-திருநின்றவூர் ரவிகுமார்

உலகின் பழமையான மதங்கள் தோன்றியது பாரத நாட்டில். தத்துவங்களின் தொட்டிலாகக் கருதப்படும் பாரத நாட்டை அந்நிய மத சக்திகள் சூறையாடத் திட்டமிட்ட ரீதியில் வேலை செய்கின்றன என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அதற்கு அவர்கள் சேவை, சமத்துவம் என்ற முகமூடி அணிந்து வருகின்றனர். தமிழகத்தில் அத்துடன் இனவாதம், மொழி உணர்வு என்ற முகமூடிகள் கூடுதலாக இருக்கின்றன.
ஆரிய- திராவிட இனவாதம் பொய்யுரை என்று அதை உருவாக்கிய ஆங்கிலேயர்களே ஒப்புக் கொண்டாலும், அதை விடாப்பிடியாக வைத்திருக்கும் அரசியல் சக்திகள், மொழி உணர்வைக் கொண்டு சமூகத்தைக் கூறு போட முயற்சிக்கும் அறிஞர் கூட்டம் ஆகியவை சுனாமியாக எழுந்த காலத்தில், அவற்றை ‘சைவ சமயம்’ என்ற கேடயமும் ’சைவ சித்தாந்தம்’ என்ற வாளும் கொண்டு எதிர்த்து நின்றவர்களில் சைவத்திரு ஈசுர மூர்த்தி பிள்ளையின் பங்கு மிகவும் அதிகம்.
சமஸ்கிருதம் அனைவருக்குமான மொழி. இதற்கென்று ஒரு இனமோ, குலமோ, நிலப்பரப்போ கிடையாது. பாரத நாட்டில் வெவ்வேறு மொழிகள் புழங்கினாலும் அனைத்துக்குமான பொது மொழியாக சமஸ்கிருதம் இருந்திருக்கிறது.
பிராமணர்கள் சமஸ்கிருதத்தை தங்கள் மொழி என்று அடையாளப்படுத்திக் கொள்வதும், சமஸ்கிருதம் அந்நிய மொழி என்று கூறும் தனித்தமிழ் விரும்புவோரும் ஒரே தரத்தினரே என்கிறார் ஈசுர மூர்த்தி பிள்ளையவர்கள்.
மொழிக்கு சமயம் இல்லை. மொழியைக் கடந்தது சமயம். சைவ சமயம் தழைக்க வேத, ஆகமங்கள் வேண்டும். அவை இருப்பது சமஸ்கிருதத்தில். எனவே சைவம் தழைக்க சமஸ்கிருதமும் தமிழும் தழைக்க வேண்டும். இதை சித்தாந்த ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் தெளிவாக எடுத்துரைக்கிறார். தென்மொழி – வடமொழி என்ற மோதல் பாதகத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் புரியவைக்கிறார்.
மந்திரங்கள் சமஸ்கிருதத்தில் தான் உள்ளன. வேறு மொழியில் இல்லை. மந்திரம் என்பது ஏதோ ஒலி அதிர்வு என்றும் அதே அதிர்வை தமிழ் மொழியிலும் ஏற்படுத்தி தமிழ் மந்திரங்களை உருவாக்கலாம் என்று கூறுவது தவறு. மந்திரம் என்பது ஒலி அதிர்வு மாத்திரமல்ல. எனவே அதை புதியதாக உருவாக்குவது அல்லது மொழிபெயர்ப்பு செய்வதோ முடியாது. இதை ஈசுர மூர்த்தி பிள்ளையவர்கள் தெளிவுபடுத்துகிறார் (பக்: 150 & 284).
கோயிலில் அர்ச்சனை மாநில மொழியில் இருக்கக் கூடாது. பாரத தேசமெங்கும் பொது மொழியான சமஸ்கிருதத்தில் தான் இருக்க வேண்டும். அதுவே சமய ஒருங்கிணைப்பு வலுச் சேர்க்கும். மாநில மொழியில் அர்ச்சனை என்பது மாநில எல்லைக்குள் சைவசமயத்தைக் குறுக்கி விடும்.
அதுமட்டுமன்றி வேறு மாநிலத்தவர் இங்கு வந்து தங்கள் தாய்மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று கேட்டால் அர்ச்சகர் ஒரே அர்ச்சனையை நாட்டில் உள்ள அனைத்து மொழிகளிலும் தெரிந்துவைத்திருக்க சாத்தியமில்லை என்ற நடைமுறை சிக்கலையும் சுட்டிக்காட்டுகிறார்.
பாரத நாட்டின் சமயம் சைவ சமயமே, அதனால் பாரதம் ‘சைவஸ்தான்’ என்று அழைக்கப்பட வேண்டும் என்கிறார். ‘ஹிந்து’ என்ற அடையாளம் அந்நியரால் நம்மீது திணிக்கப்பட்டது மட்டுமன்றி அது இழிவான பொருளிலேயே அவர்கள் பயன்படுத்தியதால் ஹிந்து, ஹிந்துஸ்தான் என்பதை ஏற்க மறுக்கிறார். ஹிந்து என்பது இழிவு என்பதற்கு பதினாறு மேற்கோள் காட்டுகிறார். சைவ சமயம், சைவஸ்தான் என்பதன் விரிவாக ’ஹரஜன்’ என்ற வார்த்தையையும் முன்வைக்கிறார்.
ஹரிஜன் அல்ல, ஹர-ஜன். ஹிந்துஸ்தான் என்பதற்கு மாற்றாக சைவஸ்தான்; இந்நூலிலுள்ள இந்த வார்த்தைகளும் வாதங்களும் சித்தாந்த பண்டித பூஷணம் ஈசுர மூர்த்தி பிள்ளையை சிறப்பாக அடையாளம் காட்டுகின்றன.
திருப்பாவை, திருவெம்பாவை இரண்டையும் கட்டுரைப் போட்டி, பாடல் போட்டி மூலம் மாணவர்கள் மத்தியில் கொண்டுசெல்ல முயன்ற காஞ்சி பரமாச்சாரியாரின் செயலைக் கண்டிக்கும் இவர் சமய சமரசம் என்பதை சமய விபச்சாரமே என்று சாடுகிறார். (விபச்சாரம் என்றால் நெறி தவறி செல்வது என்று பதிப்பாளர் விளக்கம் தருகிறார். ஆனால் கற்பு என்ற வார்த்தையையும், அண்ணனோடு போனால் என்ன தம்பியோடு போனால் என்ன என்ற பழமொழியை அடுத்த வரியில் விளக்கிப் பேசுகிறார் சைவத்திரு) அதற்கு மூதறிஞர் ராசாசியின் கூற்றையும் (பக்: 337) மேற்கோள் காட்டுகிறார்.
ஜாதியையும் மொழியையும் கொண்டு சமுதாயத்தைப் பிளக்க நினைக்கும் சக்திகளின் முயற்சியைத் தோற்கடிக்க அனைத்து சமுகத்தினரும் வேதம் பயில அனுமதிக்கப்பட வேண்டும் என்ற நல்ல சீர்திருத்த சிந்தனையை முன்வைக்கிறார்.
அவர் காலத்தில் மட்டுமல்ல, இன்றும் சமய அரசியலின் விளையாட்டு விதிகளை வகுப்பது அந்நிய சக்திகளே. நம்மவர்களுக்கு அவ்வளவு சக்தி உலக அரங்கில் மட்டுமல்ல, நம் நாட்டிலும் கிடையாது. இதுதான் நிதர்சனம். அதற்கு பல்வேறு காரணங்கள் உண்டென்றாலும் ஒற்றுமையின்மையே பிரதானக் காரணம்.
எனவே ஹிந்து என்ற பதாகையின் கீழ் சைவ, வைணவ, பௌத்த, சமண என இந்திய மண்ணில் பிறந்த அனைத்து சமயத்தினரும் ஒருங்கிணைவது , குறைந்தபட்ச ஒருங்கிணைப்பாவது, தேவைப்படுகிறது. இந்நிலையில் சைவத்தை மட்டுமே முன்னிறுத்தும் அவரது செயல் நடைமுறைக்கு ஒவ்வாது.
அதே வேளையில் அவர் குறிப்பிடும் ஒரு விஷயம் மிகவும் பொருத்தமாக உள்ளது. சைவர்கள் நீறு பூசுவது, உத்திராட்சம் அணிவது, சமஸ்கிருதம் கற்பது, வேதாகமங்களைக் கற்பது, திருமுறைகளை ஓதுவது, திருவிழாக்களைத் திறம்பட நடத்துவது, சமயத்துக்குப் புறம்பான விஷயங்கள் இருந்தால் அதைக் கண்டிப்பது, சரியான வழிக்குத் திருப்புவது போன்றவற்றைச் செய்ய வேண்டும். தங்கள் சமய நெறியில் ஊன்றி நிற்க வேண்டும் என்கிறார். இது வரவேற்கத்தக்கது மட்டுமல்ல, ஹிந்து மதத்தைச் சார்ந்த அனைவரும் செய்ய வேண்டிய செயல். காலத்தின் தேவையும் கூட.
தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று கூறுவோரை கண்டிக்க முனையும்போது சில தேவையற்ற விஷயங்களையும் அவர் பேசுகிறார். உதாரணமாக லத்தீன் மொழியை சமய மொழியாக (கடவுள் வாக்கு) ஏற்க மறுத்து உருவானது புராட்டஸ்டன்ட் கிறிஸ்தவப் பிரிவு என்றும், லத்தீனை சமய மொழியாக ஏற்றுக்கொண்ட கத்தோலிக்கப் பிரிவுக்கு ஏராளமான பெண், ஆண் பாதிரிகள் இருக்கிறார்கள், வளர்க்கிறார்கள் (பக்: 378) என்றும் கூறுகிறார். புரோட்டஸ்டன்ட் பிரிவு உருவானதற்குக் காரணம் மொழி அல்ல; உச்சபட்ச அதிகாரம் (இங்கிலாந்து) அரசருக்கா (போப்) மதகுருவுக்கா என்ற போட்டிதான் என்றே வரலாறு கூறுகிறது.
அதேபோல் இஸ்லாம் அரபு நாட்டில் பிறந்தாலும் அது அரபு மொழிப் பெருமையையும் இனப்பெருமையும் முன்வைக்கவில்லை (பக்: 419) என்கிறார். இஸ்லாம் என்பது அரபு தேசியமே என்று பல இஸ்லாமிய அறிஞர்களே எழுதியுள்ளதை பலரும் அறிவார்கள்.
விலா ஒடித்துப் பிறந்த புத்தர் அகிம்சாமூர்த்தியா, அவர் குடும்பத்தைத் தவிக்கவிட்டுப் பிரிந்தவர், கடவுள் இல்லை என்று சொல்லவில்லையானாலும்- இருக்கிறார் என்று சொல்லவில்லையே என்றெல்லாம் விமர்சிப்பதன் மூலம் (பக்: 373-375) இந்தியாவில் இருக்கும் கொஞ்சநஞ்ச பௌத்தர்களையும் ஹிந்துப் பதாகையின் கீழ் வரவொட்டாமல் செய்கிறார்.
இவையெல்லாம் இன்று தேவையற்ற விஷயங்கள் ஆகிவிட்டன. அன்றும் அப்படித்தான் இருந்தது. ஆனாலும் அவர் இவற்றை எழுதக் காரணம் “சைவ சமயமே எனக்கு அனைத்துமாம்” (பக்: 460) என்பதில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது.
அவர் ‘சமய சாதனை’ பத்திரிகையில் எழுதியுள்ள இரண்டு கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.1963-இல் எழுதியுள்ள கட்டுரை ஒன்று பொது சிவில் சட்டம் தேவை என்கிறது. இந்து சமய அறநிலையத் துறையின் அறம் கெட்ட செயல்களைச் சாடுகிறது. இதை மடாதிபதிகள் துணிவுடன் எதிர்த்து நிற்க வேண்டுமெனக் கோருகிறது.
மற்றொரு கட்டுரையில் கோயில் நிதியில் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளைக் கட்டி நிர்வகிப்பதை தவறு என்றும் ஆலய நிதி சமய வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
இன்று ஹிந்து இயக்கங்கள் வலியுறுத்தும் பல விஷயங்களுக்கு அவர் முன்னோடியாக இருந்துள்ளார் என்று தெரிகிறது.
நாத்திகவாத தி.க, தி.மு.க.வையும் தமிழ்மொழி உணர்வைத் தூண்டி ஹிந்து சமுதாயத்தைத் துண்டாட நினைக்கும் பிரிவினை சக்திகளையும் இவர் உறுதியுடன் எதிர்கொண்டுள்ளார். இவரைக் கொல்லவும் அச்சக்திகள் முயன்றுள்ளன.
12 மார்ச் 1897-இல் பிறந்த ஈசுரமூர்த்தி பிள்ளை, 1971 அக்டோபர் 19-ஆம் தேதி காலமானார். அவரது ஐம்பதாவது நினைவு ஆண்டில் இந்நூல் வெளிவந்துள்ளது.
வசதியற்ற குடும்பச் சூழல், சைவசித்தாந்த அறிவும் அதில் உறுதியாக நிற்கும் துணிவும் அன்றி வேறு ஏதும் அற்ற எளிய பின்னணியில் இவர் செய்த பணிகள் போற்றுதலுக்கு உரியவை.
சித்தாந்த பண்டித பூஷணம் ஈசுரமூர்த்தி பிள்ளையின் எழுத்துக்களை ஏற்றமுடன் வெளிப்படுத்தும் விதமாக, நல்ல முறையில் தொகுத்து பதிப்பித்த நண்பரும் ஊடகவியலாளருமான நெல்லை திரு. சொக்கலிங்கத்திற்குப் பாராட்டுக்கள். தி.மு.க. பத்தாண்டு கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கும் வேளையிலே இந்நூல் வெளிவந்திருப்பது சாலப் பொருத்தமே.
நூல் விவரம்:
சைவ சமயத்தில் மொழிப் போர்
தொகுப்பும் பகுப்பும்: திருநெல்வேலிப் பேட்டை சௌந்தர சொக்கலிங்கம்.
500 பக்கங்கள்; விலை: ரூ. 300-
செம்பொருள் பதிப்பகம்
எண் 6 A, 3
A-ப்ளாக், விக்னேஷ் ஃப்ளாட்,
தெற்கு மாடவீதி, திருவான்மியூர்,
சென்னை- 600 041.
அலைபேசி எண்: 94980 18395.
மின்னஞ்சல்: Chemporul21@gmail.com