உள்ளொளி – திரு.வி.க. (பகுதி- 3)

அத்தியாயம்– 2

உள்ளுணர்வும் வழிபாடும் (தொடர்ச்சி)


காவியக் கோயில்


இயற்கைக் கூறுகள் பல திறத்தன. அக்கூறுகளெல்லாம் பாக்களில் இறங்குகின்றன. பாக்களால் காவியம் ஆகிறது. காவியம் இயற்கைக் கோயில். இயற்கையை வழிபட்டால் என்னென்ன நலன்கள் விளையுமோ அவ்வளவு நலன்களும் காவிய வழிபாட்டிலும் விளையும். காவிய வழிபாடென்பது காவியத்தைக் கையால் கும்பிடுவதன்று; அதன்வழி நிற்க உறுதி கொண்டொழுகுவது. – காவியத்தின் வழி வாழ்க்கையைப் படுத்துவது காவிய வழிபாடாகும்.

காவியத்தில் என்ன இல்லை? இயற்கையில் என்னென்ன உண்டோ, அவையெல்லாம் காவியத்திலும் உண்டு. இயற்கையோ டியைந்த வாழ்க்கைக்குக் காவியம் பெருந்துணை செய்யும்.

தனிச் சிறப்பு

காவியம் ஒரு நாட்டில் ஒரு மொழியில் மட்டுந் தோன்றுவதன்று. அஃது எந்நாட்டிலும் எம் மொழியிலுந் தோன்றுவது. உலகில் பலவிடங்களில் காவியந் தோன்றி யிருத்தல் கண்கூடு. காவியம் பிறவாத இடம் நாகரிகம் அற்றதாகும். நாகரிக நாடெல்லாம் காவியம் பெற்றே இருக்கும். காவியம் நாகரிகத்தின் அறிகுறிகளுள் ஒன்று.

உலகம் நாடுகளால் ஆக்கப்பட்டது. நாடுகள் தட்பவெப்ப நிலைக்கேற்றவாறு வேறுபட்டிருக்கின்றன. நாடுகளைப் போலவே காவியங்களும் வேறுபட்டு நிற்கும். வேறுபாடு காவியத்தின் தனிச் சிறப்பை உணர்த்துவது.

கலைகளில் இருவகை

கலைகளில் இருவகையுண்டு. ஒருவகை பொதுமையின் பாற்பட்டது; மற்றொருவகை சிறப்பின் பாற்பட்டது. விஞ்ஞானம் முதலியன பொது; காவியம் முதலியன சிறப்பு. விஞ்ஞானத்தை எம்மொழியிலும் பெயர்த்துக் கொள்ளலாம்; காவியத்தை அவ்வாறு பெயர்த்துக்கொள்ளுதல் இயலாது.

காவியம் பெரிதும் பாட்டால் அமைவதால், அது மொழிபெயர்ப்புக்கு அடங்குவதில்லை. எவ்வெம்மொழியில் காவியம் அமைகிறதோ அவ்வம் மொழியிலேயே அதன் இன்பத்தை நுகர்தல் கூடும். மொழிபெயர்ப்பில் அவ் வின்பத்தை நுகர்தல் இயலாது. கம்பரை ஆங்கிலத்திலும், ஷேக்ஸ்பியரைத் தமிழிலும் பெயர்த்தால், அப்பெயர்ப்பில் ஒருவாறு கதைகளே அடங்கிவரும்; காவிய இன்பம் அடங்கிவராது. காவிய இன்பம் அவ்வம் மொழியிலேயே தேங்கி நிற்கும். இதனால் காவியம் தன் தாய்மொழியைக் காக்கும் திறனுடையதென்பது விளங்குகிறது. இது காவியத் தனிச் சிறப்புக்களில் ஒன்று.

ரவீந்திரநாதர்

இங்கே சிலர் எண்ணம் கீதாஞ்சலிமீது செல்லலாம். ரவீந்திரநாதரால் முதல் முதல் கீதாஞ்சலி வங்கத்தில் எழுதப்பட்டது; பின்னே அவராலேயே ஆங்கிலத்தில் எழுதப் பட்டது. இரண்டுக்கும் ஆசிரியர் ஒருவரே. ஆசிரியர் வங்கத்திலும் புலவர்; ஆங்கிலத்திலும் புலவர். ஆதலின் அவர் மொழிபெயர்ப்பில் இறங்கினாரில்லை. ஆங்கிலக் கீதாஞ்சலி மொழிபெயர்ப்பு நூலன்று. இரண்டு கீதாஞ்சலிகளில் விழுப்பமுடையது, முதல் முதல் வங்கத்தி லெழுதப்பட்டதே என்று அறிஞர் கருதுகின்றனர். கீதாஞ்சலி வேறு மொழிகளில் மற்றவரால் பெயர்க்கப்பட்டது. அவைகளில் கீதாஞ்சலியின் கவி இன்பம் தேங்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

காவியக் காப்பு

தட்பவெப்ப நிலைமைக்கேற்றவாறு நாடுகள் வேறுபடுகின்றன. அவைகளின் வழக்கவொழுக்கங்களும் வேறுபடுகின்றன. நாடும் அதற்குரிய வழக்கவொழுக்கங்களும் பிறவும் காவியங்களாகப் பரிணமிக்கின்றன. பரிணாமக் காவியங்கள் வெவ்வேறுபட்டே நிற்கும். காவியம் தன் மொழியைக் காப்பது போலத் தன் நாட்டையும், நாட்டின் வழக்கவொழுக்கங்களையும், பிறவற்றையுங் காத்து வரும். இது காவியத்தின் மாண்பு. இன்னுஞ் சில உண்டு. காலமில்லை! என் செய்வேன்!

முன்னாளும் இந்நாளும்

இத்துணைச் சிறப்பு வாய்ந்த காவியங்கள் பெரிதும் எந்நாளில் பெருகின? என்ன பதில்? ‘பழைய நாளில் பழைய நாளில்’ என்ற பதில் வரும். இதற்கு மாறுபட்ட கருத்துடையோர் இங்கிருப்பரோ? ****  ஒருவரையும் காணோம்; எங்கும் இரார் என்றே நம்புகிறேன். இக்கால உலகம் காவிய நாட்டம் பெறாமைக்கு என்ன காரணம்? இக்கால நாகரிகமே காரணம். காவிய நாட்டத்துக்கு அமைதி வேண்டும். அமைதிக்கு இயற்கையோ டியைந்த வாழ்வு வேண்டும். இரண்டும் இக்கால நாகரிகத்தில் அருமை. இக்கால நாகரிகம் இயந்திர வாழ்வையும் சாம்ராஜ்ய நசையையும் அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. இது மக்களை இயற்கையோ டியைந்து வாழுமாறு விடுவதில்லை. மக்கள் இயற்கையை விடுத்து விலகி நிற்கிறார்கள். இவர்கள் வாழ்வில் அமைதி ஏது? அமைதி குலைந்த வாழ்வு காவிய நாட்டம் பெறுமோ? இப் பொல்லாத நாகரிகத்தில் எங்கணும் பரபரப்பு! எங்கணும் ஆவேசம்! எங்கணும் வெறி! எங்கணும் பொறாமை! போர்! எங்கணுங் கொள்ளை! கொலை! இக் கருங்காலத்தில் இயற்கைக் கோயில் – பாட்டுக் கோயில் – காவியக் கோயில் – வழிபாடு தேவை; பெரிதுந் தேவை. அதனால் அமைதி விளையும்; இயற்கை-யோடியைந்த வாழ்வு அரும்பும். காவியம் வாழ்க!

ஓவியம்

ஓவியம் நம் முன்னிற்கிறது. ஓவியம் சிறந்தது; மிகச் சிறந்தது. அலைவுறும் மனத்தை நிலைபெறுத்தும் பேராற்றல் ஓவியத்துக்கு உண்டு. முன்னே பேசப்பட்ட உருவங்களில் ஏதாவதொன்றில் மனம் ஈடுபடும். ஒன்றிலும் ஈடுபடாத மனம் இருப்பின், அஃது ஓவிய உருவத்தில் ஈடுபட்டே தீரும். ஓவிய உருவத்திலும் ஈடுபடாத மன மொன்றிருக்குமேல் அதன் நிலை இரங்கத்தக்கதாகும். அது பல பிறவி தாங்கிய பின்னரே பண்படுவதாகும்.

பூம்படி மக்கலம் பொற்படி மக்கலம் என்றிவற்றால்
ஆம்படி மக்கல மாகிலும் ஆரூர் இனிதமர்ந்தார்
தாம்படி மக்கலம் வேண்டுவ ரேல் – தமிழ் மாலைகளால்
நாம்படி மக்கலஞ் செய்து தொழுதுய் மடநெஞ்சே.
      – அப்பர்

ஓவியம், வர்ணம் மண் மரம் கல் செம்பு வெள்ளி பொன் மணி முதலியவற்றில் எடுக்கப்படும். பிண்டத்தில் இயற்கை – இயற்கை அழகு – இயற்கைக் கூறு – படியுங்கால் முகிழ்ப்பது ஓவியம். ஓவியத்தில் மூலத்தின் தத்துவங்கள் திகழ்தல் வேண்டும். இல்லையேல் அஃது ஓவியமாகாது. அது வெறுங் கீற்றுப் பிண்டமேயாகும். வெறும் பிண்டம் மனத்தை முற்றும் நிலைபெறுத்தாது.

மனம் நிலைபெற

மனம் நிலைபெறுதற்குரிய வழிகளென்று மேல்நாட்டு அறிஞர் சிலராலுஞ் சில காணப்பட்டுள்ளன. அவை புள்ளி நோக்கல், குறியில் நாட்டம் வைத்தல், சிவப்பு விளக்கில் கருத்தைப் பதியவைத்தல் முதலியன. புள்ளியையோ, குறியையோ, விளக்கையோ உற்று உற்று நோக்கும் பயிற்சியால் மனம் ஓரளவில் நிலைபெறும். அந்நிலை ஹிப்னோடிஸம் முதலிய சிறிய வித்தைகட்குப் பயன்படும். ஓரளவில் நின்று கடனாற்றிய பின்னர் மனம் மீண்டும் அலைவதாகும். புள்ளி – குறி – விளக்கு – நோக்குகளின் ஆற்றல் அவ்வளவினதே. மனம் குவிந்து நடுவிற் புகுந்து அடியில் அணைந்து மறைதல் வேண்டும். மனம் என்னும் தத்துவமே ஓடுங்குதல் வேண்டும். ஒடுங்காது மீண்டும் மனம் எழுந்து புறம் புகுந்து அலைதலாகாது. இந்நிலையைச் சேர்க்கும் ஆற்றல் புள்ளிக்கோ குறிக்கோ விளக்குக்கோ இல்லை. அவைகளில் எவ்விதத் தத்துவமுமில்லை. அவைகள் வெறும் பிண்டங்கள். வெறும் பிண்டங்களில் என்ன தத்துவமிருக்கும்?

ஓவியத்தில் பலதிறங்க ளிருக்கின்றன. திறங்களுக் கேற்பத் தத்துவங்கள் அமையும். பூ ஓவியமிருக்கிறது. அதில் பூ தத்துவம் பொருந்தும். வீரன் ஓவியத்தில் வீரத் தத்துவம் செறியும். ஞானியின் ஓவியத்தில் ஞானத் தத்துவம் பொலியும். இவை யாவும் இயற்கைக் கடவுளின் கூறுகளே. இவை மனத்தை நிலை பெறுத்தி அதன்கண் அவ்வத் தத்துவங்களை அமைக்கும்; வழிபாடு முதிர்ந்து வரின் மேல் நிலையையுங் கூட்டும்.

கடவுளும் இயற்கையும்

எல்லாவற்றிற்கும் அடிப்படையாய், விழுமியதாய் இருப்பது கடவுள். [1] கடவுள் எல்லாவற்றையுங் கடந்தும் நிற்பது; எல்லாவற்றிலுங் கலந்தும் நிற்பது. இவ்விரு நிலைகளில் முதலாவது உருவமற்றது; வாக்கு மனத்துக்கு எட்டாதது. அஃது ஓவியத்தில் அடங்காதது. இரண்டாவது ஓவிய உறவு கொள்ளுந் தன்மையது.

கடவுள் எல்லாவற்றிலும் கலந்து நிற்கும் நிலை இயற்கையை உடலாக் கொண்டது. இது குறித்து முன்னரும் பேசியுள்ளேன். இயற்கையுடலை அநுபவ ஞானிகள் ஒருவழியில் எட்டுக் கூறிட்டார்கள். அவை [2] பிருதிவி அப்பு தேயு வாயு ஆகாசம் சந்திரன் சூரியன் ஆன்மா என்பன. இவைகளில் அடங்காத இயற்கைக் கூறுகளிருக்குமோ?

-——————————-

[1]  பாருந் திசையும் படரொளியா லே நிறைந்தான்
தூருந் தலையுமிலாத் தோன்றலான் – வேராகி
வித்தாகி வித்தின் முளையாகி மேவுதனுச்
சத்தாதி பூதங்கள் தாமாகிச் – சுத்த
வெறுவெளியாய்ப் பாழாய் வெறும் பாழுக் கப்பால்
உறுபொருளாய் நின்ற ஒருவன்.       – நெஞ்சுவிடு தூது : 81-3

ஏக மூர்த்தி இருமூர்த்தி மூன்று மூர்த்தி பலமூர்த்தி
ஆகி [2] ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி
நாக மேறி நடுக்கடலுள் துயின்ற நாரா யணனேயுன்
ஆக முற்றும் அகத்தடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே.
      – திருவாய்மொழி
——————————-

பூமியும் சூரியனும்

இவ்வெட்டையுங் கொண்டது இயற்கை. இயற்கை எவ்வளவு அகல நீளமுடையதா யிருக்கும்! அதை மனக் கண்ணால் அளந்து பார்த்தலும் இயலவில்லை. இப் பூமியில் நாம் வதிகிறோம். இஃதொரு சிறிய கோளம். இதன் அளவை நினைக்க மனம் படும் பாட்டை என்னென்று கூறுவது? அப்பயிற்சியில் ஈடுபட்டவர்க்கே அப்பாடு தெரியும். இப்பூமியைப் பார்க்கிலும் மிகப் பெரியது சூரியன். அதன் அகல நீளம் அடங்க அதை எண்ணுவதில் எவ்வளவு இடுக்கண் உண்டாகும்? இவை இரண்டும் எல்லையுடையனவே; எல்லை அற்றன அல்ல. எல்லை அற்றது பரம்பொருள் ஒன்றே. எல்லையுடையவைகளின் எல்லையைக் காண்டலே அரிதாயிருக்கிறது. இவையும் இவையிற்றின் இனங்களும் சேர்ந்த இயற்கையுலகம் எவ்வளவு பெரியதா யிருக்கும்? மனம் நடுக்குறுகிறது!

கருவித் துணை

சிறிய பூமி ஐந்து கண்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கண்டமும் பல நாடுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. நாடுகளும் பலவாறு பிரிந்து கிடக்கின்றன. இப் பிரிவுகளிலெல்லாம் மக்கள் சஞ்சரிக்கிறார்கள்; யாத்திரை செய்கிறார்கள்; பூமி முழுவதையுஞ் சுற்றி வருகிறார்கள். ஆனாலும் ஒரே காலத்தில் பூமி முழுவதையும் நினைத்துப் பார்த்தல் அரிதாகிறது. நினைப்பில் பூமியின் அப்பிரிவும் இப்பிரிவும் அக்கூறும் இக்கூறும் தோன்றித் தோன்றி மறையும். பூமியில் சஞ்சரிப் போர் – யாத்திரை செய்வோர் – அதைச் சுற்றி வருவோர் – சுருங்கச் சொல்லின் அதனுடன் பல வழியிலும் கூட்டுறவு கொள்வோர் – பூமியைப் பற்றியும், அதன் பெரும் பிரிவுகளைப் பற்றியும் சிறு பிரிவுகளைப் பற்றியும், தாம் உணரவும் பிறர்க்கு உணர்த்தவும் படத்தின் துணை நாடுவதை நாம் காண்கிறோம். பூகோள சாஸ்திரம் போதிக்கப்படுங்கால் ஆசிரியர்க்கும் மாணாக்கர்க்கும் படம் தேவையாகிறது. படமின்றிப் போதிக்கும் ஆசிரியர் நிலையும், அதைக் கேட்கும் மாணாக்கர் நிலையும் என்னவாகும்? வெட்டவெளியே யாகும். பூமியின் பாகுபாடுகளைப் பயில்வோர் உள்ளத்தில் என்ன பதிகின்றன? படத்திலுள்ள கோடுகளும் வரிகளும் நிறங்களும் பிறவுமே பாகுபாடுகளாகப் பதிகின்றன. படத்திலுள்ள உருவங்களே பூமியின் பாகுபாடுகளாகத் தோன்றுகின்றன. நாம் வாழும் பூமியையும், அதன் கூறுபாடுகளையும் உணர்தற்கும் உணர்த்துதற்கும் படம் தேவையாகிறதெனில், பூமியைப் பார்க்கிலும் பல கோடி மடங்கு விரிந்தும் பரந்தும் பெருகியும் இருக்கும் பல கோளங்களைக் கொண்ட இயற்கையின் கோலத்தைப் படத் துணையின்றி எங்ஙனம் உணர்தல் கூடும்?

சிறுசிறு பொருள்களை உணரவும் உணர்த்தவுங் கருவி வேண்டப்படுகிறது. கண் அணுவைப் பார்க்கும்; பரமா அணுவையும் பார்க்கும்; மேலும் மேலும் நுணுகி நுணுகிப் போகும் இறைகளை எப்படிப் பார்த்தல் கூடும்? அவைகளைப்பற்றிய ஆராய்ச்சியும் வாழ்வுக்கு இன்றியமையாததா யிருக்கிறது. என் செய்கிறோம்! நுண்மை நோக்கி என்னுங் கருவியின் துணையை நாடுகிறோம். கருவி, கண்ணுக்கெட்டாத அணுவகைகளைக் காட்டுகிறது. பின்னே ஆராய்ச்சி எழுகிறது. எவ்வழியில் பார்த்தாலும் வாழ்க்கைக்குப் படமோ கருவியோ எதுவோ தேவையாதல் விளங்குகிறது.

ஓவியக் கலை

இத்தேவையை நிறைவு செய்வது ஓவியம். இதற்கென்று ஓவியக் கலை தோன்றியுள்ளதென்றுங் கூறலாம். ஓவியக் கலையின் தோற்றத்துக்கு ஏதேனும் பொருளிருத்தல் வேண்டு மன்றோ? வீணுக்கென்று ஒரு கலை தோன்றுமோ? பூமி போன்ற சிறுசிறு கோளங்களை உணர்தற்குப் படமும் பிறவும் தேவையானால், எல்லாக் கோளங்களையும் தன்னகத்தே அடக்கியுள்ள இயற்கையின் முழுக் கோலத்தை நேரே எப்படி உணர்தல் முடியும்? படமோ பிறவோ தேவை.

இயற்கைக் கோலம் இறையின் உடல். உடலைக் கொண்டே உயிராகிய இறையின் உண்மையை உணர்தல் வேண்டும். இயற்கையின் கோலமோ மிகப் பெரியதா யிருக்கிறது. என் செய்வது? ஓவியக் கலையை அடைதல் வேண்டும். அடைந்தால் அது துணை செய்யும்.

மனமும் உருவமும்

‘இவ்வளவு தொல்லை எற்றுக்கு? கடவுளை நேரே நினைக்கலாமே; வழிபடலாமே; இடையில் இயற்கை உடல் எற்றுக்கு? ஓவியம் எற்றுக்கு? பிற எற்றுக்கு?’ என்று சிலர் கருதலாம். நல்ல கருத்து! சிறிது சிந்திப்போம். கடவுள் எல்லாவற்றையுங் கடந்து உருவமற்று நிற்பது. உருவமற்ற ஒன்றை எண்ணிப் பாருங்கள்; அதை எண்ணம் எட்டுகிறதா? மனத்தில் என்ன உறுகிறது? ஒன்றையுங் காணோம்; சூந்யம் – பாழ் – 000. கடவுள் சூந்யமா? பாழா? மனம் உருவமற்றதை நினைத்தல் இயலா தென்பதும், அஃது உருவத்தைச் சார்ந்தே நினைக்கும் இயல் புடையதென்பதும் முன்னே விளக்கப்பட்டன. அவ்விளக்கத்தை மீண்டும் ஈண்டுக் கூறவேண்டுவதில்லை.

மனம் உள்ளவரை அஃது ஏதேனும் ஓர் உருவையே பற்றி நிற்கும். அஃது உருவமற்றதை நினைக்கவல்ல தாகாது. இஃது உண்மை; உண்மை; முக்காலும் உண்மை. இக்கால மனோதத்துவர் மனத்தின் இயலை ஆராய்ந்து, மனம் அலைவற்று நிலைப்பதற்குப் புள்ளியோ குறியோ விளக்கோ ஏதோ ஓர் உருவச்சுட்டு வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். உருவமற்றதைப் பற்றிப் பேசுவோர் மனங் கடந்தவரோ என்னவோ தெரியவில்லை. மனங் கடந்த நிலையில் பேச்சு ஏது? நினைவு ஏது? பேச்சும் நினை வும் எங்கிருந்து பிறக்கின்றன? உருவத்தைப் பற்றி நிற்கும் மனத்திலிருந்தே பிறக்கின்றன. இம்மனமுடையவர் உருவ மற்றதைப்பற்றிப் பேசுவது நன்று! நன்று! வெறும் பேச்சு எற்றுக்கு? ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவுமோ?

ஓவிய வழிபாடு

இயற்கை, கடவுளின் உடல். இயற்கை வாயிலாகவே அதன் உயிராக உள்ள கடவுளை உணர்தல் வேண்டும்; வழிபடுதல் வேண்டும். இயற்கையோ பெரியது. அதை நேரே வழிபடும் ஆற்றல் மிகச் சிலர்க்கே உண்டு. இயற்கைக் கூறுகளின் நுட்பம் உணர்ந்து வழிபாடு செய்வோரும் பலராயிருப்பதில்லை. இயற்கைக் கூறுகளில் ஏதாவதொன்றை வழிபடினும் நாளடைவில் அது முழு இயற்கை வழிபாடாகும். இவைகளைப் பெரும்பான்மையோர் நிகழ்த்தல் இயலாது. பலர்க்கும் எளிதில் பயன்படும் வழிபா டொன்றுளது. அஃது ஓவிய வழிபாடு.

ஓவியப் புலவன்

கடவுள் உடலாகிய இயற்கை விரிந்து பரந்து நிற்கிறது. அஃது எளிய நெஞ்சில் அடங்குவதில்லை. எளிய நெஞ்சுக்கு இயற்கை ஓவியம் தேவை. ஓவியமாவது இயற்கையின் சுருக்கம். அதன் பெருக்கம் இயற்கை. பெருக்கைச் சுருக்கும் திறமை ஓவியனைப் பொறுத்தது. பெருக்கைச் சுருக்கும் பொழுது பெருக்கிலுள்ள கூறுகளும் நுட்பங்களும் உடன் தொடர்ந்து சுருக்கிலும் இறங்குமாறு ஓவியன் செய்தல் வேண்டும். இல்லையேல் அவன் எடுப்பது ஓவியமாகாது.

இயற்கை மாயா காரியம். மாயா காரியங்களே தொண்ணூற்றாறு தத்துவங்களாக வகுக்கப்பட்டன; முப்பத்தாறு தத்துவங்களாகத் தொகுக்கப்பட்டன. இவைகளெல்லாம் சேர்ந்த ஒன்றே இயற்கை என்பது. இவ் வியற்கையை உடலாக்கொண்டு, தான் உயிராக நின்று, கடவுள் அதை (இயற்கையை) இயக்குகிறது. இயற்கை யெனில் இவைகளையெல்லாங் கொண்ட ஒன்று என்று கொள்க; வெறும் இயற்கையின் புறத்தோற்றத்தை மட்டுங் கொள்ளற்க. ஓர் ஓவியன் இயற்கையை எண்ணுகிறான் என்றால், அவன் உள்ளத்தில் இயற்கையும் அதன் உள்ளுறையும் ஒன்றி இறங்குகின்றன என்று கொள்ளுதல் வேண்டும். இவை இறங்கப்பெறாத உள்ளமுடையவன் இயற்கை ஓவியப் புலவனாகான். ஓவியன் இயற்கைத் தத்துவங்களை உணர்ந்து தெளிந்த புலவனாயிருத்தல் வேண்டும்.

புலவன் இயற்கையை எண்ணுகிறான்; நினைக்கிறான். உன்னுகிறான்; முன்னுகிறான். அவன் உள்ளம் இயற்கையில் தோய்கிறது; படிகிறது; திளைக்கிறது; ஒன்றுகிறது. உள்ளம் இயற்கையாகிறது; இயற்கை உள்ளமாகிறது. ஓவியம் உள்ளத்தில் கருக்கொள்கிறது. உள்ளத்தில் இயற்கை எண்ணங்கள் எழுகின்றன; பொங்குகின்றன. இந்நிலையில் புலவன் ஓவியமெடுக்கிறான். அவனது எண்ண அலைகளின் வழிப் படிப்படியே ஓவியம் உருக்கொள்கிறது; அஃது இயற்கையின் படமாகத் திகழ்கிறது. இயற்கை, கடவுளின் கோயில். அதன் படமாகிய ஓவியமும் கடவுளின் கோயிலாகாது வேறு என்ன ஆகும் ?

ஓவியமும் பிண்டமும்

ஓவியம் எடுப்பதற்குப் புலவன் எதைத் துணையாகக் கொள்கிறான்? வர்ணத்தையோ மரத்தையோ மண்ணையோ கல்லையோ செம்பையோ எதையோ ஒன்றைக் கொள்கிறான். ஓவியம் முகிழ்த்ததும் வர்ணமோ மரமோ மண்ணோ கல்லோ செம்போ எதுவோ மறைவுறுகிறது. ஓவியக் கண்ணர்க்கு ஓவியமே தோன்றும்; வேறெதுவும் தோன்றாது. மற்றவர்க்கு வர்ணமோ கல்லோ செம்போ தோன்றும்.

ஒரு மாந்தோப்பில் ஒரு வீட்டின் வாயிற்படியில் சில கருங்கற்கள் கிடந்தன. அவைகளில் ஒன்றை ஓர் ஓவியன் எடுத்து அதில் ஓர் அழகிய பெண் வடிவம் பொறித்தான். பெண் வடிவம் கண்ணையுங் கருத்தையுங் கவர்ந்தது. அங்கே ஓவியப் புலவர் சிலர் ஈண்டினர்; மற்றவருங் கூடினர். ஓவியக் கண்ணில்லா ஒருவர், ‘என்ன கூட்டம்’ என்று அங்கே போந்தனர். அவர் அங்குக் குமிழியிருந்தவரைப் பார்த்து, ‘என்ன! ஒரு வாரத்துக்கு முன்னே படியாய்க் கிடந்த ஒரு கல்லுக்கா இவ்வளவு வாழ்வு வந்தது? கல்லை வணங்கும் மூடப்பழக்கம் நம்மவரை விடுத்து என்று அகலுமோ தெரியவில்லை’ என்று ஏசினர். அவருடன் சிலர் கலந்து கொண்டனர். ஒரு சாரார்க்கு ஓவியம் விளங்குகிறது; இன்னொரு சாரார்க்குக் கல் தோன்றுகிறது. இரு சாராரும் மனிதப் பிறவி தாங்கினவரே. ஓவியப் புலமை பெறாதொழியினும், ஓவிய நுட்பத்தை வியக்கும் புத்தி யாதல் பெறுதல் வேண்டும். அப்புத்தி வாய்க்கப் பெறாதார் நிலை இரங்கத்தக்கது.

மரத்தால் செய்யப்பெற்ற யானையொன்று இங்கு நிற்பதாக வைத்துக்கொள்வோம். அதைக் காண அப்பக்கத்திருந்து சிலரும் இப்பக்கத்திருந்து சிலரும் வந்தனர். முன்னவர் மரத்தின் இயலை நன்கு உணர்ந்தவர்; மற்றவர் யானையின் இயலைச் செவ்வனே தெளிந்தவர். அவர், ‘இம்மரம் எதுவாயிருக்கும்? அத்தியாயிருக்குமா? பலாவாயிருக்குமா? தேக்காயிருக்குமா?’ என்று சோதித்துச் சென்றனர். அவர் நெஞ்சில் மரமே நின்றது; யானை தோன்றவில்லை. பின்னவர், ‘ யானையின் காது நன்றாயிருக்கிறது; வால் அழகா யிருக்கிறது; கால் அமைப்புப் செவ்விதாயில்லை’ என்று பேசித் திரும்பினர். இவர் நெஞ்சில் யானையே நின்றது; மரம் தோன்றவில்லை. மரம் யானையை மறைத்தது; யானை மரத்தை மறைத்தது.

பொன்னால் காப்புச் செய்யப்பட்டது. இப்பொழுது அது காப்பென் றழைக்கப்படுகிறதா? பொன்னென்று அழைக்கப்படுகிறதா? காப்பென்றே அழைக்கப்படுகிறது. பொன் இல்லாமலா போய்விட்டது? காப்பு, பொன்னை மறைத்தது.

இங்கே ஓவியம், புலவன் உள்ளத்திருந்து கல் மரம் பொன் வாயிலாக முகிழ்த்தது; முகிழ்த்ததும் கல் மரம் பொன் எங்கேயோ போயின. ஓவியத்தின் முன்னே அவை சூந்யமாகி விட்டன. ஓவியத்தை முன்னி முன்னி அதில் ஒன்றுவோரை அது தனது முதலிடத்திற் சேர்க்கும்.

பண்டைநாளில் பலதிற இயற்கைப் புலவர் இருந்தனர். அவருள் ஓவியப் புலவரும் வாழ்வு பெற்றிருந்தனர். அவரிடத்திருந்து சில அரிய ஓவியங்கள் பூத்தன. அவைகளை ஆய்ந்தால் பல நுட்பங்கள் விளங்கும். அவ்வோவியங்களில் சிலவற்றை நோக்குவோம்.

அர்த்த நாரீசுரம்

முதலில் அர்த்தநாரீசுர வடிவம் எனது நினைவிலுறுகிறது. அவ்வடிவம் உங்கள் உள்ளத்திலும் உறும். அர்த்த நாரீசுரம் பெண்மையும் ஆண்மையுஞ் சேர்ந்த ஒன்று. இஃது உணர்த்துவதென்னை? இயற்கை உலகை நோக்க நோக்க அர்த்தநாரீசுரத்தின் நுட்பம் விளங்கும். இயற்கை உலகில் புல் முதல் மக்கள் ஈறாக உள்ள எல்லாம் பெண் ஆண் மயமாயிருத்தல் வெள்ளிடைமலை. பெண் ஆணாயிலங்கும் இயற்கை உலகின் படம் – ஓவியம் – அர்த்த நாரீசுரம்.

சிவப்பும் நீலமும்

உலகங்களைத் துருவி ஆய்ந்தால் அவைகளினடியில் வர்ணங்களிருத்தலை உணர்தல் கூடும். வர்ணங்களின் தாயகம் இரண்டு. ஒன்று சிவப்பு; மற்றொன்று நீலம். சிவப்பை ஆண்மையாகவும், நீலத்தைப் பெண்மையாகவும் அறிஞர் கொண்டனர்.

அநுபூதிமான்கள் தங்கள் அனுபவத்தில் பல உண்மைகள் கண்டு உலகுக்கு உணர்த்தியிருக்கிறார்கள். அவைகளுள் ஒன்று இடப்பக்கம் பெண்மையும், வலப்பக்கம் ஆண்மையும். இருப்பது. இவை சந்திர சூரிய கலைகளாக இயங்குகின்றன. பெண்மையும் ஆண்மையும் முறையே நீலமாகவும் சிவப்பாகவும் புலனாதல் அநுபூதிமான்களின் திருவாக்குகளை ஆராய்ந்தால் தெரிகிறது.

நீலப் பெண்மையும் சிவப்பு ஆண்மையும் அநுபூதிமான்களிடத்தில் மட்டும் இல்லை. அவை எல்லாரிடத்தும் இருக்கின்றன. அவை அநுபூதிமான்களிடம் விளங்கித் தோன்றுகின்றன; மற்றவர்களிடம் விளங்கித் தோன்றுவதில்லை. அநுபூதிமான்கள் என் செய்தார்கள்? அவர்கள் அர்த்த நாரீசுரத்தைக் குறிக்கொண்டு தியான யோகத்தில் அமர்ந்தார்கள். தியானயோகம் அவர்கட்கு நீலப் பெண்மையையும், சிவப்பு ஆண்மையையும் விளங்கச் செய்தது. அவர்களைப் போல அம்முயற்சியில் எவர் தலைப்படினும் அவர்கள் உணர்ந்ததை இவரும் உணரலாம்.

ஓவியர் நுண்மதி வியக்கத்தக்கது; போற்றத்தக்கது. இயற்கையிலுள்ள நீலப் பெண்மையையும் சிவப்பு ஆண்மையையும் அழகிய அர்த்தநாரீசுர ஓவியமாகத் தந்தமையால், அது தியானத்துக்குக் கொழுகொம்பாக நின்று, உண்மையை விளங்கவைப்பதாய்ப் பயன்பட்டு வருகிறது. ஓவியர்க்கு. உலகம் என்ன கைம்மாறு செலுத்தப் போகிறது? ஓவிய உலகம் வாழ்க.

என்னிடம் பெண்மை நீலமும் ஆண்மைச் சிவப்பும் இருக்கின்றன. அவைகளை நான் விளங்கவைத்துக் கடவுள் நிலை பெறுதல் வேண்டும். வழி என்ன? மாணிக்க ஒளியும் நீல ஒளியுஞ் சேர்ந்த ஒரு வடிவம் – அர்த்த நாரீசுர ஓவியம் – எதிரே நிற்கிறது. அதைத் தியானித்தல் வேண்டும்; வழிபடுதல் வேண்டும்.

அரங்கநாதன்

அரங்கநாத வடிவம் எப்படி இருக்கிறது? பாற்கடலில் – அரவணையில் அறிதுயில் செய்யுங் கோலமுடையது அரங்கநாத வடிவம். அப்பெருமான் உந்தியில் அயன் தோற்றம் அழகு செய்கிறது.

தத்துவங்கள் முன்னே சுருங்கிய முறையில் ஒருவாறு விளக்கப்பட்டன. அவைகளுள் விந்துவையும் நாதத்தையும் சிறிது நேரம் இப்பொழுது சொல்லிக்கொண்டிருப்பேன். நாத தத்துவம் கடவுளுக்கு அணித்தாயிருப்பது. நாதத்துக்குமேல் தத்துவங் கிடையாது. அதை அணைந்து நிற்பது விந்து தத்துவம். நாதம் ஒலிமயமா யிருப்பது. விந்து ஒளிமயமாய்ப் பரந்து விரிந்து நிற்பது. திருப்பாற் கடல் விந்து தத்துவத்துக்கு அறிகுறி. அரவணை நாத தத்துவத் துக்கு அறிகுறி. நான் பேசுகிறேன். என் பேச்சு நாதத்தி னின்றும் எழுகிறது. எப்படி எழுகிறது? பாம்பு போல் சுழன்று சுழன்று எழுகிறது. பெருங்காற்றுப் பேரொலி செய்து வீசும்போது, தும்பு தூசுகள் எப்படி எழுகின்றன? வளைந்து வளைந்து சுழன்று சுழன்றே எழுகின்றன. பாம்பு வளைந்து சுழன்று எழுவதுபோல், நாத ஒலி எழுவதால், அது பாம்பு என்றும் அழைக்கப்படுகிறது. நாதத்துக்குமேல் ஒளிர்வது தெய்வம். அரங்கநாதத் தெய்வம் நாதப்பாம்பின் மீது பள்ளி கொண்டிருக்கிறது. நாதங் கடந் தொளிருந் தெய்வம், படைப்புக்குத் தனக்கு அணித்தாக உள்ள அந் நாததத்துவத்தை இயக்குகிறது. அதன் வாயிலாக மற்றத் தத்துவங்களியங்கிப் பலவகை உலகங் களாகின்றன. படைப்புக்கு அறிகுறி அரங்கநாதனின் நாபிக் கமலத்துள்ள அயனது தோற்றம். பாற்கடலில் அரவணையில் பள்ளிகொண்டுள்ள திருவுருவம், உள்ளத்தில் பதியப் பதியப் படிப்படியே அதன் நுட்பங்கள் விளங்கி விளங்கி, விந்துவைக் கடந்து, நாதத்தை உணர்ந்து, அதையுங் கடந்து, அரங்கநாதனை உணரும் பேற்றை உண்டாக்கும்.

கண்ணபிரான்

கண்ணபிரான் புன்னையின் கீழ் நின்ற வண்ணம் குழலூதுகிறார். அவரைச் சூழ்ந்து பசுக்கூட்டமும், பெண்குழுவும் நிற்கின்றன. இக்காட்சி வழங்கும் படத்தைப் பார்க்கிறோம். இஃது அறிவுறுத்துவ தென்னை? இயற்கையை விரிந்து பரந்த உலகாக்குவது விந்து. இங்கே இந்த இயற்கை உலகை உணர்த்துவது புன்னை. இயற்கையைத் துருவி ஆராய்ந்தால் அதனுள்ளுறை உணர்வில் உறும். அதுவே கடவுள். புன்னையின் கீழ் நிற்கும் அழகு அக் கடவுள். கடவுளுக்கு அணித்தாக உள்ளது விந்துவைக் கடந்த நாதம். இங்கே நாதம் குழலோசை. நாதக் குழலோசைக்கு மூலர் கண்ணபிரான். கண்ணபிரானது நாதமாகிய பிரணவத்தைக் – குழலோசையைக்  கேட்பவர் சாந்தநிலை யடைவர். சாந்தத்துக்கு அறிகுறி பசுக்கூட்டம். சாந்தம் மூர்க்க ஆண்மையை அழித்து அமைதிப் பெண்மையை வழங்குவது. அமைதியை உணர்த்துவது பெண்குழு. உயிர், மூர்க்க ஆண்மையை இழந்து பெண்மை எய்திய பின்னரே கடவுளை அடையுமென்பது மரபு. கண்ணபிரான் இயற்கையில் நீக்கமற நின்று நாதத்தை முழக்கியவண்ண மிருக்கிறார். மூர்க்கம் நீங்கினால் அந்த நாதம் கேட்கும். அதுவே பிரணவ உபதேசம். செவியுள்ளோர் கேட்பாராக. கண்ணபிரானின் புன்னைமரக் கோலத்தை நினைந்து வழிபட்டால் சாந்தமும் அமைதியும் விளைந்து தெய்விகம் கூடும்.

முருகன்

ஒருகால் நினைந்தாலும் வருவோன் முருகன். இம் முருகனை ஓவிய உலகம் நமக்கு எப்படி உதவியுள்ளது? பார்ப்போம். கருணை விழியும், பொன்மேனியும், மயிலூர்தியும், கோழிக் கொடியும், வள்ளியும் தெய்வயானையும், வேலுங் கொண்ட ஓர் அழகிய ஓவியம் நம்முன்னிற்கிறது. ஓவியம் புலன்களைக் கவர்கிறது; உள்ளத்தைக் கவர்கிறது. இவ்வோவியத்தின் உள்ளுறை என்ன? மயில் தோகையை விரித்து விரித்துப் படிப்படியே பரப்புவதைக் காண்கிறோம். விந்து தோகையைப் போல இயற்கை உலகாக விரிந்து பரந்து நிற்பது. ஆகவே, மயில் விந்துவை உணர்த்துவதென்க. முருகன் மயிலில் இவர்ந்து அதை நடத்துவது இறைவன் இயற்கை உலகை நடத்துவதைத் தெரிவிப்பது. விந்துவுக்கு மேல் நிற்பது நாதம். நாதம் ஒலி. கோழி கூவுவது. கோழிக்கொடி தொடர்ந்த நாத ஓசையை விளக்குவது. வள்ளியும் தெய்வயானையும் வேலும் முறையே இச்சா கிரியா ஞான சக்திகளைக் குறிப்பன. இச்சக்திகள் நாத தரிசனத்துக்குப் பின்னே எழுவன. இச்சா கிரியா ஞான சக்திகள் நம்மிடத்தில் இருக்கின்றனவே. எப்படி இருக்கின்றன? ஒடுங்கிக் கிடக்கின்றன. இவைகள் எழுந்தால் தான் நம்மிடத்துள்ள தெய்விகம் கூர்ந்து விளங்கும். நம்மிடத்து ஒடுங்கிக் கிடக்கும் இச்சா கிரியா ஞான சக்திகள் தாமே எழுச்சி பெறுமோ? பெறமாட்டா. இவைகளை எழுப்புதற்கு வேறு இச்சா கிரியா ஞான சக்திகளின் துணை வேண்டும். அவை உண்மையானவையோ? பாவனையோ? அவ்வாராய்ச்சி இங்கே வேண்டுவதில்லை. ‘இச்சா கிரியா ஞானம்’ என்று வெறுமையாகப் பேசிக்கொண்டிருந்தால் அவை எழும்புமா? வெறும் பேச்சு அவைகளை எழுப்பாது. வெறும் வாயை மென்று கொண்டிருந்தால் வயிறு கேட்குமா? முருகன் ஓவியம் அழகியது. வள்ளியுருவமும் தெய்வயானையுருவமும் வேலுருவமும் நம்முள் நுழையக் காத்துக் கொண்டிருக்கின்றன. வேண்டுவது தியானம் – வழிபாடு. தியானத்தில் அவ்வுருவங்கள் உள்ளத்தில் பசுமரத்தாணி போல் பதியும்; பதியப் பதிய நம்பால் ஒடுங்கிக் கிடக்கும் இச்சா கிரியா ஞான சக்திகள் முறைமுறையே ஒளிபெறும்; எழும். இம் மூன்று சக்திகளும் முருகன் நிலை கூட்டும், ஓவிய வழிபாடு மக்களைத் தெய்வமாக்கும். அவ்வழிபாடு இல்லாத இடம் மக்களை மாக்களாக்கும். இச்சா கிரியா ஞான சக்திகள் மக்களிடத்திலிருப்பதை அகத்திணைவல்லார் அனைவருஞ் சொல்கிறார். அவ்வெழுச்சி பெறுதற்குரிய வழியை அவர் நன்முறையில் காட்டியுள்ளனரா? அச் சக்திகட்கு அறிகுறியாக உள்ள உருவங்களை உன்னினால் அவை எளிதில் எழும்புவது ஒருதலை. இதை அனுபவத்தில் பார்க்குமாறு தோழர்களை வேண்டுகிறேன். ஓவிய உலகம் செய்துள்ள நன்றி என்னே! என்னே!

நடராஜன்

இனி ஒரு காட்சி வரப்போகிறது. அஃதும் ஓவியக் காட்சியே. அது கூத்தோவியம். ஓவியத்தில் கூத்தா? கூத்தில் ஓவியமா? கூத்தாடி ஓவியம் எப்படியுமிருக்கும்.

எல்லாவற்றையுங் கடந்து உருவமற்றதாயுள்ள கடவுள் நிலை போக்குவரவற்றது; அசைவற்றது; தொழிலற்றது. அதற்குக் கூத்தேது? இயற்கையை உடலாக்கொண்டு அதன் கூறுகள் எல்லாவற்றிலும் வீற்றிருக்கும் கடவுள் நிலைக்குத் தொழில் தானே உண்டாகும். அதற்குத் தொழில் இல்லையேல் இயற்கை எங்ஙனம் இயங்கும்? உயிர்களைத் தன்னைப்போலாக்கவே கடவுள் இயற்கையை உடலாகத் தாங்கி அதை இயக்குகிறது. அதனால் அது தொழிலுடையதாகிறது. அத்தொழில் ஐந்து வகை. அவை ஆக்கல், அளித்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பன.

பூமலி கற்பகப் புத்தேள் வைப்பும்
நாமநீர் வரைப்பி னானில் வளாகமும்
ஏனைய புவனமும் எண்ணீ ங் குயிருந்
தானே வகுத்த துன் தமருகக் கரமே
தனித்தனி வகுத்த சராசரப் பகுதி
அனைத்தையும் காப்பதுன் அமைத்தகைத் தலமே –
தோற்றுபு நின்றவத் தொல்லுல கடங்கலும்
மாற்றுவ தாரழல் அமைத்ததோர் கரமே
ஈட்டிய வினைப்பயன் எவற்றையு மறைத்து நின்
றூட்டுவ தாகுநின் ஊன்றிய பதமே
அடுத்தவின் னுயிர்கட் கனவில்பே ரின்பம்
கொடுப்பது முதல்வநின் குஞ்சித பதமே.

இது குமரகுருபரர் வரைந்த ஐந்தொழில் எழுத்தோவியம்.

ஐந்தொழிலும் நிகழ அப்பன் கூத்தாடுகிறான்; நடம் புரிகிறான்; நடராஜனாகிறான். ஐயன் கூத்து ஓரிடத்திலா நடைபெறுகிறது? எங்கும் நடைபெறுகிறது. அக்கூத்து உயிரில் – உள்ளத்தில் – ஊனில் – நடைபெறுகிறது; உலகில் – உயர் அண்டங்களில் – அண்டபகிரண்டங்களில் – நடைபெறுகிறது; அணுவில் – அணுவுக்கணுவில் – நடைபெறு கிறது ! எங்கும் எங்கும் நடைபெறுகிறது. அத்திருநடம் இல்லையேல் உலகில் இயக்கம் ஏது? உயிர்கட்கு வாழ்க்கை ஏது?

காளியோ டாடிக் கனகா சலத்தாடிக்
கூளியோ டாடிக் குவலயத் தேயாடி
நீடிய நீர் தீகால் நீள்வா னிடையாடி
நாளுற அம்பலத் தேயாடு நாதனே.

அம்பல மாவது அகில சராசரம்
அம்பல மாவது ஆதிப் பிரானடி
அம்பல மாவது அப்புத்தீ மண்டலம்
அம்பல மாவது அஞ்செழுத் தாமே.

வேதங்க ளாட மிகுவா கமமாடக்
கீதங்க ளாடக் கிளரண்ட மேழாடப்
பூதங்க ளாடப் புவன முழுதாட
நாதங்கொண் டாடினான் ஞானானந்தக் கூத்தே.

அண்ட மெழுகோடி பிண்ட மெழுகோடி
தெண்டிரை சூழ்ந்த திசைக ளெழு கோடி
எண்டிசை சூழ்ந்த இலிங்க மெழுகோடி
அண்டன் நடஞ்செயும் ஆலையந் தானே.

எங்குந் திருமேனி எங்குஞ் சிவசத்தி
எங்குஞ் சிதம்பரம் எங்குந் திருநட்டம்
எங்குஞ் சிவமா யிருத்தலால் எங்கெங்குந்
தங்குஞ் சிவனருட் டன்விளை யாட்டதே.

இவை திருமூலரின் நடனப் பாக்கள்.

அணுவுக்கு அணுவிலும் அண்டபகிரண்டங்களிலும் எங்கும் எங்கும் ஓயாது நிகழுங் கூத்துடையானை – நடராஜனை – நினைத்துப் பார்ப்போம். [*] அவன் அடங்கவில்லை. அவனை எப்படித் தியானிப்பது? வழிபடுவது? பெருங் கூத்தன் – நடன வள்ளல் – புலவனது ஓவியத்தில் நின்று காட்சியளிக்க உளங் கொள்கிறான். அவன்றன் கருணையே கருணை ! நடராஜ ஓவியத்தைக் காணுங்கள். நம் முன்னே ஓவியம் நிற்கிறது. ஓவியத்தில் கூத்து! கூத்தில் ஓவியம்!


-——————————-
[*] தாளொன்றால் பாதாளம் ஊடுருவத் தண்விசும்பில்
தாளொன்றால் அண்டங் கடந்துருவித் – தோளொன்றால்
திக்கனைத்தும் போக்குந் திறற்காளி காளத்தி
நக்கனைத்தான் கண்ட நடம்.       – நக்கீரர் (கைலைபாதி காளத்திபாதி )

அடிபேரிற் பாதாளம் பேரும் அடிகள்
முடிபேரின் மா முகடு பேரும் — கடகம்
மறிந்தாடு கைபேரில் வான் திசைகள் பேரும்
அறிந்தாடும் ஆற்றா தரங்கு.

      – காரைக்காலம்மையார் (அற்புதத் திருவந்தாதி)
——————————-

நடராஜன் ஒருவன். அவன் பல கோலந் தாங்குகிறான். அவைகளில் இரண்டின் மீது கருத்துச் செலுத்த விரும்புகிறேன். ஒன்று திருவாலங்காட்டுப் பெருங்கோலம்; மற்றொன்று தில்லைத் திருக்கோலம். திருவாலங்காட்டில் நடராஜன் தூக்கிய கால் வானோக்கி நிற்கிறது; சிதம்பரத்தில் அவனது கால் எடுத்த பொற்பாத மாகவே – குஞ்சித பாதமாகவே இருக்கிறது.

திருவாலங்காட்டில் ஆண்டவன் புரிவது ஊர்த்தவ தாண்டவம். அத்தாண்டவத்தின் எதிரிலே ஒரு கோர ரூப மிருக்கிறது. அதன் தலைமயிர் பரம்பு; கண்களில் தழல்; வாயெல்லாம் இரத்தச் சேறு; உடலில் படமெடுத்த பாம் பணி; வயிறு பூதம்; கை கால்களில் கூரிய நீண்ட வாள் நகங்கள் – என்ன கோரம்! இக்கோரம் காளி என்று சொல்லப்படுகிறது. இக்காளியுடன் ஈசன் வாது நடம் புரிகிறான் என்று புராணம் புகல்கிறது. புராணம் எதையும் கதையாகப் புனைந்து சொல்லும். அது நிற்க. கோர காளி ரூபம் எதற்கு அறிகுறி? கொள்ளை – கொலை – போர் – முதலிய கோரங்களைக் கொண்ட புரட்சிக்கு – இரத்தப் புரட்சிக்கு (Bloody Revolution) – அறிகுறி.

தில்லையில் அப்பன் புரிவது ஆனந்த நடனம்; இன்பக் கூத்து. அப்பன் நோக்கு ஒருபால் சென்று கொண்டிருக்கிறது. எப்பால்? அங்கே நிற்பதென்னை? ஓர் அழகிய ஓவியம் – பெண்ணோவியம். அவ்வோவியத்தைக் காண இரண்டு கண் போதவில்லை; கருத ஓருள்ளம் போதவில்லை; அம்மை சிவகாமி நிற்கிறாள். அம்மை, சிவனை – ஐயனைக் காதலிக்கிறாள்! என்ன காதல்? ‘காரிட்ட ஆணவக் கருவறையில் கட்டுண்டு கிடக்கும் உயிர்களை யெல்லாம் ஈடேறச் செய்தல் வேண்டும்’ என்னுங் காதல். அதற்கு அப்பன் அம்மையையே நோக்குகிறான். நோக்கின் பொருள் யாது? ‘காதலி! உன் காதல் நிறைவேற உன் துணை வேண்டும்’ என்பது. [*] அப்பன் நோக்கம் அம்மையின் காதலில் ஒன்றி ஆனந்தக் கூத்தாகியது. இருளிலிருந்த உயிர்கள் தனு கரண புவன போகங்களைப் பெறுகின்றன; விழிப்படை கின்றன. தில்லை சிவகாமி எதற்கு அறிகுறி? படைப்பாதித் தொழில்களின் நிகழ்ச்சிக்கு (Evolution) அறிகுறி.

-——————————-
[*]. தென்பா லுகந்தாடுந் தில்லைச்சிற் றம்பலவன்
பெண்பா லுகந்தான் பெரும்பித்தன் காணேடீ
பெண்பா லுகந்திலனேற் பேதாய் இருநிலத்தோர்
விண்பாலி யோகெய்தி வீடுவர்காண் சாழலோ.

      – திருவாசகம் : திருச்சாழல் : 9
———————————-

போராட்டம்

காரிட்ட ஆணவக் கருவறையிற் கிடந்த உயிர்கள் அம்மை அப்பன் அருளால் தனுகரண புவனங்களைப் பெற்றுச் சிறு விடுதலை அடைகின்றன. தங்களுக்குத் தனு முதலியவற்றை வழங்கிய அம்மை அப்பனை மறவாது, அவனது அருட்கொடையை மறவாது, நினைந்து நினைந்து, பெண் ஆணுடனும் ஆண் பெண்ணுடனும் வாழ்ந்து, அற வழி நின்று ஒழுகின், உயிர்கள் முழு விடுதலை அடையும். உயிர்கள் பெரிதும் என்ன செய்கின்றன? தாங்கள் பெற்ற தனு முதலியன அம்மை அப்பன் கொடை என்பதை மறந்து, ஆணவத்தால் செருக்கி, சகோதரநேய மிழந்து, அதர்ம வழிகளில் நுழைகின்றன. அதனால் உலகில் கொள்ளை – கொலை – போர் – புரட்சி – முதலியன வீறுகின்றன. இப்பொழுது நடைபெற்றுவரும் உலக யுத்தத்திற்கு – உலகம் எந்நாளுங் காணாத மகாயுத்தத்திற்கு – அடிப்படையான காரணம், மக்கள் பலர் ஆண்டவனையும் அவன் கொடையையும் மறந்தமையாகும். இவ்வுண்மை இன்று உலகுக்கு விளங்காதொழியினும் நாளடைவில் விளங்காமற் போகாது.

உயிர்களின் அறியாமை காரணமாக நாளுக்கு நாள் உலகம் போராட்டத்துக்கு இரையானால், பின்னே அஃது எப்படி வாழ்வு பெறும்? போராட்டமே என்றும் மலியும் படி ஆண்டவனது அருட்சக்தியாகிய சிவகாமி – நம் தாய் – விடமாட்டாள். அவள் உலகை வளர்க்குஞ் சக்தி. உலகம் போராட்டத்துக்கே இரையானால் அஃது அழிந்துபடு மன்றோ? உலகம் அழிந்து பட்டால் இறைவனுக்கு என்ன வேலை? அவன் கூத்துக்கு என்ன வேலை? அவனது அருட் சக்திக்கு என்ன வேலை? உலகம் போராட்டத்தால் அழியுமாறு இறைவனது அருட்சக்தி அதை விடாது. உலகுக்கு நல்லறிவு கொளுத்தப் போரும். புரட்சியும் இயற்கைச் சக்தியால் ஓரளவிலேயே உண்டாக்கப்படும். குண்டெறிதல் முதலியனவும் ஆண்டவன் அருளாலேயே நிகழ்கின்றன என்று கொள்க. [*] “மண்ணிடத்துங் கடலிடத்தும் வானிடத்துங் குண்டெறிதல் – அண்ணலுனை மறந்த உயிர்க்கு அருளூட்டுங் கருணை மழை” என்று யானும் பாடியுள்ளேன்.


——————————-
[*]. பொதுமை வேட்டல்: 40 – 10.
–——————————-

திருவாலங்காட்டுத் தெய்வவுரு ஊர்த்துவ தாண்டவம் புரிகிறது. ஒரு காலை உயரத் தூக்கி அவ்வுரு நிற்கிறது. எதிரில் இரத்தப் புரட்சிக்கு அறிகுறியாகக் கோரக்காளி வீறுடன் இருக்கிறாள். கோரக்காளியும் சக்தியின் கூறினளே. கோணிச் செல்லும் உலகில் புரட்சியைக் கிளப்புவது அவள் கடமை. உலகத் திருத்தத்தின் பொருட்டு அவள் ஓரளவிலேயே கடனாற்றுவள். அளவு மீறிக் கடனாற்ற அவள் முனைந்து எழுவளேல், உயரத் தூக்கியுள்ள இறையின் திருவடி வாளா இராது. அது காளியின் தலை மீது விழுந்து, அவளை மிதித்து நசுக்கி, [*] அவள் வேகத்தை ஒடுக்கிவிடும். திருவாலங்காட்டுத் தெய்வ ஓவியம், காளி! உலகம் அறத்தை மறந்து, பாழ்படுங் காலத்து, அதை ஒழுங்குபடுத்த உன் கடமையை நீ செய்யலாம், அக்கடமை வரம்புக் குட்பட்டதா யிருத்தல் வேண்டும், வரம்பு மீறி உன் விருப்பம் போல் தலைவிரித்தாட நீ முனைந்தெழுந்தால், உயரத் தூக்கியுள்ள இக்கால் உன்னை மிதித்து அடக்கி ஒடுக்கிவிடும். எச்சரிக்கை!’ என்று புரட்சிக் காளிக்கு அறிவுறுத்தும் வண்ணம் இருத்தலைக் கருதுக. காளியின் எழுச்சியால் பழுதுற்ற உலகை மீண்டும் பண்படுத்துவது இறைவனது அருட்சக்தி. இதைக் குஞ்சிதபாத நடராஜ ஓவியமும் சிவகாமி ஓவியமும் உணர்த்தா நிற்கின்றன. இந் நடராஜ ஓவியத்தின் கருணை நோக்கும், சிவகாமி ஓவியத்தின் காதல் நோக்கும் என்ன அறிவுறுத்துகின்றன என்று ஆழ்ந்து சிந்திக்கச் சிந்திக்க உண்மை விளங்காமற் போகாது.

தேன் புக்க தண்பணை சூழ் தில்லைச்சிற் றம்பலவன்
தான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடீ
தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெலாம்
ஊன் புக்க வேற்காளிக்கு ஊட்டாங்காண் சாழலோ.


இது மாணிக்கவாசகர் திருவாக்கு. இதில் திருக்கூத்தின் உள்ளம் விளங்குதல் காண்க.

——————————-
[*] வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க – திரு வாசகம் : சிவபுராணம் : 6.
-——————————-

பயன் கருதாமை

நடராஜன் ஆணவமில்லாதவன்; முனைப்பே யில்லாதவன். அன்பே அவன்; அவனே அன்பு. அன்பின் இயல் பென்னை? பிறர் துன்பங் களையத் தொண்டாற்றுவது. நடராஜன் அன்பு மேலீட்டான் ஆனந்தத் தாண்டவம் புரிகிறான். அதனால் ஐந்தொழில் நிகழ்கின்றன. ஐந்தொழிலால் உலகங்கள் நன்முறையில் இயங்குகின்றன. நடராஜன் தொண்டை – அன்புத் தொண்டை – என்னென்று கூறுவது? அவன் தன் தொண்டுக்கு ஏதேனும் பயன் கருதுகிறானா? இல்லை. நடராஜன் பயன் கருதாத் தொண்டன்; பெருந் தொண்டன். பயன் கருதாத் தொண்டே நிஷ்காமிய கருமம் என்பது. இதுவே தெய்விக நிலை. இது கிட்டினால் போதும். இப்பேற்றுக்கு என் செய்தல் வேண்டும்? நடராஜனை வழிபடுதல் வேண்டும். ஆன்மா சார்ந்ததன் வண்ணமாவது. நடராஜனை வழிபட வழிபட அவன்றன் இயல்பாகிய பயன் கருதாமை ஆன்மாவைத் தன்வண்ணமாக்கும்.

நடராஜன் அணுவுக்கு அணுவிலும் – அண்டபகிரண்டங்களிலும் – எங்கும் – தாண்டவஞ் செய்பவன். அவனை நேரே நினைக்கும் வல்லமை எளிய நெஞ்சுக்கு உண்டோ ? என் செய்வது? நடராஜனது அழகிய ஓவிய மிருக்கிறது. அதை வழிபடலாம். அது நடராஜனது அருட் குணங்களை யெல்லாம் பதிவிக்கும்.

இலிங்கம்

நடராஜனைத் தொடர்ந்து இலிங்கம் எனது நினைவி லுறுகிறது. நடராஜ மூர்த்தம் ஆடுவது. இலிங்க மூர்த்தம் ஆடாதது. இலிங்க வழிபாடு மிகத் தொன்மையது. அஃது எந்நாளில் தோற்றமுற்றதோ தெரியவில்லை. ஒரு காலத்தில் உலக முழுவதும் அவ்வழிபாட்டில் ஈடுபட்டிருந்தது. இன்னும் பால்டிக் கடலோரத்திலும், நீல் யூபரிட்டிஸ் டைகிரஸ் முதலிய ஆறுகள் வளஞ் செய்யும் நிலங்களிலும் இலிங்கங்கள் கிடைத்து வருகின்றன. இந்திய நாகரிகத்தின் பழமையைச் சரித்திர உலகத்தில் உறுதிப்படுத்திய மகேஞ்சதாரோவில் இலிங்க வழிபாடு இருந்தமை நன்கு தெரிகிறது. இலிங்க வழிபாடு உலகில் பொதுமையாயிருந்த காலமுண்டு. பழைய மதங்கள் – ஏறக்குறைய எல்லாம் – இலிங்க வழிபாட்டைக் கடைப்பிடித்தனவேயாம். நாளடைவில் அவ்வழிபாடு நேரியமுறையில் பலவிடங்களில் நடைபெறாதொழிந்தது. இலிங்கம் பலவுருவங்களாகச் சிதைவுண்டது. பழையகாலத்து யூதர் போற்றிய இலிங்கம் பின்னே சிலுவையாகத் திரிக்கப்பட்டது. கிறிஸ்துவுக்குப் பின்னர் சிலுவைக் குறி வேறுபொருள் பெறலாயிற்று.

திரிபு

இலிங்க நுட்பங்களை இங்கே விரித்துப் பேசப் போதிய காலமின்மை குறித்து வருந்துகிறேன். இப்பொழுது சில சொற்களைத் தூவிச் செல்லும் நிலைமையிலேயே இருக்கிறேன். மன்னிக்க. இலிங்கம் என்னுஞ் சொல்லுக்குக் குறி என்பது பொருள். [*] தத்துவ ஆராய்ச்சியில் தலைப்படாது வேறு ஆராய்ச்சிகளில் தலைப்பட்டவரால் இலிங்கத்துக்கு ஆண்குறி பெண்குறி என்ற பொருள் சொல்லப்பட்டது. இதற்குத் காரணம், இலிங்கம் ஆண்மை பெண்மையினின்றுந் தோன்றியதென்ற கொள்கை திரிபாகப் பொது மக்களிடைப் பரவி நின்றதே யாகும். ஒரு சீரிய பொருள் பொதிந்த கொள்கை, சாதாரண மக்களிடைப் பரவும்போது, அஃது எத்தனையோ வழிகளில் மாறுதலடைவது இயற்கை. தெருப் பேச்சுக்களும் வதந்திகளும் ஆராய்ச்சி யுலகேறுவதை நாம் காண்கிறோம்.

-——————————-
[*] ………. The Lingam of the Hindus has a spiritual and highly philosophical meaning, while the missionaries see in it but an ” indecent” emblem……….
      – The Secret Doctrine : V : 285 [1938]

……… Shiva – WORship, with its Lingam and yoni, stands too high philosophically, its modern degeneration notwithstanding, to be called a simple phallic worship…
      – S – D : IV : 159 – 160
…… The Hindu Lingam is identical with jacob’s “Pillar ” – most undeniably. But the difference, as said, seems to consist in the fact that the esoteric significance of the Lingam was too truly sacred and metaphysical to be revealed to the profane and the vulgar; hence its superficial appearance was left to the speculations of the mob…
      – S – D: IV : 39
-——————————-

மூலசக்தி

ஆண்மைக்கும் பெண்மைக்கும் மூலமாயிருப்பது குறியன்று; ஒருவித சக்தி. அச்சக்தி பருமையதன்று; நுண்மையது; ஆனால் நிகழ்ச்சியிலிருப்பது; இன்பமுடையது. அது மின்சார சக்தி பீடம் (Power House) போன்றது. சக்தி பீடத்தினின்றும் மின்சார ஒளியைப் பெறுதற்குக் கம்பிகள் மூடிகள் முதலிய பல கருவிகள் வேண்டப்படுகின்றன. அதேபோல ஆண்மை பெண்மை இயங்கி இன்பமளித்தற்கு ஒரு மூலமும், கம்பி மூடி முதலியனவும் இருக்கின்றன. மூலம்: சக்தி; கம்பிகள்: நரம்புகள்;  மூடி (போர்வை): குறி. மின்சார ஒளி இயக்கத்திலிருக்கும் போது அது விளங்கித் தோன்றுதற்கு மூடி (போர்வை) அணியப்படுகிறது. அம்மூடி பிடுங்கப்பட்டால் ஒளி காணப்படுவதில்லை. இதனால் மூடி மின்சார சக்தியாகுமோ? ஆதலின் குறி, இன்ப மூலசக்தி ஆகாதென்க.

சித்சக்தி

இன்ப மூலசக்தி ஒன்றே. அதனிடத்தில் ஆண்மை பெண்மை என்னும் இரண்டு கூறுகளிருக்கின்றன. அவ் வாண்மை பெண்மை விளக்கங் கண்டு, அவ்வளவில் நின்ற மலயோகர், அவ்விரண்டையுங் கொண்ட சக்தியே இலிங்கமென் றறைந்தனர். அச்சக்தி கடந்து செல்வோருமுளர். அவர் அமலயோகர். அமலயோகர் இன்ப மூலசக்தியை யுணர்ந்து, அது சடமாயிருத்தல் கண்டு, மேலும் முயன்றனர். அவர் தம் முயற்சியில் மற்றுமொரு சக்தி புலனாயிற்று. அது சின்மயமா யிருத்தலை அவர் உணர்ந்தனர். சின்மயம் நாதங் கடந்தது. அச் சித்சக்தியி னின்றும் எல்லாம் தோன்றுகின்றன; நிற்கின்றன; ஒடுங்குகின்றன. இத் தோற்ற நிலை ஒடுக்கங்களை நிகழ்த்து தற்கென்று சித்சச்தியினிடத்திலும் இரண்டு தன்மைக ளிருக்கின்றன. அவை ஆண்மையும் பெண்மையுமாம். இவ்வாண்மையும் பெண்மையும் சடசக்தியின் ஆண்மைக்கும் பெண்மைக்கும் மூலமாயிருப்பன. சித்சக்தியின் ஆண்மை பெண்மைக்கு உலகில் பல மொழியில் பல பெயர் வழங்கப்படுகின்றன; நம் நாட்டவர் இரண்டையும் முறையே சிவமென்றும் சக்தியென்றும் போற்றுகின்றனர். சித்சக்தியின் கூறுகளாயுள்ள ஆண்மையும் பெண்மையுஞ் சேர்ந்த ஒன்றை இலிங்கம் என்றனர் அமல யோகர். இலிங்கம் எல்லாவற்றிற்கும் ஆதிமூல மென்க. சித்சக்தியின் ஆண்மை பெண்மையாலாகிய இலிங்கத்தைச் சாதாரண ஆராய்ச்சியாளர் ஆண்குறி பெண்குறி என்கிறார். இவர்க்கு ஆராய்ச்சி முதிர்ந்து முதிர்ந்து அநுபூதியும் உடன் வளர்ந்துவரின் உண்மை விளங்கும்.

புரோடான் – எலக்ட்ரான்

இக்கால விஞ்ஞான உலகம் பலதிற ஆராய்ச்சி செய்து எல்லாவற்றிற்கும் அடிப்படையாக உள்ள சக்திகள் இரண்டு என்றும், அவை புரோடான், எலக்ட்ரான் என்றும் கண்டுள்ளது. புரோடான் ஆண்சக்தி; எலக்ட்ரான் பெண்சக்தி. இவை இரண்டு அபின்னம். இவை சடமா? சித்தா? சடம். மலயோகர் கண்ட சடசக்தியின் கூறுகளாகிய ஆண்மையும் பெண்மையும் முறையே புரோடான், எலக்ட்ரானாக இருக்கலாம். சடசக்திக்கு முதலாக உள்ள சித்சக்தி ஆராய்ச்சிக்கு எட்டாதது. அதை உணர்தற்கு அநுபூதி வேண்டும்.

தூல சூக்குமம்

சடசக்தி வேண்டுமா? வேண்டாவா? சடசக்தி வேண்டும். அஃது இன்றியமையாதது. அச்சக்தியைக் கொண்டே சித்சக்தியை உணர்தல் வேண்டும். சடசக்தி சித்சக்திக்கு ஏணி போன்றது. சடசக்தியின் ஆண்மை பெண்மைச் சேர்க்கையைத் தூல லிங்கமென்றும், சித்சக்தியின் ஆண்மை பெண்மைச் சேர்க்கையைச் சூக்கும லிங்க மென்றுங் கொள்ளலாம்.

இலிங்கமும் அழகும்

அழகைப்பற்றிப் பேசவந்த இந்த இடத்தில் இலிங்கம் வந்து குறுக்கிடுவானேன்? அதில் ஏதேனும் அழகுண்டா? என்று சிலர் வினவலாம். இலிங்கத்தினும் அழகுடையது வேறொன்றுண்டோ என்று யான் கேட்கிறேன். இலிங்கம் – சொக்கலிங்கம், அழகு – முழு அழகு. இலிங்கம் அழகுக்கு உறையுள்; நிலைக்களன்; ஊற்று.

அழகு எங்கே இருக்கிறது? உணவிலா? உடையிலா? தோலிலா? நிணத்திலா? நரம்பிலா? எலும்பிலா? எங்கே? ஒருவன் அழகொழுகப் பிறந்தான்; வளர்ந்தான்; தீயொழுக்கத்தில் வீழ்ந்தான்; குரங்கானான். அழகைக் காணோம். அவனுக்கு உணவில்லையா? உடையில்லையா? தோல் நிணம் நரம்பு முதலியன அவனை விடுத்து அகன்றா போயின? எல்லாமிருக்கின்றன. அழகை மட்டுங் காணோம் அழகு எங்கே?

சித்சக்தியின் ஆண்மை- பெண்மைச் சேர்க்கையில் அழகு பொங்கிய வண்ண மிருக்கும். அழகுக்கு ஊற்றா யிருப்பது அச்சேர்க்கை. அஃது எது? அஃது இலிங்கம். அழகுக்கு ஊற்று எது? இலிங்கம். சித்சக்தியின் ஆண்மை பெண்மையினின்றும் பொங்கும் அழகைச் சடசக்தியின் ஆண்மை பெண்மைக்கூட்டம் பெறுகிறது. அங்கிருந்து அழகெழுந்து உடல் முழுவதும் பரவி நிற்கிறது. சடசக்தியின் ஆண்மை பெண்மைக்கு ஊறு நேர்ந்தால், சித்சக்தியின் ஆண்மை பெண்மைத் துணை அதற்குக் கிடைத்தல் அரிதாகும். சடசக்தி அழகு பெறாதொழியின், உடலுக்கு அழகு எங்கிருந்து வரும்? ஆதலால் சடசக்தியின் ஆண்மை பெண்மைக்கு ஊறு நேராதவாறு காப்பது அறிவுக்கு அழகு. தீயொழுக்கம் சடசக்தியின் ஆண்மை பெண்மை – வளத்தை நாளடைவில் குலைக்கும். அது குலையக் குலைய அழகு வற்றிப்போகும். அழகுக்கும் இலிங்கத்துக்கும் உள்ள தொடர்பை உணர்க.

மூலத்தின் இடம்

சடசக்தி இன்ப மூலமென்றும், அதன் கூறுகள் ஆண்மை பெண்மை என்றும் அடிக்கடிச் சொல்லி வருகிறேன். அம்மூலம் உடலில் யாண்டுள்ளது என்று இது காறும் யான் சொன்னேனில்லை. முன்னமே அதைச் சொல்ல நினைந்தேன். காலத்தைக் கருதி அதை அங்கே விடுத்தேன். இங்கே சிறிது தொட்டுவிட்டுச் செல்ல விரும்புகிறேன். [*] எருவிடும் வாசலுக்கும் கருவிடும் வாசலுக்கும் இடையிலிருப்பது அந்தச் சக்தி மூலம். இதைக் காமபீடமென்றும் (Semen Gland) உடற்கூற்று நூலார் கூறுப. யான் சொல்வது அஃது அன்று. அதற்குச் சார்பாக அதனினும் நுண்ணியதாக உள்ள ஒன்று யான் சொல்வது, அச் சக்தி மூலம் எப்பொழுதும் ஆக்கம் பெற்றிருத்தல் வேண்டும். இல்லையேல் உடல் நாசமாகும். சக்திமூலத்தின் ஆக்கம், ஞானக்கண்ணென்னும் முக்கண் விளக்கத்துக்கு ஆக்கம் உண்டுபண்ணும்; முக்கண் பீடத்துக்கு (Pineal Gland) ஊக்கமளிக்கும் தொடர்பு உண்டு, அத் தொடர்பைச் செய்வது குண்டலினி (Spinal Cord). மூலம் கேடுற்றால் எல்லாம் கேடுறும். ஆதலின் சடசக்தி மூலம் காக்கப்படல் வேண்டும். அதன் காப்பைப் பொறுத்தே சின்மய லிங்கம் விளங்கும்.

–——————————-

* எருவிடும் வாசல் இருவிரல் மேலே கருவிடும் வாசல் இருவிரல் கீழே உருவிடு சோதியை உள்கவல் லார்க்குக் கருவிடுஞ் சோதி கலந்துநின் றானே. – திருமூலர்
———————————-

அமலயோகர் உணர்ந்துரைத்த இலிங்கம் சின்மயம். அதை எப்படி வழிபடுதல் கூடும்? சின்மய லிங்கத்தைப் புலவர் ஓவியத்தில் இறக்குகின்றனர். ஓவிய லிங்கம் உள்ளத்தில் ஒன்றும்; நன்கு ஒன்றும். அதை எளிதில் தியானஞ் செய்யலாம் – வழிபடலாம். இலிங்க வழிபாடு உள்ளத்தை அழகாக்கும்; உடலை அழகாக்கும்; உயிரில் அழகொளி படரச் செய்யும்; அமலயோகத்தைக் கூட்டும். அழகைச் சாரும் எதுவும் அழகாவது இயற்கை.

இலிங்க ஓவியத்துக்கும், மற்ற மூர்த்த ஓவியங்கட்கும் வேற்றுமையுண்டு. கைகால்கள் முதலிய உறுப்புக்களை யுடைய ஓவியம் புறமனத்தியான அளவில் பயன்படும். நடுமானத்தில் உறுப்புக்கள் மறையும். அடிமனத்தில் ஓவியம் உறுப்பிழந்து இலிங்கமாகும். அதற்குமேல் இலிங்கத் தோற்றம் ஓடுங்கி, அது பிராணமயமாய், விந்து மயமாய், நாதமயமாய்ப் படிப்படியே மாறி மாறி ஆன்ம மயமாகும். ஆன்மலிங்கமே மேம்பட்டது. அதற்குமேல் பேச யான் அருகனல்லன்.

[*] அண்டம் இலிங்கமயம்; அணு இலிங்கமயம்; உடல் இலிங்கமயம்; உயிர் இலிங்கமயம்; எல்லாம் இலிங்கமயம். ஆன்மலிங்கம் விளங்கினதும் எல்லாம் இலிங்கமென்பது நன்கு விளங்கும்.

——————————-
[*] இலிங்கம தாவதி யாரு மறியார்
இலிங்கம தாவது எண்டிசை யெல்லாம்
இலிங்கம தாவது எண்ணெண் கலையும்
இலிங்கம தாக வெடுத்த துலகே.

மானுட ராக்கை வடிவு சிவலிங்கம்
…. …. ….
சத்தி சிவமாம் இலிங்கமே தாபரம்
தத்தி சிவமாம் இலிங்கமே சங்கமம்
சத்தி சிவமாம் இலிங்கம் சதாசிவம்
சத்தி சிவமாகுந் தாபரந் தானே.       – திருமூலர்
-——————————-

பழுத்த அமலயோகர் சின்மயமானதும் அதாவது இலிங்கமானதும் அவர்தந் திருமேனி ஓரிடத்தில் அடக்கஞ் செய்யப்படுகிறது. அதன் மீது ஓவிய லிங்கம் வைக்கப் படுகிறது. அதைச் சமாதி என்று புற உலகஞ் சொல்கிறது. புறச்சமாதி ஆதியுடன் சமம் ஆதலை உணர்த்துவது. இச் சமாதிகள் பெரும் பெருங் கோயில்களாயின. அக்கோயில்கள், இருள் மலிந்த இந்நாளிலும் உயிருள்ளனவாகவே பொலிகின்றன. ஆங்காங்குள்ள இலிங்கங்கள் அழ கொளியை வீசுகின்றன; சின்மய சோதியைக் கால்கின்றன. அழகும் சோதியும் பக்தர்கட்கு விளங்கியே வருகின்றன. அமலயோக ரல்லாத பிணங்கள் புதைக்கப்படும் இடங்களும் சமாதிகள் என்று சொல்லப்படுகின்றன. அவைகள் சமாதிகளல்ல; இடுகாடுகள்.

அறிவு

அழகு வழிபாட்டை இவ்வளவில் நிறுத்திக் கொள்கிறேன். இனி அறிவு வழிபாட்டின் மீது சிறிது கருத்துச் செலுத்துகிறேன். அறிவும் ஓர் உருவின் வாயிலாகத் தன்னை உணர்த்துவது. அறிஞர்வழி ஒளிர்வது அறிவு.

பொய்யறிவு – மெய்யறிவு

அறிஞர் இருசாரார். ஒருசாரார் பொய்யறிவு விளங்கப் பெற்றவர். மற்றொரு சாரார் மெய்யறிவு விளங்கப் பெற்றவர். பொய்யறிவு எது? மெய்யறிவு எது? பொய்யறிவு, தோன்றி நின்று அழிதன் மாலையனவான பொருளல்லாப் பொருள்களின் சார்பில் விளங்குவது. மெய்யறிவு, தோற்றநிலை இறுதி என்னும் விகாரமுறாது – மாறுதலடையாது – என்றும் ஒரு பெற்றியதாயுள்ள செம்பொருளின் சார்பில் விளங்குவது.

சிற்றறிவு – பேரறிவு

தோன்றி நின்று அழிவன எல்லாம் மாயா காரியங்களாகிய தத்துவங்கள். தோன்றி நின்று அழியாதது பரம்பொருள் ஒன்றே. இது பேரறிவு எனவும்படும். அறிவு திடீரெனப் பரம்பொருளாகிய பேரறிவுடன் சார்ந்து அது வாகாது. அது தத்துவங்களைப் படிப்படியே பற்றிப் பற்றிச் சென்று பேரறிவுடன் சார்ந்து அதுவாகும்.

அறிவு பேரறிவுடன் சார்ந்து அதுவாதல் என்று சொல்வதில் ஒருவித மயக்கம் உண்டாகும். ‘சொல்’ உலகில் நிற்கும் வரை மயக்கம் உண்டாதல் இயல்பு. ‘சொல்’ கடந்த அநுபூதியில் எவ்வித மயக்கமும் உண்டாகாது. பேரறிவுடன் சார்ந்து அதுவாவது சிற்றறிவு என்றும், அஃது ஆன்மா என்றும், பேரறிவு பரமான்மா என்றும், ‘அதுவாதல்’ என்பது பேரறிவும் சிற்றறிவும் பொருட்டன்மையில் ஒன்றாதலை உணர்த்துவதன்று என்றும், அது கலப்பில் ஒன்றாதலை உணர்த்துவது என்றும், பேரறிவும் சிற்றறிவும் ஒன்றாயின் பேரறிவு சிற்றறிவாய் வருதற்குக் காரணம் வேண்டப்படும் என்றும், காரணம் பெறின் அஃது ஒரு பொருளுண்மைக்கு இடந்தாராமையைச் சிந்தித்தல் நேரும் என்றும், ஆதலின், சிற்றறிவும் பேரறிவும் பொருளால் வேறுபட்டும் கலப்பால் ஒன்றுபட்டும் இருப்பவை என்றும் கூறுவோரும் உளர். விவகாரத்தில் சிற்றறிவு பேரறிவு என்றிரண்டு உண்டு என்றும், பாரமார்த்திகத்தில் இரண்டில்லை என்றும், பொருள் ஒன்றே என்றுஞ் சொல்வோரும் உளர். இன்னும் பலதிறக் கருத்துடையோரும் உளர். இக்கொள்கை ஒவ்வொன்றற்கும் ஒவ்வொரு குறியீட்டுப் பெயர் அறிஞரால் அணியப் பட்டிருக்கிறது. அவ்வவ்வணியை அவ்வக் கொள்கையுடைய நூலிற் காணலாம்.

வாதப் போர்

சிற்றறிவு பேரறிவைப்பற்றி நமது நாட்டிலும், வேறு நாடுகளிலும் நடந்த வாதப் போர்கட்கு அளவே இல்லை. இப்பொழுது அரசியற் போராட்டம் அப்போராட்டங்களை ஓரளவில் விழுங்கி நிற்கிறது. வரப்போகும் புது உலகில் அப்போராட்டமும் இராது; இப்போராட்டமும் இராது; சிற்றறிவும் பேரறிவும், ‘ஒன்று’, ‘வேறு’, ‘கலப்பு’ முதலிய கொள்கைகளையுடைய நூல்கள் பலவற்றைக் கேட்பதிலும், ஆராய்வதிலும், சிந்திப்பதிலும் காலங்கழித் தவருள் யானும் ஒருவன்; வாதப் போர்களிலும் சிலகாலம் யான் உழன்றும் இருக்கிறேன். பலதிறக் கொள்கைகளை வெளியிட்டவ ரெல்லாரையும் பேரறிஞரென்றே யான் போற்றுகிறேன்.

உண்மை ஒன்றே

உண்மை ஒன்றே. இஃது அநுபூதியில் விளங்குவது ஒருதலை. ஓர் உண்மை பலதிறக் கவடு கோடுகளை விட்டு நிற்கிறது. கவடு கோடுகட்குக் காரணம் காலதேச வர்த்தமானமே யாகும். ஒரு காலம் ஒருவிதக் கொள்கையை விரும்பும். அதை நிறைவு செய்ய ஓரறிஞர் தோன்றுவர். இன்னொரு காலம் இன்னொருவிதக் கொள்கையை விழையும். அதை நிறைவு செய்ய இன்னோர் அறிஞர் தோன்றுவர். இவ்வாறு ஓர் உண்மை பலதிறக் கவடு கோடுகளை விட்டு விட்டு நிற்பதாயிற்று. கொள்கைகள் காலதேச வர்த்த மானத்தையொட்டி எழுவன என்னும் நுட்பம் விளங்கப் பெற்றவர் மனம் வாதப்போரில் செல்வது அரிது.

இன்றெனக் கருளி இருள் கடிந் துள்ளத்
தெழுகின்ற ஞாயிறே போன்று
நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன்
நீயலால் பிரிதுமற் றின்மை .
சென்று சென் றணுவாய்த் தேய்ந்து தேய்ந் தொன்றாம்
திருப்பெருந்துறையுறை சிவனே
ஒன்று நீ யல்லை அன்றியொன் றில்லை
யாருன்னை அறியகிற் பாரே.

இது திருவாசகத்திலுள்ள ஒரு பாட்டு. இவ்வொன்று ஒவ்வோரறிஞர்க்கு ஒவ்வொருவிதக் கருத்தை வழங்கி நிற்கிறது. ‘நீயலால் பிரிதுமற் றின்மை என்பதற்கும், ஒன்றாம் என்பதற்கும், ஒன்று நீ அல்லை அன்றி ஒன்றில்லை’ என்பதற்கும் அறிஞர்வாயிலாக எழுந்த விரிவுரை ஒன்றா? இரண்டா? பற்பல. சத்காரியம், ஆரம்பம், பரிணாமம், விவர்த்தனம் முதலிய வாதங்களெல்லாம் அறிஞர் உரைகளில் மலிகின்றன. அறிஞர் உரைகள் போராட்டங்களை விளைவியாமலில்லை; அறிவுப் போராட்டம் ஓரளவில் வேண்டற்பாலதே. அதை அறிவுக்குரிய விருந்தாகக் கொள்வது அழகு. அறிவுப் போராட்டம் என்றாவது, ‘ சொல்லை விடுத்து, உண்மைப் பொருளை நேரே நோக்கத் தூண்டும். பொருள் நோக்குப் போராட்டத்தைப் படிப்படியே தவிர்ப்பதாகும். போராட்டம் போராட்டத்தைக் களைவதை யான் அநுபவத்தில் உணர்ந்துள்ளேன். ஆதலின், எச் சார்பிலும் பற்றுக் கொண்டு இங்குப் பேச மனம் எழவில்லை. இதுவும் காலதேச வர்த்தமானப் போக்காயிருக்கலாம்.

‘அதுவாதல்’ என்பது மூலம். இம்மூலத்துக்கு அறிஞர் அவ்வப்போது கண்ட உரைகள் பல; பலதிறத்தன. இப்பொழுது எனது நெஞ்சம் மூலத்தையே நாடுகிறது. இந்நாட்டத்தை எனக்கு வழங்கிய உரைகட்கும் வாதப் போர்கட்கும் வாழ்த்துக் கூறுகிறேன். சிற்றறிவைப் பேரறிவாக்கும் முயற்சி வேண்டும். ‘ அதுகுறித்து, வழிபாடு நிகழ்த்து’ என்பது இயற்கை அன்னையின் ஆணை. இவ் வன்னையின் ஆணையும் காலதேச வர்த்தமானத்துக்கு ஏற்ற வாறு பிறப்பது.

அறிவும் தத்துவமும்

தத்துவங்களைப் பற்றிச் செல்லச் செல்ல அறிவு பேரறிவின் துணை பெற்று அதைச் சார்ந்து அதுவாகும். அறிவு, தத்துவங்களைப் பற்றுவது யோகம். யோகமாவது ஒன்றல் – ஒன்றுடன் ஒன்றல். இரண்டு வாயிலாக நிகழ்வது யோகம். அறிவு ஏதேனும் ஒன்றைப்பற்றி அதில் ஒன்றினால் அது யோகமாகும். வழிபாடு என்பதும் யோகத்தின் பாற்பட்டதே. இதுபற்றி முன்னரும் பேசியுள்ளேன்.

அறிவு ஒன்றைப் பற்றும்வரை யோகம் நிகழும். அறிவு ஒன்றைப் பற்றுவது அற்றுப்போயின் யோகமும் அற்றுப் போகும். யோகத்துக்கு இரண்டு ஒன்றுதல் தேவை. இரண்டற்ற இடத்தில் யோகம் ஏது? ஒன்றில் ஒன்றல் என்னும் யோகம் நாதம்வரையுண்டு. முன்னர் இசைக்கண் யான் இதைக் குறிப்பிட்டது உங்கள் நினைவிலிருக்கும்.

அறிவு, தத்துவங்களில் தோய்ந்து செல்லும் போது நெடுந் தூரம் மனத் தத்துவத்தின் துணையை ஆங்காங்கே வேண்டி நிற்கும். அறிவு சுத்த வித்தையின் ஒளி பெற்றதும், மனம் – அடிமனம் – முற்றும் ஒடுங்கிவிடும்; பின்னே சுத்த தத்துவங்களின் துணையை நேரே பெற்றுப் பரத்துடன் அதுவாகும்.

பலபட விரிந்துள்ள மாயா காரியத் தத்துவம் ஒவ்வொன்றையும் அறிவு பற்றிப் பற்றிச் செல்லல் வேண்டுமா? இதற்குப் பதில் சாதகமாகவும் பாதகமாகவும் நூல்களில் இருத்தலை யான் கண்டுள்ளேன். ஒவ்வொரு தத்துவத் தையும் பற்றிப் பற்றியே அறிவு செல்லுதல் வேண்டும் என்னும் நியதி இல்லை. ஒரு நொடியில் பரமாகும் உயிரும் உண்டு; பல பிறவி தாங்கித் தாங்கியும் மண் தத்துவத்தைக் கடந்து செல்ல இயலாத உயிரும் உண்டு. இதற்கு உரிய காரணங்கள் பல கூறலாம். அது பெருங் கடையாகும். அக் கடையைத் திறந்தால் மணிவிழா மண்டபம் பெரிய சந்தைக் கூட்டமாகும். மணிவிழாவில் வாணிபம் எற்றுக்கு?

அறிஞர்

அறிஞர் எவர்? மெய்யறிவு விளங்கப்பெற்றவர். இவரே மெய்ஞ்ஞானிகள். இவரை வழிபடுவது அறிவை வழிபடுவதாகும். அறிவைத் தனியே வழிபடுதல் இயலா தன்றோ? மெய்ஞ்ஞானிகளென்று போலிகளை வழிபட லாகாது. ஆன்மா சார்ந்ததன் வண்ணமாகும் இயல்புடையது. அது போலியில் படிந்தால் போலியே யாகும். சில போலிகள் தங்களை மெய்ஞ்ஞானிகளென்று உலகங் கருது மாறு நடிக்கின்றார்கள். ஒன்றுமறியா உலகம் ஏமாந்து போகிறது. போலிகளை வழிபட்டால் அவர்களது பொல்லாத கரவுக் குணங்களெல்லாம் வழிபடுவோரிடத்தில் படியும். சில நல்ல பிள்ளைகள் போலிகளை அடைந்த காரணத்தால் தீயவராய்க் கயவராய்க் கொலைஞராய் மாறியதை யான் அறிவேன்.

மெய்யர் பொய்யர்

இன்னார் மெய்யர், இன்னார் பொய்யர் என்று எப்படி உணர்வது? கலைஞானியர் நிலை அவர்தங் கலை ஞானத்தால் விளங்கும். மெய்யறிவு விளங்கப்பெற்ற நல்லறிஞர் நிலையை உணர்தற்கு நடுநிலை நெஞ்சம் வேண்டும்; துரபிமானம் கூடாது. மெய்ஞ்ஞானிகளிடம் தற்பெருமை நாடாமை, பிறரை இழித்துக் கூறாமை, விளம்பரங் கருதாமை, வலிந்து பணம் பறியாமை, அவரிடம் நெருங்கிப் பழகுவோர் பால் இகல் பகை முதலிய தீமைகள் தேய்ந்து, அன்பு அருள் சகோதர நேயம் முதலிய நலங்கள் வளர்தல் முதலியன காணப்படும். இவைகட்கு மாறுபட்ட குணங்கள் போலிகளிடங் காணப்படும். இவ்விருவிதக் குணங்களைக் கொண்டு மெய்யர் பொய்யர் நிலைகளை ஒருவாறு எளிதில் உணரலாகும்.

இந்நாளில் மெய்யறிஞரைக் காண்டல் அரிது என்றோர் எண்ணம் இக்காலக் கல்வியாளரிடைப் பெரிதும் உலவிவருகிறது. இதற்குக் காரணம் இக்காலக் கல்வியும் நாகரிகமுமாகும். எந்நாளிலும் மெய்ஞ்ஞானிகள் இலை மறை காய்போல் இருப்பார்கள். அவர்கள் துணையை உலகம் பெற்றோ வருகிறது. இக்காலக் கல்வியாளர் கருத்துப்படி மெய்ஞ்ஞானிகள் கிடையாவிடின், மெய்ஞ்ஞானத் துக்கு அறிகுறியாகவுள்ள பழைய உருவங்களில் அன்பர்கள் தாங்கள் விரும்பு மொன்றை வழிபடலாம்; சனத் குமாரர், லாயோட்ஸி, கன்புஸியஸ், வான்மீகி, திருமூலர் முதலியோர் ஓவியங்களை வழிபட்டு வரலாம். மெய்ஞ் ஞானிகளை வழிபடுவதும், அவர்கள் ஓவியங்களை வழி படுவதும் ஒன்றேயாகும்.

நீதி

இனி நீதியை நினைப்போம். நெஞ்சில் ஏதேனும் உறுகிறதா? ஒன்றையுங் காணோம். நெஞ்சு சூன்யமாகவே இருக்கிறது. நீதியுடைய ஒருவரை நினைப்போம். நெஞ்சில் அவர் உருவம் நிற்கிறது. நீதியும் ஓர் உருவின் வாயிலாகவே தன்னை உணர்த்துவது. காதலும் வீரமும் அழகும் அறிவும் தெய்வக் கூறுகளாகப் பொலிவதுபோல, நீதியும் தெய்வக் கூறாகவே பொலிவது. கடவுள் நீதியாயிருப்பது; நீதிபதியா யிருப்பது.

இன்னவுரு இன்ன நிறம் என்றறிவ தேலரிது நீதிபலவும்
தன்னவுரு வாமென மிகுத்ததவன்.


இது திருஞானசம்பந்தர் திருப்பாட்டு. இதன் கண் கடவுள் நீதி வடிவம் என்னும் உண்மை ஒளிர்தல் காண்க.

நீதியின் சிறப்பு

ஒருவன் கற்றவனா யிருக்கலாம்; கொடையாளியா யிருக்கலாம்; கோயில் பற்றுடையவனா யிருக்கலாம்; யோகப் பயிற்சியில் தலைப்பட்டவனா யிருக்கலாம். அவனிடத்தில் நீதியொழுக்கம் ஒன்றில்லாவிடின், அவனுடைய மற்றக் குணங்களால் பயன் விளையாது. நீதியுள்ள இடத்தில் மற்றக் குணங்களெல்லாம் தாமே மருவும்; அவைகளால் விளையத்தக்க பயனும் விளையும். சீலங்களுள் சிறந்த ஒன்று நீதி யோகம் முதலியன செய்து உய்யும் வழி காண முயன்று முயன்று வருந்துவதைப் பார்க்கிலும், அன்றாட வாழ்க்கையில் – தொழில் முறைகளில் – பிறவற் றில் – நீதியாக நடந்து வருவது சிறப்பு.

வன்றொண்டர்

வன்றொண்டப் பெருந்தகையாரது வரலாறு உங்களுக்குத் தெரியும். அவர் கடவுளிடத்து அன்பு செலுத்திச் செலுத்திக் கடவுள் வாயிலாகவே பெண், பொன், நெல் முதலியன பெற்று வாழ்ந்தவரென்றும், கடவுளைத் தோழராகப் பெற்றவரென்றும் சுருங்கச் சொல்லலாம். இப் பெருமை வாய்ந்த வன்றொண்டர் திருவொற்றியூரில் ஒரே முறை தாம் கூறிய உறுதிமொழியினின்றும் வழுக்கி வீழ்ந்தார். கடவுள் அன்பு என்ன செய்தது? அது நீதியாய் அடியவர் கண்களை மறைத்தது. அன்று முதல் வன்றொண்டர் ஒரு பாடங் கற்றுக்கொண்டனர்; தம் தோழர் கடவுள் நீதியாகவும் இருக்கிறார் என்பதை நன்கு உணர்ந்து நடக்க லாயினர். அன்று தொட்டு அவர் அருளிய பாடல்களில் கடவுள் நீதியில் சீலமாயிருத்தலைக் குறிப்பிட்டே வந்தனர்.

மானை நோக்கியர் கண்வலைப் பட்டு
வருந்தி யானுற்ற வல்வினைக் கஞ்சித்
தேனை யாடிய கொன்றையி னாயுன்
சீல முங்குண முஞ்சிந்தி யாதே
நானு மித்தனை வேண்டுவ தடியேன்
உயிரொ டுநர கத்தழுந் தாமை
ஊன முள்ளன தீர்த்தருள் செய்யாய்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே.

விண்பணிந் தேத்தும் வேதியா மாதர்
வெருவிட வேழமன் றுரித்தாய்
செண்பகச் சோலை சூழ் திரு முல்லை
வாயிலாய் தேவர் தம் அரசே
தண்பொழி லொற்றி மாநக ருடையாய்
சங்கிலிக் காஎன்கண் கொண்ட
பண்பநின் னடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.

ஆலந் தானுகந் தமுதுசெய் தானை
ஆதி யை அமரர்தொழு தேத்துஞ்
சீலந் தான் பெரிதும் உடை யானைச்
சிந்திப் பாரவர் சிந்தையு ளானை
ஏல வார்குழ லாளுமை நங்கை
என்று மேத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பனெம் மானைக்
காணக் கண்ணடி யேன்பெற்ற வாறே.

குறைவிலா நிறைவே குணக்குன்றே
கூத்தனே குழைக்கா துடையானே
உறவிலேன் உனையன்றி மற்றடியேன்
ஒரு பிழை பொறுத்தா லிழிவுண்டோ
சிறைவண் டார்பொழில் சூழ்திரு வாரூர்ச்
செம்பொனே திருவா வடுதுறையுள்
அறவனே யெனை அஞ்சலென் றருளாய்
யாரெனக் குறவமரர்க ளேறே.

இப்பாக்களில் நீதிச் சீலம் வலியுறுத்தப்பட் டிருத்தல் காண்க.

விருஷபதேவரும் புத்தரும்

இவ்வுலகில் நீதிச் சீலத்தை அறிவுறுத்திய பெருமை பலர்க்கு உண்டு. ஆனாலும், சிறப்பாக அப்பெருமை விருஷப தேவர்க்கும் புத்தருக்குமே உண்டு. அவ்விருவரும் நீதி வடிவம் என்று கூறுதல் மிகையாகாது. அவர்களைப் போற்றுவது நீதியைப் போற்றுவதாகும். அவ்விருவர் ஓவிய உருவங்களில் உளத்தை ஒன்றவைத்து நோக்கினால், அவைகளில் நீதி பொழிதலை உணரலாம். நீதிச் சீலமயமா யிலங்கும் அவ்வறவோரின் ஓவியங்களை வழிபட்டால் உள்ளம் நீதிவண்ண மாகும். [1] நீதியுள்ளம் தெய்வக் கோயிலாதல் ஒருதலை.

–——————————-
[1]  உள்ளத்து ளோமென ஈசன் ஒருவனை
உள்ளத்து ளேயங்கி யாய ஒருவனை
உள்ளத்து ளே நீதி யாய ஒருவனை
உள்ளத்து ளேயுடல் ஆகாய மாமே.
பூதக்கண் ணாடியிற் புகுந்திலன் போதுளன்
வேதக்கண் ணாடியில் வேறே வெளிப்படு
நீதிக்கண் ணாடி நினைவார் மனத்துளன்
கீதக்கண் ணாடியிற் கேட்டு நின் றேனே.       – திருமூலர்

-——————————-

விரும்பும் உருவம்

வழிபாட்டுக்கு அவரவர் தம் தம் மனம் விரும்பும் ஓர் ஓவிய உருவத்தைக் கொள்ளலாம். எவரும் தாம் கொண்டதை உயர்த்தியும், பிறர் கொண்டதைத் தாழ்த்தியும் பேசலாகாது. இரண்டும் தத்துவத்தில் ஒன்றே யாதலால், ஓர் உருவத்தை நிந்திப்பது மற்றோர் உருவத்தையும் நிந்திப்பு தாகும். ஓவிய உருவங்களில் உயர்வு தாழ்வு கருதும் நெஞ்சம் ஓவிய நுட்பம் உணர்ந்ததாகாது. அதற்கு ஓவியம் புலனாகாது; வெறும் பிண்டமே புலனாகும். ஒருவித மண்ணால் பலதிறப் பாண்டங்கள் வனையப்படுகின்றன. அவைகளுடைந்தால் அம்மண்ணே ஆகும். மூலமண்ணில் உயர்வு தாழ்வு கற்பிப்பது அறிவுடைமையாகுமா? ஓவிய உருவங்கள் தத்துவ அறிகுறிகளாக அமைந்தன. ஓர் ஓவியம் என்ன நுட்பத்தை அறிவுறுத்துகிறதோ, அதே நுட்பத்தை மற்றோர் ஓவியமும் அறிவுறுத்தும். இவ்விரண்டின் மூலத்தில் என்ன வேற்றுமை இருக்கும்? ஒருவன் முருகனைத் தொழுகிறான்; இன்னொருவன் அரங்கநாதனை வணங்குகிறான்; மற்றொருவன் கண்ணனைப் போற்றுகிறான். இவ் வுருவ வேற்றுமை எதுவரை? புறமனங் குவியும் வரை. பின்னே முருகன் எங்கே? அரங்கன் எங்கே? கண்ணன் எங்கே? முருகன் மயிலும் வேலும் விந்து நாத மாகின்றன; அரங்கன் பாற்கடலும் அரவணையும் விந்து நாதமாகின்றன; கண்ணன் புன்னையும் குழலும் விந்து நாத மாகின்றன. விந்து நாதம் பலப் பலவா? இல்லை. ஒரே விந்து, ஒரே நாதம். அவை ஓவியத்தில் பல உருவங்கள் பெறுகின்றன. இதற்குக் காரணம் மக்களின் மனோநிலை பலவிதமா யிருப்பதாகும். ஒவ்வொரு மனம் ஒவ்வொன்றில் ஈடுபடும். அதனால் தத்துவங்கள் ஓவியத்தில் பலதிற உருவங்கள் பெறுகின்றன. இந் நுட்பத்தைக் கலையால் உணர்ந்த பின்னர் வழிபாட்டிற் புகுவது நலம். நுட்பங்களை உணர்தற்கென்றே பலதிறக் கலைகள் தோன்றியுள்ளன.

காரியம் பல – காரணம் ஒன்று

ஒரேவிதப் பொன் பலவித அணிகளாகச் செய்யப் படுகிறது. அணிகள் உருக்கப்பட்டால் அவைகள் பழையபடி பொன்னே ஆகும். பலவிதப் பனிக்கட்டிகள் நீராகவும் ஆவியாகவும் மாறுங்கால் அவைகளில் பலவிதம் காணப் படுவதில்லை. இவைகளைப்போலவே ஓவிய உருவம் மனங் குவிந்து ஒடுங்கும் போது தத்துவமாகும்; தத்துவம் ஒளி யாகும்; ஒலியாகும். இந்நிலைகளில் ஓவிய உருவம் ஏது?

கோயில்

ஓவிய உருவங்கள் முதல் முதல் மரத்தடியில் வைக்கப் பட்டன. பின்னே நாகரிகம் முதிர முதிர,  சிற்பம் வளர வளர, ஆகமம் பெருகப் பெருக, மரத்தடிகள் மாளிகைகளாய் மண்டபங்களாய்க் கோபுரங்களாயின இவைகளெல்லாம் சேர்ந்த ஒன்றே கோயில் என்று அழைக்கப் பட்டது. ஓவியக் கூடங்கள் கோயிலாயின என்று சொல்லலாம். நாளடைவில் வேறு பல கலைகளும் கோயில்களில் இடம் பெறலாயின. இடைக்காலத்தில் நமது நாட்டுக் கோயில்கள் கலைக்கூடங்களாயின என்று கூறல் மிகையாகாது. பிற நாட்டுக் கோயில்கள் இம் முறையில் பெருகவில்லை.

முதலில் அரசன் – இறைவன் – உள்ள வீடு கோயில் என்ற வழக்குப் பிறந்தது; பின்னே எல்லாவற்றிற்கும் எல்லாருக்கும் அரசனாக – இறைவனாக – உள்ள ஆண்டவனிருப்பிடம், கோயில் – திருக்கோயில் – என்று அழைக்கப் பட்டது. இதை உலகம் ஏற்கலாயிற்று.

எங்குமுள்ள ஆண்டவனுக்கு ஒரு தனியிடம் எற்றுக்கு? ஆண்டவன் எங்குமுள்ளவன் என்பதில் ஐயமில்லை. ஏறக்குறைய எல்லா மதங்களும் ஆண்டவன் எங்குமுள்ளவன் என்றே இயம்புகின்றன. இவ்வாறு இயம்பும் மதங்களெல்லாம் குறிப்பிட்ட ஓரிடத்தைக் கோயிலாக்கொண்டு வழிபாடு நிகழ்த்தி வருகின்றன. எக்காரணம் பற்றியும் உருவ வழிபாடு கூடாது என்று அறைகூவும் மதங்களும் நாற்பாங்கு எல்லையில் சுவரிட்ட ஓரிடத்தைத் தொழுகைக் கென்று ஒதுக்கி வைத்துள்ளன. குறிப்பிட்ட ஓரிடத்தைக் கோயிலாக் கொண்டதற்கு மதங்கள் கூறுங் காரணங்கள் பலப்பல. தத்துவ முறையிலும் பிற வழிகளிலும் காரணங்கள் சொல்லப்படுகின்றன. எளிய முறையில் இங்கொன்று சொல்ல விரும்புகிறேன்.

நல்லெண்ணப் பெருக்கு

மக்களிடத்தில் நல்லெண்ணமும் பிறக்கிறது; தீய எண்ணமும் பிறக்கிறது. எது பெருகல் வேண்டும்? எது அருகல் வேண்டும்? முன்னையது பெருகல் வேண்டுமென்றும் பின்னையது அருகல் வேண்டுமென்றும் எவருங் கூறுவர்.

ஆனால், பெருகலும் அருகலும் வாழ்க்கையில் எப்படி நடக்கின்றன? முற்றும் மாறாகவே நடக்கின்றன. அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தில் நல்லெண்ணத்தைப் பெருக்கும் வாய்ப்பு மிகமிகச் சிலர்க்கே கிடைக்கிறது. பெரும்பான்மையோர்க்கு அவ்வாய்ப்புக் கிடைப்பதில்லை. தீய எண்ணப் பெருக்கினின்றும் விடுதலையடைய மக்கள் விரும்புகிறார்கள்; முயல்கிறார்கள்; இயலாமை குறித்து வருந்துகிறார்கள். இவ்வுண்மை கண்ட அறிஞர் நல்லெண்ணப் பெருக்குக் கென்று ஓர் அமைப்புக் கண்டனர். அதுவே கோயில்.

ஒருவர் ஒரு திங்கள் கோயிலுக்குப் போய் வருகிறார்; மற்றொரு திங்கள் மாஜிஸ்டிரேட் கோர்ட்டுக்குப் போய் வருகிறார். இரண்டமைப்புக்களில் எது நல்லெண்ணத்தைப் பெருக்குகிறது என்று அவரைக் கேட்டால் உண்மை விளங்கும். நல்லெண்ணத்தை வளர்க்கும் அமைப்பு கோயிலென்றே அவரது அனுபவம் அறிவுறுத்தும். இவ்வனுபவத்தை எச்சமயக் கோயிலும் உண்டாக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. கோயில் எச்சமயத்தினதாயினும் ஆக; எந் நாட்டினதாயினும் ஆக; எச் சமூகத்தினதாயினும் ஆக. அது நல்லெண்ணத்தை வளர்ப்பதற்கென்று ஏற்பட்ட தென்க.

கோயில் வழிபாடு ஆங்காங்கே முறைப்படி நடைபெற்று வரின் மக்கள் பால் நல்லெண்ணம் பெருகும். அதனால் குடும்பம் நல்லதாகும்; ஊர் நல்லதாகும்; கோட்டம் நல்லதாகும்; உலகம் நல்லதாகும்; எங்கும் அமைதி நிலவும்; சகோதரநேயம் ஓங்கும்; கலைகள் வளரும்; ஆண்டவன் அருளே ஆட்சி புரியும். இத்துணைச் சிறப்பு வாய்ந்த கோயில் வழிபாடு குன்றினால், மக்கள் நிலை என்னவாகும்? குடும்பம், ஊர், கோட்டம், நகரம், நாடு, உலகம் ஆகியவற்றின் நிலைகள் என்னவாகும்? எங்கணும் தீய எண்ணப் பேய் ஆட்சி புரிந்து போராட்டத்தைப் பெருக்கும்.

தத்துவ அமைப்பு

கோயில் வெறுங் கட்டடமன்று. அது தத்துவ அமைப்பு. தத்துவ நுட்பமுணர்ந்து கோயில் வழிபாடு நிகழ்த்துவது அறிவுடைமை. தத்துவ நுட்பங்களைக் கலைகளால் உணரலாம். அமைப்பின் நுட்பந் தெரியாது அதைச் சுற்றிச் சுற்றிக் கும்பிட்டு வந்தால், அது கல்லாக – மண்ணாக – வேடிக்கையாகவே – தோன்றும்.

குறிகளும் அடை யாளமுங் கோயிலும்
நெறி களும் அவர் நின்றதோர் நேர்மையும்
அறிய ஆயிரம் ஆரணம் ஓதினும்
பொறியி லீர்மனம் என்கொல் புகாததே.

என்று அப்பர் அருளிய கோயிற் பாட்டைப் பார்க்க.

குறி – அடையாளம் – கோயில் – நெறி – முதலியன நுட்பங்கள் வாய்ந்தன. அவைகளின் உள்ளுறை தெரிந்து வழிபாடு நிகழ்த்தினால், அவைகளால் விளையத்தக்க பயன் விளையும். கோயில் அமைப்பின் உள்ளுறை உணராது, உதட்டளவில் ஆயிரக்கணக்கில் மறைகளை முழக்குவதால் என்ன பயன் விளையும்? இவ்வாறு வெறும் முழக்கஞ் செய்வோரைப் பொறியிலீர் ‘ என்று பொறுமைப் பொருள் விளிக்கிறது.

வாயால் வேதங்களை ஓயாமல் ஓதுவதால் மட்டும் பயன் விளையா தென்பதும், அவ்வேதத்திலுள்ள தத்துவங்கள் கோயிலாக அமைந்துள்ள நுட்பம் மனம் புகுதல் வேண்டு மென்பதும், அப்பொழுதே குறிகளும், அடையாளமும், கோயிலும், நெறிகளும். ‘ அவர் நின்றதோர் நேர்மையும் இனிது விளங்குமென்பதும் அப்பர் கருத்து.

நமது உடல் ஒரு பெருங்கோயில். அதன் உட்கோயில் உள்ளம். உள்ளத்தின் உட்கோயில் உயிர். உயிர்க்கு. உயிராயிருப்பது பரம்பொருள். உடல் உள்ளம் முதலிய உறுப்புக்கள் தத்துவங்களால் ஆக்கப்பட்டவை. உயிர் இத்தத்துவங்களில் வீழ்ந்து அவ்வம்மயமாய்க் கிடக்கிறது. அது படிப்படியே தத்துவங்களினின்றும் நீங்கி நீங்கிப் பரம்பொருளில் கலந்து ஒன்றுபட்டு அதுவாகும். உயிர் எப்படிப் பரம்பொருளாகும்? அதற்குரிய முயற்சி ஏதேனும் உண்டா? உண்டு. அஃது எது? அதுவே வழிபாடென்பது. இன்னோரன்ன உண்மைகளைக் கண்டவர்கள் அநுபூதிமான்கள்.

உடற் கோயில்

அநுபூதிமான்கள் புற வழிபாட்டால் அக வழிபாடு ஆக்கமுறுவதை அறிந்தார்கள்; அக வழிபாட்டால் உடலும் உள்ளமும் உயிரும் கோயிலாதலையும், உயிர் பரமாதலையும் உணர்ந்தார்கள். அவர்கள் தாங்கள் கண்டதை மந்திர மொழிகளாகத் தந்து சென்றார்கள். எல்லாவற்றிற்கும் அடிப்படை புற வழிபாடு. புற வழிபாடு நிகழ்த்தற்குரிய இடம் புறக் கோயில். புறக் கோயில் அமைப்பை ஆராய ஆராய, அஃது உடற்கோயிலின் பரிணாமமென்பது நன்கு தெரியும். இதற்கு அநுபூதிமான்கள் அருளிய மந்திர மொழிகள் சான்றுகளாக நிற்கின்றன.

[*] ஊனி லுயிர்ப்பை ஒடுக்கி யொண்சுடர்
ஞான விளக்கினை யேற்றி நன்புலத்
தேனை வழிதிறந் தேத்து வார்க்கிடர்
ஆன கெடுப்பன அஞ்செ ழுத்துமே.

[1] அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்.

[2] காயமே கோயி லாகக் கடிமனம் அடிமை யாக
வாய்மையே தூய்மை யாக மனமணி இலிங்க மாக
நேயமே நெய்யும் பாலா நிறைய நீர் அமைய ஆட்டிப்
பூசனை ஈசனார்க்குப் போற்றவிக் காட்டி னோமே.

[3] உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே.

——————————-
[*] சம்பந்தர். [1]. பூதத்தாழ்வார். [2].அப்பர். [3] திருமூலர்.

–——————————-

இம் மறைமொழிகளால் புறக்கோயிலுக்கும் அகக் கோயிலுக்கும் உள்ள தொடர்பு செவ்வனே விளங்குகிறது. ‘சிவக்ஷேத்திராலய மகோற்சவ உண்மை விளக்கம்’ என்றொரு நூல் சதாவதானம் – யாழ்ப்பாணம் – நா.கதிரைவேற் பிள்ளை அவர்களால் இயற்றப்பட்டது. அதில் பல நுட்பங்கள் லிளக்கப்பட்டுள்ளன.

நமது அருமை உடல் கோயிலாகப் பரிணமித்திருக்கிறது. இக்கோயிலை நாம் எப்படிப் பாதுகாத்தல் வேண்டும்? உயிர் என்றே பாதுகாத்தல் வேண்டும். அதன் ஒரு கல் ஓர் எலும்பு போன்றது. எலும்பை நொறுக்கவோ பறிக்கவோ நாம் ஒருப்படுவோமா? கோயிலின் ஒவ்வோர் உறுப்பும் பாதுகாக்கப்படல் வேண்டும். கோயில் நமது உடல். உடலை ஓம்புவது போலவே கோயிலையும் நாம் ஓம்புதல் வேண்டும்.

புறக்கோயி லிருக்கிறது; அகக்கோயிலிருக்கிறது; ஆன்றோர் மறைமொழிகள் இரண்டையுந் தொடர்பு படுத்தி நிற்கின்றன. நமக்கென்ன குறை? நாம் செய்ய வேண்டுவதென்னை; வழிபாடு; ஒழுங்குப்பட்ட வழிபாடு; நேரிய வழிபாடு; ‘ வித்தகம் பேசவேண்டா பணி செய்யவாரும்.’

வழிபாட்டுப் பயன்

தில்லைக் கோயிலில் மணி யடிக்கிறது. கந்தன் வழிபாட்டுக்குப் புறப்பட்டான். அவன் நெஞ்சம் கோயிலில் உள்ளுணர்வும் வழிபாடும் ஈடுபட்டது. தீய எண்ணம் இடம் பெறாது ஒதுங்கி நிற்கிறது. அவன் கால்கள் நடக்கின்றன. கோபுரம் காட்சி யளிக்கிறது. கோபுரம் வானோக்கி நிற்கிறது. நெஞ்சம் உயர்நோக்கிற் செல்கிறது. தீர்த்தம் காணப்படுகிறது. தண்மையும் சாந்தமும் நெஞ்சிற் படிகின்றன. கந்தனால் சில கடன்கள் ஆற்றப்படுகின்றன. பின்னே அவன் கோயிலில் நுழைகிறான். மதில்களும் மண்டபங்களும் பரந்த உணர்ச்சியை ஊட்டுகின்றன. தீபமாலைகளும், மலர்மாலைகளும், குவிந்த கைம்மாலைகளும் உள்ளத்தைத் தூய்மையில் நிறுத்துகின்றன. நடராஜ ஓவியம் கண்ணில் நுழைகிறது.

[*] குனித்த புருவமுங் கொவ்வைச்செவ் வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியிற் பால் வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தே இந்த மாநிலத்தே

–——————————-
[*]       -அப்பர்.

——————————-

என்னும் பாட்டை ஓர் அன்பர் பாடுகிறார். பாட்டு, காதின் வழி நுழைகிறது. இரண்டோவியமும் ஒன்றிப் புலன்களைக் கவர்ந்து புந்தியில் புகுகின்றன. கந்தனை அமைதிப் பெண்மை மணந்தது. அமைதியுடன் கந்தன் வீடு சேர்கிறான். இவ்வாறு அவன் நாடோறும் வழிபாடு செய்து வரலானான். கந்தன் இருக்கும் போதும், நிற்கும் போதும், நடக்கும் போதும், தொழில் புரியும்போதும், உண்ணும் போதும், உறங்கும்போதும் அவன் நெஞ்சம் கோயிலின் உயிர் ஓவியத்தை மறப்பதில்லை. நாளுக்கு நாள் அவன் மனங் குவிந்து குவிந்து நிலை பெறலாயிற்று. அவன் உள்ளங் கோயிலாயிற்று. அவன் அசைவற்ற ஓவியமானான். இந் நிலையை யான் எப்படிப் பேசிக்காட்டுவன்! இயலவில்லை. இப் பெருநிலையைச் சேக்கிழார் எழுத்தோவியத்தில் காட்டுகிறார்; பாருங்கள்:

ஐந்துபேர் அறிவுங் கண்களே கொள்ள
அளப்பருங் கரணங்கள் நான்கும்
சிந்தையே ஆகக் குணம் ஒரு மூன்றும்
திருந்து சாத் துவிகமே ஆக
இந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த
எல்லையில் தனிப்பெருங் கூத்தின்
வந்தபேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்.

இஃது எழுத்தா? பாட்டா? ஓவியமா? யோகமா? முத்தியா? என்ன? சுத்தரமூர்த்தியை அணுகல் வேண்டும்; சேக்கிழாரைச் சேரல் வேண்டும். சொலற்கரிய ஒரு நிலையைக் கூட்டியது எது? கோயில் – ஓவிய உருவம் – வழிபாடு. நடராஜன் நன்றுடையான்; தீயதில்லான். அவனை வழிபடும் நெஞ்சமும் நன்றுடையதாகும் : தீயதில்லாததாகும். கோயில் நலனை உன்னுங்கள்.

தில்லையில் கோவிந்தன் என்றோர் அன்பனிருந்தான். அவனும் நாடோறும் கோயில் சென்று திரும்புவான். அவன் அரங்கன் ஓவிய உருவைக் காண்பவன்.

[*] பச்சைமா மலைபோல் மேனி பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே.

-——————————-
[*]       தொண்டரடிப்பொடி ஆழ்வார்.
——————————-


என்னும் திருப்பாட்டை ஓதுவன். அவ்வுருவும் இப் பாட்டும் ஒன்றுபட்டு அவனைப் படிப்படியே நாளுக்குநாள் அமைதிப் பெண்மையை மணக்கச் செய்தன.

கந்தனும் கோவிந்தனும் ஒருநாள் சந்தித்து ஓரிடத்தில் அமர்ந்தனர். இருவரும் தன் தன் அனுபவத்தைச் சொல்லிச் சொல்லி அளவளாவினர்; இருவர் அனுபவமும் ஒன்றாயிருத்தலை யுணர்ந்து ஆனந்தமடைந்தனர்;

‘குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயும் குமிண் சிரிப்பும், பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும், இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும்’ – ‘பச்சைமா மலைபோல் மேனியும் பவளவாயும் கமலக் கண்ணும் – புறமனம் குவிந்து ஒடுங்கி நடுமனமாகியதும் மறைவதையும், ஒரேவிதத் தத்துவக் கூறுகளாவதையும், நடுமனம் அடிமனமாகும் போது தத்துவக் கூறுகளெல்லாம் ஒன்றாகி ஒளியாய் ஒலியாய் உள்ளொளியை உணர்த்துவதையும் தெளிந்து, மதபேதங்களின் மடமையை ஒளித்துச் சமரச சன்மார்க்கத்தை உலகுக்குப் போதிக்கத் தொடங்கினர்.

வழிபாட்டின் நுட்பம்

தத்துவ அமைப்புக் கோயில் என்று அடிக்கடிச் சொல்ல வேண்டுவதில்லை. அதை முற்றும் இங்கே விளக்கல் இயலாது. தத்துவ முறைகள் ஒல்லும்வகை முன்னே விளக்கப்பட்டன. மாயாகாரிய தத்துவம் நாதம் முதல் மண்வரை என்றும், மண்முதல் நாதம்வரை என்றும் சொல்லப்படுவது வழக்கம். தத்துவம் நாதத்தில் தொடங்கிப் படிப்படியே பருத்துப் பருத்து மண்வரை விரியும்; மீண்டும் மண்ணிலிருந்து படிப்படியே நுணுகி நுணுகி நாதம் வரை சென்று ஒடுங்கும். [1]நாதத்துக்கு அப்பால் தத்துவம் கிடையாது. அங்கொளிர்வது பரவெளி. இத் தத்துவ முறைகளை உளங்கொண்டு, கோயில் வழிபாட்டின் நுட்பத்தைச் சிந்தித்தால், அகப்புற நுட்பங்கள் இனிது விளங்கும்.

——————————-
[*] நாதமே ” [1]நாதாந்த வெளியே; மாதத்திலே … விந்து
நாதத்திலே அடங் காதந்த வான் பொருள் நாடிக்கொள்ளே
      – தாயுமானார்.
——————————-

கோயில் வழிபாட்டின் முதலையும் முடிவையும் பார்ப்போம். முதலிலும் முடிவிலும் பிற அடங்கிவிடும். முதலில் மணியோசை முழங்குகிறது. இடையில் பல நிகழ்கின்றன. முடிவில் மந்திர ஒலி முழங்குகிறது. வழிபாடு நாதத்தில் (மணியோசையில்) தொடங்கிப் பலவாறு விரிந்து, மீண்டும் நாதத்தில் (மந்திர ஒலியில்) ஒடுங்குகிறது. நாதத்துக்கு அப்பால் பரம்பொருளின் அறிகுறியாக ஓவிய உருவம் பொலிகிறது. அவ்வோவியத்தைத் தியானிக்கத் தியானிக்க அஃது ஒளியாகும். அதுவே உள்ளொளி என்பது. இவ்வொளியை விளங்கச் செய்வது எது? கோயில் வழிபாடு. கோயில் வழிபாடு மனமாசகற்றி, நல்லெண்ணத்தைப் பெருக்கி, உயிரை ஒளி பெறச் செய்வது கருதற்பாலது.

கோயில் நிலை

‘இதுகாறும் நீங்கள் பேசியது தத்துவம். இந்நாளில் கோயில் நிலை எப்படி இருக்கிறது? அதைச் சிறிது சொல்லக் கூடாதா?’ என்று உங்களிற் சிலராவது நினையாம லிரார். கோயில் நிலை எப்பொழுதும் ஒரே தன்மையதா யிருக்கும். அதில் மாறுதல் எப்படி நிகழும்? கோபுரம் மாறுதலடையுமா? மாளிகை மாறுதலடையுமா? மூலத் தானத்திலுள்ள ஓவியம் மாறுதலடையுமா? அவை ஒரு தன்மையனவாகவே இருக்கும். பின்னை, மாறுதலுறும் இடம் எங்கே? மக்கள் மனோநிலையில் மாறுதலுறுகிறது. காலக் கல்வியும் நாகரிகமும் பிறவும் மக்கள் மனோ நிலையை மாற்றிக்கொண்டே இருக்கும். தோழர்களே! மாற்றம் எங்கே உறுகிறது? உன்னுங்கள்! கோயிலிலா? மக்கள் மனோநிலையிலா? மாற்றம் கோயிலில் உறுவதாகக் கருதி அதை வைவது அறியாமை.

கிறிஸ்து பெருமான் தாங்கண்ட கோயிலைக் [1] கள்ளர் குகை என்றார். கோயிலை இன்னும் பலவாறு ஏசினோருமுளர். கோயிலா தன்னைக் கள்ளர்குகை யாக்கிக் கொண்டது?


-——————————-
[1] என் வீடு சகல ஜாதியாருக்கும் ஜெபவீடெனப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைக் கள்ளர் குகை யாக்கினீர்களே என்று சொன்னார் – மார்க்கு: 11: 17.

-——————————-

கோயிலா தன்னை ஏசுதலுக்கு இடமாக்கிக்கொண்டது? நடுநிலையில் நின்று உண்மை காண முயலுங்கள். பொல்லாத கல்வி பயின்று, நீச நாகரிகத்தில் வீழ்ந்து திரியும் கள்ளர், ‘ கோயிலைக் கள்ளர்குகை’ யாக்கினர்; கோயிலைக் கெடுத்தனர். குற்றம் யாருடையது? மக்களுடையதா? கோயிலுடையதா? மாற வேண்டுவது மக்கள் மனோநிலை. இதற்கு இக்காலக் கல்விமுறை, நாகரிகம், முதலியன மாறுதல் வேண்டும்.

மாற்றும் வல்லமை

மாறுதல் நிகழ்த்தும் வல்லமை பலரிடத்தில் அமையாது. அது மிகச் சிலரிடத்தே அமையும். அச் சிலரும் கோயில் வழிபாட்டைச் செய்து தம்மிடத்துள்ள இச்சா – கிரியா – ஞான – சக்திகளை எழுப்பித் தொண்டில் இறங்குவது நல்லது. கோயில் வழிபாடு சக்திகளை எழுப்புமா என்று எவரும் ஐயுற வேண்டுவதில்லை. கோயில் அமைப்பிலேயே இயற்கையாக நல்ல சக்தி பொருந்தி இருக்கிறது. அது வல்லாமல் வேறு சக்திகளும் அங்கே திரண்டுள்ளன. அவைகளில் குறிப்பாக இரண்டொன்றை இங்கே சொல்கிறேன்.

சக்தி திரளல்

கோயில் அமைப்புத் தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுக ளாயின. இத்துணை ஆண்டுகளாகப் பலகோடி மக்கள் ஆங்காங்குள்ள ஓவிய உருவத்தை (அர்ச்சாவதாரத்தை) நோக்கி, ‘தெய்வமே’  என்று நினைந்தும், வாழ்த்தியும் வணங்கியும் இருக்கிறார்கள். அவர்களது தெய்விக எண்ணங்கள் ஓவியத்தில் படிந்து ஒன்றுடன் ஒன்று ஒன்றி ஒன்றித் தெய்விகச் சக்தி பெற்றுள்ளன. நன்மக்கள் நோக்கினின்றுந் திரளுஞ் சக்தியைப் பார்க்கிலும் ஞானிகள் நோக்கினின்றுந் திரளுஞ் சக்தி வல்லமை வாய்ந்தது; இச் சக்தியினுங் குருமார் நோக்கினின்றும் பிறப்பது சொல்லொணா ஆற்றல் வாய்ந்தது.

நம் நாட்டு ஞானிகளும் குருமார்களும் தங்கள் ஆன்ம நலனை மட்டுங் கருதி வாழ்ந்தவர்களல்லர். அவர்கள் தாங்கள் பெற்ற இன்பத்தை மற்றவரும் பெறுதல் வேண்டும் என்ற கருணையில் மூழ்கியவர்கள். அவர்கள் நூல்களை அருளினார்கள்; கோயில்களுக்குச் சென்று வழிபாடு நிகழ்த்தினார்கள். அவர்களது தெய்விகச் சக்தி நூல்களிலும், கோயில்களிலும் இறங்கியுள்ளது.

மக்களிடத்துள்ள தெய்விகச் சக்தி ஒடுங்கிக் கிடக்கிறது. அச்சக்தி இடையறாத கோயில் வழிபாட்டால் எழுச்சி பெறும். மக்களிடத்து இயல்பாக அமைந்துள்ள தெய்விகச் சத்தியை எழுப்புதற்குக் கோயில் வழிபாடு ஒரு கருவி. கோயில் வழிபாட்டால் எழுந்து பொங்கிப் பெருகுஞ் சக்தியைப் பெற்றவர் நோக்கு எங்கெங்கே பொருந்திப் படிகிறதோ, அங்கங்கெல்லாம் அந்நோக்கின் வாயிலாக அவரது சக்தியும் இறங்கிப் படியும்; சிறப்பாகக் கோயிலில் நன்கு படியும்; பசுமரத்தாணி போல் படியும். சக்தியை எழுப்புதற்குக் கோயில் கருவியாயிருப்பதால், அதனிடம் சக்தி விரைந்து நன்கு படிந்து சூழ்ந்து நிற்கும். இதுபற்றிய விரிவுரை ஈங்கு வேண்டுவதில்லை.

எண்ணத்தின் ஆற்றல்

தமிழ்நாட்டில் தோன்றிய நால்வரும், பன்னிரண்டு ஆழ்வாரும் தெய்வத் திருவருட் சக்திமயமானவர்; எல்லாம் வல்லவர். அவர் என் செய்தனர்? அவர் தமிழ் மறைகளை உலகுய்யத் தந்தனர். எம்முறையில் தந்தனர்? திருப்பதிகளிலுள்ள ஓவிய உருவைப் போற்றும் வாயிலாகத் தமிழ் மறைகளைத் தந்தனர். அவர் திருப்பதிகளை நேரே சென்றும் பாடினர்; நேரே செல்லாமலும் பாடினர். அவரால் பாடப் பெற்ற திருப்பதிகளின் தொகை ஆயிரத்து நூற்றுப் பதினாறு (ஆயிரத்தெட்டும் நூற்றெட்டும்). அக்குருமார் அருளிய மறைமொழிகட்கு எவ்வளவு ஆற்றல் உண்டோ, அவ்வளவு ஆற்றல் அவர்தம் திரு நோக்கம் பெற்ற கோயில் கட்குமுண்டு. அக்கோயில்களை விடுத்து அவரது நல்லெண்ணங்கள் நீங்கவே மாட்டா. உலகிலுள்ள தீமைகளெல்லாந் திரண்டு ஓருருக்கொண்டு அக்கோயில்களைத் தாக்கினாலும், ஆங்குள்ள நல்ல எண்ணங்கள் அசையமாட்டா; அகலமாட்டா. அத் தீமைகளை யெல்லாம் நீறாக்கும் ஆற்றல் பெரியோர் நோக்குப் படிந்த கோயில்களுக் குண்டு. மலைகள் அழியலாம்; கடல்கள் அழியலாம்; உலகம் அழியலாம்; திங்கள் அழியலாம்; ஞாயிறு அழியலாம்; பிற அழியலாம்; [1] பெரியோர் எண்ணங்கள் அழியா. கோயில் கட்டிடங்கள் அழிந்தாலும் அவைகளைச் சூழ்ந்துள்ள நல்லெண்ணங்கள் அழியா. அவை மீண்டும் ஒரு காலத்தில் கோயிலாகும். கோயில் கல்லன்று; மண்ணன்று; சுண்ணமன்று, அஃது எண்ணம்; நல்லெண்ணம்; சக்தி வாய்ந்த எண்ணம்; தெய்விகச் சக்தி வாய்ந்த எண்ணம். அவ்வெண்ணம் இந்நாளிலும் தியானத்திற் சிறந்த அன்பர்கட்குப் பெருஞ் சக்தியை – உலகைத் திருத்தும் வல்லமையை – கடவுட் டன்மையை – வழங்கியே வருகிறது.

இன்னலைப் போக்க

இத்துணைச் சிறப்புவாய்ந்த கோயில் வழிபாடு இடையீ டின்றி வளர்ந்தோங்கல் வேண்டும். அதற்கு [2] முட்டு நேரின் உலகம் இன்னலுறும். அவ்வின்னலைப் போக்கவும் வழிபாட்டையே கடைப்பிடித்தல் வேண்டும். வழிபாடே தியான யோகம்; தவம்.

–——————————-
[1] வானமும் பூமியும் ஒழிந்துபோம்; என் வார்த்தைகளோ ஒழிந்து போவதே இல்லை – லூக்கா : 21 : 33.
[2] முன்னவனார் கோயில் பூசைகள் முட்டிடின் மன்னர்க்குத் தீங்குள வாரி வளங்குன்றும் கன்னங் களவு மிகுத்திடுங் காசினி என்னருள் நந்தி எடுத்துரைத் தானே. – திருமூலர்

——————————-

இப்பொழுது உலகில் பெரும் போர் மூண்டுள்ளது. இத்தகைப் போரை உலகம் என்றுங் கண்டதில்லை. கொடும் போர் – கொடும் போர் – மூண்டுள்ளது. பிரளயமோ யுகாந்தமோ தெரியவில்லை. மன்பதை கோயில் வழிபாட்டை மறந்தது. மக்களிடை நல்ல எண்ணஞ் சாய்ந்தது; தீய எண்ணம் ஆட்சி புரிகிறது. தீய எண்ணம் கொலைப் போரை மூட்டிவிட்டது. இவ்வேளையில் விமானங்களைப் பெருக்குவதிலும், பீரங்கிகளைப் பெருக்குவதிலும், பிற நச்சுக் கருவிகளைப் பெருக்குவதிலும் மக்கள் கருத்துச் செலுத்துவது வீண் வீணேயாகும். அதனால் போர் நில்லாது; போர் பெருகிக்கொண்டே போகும். மக்கள் மனந் திரும்பிக் கோயில் வழிபாட்டில் கருத்திருத்தினால் தீய எண்ணம் அகலும்; நல்ல எண்ணம் பெருகும். போர் தானே பொன்றும். நல்ல எண்ணம் என்ன செய்யாது? எல்லாஞ் செய்யும். நல்லெண்ணத்துக்கு நிலைக்களன் – உறையுள் – கோயில். அக் கோயிலை , வழிபாட்டால் – தியானயோகத்தால் – தவத்தால், அகக்கோயிலாக்கல் வேண்டும். இது புது உலக ஆக்கத்துக் குரிய முயற்சிகளுள் ஒன்று – சிறந்த ஒன்று – என்று மக்கள் உணர்ந்து நடப்பார்களாக. கோயில் நல்லெண்ணத்தை வளர்ப்பதற்கென்று ஏற்பட்ட தென்பதை இன்னும் விரித்துப் பேசப் போதிய நேரமில்லை.

சீர்திருத்தம்

கோயில் சீர்திருத்தம் பலவிடங்களில் பேசப்படுகிறது. பெரிதும் ஹிந்து கோயில் சீர்திருத்தம் பேசப்படுகிறது. ஹிந்து கோயில்களில் பலதிற மாசுகள் படியுமாறு மக்கள் நடந்தார்கள்; நடக்கிறார்கள். அவைகளைக் களைந்து கோயிலைக் கோயிலாக்குவதும் சிறந்த தொண்டேயாகும். இத்தொண்டில் தலைப்படுவோர் கோயிலமைப்பிலும் வழி பாட்டிலும் பற்றுடையவரா யிருத்தல் வேண்டும். பற்றுச் சிறிதுமின்றிச் ‘சீர்திருத்தம் சீர்திருத்தம்’ என்று கூக்குரலிட்டுத் திரிவோர் கொள்ளைக் கூட்டத்தவராகத் திரும்பினுந் திரும்புவர். பொதுவாகச் சீர்திருத்தத்தில் சிறப்பாகக் கோயில் சீர்திருத்தத்தில் இறங்குவோர் அன்பராய்த் தொண்டராய்த் தன்னலமற்றவரா யிருத்தல் வேண்டும்.

உயர்வு தாழ்வு

ஹிந்து கோயில்களில் உயர்வு தாழ்வுச் சிறுமை பிறப்பிலுங் கருதப்படுகிறது; சிறப்பிலுங் கருதப்படுகிறது. கோயில்களில் பிறப்பில் சாதிப் பாகுபாடு கருதப்படுவது அறமாகாது. ஓவியம் மரத்தடியில் இருந்த ஞான்று, வழி பாட்டில் உயர்வு தாழ்வு கருதப்படவில்லை. மண்டபங்களும் கோபுரங்களும் ஏற்பட்ட பின்னரும் பொது வழிபாடே நிகழ்ந்துவந்தது. இடைநாளில் விதிகளும் கட்டுப்பாடுகளும் கோயிலுக்குள் புகுந்தன. சாதி வேற்றுமையும் உடன் புகுத்தப்பட்டது. சமூகத்தில் தோன்றிய கொடுமை கோயிலிலும் நுழைந்தது.

ஆன்றோர் முயற்சி

இக்கொடுமையைக் களைய அவ்வப்போது அறிஞரால் முயற்சி செய்யப்பட்டே வந்தது. வெற்றி விளையவில்லை. நாயன்மாரும் ஆழ்வாரும் முயன்றனர்; அவர் வழிவழி வந்த ஆன்றோரும் முயன்றனர். அப்பெரியோர் முயற்சிக ளெல்லாம் ஏட்டளவில் நிற்கலாயின. திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருப்பாணாழ்வார், திருநாளைப்போவார், திருநீலநக்க நாயனார், இராமாநுசர் முதலியோர் வரலாறுகளைப் பார்க்க. அவ்வரலாறுகள் ஆண்டவன் திருவருள் நோக்கத்தை நன்கு புலப்படுத்துகின்றன. பொல்லாத சமூகம் ஆண்டவன் திருவருள் நோக்கத்தையும் புறக் கணித்தது. இதுபற்றி என்னுடைய நூல்களிலெல்லாம் விரித்தோதியுள்ளேன். பொதுமையுணர்வு புத்துயிர்பெற்று வரும் இந்நாளிலாதல் பிறப்பில் உயர்வு தாழ்வு கருதுங் கொடுமையை யொழிக்க அறிஞர் உழைப்பாராக. உண்மை உழைப்பு, உறுதியை நல்கியே தீரும்.

ஹிந்து கோயில்களில் சிறப்பில் உயர்வு தாழ்வு கருதுவதை விரித்துக் கூற வேண்டுவதில்லை. உத்தியோகஸ்தர் வாடை வீசியதும் அர்ச்சகரும் தர்மகர்த்தரும் மற்றவரும் ஓடி வருகின்றனர்; கைகட்டுகின்றனர்; அவரைச் சூழ்ந்து கொள்கின்றனர்; கட்டியம் பாடுகின்றனர். உத்தியோகஸ்தர் கடவுளாக ஏற்கப்படுகிறார். அவர் உடல் பூரிக்கிறது. அவர் கோயிலுள் ஏன் புகுந்தனர்? பாவம்! வெட்கம்! வெட்கம்! மசூதியில் கற்றவரும் கல்லாதவரும் நவாப்பும் பக்கிரியும் பொதுவாகவே பாவிக்கப்படுதல் ஹிந்து கோயில் குருமாருக்குப் புலப்படுவதில்லை போலும்! சந்நிதியில் உத்தியோகஸ்தரை ஒருவிதமாகவும், மற்றவரை வேறுவிதமாகவும் பாவிப்பது மடமை; இழிவு. இம் மணிவிழாத் தலைவர் பதவியிலிருந்தபோது கோயிலார் வரவேற்புக்கு இணங்கியதுமில்லை; அதைப் பொருட்படுத்தியது மில்லை. கோயில் சிறுமைக்குப் ‘படித்த’ பதவி வேடரும் காரணர் என்று கூறல் மிகையாகாது. உத்தியோகஸ்தரை வரவேற்றுத் தனிச் சிறப்புச் செய்யும் இழிவு கோயிலினின் றும் அகலப்பெறல் வேண்டும்.

‘நான்’

வழிபாட்டுக்கென்று கோயில் அமைந்தது. வழிபாடு ‘நான்’ என்னும் முனைப்பை அகற்றுவது. கோயிலிலுள்ள பலிபீடத்தின் அறிகுறி என்ன? ‘நான்’ என்பதைப் பலியிடுவதை அறிவிப்பது அப்பீடம். மக்கள் அங்கே தலையாரக் கும்பிடுகிறார்கள். அதன் கருத்து, ‘நான்’ என்பதைப் பலியிடுவதாகும். ‘நான்’ என்னும் முனைப்பை அழிப்பதை உணர்த்துங் குறிகள் இன்னும் பல உள. முனைப்பை அழிப்பதற்கென்று ஏற்பட்ட அமைப்பில் அம்முனைப்பை எழுப்புதற்குரிய மரியாதை’ செய்வதும், அதை ஏற்பதும் நியாயமாகா . ‘நான்’ பலியாகுமிடத்திலா ‘நான்?’ அந்தோ! அந்தோ!! கோயிலுள் ‘மரியாதை’ செய்யப்படுவதை அறவே ஒழிக்க முயல்வது பெருந் திருத்தொண்டாகும்.

மரியாதை?

‘மரியாதை’ பெரிதும் அர்ச்சனை முதலியன செய்வோர்க்கு அளிக்கப்படுகிறது. அர்ச்சனையின் அடியில் அன்பிருத்தல் வேண்டும். ஆனால் என்ன இருக்கிறது? பணம்! பணம்! பணம் படமெடுத்து ஆடுகிறது! பணங் கொடுக்கும் ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொரு போதும் தனித்தனியே அர்ச்சனை செய்யப்பட வேண்டு மென்னும் நியதி யாண்டுள்ளது? எந்த ஆகமத்திலுள்ளது? இக் கேள்விகளைக் கோயில் அர்ச்சகர்களை நோக்கிக் கேட்கிறேன். பணத்துக்கு அர்ச்சனை என்பது இடையில் நுழைந்த புன்மை. கற்பூர ஆராதனை கோயிலுள் இடம் பெற்ற நாள் தொட்டு, இப்புன்மையும் அங்கே இடம் பெறலாயிற்று. தனித்தனி அர்ச்சனை வழக்கமும் தொலைதல் வேண்டும். அதனுடன் தொடரும் மரியாதையும் தொலைதல் வேண்டும்.

வழிபாட்டு முறைமை

ஓவிய உருவைத் துப்புரவு செய்து, மலரணிந்து, குறித்த வேளையில் தூபதீப வழிபாடு, மந்திர வழிபாடு முதலியன செய்து, பின்னைப் பட்டர் ஒரு பக்கத்தில் அமர்ந்து, ஒழுங்கு முறைகளைக் காத்துவர வேண்டுவது அவர்தங் கடமை. அன்பர்கள் மலராலோ பாட்டாலோ மனத்தாலோ எப்படியோ வழிபாடு நிகழ்த்திச் செல்வது முறைமை. இது பண்டைய வழக்கு. இடைநாளில் இவ் வழக்கு வீழ்த்தப்பட்டது. பணப்பேய் நன்முறையை வீழ்த்தியது. அன்பர்கள் நேரே வழிபாடு செய்யும் முறைமை மீண்டும் புதுப்பிக்கப்பட்டால், கோயில் பல வழியிலுஞ் சீர்பெறும்.

முன்னாளில் பட்டர் வடமொழி தென்மொழிகளில் வல்லவராய்ப் பல தத்துவ ஞான நூல்களை ஆராய்ந்து தெளிந்தவரா யிருந்தனர். அவர் நிலைமை இந்நாளில் மாறி யிருக்கிறது. அவரை நோதல் கூடாது. கால நிலையை நோதல் வேண்டும். இப்பொழுது பட்டருள் பெரும்பான்மையோர் கிளிப்பிள்ளை போலச் சில மந்திரங்களை ஒப்புவித்துத் திருமேனி தீண்டுந் திருத்தொண்டு செய்து வருகின்றனர். பொறுப்பு வாய்ந்த தொண்டு செய்யும் பட்டர் கல்வி அறிவு ஒழுக்கத்தில் சிறந்து விளங்குவது மற்றவர்க்கு எடுத்துக் காட்டாகத் துணை செய்யும். ஆதலின், வடமொழி தென் மொழிகளைப் பயின்று, தேர்ச்சியடைந்து, தத்துவ ஞான நூல்களில் நுண்புலமை பெற்றவரைப் பட்டராகு மாறு பொதுமக்கள் முயல்வது நல்லது.

நிதியும் நீதியும்

கோயில் பூசைகளிலும் விழாக்களிலும் மாசுகள் படர்ந்து மூல நோக்கத்துக்கு ஊறு செய்து வருகின்றன. மாசுகள் படர்தற்குப் பல காரணங் கூறலாம். அவைகளுள் தலையாயது ஒன்று. அது கோயில்கட்கென்று ஏராளமாகச் சொத்துக்கள் பெருகிக் கிடப்பது. நிதி நடமாடு மிடத்தில் நீதி நடமாடுதல் அரிது. பொருட் பெருக்குக் கோயில்களில் களியாடல்களைப் பெருக்குகிறது; ஊழியரைக் கள்ளராக்குகிறது; ஒழுக்க ஈனராக்குகிறது. சொத்துக்களை என் செய்வது?

-——————————-
[1] பேதைமட….. ……. ….. ……………………….. ….. ……………
மாதரொடும் ஆடவர்கள் வந்தடியி றைஞ்சிநிறை மா மலர்கள் தூய்க்,
கோதைவரி வண்டிசைகொள் கீதமுரல் கின்றவளர் கோகரணமே    

-திருஞானசம்பந்தர்

——————————-

அவைகள் பறிமுதல் செய்யப்படல் வேண்டும். கலைகளையும், தொழின் முறை களையும், இன்ன பிறவற்றையும் வளர்ப்பதற்குச் சொத்துக் களைப் பயன் படுத்தலாம். ‘ சொத்தின்றிக் கோயில் காரியங்கள் எப்படி நடக்கும்?’ என்று தோழர்கள் கேட்கலாம். கோயில் காரியம் எது? களியாட்டா? அன்று வழிபாடு. வழிபாட்டுக்குப் பணம் எற்றுக்கு? அதற்கு அன்பு தேவை. அவ்வப்போது திருவிழா முதலியன அன்பர்கள் உதவியால் நடைபெறலாம். கோயில் பணிக் கென்று எவரும் பொருள் திரட்டவேண்டுவதில்லை. கோயில் பணிகள் கூலிகளால் செய்யப்படலாகாது. அவைகள் அன்பர்களால் செய்யப்படல் வேண்டும். திலகவதியார், அப்பர், முருகர் முதலியோர் நமக்கு வழி காட்டிச் சென்றனர். அவர் தாமே திருப்பணி செய்ததை அவர்தம் வரலாறுகளிற் காணலாம். அவரது அடிச்சுவட்டைப் பற்றி நடக்க வேண்டுவது நம்முடைய கடமை. பெரியோர் பலரும் கூலிக்காகவா திருப்பணி செய்தனர்? ‘நான்’ என்னும் முனைப்பைச் சாய்க்க அவரனைவரும் வழிபாடு செய்தனர். கையை வீசிக் கோயிலை வலம் வந்து இரண்டணா தந்து அர்ச்சனை செய்விப்பது வழிபாடாகாது. பலதிறப் பணிகள் செய்து செய்து முனைப்பை ஒழிக்க முயலல் வேண்டும். நம்முடைய நாட்டில் மன்னர் மன்னரெல்லாம் கோயில் பணி செய்ததைக் கூறுங் கதைகள் பலவுண்டு. வரகுண பாண்டியன் கோயிலில் நாய் மலம் எடுத்ததைப் [1] பட்டினத்தடிகள் பாராட்டி உள்ளார்கள். கோயில் பணி அவரவரே செய்தல் நலம்.

——————————-

[1]… கோயில் முற்றத்து மீமிசை கிடப்ப – வாய்த்த தென்று காய்க்கட்டம் எடுத்தும் ….. பெரிய அன்பின் வரகுண தேவரும்… – பட்டினத்தார் (திருவிடைமருதூர் மும்மணிக் கோவை: 28 : 49 – 55)
——————————-

பாவ புண்ணியம்

தர்மகர்த்தர்களையும் மடாதிபதிகளையும், மற்றவர்களையும் கெடுப்பது எது? கோயிலா? மடமா? கோயிலுமன்று; மடமுமன்று. அவர்களைக் கெடுப்பது ‘சொத்து..’ கோயில் சொத்து தர்மகர்த்தர் முதலியவரைக் கெடுப்பதைக் கண்ணாரக் கண்டும், இன்னுங் கோயிலுக்குச் சொத்தளிப்பது புண்ணியம்’ என்று கருதுவோருளர். ஒருபக்கம் பெரும் பெரும் பாவங்களை மனமாரச் செய்து கொண்டு, மற்றொரு பக்கம் கோயிலும் மண்டபமும் மதிலும் படியுங் கட்ட இறங்குகிறார் சிலர். அப்பாவங்களை இப்புண்ணியங்கள் விழுங்கிவிடு மென்பது இவர் கருத்துப் போலும். இவர் இறைவனை ஏமாற்ற முயல்கிறார். இறைவன் எங்குமிருப்பவன்; எங்குங் கண்கொண்டு பார்ப்பவன்; எங்குங் காது கொண்டு கேட்பவன்; ஒவ்வொருவர் உள்ளத்திலும் வீற்றிருப்பவன். அவனை ஏமாற்றப் புகும் பாவத்தினுங் கொடியது வேறொன்றிருக்குமோ? ஒரு பக்கம் மனமாரப் பாவஞ் செய்து கொண்டு, மற்றொரு பக்கம் கோயிலோ மண்டபமோ மதிலோ படியோ கட்டினால் அப்பாவம் பறிமுதலாகுமே? இக்கயவர்க்கு ஆண்டவன் அருள் கிட்டவே கிட்டாது. பாவம் எது? புண்ணியம் எது? காமியச் செயலெல்லாம் பாவத்தின்பாற் படும்; நிட்காமியச் செயலெல்லாம் புண்ணியத்தின்பாற் படும். தாம் மனமாரச் செய்யும் பாவம் போக வேண்டு மென்று கோயில் மண்டபம் முதலியன கட்டுவதும் பாவமே யாகும் என்பதைக் கரவாடும் வன்னெஞ்சர் உணர்ந்து மனந்திரும்பி வாழ முயல்வாராக.

சுங்கச்சாவடி

கோயில் வாயிற்படியில் உண்டி வைக்கப்பட்டால், அதில் அன்பர் தம்மாலியன்ற காசு செலுத்துவர். அக் காசினைப் பட்டரும், அவரைப் போன்ற வேறு சிலரும் பயன் படுத்தலாம். உண்டியில் காசு செலுத்துமாறு எவரையும் வலியுறுத்தலாகாது; கோயிலை எக்காரணம் பற்றியுஞ் சுங்கச்சாவடி யாக்கலாகாது. இன்னுஞ் சில சீர்திருத்தங்களை வெளியிடலாம். நேரமில்லை.

பாட்டோவிய வழிபாடு

கோயிற் பற்றுடன், அதில் தற்காலம் நடைபெறும் சிறுமைகளைக் கண்டு, ஒதுங்கி வழிபாடு நிகழ்த்தாமலிருப்பவரும் உளர். அவர் பெரியோர் பாட்டில் திரண்டுள்ள ஓவிய உருவங்களில் தம் மனம் வேட்கும் ஒன்றைத் தியானிக்கலாம். அவருள் சிலர் உள்ளம் பாட்டோவிய உருவம் திரண்டு நிற்கும் நிலையை அடையாமலிருக்கும். அவ்வுள்ளத்தார் தமது வீட்டில் ஓர் அறையில் ஓவிய உருக்களில் தாம் விரும்பும் ஒன்றை வழிபட்டு வரலாம். பெரியோர் நோக்குப் பெற்ற பழைய ஓவிய உருவத்தைச் சூழ்ந்துள்ள பெருஞ் சக்தி மற்ற உருவத்தில் சூழ்ந்து நிற்றல் அரிது.

விக்கிரக ஆராதனை!

உருவ வழிபாடு விழுப்பமுடையதே. அஃது ஒரு காலத்தில் உலக முழுவதும் பரவி இருந்தது. ஒன்று விழுப்பமடைந்து உலகில் பெருமிதமாகப் பரவி வரும் பொழுது, அதனிடைத் திரிபுகளும், மாசுகளும் படர்வதுண்டு. திரிபுகளும் மாசுகளும் உலக முழுவதும் பரவி நின்ற உருவ வழிபாட்டு நிலையங்களில் படரலாயின. நிலையங்களில் படர்ந்த அழுக்குகள் உருவ வழிபாட்டின் மீதே சுமத்தப்பட்டன. அவ்வழிபாட்டை ஒழிக்கக் கிளர்ச்சிகளும் எழுந்தன. இவைகளால் உருவ வழிபாட்டின் நுட்பம் சிற்சில இடங்களில் மக்கள் உள்ளத்தில் வேர் கொள்ளாதொழிந்தது. அவ்வவ்விடத்தில் உருவ வழிபாடு விக்கிரக ஆராதனையாகக் கொள்ளப்பட்டது; கடவுளை விக்கிரகமாகத் தொழுவது மடமை என்று கருதப்பட்டது. எதற்கும் உலகம் இடந்தருவதன்றோ?

அரபியாவில் உருவ வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெற்று வந்தது. நாளடைவில் அவ்வழிபாட்டின் நுட்பம் மக்களிடை விளங்காதொழிந்தது. மக்கள் ஓவிய உருவை விடுத்து, வெறும் பிண்டத்தையே – விக்கிரகத்தையே — கடவுளாகப் போற்றலானார்கள். ஒவ்வொரு விக்கிரகமும் ஒவ்வொரு தெய்வமாகப் போற்றப் பட்டது. பல தெய்வ வணக்கம் குடிபுகுந்தது. அந்நாளில் மகம்மது நபி தோன்றி, விக்கிரக ஆராதனையை அறவே களைந்து, ஒரு தெய்வ வழிபாட்டை நிலைபெறுத்தினார்.

பழைய கிறிஸ்துவ மதம் உருவ வழிபாட்டை நிகழ்த்தி வந்தது. அவ்வழிபாட்டை முன்னின்று நடாத்தியவர் வாழ்க்கைகளில் சில சிறுமைகள் நுழைந்தன. அச்சிறுமைகள் சிலருக்குச் சீற்றமூட்டின. சீற்றம் புரட்சியாய் உருவ வழிபாட்டின் மீது பாய்ந்தது. புரட்சி லூதர் முதலியோரைப் புரொடெஸ்டெண்ட் கிறிஸ்துவத்தைக் காணுமாறு உந்தியது. பழைய மதம் கெத்தோலிக் கிறிஸ்துவம் என்ற பெயரால் நிலவுகிறது. புரொடெஸ்டெண்ட் கிறிஸ்துவம், உருவ வழிபாட்டை விக்கிரக ஆராதனை என்று அதைக் கடிந்தது .

கிறிஸ்துவமும் இஸ்லாமும் நமது நாட்டில் பரவத் தொடங்கியதைக் கண்ட அறிஞர் சிலர் உருவ வழிபாட்டால் ஹிந்து மதத்தின் ஆக்கம் குன்றும் என்று கருதினர். அக்கருத்து ஆங்காங்கே வளரலாயிற்று. அதன் பயனாக ராஜாராம் மோஹன்ராய் உள்ளிட்ட சிலரது முயற்சியால் பிரம சமாஜம் தோன்றியது.

ஆரிய சமாஜம் உருவ வழிபாட்டைக் கடிவதென்று சொல்லப்படுகிறது. ஆராய்ச்சியில், அச்சமாஜம் உருவ வழிபாட்டைக் கடிவதென்பது தெரியவில்லை; அது விக்கிரக ஆராதனையைக் கடிவதென்றே தெரிகிறது. ஆரிய சமாஜம் தீ வழிபாடு செய்கிறது. தீ வழிபாடு உருவ வழிபாடே.

சிலர் ஜோதி ஜோதியென்று விளக்கொளியை வழி பட்டு, உருவ வழிபாட்டைக் கைவிட்டதாக நினைக்கின்றனர். விளக்கொளி உருவம் கடந்ததன்று. அஃது உருவமே.

இன்னுஞ் சில இயக்கங்கள் உருவ வழிபாட்டை விக்கிரக ஆராதனை என்று கொண்டு அதனை மறுத்து வருகின்றன. உருவ வழிபாட்டை இழித்துக் கூறுவது காலப் போக்குக்கு ஏற்றது என்று கருதிப் பேசுங் கூட்டமும் உண்டு. வேறு பல கூட்டங்களுமுண்டு.

புத்தகமும் கோயிலும்

ஓரறிஞர் – உலகைச் சுற்றிச் சுற்றி வருவோர் – ஒரு பெருங் குரு என்று போற்றப்படுவோர் – சென்னையில் ஒரு பள்ளியில் கடவுளைப்பற்றி நல்ல இனிய ஆங்கில மொழியில் பேசினார்; அப்பேச்சில் பல இடங்களில் கோயிலுள் ளிருப்பது கல்லென்றும், குட்டிச் சுவரென்றும் குறித்தே வந்தார். பேச்சு முடிந்தது. கேள்விகள் கேட்கப்பட்டன. அவைகளில் என்னுடையன சில. அவைகளின் சாரத்தை இங்கே பிழிகிறேன்: ‘தாங்கள் புத்தகம் படிப்பதுண்டா? புத்தகத்திலுள்ள எழுத்துக்கள் வரிவடிவங்களா? அல்லவா? வரிவடிவம் எழுத்துக்களாக அமையா விட்டால், கருத்துக்கள் தங்கள் உள்ளத்தில் படியுமா? எழுத்தற்ற புத்தகம் என்ன பொருளை விளக்கும்?’ இவைகட்கு அவர், ‘யான் புத்தகம் படிப்பதுண்டு. எழுத்துக்கள் வரி வடிவங்களே. வரி வடிவமாக எழுத்துக்கள் அமையா விட்டால் கருத்துக்கள் உள்ளத்தில் படியா’ என்று பதிலிறுத்தார். ‘ புத்தகம் கோயில்; வரிவடிவ எழுத்துக்கள் உருவங்கள், படிப்பது வழிபாடு ……….’ என்று சொல்லிக் கொண்டே வந்தேன். அவர், ‘காலமாகி விட்டது; தங்களைத் தனியே பார்க்க விரும்புகிறேன்’ என்று விலாசங் குறித்துக் கொடுத்தார். மறுநாள் அவரும் யானும் உருவ வழிபாட்டைப்பற்றி நீண்ட நேரம் பேசினோம். உருவ வழிபாட்டில் நம் முன்னோர் அமைத்துள்ள நுட்பங்கள் சிலவற்றை எடுத்துக்காட்டி, ‘மனம் உள்ளமட்டும் உருவ வழிபாடு தேவை’ என்பதை என்னாலியன்றவரை விளக்கினேன். அவ்வறிஞர், தாங்கள் சொல்லும் வண்ணம் பொருள் நுட்பம் அமைந்த உருவ வழிபாடு நடைபெறுவதில் எனக்கு எவ்விதக் கருத்து வேற்றுமையும் இல்லை’ என்று சொல்லி விடை கொடுத்து என்னை அனுப்பினர். உருவ வழிபாட்டுக்கும் விக்கிரக ஆராதனைக்கும் உள்ள வேற்றுமை விளக்கப்பட்டால், உருவ வழிபாட்டு மறுப்புக் குறையும் என்று யான் எண்ணுகிறேன். இரண்டுக்கு முள்ள வேற்றுமை முன்னே விளக்கப்பட்டது.

அமைதிக்கு ஊற்று

மனத்துக்கும் உருவத்துக்கும் தொடர்பு இருக்கிறது. [*] மனம் உருவ வழிபாட்டில் ஈடுபடப் பட அது நிலைபெறும். மனம் நிலைபெறப் பெற அமைதியுறும். ஒவ்வொருவர் மனமும் உருவ வழிபாட்டில் ஈடுபட்டால் உலகில் அமைதி நிலைக்கும். உருவ வழிபாடற்ற மனம் என்செய்யும்? அலையும்; பேயாகும்; ஆசைப் பேயாகும். ஆசைப்பேய் கொள்ளையைப் பெருக்கிப், புரட்சியை எழுப்பி, இரத்தம் உமிழ்ந்து கோர நடம் புரியும். உலகம் கொலைக்களமாகும்; சுடுகாடாகும். தோழர்களே! உருவ வழிபாடு சிறியது – எளியது – என்று நினையாதேயுங்கள். உருவ வழிபாடு பெரியது; விழுப்பமுடையது. உலக அமைதி அதனிடத்தி லிருக்கிறது. உலக அமைதிக்கு உருவ வழிபாடு இன்றியமை யாதது என்று உணருங்கள்; தெளியுங்கள்; அதைக் கடைப்பிடித்து ஒழுகுங்கள். இப்பொழுது உலகம் பெரும் போராட்டத்துக்கு இரையாகி வருகிறது. இதற்கு அடிப் படையாக நிற்குங் காரணமென்னை? உலகம் உருவ வழிபாட்டின் மீது கவலை செலுத்தாமை; அதனை மறந்தமை; விடுத்தமை. உலகம் பழையபடி உருவ வழிபாட்டில் உளங் கொண்டால், உலகிலெழுந்துள்ள போராட்டமெல்லாம் ஒழிந்து போகும். மக்கள் மனம் நிலைபெறும்; எங்கும் அமைதி பொலியும். அமைதிக்கு ஊற்று உருவ வழிபாடு. அத்தகைய உருவ வழிபாடு மீண்டும் உயிர்பெற்று எழுவதாக.

——————————-

[*] நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப்
புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்
பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்
தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்
சங்கரா சயபோற்றி போற்றி யென்றும்
அலைபுனல்சேர் நெஞ்சடையெம் ஆதீ யென்றும்
ஆரூரா என்றென்றே அலறா நில்லே       – அப்பர்

——————————-

வீடுபேறு

உருவ வழிபாட்டால் மனமாசுகள் கழியும். மாசற்ற மனம் நிலைபெற்று அமைதியுறும். அமைதி, அன்பு ஊற்றைத் திறக்கும்; அருள் வெள்ளத்தைப் பெருக்கும். அருட் பெருக்கம் வேற்றுமையுணர்வை வீழ்த்தும்; சகோதர நேயத்தை எழுப்பும்; பிற உயிர் நலங் கருதித் தொண்டு செய்யத் தூண்டும். இவ்வாறு தூண்டுவது அருட்பெருக்கின் இயல்பு. மனமாசற்ற இடத்தினின்றும் எழுவதே சிறந்த தொண்டு. அதனடியில் பயன் கருதாமை – நிஷ் காமியம் – நிலவும். மாசுள்ள இடத்தினின்றும் தொண்டென்னும் பெயரால் ஒன்று எழுகிறது. அது தன்னலம். தன்னலத் தொண்டினடியில் பயன் கருதல் – காமியம் – நிற்கிறது. அது வாழ்க்கையைக் கெடுப்பது. நிஷ்காமிய கர்மமென்னும் பயன் கருதாத் தொண்டே வாழ்க்கையைச் செம்மை செய்வது. அத்தொண்டு செய்யும் பேறு கிடைத்தால் போதும். [*] அது வீடுபேறாகும்.


——————————-
கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்
[*] கூடும் அன்பினில் கும்பிட லே அன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்       – சேக்கிழார்
-——————————-

ஏழ்மை போக்கல்

தொண்டு ஏழைகளின் நலன் கருதிச் செய்ய வேண்டுமென்று சொல்லப்படுகிறது. தொண்டு காலதேச வர்த்தமான நிலையையொட்டிச் செய்யப்பெறல் வேண்டும். ஏழைகள் நிலை கண்டு, இரக்கங்கொண்டு, அவர்கட்கு உணவு, உடை, இடம் முதலியன அளித்தல் தொண்டாகக் கருதப் பட்டு வந்தது. இனி அக்கருத்து மாற்றமுறுவது நல்லது. தொண்டு என்று ஏழைக் கூட்டத்தைப் பெருக்கலாகாது. ஏழைக் கூட்டத்தைப் பெருக்குவதைப் பார்க்கிலும், ஏழ்மையைப் போக்க முயல்வது சிறந்த தொண்டாகும்; இது காலத்துக்கு ஏற்றதுமாகும்.

உருவ வழிபாடு மனமாசுகளைப் போக்கி அமைதியை நிலைபெறுத்துவது; அன்பு ஊற்றைத் திறப்பது; அருள் வெள்ளத்தைப் பெருக்குவது; சகோதர நேயத்தை வளர்ப் பது; பிற உயிர்நலங் கருதித் தொண்டு செய்ய உந்துவது. உருவ வழிபாடு உயிர்கள் வழிபாடாக விரிவது என்று சுருங்கச் சொல்கிறேன்.

தோழர்களே! யான் பிறந்தேன்; வளர்ந்தேன்; வாழ்வில் யான் பெற்ற அனுபவமென்ன? யான் உலகிற்குச் சொல்ல விரும்புவதென்ன? “வாழ்விற்கு வேண்டற் பாலது வழிபாடு; தொண்டு; பணி; பயன் கருதாப் பணி; நிஷ்காமிய கர்மம். அதுவே வீடு பேறு. வேறு வீடு வேண்டுவதில்லை. பிறப்புண்டேல் மீண்டும் மீண்டும் யான் பிறக்க விழைகிறேன்; பிறவி தோறும் பயன் கருதாப்பணி செய்யும் பேற்றை யான் பெற ஆண்டவனை வேண்டுகிறேன். என் கடன் பணி செய்து கிடப்பதே.”  இஃது எனது அனுபவத்திற் கண்ட உண்மை. இதை உலகுக்குச் சொல்ல விரைகிறேன்.

சோர்வி னால் பொருள் வைத்ததுண் டாகில்
சொல்லு சொல்லென்று சுற்று மிருந்து
ஆர்வி னவிலும் வாய்திற வாதே
அந்த காலம் அடைவதன் முன்னம்
மார்வ மென்பதோர் கோயி லமைத்து
மாதவ னென்னும் தெய்வத்தை நாட்டி
ஆர்வ மென்பதோர் பூவிட வல்லார்க்
கரவ தண்டத்தி லுய்யலு மாமே.
      – பெரியாழ்வார்

பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனிவிசும்பும்
நூற்கடலும் நுண்ணூல தாமரைமேல் – பாற்பட்
டிருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்
குருந்தொசித்த கோபால கன்.
      – பேயாழ்வார்

(தொடர்கிறது)
$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s