தேன் அல்லேன்
வெறுப்பனவும் மிகப் பெரிதும் பேச வல்லேன்
இலம்பொல்லேன் இரப்பதே ஈய மாட்டேன்
என் செய்வான் தோன்றினேன் ஏழை யேனே.

-——————————-
[$]  –அப்பர்.

-——————————-


*கோடிய மனத்தால் சினத்தொழில் புரிந்து
திரிந்து நா யினத்தொடும் திளைத்திட்டு
ஓடியும் உழன்றும் உயிர்களே கொன்றேன்
உணர்விலே னாதலால் நமனார்
பாடியைப் பெரிதும் பரிசழித் திட்டேன்
பரமனே பாற்கடல் கிடந்தாய்
நாடி நான் வந்துன் திருவடி யடைந்தேன்
நைமிசாரணியத்து ளெந்தாய்.

-——————————-
— * திருமங்கையாழ்வார்.

-——————————-

[1] அடியார் சிலருன் அருள் பெற்றார்
ஆர்வங் கூர யான் அவமே
முடையார் பிணத்தின் முடிவின்றி
முனிவால் அடியேன் மூக்கின்றேன்
கடியே னுடைய கடுவினையைக்
களைந்துன் கருணைக் கடல் பொங்க
உடையாய் அடியேன் உள்ளத்தே
ஓவா துருக அருளாயே.

-——————————-
–மாணிக்கவாசகர்.

-——————————-

[2] பொய்யினேன் புலையனேன் கொலையினேன் நின்னருள்
புலப்பட அறிந்து நிலையாப்
புன்மையேன் கல்லாத தன்மையேன் நன்மை போல்
பொருளலாப் பொருளை நாடும்
வெய்யனேன் வெகுளியேன் வெறியனேன் சிறியனேன்
வினையினேன் என்றென்னை நீ
விட்டுவிட நினைவையேல் தட்டழிவ தல்லாது
வேறுகதி ஏது புகலாய்

துய்யனே மெய்யனே உயிரினுக் குயிரான
துணைவனே இணையொன் றிலாத்
துரியனே துரியமுங் காணா அதீதனே
சுருதிமுடி மீதி ருந்த
ஐயனே அப்பனே எனும் அறிஞர் அறிவைவிட்
டகலாத கருணை வடிவே
அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி
ஆனந்த மான பரமே.

-——————————-
 —தாயுமானார்.

-——————————-


*குலத்திடையுங் கொடியனொரு குடித்தனத்துங் கொடியேன்
குறிகளிலுங் கொடியனன்றிக் குணங்களிலுங் கொடியேன்
மலத்திடையே புழுத்தசிறு புழுக்களிலுங் கடையேன்
வன்மனத்துப் பெரும்பாவி வஞ்சநெஞ்சப் புலையேன்
நலத்திடையோ ரணுவளவும் நண்ணுகிலேன் பொல்லா
நாய்க்கு நகை தோன்ற நின்றேன் பேய்க்குமிக இழிந்தேன்
நிலத்திடை நான் ஏன் பிறந்தேன் நின் கருத்தை யறியேன்
நிர்க்குணனே நடராஜ நிபுணமணி விளக்கே.


-——————————-

* இராமலிங்க சுவாமிகள்.

-——————————-


பொல்லாதவன்

புரசையில் ஒருவன் இருந்தான். அவன் ‘பொல்லாதவன்’’.  அவன் பாவச் செயலில் பற்றுடையவனாகவே வளர்ந்தான். அவன் சிறு பையனா யிருந்தபோது பூனைகளையுங் கோழிகளையும் துரத்தித் துரத்தி அடிப்பான்; வதைப்பான்; தோட்டத்தில் மேயுங் கழுதைகளைத் துன்புறுத்துவான். ஒருபோது வண்ணார் அவனைப் பிடித்துப் புடைத்து விடுத்தனர். பொல்லாத பாவி வண்ணார்மீது கொண்ட வன்மத்தை அவருக்குரிய ஒரு கழுதை மீது செலுத்தினான். ஒருநாள் ஒரு கழுதை மற்றக் கழுதைகளை விடுத்துச் சிறிது தூரம் போய்த் தனியே மேய்ந்தது. பாவி அதை மெல்ல மெல்ல ஓட்டி, ஒரு புதரில் துரத்தி, நையப் புடைத்து ஓடி விட்டான். அக்கழுதை எழுந்து நடக்க இயலாது வதைந்து வதைந்து மாண்டது. பழிபாவங்கட்கு அஞ்சாத மாபாவி பெண்களுக்குந் தொல்லை விளைப்பான். அழகிய பெண்கள் முகத்தில் சிகரெட் புகை விட்டு மகிழ்வதை ஒரு பெருந் தொண்டாகக் கொண்டிருந்தான் அப்பாவி. அவன் செய்த வேறு பல கொடுமைகளை ஈண்டு விரித்தல் அநாவசியம். அவன் பலமுறை தண்டிக்கப்பட்டான். தண்டனையைக் குறித்து அவன் கவலையுறுவதே இல்லை. புரசையில் ஓரிடத்தில் ஒருவரால் இராமாயண வசனம் படிக்கப்பட்டது. அங்கே மக்கள் நூற்றுக்கணக்கில் கூடுவார்கள். ஒவ்வொரு போது பொல்லாதவன், இராமாயணக் கூட்டத்தில் புகுவான். கூட்டம் கலக்கமுறும். யுத்தப் பகுதி பொல்லாதவன் நெஞ்சைக் கவர்ந்தது. நாடோறும் அவன் கூட்டத்துக்குப் போகத் தொடங்கினான்; குளித்துத், தோய்த்த – உலர்ந்த – ஆடையுடுத்தித் திருநீறு அணிந்து வருவான்; மாலையில் பெருக்கல், தண்ணீர் தெளித்தல் முதலிய தொண்டு செய்பவருடன் கலந்து கொள்வான்; இராமாயணம் படிப்பவருடன் வீட்டுவரை சென்று திரும்புவான். அவன்றன் நற்செயல்கள் கூட்டத்தின் நடுக்கத்தைப் படிப்படியே போக்கின. ஒரு நாள் அவன் இராமாயணச் சங்கத் தலைவர் வீட்டுக்குச் சென்று, ‘யான் படிக்க விரும்புகிறேன். எனக்குப் பாடஞ் சொல்ல வேண்டும்’ என்றான்.

அவ்வேளையில் யான் அங்கே இருந்தேன். அவன் சங்கத் தலைவரை நோக்கி, ‘ யான் பழைய ஆள் அல்லன்; என் மனத்தில் மாறுதல் உற்றுள்ளது’ என்று சொன்னான். அவனது மனோநிலை எனக்கு ஒருவாறு விளங்கிற்று. அவனுடன் சிறிது நேரம் யான் உரையாடிப் பார்த்தேன். அவன் தன் வரலாற்றைக் குறிப்பாக உணர்த்தினான். அவனிடம் யான் பேசுவதும் நண்பர் தலைவருக்குப் பிடிக்கவில்லை. பள்ளிக்கூடத்தில் வந்து என்னைப் பார்க்குமாறு அவனுக்குச் சொல்லி, விலாசங் கொடுத்து யான் வீடு சேர்ந்தேன். சில நாள் கழித்து அவன் பள்ளிக்கு வந்தான். தலைமை ஆசிரியரிடம் அவனை அறிமுகஞ் செய்வித்து, அவனது வரலாற்றையுங் கூறினேன். கிறிஸ்துவின் அடியவராகிய தலைமை ஆசிரியர்க்கு அவனிடத்தில் நேசம் பிறந்தது. அவனைத் தமது தச்சப்பட்டறையில் அமர்த்திக்கொள்ள அவர் விரும்பினர். அவனும் அங்கே வேலை செய்ய இணங்கினான். ஓய்ந்த நேரங்களில் தலைமை ஆசிரியர் அவனுக்குக் கல்விச் செல்வத்தை அளித்துவந்தனர். அவனை யானும் அடிக்கடி சந்திப்பேன். அவன் மனந்திரும்பி வேறு ஓர் ஆளாக மாறியதை யான் உணர்ந்தேன். அவன் தனது பழஞ்செயல்கள் குறித்து வருந்துவான்; கழுதை நினைப்புத் தோன்றுபோதெல்லாம் கதறிக் கதறிக் கண்ணீர் விடுவான். அவனது நிலையை உணர்ந்த தலைமை ஆசிரியர் அவனுக்குக் கிறிஸ்து பெருமான் நற்செய்தியாகிய சுவிசேஷத்தைப் போதிக்கத் தொடங்கினர். அப் போதனை அவனுக்கு அமிர்தமாயிற்று. யான் அவனுக்குத் திருவாசக நூலொன்று தந்து, அதையும் படிக்குமாறு சொன்னேன். அப்படியே அவன் திருவாசகத்தையும் படித்து வந்தான். அவன் மற்றுமொரு பிறவி எடுத்தான் என்றே கருதல் வேண்டும். அவன் முற்றும் மாறுதலடைந்தான். அவனது நடையும், ஒழுக்கமும், தூய்மையும், கடவுளிடத் தன்பும், முறையீடும், பிறவும், ஆங்கிருந்தவருடைய உள்ளங்களையெல்லாங் கவர்ந்தன. அவன் ஆண்டவன் பிள்ளையானான் என்று சுருங்கச் சொல்கிறேன். ஒரு பெரிய குடும்பத்திற் பிறந்து வளர்ந்து, தெய்வ சிந்தனையில் மூழ்கிய ஒரு பெண்மணி, அவனது வரலாற்றைக் கேள்வியுற்று அவளை மணந்து கொண்டாள். அவ்விருவரிடத்திலும் மலர்ந்த வாழ்க்கையில் தெய்வ மணங் கமழ்ந்தது. இதை யான் நன்கு அறிவேன்.

‘பொல்லாதவன்’ இளமையில் எப்படி இருந்தான்? பின்னை எப்படியானான்? இரும்பு பொன்னாகியது. அறியாமையில் பாவம் பிறந்தது; அறிவில் அது விளங்குகிறது; அழுகை பெருகுகிறது; மனம் திரும்புகிறது. திரும்பிய மனத்தில் ஆண்டவன் அருள் பொலிகிறது. அருள், மகனைத் தன் வழியில் நடக்கச் கெய்கிறது. முறையீடு – உண்மை முறையீடு – என்ன செய்யாது? அது, மழைய பாவங்களை அழிக்கும்; புதுப் பாவங்களைத் தடுக்கும்; ஆண்டவன் அருள்வழியில் நடக்கச் செய்யும்.

இளைய குமாரன்

கிறிஸ்து பெருமான் அருளிய உவமைகள் பல உண்டு. அவைகளில் ஒன்று இளைய குமாரனைப் பற்றியது. அதை இங்கே படித்துக் காட்டுகிறேன்.

பின்னும் அவர்: ஒரு மனுஷனுக்கு இரண்டு குமார ரிருந்தார்கள். அவர்களில் இளையவன் தகப்பனிடம் வந்து: தகப்பனே, சொத்தில் எனக்குரிய பங்கை எனக்குத் தாரும் என, அவனும் அவர்களுக்குத் தன் சொத்தைப் பங்கிட்டுக் கொடுத்தான். சில நாளைக்குள் இளைய மகன் எல்லாவற்றை யுஞ் சேர்த்துக்கொண்டு தூரதேசம் போய் அங்கே துன் மார்க்க ஜீவியஞ் செய்து தன் சொத்தை விரயஞ் செய்து விட்டான். எல்லாவற்றையும் அவன் செலவழித்த பின்பு அத்தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் சாப்பாட்டுக்கும் வழியில்லாமல் அத்தேசத்தான் ஒருவனிடம் போய் ஒட்டிக்கொண்டான். அவன் அவனைத் தன் வயல்களில் பன்றி மேய்க்க அனுப்பினான். பன்றி தின்னும் தவிட்டைத் தின்று தன் வயிற்றை நிரப்ப ஆசைப்பட்டான்; அவனுக்குக் கொடுப்பாரோ இல்லை. அவனுக்குப் புத்தி தெளிந்தபோது அவன்: என் தகப்பனுக்கு எத் தனையோ கூலிக்காரருண்டு; அவர்களெல்லாரும் பூர்த்தியாய்ச் சாப்பிடுகிறார்கள்; நானோ இங்கே பசியினால் சாகிறேன். நான், எழுந்து என் தகப்பனிடம் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமது பார்வையிலும் பாவஞ் செய்தேன். இனி உமது குமாரன் எனப்பட நான் பாத்திரனல்ல. உமது கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளுமென்பேன் என்று சொல்லி எழுந்து தன் தகப்பனிடம் வந்தான். அவன் தூரத்தில் வரும்போது அவன் தகப்பன் அவனைக் கண்டு மனதுருகி ஓடி அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு திரும்பத் திரும்ப முத்தஞ் செய்தான். குமாரனோ தகப்பனிடம்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமது பார்வையிலும் பாவஞ் செய்தேன். இனி உமது குமாரன் எனப்பட நான் பாத்திரனல்ல என்று சொன்னான். தகப்பனோ தன் வேலைக்காரரைக் கூப்பிட்டு: நீங்கள் சீக்கிரம் போய் உயர்ந்த வஸ்திரம் கொண்டுவந்து இவனுக்கு உடுத்தி இவன் கைக்கு மோதிரமும் கால்களுக்குப் பாதரட்சைகளும் போடுங்கள். கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்துச் சந்தோஷங் கொண்டாடுவோம். என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிரோடு வந்தான்; காணாமற் போனான்; திரும்பவுங் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷங் கொண்டாடத் தொடங்கி னார்கள். அவனுடைய மூத்த குமாரன் வயலிலிருந்தான். அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது ஆடல் பாடல்களைக் கேட்டு வேலைக்காரரில் ஒருவனை யழைத்து, இது என்னவென்று விசாரிக்க அவன்: உமது சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே வந்து சேர்ந்தபடியினாலே உமது தகப்பனார் கொழுத்த கன்றை அடித்தார் என்றான். அப்பொழுது அவன் கோபமடைந்து உள்ளே போகமாட்டேனென்று நின்று விட்டான். தகப்பனோ வெளியே வந்து அவனை நல்வார்த்தை சொல்லி யழைக்க அவன் தகப்பனிடம்: இதோ இத்தனை வருஷ காலமாய் நான் உமக்குத் தொண்டு செய்து வருகிறேன், ஒரு காலும் உமது கட்டளையை மீறினதில்லை; அப்படியிருந்தும் என் சிநேகிதரோடே நான் சந்தோஷங் கொண்டாடும்படி நீர் ஒருகாலும் எனக்கு ஓர் ஆட்டுக்குட்டியையும் கொடுத்த தில்லை. உம்முடைய மகனாகிய இவனோ வேசிகளிடம் உமது சொத்தை அழித்துவிட்டுத் திரும்பி வந்தவுடனே இவனுக் காகக் கொழுத்த கன்றை அடித்தீரே என்றான். அதற்கு அவன்: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக் குள்ளவைக ளெல்லாங் உன்னுடையவைகளே. உன் சகோதரனாகிய இவனோ மரித்திருந்தான், திரும்பவும் உயிரோடு வந்தான்; காணமற் போயிருந்தான், திரும்பவுங் காணப்பட்டான்; ஆகையால் நாம் சந்தோஷங்கொண்டாடி மனமகிழ வேண்டுமே என்று சொன்னான் என்றார்.  – லூக்கா 15: 11 – 32

இவ்வுவமையின் நுட்பத்தைச் சிந்தித்துப் பாருங்கள்; மெய்யாக மனந்திரும்பி முறையிட்டால் எல்லார்க்குந் தந்தையாகிய ஆண்டவனது அருட்டிறமும் மன்னிப்பும் கிடைக்கும் என்பதைத் தெளியுங்கள்.

மாபாதகன்

இவ்வுவமையையொத்த ஒரு கதை பாண்டி நாட்டில் புனையப்பட்டது. அக்கதையை யான் முதல் முதல் படித்த போது, அஃது அடங்கியுள்ள பக்கங்களைக் கத்தரியால் வெட்டிவிட்டேன். நாளடைவில் அக்கதையின் உள்ளுறை எனக்கு விளங்கலாயிற்று. விளக்கத்துக்குக் கருவியாயிருந்தது கிறிஸ்து பெருமான் போதனை.

பாண்டி நாட்டிற் பிறந்த கதை எது? திருவிளையாடற் புராணத்திலுள்ளது; மாபாதகந் தீர்த்த படலம்!’ என்னுந் தலைப்புடையது. அக்கதை முதல் முதல் எக்காரணம் பற்றி எவரால் புனையப்பட்டதோ தெரியவில்லை. அது பாண்டி நாட்டில் பரவி, அந்நாட்டுப் புராணங்கள் சிலவற்றில் புகுந்துள்ளது. முதல் முதல் அக்கதையைப் புனைந்தவர் உள்ளம் பாவங்களில் மிகப் பெரிய தொன்றைக் காண முயன்றிருக்கும். அவர் தம் உள்ளத்தில் தந்தையைக் கொன்று, தாயைக் கெடுத்த பாவம் திரண்டிருக்கும். பின்னே ஊர் பேருடன் கதை அவரால் செப்பஞ் செய்யப்பட்டிருக்கும். நாளடைவில் அக்கதை வெவ்வேறு வழியில் வளர்ந்திருக்கும்; திரிந்திருக்கும். பாண்டி நாட்டிலே ஓர் இளைஞன் விலாப் புடைக்கத் தின்று கொழுத்துக் காளை போல் வளர்ந்து திரிந்து வந்தான். அவன்றன் கொழுமை தாயைக் காமுறச் செய்தது. அவன் தனது மறவினைக்குத் தடையாயிருந்த தந்தையைக் கொன்றான். சில ஆண்டு கடந்த பின்னர் நல்லோர் சேர்க்கை அவனுக்குக் கிடைத்தது. அவனது இளமைச் செயல் அவனைத் துளைக்கத் தொடங்கியது. மைந்தன் துடிக்கிறான்; வெயிலிடைப்பட்ட புழுவெனத் துடிக்கிறான். அறியாமையில் விளைந்த அடாத செயல் அறிவில் துன்புறுத்துகிறது; வதைக்கிறது. மகன் அலறுகிறான்; கதறுகிறான்; பதறுகிறான். தவறுதல் அந்நாளில் விளங்கவில்லை; இந்நாளில் விளங்குகிறது. என் செய்வான்! பாதகன்! மாபாதகன்! படாதபாடு படுகிறான்; களைகண் உண்டோ என்று அலைகிறான்; களைகண் ஆண்டவனே என்று உணர்கிறான்; ஆண்டவனை நினைந்து நினைந்து அழுகிறான்; முறையிடுகிறான்; ஒரே அழுகை; முறையீடு. அவனது உள்ளங் கண்ட அருட்கடல் – ஏழை பங்காளன் – அவனுக்கு அருள் சுரந்தான்.

நிகழ்ந்த பாவம் எத்தகையது? நினைந்தாலும் நெஞ்சம் பகீரென்று நடுக்குறுகிறது. கொடுஞ் செயல் எந்நாளில் நிகழ்ந்தது? அறியாமை [1]  இருளில் – பாவம் இன்னதென்று விளங்காத நாளில் – நிகழ்ந்தது. பின்னாளில் அச்செயல் பாவம் என்று விளங்கலாயிற்று.
-——————————-
[1] Repentance with Allah is only for those who do evil in ignorance, then turn (to Allah) soon, so these it is to whom Allah turns (mercifully) and Allah is ever Know ing, Wise.

And repentance is not for those who go on doing evil deeds, until when death comes to one of them, he says : Surely now I repent; nor (for) those who die while they are unbelicvers. These are they for whom We have prepared a painful chastisement.
      –The Holy Quran IV: 17, 18 (Translation by Maulvi Muhammad Ali, M. A., LLB.)

-——————————-

பாவம் விளங்கியதும், நெக்குநெக்குருகலும், [1] அழுகையும், முறையீடும் பெருகின. அவை பாவத்தைக் கழுவி,. ஆண்டவன் அருளைக் கூட்டும் ஆற்றல் வாய்ந்தன. பாவஞ் செய்த இரும்பு மனம் – வன்னெஞ்சம் – மாண்டு போயிற்று; புதிய அன்புமனம் – அற நெஞ்சம் – தோன்றியது. பழைய ஆள் மாண்டான். புதிய ஆள் பிறந்தான்.


-——————————-
[1] யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உனைவந் துறுமாறே.
      –
மாணிக்கவாசகர்
-——————————-
ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் கடவுளின் ராஜ்யத்தைக் காணமுடியாதென்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்என்றார். – யோவான்: 3:3

இது கிறிஸ்து பெருமான் திருவாக்கு.

மெய்ம்மையும் அஞ்சாமையும்

முறையீட்டில் மெய்ம்மையும் அஞ்சாமையும் இருத்தல் வேண்டும். மெய்ம்மையுள்ள இடத்தில் அஞ்சாமையும், அஞ்சாமையுள்ள இடத்தில் மெய்ம்மையும் இருக்கும். அச்சத்தில் மெய்ம்மை பிறத்தல் அரிது. அதில் பொய்ம்மையும், பொய்ம்மை கலந்த மெய்ம்மையும் பிறக்கும். முறையீடு, உண்மை என்னுங் கடவுள் முன்னிலையில் நிகழ்வது. அங்கே பொய்ம்மை எக்காரணம் பற்றியும் தலைகாட்டலாகாது; தலைகாட்டினால் முறையீடு பயனற்றதாகும். முறையீடாவது பாவ அறிக்கை. அதில் பொய்ம்மை கலந்தால், அஃது எப்படிப் பாவ அறிக்கையாகும்? அது, குளிக்கப் போய்ச் சேற்றைப் பூசிக்கொண்டவன் கதையாக முடியும். மெய்ம்மையாக முறையீடு நிகழ்த்தும் நெஞ்சம் பாவத் துக்கு அஞ்சுவதாகும். முறையீட்டுக்கு நாணும் நெஞ்சம் அச்சமுடையதாகும். அச்சத்தில் மெய்ம்மை எழுங்கொல்? முறையீட்டில் மெய்ம்மை வேட்கை எழுந்தால் அச்சம் இரிந்தோடும்; அஞ்சாமை வீறிட்டெழும்.

பொறுப்பு

பாவம் செய்பவன் மனிதன். அம்மனிதனே பாவ அறிக்கை செய்தல் வேண்டும். பொறுப்பு மனிதனுடையது. பொறுப்பில் மெய்ம்மை கலந்தால், பாவத்துக்கு அஞ்சும் நெஞ்சம் உண்டாகும். பாவத்துக்கு அஞ்சும் நெஞ்சும் பெறுவோன் வாழ்க்கையில் வெற்றி பெற்றவனாவன். அவன் நெஞ்சம் புதுப் பாவத்தை நாடாது; ஆண்டவன் அருளில் வேட்கை கொள்ளும். பாவத்துக்கு அஞ்சும் நெஞ் சம் பொறி புலன்களில் வீழாது : குறும்பு செய்யாது; தியா னத்தில் நன்றாக ஈடுபடும்.

தியானம்

பாவக் கழிவுக்கென்று உலகில் கோலப்பட்ட முறைகள் பலப்பல. அவைகளுள் சிறந்ததும் எளியதும் மூர்க்க மில்லாததுமா யிருப்பது முறையீடு. [1] பலவிதக் கிரியை களாலும், யோகங்களாலும், பிறவாற்றாலும் அடைய முடியாத பேற்றை முறையீட்டால் எளிதில் அடையலாம். முறையீடு மட்டும் மெய்ம்மை யுடையதாயிருத்தல் வேண்டும். மெய்ம்மை முறையீடு தியானத்துக்கு ஆக்கம் அளிக்கும்.


-——————————-
[1] புற்று மாய்மர மாய்ப்புனல் காலே
உண்டி யாய் அண்ட வாணரும் பிறரும்
வற்றி யாரும் நின் மலரடி காணா
மன்ன என்னையோர் வார்த்தையுட் படுத்துப்
பற்றினாய் பதையேன் மனம் மிக உருகேன்
பரிகி லேன்பரி யாவுடல் தன்னைச்
செற்றிலேன் இன்னுந் திரிதரு கின்றேன்
திருப்பெருந்துறை மேவிய சிவனே.
      –
மாணிக்கவாசகர்
-——————————-

பேதம் அபேதம்

‘ தியானத்துக்குப் பேத உணர்வு இருத்தல் கூடாது; அபேத உணர்வு இருத்தல் வேண்டும். பேதம் தியானத் துக்கு ஆக்கந் தேடாது. அது தியானத்தைக் குலைத்துக் கொண்டே இருக்கும். தியானத்துக்குச் [*] சாதி மதம் மொழி நாடு முதலிய வேற்றுமைகளைக் கடந்த பொதுமை உணர்வு தேவை. சாதி முதவிய வெறிகளுக்கு இரை யாகும் நெஞ்சம் தியானத்தில் நிலை பெறாது. அது பாதரசம் போல் சஞ்சலத்தில் வீழ்ந்து கொண்டே தொல்லையுறும். ஆகவே தியானத்துக்கு அபேத உணர்வு தேவை என்க.


-——————————-
[*] சாத்தி ரம்பல பேசுஞ் சழக்கர் காள்
கோத்திர முங்குல முங்கொண் டென் செய்வீர்
பாத்தி ரஞ்சிவ மென்று பணிதிரேல்
மாத்திரைக்குள் அருளுமாற் பேறரே.       – அப்பர்
-——————————-


நிந்தனை

உலகில் தோன்றியுள்ள சமயங்கள் பலவும் தியானத்தை அறிவுறுத்துகின்றன.
தியானத்தை அறிவுறுத் தாத சமயம் இல்லை என்று யான் சொல்வேன். சமயத்தவர் பலர் தியானத்தில் நாட்டஞ் செலுத்துவதற்குப் பதிலாக, வேறு வேறு துறைகளில் நாட்டஞ் செலுத்து நின்றனர். சமயத்தவர் செய்யுந் தவறு சமயங்கன் மீது சுமத்தப் படுகிறது. இஃது உலக வழக்கு. அவரவர் தத்தஞ் சமயத்தில் நின்று ஒழுகி வருவரேல், அவரவரது நெஞ்சம் தியானத் தையே நாடிச் செல்லும். தத்தஞ் சமயத்தில் நின்று ஒழுகாது, சமய நிந்தனையிலும் பூசனையிலும் இறங்குவோர் நெஞ்சம் தியானத்தில் நாட்டஞ் செலுத்துவதாகாது. அஃது இகல் பகை எரி முதலியவற்றில் வீழ்ந்து கரியும்.

ஒரே இறை ஒரே நெறி

[*]  இறைவன் ஒருவனே. அவனை அடையும் நெறியும் ஒன்றே. ஒரு நெறியில் பலவகைக் கவட்டைகள் ஏற்பட்டன. கவட்டைகள் ஏற்படுவது இயல்பு. எக் கவட்டையைப் பற்றி நடந்தாலும் அஃது ஒரு நெறியிலேயே சேர்ப்பிக்கும். இறைவன் உடலாகிய இயற்கை ஒன்று. அதன் காரியமோ பலவிதம். இயற்கைக் காரியம் பலவித மாகப் பிரிந்து நிற்றலால், மக்களின் புறத்தோற்ற அமைப்பு,  வழக்க வொழுக்கங்கள் முதலியனவும் பலவிதமாகப் பிரிந்து நிற்கின்றன. அப்பல விதங்கட் கேற்பச் சமயங்களும் பலவிதமாகத் தோற்றமுறலாயின. மக்களின் புறத்தோற்ற அமைப்பு, வழக்க ஒழுக்கங்கள் முதலியன பன்மைப்பட்டுக் கிடந்தாலும், அப் பன்மை அவர்களது அக ஆன்மாவில் கிடப்பதில்லை. அங்கே ஒருமையே நிலவுகிறது. அக ஒருமைக்குப் புறப்பன்மை தேவை. புறப்பன்மைத் துணைகொண்டே அக ஒருமைக் காட்சி பெறுதல் வேண்டும். பன்மையில் ஒருமை காண்பதே புலமை. புறப்பன்மைத் தோற்றங்கள் போன்றன சமயங்கள். ஆன்ம ஒருமை போன்றது ஆண்டவன் நெறி. அச்சமயங் களும், இந்நெறியும் தொடர்புடையன. அத் தொடர்பை உணர்தற்கென்றே பிறப்பு, கல்வி, திருமணம், வாழ்க்கை முதலியன ஏற்பட்டுள்ளன. தத்தஞ் சமயம் நின்று ஒழுகுவோர்க்கு, அத்தொடர்பு நன்கு விளங்கும். சமயப் பூசலில் இறங்குவோர்க்கு அது விளங்காது. மக்கள் புறச் சமயங்களைக் கொண்டே அக ஆன்ம நெறியை அடைய முயல்வது அறிவுடைமை யாகும். புறங்களைப் போருக்குப் பயன்படுத்துவது அறிவுடைமை யாகாது

-——————————-

[*] ஒன்றதே பேரூர் வழியா றதற்குள
என்றதே போலும் இருமுச் சமயமும்
நன்றிது தீதிது என்றுரை மாந்தர்கள்
குன்று குறைத்தெழு நாயையொத் தார்களே.       – திருமூலர்

-——————————-


புறச் சமயங்களின் வழி நில்லாது, வாத தர்க்கங்களில் இறங்குவோர் அகநாட்ட முடையவராதல் அரிது. அக நாட்டத்துக்கென்று அமைந்துள்ள அரண்கள் சிதைந்தால், அந் நாட்டம் எப்படி உண்டாகும்? அகநாட்டமே ஆத்திகத்துக் குரியது. ஆத்திக அமைதிக்குப் போராட்டங் கூடாது.

உலகில் ஆங்காங்கே தோன்றிய சமயப் பெரியோர் பலரும் அவ்வவ்விடத்தின் இயற்கைக்கேற்ற வண்ணம் புறச் சமய வழக்க ஒழுக்கங்களைக் காலதேச வர்த்தமானத்துக்குக் கிணங்க அறிவுறுத்தியதுடன் நில்லாது, அகத்துக்குரிய ஒருமையென்னும் பொதுமையையும் அறிவுறுத்திச் சென்ற னர். அவர் தம் அறிவுறுத்தல்களை உலகம் திரித்துத் திரித்து விடுதலால், பொதுமை அறம் வளர்ச்சியுறாது தடைபடுகிறது. பெரியோர் பெயராலும் அவர்தம் போதனைகள் பெயராலும் ஆங்காங்கே தோன்றிய மடங்களும், சங்கங்களும், சம்பிரதாயங்களும், பிறவும் தடைக்குக் காரணங்களாக நிற்கின்றன. அவைகளை நல்வழியில் திருப்புதற் குரிய அறக் கிளர்ச்சிகள் ஆண்டாண்டுத் தோன்றுதல் வேண்டும். பெரியோர் எண்ணிய எண்ணங்கள் கிளர்ச்சிக்குத் துணை செய்யும். மக்கள் கிளர்ச்சியில் தலைப்படாது, வாளா கிடந்தால், பெரியோர் துணை வாராது. பற்பல இடங்களில் தோன்றிய பெரியோர் போதனைகளை யெல்லாம் திரட்டிப் பார்த்தால், அவைகளினூடே சமரச சன்மார்க்கம் வெள்ளிடை மலையெனப் பொலிதல் காணலாம். ஒவ்வொரு சமயமும் சமரச சன்மார்க்கமென்பது எனது வாழ்க்கையில் செவ்வனே விளங்கியது. சமரச சன்மார்க்கத்தை அறிவுறுத்தாத சமயமே இல்லை என்பது எனது உள்ளக்கிடக்கை.


எய்த எளிதாம் இறையருள் இல்லையேல்
எய்த அரிதா மியாவர்க்கும் – மெய்தெளிந்தால்
எம்மார்க்கத் தோடும் இகலற் றிருக்குமதே
*
சன்மார்க்கம் ஆகுநெறி தான்.       – அமுதசாரம்

எச்சமயத்தில் நின்று ஒழுகிப் பார்த்தா லும் அது சமரச சன்மார்க்க உணர்வை உண்டாக்கு மென்பதில் சிறிதும் ஐயமில்லை. ஒருவன் தனக்கு இனிய தாகத் தோன்றும் ஒரு சமயத்தில் நின்றொழுகலாம். தனது சமயத்தில் நின்றொழுகாது, பிற சமயங்களை ஒருவன் நிந் தனை செய்து வருவானாயின், அவன் சமரச சன்மார்க்கத்தை அடையவே மாட்டான். சமய ஒழுக்கத்தில் நிற்பவன் நிந் தனையில் இறங்கலாகாது; இறங்கினால் சமய, வொழுக்கமும் குலைந்து போகும்; சமரச சன்மார்க்கப் பேறும் கிட்டாமற் போகும்.

சன்மார்க்கம்

சத் + மார்க்கம் = சன்மார்க்கம். சத் – உண்மை; கடவுள். மார்க்கம் – நெறி. கடவுள் நெறியே சன்மார்க்க மென்பது. அதில் பொதுமை என்னுஞ் சமரச மிகுத்தலால், அது சமரசமென்று வழங்கப்படுகிறது. சன்மார்க்கமே எல்லா மார்க்கங்கட்கும் உயிராக நிலவுதலால் அதை மார்க்கமென்றுஞ் சொல்லலாம். சமரசமென்பதும், சமரச சன்மார்க்க மென்பதும், சன்மார்க்க மென்பதும், மார்க்க மென்பதும் ஒன்றே.

சன்மார்க்கம் எப்பொழுது தோன்றியது? அது தோன்றிய காலத்தை அறுதியிட்டுக் கூறுதல் இயலாது. மக்களுக்குக் கடவுள் உணர்வு என்று தோன்றியதோ , அன்று தோன்றியது சன்மார்க்கம் என்று ஒருவாறு கூறி விடலாம். காலத்தைப்பற்றிய கவலை தியானயோகிகட்கு வேண்டுவதில்லை.
குருமார்

மக்கள் அறியாமை காரணமாகச் சன்மார்க்கத்தின் மீது மாசு படரும். அம்மாசினைப் போக்க அவ்வப்போது குருமார் போதருவர்.

குருமார் வரலாறு ஆராய்ச்சிக்கு எட்டாதது. அவர் ஒவ்வொரு போது ஒவ்வோரிடத்தில் ஒவ்வொருவிதப் பெயரால் போற்றப்படுவர். [1]  குருமார் என்றொரு கூட்டம் இருக்கிறது. அவர்தம் தொகை இவ்வளவினது என்று அறுதியிட்டுக் கூறுதல் இயலவில்லை. குருமார் அவதாரம் என்றும், அவதாரமல்ல என்றும், மனிதராயிருந்து தவத் தால் மேம்பட்டுக் குருநிலை எய்தினவர் என்றும், ஞானிகள் வேறு குருமார் வேறு என்றும், அவர் நுண்ணிய பொன் னுடலர் என்றும், சிற்சில சமயம் பருவுடல் தாங்கியும் வருவர் என்றும் உலகம் பலவாறு அவரைப்பற்றிச் சொல்கிறது. எவர் என்ன கூறினுங் கூறுக. குருமார் இருத்தல் உண்மை; அவர்வழி உலகம் நடத்தல் உண்மை.

கடவுள், உறுப்பில்லாதது, உருவமில்லாதது; அசை வற்றது; போக்கு வரவற்றது. அஃது எப்படி வினையாற் றும்? வினையாற்றுதற்கு உறுப்பு வேண்டும். உறுப்புக்கு உடல் வேண்டும். உறுப்பில்லாக் கடவுள் – உடலில்லாக் கடவுள் – இயற்கையை உடலாக்கொண்டும் குருமாரை உடலாக்கொண்டும் வினை ஆற்றுகிறது; படைப்பாதித் தொழில்களைச் செய்கிறது. இறையின் உடல் இயற்கை என்பது நேற்றுப் பேசப்பட்டது. அவ்வுடலுடன் குருமார் உடலும் கடவுளுக்கு உண்டு என்று கொள்க.


-——————————-
[1] குருவே சிவமெனக் கூறினன் நந்தி
குருவே சிவமென் பதுகுறித் தோரார்
குருவே சிவமாகிக் கோனுமாய் நிற்கும்
குருவே யுரையுணர் வற்றதோர் கோவே.       – திருமந்திரம்

துயரில் சுடரொளி தன்னுடைச் சோதி நின்றவண்ண நிற்கவே
துயரில் மலியு மனிதர் பிறவியில் தோன்றிக்கண் காணவந்து
துயரங்கள் செய்து தன் தெய்வநிலை யுலகில் புகவுய்க்கும் அம்மான்
துயரமில் சீர்க்கண்ணன் மாயன் புகழ் துற்ற யானோர் துன்பமிலனே.
      –
திருவாய்மொழி

-——————————-

குருமார் மாசற்றவர். அவர்தம் மாசற்ற உள்ள மலரில் கடவுள் கோயில் கொள்கிறது. குருமாரை இயக்கு வது கடவுள். குருமார் நினைப்பெல்லாம் கடவுள் நினைப்பு; அவர் மொழியெல்லாம் கடவுள் மொழி; அவர் செயலெல் லாம் கடவுள் செயல். உருவமற்ற கடவுள் நேரே எதையுஞ் செய்யாது. அஃது இயற்கை வாயிலாகவும் குருமார் வாயிலாகவும் காரியங்களை நிகழ்த்துகிறது. முன்னே பேசப் பட்ட இயற்கை அன்னையையுங் குருமார் கூட்டத்தில் சேர்த்துப் பேசுவது தொன்றுதொட்ட வழக்கு.

குருமார் பலரா ஒருவரா? அவர் தோற்றத்தில் பலர்; உண்மையில் ஒருவர். அவர் தம் உள்ளத்தில் வீற்றிருக்குங் கடவுள் ஒன்றே. ஒரே கடவுள் அவர் வாயிலாகச் செயல் புரிகிறது. ஒரே கடவுள் ஒளிரும் உள்ளமுடைய குருமார் எங்ஙனம் பலராவர்? அவர் ஒருவரே. குருமார் ஒருவரென் பது தியான யோகத்தில் நன்கு விளங்கும்.

எண்மர்

உலகம் தோற்றமுடையது; தோற்றத்திலேயே கருத்துச் செலுத்துவது. தோற்ற நிலையுடைய உலகுக்குக் குருமார் பலராகவே விளங்குவர். குருமார் தொகை தெரி யாமையால் அவரைப் பலர் என்று சொல்வது சம்பிரதாய மாகிவிட்டது. பலரை ஒரு தொகைப்படுத்தவேண்டி, யான் எண்ணி நினைந்து உன்னி முன்னிப் பார்த்ததில், என் உள்ளத்தில் பலர் எண்மராய் ஒருவராயினர். எண்மராவார்: மகம்மது, இயற்கை அன்னை, கிறிஸ்து, விருஷப தேவர், புத்தர், கிருஷ்ணமூர்த்தி, குமரன், தக்ஷிணாமூர்த்தி. இவ் வெண்மர் பலராவர்; ஒருவராவர். தெய்வம் ஒன்றே என்றவர் மகம்மது; (தெய்வம்) தன் உயிர் என்று அறிவிப்பவள் இயற்கை அன்னை; அன்பு என்றவர் கிறிஸ்து; அஹிம்ஸை என்றவர் விருஷபதேவர்; தருமம் என்றவர் புத்தர்; நிஷ்காமியம் என்றவர் கிருஷ்ணமூர்த்தி; அழகு என்பதைத் தெரிவிப்பது குமரன் கோலம்; சாந்தம் என்பதற்கு அறிகுறி தக்ஷிணாமூர்த்தம். தெய்வம் ஒன்றே என்பது விளங்கும் இடத்தில், அதனூடே மற்ற ஏழும் விளங்கப்பெறும். ‘தெய்வம் உயிர் – இயற்கை உடல்’ என்னும் உண்மை திகழும் இடத்தில் பிற ஏழும் திகழ்ந்து ஒன்றும். தெய்வம் அன்பு என்பது புலனாகும் போது, அதில் வேறு ஏழும் பொருந்திப் புலனாகி ஒருமைப்படும். ஒன்று விளக்கமுறும் போது மற்ற எல்லாமும் விளக்கமுற்றுக் கலப்புற்று ஒன்றாகும். ஒன்றை விடுத்து ஒன்று நில்லாது. எவர்க்கு எவரில் – எவர் போதனையில் வேட்கை உண்டாகிறதோ, அவர், அவரில் – அவர் போதனையில் – அன்பு பூண்டு ஒழுகலாம். அவ்வொழுக்கம் தெய்வ நிலையைக் கூட்டுதல் ஒருதலை. சன்மார்க்கத்தைப்பற்றி இரண்டு தனி நூல்கள் என்னால் யாக்கப்பட்டுள்ளன. அவை, ‘சமரச சன்மார்க்க போதம்’, ‘ சமரச சன்மார்க்கத் திறவு’ என்பன. அவைகளில் சன்மார்க்கத்தைப் பற்றிய குறிப்புக்கள் பல பொறித்துள்ளேன். விளக்கத்துக்கு அந்நூல்களைப் பார்க்க. (பின்னே, இரண்டும் ‘சன்மார்க்க போதமும் திறவும்’ என்ற தலைப்புடன் ஒன்றாகவே அச்சிடப்பட்டுள்ளன.)

மகம்மது ஒருமையும், இயற்கை உடலும், கிறிஸ்து அன்பும், விருஷபதேவர் அஹிம்ஸையும், புத்தர் தருமமும், கிருஷ்ணமூர்த்தி நிஷ்காமியமும், குமரன் அழகும், தக்ஷிணா மூர்த்தி சாந்தமும் தெய்வ உண்மையை உணர்த்துவதைத் தியானத்தில் விளங்கப் பெறலாம். இப்பேற்றிற்குத் துணை செய்வது ‘ சன்மார்க்கம்.”

சன்மார்க்கமும் உலக மார்க்கமும்

சன்மார்க்கம் வேறு உலகமார்க்கம் வேறு என்றும், உலகுக்கு அப்பாற்பட்டது சன்மார்க்கம் என்றும் சிலர் பேசுவதுண்டு. அப்பேச்சு செயலாகும் போது, வாழ்க்கையில் துன்மார்க்கமே மலிவதாகும். உலக மார்க்கம் வேறென்று, வாழ்க்கையில் பலதிறப் பாவங்களைச் செய்து கொண்டு, கடவுள் பூசை ஒன்றே சன்மார்க்கத்துக்குரிய தென்று கடவுளைப் பூசிப்பதால் பயன் விளையாது. அப் பூசை சத்தென்னுங் கடவுளிடம் சாராது. அதனால் பாவங்களே பெருகும்; வாழ்க்கை தூய்மையுறாது; துன்மார்க்கம் துதையும்.

சத் என்னுங் கடவுள் உலகெங்கும் நீக்கமற நிற்பது. சத்தின் மார்க்கம் உலகத்தை விடுத்து எங்ஙனம் நிற்கும்? உயிர்கள் சன்மார்க்கத்தில் நின்றொழுகி விடுதலையடைதல் வேண்டுமென்னும் நோக்குடன் அவைகட்கு உலகம் அளிக்கப்பட்டது; உடல் உள்ளம் கரணம் முதலியனவும் அளிக்கப்பட்டன. இவை யாவும் சன்மார்க்க வாழ்க்கைக் குத் துணை செய்யும் பொருட்டே வழங்கப்பட்டன என்று உணராதார் சன்மார்க்கம் வேறு’ ‘உலக மார்க்கம் வேறு என்று பேசியும் நடந்தும் அல்லற்படுவர். உலகங்கடந்த நிலையில் மார்க்கம் ஏது? அங்கே மார்க்கம் எற்றுக்கு? அங்கே என்ன இருக்கிறது? ஒன்றுமில்லை. ஒரே வெளி – ஒரே ஒளி. அவ் வெளியொளியை அடைவதற்கென்று கொடுக்கப்பட்ட உலகுக்கே சன்மார்க்கம் வேண்டற் பாலது.

சன்மார்க்கமும் உலக மார்க்கமும் ஒன்றே. இரண்டையும் பிரித்து வாழ்வோர் விடுதலை யடைதல் அரிது.

சன்மார்க்கம் பிறப்பில், வளர்ப்பில், கல்வியில், திரு மணத்தில், பிள்ளைப் பேற்றில், தொழிலில், பொருளில், நடக்கையில், இன்ன பிறவற்றில் இரண்டறக் கலந்து நிற் பதைத் தெளிந்து வாழ்க்கை நடாத்துவோர் சீலத்தில் செல்வராதல் உறுதி. சீலச்செல்வம் தியானத்துக்கு வேர் போன்றது. தியானம் விடுதலைக்கு வழிதேடுவது. ஆதலின், சன்மார்க்கம் வேறு உலக மார்க்கம் வேறு என்று வாழ்க்கை நடாத்துவது தவறு என்க.

அரசியல்

சன்மார்க்க வளர்ச்சிக்கு உலகியற்றுறைகள் நலம் பெற நிகழ்தல் வேண்டும். உலகியற்றுறைகளுள் சிறந்தது அரசியல். அரசியல் செம்மையுடையதாயின், மற்ற எல்லாம் செம்மையுடையனவாகும். பழைய கால அரசியல் ஒருவித சமதர்ம வழியில் இயங்கி வந்தது. இடைக்காலத்தில் அதனுள் சர்வாதிகாரம், ஜனநாயகம் முதலியன புகுந்தன. அதனால் செல்வம் ஒரு கூட்டத்தினரிடைப் பெருகலும், மற்றொரு கூட்டத்தினரிடைச் சுருங்கலும் நேர்ந்தன. இப்பெருக்கமும் சுருக்கமும் உலக ஒழுங்குக்குக் கேடு சூழ்ந்தன. உலக ஒழுங்கைக் காக்கும் பொறுப்பு இயற்கை அன்னையினுடையது. இயற்கை அன்னை உலக ஒழுங்கை விரும்பினள். அவ் விருப்பம், காரல் மார்க்ஸ் உள்ளிட்ட ஒரு சிலரை உந்திப் பழைய சமதர்மத்தைத் தற்கால விஞ்ஞான முறையில் செப்பஞ் செய்யத் தூண்டியது. காரல் மார்க்ஸ் உள்ளிட்டவரால் சமதர்மம் செப்பஞ் செய்யப் பெற்றது. ஆனால் அது நிறை யுடையதாக அமையவில்லை. அதில் சன்மார்க்கம் புகவில்லை. சமதர்மம் உடல்; சன்மார்க்கம் உயிர். சன்மார்க்கமற்ற சமதர்மம் நிறையுடையதாகாது. சன்மார்க்கத்தை அடிப் படையாகக் கொண்ட சமதர்மமே உலகில் மெய்ம்மையான அமைதியை நிலை பெறுத்தும். தற்போது எங்கணும் புது உலகம் பேசப்படுகிறது. அவ்வுலகம் சன்மார்க்க சமதர்மத்தி னின்றும் அரும்புதல் வேண்டும். சன்மார்க்க வாயிலாகச் சமதர்மம் அரும்பும் வரை உலகில் அமைதி நிலைபெறாது. சன்மார்க்கத்தில் சமதர்மமும் அடங்குதலைத் தெளிக.

தியானத்துக்கு அமைதி வேண்டும். தற்கால உலகில் அமைதி நிலவுகிறதா? அமைதிக்குப் பதிலாகப் பட்டினியும் பசியும் கொள்ளையும் கொலையும் ஒவ்வோரிடத்தில் ஒவ் வொருவிதமாக உலகை அலைக்கின்றன. இந்நிலை தியானத் துக்கு இடம் தாராது. உலக அமைதிக்குச் சன்மார்க்க அரசியல் தேவை. அவ்வரசியலை உலகம் பெறுதற்குரிய முயற்சியிலும் அறிஞர் தலைப்படுதல் வேண்டும். அதுவும் சன்மார்க்கத் தொண்டாகும்.

பரபரப்பு

இக்கால் நாகரிகம் பரபரப்பை ஈன்று வளர்த்துவிட்டது. பரபரப்பு, கருமுதல் சுடுகாடுவரை வீறிடுகிறது என்று கூற தல் மிகையாகாது. உண்டி, உடை, கல்வி, தொழில், நடக்கை முதலிய வாழ்வுத் துறைகளிலெல்லாம் பரபரப்பு மிகுந்து நிற்கிறது. இவ்வாழ்க்கையில் தியானத்துக்கு இடம் ஏது? பரபரப்பு வாழ்க்கை , தியானத்துக்கு யமன் போன்றது. இக் கொடிய வாழ்க்கை உலகில் வேரூன்றி வளர்ந்து தழைத்த தற்கு அடிப்படையான காரணம் என்னை? காரணம் பலபடக் கூறலாம். அவைகளையெல்லாம் திரட்டி ஆராய்ந்தால் மூலம் புலனாகும். வாழ்க்கையில் பொருள் போராட்டம் புகுந்தமை மூலகாரணம். பொருள் போராட்டத்தால் அமைதி வீழ்ந்து, பரபரப்பு எழுந்தாடல் இயல்பு. பரபரப்பு வீழ்தற்கு வாழ்க் கையில் பொதுமை அறம் புகுதல் வேண்டும். இதற்குப் புரட்சி தேவை என்று சொல்லப்படுகிறது. எப்புரட்சி? அறப் புரட்சி. இதுவே சன்மார்க்கப் புரட்சி என்பது. மறப் புரட்சி கூடாது. அது சன்மார்க்க மற்றது; துன்மார்க்க விலங்கியல் பைப் பெருக்குவது; போராட்டத்தை வளர்ப்பது. அஃது எற்றுக்கு?

….அப்பொழுது அவர்கள் கிட்ட வந்து இயேசுவின் மேல் கைபோட்டு அவரைப் பிடித்தார்கள். இதோ, இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் கையை நீட்டித் தன் பட்டயத்தை உருவிப் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான். அப்பொழுது இயேசு அவனிடம் உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்
      – மத்தேயு: 26:50 – 53.

இதிற் போந்துள்ள கிறிஸ்து பெருமான் திருவாக்கை உளங் கொண்டு பார்க்க. சன்மார்க்கம், மக்களிடைச் சகோதர நேய விதை விதைக்கும். அது தெய்வ இயல்புகளைப் பெருக் கிப் போராட்டத்தை அருகச் செய்யும். மக்கள் ஆன்ம நேய உரிமைப்பாட்டுடன் வாழ விரும்புவார்கள். அவ்விருப்பம் ஓங்கி வளர வளர அது தானே பொருள் நிலையைப் பொது மைப்படுத்திவிடும். சகோதர நேயம் என்ன செய்யாது? அன்பை ஓம்பித் தியாகத்தைச் செறிவிக்கும். மக்கள் நெஞ்சில் அன்பும் தியாகமும் மலிந்தால் சிறுமைப் பொருள் போராட்டத்திற்கு அந்நெஞ்சம் இரையாகுமா? அஞ்நெஞ்சில் பரபரப்பு நாகரிகம் எவ்வாறு இடம் பெறும்? பரபரப்பற்ற வாழ்க்கையே மலரும். அவ்வாழ்க்கை தியானத்தை அவாவுவ தாகும். சன்மார்க்க ஆட்சி முறையிலேயே இத்தகைய நல்வாழ்க்கை ஆக்கம் பெறும். இதற்கும் தியானம் தேவை. பரபரப்பு நாகரிகம் எங்ஙனம் தியானத்துக்கு இடந்தரும் என்னுங் கேள்வி எழுதற்கு இங்கே இடம் உண்டாகலாம்.

சிலர் முயற்சி

எக்காரணம் பற்றியோ பரபரப்பு நாகரிகம் தோன்றிப் பரவிவிட்டது. அந்நாகரிகம் தியானத்துக்குக் கேடுஞ் சூழ்ந்துவிட்டது. இந்நிலையை மாற்றுதற்குச் சன்மார்க்க ஆட்சி முறை வேண்டப்படுகிறது. இதற்குத் தியானம் தேவை எனில், எப்படி அது செயலில் நிகழ்வதாகும்? தியா னத்துக்குப் பரபரப்பு யமன் என்பதில் ஐயமில்லை. உலகில் தியானம் ஆக்கம் பெறல் எளிதன்று. ஆனால் வாழ்க்கைக்கு இன்றியமையாத தியானம் உலகில் அருகி வருதல் ஒரு சிலர்க்காதல் உணர்ச்சி யூட்டாமற் போகாது. இக்காலச் சண்டை விளைத்துவரும் தொல்லை, தற்கால நாகரிகத்தில் வெறுப்புக்கொள்ளுமாறு எத்துணையோ பேருக்கு உணர்ச்சியூட்டி யிருக்கும். அவ்வுணர்ச்சி : மக்களைச் சன்மார்க்கத்தில் வேட்கை கொள்ளவே உந்தும் அவர்தம் மனம் தியானத்தை நாடாது வேறென் செய்யும்? இயற்கை தன்னை விடுத்துச் சென்று உழல்வோர்க்கு எவ்வழியி லாவது நல்லறிவுச் சுடர் கொளுத்தித் திருப்புவது இயல்பு. உணர்ச்சி எழப்பெறுவோர் ஒருவராயினுமாக; இருவ ராயினுமாக; சிலராயினுமாக. அவ்வொருசிலர் உலக நலங்கருதித் தியானத்துக்கென்றே தமது வாழ்வை அர்ப் பணஞ் செய்ய உறுதிக்கொள்ளல் வேண்டும். அவ்வுறுதி தவமாகும். தவத்தால் ஆகாததொன்றில்லை. இரண்டொரு வர் ஆழ்ந்த சிந்தனை – தியானம் – தவம் – உலகையே சீர் செய்யும் ஆற்றல் உடையதாகும். ஆயிரக்கணக்கானவரின் தேகசக்தி, ஒரு தியான யோகியின் ஆன்ம சக்திக்கு ஈடாகாது. ஆதலின், துன்மார்க்கம் நிறைந்த பரபரப்புக் காலத் திலும், அதை வீழ்த்திச் சன்மார்க்க அமைதியை நிலை பெறுத்தும் ஆற்றல் ஒருசிலர் தியானத்தில் அமையும் என்க. இதற்குச் சான்றுகள் பழைய சரித்திரங்களில் பல உண்டு.

தவம்

உலகில் கொடுமைகளே மலிந்த காலங்கள் நூல்களில் பேசப்படுகின்றன. அக்காலங்களில் மன்பதைக்குற்ற துன்பங்கள் அளவில்லாதன. கொடுமைகளைத் தவிர்க்கும் வழி காணாது மக்கள் ஏக்குறுவார்கள். ஒருவர் இருவர் அமைதியாகத் தியானத்தில் அமர்ந்து தவங்கிடப்பர். அத்தவம் அவ்வக் கால நிலைக்கேற்ற வண்ணம் தொண்டு செய்யத்தக்க ஒவ்வொரு பெரியவரைத் தோன்றச் செய்யும். அவரால் கொடுமைகள் களையப்படும். தவமுயற்சி அந்தரங்கத்தில் செய்யப்படுவது. அதனால் விளையும் பயனோ மிகப் பெரிது, கொடுமைகளை நீக்கவல்லது தியானம் – அமைதித் தவம்.

கலைகளின் தோற்றம்

தியானம், கொடுமைகளை மட்டும் களைவதன்று; போராட்டத்தை மட்டும் போக்குவதன்று; அமைதிக்குரிய சன்மார்க்கக் கலைகளையும் நல்கும். சன்மார்க்கக் கலைகள் தியானத்தில் மூழ்கிய முனிவரிடத்திலிருந்து பிறந்தனவேயாம். தியானத்தில் ஆழாத மனிதரிடத்திருந்து களிக் கதைகளும் பிற சிறுமைகளும் பிறக்கும். அவைகள் உலகைச் சன்மார்க்கத்தில் நடத்துவனவாகா. களிக்கதைகளும் பிற சிறுமைகளும் மக்கள் வாழ்வைக் கெடுக்கும். அவைகள் உலகைப் பல வழியிலும் அல்லற்படுத்தும். சன்மார்க்கக் கலை பிறப்பதற்கும் தியானந் தேவை.

தியானத் தொண்டு

சன்மார்க்க வாழ்வு, தன்னலத்தைச் சிதைத்து, ஒப்புர வுடையதாகும். ஒப்புரவு அறத்தொண்டு நாட்டத்தை உண் டாக்கும். [1] அறத்தொண்டாவது, உயிர்கட்கு எவ்வெவ் வழியில் நலஞ் செய்யலாம் என்று முன்னி முன்னிப் பணி செய்வது. இதனைத் தியானத்தொண்டு என்றுஞ் சொல்லலாம். இத்தொண்டு சிறந்த இறைவழிபாடாகும். தியானத் தொண்டு உள்ளொளியை விளங்கச் செய்யும்.

-——————————-
[1] சத்தியம் உரைக்க நாளும் சகலபல் லுயிர்கட் கெல்லாம்
நித்தலும் இதமே செய்ய, நினைப்பது சிவத்தை யென்றும்
அத்தன்வே தாக மத்தி னருளிய பொருளிம் மூன்றும்
எத்திறச் சமயத் தோர்க்கும் எம்மதங் களுக்கு மிட்டம்.
மெய்மொழிச் சரிதை
-——————————-


ஐயம்

உள்ளொளி உண்டா இல்லையா என்னும் ஐயம் பிறத்தலுண்டு. ஐயத்துக்கு இடந்தரலாகாது. ஐயம் கல்லாரிடத்தும் நிகழ்கிறது; கற்றவரிடத்தும் நிகழ்கிறது; பெரிதுங் கற்றவரிடத்தில் நிகழ்கிறது. காரணம் கற்றவர் நெஞ்சில் ஆராய்ச்சி நுழைந்து குடைவதாகும். ஆராய்ச்சி ஓரளவில் வேண்டற்பாலதே. கால முழுவதும் ஆராய்ச்சியில் வீழ்ந்து நெளிவது தவறு. ‘அவர் எக்காலத்தவர்? இவர் எக்காலத்தவர்?’ ‘அவர் போக்கென்ன? இவர் போக்கென்ன?’ என்று வாணாளைக்கழிப்பவர்
உள்ளொளிப் பேற்றைப் பெறுதல் அரிது. உள்ளொளி ஆராய்ச்சியைக் கடந்தது. அதை ஆராயப்புகுவது அறியாமை. உள்ளொளி விளக்கத்துக்குச் சிந்தனை – ஆழ்ந்த சிந்தனை – தேவை. சிந்தனையில் ஆழ ஆழ உள்ளொளி. விளங்கிக்கொண்டே போகும். உள்ளொளிக்கு அரணாக உலகு, உடல், உள்ளம், உயிர் முதலியன இருக்கின் றன. இவைகளை முறைமுறையே சிந்திக்கச் சிந்திக்க உள் ளொளி நாட்டமுண்டாகும்.
உள்ளொளியர் நிலை

உள்ளொளி விளங்கப்பெற்றவர் பிறப்பிறப்பு எய்தார். பிறப்பிறப்பாவது, சித்த விகாரம்; மயக்கம். உள்ளொளி யர் சித்தங் கடந்தவர்; விகாரங் கடந்தவர்; மயக்கங் கடந் தவர். அவர் பிறப்பிறப்பில்லாப் பரவெளியில் ஒன்றியவர். அவரைச் சித்த விகார மயக்கங்கள் என் செய்யும்? அவர் முன்னே அவை நில்லா; சூந்யமாய் ஒழியும். சூந்யத்துக்குத் தாக்குதல் ஏது?

உள்ளொளியரை ஆணவம் கர்மம் மாயை ஒன்றுஞ் செய்யா. அவரைப் பசி பிணி அணையா; நரை திரை மூப்பு அணுகா. அவர் அழியா அழகு வண்ணர்; அவர்தம் மாண்பு அளப்பரிது.

உள்ளொளியர் நிலையை என்னென்று கூறுவது? அது கூற்றுக்கு அடங்குவதோ? உள்ளொளியர் பரத்திற் கலந் தவர்; பரமாயவர். அவர் பருமையில் வருவர்; நுண்மை யில் போவர் : அவை கடந்தும் நிற்பர். அவர் காட்சிக்கு உரியர்; அரியர்; எளியர். அவர் நிலை, வாத தர்க்கங்கட்கு எட்டாதது. அதைக் கட்டுப்பட்ட குறுகிய மனத்தால், ‘பரவெளியிற் கலந்தவர் எப்படி வருவர்; போவர்’ என்று ஆராய்தல் கூடாது. பரவெளி எல்லையற்றது. அதை எல்லையுடைய மனத்தால் எப்படி நினைந்து ஆராய்தல் கூடும்? உள்ளொளியர் எல்லாஞ் செய்ய வல்லவர். அவர் எப்படியும் இருப்பர். அவர் நிலையை ஆராயப் புகுவது அறியாமை. ஆராய்ச்சியை விடுத்து அவர் துணைபெற முயல்வது அறிவுடைமை.

உள்ளொளியைப் பற்றி யானும் பேசி வருகிறேன்; நீங்களுங் கேட்டு வருகிறீர்கள். அவ்வொளி பேச்சுக்கு அடங்காதது; பேச்சைக் கடந்தது; பேச்சற்ற அநுபூதி உள் ளொளி பெற முயலல் வேண்டும். அதற்கு வழிபாடு தேவை. வழிபாட்டைக் குறித்து இரண்டாம் நாள் நீண்ட நேரம் பேசினேனன்றோ? அவ்வழிபாட்டை ஈண்டு மீண்டும் நினைவூட்டி, இறுவாய் கூறி, என் பேச்சை நிறுத்திக்கொள்கிறேன்.

பால்நினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப்
   
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
   
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம் புறந் திரிந்த
   
செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
   
எங்கெழுந் தருளுவ தினியே.
– திருவாசகம்

$$$


இறுவாய்


தோழர்களே! நாம் எத்தனையோ பிறவிகள் எடுத்தோம்; இப்பொழுது இப்பிறவி எடுத்துள்ளோம். இது பெறுதற்கரியது. இப் பிறவியின் பெருமையைப் பேசாத சான்றோரில்லை. எல்லாச் சமயத்தவரும் மனிதப் பிறவி சிறந்ததென்று ஒருமுகமாகப் பேசியுள்ளனர். இத்தகைய அரிய பிறவி நமக்கு வாய்த்துள்ளது. இதை நல்வழியில் பயன்படுத்தல் வேண்டும். இதைப் பாழுக்குப் பயன்படுத்தலாகாது.

பிறவி நோக்கம்

மனிதப் பிறவியின் நோக்கமென்னை? உள்ளொளியை அடைதல் வேண்டுமென்பது அப்பிறவியின் நோக்கம். அந் நோக்கத்தை நிறைவேற்றுதற்கென்று தனு கரண புவன போகங்களை உரிய கருவிகளாக இயற்கை இறை உதவியுள் ளது. அவைகளைக் கொண்டு உள்ளொளியை அடைய முயல வேண்டுவது நமது கடமை. பிறவி நோக்கை மறந்து – உள் ளொளியை மறந்து – போகங்களில் மட்டும் வீழ்ந்து நெளிவது மனித இயல்பாகாது. அது விலங்கியல்பாகும்.

உலக வாழ்வு கூடாதென்று யான் கூறுகின்றேனில்லை. உலக வாழ்வு கடவுள் கொடை என்பதும், அதைத் துறத்தல் கூடாது என்பதும் எனது கொள்கை. இதைப் பல்லாண்டுகளாக யான் பேசியும் எழுதியும் வருகிறேன். என்னுடைய நூல்களெல்லாம் இயற்கையோ டியைந்த வாழ்வை அறிவுறுத்தல் உங்கட்குத் தெரியும். இம் மணி விழாப் பேச்சுக்களிலும் என் கருத்தை ஆங்காங்கே வெளியிட்டே வந்துள்ளேன். பிறவி நோக்கத்தை உளங்கொள்ளாது, வெறும் உண்ணல் உறங்கலில் மட்டும் உளங்கொண்டு வாழ்வது கூடாதென்பது எனது கருத்து. உள்ளொளி விளக்கத்துக்கென்று நன்கு உண்ணலாம்; உறங்கலாம்; வாழலாம்.

தொகுப்பு

உள்ளொளி விளக்கத்துக்கு முதற் கருவியாயிருப்பது உள்ளம். உள்ளம் என் செய்வது? உள்ளுவது – நினைப்பது. எதை உள்ளுவது? உருவத்தை. எவ்வுருவத்தை? தத்துவ உருவத்தை. தத்துவ உருவத்தை உள்ள உள்ள உள்ளுணர்வு தோன்றும். உள்ளுணர்வை உள்ளொளியாக்க வழிபாடு தேவை. வழிபாடு புறத்திலும் நிகழ்தல் வேண்டும்; அகத்திலும் நிகழ்தல் வேண்டும். அக வழிபாடே தியான யோகமென்பது. தியானத்தால் உள்ளொளி விளங்குதல் ஒருதலை. தியான அமைவுக்கு முறையீடு, அபேத உணர்வு, பொதுமை முதலியன வேண்டும். இவைகட்கெல்லாம் அடிப்படை சமரச சன்மார்க்கம். சன்மார்க்க வாழ்க்கை உள்ளொளிக்கு ஆக்கந்தேடும். உள் ளொளி விளக்கத்துக்குரிய பிறவி – பெறுதற்கரிய பிறவி – மனிதப் பிறவி – இந்நாளில் என்ன பாடுபடுகிறது; அந்தோ! அந்தோ ! உள்ளம் குழைகிறது;  ஊன் நெக்கு விடுகிறது; கண்ணீர் பெருகுகிறது. உடல்கள் – மனித உடல்கள் – உள்ளொளியுள்ள உடல்கள் – ஆயிரக்கணக்கில் – இலட்சக்கணக்கில் – நாடோறுங் குண்டு பீரங்கி கட்கு இரையாகின்றன! கொடுமை! கொடுமை! கொடிய நாகரிகம் – அரக்க நாகரிகம் – காளை நாகரிகம் – சாய்தல் வேண்டும். அதைச் சாய்க்கவல்லது சன்மார்க்கமொன்றே. அதுவே உள்ளொளியை விளக்கவல்லது. ஆகவே, சேரவாரும் – சன்மார்க்கத்தில் சேரவாரும் – செகத்தீரே சேரவாரும் – என்று அழைக்கிறேன்; நீங்களும் அழையுங் கள்; சன்மார்க்க சமாஜத்தில் சேர எழுங்கள்; உழைக்க எழுங்கள்; உலகை உள்ளொளி வண்ணமாக்க எழுங்கள்; எழுங்கள்.

மூன்று நாளும் என் பேச்சுக்களைப் பொறுமையுடனும் அமைதியுடனும் செவிமடுத்த உங்கட்கு எனது நன்றியறிதலான வணக்கஞ் செலுத்துகிறேன். முன்னிரண்டு நாள் காலங்கடந்து நீண்ட நேரம் பேசிப் பேசி உங்கள் அரிய காலத்தைக் கொள்ளை கொண்டதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். குற்றங் குறைகளைப் பொறுத்தருள்க.

என் பேச்சுக்கு மூலமாக நின்றது கீழைகிழார் தெய்வ சிகாமணி முதலியாரின் மணிவிழா. அவர் வாழ்க; அவர் குடும்பம் வாழ்க; நாடு வாழ்க; உலகம் வாழ்க; நீடு வாழ்க.


***

பொறிப்பு லன்களைப் போக்கறுத் துள்ளத்தை
நெறிப் படுத்து நினைந்தவர் சிந்தையுள்
அறிப்பு றும்மமு தாயவன் ஏகம்பம்
குறிப்பி னாற்சென்று கூடித் தொழுதுமே.
      – அப்பர்

முதுகு பற்றிக் கைத்த லத்தால் முன்னொரு கோலூன்றி
விதிர்வி திர்த்துக் கண்சு ழன்று மேற்கிளை கொண்டிருமி
இதுவென் னப்பர் மூத்த வாறென் றிளையவ ரேசாமுன்
மதுவுண் வண்டு பாடுஞ் சோலை வதரிவ ணங்குதுமே.
      – திருமங்கையாழ்வார்

கையார வேற்றுநின் றங்ஙனந் தின்று கரித்துணியைத்
தையா துடுத்து நின் சந்நிதிக் கேவந்து சந்ததமும்
மெய்யார நிற்பணிந் துள்ளே உரோமம் விதிர்விதிர்ப்ப
ஐயா வென்றோல் மிடுவதென் றோகயி லாயத்தனே.
      – பட்டினத்தார்

தலைபலவாய்ப் பெயர்பலவா நதிக ளெல்லாஞ்
சாகரத்தில் ஒருநீராந் தன்மை போலப்
பலபலவாய்ச் சொல்லுநெறி யெல்லாஞ் சொல்லப்
பட்டதொரு பொருளினை யாம் பணிதல் செய்வாம்.
      – அஞ்ஞவதைப்பரணி

சுருதிகள் சொல்பல் சமயத் துணிவுமப்
பரசீவ பந்தமென் றுந்தீபற
பகர் நாமம் வேறுவே றுந்தீபற.
      – அவிரோதவுந்தியார்

உன் சகோதரன் பாவஞ் செய்தால் அவனைக் கண்டித்துப் பேசு.
அவன் மனமாறினால் அவனுக்கு மன்னிப்பாயாக.
      – கிறிஸ்து (லூக்கா: 17: 3)

Say : O My Servants! who have acted extravagantly against their own souls,
do not despair of the mercy of Allah; surely Allah forgives the faults altogether;
surely He is the Forgiving, the Merciful.

      –XXXIX: 53.
O you who believe ! be careful of (your duty to) Allah and believe in His Apostle;
He will give you to portions of His mercy, and make for you a light with which you will walk,
and forgive you, and Allah is Forgiving, Merciful ! –LVII: 28.
      – The Holy Quran (Translation by Maulvi Muhammad Ali, M. A., LL.B.)

வெறுப்பனவே செய்யும் என் சிறுமையைநின் பெருமையினால்
பொறுப்பவனே அராப்பூண் பவனே பொங்கு கங்கைசடைச்
செறுப்பவனே நின் திருவருளால் என் பிறவியைவேர்
அறுப்பவனே உடையாய் அடியேன் உன் அடைக்கலமே.
      – மாணிக்கவாசகர்

ஏதுபிழை செய்தாலும் ஏழையே னுக்கிரங்கித்
தீது புரியாத தெய்வமே – நீதி
தழைக்கின்ற போரூர்த் தனிமுதலே நாயேன்
பிழைக்கின்ற வாறு நீ பேசு.
      – சிதம்பர சுவாமிகள்

எப்பொருள் களுந்தா னாகி இலங்கிடுங் அறிவா மீசன்
அப்படி விளங்கு கின்ற தறிதலே அவன்ற னக்கு
மெய்ப்படு பூசை வேறோர் செயலினா லன்று மெய்யே
இப்படி ஞானந் தன்னால் இறைஞ்சிடப் படுவா னீசன்.
      – பிரமகீதை

ஓடாதே தேடாதே உன்னாதே ஓசையெழப்
பாடாதே சாத்திரங்கள் பன்னாதே – கேடுபிறர்க்
கும்மாலே செய்யாதே ஒன்றாதே ஒன்று மறச்
சும்மா விருக்கை சுகம்.
      – சிவானந்தமாலை

எண்ணா யிரத்தாண்டு யோக மிருப்பினும்
கண்ணா ரமுதினைக் கண்டறி வாரில்லை
உண்ணாடி யுள்ளே ஒளிபெற நோக்கிடில்
கண்ணாடி போலே கலந்திருந் தானே.
      – திருமந்திரம்

கண்ணொளியே மோனக் கரும்பே கவலையறப்
பண்ணொளிக்கும் உள்ளொளியாம் பான்மையினை – நண்ணிடவுன்
சித்த மிரங்கிலதென் சித்தந் தெளியாவே
றித்தனைக்கும் ஆதரவும் இல்.
      – தாயுமானார்

(நிறைவு)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s