-திரு.வி.கலியாணசுந்தரனார்

அத்தியாயம்- 2
உள்ளுணர்வும் வழிபாடும்
உள்ளுணர்வு
தோழர்களே!
முதல் நாள் ‘உள்ளமும் உருவமும்’ என்ற பொருள் பேசப்பட்டது. இன்று ‘உள்ளுணர்வும் வழிபாடும்’ என்பது பேசப்படும். இரண்டும் தொடர்புடையனவே.
உணர்வு வகை
உணர்வு இரு வகை. ஒன்று வெளியுணர்வு; இன்னொன்று உள்ளுணர்வு. இவை முறையே பொய்யுணர்வென்றும் மெய்யுணர்வென்றும் வழங்கப்படுகின்றன முன்னையது மனம் புறத்தே விரிந்து அலைந்து பொருளல்லாத பொருளிற் படியுங்கால் விளங்குவது; பின்னையது மனங் குவிந்து குவிந்து செம்பொருளிற் படியப் படிய விளங்கி வருவது.
விவகாரத்தில் உள்ளமும் உருவமும் ஒன்றுடன் ஒன்று ஒன்றும்போது தன்னை விளங்கச் செய்து கொள்வது உணர்வு. அஃது இரண்டு பொருள் சேர்க்கையில் தோன்றும். புதுப் பண்பு போன்றதன்று. உணர்வு, எங்கும் இருப்பது, இரண்டின் கூட்டுறவிலே துலங்குந்தன்மையது.
வெளியுணர்வு பொய்ம்மையது. அது பொறுமை அமைதி சாந்தம் அன்பு அருள் ஒப்புரவு முதலிய நறுங் குணங்களை வளர்க்கும் ஆற்றல் இல்லாதது. அதைப் பற்றிய பேச்சு ஈண்டைக்கு வேண்டுவதில்லை. எடுத்துள்ள பொருளும் அஃதன்று.
உள்ளுணர்வுத் தோற்றம்
உள்ளமும் உருவமும் ஒரு நிலையில் மறைந்தொழிவன. அவைகளின் கூட்டுறவால் எழும் உள்ளுணர்வோ அவைகளுடன் மறைந்தொழிவதன்று. உள்ள உருவக் கூட்டுறவு அற்றதும் உள்ளுணர்வுக்கு வேறு கூட்டுறவுகள் கிடைக்கும். அக் கூட்டுறவுகளால் அவ்வுணர்வு படிப்படியே தன்னைப் பெருகச் செய்துகொண்டே போகும். அது தன் சொரூபம் அடைந்ததும் பரவெளியில் கலக்கும்; ஒளியாகும்; உள்ளொளியாகும்; பரவொளியாகும்.
உள்ளுணர்வு உள்ளொளிக்குத் துணை செய்வதென்று சிலரும், உள்ளுணர்வே உள்ளொளியாகும் என்று வேறு சிலரும் கூறித் தம்முள் பிணங்கி வாதப் போரிடுவர். இது வாய் வேதாந்தம். உள்ளொளி நிலையில் வாக்கேது? மனமேது? அங்கே வாதமேது? ‘கலத்தல்’, ‘அது ஆதல்’ முதலிய சொற்களை வாய் வேதாந்திகள் மனம் போனவாறு பொருள் படுத்தித் தாங்களும் பாழாகிப் பிறரையும் பாழ்படுத்துகிறார்கள். அனுபவத்தில் தெளிவு பெறத்தக்க நுண்மைகளைப் பருமையுணர்வால் வாதத்தில் புகுத்துவது அறமாகாது.
உள்ள உருவச் சேர்க்கையால் தலைகாட்டும் உள்ளுணர்வு வாளா இராது. அது, தன்னை மேலும் மேலும் விளங்கச் செய்யவே விரையும். விரையும் உள்ளுணர்விற்கு ஏதாவ தொன்று வேண்டுமன்றோ? பொருந்தியது எது? வழிபாடு. வழிபடுதல் வழிபாடு. உள்ளுணர்வு வளர்ச்சிக்கு வழிபாடு ஒளிபோன்றது.
வழிபாடு
‘உள்ளமும் உருவமும்’ என்னும் பொருளில் ‘ உள்ளுணர்வும் வழிபாடும்’ என்பது தொக்கி நிற்பது. உள்ளமும் உருவமும் ஒன்றுடன் ஒன்று உறவுடையன. இவ்வுறவால் விளைவது உள்ளுணர்வு. உள்ளுணர்வுடன் கேண்மை கொண்டது வழிபாடு. இத்தொகை முறைமையை ‘உள்ளமும் உருவமும்’ என்பதும், ‘ உள்ளுணர்வும் வழிபாடும்’ என்பதும் வகைப் படுத்துவனவாம். சிலவிடங்களில் தொகை முறைமை பற்றியும், சிலவிடங்களில் வகை முறைமைப் பற்றியும் பேசிச் செல்வன்.
உருவ வகை
உள்ளம் எத்தனையோ வித உருவங்களில் படிகிறது. அப்படி வினின்றும் எழுவனவெல்லாம் உள்ளுணர்வாகுமா? ஆகா. உள்ளுணர்வை எழுப்பவல்ல உருவங்களில் உள்ளம் சேர்க்கை பெறுதலே நல்லது. இல்லையேல் உள்ளுணர்வு அரும்புதலுஞ் செய்யாது. இங்கே உருவங்களில் வகைகளிருத்தலைக் கருதுங்கள். வகைகளைப் பலப்பட விரிக்கலாம்.
பலபட்ட விரிவு இங்கே அநாவசியம். வகைகளை இரண்டாக இங்கே தொகுக்கலாம். ஒன்று, உள்ளம் தன்பால் படியுங்கால் உள்ளுணர்வை எழுப்பத் தகுதி வாய்ந்த உருவக் கூட்டம்; மற்றொன்று, உள்ளுணர்வை எழுப்பத் தகுதி இல்லாதது. முன்னையதில் உறுவது வழிபாடு; பின்னையதில் உறுவது வழிபாடாகாது. வழிபாடு ஆழ்ந்த பொருளுடையது. வழிபாடென்று கண்ட கண்ட உருவங்களிற் கருத்துச் செலுத்தலாகாது. வழிபாட்டுக்கு விழுமிய உருவைக் குறிக்கொள்ளல் வேண்டும்.
உள்ளம் உருவத்தில் ஒன்றி ஒடுங்குதற்கும், அதனால் உள்ளுணர்வு எழுதற்கும் வேண்டப்படுவது வழிபாடு. அவ்வழிபாட்டைச் சிறிது விரித்துப் பேச முற்படுகிறேன்.
விழுமிய ஒன்று- கடவுள்
விழுமிய ஒன்றைக் குறிக்கொண்டு நிகழ்த்தப்படுவது வழிபாடு. விழுமிய ஒன்று எது? மனநெடுந்தேரேறிச் செல்வோம். விழுமிய ஒன்று [1]’ இஃதன்று இஃதன்று’ என்றே மனஞ் செல்கிறது; மேலுஞ் செல்கிறது; மனம் தளர்கிறது; சோர்கிறது; வீழ்கிறது. மேலே மேலே கடந்து அது செல்லினும் அதனால் விழுமிய ஒன்றன் எல்லை காண்டல் இயல வில்லை. எல்லாவற்றையுங் கடந்து எல்லையற்றதாக உள்ள ஒன்று இருத்தல் வேண்டும். எல்லைக்கு எல்லையற்ற ஒன்று இருந்தே தீர வேண்டும். அஃது எது? அதையே உலகம் கடவுள் என்று ஏற்றுப் போற்றி வருகிறது. கடவுளே விழுமியது. கடவுளினும் விழுமியதொன்றில்லை.
——————————-
[1]. ‘அல்லைஈ தல்லை ஈதென மறைகளும் அன்மைச்
சொல்லி னால் துதித் திளைக்குஞ் சுந்தரன்
– திருவிளையாடற் புராணம்
பொருள்
கடவுள் என்பது ஒரு சிறந்த சொல்; தமிழ்ச் சொல். கடவுள் – கடத்தல் என்னும் பொருளுடையது; எல்லாவற்றையுங் கடந்து எல்லையற்று நிற்பது. கடந்த உள் (உள்ளம் ) என்று கொண்டு எல்லாவற்றையுங் கடந்த உள்ளத்தில் பொலிவது என்று பொருள் கூறுவோரும் உளர். கடவு உள் (கடவுதல் – செலுத்துதல்) என்று கொண்டு எல்லா உள்ளங்களையும் – உயிர்களையும் – செலுத்துவது என்று பொருள் விரிப்போரும் உளர். இன்னும் பல பொருள் பகர்வோரும் உளர்.
——————————-
கடவுள் வழிபாடு
கடந்த ஒன்றே விழுமியது. அதனிடம் உள்ளத்தைச் செலுத்துவது வழிபாடாகும். வழிபாடு என்றதும் உலகம் எதைக் கருதுகிறது? கடவுள் வழிபாட்டையே கருதுகிறது. இவ்வாறு கருதுவது பெருவழக்காய் – மரபாய் – விட்டது. ஆகவே, வழிபாடென்பது கடவுளையே குறிக்கொண்ட தென்று கொள்க. என்னை? கடவுளுக்குமேல் விழுமிய தொன்று இன்மையால் என்க. இங்கே யானும் ‘ வழிபாடு என்று கடவுள் வழிபாட்டையே பேசப் புகுகிறேன்,
கடவுள் உருவமா? உருவமற்றதா?
வழிபாடு உருவத்தைப்பற்றி நிகழ்வது என்று முன்னே சொல்லப்பட்டது. இங்கே வழிபாடு கடவுளைக் குறிக்கொண்டது என்று சொல்லப்படுகிறது. இவ்விடத்தில் கடவுள் உருவமா? உருவமற்றதா? என்னுங் கேள்வி எழாமற் போகாது. கடவுள் உருவமாயின், அஃது எல்லை யுடையதாய் அழியுந் தன்மையதாதல் வேண்டும். கடவுள் எல்லையுடையதும் அன்று; அழியுந் தன்மையதும் அன்று. கடவுள் உருவமற்றதாயின், அதை எப்படி வழிபடுவது? உருவமற்றதை எவ்வாறு மனம் நினைக்கும்? வாய் வாழ்த் தும்? கை கும்பிடும்? கடவுளை உருவம் எனில் அதன் இயல்புக்கே ஊறு நேர்வதாகிறது. கடவுளை உருவமற்றதெனில் வழிபாட்டுக்கு ஊறு நேர்வதாகிறது. தர்ம சங்கடம்! என் செய்வது! கடவுளின் உண்மை நிலை தெரிய வரின் ஒருவித முடிவுக்கு வரலாம்.
கடவுளின் உண்மை நிலை – சொரூபம்
கடவுளின் உண்மை நிலையை அறுதியிட்டுக் கூறுதற்கு என் போன்றார் அருகரல்லர். எனக்கு வாக்குண்டு; மன முண்டு. வாக்கும் மனமும் எல்லையுடையன. எல்லையுடைய வாக்கும் மனமும் எல்லையற்ற கடவுளை எங்ஙனம் ஆராயும்? விஞ்ஞானக் கலையும் கடவுளாராய்ச்சிக்கு முற்றுந் துணை செய்யாது. அதன் துணை சிறிது தூரம் கிடைக்கும்; மேலே கிடைத்தல் அரிது. திருஞானசம்பந்தர்,
‘ஏதுக்க ளாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்
சோதிக்க வேண்டா ……’
என்று அருளியுள்ளனர். ஏன்?
‘சுடர்விட்டுளன் எங்கள் சோதி’
என்று அவர் காரணமும் காட்டுகிறார். கடவுளை ஆராயப் புகுந்தால், அஃது ஆராய்ச்சிக்கு மேலும் மேலும் வளர்ந்து செல்லுந் தன்மையது என்பது கருத்து. பின்னை எவ்வாறு முடிவு காண்பது? அநுபூதிமான்களை அடைவதே நல்லது. அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? அவர்களிருப்பிடங்கள் அவர்கள் நூல்களே. அவர்கள் துணையை நாடுவோம். பெரியோர் மறைமொழிக ளெல்லாம் ஒருமுகமாகக் கடவுள் உருவமற்றது’ என்றே அறை கூவுகின்றன.
தம்மை யாரும் அறிவாரில்லை. – திருஞானசம்பந்தர்
பின்னு சடை…
இன்ன உரு என்று அறி வொண்ணா தான் காண்.
நற்பதத்தார் …………
சொற்பதத்தார் சொற்பதமுங் கடந்து நின்ற
சொலற்கரிய சூழலாய் இது உன் தன்மை – திருநாவுக்கரசர்
உணர்ந்துணர்ந் திழிந்தகன் றுணர்ந்துரு வியந்தவிந் நிலைமை
உணர்ந்துணர்ந் துணரினும் இறைநிலை உணர்வரிது. – நம்மாழ்வார்.
சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க
சித்தமுஞ் செல்லாச் சேட்சியன் காண்க.
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே – மாணிக்கவாசகர்
யார் அறி வார் எங்கள் அண்ணல் பெருமையை
யார் அறி வார் அந்த அகலமும் நீளமும்
பேரறி யாத பெருஞ்சுடர் ஒன்றதன்
வேரறி யாமல் விளம்புகின் றேனே.
உரையற்ற தொன்றை உரைசெயும் ஊமர்காள். – திருமூலர்
அன்றுந் திருவுருவங் காணாதே ஆட்பட்டேன்
இன்றுந் திருவுருவங் காண்கிலேன் – என்றுந்தான்
எவ்வுருவோ நும்பிரான் என்பார்கட் கென்னுரைக்கேன்
எவ்வுருவோ நின்னுருவம் எது? – காரைக்காலம்மையார்
வாசித்துக் காணொ ணாதது
பூசித்துக் கூடொ ணாதது
வாய்விட்டுப் பேசொணாதது. – அருணகிரியார்
பெருவெளியாய் …….
. … மனமாதிக்கு எட்டாத பேரின்ப மயமாய்.
சொல்லுக் கடங்காச் சுகப்பொருளை
சொல்லாய தொகுதியெலாங் கடந்து நின்ற
சொரூபானந் தச்சுடரே. – தாயுமானார்
இப் பெருமொழிகளை நோக்குழிக் கடவுள் உருவமற்ற ஒன்று என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்குகிறது.
வழிபாடு – உருவம் – உருவமற்றது
உருவமற்ற கடவுளை எப்படி வழிபடுவது? உருவமற்றது உள்ளத்தில் எவ்வாறு தங்கும்? அப்பொழுது கடவுள் வழிபாடு நடவாமலிருத்தல் வேண்டுமன்றோ ? கடவுள் வழிபாடு நடவாமலா இருக்கிறது? அஃது எங்கணும் நடைபெற்றே வருகிறது.
கடவுள் உருவமற்றது என்று பேசிக் கொண்டே அதை நினைக்கின்றவரும் இருக்கின்றனர். ஜெபிக்கின்ற வரும் இருக்கின்றனர். அன்னவர் உள்ளம் எதைப்பற்றி நினைக்கிறதோ? வாய் எதைப்பற்றி ஜெபிக்கிறதோ? தெரியவில்லை .
பல ஆண்டுகட்கு முன்னர் உருவ வழிபாட்டைக் கண்டிப்பதற்கென்று சென்னைச் செங்கான்கடைக் கொட்டகையில் ஒரு பெருங் கூட்டங் கூடிற்று. அக் கூட்டத்தில் உருவ வழிபாடு மிக உரமாகக் கண்டிக்கப்பட்டது. இறுதியில் ஒரு ஜெபக்கூட்டம் நடந்தது. முடிவில் பர மண்டலத்திலிருக்கிற எங்கள் பிதாவே…’ என்பது ஜெபிக் கப்பட்டது. அங்கிருந்த உருவம், பரமண்டலம் எங்கே இருக்கிறது? அங்கே பிதா எக்கோலத்துடன் வீற்றிருக்கிறார்? இரண்டும் உருவமல்லவா?’ என்று கேட்டார்; இன்னொருவர். ‘நீங்கள் ஜெபம் செய்யும் போது உங்கள் உள்ளத்தில் ஏதேனும் உருவம் நிலைக்கிறதா? அல்லது அது சூந்யமாய்க் கிடக்கிறதா?’ என்று கேட்டார். இக் கேள்விகட்குப் பாதிரியார் பதிலளியாமலே புறப்பட்டார். கூட்டத்திலிருந்த ஒரு சகோதரியார், “பாதிரியார் ஜெபஞ். செய்தபோது அவரால் பெரிய பாதிரியாக மதிக்கப் பெற்ற ‘பிஷப்’ உருவம் அவர் உள்ளத்தில் நிலவியிருக்கும்; எனக்கு அவ்வாறு அவர் நிலவுவது உண்டு” என்றார். அங்கே இருந்த வேறு ஒரு பாதிரியார், ‘நீ ஒரு கிறிஸ்துவப் பெண்ணா ?’ என்று சகோதரியாரைக் கடிந்தார். உருவ வழிபாட்டை மறுக்கும் பலரிடை யான் உரையாடியுள்ளேன். ‘ மனம் உருவமற்றதை எப்படி நினைக்கும்?’ என்னுங் கேள்விக்குப் பொருந்திய விடையை யான் பெற்றதே இல்லை.
வழிபாட்டைக் குறித்து எவ்வழியில் நின்று ஆராய்ந்து பார்த்தாலும், உருவமற்ற கடவுளை, உருவமே நிலைக்கும் மனமுடையார் வழிபடல் இயலாதென்று தெரிகிறது. கடவுள் உருவமுடையதாயின் வழிபாடு நிகழ்தற்கு இடமுண்டாகும். கடவுளோ உருவமுடையதன்று. அஃது உருவமுடையதாயின், அஃது எல்லையுடையதாய் அழியுந் தன்மையதாகும். கடவுள் எல்லையுடையதுமன்று; அழியுந் தன்மையதுமன்று. இதை மீண்டும் மீண்டுங் கூறுவதால் என்ன பயன் விளையும்? வழிபாடு வேண்டா என்னும் பயனே விளையும். வழிபாட்டை விட்டு விடலாமா? வழிபாடு விடப்படின் மக்களுலகம் மாக்களுலகமாகும். வழிபாடு வேண்டும்; அவசியம் வேண்டும்.
எதை எப்படி வழிபடுவது? ஒன்றும் விளங்கவில்லை. என் செய்வது! கடவுளுண்மையைத் தெளிந்து மெய்யுணர்வு பெற்ற அநுபூதிமான்களின் மறைமொழிகளைத் துணை கொண்டு பார்க்கப் பார்க்க வழி தோன்றும் என்று நினைக்கிறேன்.
கடவுளின் உருவநிலை
மறைமொழிகளை ஆய்ந்தால் அவைகளில் கடவுளுக்கு இருநிலை காணப்படுகின்றன. ஒருநிலை எல்லாவற்றையுங் கடந்து கடவுள் மட்டுந் தனியே நிற்பது; மற்றொரு நிலை எல்லாவற்றுள்ளுங் கடவுள் கலந்து நிற்பது. அது சொரூபம் (நிர்க்குணம்) என்றும், இது தடத்தம் (சகுணம்) என்றும் வழங்கப்படுகின்றன. தடத்தம் மூவிதம். அவை: சகளம் (உருவம்), நிஷ்களம் (அருவம்), சகளநிஷ்களம் (அருவுருவம்) என்பன. உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூன்றும் உருவமுடையன என்பது முதல் நாள் விளக்கப் பட்டது. நிஷ்களத்தைச் சிலர் உருவம், அருவம், அருவுருவங் கடந்த சொரூபம் என்று சொல்வர். அது தவறு.
எல்லாவற்றையுங் கடந்த சொரூபம் உருவமில்லாதது. மனத்துக்கு எட்டாதது; பேச்சற்றது. இத்தகைய ஒன்றை மனமுடைய யான் எவ்வுரையால் அளந்து கூறவல்லவனாவேன்? தடத்தம் உருவமுடையது; கடவுளின் இருநிலையில் ஒன்றா யிருப்பது.
உருவத்துக்குத் தோற்றம் அழிவு என்னும் விகாரமுண்டு. கடவுளுக்கு அவ் விகாரமில்லை. விகாரமில்லாக் கடவுளுக்குத் தடத்தம் என்னும் உருவமும் பேசப்படுகிறது! இஃதென்ன? மயக்கம் உண்டாகிறது. இங்குச் சிறிது விளக்கந் தேவை.
கடவுள் உருவமற்றதே. அதில் எவ்வித ஐயமுமில்லை. கடவுள் உருவமற்றதாயின், அஃதல்லாத பிற எல்லாம் உருவமற்ற கிடக்கின்றன? இல்லை, அவையெல்லாம் உருவமுற்றே கிடக்கின்றன. மாயாகாரிய தத்துவ புவனமெல்லாம் உருவமே. மாயாகாரிய தத்துவம் எதுவரை? நாதம் வரை. மண் முதல் நாத மீறாக உள்ள தத்துவங்களும், அவைகளின் விரிவுகளும் உருவமே. உருவமுடைய மாயாகாரிய தத்துவ உலகங்களெல்லாம் சடம். சடம் தானே இயங்குமா? இயங்காது. சடஉலகங்கள் இயங்குகின்றனவா? இல்லையா? அவ்வுலகங்கள் இயங்குதலை நாம் நன்கு உணர்கிறோம். எப்படி அவைகள் இயங்குகின்றன?
சடஉலகங்களை இயக்கும் ஒன்றிருத்தல் வேண்டும். அவ்வொன்று சடமாக இருத்தலாகாது. அது சடத்துக்கு மாறுபட்ட சித்தாய் (அறிவாய்) இருத்தல் வேண்டும். அதுவே கடவுள் என்பது. உலகங்கள் கடவுளால் இயக்கப் படுகின்றன. அவைகளைக் கடவுள் எங்கிருந்து இயக்கு கிறது? ஓரிடத்திலிருந்து கைகால் கொண்டா இயக்கு கிறது? கடவுள் எங்குமுள்ளது; எங்கும் நீக்கமற நிறைந் திருப்பது. அஃது இல்லாத இடமில்லை. ஆங்காங்கே கடவுளின் கலப்புப் பெற்றே மாயாகாரிய உலகங்கள் இயங்குகின்றன.
இல்லானை எவ்விடத்தும் உள்ளான் தன்னை.
எல்லா உலகமும் ஆனாய் நீயே.
அருந்த வர்கள் ………….
மறிகடலும் குலவரையும் மண்ணும் விண்ணும்
திருந்தொளிய தாரகையும் திசைக ளெட்டும்
திரிசுடர்கள் ஒரிரண்டும் பிறவும் ஆய
பெருந்தகையை … – திருநாவுக்கரசர்
துன்பமும் இன்பமு மாகிய செய்வினையாய் உலகங்களுமாய்
இன்பமில் வெந்நர காகி இனிய நல் வான்சுவர்க் கங்களுமாய்
மன்பல் லுயிர்களு மாகிப் பலபல மாய மயக்குகளாய்
இன்புறும் இவ்விளை யாட்டுடை யானைப்பெற்றேது மல்லலிலனே.
– நம்மாழ்வார்
தானே கடல்மலை ஆதியுமாய் நிற்கும்
தானே திசையொடு தேவருமாய் நிற்கும்
தானே உடலுயிர் தத்துவமாய் நிற்கும்
தானே உலகில் தலைவனு மாமே. – திருமூலர்
எங்கெங்கே பார்த்தாலும் எவ்வுயிர்க்கும் அவ்வுயிராய்
அங்கங் கிருப்பது நீ யன்றோ பராபரமே.
எங்கெங்கும் பார்த்தாலும் இன்புறுவாய் நீக்கமின்றித்
தங்குந் தனிப்பொருளைச் சாருநாள் எந்நாளோ. – தாயுமானார்
பாராதி எட்டுமப் பாலுமெப்பாலுமாய்
ஓர்சோதி யேநின்ற துந்தீபற
உன்னுவே றில்லையென் றுந்தீபற. – சாந்தலிங்கர்
கடவுள் உருவமற்றது; எங்கும் உள்ளது. ‘எங்கும்’ என்பது இடத்தை உணர்த்துவது. மாயாகாரியம் எவ்வளவு தூரம் மண்டி நிற்கிறதோ அவ்வளவு தூரமும் மண்டி நிற்பது எங்கும்’ என்பது. ‘எங்கும்’ என்பதற்கு மேலுங் கடந்து நிற்பது கடவுள். எங்கும்’ வரை நிலவுவது கடவுளின் தடத்தம்; அதற்குமேல் தனித்து விளக்குவது கடவுளின் சொரூபம்.
உருவமற்ற கடவுளுக்கு மாயாகாரியம் (எங்கும் வரை) உடலாகிறது. இவ்வுடலைக் கடவுளின் உருவம் என்று சொல்வது மரபு. கடவுள் ஒன்றே. நிலைமட்டும் இரண்டு. மாயாகாரியம் வரைக் கடவுள் உருவ நிலை பெறுகிறதென்றும், அதற்குமேல் அஃது உருவமற்ற நிலையிலிருக்கிறதென்றுங் கொள்க.
கலப்பு நுட்பம்
பூதம் ஐந்து. அவைகளில் ஒன்று ஆகாயம். ஆகாயத்தின் இயல்பென்னை? ஆகாயம் தனித்தும் மற்றப் பூதங்களிற் கலந்தும் நிற்பது. இதேபோலக் [1] கடவுளும் தனித்தும்
மற்ற மாயாகாரிய உலகங்களில் கலந்தும் நிற்பது. ஓர் ஆகாயத்துக்கு இரண்டு நிலை இருப்பது போல ஒரு கடவுளுக்கு இரண்டு நிலை இருக்கின்றன. ஆகாயம் மற்றப் பூதங்களினூடே கலந்து நிற்றலால், இவைகளின் தாக்குதலோ மாறுதலோ அதற்கு உண்டாவதில்லை. அங்ஙனே மாயா காரியங்களில் கடவுள் கலந்து நின்றாலும், அவைகளின் தாக்குதலோ மாறுதலோ கடவுளுக்கு உறுவதில்லை.
——————————-
[1] ஈறாய்முத லொன்றாயிரு பெண்ணாண்குண மூன்றாய்
மாறாய்மறை நாய்காய்வரு பூதம் அவை ஐந்தாய்
ஆறார்சுவை ஏழோசையொ டெட்டுத்திசை தானாய்
வேறாய் உடன் ஆனான் இடம் வீழிமிழலையே. – திருஞானசம்பந்தர்
——————————-
இயற்கை
மாயை’, ‘மாயை’ என்று அடிக்கடி சொல்லி வருகிறேன். மாயை எது? இயற்கை. மாயை என்பது பழைய கால ஆட்சி. இயற்கை (Nature) இக்கால ஆட்சி. மாயை என்றால் இக்கால இளைஞர்க்கு மயக்கம் உண்டாகும். இயற்கை என்றால் அவர்க்கு மயக்கம் உண்டாவதில்லை; பொருளும் எளிதில் விளங்கும். இயற்கை கடவுளின் உடல். அதற்குள் கடவுள் உயிராக நின்று அதை இயக்குகிறது. நம்முடைய உடலில் உயிர் இருப்பது போல இயற்கையில் கடவுள் இருக்கிறது. கடவுள் இயற்கை அளவில் நின்று விடவில்லை; அதற்கு மேலும் கடந்து நிற்கிறது. இயற்கை கடந்த கடவுளின் நிலை சொரூபம் என்றும், இயற்கையினுள் இருக்கும் அதன் நிலை தடத்தம் என்றும் அடிக்கடி சொல்ல வேண்டுவதில்லை.
என்னுடைய உடல் இருக்கிறது. அதனுள் உயிர் இருக்கிறது. உயிர் காணத் தக்கதா? காணத் தக்கதன்று. அதனால் உயிர் இல்லாததாகுமா? ஆகாது. உயிர் இருப்பது. அதனால் உடல் இயங்குகிறது. ஆனால் அது காணக்கூடியதா யில்லை. காணக்கூடாத அதன் உண்மையை எப்படி உணர்வது? காணக்கூடிய உடலைக்கொண்டே காணக்கூடாத உயிரை உணர்தல் வேண்டும். உடலை விடுத்து உயிரை உணர்தல் இயலுமா?
கடவுள் உயிர் போன்றது. இயற்கை உடல் போன்றது. உடலாகிய இயற்கையைக் கொண்டு உயிராகிய கடவுளை உணர்தல் வேண்டும். கடவுளுண்மையை உணர்தற்கும் இயற்கை உடல் – உருவம் – தேவையாகிறது. ஈண்டும் உருவத்தின் பெற்றி விளங்குதல் காண்க. [1] இயற்கையை விடுத்துக் கடவுள் உண்மையை உணர்தல் இயலாது. உடலாக நின்று கடவுள் உண்மையை உணர்த்தும் ஆற்றல் இயற்கைக்கு இருத்தலால், அதைக் கலைஞரும் ஞானியரும் பிறரும் பற்றலாயினர்; போற்றலாயினர். கலையும் ஞானமும் பிறவும் இயற்கையை அடிப்படையாக் கொண்டு பிறப்பனவாம்.
——————————-
[1] வெற்ற …… இயற்கையை யொழிந்திட்டு
அற்றவர்க்கு அற்ற சிவன் -திருஞானசம்பந்தர்.
——————————-
உருவமில்லாத கடவுளை நேரே உணர்தல் அருமை கடவுள் உண்மையை உணர்தற்கு அதன் உடலாக உள்ள இயற்கையைப் பற்றுதல் வேண்டும். இயற்கையைப் பற்றிப் பற்றி அதனுடன் ஒன்ற ஒன்றக் கடவுள் உண்மை படிப்படியே விளங்கி வரும். இயற்கையைக் கடந்துள்ள சொரூபம் எப் பற்றுதலுக்கும் எட்டாதது.
இயற்கையைப் பற்றுவது கடவுள் உடலைப் பற்றுவதாகும். உடலைக் கொண்டே உயிருண்மை உணர்தல் வேண்டும். இயற்கை என்னுங் கடவுளின் உடலைப் பற்றுவதை வழிபாடென்று உலகம் உரைக்கிறது. வழிபாடு கடவுளைக் குறிக்கொண்டதென்பதன் பொருள் இங்கே விளங்குதல் காண்க. இயற்கையை வழிபடுவது கடவுளை வழிபடுவதாகும். இயற்கை ஒரு வாயில் . வழிபாடு அதன் வழியே அதன் உயிராக உள்ள கடவுளைச் சாரும்.
‘உருவமற்ற கடவுளை வழிபடுவதெப்படி’ என்ற ஐயம் எழுந்ததன்றோ? இப்பொழுது அவ் வையத்துக்கு இடமுண்டோ? கடவுள் உருவமற்றதே. ஆனால் அஃது ஒரு நிலையில் உடல் பெறுவதாகிறது. அதனால் அதன் நிலைமையோ தன்மையோ மாறுவதில்லை. ஒரு நிலையில் கடவுள் இயற்கை உடல் பெறுவதால், அதை உருவநிலை யென்று உலகம் கொள்ளலாயிற்று.
உயிர் உடலைத் தாங்கினமையால் உயிர் உருவமாகப் பரிணமித்ததாகுமோ? ஆகாது. உயிர் தன் தன்மையினின்றும் வழுவுவதில்லை. உயிர் உயிராகவே இருக்கிறது. அதன் உண்மையை உணர்த்த உடல் கருவியாகத் துணை புரிகிறது. இதேபோலக் கடவுள் இயற்கையை உடலாக் கொண்டமையால், அது தோன்றி நின்றழியும் உருவமாகப் பரிணமித்ததாகாது. கடவுள் கடவுளாகவே இருக்கிறது. இயற்கை தன் அளவுவரை அதற்கு உடலாகி, அதன் உண்மையை உணர்த்துங் கருவியாய் நிற்கிறது. கடவுள், இயற்கையை உடலாக் கொண்ட நிலையை அதன் உருவமென்று சொல்வது உலக வழக்கு. இயற்கையின் எல்லையைக் கடந்து கடவுள் தனித்து நிற்கும் நிலை உருவமற்ற சொரூபம் என்று சொல்லப்படுகிறது.
கடவுள் எல்லாவற்றையுங் கடந்து தனித்து நிற்கும் தனது நிலையுடன், இயற்கையை உடலாகத் தாங்கும் மற்றொரு நிலையையுங் கொண்டுள்ளது. இஃது அதன் அருளேயாகும். உலகிடை வழிபாட்டை வாழச் செய்யவே கடவுள் இயற்கைக் கோலம் பூண்டது. இதைத் தெளிந்து வழிபாட்டை வளர்க்க வேண்டுவது நமது கடன்.
இயற்கையில் செயற்கை
உலகில் பலதிற வழிபாடுகள் நடைபெறுகின்றன. அவைகள் யாவும் தொடக்கத்தில் இயற்கையை அடிப்படையாகக் கொண்டே எழுந்தன. நாளடைவில் அவைகளிற் பலப்பல செயற்கைச் ‘செக்கு’களாயின. காரணம், இயற்கை வழிபாட்டிலே உலகம் நுழைத்த கிரியைகளேயாம். அந்தோ! உலகம் கோலிய கிரியை ஒன்றா? இரண்டா? பல்லாயிரம்! பல்லாயிரம்! பொருளற்ற வெறுங் கிரியைகள் இயற்கை வழிபாட்டைச் செயற்கையாக்கின. இயற்கைக்கு அரண் செய்யத்தக்க கிரியைகளுஞ் சில உண்டு. அவைகளை இங்கே தொகுத்துக் கூற வேண்டுவதில்லை. வழிபாட்டுத் திறங்கள் பலவாக; கிரியைகள் பலவாக. வழிபாடு மட்டும் இயற்கை வழிக் கடவுளைக் குறிக்கொள்வதாயின், அதற்கு எவ்விதக் கேடும் நேராது.
இயற்கை வழிக் கடவுளைக் குறிக்கொண்டு நிகழ்வது வழிபாடு. அதை இயற்கை வழிபாடென்று சுருங்கச் சொல்லலாம்; இன்னும் வழிபாடென்று சுருக்கலாம். வழிபாடென்பது இயற்கை வழிக் கடவுளைக் குறிக்கொண்ட ஒன்று என்று கோடல் வேண்டும்.
இருவகை வழிபாடு
வழிபாட்டை இரண்டு கூறிட்டுக் கொள்ளலாம். ஒன்று புற வழிபாடு; மற்றொன்று அக வழிபாடு. புற வழிபாடு, அக வழிபாட்டுக்கு ஆக்கந் தேடுவது. புறமனத்தை அலைய வைத்துக்கொண்டு அக வழிபாடென்று பேசுவதும் முயல்வதும் கானற்சலத்தை நம்பியோடினவன் கதையாக முடியும். புற வழிபாடு நேரிய முறையில் நடைபெறின், அக வழிபாடு தானே படிப்படியே கூடும். புற வழிபாடு ஏணி போன்றது.
சகமலா தடிமை யில்லை தானலால் துணையு மில்லை
நகமெலாந் தேயக் கையால் நாண்மலர் தொழுது தூவி
முகமெலாங் கண்ணீர் மல்க முன்பணிந் தேத்துந் தொண்டர்
அகமலாற் கோயி லில்லை ஐயன்ஐ யாற னார்க்கே.
-இது திருநாவுக்கரசர் திருவாக்கு. இதில், புற வழிபாடு அக வழிபாட்டுக்குச் செய்யுந் துணையும், இரண்டுக்குமுள்ள தொடர்பும் விளங்குதல் காண்க.
புற வழிபாடு, கடவுளைத் தன்னினின்றும் வேறுபடுத்திப் பிரித்து மகன் வழிபடுவது. அக வழிபாடு அவன் கடவுளைத் தன்னினின்றும் பிரியாது தன்னுட்கொண்டு வழிபடுவது. இவை முறையே துவித வழிபாடென்றும், அத்துவித வழிபாடென்றும் வழங்கப்படுகின்றன. இதனை, ‘வேதமுட னாகம் ……. ஓதரிய துவிதமே அத்துவித ஞானத்தை உண்டுபணு ஞானமாகும்’ எனவருந் தாயுமானார் மெய்ம் மொழி வலியுறுத்துவதாகும். கிறிஸ்து பெருமான், பர மண்டலத்திலிருக்கிற எங்கள் பிதாவே’ என்கிறார்; [1] கடவுளின் ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறது” என்கிறார்; [2] நானும் பிதாவும் ஒன்றே’ என்கிறார். இம்மூன்றும் ஒருவரிடத்திருந்தே பிறந்த மொழிகள். இவை உலகோபகாரமாகப் பிறந்தன; தொடர்புடையன. முதலாவது புற வழிபாட்டை உணர்த்துவது; இரண்டாவது அக வழிபாட்டை அறிவிப்பது; மூன்றாவது வழிபாட்டைக் கடந்த நிலையைத் தெளிவிப்பது. தமிழ்நாட்டிற் றோன்றிச் செந்நெறி வளர்த்த நால்வரும் தமது மறைமொழிகளின் தொடக்கத்திலேயே அகவழிபாட்டுக் குறிப்புக்களைப் பொறித்தருளியது இங்கே கருதத்தக்கது. ‘எனது உள்ளங் கவர் கள்வன்’ என்று திருஞானசம்பந்தரும். பிரியாது வணங்குவன் எப்பொழுதும்’ (பிரிந்து வணங்கல் புற வழிபாடு) என்று திருநாவுக்கரசரும், ‘நினைக்கின்றேன் மனத்துன்னை’ என்று வன்றொண்டரும், * இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க’ என்று மாணிக்கவாசகரும் அருளியிருத்தலை நோக்குக. இவர் புற வழிபாட்டைப் பெரிதுஞ் செய்து, அவ் வழிபாட்டைப் பாடியது உலகறிந்த தொன்று. ஆனால், அக வழிபாட்டைத் தொடக்கத்திலேயே ஏன் அருளிச் செய்தனர்? அக வழிபாடு சிறந்ததென்று உலகம் உணர்ந்து அதை அடைவதற்குரிய புற வழிபாட்டில் ஈடுபடவேண்டு மென்பது அவர்தம் உள்ளக்கிடக்கை. ஆகவே, புற வழிபாடு இன்றியமையாது வேண்டற்பால தென்க. புற வழிபாட்டைப் புறக்கணிப்போர்க்கு அக வழிபாடு கூடுதல் அரிது! அரிது! அரிது!
——————————-
[1]. மத்தேயு: 6:9. ‘லூக்கா: 17 : 21. [2] யோவான்: 10 : 30
——————————-
வழிபாடு – யோகம்
வழிபாடு என்றதுஞ் சிலர்க்கு அலட்சிய நோக்கு உண்டாதலை யான் பார்த்திருக்கிறேன். வழிபாடு என்னுஞ் சொல்லே அவர்க்குப் பிடிப்பதில்லை. ‘சாதாரண அஞ்ஞானிகள் நிகழ்த்துவது வழிபாடு’ என்று அவர் சொல்கிறார். மெய்ஞ்ஞானத்துக்கு வழி யாது என்றால் அவர் ‘ யோகம்’ என்பர். இச் சகோதரர் வழிபாடு ‘யோகம்’ என்னுஞ் சொற்களில் கருத்துச் செலுத்துவோர் என்று தெரிகிறது. வழிபாடு என்றால் என்ன? யோகம் என்றால் என்ன? இரண்டும் பொருளில் வேறுபட்டனவல்ல; ஒன்றே. தாயை, ’அன்னை’ என்றால் என்ன? ’மாதா’ என்றால் என்ன? மாதா என்னுஞ் சொல் தமக்கை என்னும் பொருளைத் தருவதாகுமோ? வழிபாடே யோகம்; யோகமே வழிபாடு. எவ் வழிபாடு? அக வழிபாடு.
யோகம் என்பது ஒன்றல் என்னும் பொருளுடையது. ஒன்றல் தனித்த ஒன்றில் நிகழாது. ஒன்றலுக்கு இரண்டு தேவை. ஒன்றுடன் ஒன்றலே ஒன்றல் என்னும் பொருளுடையதாகும். இரண்டு எவை? சீவான்மா பரமான்மா. சீவான்மா பரமான்மாவுடன் ஒன்றுவது யோகம். இதைச் சீவான்மா பரமான்மாவை அகத்தில் வழிபடுவது என்றுங் கூறலாம். ஒன்று ஒன்றுடன் ஒன்றும் நிகழ்ச்சி ஒன்றே. ஆகவே, யோகமே அக வழிபாடு; அக வழிபாடே யோகம் என்று தெளிக. யோகமென்னும் அக வழிபாட்டுக்குக் கால்கொள்வது புற வழிபாடு.
யோகங்கள்
யோகங்கள் பலபடப் பேசப்படுகின்றன. அவைகளின் விரிவைக் கடலுக்கு ஒப்பிடலாம். நல்யோக முறைகள் பெருக்கெடுத்தபோது அவைகளினூடே போலிகளும் கலந்து கொண்டன. ‘இது செவ்வியது; இது போலி ‘ என்று பகுத்தறிதல் தொல்லையாயிருக்கிறது. ஆராய்ச்சி அனுபவம் முதலியவாற்றால் பகுத்தறிவை நல்வழியில் பயன்படுத்தினால் உண்மை விளங்காமற் போகாது.
யோக விதங்கள்
யோக விதங்கள் பலவற்றுள்ளுஞ் சிறப்பாகக் குறிக்கத் தக்கன சில. அவை அஷ்டாங்க யோகம், பக்தி யோகம், கர்ம யோகம். இராஜ யோகம் முதலியன. இந் நல்யோகங்களின் விரிவைப் பதஞ்சலி யோக சூத்திரம், பகவத் கீதை, திருமந்திரம், விவேகாநந்தம் முதலிய நூல்களிற் பார்க்க. யோகப் பயிற்சிக்கு நூல் துணை மட்டும் போதாது. பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர் துணையுந் தேவை. இந்நாளிலும் சிலரால் யோக நூல்கள் எழுதப்படுகின்றன. அவைகளிற் பெரும்பான்மையன தீமை விளைத்தே வருகின்றன. அந் நூல்களைப் படித்துப் பயிற்சியில் அமர்ந்த சிலரை யான் அறிவேன். ஒவ்வொருவர் ஒவ்வொருவித நோயால் பீடிக்கப்பட்டு அகால மரணமடைந்தனர். யோகம் தவறுதலாகச் செய்யப்படின், அது பக்கவாயு, தொண்டைப் பிளவு, வாயடைப்பு, காதடைப்பு, பார்வை மங்கல், மந்தம், மயக்கம், காமாலை, இதய நோய், காசம் முதலிய கொடிய நோய்களை உண்டுபண்ணும். பழைய நூல்களை முறைப்படி ஆய்ந்து, தக்கார் துணைபெற்று யோகப்பயிற்சியில் இறங்குவதே சிறப்பு. போலி யோகிகளையும் அவர்கள் நூல்களையும் நம்பி மோசம் போகாதிருக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டுவது அறிஞர் கடன். மின்னல் ஒளி ஓடும் கம்பிகட்கு ஊறு நேர்ந்தால் என்ன விளையும்? விளைவைக் கண்கூடாகக் காண்கிறோம். அதே வண்ணம் யோகப்பயிற்சியில் தவறுதல் நேர்ந்தால் தீமை விளைதல் ஒருதலை. எச்சரிக்கை!
போலிகளின் புறக்கோலங் கண்டு சிலர் ஏமாந்துவிடுகின்றனர். [1] நல்யோகத்துக்குக் காவியும் தாடியும் சடையும் கோலும் தோலும் பிறவும் வேண்டுவதில்லை. யோகி தோட்டியாகவும் இருப்பன்; தொண்டைமானாகவும் இருப்பன். வேடத்தைக் கண்டு ஏமாறுவது அறியாமை.
——————————-
[1] செந்துகில் புனைவார் சீவரந் தரிப்பார்
திரிதண்டோ டொருதண்டு பிடிப்பார்
தந்தமுத் திரைகள் பலப்பல தரிப்பார்
தவமெனத் தம்முடம் பொறுப்பார்
முந்து காய் கிழங்கோ டிலையயின் றிடுவார்
மோனமென் பார்கத றிடுவார்
இந்தவா குலத்தால் ஈசன்மே விடுமோ
இவர் துயர் உறுவதேன் அந்தோ . – தத்துவ சரிதை.
[2] உமாறுபடு …… சீறுபுலி போற்சீறி மூச்சைப் பிடித்துவிழி
செக்கச் சிவக்க அறிவார் …….. உனையாவர் அறிவார் – தாயுமானார் .
——————————-
பிராணாயாமம்
அஷ்டாங்க யோகங்களுள் பெரிதும் பிராணாயாமமே பயிற்சி செய்யப்படுகிறது. இப்பயிற்சி நன்கு கைகூடின், மற்ற யோகப் பயன்களெல்லாம் தாமே பயிற்சியாளனிடம் பரிணமிக்கும். பிராணாயாமம் யோகங்களில் ஜீவ நாடி போன்றது. பிராணாயாமம் தூலம், சூக்குமம், காரணம் என மூவகைப்படும். தூல பிராணாயாமம் நறுங்காற்றை உள்ளிறக்கி இறக்கி வெளியே விடுவது (Breathing Exercise). இதற்கெனத் தனி முயற்சியில் புகுந்து முகஞ் சிவக்க வலிந்து வலிந்து மூச்சை ஈர்த்து ஈர்த்து விட்டுக்கொண்டிருக்க வேண்டுவதில்லை. தூல பிராணாயாமத்துக்கென்று தனி முயற்சி வேண்டுவதில்லை. நறுங்காற்று வீசுமிடத்தில் உலவிவந்தால் போதும்; அமர்ந்து வந்தால் போதும். இயற்கை தன் கடனை முறை முறையே ஆற்றும். சூக்கும பிராணாயாமத்துக்குத் தேர்ச்சி பெற்றவர் துணை வேண்டும். இது, நுரை ஈரலையும் நாடி, நரம்புகளையும் தூய்மை செய்து உடல் நலனைக் காத்துவரும். காரணமென்னும் மூலப் பிராணாயாமம் சொலற்கரியது; எழுதற்கரியது. அது மக்களின் அக வொழுக்கத்தையொட்டி இயங்குவது. அதற்கு இயம நியமம் அடிப்படை; சீலம் இன்றியமையாதது. மூலப் பிராணாயாமம் அமல யோகத்துக்கு அகரம் போன்றது.
யோகங்களிற் பல மலயோகத்தின் பாற்பாடும்; சில [1] அமலயோகத்தின் பாற்படும். மலயோகம் உடலுக்கு மட்டும் நலஞ்செய்யும். அமலயோகம் உயிரினுக்கும் உடலினுக்கும் நலஞ் செய்யும். இங்கு இவ்வளவே விளக்குதல் சாலும்.
——————————-
[1] அமல யோகர் உளவை யெலாம் – இராமலிங்க சுவாமிகள்
——————————-
பிராணாயாமம் என்று சிலர் மூக்கைப்பிடித்து மூச்சை ஈர்ப்பர்; சிலர் கண்ணைப் பிசைவர்; சிலர் மூலக்கனலை எழுப்புவர். வேறு தீய – ஈன – முறைகளில் தலைப்படுவோரும் உளர். இவர் ஒளி காண்கின்றனராம்! பாவம்! ஒன்றுடன் ஒன்றைத் தேய்த்தால் அது தீயை எழுப்பி ஒளி காட்டுவது இயல்பு. இவ்வொளி போன்றது தீயர் காண்பது. வலிந்து செய்யப்படும் எதுவும் யோகமாகாது. வலிந்து மூச்சைப் பிடித்தல் முதலிய யாவும் மூர்க்கத்தின் பாற்படும். அவைகளை மூர்க்க அரக்க யோகங்களென்று தள்ளுக; அவைகட்கு. இரையாகாது ஒதுங்குக.
மூச்சைப் பிடிப்போர் முதலியோர் பல பெரியோர் பாக்களை எடுத்துக்காட்டித் தங்கோளை நிறுத்த முயல்வர் தமிழ் நாட்டவர் பெரிதும் திருமூலர் திருமந்திரப் பாக்களை எடுத்து காட்டுவது வழக்கம். சில பாக்களை யானும் இங்கே சொல்கிறேன்.
ஆரிய னல்லன் குதிரை யிரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை
கூரிய நாதன் குருவி னருள் பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படுந் தானே.
வளியினை வாங்கி வயத்தி லடக்கில்
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்
தெளியக் குருவின் றிருவருள் பெற்றால்
வளியினும் வேட்டு வளியனு மாமே.
ஏற்றி யிறக்கி யிருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே.
புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட வுள்ளே நின்மல மாக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே.
-இவை மந்திர மொழிகள். இவைகளில் முதலிரண்டு யாட்டிலும் குருவின் ‘அருள்’ பேசப்படுதலை ஓர்க. குருவின் அருளில்லாமல் வெறும் ஏடுகளின் – போலிகள் எழுதியுள்ள ஏடுகளின் – துணை கொண்டால் தீமையே விளையும். மூன்றாவது பாட்டில் ‘கணக்கறிதல்’ என்றொரு குறிப்பிருத்தலைக் காண்க. கணக்கு விநாடிக் கணக்கன்று. விநாடிக் கணக்கு இயற்கையாகாது. இயற்கைக் கணக்குக்கும் குருவருள் தேவை. நான்காம் பாட்டில் ஒரு குறிப்புள்ளது. அது புறப்பட்டுத் திரிகின்ற வாயுவை ஈர்த்து – நெறிப்பட உள்ளே நின்மலமாக்கில் ….’ என்பது.
ஞாயிற்றின் ஒளி விழுங்கும் மரங்களின் நறுங்காற்று நமக்கும், நமது அழுக்குக் காற்று மரங்கட்கும் பயன்பட்டு வருதல் சிறுவர்க்குந் தெரியும். நறுங்காற்று மூக்கின் வழி உள்ளே நுழைந்து நமக்கு நலஞ் செய்கிறது. அதன் துணை இல்லையேல், நுரைஈரல் பாழ்பட்ட சுனையாகி வாழ்வுக்கே ஊறு செய்யும். ஒருவரது நல்வாழ்வுக்கு நுரைஈரல் வளமுடையதா யிருத்தல் வேண்டும். அதற்குப் ‘புறப்பட்டுத் திரிகின்ற வாயு’ தேவை. அவ்வாயுவை ஈர்த்து நெறிப்பட உள்ளே நின்மலமாக்கினால் உறுப்புச் சிவக்கும்; உரோமங் கறுக்கும்; புரிசடையோனும் புறப்பட்டுப் போகான். உள்ளே ‘நின்மலமாக்கல்’ என்பதில் நுட்பம் இருக்கிறது. காற்று ஈர்க்கப்படுகிறது; உள்ளே நிறுத்தப்படுகிறது; மீண்டும் வெளியே விடப்படுகிறது. உள்ளே செல்லும் காற்றை நெறிப்பட அங்கேயே நின்மலமாக்கும் வித்தை வேண்டற்பாலது. ‘காற்று உள்ளே நின்றால் அஃது அழுக்காகி மற்ற அழுக்குகளுடன் கலந்து நுரைஈரலுக்கு ஊறு செய்யும்’ என்று இக்கால விஞ்ஞான உலகம் கருதும். பிற்கால விஞ்ஞான உலகம் உண்மை கண்டு திருமூலர் கருத்துக்குத் துணை புரிவதாகலாம். காற்றை உள்ளே நின்மலமாக்கினால் நம்மிடத்தில் தோன்றும் அழுக்குக் காற்று வெளி வாராமலே அங்கேயே நின்மலமாகும். நாளடைவில் படிப்படியே வெளிக்காற்றின் துணை தேவையில்லாமற் போகும். அந்நிலையில் அண்டாதித்தன் பிண்டாதித்தனாகி ஒளி உமிழ்வன். அவ்வொளி உள்ளொளி எழுச்சிக்குத் துணை நிற்பதாகும். பிற அனுபவத்தில் உணரத்தக்கன.
உடல் நலன்
உள்ளொளி விளக்கத்துக்குப் பலதிறத் துணைகள் வேண்டும். அவைகளுள் சிறந்த ஒன்று உடல் நலன். உடல் நலம் இழந்தோர் உள்ளொளி விளக்கம் எளிதில்
பெறுதல் அருமை. மேற்பாட்டிலுள்ள உறுப்புச் சிவத்தல், உரோமங் கறுத்தல், புரிசடையோன் புறப்படாமை ஆகியவை உடல் நலத்தைக் குறிக்கொண்டு நிற்றல் வெள்ளிடை மலை. அந் நலத்துக்குக் காற்றை நெறிப்பட உள்ளே நின்மலமாக்கும் பயிற்சி வேண்டும் என்று திருமூலர் அறிவு கொளுத்தியவாறு காண்க. எந்த நல்யோகத்துக்கும் அறிஞர் உதவி வேண்டுமென்பதை மறத்தலாகாது.
——————————
[1] உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண் டானென்று
உடம்பினை யானிருத் தோம்புகின் றேனே – திருமூலர்
——————————-
தீய யோகங்கள்
யோகம் என்ற பெயரால் சில தீய மூர்க்க அரக்க யோகங்களும் வளர்ந்து வாழ்க்கை பெற்றுள்ளன, அவை கட்கும் நூல்கள் இருக்கின்றன; ‘குருமார்’ இருக்கின்றனர். அக் கொடிய யோகங்களால் தீயொழுக்கம் பெருகும்; பெரிதும் பெண்ணுலகம் பாழாகும். அந்த யோகிகட்கு நற்கதி நினைவு தோன்றுவதில்லை போலும்! அவரை இயற்கை அன்னை ஒறுத்தே வருகிறாள். ஒறுத்தும் அம் மூர்க்கர் நல்லறிவு பெறுகிறாரில்லை.
‘மனம் அடங்க என்னென்னவோ செய்து பார்த்தோம். மனம் அடங்கவில்லை, அதனால் யோகத்தில் தலைப்பட லானோம் ‘ என்று சிலர் மூச்சைப் பிடிக்கின்றனர். மூச்சைப் பிடிப்பதால் மனம் அடங்கிவிடுமோ? தீய எண்ணங்கள் மாறிவிடுமோ? மூச்சு யோகிகள் தங்கள் மன நிலையைச் சோதித்துப் பார்த்தால் உண்மை விளங்கும். சிறுநேர மன அடக்கம், அடக்கம் ஆகாது. கஞ்சா முதலியன கூட மயக்கம் விளைத்துச் சிறுநேரம் மனத்தை நிலை பெறுத்துகின்றன. அதனால் கஞ்சா யோகத்தையும் கொள்ளல் வேண்டும் போலும்! இப் பீடையை இவ்வளவில் நிறுத்திக் கொள்கிறேன்.
தியான யோகம்
யோக விதங்கள் பலவா யிருத்தலால், அவைகளுள் எதைக் கொள்வது? எதைத் தள்ளுவது? இக்கேள்வி பலர் எழுப்புதல் எனக்குத் தெரியும். தீயொழுக்கத்தை வளர்க்கும் பொல்லாத அரக்க யோகங்கள் தள்ளற்பாலனவே. உடலுக்கு நலஞ் செய்யும் யோகங்கள் தள்ளற்பாலன அல்ல. அவைகளை முறைப்படி செய்யத் தக்கார் மாட்டுப் பயிலுதல் சிறப்பு. எல்லாவற்றிற்கும் விழுமியதாய், எவ்வித ஊறுஞ் செய்யாததாய் இருப்பது ஒன்றுள்ளது. அதற்கு எப்பெயர் வழங்கினும் வழங்குக. யோக உலகம் அதைத் தியானயோகம் என்று வழங்கி வருகிறது. அஃது அஷ்டாங்க யோகத்தின் முடிவாயிருப்பது. அதில் எல்லா நல்யோகங்களும் அடங்கும்.
தியான யோகம் வழிபாட்டுக்கு அப்புறப்பட்டதன்று. வழிபாடு, மனம், மொழி, மெய்களின் வழி நடைபெறுவது. மனம் நினையாமல் வாய் மொழியாது; கை கும்பிடாது. மொழிக்கும் மெய்க்கும் அடிப்படை மனம். தொடக்கத்தில் மனத்தை நிலைபெறுத்த வாயும் மெய்யும் தொடர்ந்த வழிபாடு செய்தல் வேண்டும். நாளடைவில் வாயும் மெய்யும் ஓய்வு பெறும். மனம் ஒன்றே வழிபாட்டில் ஈடுபடும். இதுவே தியான யோகமென்பது. இதற்கு ஒரு குறி வேண்டும். அக்குறி இறையையுணர்த்தும் தத்துவமுடையதா யிருத்தல் வேண்டும். இதற்கு இயற்கையை அடைவோமாக.
பூசிக்கும் போது புவனா பதி தன்னை
ஆசற் றகத்தினில் ஆவா கனம்பண்ணிப்
பேசிப் பிரானைப் பிரதிட்டை யது செய்து
தேசுற் றிடவே பதியான மது செய்யே – திருமூலர்
இயற்கை வழிபாடு
இயற்கை பெரியது; பல கூறுகளை உடையது. வழிபாடோ பலவகை. இங்கே எவைகளைத் தொடுவது? எவைகளை விடுவது? தடுமாற்றம் ஏற்படுகிறது. பெருங் காடு எதிரிலே தோன்றுகிறது. எவ்வழியில் நுழைவது என்று தெரியவில்லை. எனது சித்தம் எங்கெங்கோ செல்கிறது; சென்று சென்று காதல், வீரம், அழகு, அறிவு, நீதி முதலியவற்றில் படிகிறது. காதல் முதலியன இயற்கைத் தெய்வத்துக்கு வேறுபட்டனவல்ல. அவைகள் இயற்கைத் தெய்வத் தன்மை வாய்ந்தன. அவைகளை இயற்கைத் தெய்வக் கூறுகள் என்றுங் கொள்ளலாம். அத்தெய்வக் கூறுகளை முன்னிலைப்படுத்தி நிகழ்த்தப்பெறும் வழிபாட்டில் வழிபாட்டுத் திறங்கள் பல அடங்கிவிடும். காதல், வீரம், அழகு, அறிவு, நீதி முதலியவற்றின் மீது கருத்துச் சென்றமையால், உருவம் உள்ளத்தைவிட்டு அகன்றுவிட்டதென்று எவரும் எண்ண வேண்டுவதில்லை. காதல் முதலியன உருவங்களின் வாயிலாகவே தங்கள் இருப்பை – பொலிவை – உணர்த்துவன என்று முன்னைப்பேச்சில் யான் குறிப்பிட்டதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். காதல் முதலியன உருக்கொண்டு உலவுவன அல்ல. ஆனால், அவை உருவங்களின் வாயிலாகவே தங்களிருப்பை உணர்த்துவன. காதல் காதலரிடத்தும், வீரம் வீரரிடத்தும், பிற பிறரிடத்தும் நுண்மையிற் பொலிந்து கலைஞர் நெஞ்சைக் கவரும்; அவர்க்கு விருந்துமாகும். காதல், வீரம் முதலியவற்றைப் பற்றிய வழிபாடு என்றதும் உருவம் போய்விட்டது என்று கருதற்க. உருவ வழியே வழிபாடுகள் நிகழ்ந்து தீர வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். காதல் முதலியவற்றைப் பீடிகையாக் கொண்டு வழிபாட்டுத் திறங்களை ஆங்காங்கே விரிக்கும் முகத்தான் எனது உள்ளக் கிடக்கைகளை வெளியிடலாமென்று எண்ணுகிறேன்.
காதல்
காதல், அன்பின் கூறுகளுள் ஒன்று; சிறந்த ஒன்று. அன்பின் உயிருள்ள இடம் காதல். காதல், அன்பின் முழுமையாகும் இயல்புடையது.
காதலும் காமமும்
ஒருவன் உள்ளத்தில் என்னென்னவோ உறுகின்றன. காதலும் உறுகிறது. உற்ற பலவற்றில் காதல் ஒன்றாகுமா? ஆகாது. காதல் எல்லாவற்றையும் அடிப்படுத்தித் தான் முடியா யிலங்கும். வேறு ஏதாவதொன்று கடந்து மேம்படுமாயின் உற்றது காதலன்று என்று கொள்ளல் வேண்டும்.
ஒருவன் ஒருத்தியை மணஞ் செய்கிறான். சிலநாள் கடந்து அவன் நாட்டம் இன்னொருத்தியினிடஞ் செல்கிறது. அம் மணமும் இந்நாட்டமும் காதலின் பாற்பட்டன ஆகுமா? ஆகா. அவனிடம் காதல் முன்னும் முகிழ்க்கவில்லை; பின்னும் பிறங்கவில்லை. அவனிடம் எழுந்தது காமம். பலவிடங்களை நாடி நாடி ஓடும். காதல் அவ்வாறு ஓடாது; ஓரிடத்திலேயே நிலைத்து நிற்கும்.
ஓருயிர் ஈருடல்
[1] காதலால் விழுங்கப்படும் இருவர் ஒருவராவர். அவர் தம் உடல் மட்டும் இரண்டாகத் தோன்றும்; உயிர் ஒன்றாகும். ‘ஈருடல் ஓருயிர்’ என்ற ஆட்சி , காதலையொட்டியே எழுந்தது போலும். காதல் இருமை போக்கி ஒருமை யாக்கும் பேராற்றல் வாய்ந்தது. ஓருடலுக்கு நோய் உறின் இன்னோருடலும் நோயுற்றது போலாகும். ஒன்றைத் தேள் தீண்டின் மற்றொன்றும் தேள் தீண்டியது போலாகும். காதல் ஈருடல் ஓருயிர் கொண்டதன்றோ ?
——————————
[1]. ஆனந்த வெள்ளத் தழுந்து மோர் ஆருயிர் ஈருருக்கொண்
டானந்த வெள்ளத் திடைத்திளைத் தாலொக்கும்
……….. சொற்பா லமுதிவள் யான்சுவை யென்னத்
துணிந்திங்ஙனே நற்பால் வினைத்தெய்வம் தந்தின்று
நானிவ ளாம் பகுதிப் பொற்பா ரறிவார் ………. – திருக்கோவையார்
——————————
காதல் கிழவன் ஒருவனுக்கும் காதல் கிழத்தி ஒருத்திக்கும் ஒரு மகள் பிறந்தாள். அவள் கற்பன கற்றுக் கேட்பன கேட்டு உற்ற வயதடைந்தாள். தனக்குரிய நாயகனைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டு அவள் ஒரு தீம் பொழிலுக்கு அனுப்பப்பட்டாள். தோழியும் அவளுடன் சென்றாள். இருவரும் சில சமயம் சேர்ந்தும் சில சமயம் தனித் தனியாகவும் பொழிலகம் சுற்றி வருவர். ஒரு நாள் இளம்பெண் ஒரு வழியே ஏகினாள். தோழி மற்றொரு வழியே போனாள். இளம்பெண் ஓர் இளைஞனைக் கண்டாள். இவனும் அவனைக் கண்டான். காதல் தெய்வம் இருவர் மனத்தையும் ஒன்றுபடுத்தியது, இருவருங் காதலில் மூழ்கிய பின்னை நாளை வருவதாக இளைஞன் உறுதி கூறி விடைபெற்றான். இருவர் உடல் மட்டும் பிரிந்தன. இளம் பெண்மணி தனது இருக்கை சேர்ந்தாள். முன்னரே இருக்கை நண்ணிய தோழி தன் தலைவியைக் கண்டதும் ஐயுற்றாள். புறத் தோற்றம் ஐயமூட்டிற்று. வெளிப்படையாக வினவி உண்மை காணத் தோழி விரும்பினாளில்லை. அவள் தலைவியைப் பார்த்து, ”இன்று நீர் எவ்வழிச் சென்றீர்? அங்கே எவ்வெப் பூக்களைக் கண்டீர்? எவ்வெப் பூக்களைப் பறித்தீர்?” என்று கேட்கலானாள். தலைவியின் நெஞ்சம் ஓரிடத்தில் பதிந்து கிடந்தது. அந்நெஞ்ச முடையவள் என்ன விடையிறுக்க வல்லாள்! தோழி, தலைவியின் நிலையை ஒருவாறு உணர்ந்தாள்; உணர்ந்து, ”அம்மா! யான் சென்ற வழியில் அழகிய மயில்களைக் கண்டேன்; குயில்களைக் கண்டேன்; மான்களைக் கண்டேன்; பூப்பறித்துத் திரும்பியபோது வேறு ஒரு வழியே புகுந்தேன்; அவ் வழியில் ஓர் அழகிய இளைஞரைக் கண்டேன்; ‘இவ்வழியே யாவரேனும் போயினரோ ‘ என்று அவரைக் கேட்டேன். ‘ஓர் இளம்பெண் போயினள் ‘ என்று அவர் சொல்லிய வேளையில், ஒரு புலி வாய் திறந்து அவர் மீது பாய்ந்தது என்றதும், தலைவியின் உடல் விதிர் விதிர்த்தது. வியர்வை சொரிந்தது. கண்கள் சோர்ந்தன. பெருமூச்செறிந்தது. தோழி, ‘இளைஞர் தங்கை வேலால் புலியைக் குத்திக் கொன்றார்’ என்றாள். உடனே தலைவியினிடம் மாறுதல் உண்டாயிற்று. தலைவியின் மனம் மகிழ்ச்சியில் திளைத்தது. மகிழ்ச்சி பார்வையில் ததும்பிற்று. தோழி உண்மை உணர்ந்தாள். காதல் ஈருடலை ஓருயிராக்கும் தன்மைய தென்பது இங்கே கருதற்பாலது. தோழி, ‘இளைஞர் தங் கை வேலால் புலியைக் குத்திக் கொன்றார்’ என்று சொல்லச் சிறிது காலம் தாழ்த்தி இருப்பாளாயின் தலைவியின் நிலை என்னவாயிருக்கும்?
காதலும் கடவுளும்
காதலுக்கு ஒப்பானதுமில்லை; உயர்வானதுமில்லை. அஃது எல்லாவற்றையுங் கடந்து நிற்பது. அதற்கு மேம்பட்டதொன்று இருத்தல் கூடாது. கடந்த ஒன்றைக் கடவுள் என்று சொல்வது மரபு. இதனால் ‘காதற்கடவுள்’ என்றோர் ஆட்சியும் பிறந்தது போலும். காதலனுக்குக் காதலியினுஞ் சிறந்த பொருள் வேறொன்றில்லை. இவளுக்கும் அப்படியே. அவனுக்கு இவள் கடவுள்; இவளுக்கு அவன் கடவுள். இவர்க்கு வேறு தெய்வம் எற்றுக்கு?
காதல் இயற்கை
காதல் இயற்கையா? செயற்கையா? இயற்கை என்று எவருங் கூறுவர். காதல் எவரால் செய்யப்படுகிறது? அது செய்யப்படுவதா? காதல் இயற்கையாக எழுவது. காதல் இயற்கையாதலின், அஃது உலகில் வளரவேண்டுமென்னும் நோக்கத்தை இயற்கைத் தெய்வம் உடைத்தாயிருக்கிறது. இஃது இயற்கைத் தெய்வத்தின் படைப்பை நோக்கி நோக்கி அதன்கண் படியப் படிய இனிது விளங்கும். நிலமும் திணையும் நாம் வாழும் நிலம் குறிஞ்சி என்றும், பாலை என்றும், முல்லை என்றும், மருதம் என்றும், நெய்தல் என்றும் பாகுபட்டிருத்தல் கண்கூடு. இப் பாகுபாடுகள் பருமை. பருமைக் குரிய நுண்மை இருத்தல் வேண்டுமன்றோ? நுண்மை புணர்தல் என்றும், பிரிதல் என்றும், இருத்தல் என்றும், ஊடல் என்றும், இரங்கல் என்றும் பாகுபாட்டுக் கிடக்கிறது. புணர்தலும், பிரிதலும், இருத்தலும், ஊடலும், இரங்கலும் இயற்கைக் காதலுக்கு ஆக்கந் தேடுவன. இயற்கைக் காதலே உலகில் வளர்தல் வேண்டும். காதலுக்கு மாறுபட்ட ஒரு தலைக் காமம், பொருந்தாக் காமம் முதலியன வளர்தலாகாது. அவ்வளர்ச்சியால் உலகம் ஒழுக்கமுடையதாய், அமைதியில் நின்று, அன்பில் திளைப்பதாகும். இவ்வளர்ச் சியால் உலகம் பாழ்படும் என்னும் அளவில் நின்றுவிடுகிறேன்.
நந் தமிழ்நாட்டில் காதலுக்கு இலக்கணங் கண்டவர் தொல்காப்பியனார் உள்ளிட்டவர். இலக்கியங் கண்டவர் திருவள்ளுவர் உள்ளிட்டவர். காதல் பொருளற்றதாயின் அதற்கென்று இலக்கணங்களும் இலக்கியங்களும் எழ மாட்டா. காதல் வளர்தல் வேண்டுமென்றே சான்றோர் அதற்கென்று நூல்கள் யாத்துச் சென்றனர். நூல்கள் இயற்கைத் தத்துவங்களின் ஓவியங்கள் – படங்கள் – என்பதை இப்பேச்சில் விரித்துரைக்க வேண்டுவதில்லை.
இயற்கைத் தெய்வத்தின் நோக்கம் காதல் வளரவேண்டு மென்பது. அதை நூல்களும் வலியுறுத்துகின்றன. ஆதலின், இயற்கைத் தெய்வத்தின் நோக்கம் நிறைவேறச் சேவை செய்வது அத்தெய்வத்துக்கே சேவை செய்வதாகுமென்க. சேவை என்றால் என்ன? வழிபாடு என்றால் என்ன?
உலக வளர்ச்சி
ஒருவன் பிறந்தான்; வளர்ந்தான்; கற்பன கற்றான்; கேட்பன கேட்டான். ஒருத்தியும் பிறந்தாள்; வளர்ந்தாள்; கற்பன கற்றாள்; கேட்பன கேட்டாள். அவன் உள்ளத்திலும் காதல் முகிழ்க்கிறது; இவள் உள்ளத்திலும் காதல் முகிழ்க்கிறது. முகிழ்ப்பு இருவர் உள்ளத்தையும் ஒருமைப் படுத்துகிறது. மணம் கமழ்கிறது. திருமணம் ஒருவித இயற்கை வழிபாடு. உலக வளர்ச்சிக்குத் துணைபுரிவது இயற்கைத் தெய்வத்தை வழிபடுவதாகும். இவ்வழிபாடு பெரும் பெரும் வழிபாட்டுக்குக் கால் கொள்வது.
ஒப்புரவு
ஒருவன் இளைஞனா யிருந்தஞான்று பெரிதும் தன்னையே நேசித்து வந்தான்; ஒருத்தியும் இளமையில் தன்னையே நேசித்து வந்தாள். காதல் மணத்துக்குப் பின்னர் அவன் இவளை நேசிக்கிறான்; இவளும் அவனை நேசிக்கிறாள். ஓரிடத்தில் கட்டுப்பட்டுக் கிடந்த அன்பு இப்பொழுது ஈரிடத்திற் செல்கிறது. அவ்வளவில் தன்னல மாசு அகல்கிறது. பின்னே மக்கட்பேறு உண்டாகிறது. இப்பொழுது தாயும் தந்தையும் தம்முடைய நலங்களை யெல்லாம் மக்கட் பொருட்டுத் தியாகஞ் செய்கின்றனர். அவர், தம் பொருட்டு வாழாது மக்கட்பொருட்டு வாழ்வோராகின்றனர். மாறுதலைக் கருதுங்கள். ஒருவனும் ஒருத்தியும் தாய் தந்தையராகிய பின்னர், தம் நல நேசமென்னும் மாசினின்றும் விடுதலையடைதல் உன்னத்தக்கது. தன்னலம் அற்ற இடத்தில் எழுவது அன்பு. தாய் தந்தையரிடம் அன்பு கோயில் கொள்கிறது. அவ்வன்பு என்ன அறிவுறுத்தத் தொடங்குகிறது? ‘ உமக்கும் உம் மக்கட்கும் பசி, பிணி முதலிய துன்பங்களிருப்பது போல மற்றவர்கட்கும் உண்டு. உம் பசி பிணி முதலிய துன்பங்களையும், உம் மக்களின் பசி, பிணி முதலிய துன்பங்களையும் தீர்க்க நீர் முயல்வது போல, மற்றவர் பசி, பிணி முதலிய துன்பங்களையும் தீர்க்க முயல்மின்’ என்று அறிவுறுத்தத் தொடங்குகிறது. இஃது அன்பின் இயல்பு. அன்பின் அறிவுறுத்தலுக்குத் தாய் தந்தையர் செவிசாய்க்கின்றனர்; ஒல்லும்வகை அவர் தம் சக்திக்கு ஏற்பப் பிறர்க்குத் துணைபுரிய முயல்கின்றனர். கைம்மாறு கருதாது அன்பால் பிறர்க்குதவுவது விருந்தோம்பல் எனப்படும். தம்மைத் தனித்தனியே நேசித்துக் கொண்டிருந்தவர் ஒருமை மனத்தவராய்த் தாய் தந்தையராய்த் தியாகிகளாய் இப்பொழுது பிறர்க்குதவும் [1] அந்தணராகின்றனர்; இந்நிலையில் அவர் ‘தன்னல’மாசு அகலப் பெறுகின்றனர். அறவோர் ஆகின்றனர்.
எவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுகுவது உயிர்கள் வழிபாடென்பது. உயிர்களில் வீற்றிருப்பது இறை. ஆகவே, உயிர்கள் வாயிலாக இறை வழிபாடு நடைபெறு கிறதென்க. காதல் வழிபாடு படிப்படியே உயிர்கள் வழிபாடென்னும் இறை வழிபாடாதல் காண்க.
——————————
[1]. அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் –
செந்தண்மை பூண்டொழுக லான் – திருவள்ளுவர்.
——————————
திருவள்ளுவர்
‘மனத்துக்கண் மாசில னாதல் அனைத்தறம்’ என்பது திருவள்ளுவர் திருவாக்கு. அவ் வறநிலையை அடைதற்கு அவர் இல்வாழ்க்கை என்றும், வாழ்க்கைத்துணை என்றும், மக்கட்பேறென்றும், அன்புடைமை என்றும், விருந்தோம்பல் என்றும் வழி கோலியுள்ளதை ஓர்க. இவ்வழி, இயற்கைத் தெய்வ நோக்குக்கு அரண் செய்து நிற்றலை உன்னுக. திருவள்ளுவர் உள்ளக்கிடக்கையை அவர்தம் நூலுக்கு யான் கண்ட விரிவுரையில் விளக்கஞ் செய்துள்வேன். விளக்கம் விரும்புவோர் அவ்வுரையைப் பார்ப்பாராக.
இயற்கை வாழ்க்கை
ஒருவனும் ஒருத்தியும் காதலை வெறுத்து மணவாழ்வு கொள்ளாது, தன்னந்தனியராய் வாழ்ந்துவரின், அவரிடம் தியாகம் அணுகுமோ? அன்புத் தெய்வம் கோயில் கொள்ளுமோ? உயிர்கள் வழிபாடு நடைபெறுமோ? அவர் அறவோர் ஆவரோ? தனி வாழ்க்கை, தன்னலத்தை வளர்ப்பதாய் அன்பை அழிப்பதாய்த் தீயொழுக்கத்தைப் பெருக்குவதாய் வழிபாட்டைக் கூட்டாதொழியும். தனி வாழ்க்கை செயற்கை; இயற்கையன்று. [1] சேர்க்கை வாழ்வே இயற்கையின் பாற்பட்டது. சேர்ந்து வாழ்வதே மக்களியல்பு என்னுஞ் சீரிய கொள்கை இக்கால உயிர் நூல் வல்லவராலும் வலியுறுத்தப்படுகிறது. உயிர்கள் வழிபாட்டுக்குச் சேர்ந்த வாழ்க்கையெனுங் காதல் வாழ்க்கை வேண்டற்பாலது.
இறைவனுங் காதலும்
ஒருவனும் ஒருத்தியுங் காதலில் ஒன்றி அன்பராகி உயிர்கட்குத் தொண்டு செய்யும் அந்தண்மை என்னும் இறைநிலை எய்தல் இதுகாறும் பேசப்பட்டது. இந்நிலையைக் கூட்டுதற்குரிய காதல் வழிகள் இன்னும் பல உண்டு. அவைகளுள் இங்கே குறிக்கத்தக்கது ஒன்று. அஃது [2] இறைவனை நேரே காதலித்து வழிபாடு நிகழ்த்துவது. இவ்வழிபாடு நிகழ்த்திப் பேறு பெற்றவர் பலருளர். அவருள் ஆண்டாள் அம்மையார் நினைவு இங்கே தோன்றுகிறது. பெண்பிறவிக்கு வீடுபேறில்லை என்ற பொல்லாத கொள்கை தமிழ்நாட்டில் வேரூன்றிய காலத்தில் ஆண்டவன் அருளால் தோன்றியவர் ஆண்டாள் அம்மையார். அவர் காதல் நெறி நின்று ஒழுகி, அந்நெறியை நேரிய முறையில் ஓம்பிப் பெண்ணுலகுக்கு விழுப்பந் தேடிய பெருமை வாய்ந்தவர்.
——————————
[1]. மனையி லிருந்தவர் மாதவ ரொப்பர்
ஓதம் ஒலிக்கும் உலகை வலம் வந்து
பாதங்கள் நோவ நடந்தும் பயனில்லை
[2]. காதலில் அண்ணலைக் காண இனியவர்
நாத னிருந்த நகரறி வாரே. – திருமூலர்
——————————
அம்மையாரின் காதல் நாயகன் நீலமேனியன்; பவளவாயன்; கமலக்கண்ணன்; செங்கையன் – அடியன்! இத் திருக்கோலமுடைய அரங்கநாதன் மீது அம்மையார் கொண்ட காதல் – உயிர்க்காதல்,
கருவிளை யொண்மலர்காள் காயாமலர்காள் திருமால்
உருவொளி காட்டுகின்றீர் எனக்குய் வழக் கொன்றுரையீர்
திருவிளையாடு திண்டோள் திருமாலிருஞ் சோலை நம்பி
வரிவளை யில் புகுந்து வந்திபற்றும் வழக்குளதே.
பைம்பொழில் வாழ்குயில் காள் மயில்காள் ஒண்கருவிளைகாள்
வம்பக்களங் கனிகாள் வண்ணப்பூவை நறுமலர்காள்
ஐம்பெரும் பாதகர்காள் அணிமாலிருஞ் சோலை நின்ற
எம்பெருமா னுடைய நிறம் உங்களுக் கென்செய்வதே.
துங்கமலர் பொழில் சூழ் திருமாலிருஞ் சோலை நின்ற
செங்கட் கருமுகிலின் திருவுருப்போல் மலர்மேல்
தொங்கிய வண்டினங்காள் தொகுபூஞ்சுனை காள்சுனையில்
தங்குசெந்தாமரைகாள் எனக்கோர்சரண் சாற்றுமினே.
இப் பாக்களில் தேங்குதல் காண்க. குயிலும் மயிலும் பூவும் கனியும் இன்ன பிறவும் அம்மையார்க்குக் காதலூட்டுகின்றன. இவையா? அரங்கநாதன் மேனி – அரங்கநாதன் முகம் – அரங்கநாதன் கை – அரங்கநாதன் கால் – அரங்கநாதன் வடிவம். அரங்கநாதன், மயிலாகவும் குயிலாகவும் பூவாகவும் கனியாகவும் இன்ன பிறவாகவும் அம்மையார்க்குக் காதல் ஊட்டுகிறான். அம்மையாருள் காதல் எழுகிறது; பொங்குகிறது; ததும்புகிறது: வழிகிறது; தேங்குகிறது; வெள்ளமாகிறது; கடலாகிறது. எங்கணும் ஒரே கடல் – எல்லையற்ற கடல் – அன்புக் கடல் – பசுங்கடல்! எல்லையற்ற அன்புப் பசுங்கடலில் அம்மையார் வீழ்ந்தார்; ஆழ்ந்தார். கடல் அரங்கனா? ஆண்டாளா? தெரியவில்லை. ஆண்டாள் உயிரெலாம் அரங்கன்; உள்ளமெலாம் அரங்கன்; உடலெலாம் அரங் கன்; எல்லாம் அரங்கன்; எங்கும் அரங்கன்! அரங்கனே ஆண்டாள்; ஆண்டாளே அரங்கன்! காதல் – காதல் ஒருமை! ஒருமைக் கடல்; கடலில் தரங்கம் எழுகிறது; எழுந்து,
வெள்ளை விளிசங் கிடக்கையிற் கொண்ட
விமலனெனக் குருக்காட்டான்
உள்ளம் புகுந் தென்னைநைவித்து
நாளுமுயிர்ப்பெய்து கூத்தாட்டுக்காணும்
கள்ளவிழ் செண்பகப் பூமலர் கோதிக்
களித்திசை பாடுங்குயிலே
மெள்ளவிருந்து மிழற்றிமிழற்றா
தென்வேங்கடவன் வரக்கூவாய்.
இந்திர னுள்ளிட்ட தேவர்குழா மெல்லாம்
வந்திருந் தென்னை மகட்பேசி மந்திரித்து
மந்திரக் கோடி யுடுத்தி மணமாலை
அந்தரி சூட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்.
எழிலுடைய வம்மனைமீர் என்னரங்கத் தின்னமுதர்
குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில்
எழுகமலப் பூவழகர் எம்மானார் என்னுடைய
கழல்வளையைத் தாமும் கழல்வளையே யாக்கினரே.
அழிலும் தொழிலும் உருக்காட்டான்
அஞ்சேல் என்னான் அவன் ஒருவன்
தழுவி முழுகிப் புகுந்தென்னைச்
சுற்றிச் சுழன்று போகானால் தழையின்
பொழில் வாய் நிரைப்பின்னே
நெடுமா லூதி வருகின்ற
குழலின் தொளைவாய் நீர்கொண்டு
குளிர முகத்துத் தடவீரே.
உள்ளே யுருகி நைவேனை உளளோ இலளோ என்னாத
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் கோவர்த்தனனைக் கண்டக்கால்
கொள்ளும் பயனொன் றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டவன்மார்வில் எறிந்தென் அழலைத் தீர்வேனே
என்று தமிழ் பாடுகிறது. தமிழ்ப் பாட்டு – [1] காதல் – காதல் மணம்.
——————————
[1]. சிறையாரும் மடக்கிளியே இங்கேவா தேனொடு பால்
முறையாலே யுணத்தருவேன் மொய்பவளத் தொடுதளம்
துறையாருங் கடற்றோணி புரத்தீசன் துளங்கும் இளம்
பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயே. – திருஞானசம்பந்தன்
——————————
கிறிஸ்துவும் காதலும்
மற்றுமொரு காதல் வடிவத்தின் மீது கருத்துச் செல்கிறது. அது கிறிஸ்து வடிவம். கிறிஸ்து உயிர்களெல்லாம் துன்பக்கடலினின்றும் இன்பக்கரை ஏறுதல் வேண்டும் என்னும் பெருங் காதலுடையவர். காதலின் முழுமையே அன்பு; அன்பே கிறிஸ்து. அவர் அன்பே ஆகி அன்பையே போதித்தார். அவர் அன்பே தெய்வம் என்றார்; அயலவனிடம் அன்பு கூருங்கள் என்றார். அவ்வளவில் அவர் நின்றாரில்லை. அவர் மேலுஞ் சென்று, பகைவனிடத்திலும் அன்புகூருங்கள் என்றார். இதுவே அன்புக்கு அறிகுறி. மெய்யான அன்பு பகைவனை வெறுக்கச் செய்யாது, அவனையும் நேசிக்கச் செய்யும். அன்பைக் கிறிஸ்து பெருமான் போதனையுஞ் செய்தார்; சாதனையிலுங் காட்டினார். அவரைக் கொல்லச் சிலுவையில் நிறுத்தி ஆணி அறைந்த கொடியவரிடத்தும் அவர் அன்பு காட்டினார்.
அப்பொழுது இயேசு, பிதாவே, இவர்களுக்கு மன்னியும். தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே. – லூக்கா : 23 : 34.
இவ்வருள் மொழி எங்கிருந்து எழுந்தது? கொலை மரத்தினின்றும் எழுந்தது! அன்பின் அன்பு என்னே!
அன்புள்ள இடத்தில் தியாகமிருத்தல் இயல்பு. தியாகமில்லாத இடத்தில் அன்பிருத்தல் அரிது. கிறிஸ்து அன்பு – அன்பின் முழுமை. அன்பே அவர்; அவரே அன்பு. அன்பு என்ன செய்தது? தியாகஞ் செய்தது. எத்தகைத் தியாகம்!
ஒருவன் பொன்னை அளிப்பன்; பொருளை அளிப்பன்; வீட்டை அளிப்பன்; நிலத்தை அளிப்பன்; அரசை அளிப் பன். உயிரை அளிப்பனோ? ‘ உயிர் அளிப்பு’ என்றதும் சிந்தனை உண்டாகும். கிறிஸ்து பெருமான் எதைத் தியாகஞ் செய்தார்? தமது ஆருயிரைத் தியாகஞ் செய்தார். எவர் பொருட்டு? உயிர்கள் பொருட்டு; தம்பொருட்டன்று. அவர் உயிர்கள் மீது வைத்த காதல் அவரை இன்புடன் உயிர் துறக்கச் செய்தது. மெய்க்காதல் என்ன செய்யாது?
ஓருயிர் தனக்கினிய ஓருயிரின் பொருட்டுத் தியாகஞ் செய்வதைக் காண்கிறோம்; கேட்கிறோம்; இது காமிய அன்பு; கட்டுப்பட்ட அன்பு. கிறிஸ்து பெருமான், மற்ற உயிர்களின் பொருட்டுத் தாமே பலியானார். இதுவே நிட்காமிய அன்பு; கட்டற்ற அன்பு. உயிர்களெல்லாம் பாவத்தினின்றும் விடுதலையடைதல் வேண்டுமென்ற பெருங் காதலால் கிறிஸ்து தம்மையே தியாகஞ் செய்தனர். இத் தியாகத்துக்கு அடிப்படை காதல். காதல் வடிவம் கிறிஸ்து. கிறிஸ்து காதல் மணவாளன்; நாம் காதல் மணவாட்டியராதல் வேண்டும். கிறிஸ்துவைக் காதலித்து அவரை வழிபடுவோம். நாம் அன்பாவோம்; தொண்டாவோம்; தியாகமாவோம்.
வீரம்
காதலைத் தொடர்ந்து வருவது வீரம்; காதலுக்கும் வீரத்துக்கும் தொடர்புண்டு. காதல் திகழும் இடத்தில் வீரம் செறியும்; வீரம் செறியும் இடத்தில் காதல் திகழும். அஃது இல்லாத இடத்தில் இஃது இராது: இஃதில்லாத இடத்தில் அஃது இராது. காதல் அகம்; வீரம் புறம். அக நூல்கள் காதலையும் புற நூல்கள் வீரத்தையும் விளம்புதல் உங்கட்குத் தெரியும். காதல் காதலர்வழி இயங்குவது போல வீரம் வீரர்வழி இயங்கும். காதல் நெஞ்சில் கடவுள் விளங்குவது போல வீர நெஞ்சிலும் கடவுள் விளங்கும். இதுபற்றியே வீரர் வழிபாடு உலகெங்கும் நடைபெறுவதாயிற்று. பண்டை நாளில் வீரர் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் அவர்தம் புகழ் பொறிக்கப்பெற்ற ஒரு கல் நாட்டப்படும். அது வீரக்கல் என்றும், நடுகல் என்றும் போற்றப்படும். அக் கல்முன்னே பலவித வந்தனை வழிபாடுகள் நடைபெறும்.
வீர மூலம்
[1] வீரத்துக்கு மூலம் ஈரம்; கோபமன்று; வன்மமன்று. ஈரத்தினின்றும் எழுவது வீரம். கோபத்தினின்றும் வன்மத்தினின்றும் எழுவது வீரமாகாது. அது வெறி. இந் நாளில் அன்பற்ற கோபத்தினின்றும் – வன்மத்தினின்றும் – எழுவது வீரமென்று கருதப்படுகிறது, இதனால் அறப் போர் குலைந்து மறப்போர் தலையெடுக்கலாயிற்று. கோழைகள் வீரர்களாகக் கருதப்படுகிறார்கள். முன்னாளில் போருக்கென்று ஓரிடம் குறிக்கப்படும். அவ்விடத்திலுள்ள ஆக்கள், அந்தணர், பெண்மக்கள், நோயாளர், மக்கட்பேறில்லாதவர் முதலியோர் அப்புறப்படுத்தப்பட்ட பின்னரே போர் துவங்கப்படும். நிராயுதபாணிகள் மீது எக்காரணம் பற்றியும் அம்புகள் சொரியப்பட மாட்டா. இக்காலப் போர்முறைகளைப் பேசவும் வேண்டுமோ? பேசவும் நா எழவில்லை.
——————————
[1] ஆரங் கண்டிகை ஆடையுங் கந்தையே
பாரம் ஈசன் பணியல தொன்றிலார்
ஈர அன்பினர் யாதுங் குறைவிலார்
வீரம் என்னால் விளம்புந் தகையதோ – சேக்கிழார்
——————————
ஆடு மாடுகள், அறவோர், பெண்மணிகள், குழந்தைகள், நோயாளர், நிரபராதிகள், நிராயுதபாணிகள் முதலியோர் மீது குண்டுகள் பொழியப்படுகின்றன! கொடுமை! கொடுமை! அறம் எங்கே போயிற்றோ? அன்பு எங்கே போயிற்றோ? இக்கொடிய மறப்போர் புரிவோர் வீரராவரோ? அவர் உருவங்களை வழிபடலாமோ?
காதலும் வீரமும்
காதலும் வீரமும் தொடர்புடையனவாதலின், அதற்கு ஏதேனும் இடர் நேர்வதாயின், இது வாளா இராது; வீறுடன் எழும். வீர எழுச்சிக்கு அடிப்படை காதலே; சீற்றமன்று; இகலன்று. வீரம் எழுங்கால் அதனிடைத் தெய்வத் தன்மை நடம் புரியும். மாசற்ற காதல் கடவுள் தன்மை வாய்ந்தது போல மாசற்ற வீரமும் கடவுள் தன்மை வாய்ந்ததே. இக்காரணம் பற்றியே வீரர் வழிபாடு உலகில் தோன்றியிருக்கும். வீரர் நெஞ்சில் சீற்றமில்லை; இகலில்லை. அங்கிருப்பது காதல். இத்தகைய வீரர் உள்ளம் தெய்வக் கோயிலாகுமன்றோ?
காதலுக்கும் வீரத்துக்கும் உள்ள தொடர்பை நன்கு விளக்கவல்ல எடுத்துக்காட்டுக்கள் பல உண்டு. விரிவஞ்சி இரண்டொன்றைக் குறித்துச் செல்கிறேன்.
ஒரு களிறும் ஒரு பிடியும் காட்டின் வழியே போய்க் கொண்டிருந்தன. அவ்வேளையில் ஒரு சிங்கம் எதிர்ப் பட்டது. பிடி, களிற்றின் பக்கலில் நெருங்கிற்று. களிறும் பிடியும் காதலால் பிணிக்கப்பட்டவை. காதல் நடுக்கங் கண்டு வீரம் வாளா கிடக்குமோ? வீரம் களிற்றினிடம் எழும்பிற்று. காதலினின்றும் எழும் வீரத் தெய்வத்தின் முன்னே எவர் நிற்றல் முடியும்? உலகம் முழுவதும் ஒருங்கு திரண்டு எதிர்த்தாலும் காதல் வீரத்தைச் சாய்த்தல் இய லாது. களிற்றின் வீரம் பிடிக்கு என்ன உணர்த்திற்று?
‘காதலே, அஞ்சற்க. உன் காதலே எனது வீரம். என்னுயிர் நீ. என்னுயிர் போம்வரை உன்னைக் காப்பேன்’ என்பதை உணர்த்திற்று. காதல் வீரம் சிங்கத்தை நடுக்குறச் செய்தது. சிங்கத்துக்கு யானை அஞ்சி ஓடுவது இயற்கை. ஆனால் காதல் வீரம் இயற்கையையும் மாற்றியது. அது யானையைச் சிங்கமாக்கியது; சிங்கத்தை நரியாக்கியது. காதல் வீரம் எங்கே எழுந்தது? உயர்திணை உயிரினிடத்திலா? அஃறிணை உயிரினிடத்திலா? எளியதினிடத்திலா? வலியதினிடத்திலா? காதல் வீரத்தின் எழுச் சியை அஃறிணை உயிரினிடத்தில் – எளியதினிடத்தில் – ஏற்றி, உலகுக்கு அவ்வீரத்தின் பெற்றியை அறிவுறுத்திய பெருமை யாருடையது? திரிபுர மெரித்த விரிசடைக் கடவுளையும் எதிர்த்த அஞ்சா நெஞ்சமுடைய வீரர் நக்கீரருடையது.
நனந்தலைக் கானத் தாளி யஞ்சி
இனந்தலைத் தரூஉம் ஏறுழ்கிளர் முன் பின்
வரிஞிமி றார்க்கும் வாய்புகு கடா அத்துப்
பொறிநுதற் பொலிந்த வயக்களிற் றொருத்தல்
இரும்பிணர்த் தடக்கையின் ஏமுறத் தழுவக்
கடுஞ்சூன் மடப்பிடி நடுங்குஞ் சாரல்…
இஃது அகநானூற்றிற் போந்த நக்கீரர் காதல் மொழி – வீரமொழி.
ஒரு களிறு, காதல் காரணமாக ஒரு சிங்கத்தை நடுக்குறச் செய்தது; உயிரைப் பொருளாக மதியாது தன்னினும் வல்ல சிங்கத்தை எதிர்க்கலாயிற்று. [1] மனைவி மாட்டுள்ள காதல் என்னே? பெண்ணுலகைக் காக்க ஆணுலகங் கடமைப்பட்டதை உன்னுக. மனைவிக்கு ஆபத்து நேருங்கால் தன்னுயிரைக் காக்க ஓடுவோன் கணவனாகான்: உயிர் நாயகனாகான்; காதல் கொழுநனாகான். அவன் வீர மகனல்லன்; பேடி; கோழை.
——————————
[1]. பிழைத்த பிடியைக் காணா தோடிப் பெருங்கை மதவேழம்
அழைத்துத் திரிந்தங் குறங்குஞ் சாரல் அண்ணா மலையாரே.
– திருஞானசம்பந்தர்
——————————
கோழமை
இக்கால ஆண்மகன் ஒருவனும் பெண்மகள் ஒருத்தியும் ‘காதல்’ என்னும் பெயரால் பதிவுமணஞ் செய்து கொண்ட னர். அவன் எம். ஏ. இவள் பி. ஏ . இவர் அடிக்கடி காடுகளிற் போந்து சுற்றிவருவது வழக்கம். ஒருநாள் காட்டில் ஒரு மரத்தடியில் தூர்த்தன் ஒருவன் பி.ஏ. பெண்ணைக் காணலானான். அவனது உள்ளக் குறிப்பை உணர்ந்த பெண்மணி பக்கத்திருந்த நாயகனுக்கு ஆங்கிலத்தில் அதைத் தெரிவித்தாள். தெரிவித்ததும் தன் உயிரைக் காக்க வேண்டி எம்.ஏ. ஆண் ‘ ஓட்டமாக’ ஓடினான். இஃது ஐந்துநதி பாயும் அழகிய ஒரு நாட்டில் ஓரிடத்தில் நடந்தது. நிகழ்ச்சியை முற்றுங் கூற விரும்புகிறேனில்லை. ஓடிய ஆள் தன் மனைவியைக் காதலித்தவனா? காமுற்றவனா? என்பதொன்றே ஈண்டுக் கருதற்பாலது. அவன் மனைவியைக் காதலித்தவனல்லன்; காமுற்றவனே. காதல் தன்னுயிரை விடுத்து ஓடச்செய்யுமா? ஓடச் செய்வது காமம். காதல் வீரத்தையன்றோ எழுப்பும்? நக்கீரர் காலக் காட்சிக்கும், இக்காலக் காட்சிக்கும் எவ்வளவு வேற்றுமை? இவ்வளவில் நின்று மேற்செல்கிறேன்.
இராமபிரான்
நமது நாட்டில் இராமாயணம் படிக்கப்படாத இடமே இல்லை என்று கூறலாம். இராமாயணம் என்ன அறிவுறுத்துகிறது? காதல், வீரத்தை அறிவுறுத்துகிறது. சீதாராமன்: என்ன பொருள்? காதல் – வீரம் என்பது பொருள். சீதை காதல்; இராமன் வீரம். காதலும் வீரமும் தொடர்புடையன. ஒன்றுள்ள இடத்தில் இன்னொன்றுமிருக்கும். இராமபிரான் வீரர்; ன்ஈர நெஞ்சினர். இராமபிரானுக்கு ‘முடிசூட்டு விழா’ என்ற செய்தி உலகுக்கே மகிழ்ச்சியூட்டியது. ஆனால் அவர் அத்தறுவாயில் சிற்றன்னை விரும்பியவாறு நாட்டை விடுத்துக் காட்டுக் கேகினர். என்ன தியாகம்! தனிமுடி கவித்து ஆளும் அரச இன்பத்தைத் திடீரென ஒரு நொடியில் அகமலர்ச்சி யுடன் துறத்தல் எளிதோ! இராமபிரான் தியாகமே தியாகம்! தியாகத்துக்கு ஊற்று ஏது? ஈர நெஞ்சமே. இராமபிரானின் ஈரநெஞ்சம் என்னென்ன செய்தது? வேடனையும், குரங்கையும், அரக்கனையும். அணிலையும் சகோதரமாகக் கருதச் செய்தது; போரில் இராவணன் நிராயுதபாணியாக நின்ற காலத்தில் ‘இன்று போ, நாளை வா’ என்று சொல்லச் செய்தது. மற்றும் பலவற்றை இராமாயணத்திற் பார்க்க. இராமபிரான் உள்ளத்தில் சீற்றமில்லை! இகலில்லை; ஈர வீரமே இருந்தது. ஈர வீரம் பகைவனிடத்திலும் இரக்கங்காட்டச் செய்தது. ஈர நெஞ்சமுடைய இராமபிரான் வீரம் – சொலற்கரிய வீரம் – இராமாயண முழுவதும் பேசப்படுகிறது. வீர ராகவன் என்ற பெயரும் இராமபிரானுக்கு உண்டு. இராமபிரான் வீரம் எப்பொழுது வீறி எழுந்தது? காதல் சீதைக்கு இடுக்கண் நேர்ந்தபோது இராகவன் வீரம் வீறி எழுந்தது. எப்படி எழுந்தது? அதை வருணிக்க யான் வான்மீகியல்லன்! கம்பனல்லன். இராமபிரான் கடல் தாண்டிப் பெரும்போர் புரிந்து காம அரக்கப் பூண்டுகளை யெல்லாம் அறுத்தொழித்துக் காதற் சீதையைக் காத்தருளினர். ‘இராவணன் சீதையைத் தூக்கிச் சென்றான். நாம் வேறு ஒருத்தியை மணம் செய்து வாழலாம்’ என்று இராமபிரானது ஈரநெஞ்சம் – வீரநெஞ்சம் – நினைந்ததோ? அப்படி அந்நெஞ்சம் நினைக்குமோ? நினையாது. அந்நெஞ்சில் ஈர வீரம் படிந்து கிடந்ததற்கு அடிப்படை என்ன? சீதைக் காதல் ஊறி ஊறி இரண்டற்று ஒன்றினமை அடிப்படை. காதலுக்கும் வீரத்துக்கும் உள்ள தொடர்புக்கு இராமபிரான் வாழ்வு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு – ஒரு பெரும் இலக்கியம். வான்மீகி அருளிய இராமாயணத்தைத் தமிழ் மணங் கமிழக் கம்பர் பாடப் புகுந்ததன் நுட்பத்தைச் சிந்தித்தல் வேண்டும். இராம காதையிலுள்ள காதல் வீரம் தமிழ்க் கம்பரை இராமாயணம் பாடுமாறு தூண்டியது. தொல்காப்பியரும், நக்கீரரும், திருவள்ளுவரும், மாணிக்கவாசகரும், ஆண்டாளும், மற்றவரும் வாளா கிடப்பரோ?
நாடு
அவரவர் நாட்டை அவரவர் ஆட்சி புரிவதே இயற்கை இதற்கு மாறாக ஒரு நாடு இன்னொரு நாட்டைப் பற்றினால், இந்நாட்டவர் தமது நாடாகிய சீதையை மீட்க ஒவ்வொருவரும் இராமராதல் வேண்டும். இக் குறிப்பு மிடையவும் இராமாயணம் பாடப்பட்டது.
வீரத்துக்கு அடிப்படை காதல். வீரம் ஈர நெஞ்சினின்றும் எழுவது. ஈரநெஞ்சமாவது கோபமற்றது; வன்ம மற்றது; மாசற்றது. இந்நெஞ்சமன்றோ கோயில் – தெய்வக் கோயில்! இக் கோயில் கொண்ட நெஞ்சமுடைய வீரரை வழிபடுவதும் இயற்கை வழிபாட்டின் பாலதே. வீரர் வழிபாட்டுக்கென்று தோன்றிய காவியங்களும் ஓவியங்களும் கதைகளும் பலப்பல. இனி அழகை உன்னுவோம்.
அழகு
காதலைப் போலவும் வீரத்தைப் போலவும் அழகும் உருவங்களிலேயே தன்னை உணர்த்துவது. பண்டை நாளில் நாகரிகம் நிறைந்த நாடுகளெல்லாம் அழகைக் கடவுளாக் கொண்டு வழிபட்டு வந்தன. அந்நாடுகளுள் இந்தியாவும் கிரீஸும் சிறந்து விளங்கின. இந்நாளிலும் அழகென்னும் முருகைக் கடவுளாக நந் தமிழ்நாடு வழிபட்டு வருதல் கண்கூடு. ‘முருகன் அல்லது அழகு’ என்றொரு நூல் என்னால் யாக்கப்பட்டுள்ளது. அதன்கண் அழகுக் கடவுளைப்பற்றி விரித்துக் கூறியுள்ளேன்.
இயற்கையும் அழகும்
அழகு யாண்டுளது யாண்டுளது என்று அலைந்து திரிந்து தேடன்வேண்டுவதில்லை. இயற்கையை நோக்குவோம். இயற்கை நம்மை விடுத்துச் சேய்மையில் நிற்கவில்லை. அது நம்மைச் சூழ்ந்து நானாபக்கமும் பொலி தருகிறது. அது நம்முள்ளும் புறமும் நிலவுகிறது. இவ்வியற்கையே அழகு; அழகே இயற்கை, இயற்கை அழகு; இயற்கைக் கூறுகளெல்லாம் அழகு; இயற்கைக் கலைகளெல்லாம் அழகு; இயற்கையினின்றும் முகிழ்ப்பன எல்லாம் அழகே. இயற்கையில் கோரமில்லையோ என்று சிலர் ஐயுறலாம். இயற்கையில் கோரமே கிடையாது. சில கோரம் போல் தோன்றும். அவையிற்றை நுணுகி நோக்கினால் அவையும் அழகாகவே தோன்றும். கோரம் செயற்கை.
‘கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பின்’ என்பது நக்கீரனார் திருவாக்கு. கைபுனைந் தியற்றாதது சொக்க அழகு என்கிறார் அப்பெரியார். கைபுனைந் தியற்றாதது இயற்கை; கைபுனைந் தியற்றுவது செயற்கை. கைபுனைந் தியற்றாத இயற்கையே அழகு என்றவாறாம். கைபுனைந் தியற்றுஞ் செயற்கை ‘கோரம்’ என்பது தொக்கி நிற்கிறது. கோரம் இயற்கையிலுண்டு என்று நினைப்பது தவறு.
அழகு வழிபாடு
அழகு அழகு என்று பேசுதல் மட்டும் போதாது: எழுதுதல் மட்டும் போதாது. அழகை வழிபட்டு அழகாதல் வேண்டும். அழகை எண்ண எண்ண நெஞ்சு அழகாகும்; அதை ஓத ஓத வாய் அழகாகும்; அதைத் தொழத் தொழ உறுப்பெல்லாம் அழகாகும். இம்முறையில் அழகு வழிபாடு எங்கணும் இடையீடின்றி நடைபெற்றுவரின், காண்பன ‘கேட்பன செய்வன எல்லாம் அழகாகும். உலகம், அழகுத் தெய்வக்காட்சி வழங்கும். இந்நிலையில் [*] எந்நாளும் இன்பமே துன்பமில்லை’ எனவரும் மொழியின் மெய்ம்மை இனிது விளங்கும்.
அழகு வழிபாடுகள் நூல்களில் பலவாறு ஓதப் பட்டுள்ளன. நாடுகளின் பிரிவும், தட்ப வெப்ப நிலைகளும், சமூக வழக்க வொழுக்கங்களும், இன்ன பிறவும் வழிபாடுகளைப் பல வாறாக்கின. இவைகட்கெல்லாம் முதலாய் – அடிப்படையாய் – உயிராய் – இருப்பது அழகொன்றே. அழகு வழி பாடு எளியது; அரியதன்று.
——————————
[*] அப்பர் (நாமார்க்கும் ……..). உள். 8
——————————
ஞாயிறு
காலையில் பசுங்கடலில் இளஞாயிறு விரைந்து அசைந்து எழுகிறது; நீல விளிம்பில் நிற்கிறது. அழகுக் காட்சி – செம்மைக் கோலம் – அனலுருண்டை! கண்ணுக் கினிமை; கருத்துக்கமுதம்; உயிருக்கொளி; அதில் படிவோம்; திளைப்போம்.
ஞாயிற்றைப் போற்றுவது இன்று தோன்றியதன்று; நேற்றுத் தோன்றியதன்று. அது சரித்திர காலத்துக்கு முன்னரே தோன்றியது. ஞாயிறு வழிபாடு தொன்று தொட்டது. அவ்வழிபாடு நமது நாட்டுப் பண்டை நூல்களில் மிக விரிவாகப் பேசப்பட்டிருத்தலை இன்றுங் காணலாம். ஞாயிறு வழிபாட்டில் (சூரிய நமஸ்காரத்தில்) நமது நாடு பேர் பெற்றதென்று பறைசாற்ற வேண்டுவதில்லை. இருள் சூழ்ந்த இந் நாளிலும் ஞாயிறு வழிபாடு ஒருவாறு ஆங்காங்கே சிற்சில இடங்களில் நடைபெற்றே வருகிறது. காலை ஞாயிற்றை வணங்கி, அதன் ஒளியில் மூழ்கிவந்த நம் முன்னோர் நீண்டநாள் வாழ்ந்தனர்; நிறையில் நின்றனர்; நீன்கலைகளைத் தந்தனர். பண்டைப் பழக்க ஒழுக்கங்களைப் பழித்துப் பேசுவோருள் சிலர் பரிதி வழிபாட்டையும் பழித்துரைத்தலை யான் கேட்டிருக்கிறேன். அவர் நல்லறிவு பெற வேண்டுமென்று ஒளிவண்ணனை வழுத்துகிறேன். பழிக்குஞ் சகோதரர் மேல்நாட்டவர் புதிது புதிதாகக் கண்டுவரும் விஞ்ஞான உலகிலாதல் நடமாடுகிறாரா என்று கேட்கிறேன். இக்கால விஞ்ஞான உலகம் கதிரொளியை ஆராய்ந்து, அதன் நுட்பங்களைக் கண்டு கண்டு வியப்படைகிறது. காலைக் கதிர் பொழியும் உயிர்ப்பின் (பிராணனின் – Ozone) திறத்தை என்னென்பேன்! அதனைக் கடலோரத்திலோ மலைமீதிலோ இருந்து பருகுவோர் நோயின்றி நீண்ட காலம் வாழ்வர் என்னும் உண்மை காணப்பட்டிருக்கிறது. பிராணச் சக்தியை உயிர் நிலைகளிற் புகுத்தும் முறைகள் காணப்பட்டு வருகின்றன. சில இடையூறுகளால் அம்முயற்சி இன்னும் முற்றுப்பெறவில்லை. அம்முயற்சி இச்சண்டைக்குப் பின்னர் முற்றுப் பெறும் என்று நம்புகிறேன். அது வெற்றியடைந்தால் உலகில் நோயையும் முதுமையையுங் காண்டல் அரிதாகும். இன்றைய விஞ்ஞான உலகில் முயற்சியிலிருக்கும் கதிரொளி வித்தை, பண்டை நாளிலேயே நமது நாட்டில் ஆட்சி பெற்றிருந்தது. அவ்வரிய வித்தை பலர்க்குப் போதிக்கப்பட வில்லை. அதனால் அது வாழ்க்கையில் அற்று, ஏடுகளில் அக் கால குறியீடுகளுடன் அறிதுயில் செய்து கொண்டிருக்கிறது. மேல்நாட்டு விஞ்ஞான உலகம் கொலைப் போரில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது. இஃது அரசியலார் கொடுமை! விஞ்ஞான உலகைக் கொலைப்போருக்குப் பயன்படுத்துவது அறமன்று. அதை நல்வழியில் பயன்படுத்தும் ஆட்சிமுறை ஆங்காங்கே மலர்வதாக.
செஞ்ஞாயிறு எழுந்ததும் இருட்படலம் ஒதுங்குகிறது. அது நெஞ்சம் புகுந்தால் ஆங்குள்ள இருட்படலமும், ஒதுங்கும்; ஒடுங்கும். ‘இன்றெனக் கருளி இருள் கடிந்து என்னுள்ளத்து எழுகின்ற ஞாயிறே போன்று…’ என்றார் மாணிக்கவாசகனார். ஞாயிறு வழிபாடு இயற்கை வழிபாடுகளுள் மிகச் சிறந்தது. இயற்கை அரசை – உயிர்ப் பொளியை – அழகு ஞாயிற்றை – இவ்வளவில்விட மனம் எழவில்லை. என் செய்வேன்! இரவு வேளை – விளக்கொளி குறைந்துள்ள காலம் – திங்களின் அருள் வேண்டும். ‘ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்’ என்ற இளங்கோ அடிகளின் நன்மொழியை நினைந்து நினைந்து திங்களிடஞ் செல்கிறேன்.
திங்கள்
திங்கள் முழுக்கோலத்துடன் எழுகிறது. கீழும் மேலும் சுற்றும் முற்றும் எங்கும் நீல வெளி. பரந்த நீல வெளியில் வெள்ளிய திலகம்! திலகம் நிலவு பொழிகிறது; பொழிந்தே வானத்தில் உழுது செல்கிறது; செல்லுங் காட்சி என்னே! நிலவுமழை கருமைக் கடலிலும், வெண்மை மணலிலும், பசுமைப் பொழிலிலும், பிறவிடங்களிலும் பொழிகிறது. வெண்ணிலவு , கருமையிலும் வெண்மையிலும் பசுமையிலும் பிறவற்றிலும் படிந்து விராவி ஒன்றுங்கால், ஆங்காங்கே அழகுத் தெய்வம் எழுந்து ஆனந்த நடம் புரிகிறது. அந் நடத்தைக் காண ஐந்து பேர் அறிவும் கண்களை நாடிச் சேர்கின்றன. இச் சேர்க்கை இன்ப வழிபாடன்றோ?
திங்கள் வழிபாட்டிலுள்ள சிறப்பை நன்கு உணர்ந்த சான்றோர் அவ்வழிபாட்டை உலகில் நிலைபெறவே செய்தனர். பொதுவாகத் திங்கள் தோறும், சிறப்பாகச் சித்திரைத் திங்களிலும் முழுமதி வழிபாடு நிகழ்ந்து வருதலை இன்றுங் காண்கிறோம். பாட்டுலகில் திங்கள் வழிபாடு பெற்றுள்ள ஏற்றம் அவ்வுலகில் வாழ்வோர்க்குச் செவ்வனே தெரியும்.
சூரிய சந்திரர் அண்டத்தில் இருப்பது போல் பிண்டத்திலும் இருக்கின்றன. சூரியகலை சந்திரகலை யோக நூல்களில் பேசப்படுகின்றன. இரண்டும் யோகருக்கு உயிர்நாடிகள். யோகர் உண்ணும் அமிர்தம் எங்கிருந்து சுரக்கிறது? அமிர்த கலச மென்னும் சந்திரனிடத்திருந்தன்றோ சுரக்கிறது? ஆகவே, நாம் என் செயல் வேண்டும்? ‘திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்.”
மலை
ஒரு பெண்: வாழ்க்கையில் வழுக்கி விழுந்தவள். அவள் பின்னாளில் நல்லறிவு பெற்று அமைதி நாடி அங்கும் இங்கும் அலைந்து திரிந்தாள்; எவரெவரிடமோ சென்றாள். எவர் போதனையும் அவளுக்கு அமைதி கூட்டவில்லை. ஒரு நாள் அப்பெண் ஒரு மலை மீது இவர்ந்தாள். அம்மலையின் பசும் போர்வை அவளுக்குச் சிறிது மகிழ்ச்சி யூட்டிற்று. அவள் குகைகளைத் தேடிப் பார்த்தாள்; ஒருவரையுங் கண்டாளில்லை. ஒரு கல்லாலமரம் அவள் கண்ணைக் கவர்ந்தது. அதனடியில் அவள் அமர்ந்தாள். சிந்தை அப்படியும் இப்படியும் ஓடிற்று. அவ்வேளையில் அங்கே மயிலின் நடமும், குயிலின் கூவலும், வண்டின் இசையும், அருவியின் முழவும், இன்ன பிறவும் அவளுக்கு விருந்தளித்தன. விருந்த முதம் அவளுக்கு மன அமைதி கூட்டிற்று. அடிக்கடி அவள் அம்மலைக்குச் செல்வாள்; அமைதி இன்பம் நுகர்வாள். அவள் மனம் பல வழியிலுந் திருந்தியது – நல்லோர் போதனையின் நுட்பம் அவளுக்குப் பின்னரே விளங்கலாயிற்று. அவள் இயற்கை அழகு வழிபாட்டின் சிறப்பைப் பிறர்க்கு அறிவுறுத்துந் தொண்டில் ஈடுபட்டாள். அத் தொண்டிற் கென்றே அவளது வாழ்நாள் அர்ப்பணமாயிற்று.
கடலும் வானமும்
இனி மலையை விடுத்துக் கடலிற் பாய்வோம்; கடற்கரை நண்ணுவோம். தரங்கம் பாடுகிறது. அப் பாட்டமுதைப் பருகப் பருக நெஞ்சம் கடலிற் படிகிறது; தன்னை யறியாமலே வானிலும் புகுகிறது. அந்நீலமும் இந் நீலமும் ஒன்றி மனஅலையை மறிக்கின்றன. பரந்த கடலும் விரிந்த வானும் அகண்ட பரம்பொருளை நினைவூட்டுகின்றன. பரம்பொருள் அகண்டம். அகண்ட நினைவுக்கு உயர்ந்த மலை, நீண்ட ஆறு, பரந்த கடல், விரிந்த வானம் முதலிய வற்றின் சிந்தனை தேவை.
மரம்
நமது நாட்டில் மர வழிபாடு நடைபெற்று வருகிறது. வேம்பு அரசு முதலிய மரங்களை மக்கள் சுற்றி வருகிறார்கள்; வணக்கஞ் செய்கிறார்கள். இவ்வழிபாட்டை இழித்துக் கூறுதல் எளிது. மரவழிபாடு எந்நாளில் எக்காரணம் பற்றித் தோன்றியதோ தெரியவில்லை. மூட நம்பிக்கையினாலும் அவ்வழிபாடு தோற்றமுற்றிருக்கலாம். [1] பழமை என்று எதையும் தள்ளுதலாகாது; அவ்வாறே புதுமை என்று எதையும் கொள்ளுதலாகாது. எதையும் ஆராய்ந்து பார்த்து ஏற்பதே அறிவுடைமையாகும்.
——————————
[1]. தொன்மையவாம் எனும் எவையும் நன்றாகா இன்று
தோன்றிய நூல் எனும் எவையும் தீதாகா துணிந்த
நன்மையினார் நலங்கொள் மணி பொதியும் அதன் களங்கம்
நவையாகா தென உண்மை நயந்திடுவர் நடுவாந்
தன்மையினார் பழமை அழ காராய்ந்து தரிப்பர்
தவறுநலம் பொருளின் கட் சார்வாராய்ந் தறிதல்
இன்மையினார் பலர்புகழில் ஏத்துவர் ஏ திலருற்
றிகழ்ந்தனரேல் இகழ்ந்திடுவர் தமக்கெனவொன்றிலரே.
– சிவப்பிரகாசம்
——————————
பசிய மரம் தழைதழைத்து நிற்கிறது. மரத்தால் மக்களுக்குள்ள நலங்கள், அது கற்பிக்கும் பாடங்கள் முதலியவற்றை இச்சொற்பொழிவில் விரித்துக் கூறுதல் அவசியம் என்று தோன்றவில்லை. எடுத்த பொருளுக்கேற்பச் சில கூறுகிறேன். பசிய மரம் கண்ணுக்கினிமையும் மூளைக்குத் தண்மையும் வழங்கும் இயல்புடையது மூளையின் வெம்மையைத் தணிக்கும் ஆற்றல் பசுமைக்கு உண்டு. பசுமை பொழியும் சோலையில் பித்தரைச் சிலகாலம் வாழச் செய்தால் அவரது வெம்மை நீங்கும்; பித்தம் போகும்.
பல மரங்களை விடுத்து மக்கள் வேம்பையும் அரசையும் சிறப்பாக ஏன் சுற்றிச் சுற்றி வழிபடுகிறார்கள்? சமயச் சார்பில் சொல்லப்படும் பதில்கள் பல உள. அவைகள் மூட வழக்கங்கள் என்று எள்ளி நகையாடப் படுகின்றன. விஞ்ஞான உலகம் என்ன சொல்கிறது? பார்ப்போம். வேம்பரசுகளின் இலைகள் கூரிய நுனியுடையன. இத்தகைய இலைகள் ஞாயிற்றின் உயிர்ப்புப் பிறந்தவாறே (எவ்விதக் கலப்பும் பெறாது) விரைந்து பாய்ந்து அவைகளின் வாயிலாகச் சூழ்ந்துள்ளவரிடம் புகுந்து படர்கிறது. அதனால் மக்களைப் பற்றியுள்ள அகப்புறப் பிணிகள் நாசமாகின்றன. மரத்தைப் பன்முறை மலம் வருவதால் நடைப் பயிற்சியும் தூயகாற்று நுகர்வும் உண்டாகின்றன. மர வழிபாடு உடலை நன்முறையில் ஓம்புவது என்று சுருங்கச் சொல்கிறேன். உடலை ஓம்பும் வழிபாடு அழகுடையது; அழகை ஊட்டுவது.
பாம்பு
பாம்பொன்று படம் விரித்து ஆடுகிறது. வழியே சென்ற ஓர் ஓவியர் அதைப் பார்த்து நின்றார். அவர் ஓவியம் ஆனார். பாம்பின் பட அழகு அவரை ஓவியமாக்கியது. பாம்பின் படத்தில் அழகுண்டா? இல்லையா? அஞ்சாது பாம்பைப் பாருங்கள்; படத்தைப் பாருங்கள். அழகு ததும்புகிறது; வழிகிறது. அவ்வழகைப் பருகுவோர்க்கு நஞ்சு ஏது? அச்சம் ஏது? படம் விரித்து ஆடும் பாம்பு ஓவியரிடம் அணுகிற்று. அவர் அஞ்சி ஓடினாரில்லை; பாம்பும் அவரைத் தீண்டவில்லை. அழகு வண்ணமாகவுள்ள பாம்பினிடம் நஞ்சு ஏது? அச்சமுடைய மனிதன் நெஞ்சம் பாம்பினிடம் நஞ்சிருக்கிறது என்று நினைக்கிறது. அந்நினைவு பாம்பினிடம் நஞ்சாகிறது. நஞ்சுமனம் நஞ்சைக் காண்டல் இயல்பு. நஞ்சில்லாப் பாம்பினிடம் நஞ்சை உண்டாக்குவது பாழும் மனம். ஓவியர் பாம்பின் அழகில் ஒன்றுபட்டார். அவர் நெஞ்சில் நஞ்சில்லை; அழகிருந்தது. அதனால் பாம்பினிடமும் நஞ்சு எழவில்லை. அஃது அழகு நெஞ்சினை அணுகலாயிற்று. இயற்கை அழகில் கொடுமையே கிடையாது.
வேங்கை
ஒரு சுனையின் பாங்கர் ஒரு வேங்கைப்புலி படுத்திருக்கிறது; நாத் தொங்க அசைவிடுகிறது. அங்கே நீர் அருந்த ஒரு கவி வந்தார்; அவர் புலியைக் கண்டார்; அதில் ஈடுபட்டார். நீர்வேட்கை எங்கேயோ பறந்து போயிற்று. புலியின் மீசையும், நாவும், கண்ணும், வரிப்பட்டையும், நகமும், பிறவும் அவர்க்கு நீராயின. வேட்கை தணிந்தது, கவி, புலியைப் பாட்டாகப் பார்க்கிறார். இயற்கை அழகு அவருக்கு விருந்தளிக்கிறது. அவர் உள்ளத்தில், ‘புலி கொடியது’ என்ற எண்ணமே உதிக்கவில்லை. அவர்க்குப் புலி இயற்கை அழகுக் கடவுளாகவே புலனாயிற்று. புலி, கவியைக் கண்டு பாயவில்லை; அவர் அருகே குழந்தை போல் சென்று நின்றது. கொடுமை எங்கே?
‘சாந்தம் சாந்தம் சிவம்’ என்று உபநிஷத் உரைக்கிறது. இதற்குப் பௌராணிகம் ஓர் உருக்கொடுத்துள்ளது. ‘வெண்கயிலையில் கல்லால மரத்தடியில் சாந்த சிவம் வீற்றிருக்கிறது. அச் சிவத்தின் முன்னே எருதும் சிங்கமும் பாம்பும் மயிலும் பகைமையின்றி விளையாடுகின்றன’ என்று பௌராணிகம் புகல்கிறது. நுட்பம் என்ன? சாந்த நெஞ்சம் எல்லாவற்றையுஞ் சாந்தமாக்கும் என்பது நுட்பம். [*] ‘உலகம் பொல்லா தென்கின்றார் உளமே பொல்லா தென்றுணர்ந்தேன், கலக உளத்தைக் கடந்து நின்றால் கருணை வடிவே உலகமெலாம், இலகும் உயிர்கள் நின்வடிவே எங்கே குற்றம் இறையோனே.” இஃது என்பால் முகிழ்த்த பாட்டு.
——————————
[*] முருகன் அருள் வேட்டல்.
——————————
எரிமலை
ஓரிடத்தில் எரிமலை நெருப்பைக் கக்குகிறது; உமிழ்கிறது. நெருப்புக் கனன்று நாவிட்டெரிகிறது; பொங்கு கிறது. எங்கணும் அழல் – தழல் – கனல். இஃது இயற்கை இது கோரமா? அழகா? கோரமன்று; அழகே. கோரம் எங்கே இருக்கிறது! மலையிலா? நெருப்பிலா? மலை இயற்கை. அது கோரமாகாது. நெருப்பு நாவிட்டு எழுந்து பொங்கி அருணாசலமாகிறது. ஒரே பிழம்பு! செம்மைப் பிழம்பு! செம்மைப் பிழம்பின் அழகை என்னென்று வருணிப்பது! காலையிலும் மாலையிலும் ஞாயிறு வழங்குஞ் செம்மை கோரமா? ஒவ்வொருபோது வானம் வழங்குஞ் செம்மை கோரமா? செம்மை, இயற்கை அழகுக்கு அழகு செய்யும் பெற்றிமை வாய்ந்தது. இயற்கை எவ்வடிவின தாயினும் அதன்கண் கோரங் குவியாது; அழகே அமை யும். ஆகவே, இயற்கை அழகை எவ்வடிவிலும் எந்நிலை. யிலும் வழிபடலாமென்க.
பெண்மை
இயற்கை அழகெலாம் திரண்டு உலவும் ஒரு வடிவம் இருக்கிறது. அவ்வடிவம் இன்னதென்று யான் குறிப்பதற்கு முன்னரே அஃது இஃது என்று நீங்கள் ஊகித்துக் கொண்டிருப்பீர்கள். என் பேச்சிலும் எழுத்திலும் அவ் வடிவம் புகாமலிருப்பதில்லை. அஃது எது? அது நம் மனைவரையும் ஈன்ற அன்பு வடிவம்! ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.’ அன்னையை வழிபடுவது உலக இயற்கை .
இறைவனிடத்தில் இருகூறு இருக்கின்றன. அவை பெண்மை, ஆண்மை. பெண்மை அம்மை (Motherhood of God) என்றும், ஆண்மை அப்பன் (Fatherhood of God) என்றும் வழங்கப்படுகின்றன. பெண்ணுலகுக்கும் ஆணுலகுக்கும் மூலமாயிருப்பன இறையின் பெண்மைக் கூறும் ஆண்மைக் கூறுமாம். அவ்விரு கூறுகளினின்றும் பெண்ணுலகும் ஆணுலகும் தோன்றி நின்று அவைகளிலேயே ஒடுங்குகின்றன. இறைவன் பால் பெண்மைக்கூறு இல்லையேல் உலகில் பெண் தோற்றமே இராது. உலகம் எப்படி வளர்ச்சியுறும்? பெண்ணின் இன்றியமையாமையை ஓர்க. ஆண் அநாவசியம் என்பது எனது கருத்தன்று.
[1 ]பெண்ணினல்லாள் தாயாகவும் சகோதரியாகவும் மனைவியாகவும் நின்று உலகை வளர்க்கிறாள். ஒருத்தி ஒருவனுக்குத் தாய்; இன்னொருவனுக்குச் சகோதரி; மற்றொருவனுக்கு மனைவி. பெண்மை எவ்வெவ்வாறு உலகுக்குத் துணைபுரிகிறது பாருங்கள்!
——————————
[1]. வாயு மனமுங் கடந்த மனோன்மணி
பேயுங் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும் நல் தாரமும் ஆமே – திருமூலர்
——————————
பெண்ணினல்லாளிடம் பெண்மை, தாய்மை, இறைமை என்னும் மூன்று இயல்புகள் சிறந்து விளங்குகின்றன. பெண்மை, மக்கட்பேற்றிற் குரியது. தாய்மை- இரக்கம், தியாகம், தொண்டு முதலியவற்றிற் குரியது. இறைமை, எவ்வுயிர்க்கும் நலம்புரியும் செந்தண்மை என்னும் அந்தண்மைக்குரியது. பெண்மையினின்றும் தாய்மையும், தாய்மையினின்றும் இறைமையும் படிப்படியே மலர்கின்றன. இம் மூன்றனுள் தாய்மையே சாலச் சிறந்தது. பெண்மையி னிடத்திருந்து தாய்மை பிறந்தால், அதனின்றும் இறைமை தானே பிறக்கும். ஆதலின், பெண்ணினிடத்துத் தாய்மை அமைந்திருப்பது சிறப்பென்க. இத் தாய்மையுடைய பெண்ணைப் போற்றுவது அறமே.
பெண்ணுடன் கூடி அவளிடம் தாய்மை கண்டு, அதை வளர்க்க ஒருப்படாது ஒதுங்குவது, இயற்கைக்கு அரண் செய்து வாழ்வதாகாது. ‘பெண்ணை விடுத்து ஓடுவது துறவு’ என்ற கொள்கை எப்படியோ உலகில் முளைத்து விட்டது. அம்முளை நச்சு மரமாகி உலகை எரிக்கிறது. துறவு, பெண்ணை வெறுத்து ஓடுவதன்று. அவளுடன் கூடி வாழ்ந்து மனமாசகற்றுவதே துறவு. இது திருவள்ளுவர் உள்ளிட்டார் கொள்கையுமாகும். இதைப்பற்றிப் ‘பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை’ என்னும் நூலிலும், திருக்குறள் விரிவுரையிலும் எனது உள்ளக்கிடக்கையைத் தெளிவாக விளக்கஞ் செய்துள்ளேன். என் நூல்களைப் படியாமலே சிலர் என் கொள்கையை மறுத்து வந்தனர். இப்பொழுது என் நூல்களைப் பயில்வோர் தொகை பெருகி வருகிறது; எதிர்ப்புங் குறைந்து வருகிறது. இடைக் காலத்தில் வீழ்ந்துபட்ட பெண்ணுரிமை இனி ஆக்கம் பெறும் என்னும் உறுதி எனக்கு உண்டு.
ஞானியர், பெண்பிறவியை இழித்துக் கூறியதென்னை என்று சிலர் நெஞ்சம் நினைக்கலாம். ஞானியர் பெண்ணுலகை இழித்துக் கூறவில்லை என்பது எனது ஆராய்ச்சியில் யான் கண்ட உண்மை. பெண்மையை நன்முறையில் தாய்மைக்குப் பயன்படுத்தி இறைமைப் பேற்றைக் காணாது வாழ்க்கையில் வழுக்கி வீழ்ந்த வரைவின்மகளிர் தீமைகளை உலகுக்கு உணர்த்த ஞானியர் மறுப்பு மொழிகள் வழங்கியது உண்மையே. அம்மறுப்புரைகளைப் பொதுவாக்கிப் பெண்ணுலகின் மீது சுமத்துவது தவறு. பெண்ணைப் பழித்துத் துறவோர் என்றும், ஞானியர் என்றும் திரிவோர் அனைவரும் தாயின் வயிற்றிற் பிறந்தவரே. அவர் வானத்தினின்றும் நேரே குதித்தவரல்லர். தம்மை ஈன்ற தாயைப் பழிப்பவர் எவராயினுமாக. அவர் துறவோருமாகார்; ஞானியருமாகார்.
ஒருவன் ஒருத்தியுடனும், ஒருத்தி ஒருவனுடனும் வாழ்தலே இயற்கை அறம். இவ்வறம் உலகை வளர்க்கத் துணை புரியும். இயற்கை அறத்துக்கு மாறுபட்டு, ஒருவனோ ஒருத்தியோ தனித்து வாழ ஒதுங்குவதும், ஒருவன் பல பெண்களுடனும், ஒருத்தி பல ஆண்களுடனும் சார்பு கொள்வதும் இயற்கை அறமாகா. பலரிடம் மனத்தைத் தூண்டுவது காமம் என்றும், ஒருத்தியும் ஒருவனும் ஈருடல் ஓருயிர் என்ன ஒருமைப்பட்டு வாழ்வது காதல் என்றும் முன்னே பேசியுள்ளேன்.
பெண்ணைக் காமப் பொருளாக எண்ணுவது பாவம். அவ் வெண்ணம் மாறப்பெறல் வேண்டும்; மாறப்பெற்றவனே மனமாசற்ற துறவோன்; ஞானி. அவனே பெண்ணில் தெய்வங் காணும் பேறுபெற்றவன். இக் கருத்தைச் சென்னைப் ‘பச்சையப்பன்’ மண்டபத்தில் சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் ஓர் ஆண்டு விழாக் கூட்டத்தில் யான் வெளியிட்ட வேளையில், ஒரு சைவ சித்தாந்தி சீறி எழுந்து, ‘மாணிக்கவாசகர் பெண்ணை இழித்துப் பாடியுள்ளாரே; அதற்கு என் சொல்வீர்?’ என்று கடாவினர். அப் பாடலைச் சொல்லுமாறு நண்பரை யான் கேட்டேன். அவர், ‘வேனில் வேள் மலர்க்கணைக்கும் வெண்ணகைச் செவ்வாய்க்கரிய – பானல்வாய்க் கண்ணியர்க்கும் பதைத் துருகும் பாழ்நெஞ்சே’ என்ற பாடலைச் சொன்னார். பாடல் என் கருத்துக்குத் துணை போதலை அங்கே விளக்கிக் காட்டினேன். தோழர்களே! பாட்டைக் கூர்ந்து நோக்குங்கள். ‘பெண்ணைக் காமப் பொருளாகக் கருதும் பாழ் நெஞ்சே’ என்று மாணிக்கவாசகர் தமது நெஞ்சைப் பழித்தமை நன்கு விளங்கும். நெஞ்சம் பெண்ணைக் காமக் கூடாகக் கருதலாகா தென்பதும், அவளைத் தெய்வமாகக் கருதும் மனம் தேவை என்பதும் பாட்டின் திரண்ட பொருள். மாணிக்கவாசகர் பெண்மக்களை முன்னிலைப்படுத்திப் ‘பூவல்லிக் கொய்தல்’, ‘தெள்ளேணங் கொட்டல்,’ ‘பொற்சுண்ண மிடித்தல்’ முதலியன பாடியுள்ளனர். அவர், ‘அம்மையெனக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே’ என்று அருளியுள்ளனர். இவைகளைச் சிந்தித்துப் பாருங்கள். மணிவாசகப் பெருமானால் அருளிச் செய்யப்பெற்ற திருவெம்பாவை என்ன அறிவுறுத்துகிறது? அப் பாவையில் பெண்மை மணமே கமழ்கிறது. இளம்பெண்கள் இறைவனை நோக்கி வரங்கேட்டமை ஈண்டு உன்னற்பாலது. ‘இறைவனே! மழை வேண்டும். நல்ல கணவர் வேண்டும்’ என்று இளம்பெண்கள் வேண்டுதல் செய்தமை திருவெம்பாவையில் வெள்ளிடை மலையெனத் திகழ்கிறது. நல்ல கணவரை இளம்பெண்கள் விழைந்ததைப் பாட்டில் அமைத்தருளிய மாணிக்கவாசகர், பெண்ணை விடுத்து ஓடும் பொய்த் துறவையா போற்றுவர்? பெண்மணிகளைக் காமப் பொருளாகவா கருதுவர்? பெருமான் திருவாசகத்தை உலகுக்குத் தந்த அளவில் நின்றாரில்லை. அவர் திருக்கோவையையும் தந்தனர். திருக்கோவை பெண்ணைக் காமப் பொருளென்று வெறுத்தோடும் போலித் துறவையா போதிக்கிறது? காதல் – காதல் – மணங் கமழும் அகப்பொருளுக்குச் சிறந்த இலக்கியமன்றோ திருக்கோவை? தெய்வ நிலை அடைந்த எவரும் தெய்வப் பெண்மக்களை இழித்துக் கூறார். அழகு, மகளிர் பெண்மையில் ஒழுகுகிறது; தாய்மையில் வழிகிறது; இறைமையில் பொங்குகிறது. அழகுக் கடவுளுக்கு உறையுளா யுள்ள பெண்ணை வழிபடுவோரும் அழகு வண்ணராவர்.
——————————
[1]. முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே [1] எங்கணவராவார் அவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையு மிலோம் ஏலோ ரெம்பாவாய். – திருவாசகம்
——————————
குழந்தை
குழந்தை அழகுக் கொழுந்து; அழகுத் தெய்வம். தெய்வம் அழகு. தெய்வ அழகுக் குழந்தை வழிபாடும் அழகுத் தெய்வ வழிபாடாகும். குழந்தையினிடம் தெய்விகம் இருத்தல் மெய்ஞ்ஞானிகட்குப் புலனாதல் ஒருதலை.
சேய்போ லிருப்பர் கண்டீர் மெய்ஞ்ஞானந் தெளிந்தவரே. – பட்டினத்தார்
அந்தச் சமயத்தில் இயேசு இதற்கிசையத் திருவுளம் பற்றினதாவது: பிதாவே, வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே, இவைகளை ஞானிகளுக்கும் விவேகிகளுக்கும் மறைத்துப் பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
– மத்தேயு: 12:25
அவ்வேளையிலே சீஷர் இயேசுவிடம் வந்து: பரலோக ராஜ்யத்தில் எவன் பெரியவனென்று கேட்டார்கள். அவர் ஒரு பிள்ளையைத் தம்மிடம் அழைத்து அதை அவர்கள் நடுவே நிறுத்தி: நீங்கள் மனந் திரும்பிப் பிள்ளைகளைப் போலானா லொழிய பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்களென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகையால், இந்தப் பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ அவனே பரலோக ராஜ்யத்தில் பெரியவன். இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை என் நாமத்தி னிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக் கொள்ளுகிறான். -மத்தேயு: 18:1-5
அப்பொழுது சிறுபிள்ளைகளை அவர் தொடும்படி அவரிடம் கொண்டு வந்தார்கள்; கொண்டு வந்தவர்களைச் சீஷர் அதட்டினார்கள். இயேசுவோ அதைக்கண்டு விசனப் பட்டு: சிறு பிள்ளைகள் என்னிடம் வருகிறதற்கு இடங் கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; கடவுள் ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது. சிறு பிள்ளையைப் போல் கடவுளின் ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாதவன் எவனும் அதில் பிரவேசிக்கவே மாட்டானென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேனென்று சொல்லி அவர்களை அணைத்துக்கொண்டு அவர்கள் மேல் கைகளை வைத்து அவர்களை ஆசிர்வதித்தார். -மார்க்கு: 10:13 – 16
குழந்தை ஓட்டையும் பொன்னையும் ஒன்றாகவே நோக்கும்; பாம்பையும் கயிற்றையும் பொதுவாகவே பார்க்கும்; சேற்றையும் சோற்றையும் சமமாகவே காணும். இவ் வியல்பு தெய்வத் தன்மை கைவந்தவர்பால் விளங்குவது; குழந்தையினிடத்திலும் விளங்குகிறது. குழந்தையின் உள்ளம் நரகமன்று; பரலோகம். பரலோகம் பன்மையற்றது; ஒருமை இன்பமுடையது. அப் பரலோக ஒருமை இன்பம் அழகுக் குழந்தையினிடம் இயற்கையாக அமைந்திருக்கிறது. அழகுக் குழந்தையை வழிபடுவோர் அழகுக் குணம் பரிணமிக்கப் பெறுவர்.
குழந்தையைப் பற்றிய ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. குழந்தையின் மூளை பல வழியிலுஞ் சோதிக்கப் படுகிறது. சோதனையில் குழந்தையின் தெய்விகம் விளங்குகிறது. குழந்தையின் மூளையில் ஞானச் செல்வம் புதிதாக வலிந்து நுழைக்கப்பட வேண்டுவதில்லை என்றும், அதன்கண் ஞானச் செல்வம் இயற்கையாகவே படிந்து முகைபோல் கிடக்கிறது என்றும், ஆசிரியன் களையுளர் கொண்டு குழந்தையுடன் ஆடியும் பாடியும் பேசியும் துணை புரிந்தால் அத்துணையாம் ஒளியால் அதன்பால் ஞானச் செல்வம் படிப்படியே தானே முகிழ்த்து மணம் வீசும் என்றும் இக்கால அறிஞர் கருதுகிறார். இதுவும் குழந்தையின் தெய்வத் தன்மையை விளக்குவதென்று சொல்லலாம்.
நமது நாட்டில் ஒவ்வோராண்டும் புரட்டாசி மாதத்தில் ஒன்பது நாள் கலைமகள் விழாக் கொண்டாடப்படுகிறது. இவ்விழா முன்னை நாளில் குழந்தை வழிபாடாகவே கொண்டாடப்பட்டது. இந்நாளில் இவ் வழிபாடு நடைமுறையில் இல்லை. அந்நாளில் ஒரு வயது முதல் ஒன்பது வயது வரையுள்ள பெண் குழந்தைகள் திரட்டப்படும். ஒவ்வொரு நாளும் முறை முறையாக ஒவ்வொரு குழந்தை பூசிக்கப்படும். இப்பொழுது கலைமகளிடத்தில் செல்வக் குழந்தைகள் சேர்க்கப்படுவதில்லை. கொலைமாக்கள் சேர்க்கப்படுகிறார்கள். கலைவிழா கொலை விழாவாகியது. பண்டை விழா பொருளுடையது. அவ்விழா உணர்த்துவ தென்னை? அது குழந்தை நாகரிகத்தை உணர்த்துவது.
நாகரிக உலகில் நுழைந்து பார்த்தால் அது பன்முகங் காட்டும். நாகரிகத் துறைகள் பலப்பட்டுக் கிடக்கின்றன. அவைகளை மூன்று கூறிட்டுக் கொள்ளலாம். மூன்று எவை? முதுமை நாகரிகம், காளை நாகரிகம், குழந்தை நாகரிகம் என்பன. மக்கள் பருவம், குழந்தை- காளை- முதுமையென இவர்ந்து செல்லும். நாகரிகம் அவ்வாறு செல்வதன்று. அது தலைகீழாக மாறிவரும் பண்புடையது. ‘விருத்த குமார பாலரான படலம்’ என்றொரு தலைப்புத் திருவிளையாடற் புராணத்திலிருக்கிறது. நாகரிகம் அம் முறையில் நிகழ்வது. அது முதுமை, காளை, குழந்தை என்று முத்திறமுடையது.
முதுமை நாகரிகம் அறியாமை இருள் சூழ்ந்த காலத்தில் கருக்கொண்டது; மக்கள் குடலும் பல்லும் விலங்கின் குடலைப் போலவும் பல்லைப் போலவும் இருந்த காலத்தில் உருக்கொண்டு வளர்ந்தது. அந்நாகரிகத்தில் மாக்கள் தொகையே பெருகியிருக்கும். காளை நாகரிகம் முதுமை நாகரிகத்தைக் கடந்தது. அதன் ஆணிவேர் மூர்க்கம். காளை நாகரிகம் அரக்க நாகரிகம் என்றும் வழங்கப்படும். அரக்க நாகரிகம் இதிகாசயது புராணங்களில் பதிவு பெற்றிருக்கிறது. திரிபுரத்தசுரர், சூரபன்மன், இரணியன், இராவணன் முதலியோரின் வாழ்க்கைகள் அந்நாகரிகத்துக்கு எடுத்துக் காட்டுகளாக நிற்கின்றன. அதன் விளைவுகள் பல பதிகளை ஒரு நொடியில் அழிக்கவல்ல விமானங்கள், அஸ்திர சாஸ்திரங்கள், மந்திரங்கள் முதலியன. அக்கினி, வாயு, வருணன் முதலியோர் காளை நாகரிகத்தின் ஏவலாட்கள்.
குழந்தை நாகரிகம் காளை நாகரிகத்தைக் கடந்தது. அந் நாகரிகம் அன்பை அடிப்படையாகக் கொண்டது; இயற்கை வாழ்க்கையுடையது; அமைதி நாட்டமுடையது; கலையை வளர்ப்பது; ‘எல்லோரும் ஓருயிர்’ என்னும் உண்மையை ஓம்புவது; எங்கணும் அழகுக் காட்சியை வழங்குவது.
இம்மூன்றனுள் முதலாவது, இப்பொழுது உலகில் பெரும்பகுதியில் இருப்பதாகத் தெரியவில்லை. அது பெரிதும் இறந்துபட்டதென்றே கூறலாம். இரண்டாவது, உலகில் ஒரு பகுதியிலேயே இப்பொழுது பெரிதும் ஆட்சி பெற்றிருக்கிறது. எப்பகுதியில்? மேலைப் பகுதியில் என்க. மூன்றாவது, கீழைப் பகுதியில் ஆக்கம் பெற்று நீண்ட காலமாயிற்று.
மேலை நாட்டில் காளை நாகரிகம் சண்ட தாண்டவமிடுகிறது. அந்நாடு இவ்வேளையில் கொலைக்களனா யிருத்தல் கண்கூடு. பிணமலைகளும், இரத்தக் கடல்களும் அங்கே காட்சியளிக்கின்றன. ஆகாய விமானங்களும், நீர்மூழ்கிகளும், எறி குண்டுகளும், விஷவாயுக்களும், இன்ன பிறவும் அந்நாட்டின் விளைவுகளாய் விட்டன. அக்கினி, வாயு, வருணன் முதலியோர் வேலைகளை மின்சாரம் செய்கிறது.
காளை நாகரிகம் நமது நாட்டில் கோர நர்த்தனம் புரிந்த காலத்தில் நாடு அறியாமை இருளில் வீழ்ந்தது; மன்பதை மருட்கள்ளை அருந்திக் கொலைவெறி கொண்டது. அவ்வேளையில் ஒரு தர்மபானு உதித்தது. அப் பானு முதல் தீர்த்தங்கரர் என்னும் விருஷபதேவர். அவருடன் குழந்தை நாகரிகமும் பிறந்தது. குழந்தை நாகரிகத்துக்கு விதை விதைத்தவர் விருஷபதேவர். விருஷப பானு அஹிம்சை, தயை முதலியக் கதிர்களைக் கான்றியது. நாட்டில் அறியாமை இருள் அகன்றது. மன்பதை அருளமுதம் பருகிற்று. அதற்குக் கொல்லா நெறி விளங்கிற்று. விருஷபதேவர் காலம் சரித்திர உலகுக்கு இன்னும் எட்டவில்லை. அவர் கிறிஸ்துவுக்கு முற்பட்டவர்; சோக்ரதர்க்கு முற்பட்டவர்; புத்தருக்கு முற்பட்டவர். பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னர் விருஷபதேவரால் அஹிம்சா தர்ம விதை விதைக்கப் பெற்றது. அதனால் குழந்தை நாகரிகம் பரவலாயிற்று. நாடு குழந்தை நாகரிகத்தை ஏற்றமையால், அது கடவுளையும் குருவையும் குழந்தையாக வழிபட முற்பட்டது. கடவுளைப் பாலசுப்பிரமணியம் என்றும், பாலகிருஷ்ணன் என்றும் நாடு வழிபட்டு வருகிறது; திருஞானசம்பந்தர் உள்ளிட்டவரைக் குருவாகக் கொண்டது. மேலைநாட்டிலும் ஒரு கீழை நாட்டு அன்புக்குழவி ஒரு கன்னியின் கையில் பொலிகிறது. அது மேற்கரின் கண்ணுக்குப் படுகிறது; ஆனால் அவர் கருத்தில் படியவில்லை. அது கருத்தில் படிந்திருந்தால், அந்நாட்டில் காளை நாகரிகம் சாய்ந்திருக்கும். யுத்தங்களும் மகாயுத்தங்களும் நடைபெற மாட்டா. இந்நாளில் நமது நாட்டிலும் குழந்தை நாகரிக வளர்ச்சிக்குச் சிறிது முட்டு நேர்ந்திருக்கிறது. காரணம் மேலைநாட்டு நாகரிகக் கூட்டுறவு என்னலாம். இச்சமயத்தில் நாம் என் செய்தல் வேண்டும்? நமது நாட்டு நாகரிகத்தைக் காத்தல் வேண்டும். அதை மேலை நாட்டிலும் புகுத்த முயலல் வேண்டும். காளை நாகரிகத்தில் மூழ்கியுள்ள மேலை நாடு நமது நாட்டுக் குழந்தை நாகரிகத்தை ஏற்குமா? ஏற்கவும் நினைக்குமா? என்று ஐயங் கொள்ளற்க. இப்பொழுது நடைபெற்றுவரும் கோர யுத்தம் மேலை நாட்டினர்க்கு நல்லறிவுச்சுடர் கொளுத்தாமற் போகாது. காளை நாகரிகத்தின் கொடுமைகளை உணர்த்தவே இயற்கை அன்னை கோர யுத்தத்தைக் தோற்றுவித்திருக்கிறாள். இந்த யுத்தம் ஐரோப்பிய நாகரிகத்திலே மக்களுக்கு வெறுப்பூட்டு மென்பதில் ஐயமில்லை. இயற்கை அன்னை தன் கடனைச் செய்கிறாள்; நாம் அவள் வழி நின்று நமது கடனை முறையே செய்தல் வேண்டும். மக்கள் அழகில் உளங்கொண்டு, அதைக் கடவுளாக நினைந்து, குழந்தை அழகில் கருத்திருத்தி அதில் ஆழ்தல் வேண்டும். ஆழ்ந்தால் நெஞ்சம் அழகாகும்; உலகம் அழகாகும்.
கலைகள்
அழகுக் கடவுள் தனி இயற்கையில் எவ்வண்ணம் பொலிந்து உருவங்கள் வாயிலாகத் தன்னை உணர்த்துகிறதோ, அவ்வண்ணமே இயற்கைச் சார்பு பெற்ற கலைகளிலும் பிறவற்றிலும் பொலிந்து தன்னை உணர்த்தும். இயற்கைச் சார்பு பெற்று, அதன் தத்துவங்களையும் தம் அகத்தே தாங்கி நிற்கும் கலைகளெல்லாம் இயற்கையின் பாற்பட்டனவே. அவை செயற்கை அல்ல. கலைகள் இயற்கைக் குழவிகள். அவைகளிடம் இயற்கைக் கூறுகள் இல்லாமற் போகுமோ?
இயற்கைச் சார்பு கொண்ட கலைகள் பலவகை. அவைகளை இங்கே இசை என்றும், காவியம் என்றும், ஓவியம் என் றும் முக்கூறுபடுத்திக் கொள்கிறேன்.
இசை
முதலாவது இசை. இசைக்கு மூலம் நாதம். நாதம் ஒரு தத்துவம். அதற்கு மேற்பட்ட தத்துவம் இல்லை. [1] அதற்கு மேல் ஒளிர்வது பரம்பொருள் ஒன்றே. பரம்பொருளுக்கு மிக அணித்தாக நாதம் இருத்தலால், அது ‘நாதபிர்மம்’ என்றும், ‘சப்தபிர்மம்’ என்றும் அழைக்கப்படுகிறது. ’ஏழிசையாய் இசைப்பயனாய்’ என்றார் வன்றொண்டர்.
——————————
நாதனை [1] நாதாதீத நண்பனை ………..;
பூதமொடு பழகிவளர் ……………
நாதாந்த வெட்ட வெளியே. – தாயுமானார்
——————————
நாத ஒலி கேளாதது. அதைக் கேட்பதாக்க, மனம் கரணம் புலன் பொறி முதலியன அமைந்துள்ளன. நாதம் தனித்தும் இருப்பது; மற்றத் தத்துவங்களுடன் கலந்தும் இருப்பது. தனி நாதத்தினின்றும் எழும் இசையே தூயது; முழுமையது. மற்றத் தத்துவங்களுடன் கலந்துள்ள நாதத்தினின்றும் எழுவது தூய இசையாகாது; முழுமை யாதுமாகாது. கலப்பு நாதம் அவ்வத் தத்துவ இயல்புக் கேற்றவாறு இசையை எழுப்பும். அதனால் அது தூயதாகவும் முழுமையதாகவும் எழுவதில்லை. தனித்த நாதம் வரை சென்று திரும்பும் பயிற்சி பெறும் ஒருவனே சிறந்த இசைப் புலவனாவன். [1] யோகத்தின் முடிந்த எல்லை தனி நாதம் என்று யோக நூல்கள் கூறுகின்றன. தனி நாதம் வரை செல்லாது சிற்சில தத்துவம் வரை சென்று ஆங்காங் குள்ள கலப்பு நாத உறவு கொண்டு திரும்புவோன் நல்லிசைப் புலவனாகான். தனி நாத இசை, கலப்புநாத இசை என்னும் இரண்டில் முன்னையது தன்னை முழக்கும் ஆற்றல் வாய்ந்த ஒருவனையும் பரம்பொருளுடன் ஒன்றச் செய்யும்; பிறரையும் பிறவற்றையும் அதனுடன் ஒன்றச் செய்யும்.
——————————
[1]. ஸ்வரேணா ஸந்தயேத்யோக மஸ்வரம் பாவயேத்பரம் (யோகம் சுரத்துடன் (நாதத்துடன்) சேர்ந்தது; பரம் சுரம் கடந்தது.) – அம்ருதபிந்தூபநிஷத்
——————————
இயற்கையிலே அருவி, கடல், மூங்கில், சங்கு, வண்டு, குயில், வானம்பாடி முதலியன இசை முழக்குகின்றன. அவ்விசையில் ஈடுபட்ட மனிதன், அதன் வயமாகியதும், அவனது மனம் புறத்தே ஒடுங்கி, நடுவில் நின்று, அடியிற் பாய்ந்து மறைந்து, நாதத்தின் கூட்டுறவை அவனுக்கு நல்குகிறது. நாதமூலங் கண்ட மனிதன் இசையின் இயலை உணர்ந்து, இயற்கை வழியே சுரம் முதலிய இசைக் கூறு களைப் படிப்படியே வகுத்தான். இயற்கை இசை, மனிதன் குரல் – குழல் – [1] யாழ், வீணை முதலிய கருவிகள் வாயிலாக வெளியாகி இன்பூட்டுகிறது.
——————————
[1]. வீணையும் குழலும் பாலும் அமுதமும் கரும்பும் தேனும்
பாணியாழ் கனியும் வென்ற பைங்கிளி மழலைத் தீஞ்சொல் – சிந்தாமணி : 1500
——————————
சுரத்தில் அவம் பேசப்படுகிறது. அஃதென்னை? அவசுரம் இசையில் போதிய பயிற்சி இல்லாதவனிடம் உண்டாவது. இயற்கையில் அவசுரம் இல்லை. நாதமூலங் கண்ட இசைவாணனுக்குக் காகசுரமும், கழுதை சுரமும் நாதசுரமாகவே இனிக்கும். நாதமூலங் காணாதார் கூற்று ஏற்கத் தக்கதன்று.
கடவுள் அழகு. அதற்கு அணித்தாக உள்ளது நாதம். நாதம் அழகின் சேர்க்கையால் அழகு வண்ணமாகி மற்றத் தத்துவக் காரியங்களாய இயற்கைக் கூறுகட்கெல்லாம் அழகை உதவி வருகிறது. நாதம் அழகு வண்ணம்; இசை மயம். நாத இசையும் அழகாகுமன்றோ ? இசைவாணர் எத்தகையராயினும் அவர் முகத்தில் அழகு ஒளி செய்தல் காண்கிறோம். இசைமனம் அழகுபெற்று முகத்துக்கும் விருந்து செய்கிறது.
இசையையொட்டியது நாட்டியம். நாட்டியம் ஒவ்வொரு நரம்பையும் பயிற்சியால் பண்படுத்தலால், நரம்புகள் நன் னிலை எய்திக் குருதியோட்டத்தை ஒழுங்குபடுத்தி அழகைப் பொலிவிக்கும். இசையும் அழகும் தொடர்புடையன. இத் தொடர்பு இசையைத் தெய்விகமாக்குகிறது. இசையின் தெய்விகம் செயற்கரிய செய்யும்.
பாணன் காட்டின் வழியே செல்கிறான். மதயானை வெறிகொண்டு ஓடி வருகிறது. பாணன் யாழை முழக்கினான். [1 ]யாழிசை யானையை வயப்படுத்தியது. மதயானை இசை கேட்கிறது. அதன் மனம் மாறியது. இசைக்குப் பாம்பும் படம் விரித்து ஆனந்தக் கூத்தாடும். சங்கரனுக்கு ஆபரணம் எது? பாம்பு. பாம்பு சங்கரனுக்கு அணித்தாகவுள்ள நாத இசை கேட்டு (இசை) ஆபரணமாகியது. இதனால் இராகங்களுள் ஒன்று சங்கராபரணம் என்ற பெயர் பெற்றது போலும்!
——————————
[1] காழ்வரை நில்லாக் கடுங்களிற் றொருத்தல்
யாழ்வரைத் தங்கியாங்கு – கலித்தொகை: பாலை: க.
——————————
இசைக்குக் கனியாத கல்லுமிராது; மரமுமிராது. இசைக்குக் கனியாத மனிதன் இருப்பனேல் அவனை என்னென்று கூறுவது? அவன் கல்லினும் வலியன்; மரத்தினும் வைரன்; கொலைஞன்; பாவி; அரக்கன். இசை யைப்பற்றிய தெய்விகக் கதைகள் பல உண்டு. அவை யாவும் இசையின் மாண்பை மக்கள் உணர்ந்து நடப்பதற் கென்று புனையப்பெற்றன.
‘இசை பாடற்குரியது; வழிபடற்குரியதோ?’ என்று சிலர் நினைக்கலாம். இசையைப் [2] பாடுவதும் வழிபாடாகும். வழிபாடென்பது பூவெடுத்து மாலை கட்டி இறைவனுக்குச் சூட்டிக் கோயிலை வலம் வந்து கையால் கும்பிடுவது மட்டுமன்று. மனத்தால் அழகுக் கடவுளை நினைப்பதும், அதனுடன் ஒன்றுவதும், வாயால் அதன் புகழை இசையாகப் பாடுவதும், இன்ன பிறவும் வழிபாடுகளே யாகும்.
இசை வழிபாடு செய்து பேறு பெற்றவர் கதைகள் பலவுண்டு. அறுபான் மும்மை நாயன்மாருள் இசை முழக்கிப் பேறு பெற்றவரும் இருக்கின்றனர். ஆனாயர், திருநீல கண்ட யாழ்ப்பாணர், திருஞானசம்பந்தர் முதலியோர் இசை வழிபாடு செய்தவர். இசை வழிபாட்டுச் சிறப்பைப் பாகவதம், பெரிய புராணம் முதலிய நூல்களிற் பார்க்க.
——————————
ஆடும் பரிவேல் அணிசே வலெனப்
[2]பாடும் பணியே பணியாய் அருள்வாய் – கந்தரநுபூதி.
——————————
காவியம்
இனிக் காவியக் கடலில் விழலாமா? அக்கடலில் விழுந்தால் எழுதல் முடியுமோ? நீர்க்கடலின் ஆழத்தைக் காண்டல் இயலும். காவியக் கடலின் ஆழத்தைக் காண்டல் இயலாது. ஆதலின் ஓதத்தில், சிறிது நேரம் நின்று பார்த்துப் பின்னே ஓவிய மலையிலேற முயலுவோம்.
காவியம் கோயில்; இயற்கைக் கோயில். அது கல்லால் மண்ணால் எடுக்கப்படுவதன்று; பாட்டால் அமைவது. உரைநடையிலும் பாட்டு அமையும். நடை முதலிய கட்டுகள் பாட்டுக்கு வேண்டுவதில்லை. பாட்டு மேக ஓட்டம் போல் ஓடுவது. இப்பாட்டு உரிமையுடையது. இப்பாட்டா லாகுங் காவியமும் உரிமையுடையதாகும். பாட்டுக்கும் காவியத்துக்கும் முதலாகவுள்ள இயற்கை உரிமையுடை யது. காரணம் எவ்வியல்பினதோ அவ்வியல்பினதாகவே காரியமும் அமையும்.
பாட்டு இயற்கைப் படம் என்று சொல்லப்படுகிறது. படம் என்றால் புகைப்படமா? எழுத்துப் படமா? எழுத் தோவியப் படமா? ஓர் அழகிய பசு நிற்கிறது. அதை ஒருவன் புகைப்படத்தில் இறக்குகிறான்; மற்றொருவன் எழுத்தில் இறக்குகிறான்; இன்னொருவன் எழுத்தோவியத்தில் இறக்குகிறான். இம்மூன்றனுள் எது இயற்கைப் படம்? புகைப்படம் ஒரு நொடியில் எடுக்கப்படுகிறது. இப் படமெடுப்போன் நெஞ்சம் பசுவினுள் படிவதில்லை. அவன் நோக்கம் கருவியின் மீது செல்லும். அவனால் எடுக்கப்படும் புகைப்படத்தில் பசுவின் புறத்தோற்றம் மட்டும் காணப்படும்; பசுவின் இயல், அகம் முதலியன விளங்குவதில்லை. பசுவின் இயல் முதலியவற்றை உணர்த்தாத. ஒன்று எப்படி இயற்கைப் படமாகும்? எழுத்துப் படத்தில் எழுத்துக் கூட்டங்கள் காணப்படுகின்றன; சொல்லடுக்குகள் காணப்படுகின்றன. ஆனால் பசுவைக் காணோம். இப்படம் ஓவியக் கண்ணனால் எழுதப்பட்டதன்று. எழுத்துஞ் சொல்லும் ஒருமைப்பட்டு ஓவியமாகிப் பொருளைப் புலப்படுத்தல் வேண்டும், ஓவியம் விளங் காத எழுத்துப்படம் இயற்கையாகாது. எழுத்தோவிய படத்தில் பசு காட்சியளிக்கிறது. பசுவின் இயல், அகம் முதலியன விளங்குகின்றன. ஓவியம் எழுத்தை மறைத்துப் பசுவை உணர்த்துகிறது. அதனால் பசுத் தோற்றமும், இயலும், பிறவும் உள்ளத்தில் உறுகின்றன. அப் பசுவின் காட்சியால் விளையத்தக்க பயன்களெல்லாம் விளைகின்றன. காரணம் என்ன? பசுவை எழுத்தோவியன் நோக்குகிறான்; ஊன்றி நோக்குகிறான். பசு அவன் மனத்தில் படிகிறது. பசுவும் அவன் மனமும் ஒன்றாகின்றன. அவன் மனம் பசுவாகிறது. அம்மனம் எண்ணமாகி எழுத் தாகி ஓவியமாகிப் பசுவைக் காட்டுகிறது. பசு ஓவியன் மனம் புகுந்து மீண்டும் வெளியாகிறது. உயிருள்ள பசு காட்சியளிக்கிறது; பசுவின் இயல் முதலியனவும் விளங்குகின்றன; பயன்களும் விளைகின்றன. எழுத்தோவியத்தின் பெற்றி என்ன? பெற்றிமையுடைய எழுத்தோவியம் இயற்கைப் படம்; பாட்டு.
பாட்டு ஓவியம். எவ்வோவியம்? எழுத்தோவியம். அது வரி ஓவியமன்று; வடி ஓவியமன்று. எழுத்தோவியமும் பிற ஓவியமும் வடிவத்தில் மட்டும் வேற்றுமை பெறும்; பொருளில் வேற்றுமை பெறுவதில்லை. ஒரு மயிலை ஒரு பாவாணனும் எழுதுகிறான்; ஓர் ஓவியனும் வரைகிறான். இரண்டும் வடிவில் வேற்றுமை அடைகின்றன; ஆனால் பொருளில் வேற்றுமை அடைவதில்லை. இரண்டும் மனத் தில் மயிலையே நிறுத்தும். இங்கே பாவாணனது பாட்டென்னும் எழுத்தோவியத்துக்கும், மற்ற வரி ஓவியத்துக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஓர்க.
இயற்கைப் படங்களாகிய பாட்டுக்களிற் சிலவற்றை யாதல் எடுத்துக்காட்ட இயலாமை குறித்து வருந்துகிறேன். தாலிபுலாக நியாயம்பற்றி ஆங்கொன்று ஈங்கொன்று எடுத்துக் காட்டுகிறேன்.
(வையை, பாண்டியன் சேனை போன்று காட்சியளிக்கும் பாட்டு. இது பரிபாடலிலுள்ளது – 22.)
ஒளிறுவாட் பொருப்ப னுடல் சமத் திறுத்த
களிறுநிரைத் தவைபோற் கொண்மூ நெரிதர
அரசுபடக் கடந்த வானாச் சீற்றத்தவன்
முரசதிர் பவைபோன் முழங்கிடி பயிற்றி
ஒடுங்கா ருடன்றவன் றானை வில்விசை
விடுங்கணை யொப்பிற் கதழுறை சிதறூஉக்
கண்ணொளி ரெஃகிற் கடியமின் னியவன்
வண்மை போல் வானம் பொழிந்தநீர் மண்மிசை
ஆனாது வந்து தொகுபீண்டி மற்றவன்
தானையி னூழி …… தாவூக்கத்திற்
போன நிலமெல்லாம் போரார் வயல் புகுத ***
[யானை வரிசை: மேக வரிசை; முரசு முழக்கம் : இடி முழக்கம்; பகைவர்மீது பொழியும் அம்புகள்: மழைத் தாரைகள்; வேலொளி : மின்னல்; மன்னவன் வண்மை : மழை பெய்தல்; படை: வெள்ளப் பெருக்கு.]
[கோவலனும் கண்ணகியும் மதுரை நோக்கிப் புறப் பட்டனர்; வழியில் கவுந்தியடிகளைக் கண்டனர். அடிகள் வழிவளங் கூறினர். அதை இளங்கோ அடிகள் பாட்டோவியமாக வரைந்துள்ள பெற்றி நெஞ்சைக் கவர்கிறது. ஓவியத்துள் சீலம் சீவனெனச் சிறந்து விளங்குதல் உன்னற் பாலது. இயற்கை வருணனையில் சீலத்தைத் திகழவைத்த இளங்கோவின் தமிழ் வாழ்க.]
கோவலன் காணாய் கொண்ட இந்நெறிக்
கேதந் தருவன யாங்கும் பல கேண்மோ
வெயினிறம் பொறா அ மெல்லியற் கொண்டு
பயில்பூந் தண்டலைப் படர்குவ மெனினே
மண்பக வீழ்ந்த கிழங்ககழ் குழியைச்
சண்பக நிறைத்த தாதுசோர் பொங்கர்
பொய்யறைப் படுத்துப் போற்றா மாக்கட்குக்
கையறு துன்பங் காட்டினுங் காட்டும்
உதிர்பூஞ் செம்மலின் ஒதுங்கினர் கழிவோர்
முதிர்தேம் பழம் பகை முட்டினும் முட்டும்
மஞ்சளும் இஞ்சியும் மயங்கரில் வலயத்துச்
செஞ்சுளைப் பலவின் பரற்பகை யுறுக்குங்
கயனெடுங் கண்ணி காதற் கேள்வ
வயலுழைப் படர்குவ மெனினே யாங்குப்
பூநா றிலஞ்சிப் பொருகய லோட்டி
நீர் நாய் கௌவிய நெடும்புற வாளை
மலங்குமிளிர் செறுவின் விலங்கப் பாயிற்
கலங்கலும் உண்டிக் காரிகை யாங்கட்
கரும்பிற் றொடுத்த பெருந்தேன் சிதைந்து
கரும்புசூழ் பொய்கைத் தூநீர் கலக்கும்
அடங்கா வேட்கையின் அறிவஞ் ரெய்திக்
குடங்கையி னொண்டு கொள்ளவுங் கூடும்
குறுந ரிட்ட குவளையம் போதொடு
பொறிவரி வண்டினம் பொருந்திய கிடக்கை
நெறிசெல் வருத்தத்து நீரஞ் ரெய்தி
அறியா தடியாங் கிடுதலுங் கூடும்
எறிநீரடைகரை இயக்கந் தன்னில்
பொறிமாண் அலவனும் நந்தும் போற்றா
தூழடி யொதுக்கத் துறு நோய் காணில்
தாழ்தரு துன்பந் தாங்கவு மொண்ணா
வயலுஞ் சோலையும் அல்ல தியாங்கணும்
மயல்படக் கிடந்த நெறியாங் கில்லை
நெறியிருங் குஞ்சி நீ வெய்யோளொடு
குறியறிந் தவையவை குறுகா தோம்பென
[சோலைச் சூழல். வள்ளிக்கிழங்கு தோண்டி எடுக்கப் பெற்ற குழிகள். அவைகளில் உலர்ந்த பூக்கள் நிறைவு. மேல் நோக்கிச் சென்றால் குழியில் கால் வழுக்கித் துன்புறும்; (பூச்சிகள் துன்புறும்). கீழ்நோக்கிச் சென்றால் பழக் கொத்துக்கள் தாக்கும்; (மொய்த்துள்ள வண்டுகள் துன்புறும்].
வெள்ளிடையே போனால் மஞ்சள் இஞ்சி பலாப்பருக்கை முதலியன சருகுகளில் மறைந்து உறுத்தும்.
வயல் வழியே போனால் கால்வாய்களில் நீர்நாய்களும் பலவித மீன்களும் மனக் கலக்கத்தை உண்டாக்கும்; (நடை யொலி கேட்டு அவைகள் அப்படியும் இப்படியும் ஓடும். அவ்வேளையில் மீன்கள் நீர்நாய்களுக்கும், சிறுமீன்கள் பெரு மீன்களுக்கும் இரையாகும். அக்காட்சி நெஞ்சைக் கலக்கும்.)
கரும்புத் தோட்டம்; தேனடைகள்; தேனொழுகிப் பாயும் பொய்கை. நீர் வேட்கையால் பொய்கை நீரைக் குடித்தல் நேரும்; (தேன் கலந்த நீர் கள்ளன்றோ?)
குவளைப் பூக்களுள் வண்டுகள். அவைகள் மிதியுண்டு சாகும்.
அடைகரை; நண்டு நத்தை முதலியவற்றின் உலா; அவை நடுங்கி ஓடும்; மிதியும் உண்ணும்.
[சீலத்துக்குக் கேடுறாதவாறு எச்சரிக்கையாக நடக்க.)
(கட்டியங்காரன், சச்சந்தன் என்னும் மன்னனை வளைத்துக் கொண்டான். அப்பொழுது மன்னன் மனைவி விசயை கருவுற்றிருந்தாள். மன்னன் அவளை மயிற்பொறியி லேற்றி வேறிடஞ் செல்லுமாறு விடுத்தான். போரில் சச்சந்தன் தோல்வியுற்று மாண்டான். அச்செய்தியை முரசொலியால் உணர்ந்த விசயை மூர்ச்சை யடைந்தாள். மயிற்பொறி மேலும் அவளால் செலுத்தப்படவில்லை. அப்பொறி ஒரு சுடுகாட்டில் இறங்கியது. விசயை தெளிவு பெற்றாள்; கருவுயிர்த்தாள். ஓர் ஆண் குழவி (சீவகன்) பிறந்தது. குழவி சுடுகாட்டில் பிறத்தல் நேர்ந்தமையை அவள் நினைந்து நினைந்து வருந்திக் கண்ணீர் உகுத்தாள். பின்னே சுடுகாட்டுத் தெய்வமொன்று விசயையின் தோழிபோல வேடந்தாங்கி அவளிடம் போந்து, ‘இங்கே இக்குழவியை எடுத்துச் செல்ல ஒருவன் வருவான். குழந்தையால் பின்னாளில் கட்டியங்காரன் கொல்லப்படு வான். நாம் மறைந்து நிற்போம்’ என்றாள். விசயை மறைந்து ஒரு கொம்பைப் புல்லி, ஒரு கண்ணால் குழந் தையை நோக்கி நின்றாள். விசயை குழந்தையை நோக்கிச் சுடுகாட்டில் வருந்தியதும், கொம்பைப்புல்லி ஒரு கண்ணால் அதை நோக்கியதும் சிந்தாமணியில் பாட்டுருவம் பெற்றுள்ள காட்சியை நோக்குக.)
வெவ்வா யோரி முழவர்க விளிந்தா ரீமம் விளக்காக
ஒவ்வாச் சுடுகாட் டுயரரங்கின் நிழல் போல் நுடங்கிப் பேயாட
எவ்வாய் மருங்கும் இருந்திரங்கிக் கூகை குழறிப் பாராட்ட
இவ்வா றாகிப் பிறப்பதோ இதுவோ மன்னர்க் கியல்வேந்தே.
நல்வினை செய்தி லாதேன் நம்பி நீ தமியை யாகிக்
கொல்வினை மாக்கள் சூழக் கிடத்தியோ என்று விம்மாப்
புல்லிய கொம்பு தானோர் கருவிளை பூத்த தேபோல்
ஒல்கியோர் கொம்பு பற்றி ஒருகணால் நோக்கி நின்றாள்.
(இராமபிரான் முடிசூட்டு விழா நிகழ்ச்சிகள் கௌசலையின் கருத்திற் படிந்திருந்தன. அவை அவள் தன் கண்ணில் காட்சியாதற்கு முன்னரே இராமபிரான் சிற்றன்னை விரும்பியவாறு காடு நோக்க ஒருப்பட்டு அன்னையினிடம் விடைபெறச் சென்றனர். அந்நிலையில் கௌசலையின் கருத்துங் கண்ணுங் கண்ட காட்சியைக் கம்பர் படமெடுத்துக் காட்டுகிறார்.)
குழைக்கின்ற கவரி யின்றிக் கொற்றவெண் குடையு மின்றி
இழைக்கின்ற விதிமுன் செல்லத் தருமம்பின் னிரங்கி யேக
மழைக்குன்றம் அனையான் மௌலி கலித்தனன் வருமென் றென்று
தழைக்கின்ற வுள்ளத் தன்னாள் முன்னொரு தமியன் சென்றான்.
புனைந்திலன் மௌலி குஞ்சி மஞ்சனப் புனித நீரால்
நனைந்திலன் என்கொல் என்னும் ஐயத்தாள் நளின பரதம்
வனைந்தபொற் கழற்கால் வீரன் வணங்கலுங் குழைந்து வாழ்த்தி
நினைந்ததென் இடையூ றுண்டோ நெடுமுடி புனைதற் கென்றாள்.
(கார்காலம் சேக்கிழாரின் எழுத்தோவியத்தில் அமைந்துள்ள திறத்தை முன்னுக.)
நீலமா மஞ்ஞை ஏங்க நிரைக்கொடிப் புறவம் பாடக்
கோலவெண் முகையேர் முல்லை கோபம் வாய் முறுவல் காட்ட
ஆலுமின் னிடைசூழ் மாலைப் பயோதரம் அசைய வந்தாள்
ஞால நீ டரங்கி லாடக் காரெனும் பருவ நல்லாள்.
அளிக்குலங்கள் சுளித்தகல அரவிந்தம் முகம் புலரப்
பளிக்குமணி மரகதவல் லியிற்கோத்த பான்மையெனத்
துளித்தலைமெல் அறுகுபனி தொடுத்தசையச் சூழ்பனியால்
குளிர்க்குடைந்து வெண்படாம் போர்த்தனைய குன்றுகளும்.
(இயற்கை வழியே இறையைப் பாடுதல் திருஞானசம்பந்தர் வழக்கம். திருவீழிமிழலையில் இயற்கை நாடகமும், இயற்கைத் திருமணமும் சம்பந்தர் உள்ளத்தைக் கவர்ந்தன. அவை பாட்டாயின .)
உரைசேரும் எண்பத்து நான்கு நூ றாயிரமாம் யோனி பேதம்
நிரைசேரப் படைத்தவற்றின் உயிர்க்குயிராய் ஆங்காங்கே நின்றான் கோயில்
வரைசேரும் முகிழ்முழவ மயில்கள் பல நடமாட வண்டு பாட
விரைசேர்பொன் னிதழிதர மென்காந்தள் கையேற்கும் மிழலை யாமே
அகனமர்ந்த அன்பினராய் அறுபகை செற் றைம்புலனும் அடக்கி ஞானம்
புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத் – துள்ளிருக்கும் புராணர் கோயில்
தகவுடைநீர் மணித்தலத்துச் சங்குளவர்க் கந்திகழச் சலசத் தீயுள்
மிகவுடைய புன்குமலர்ப் பொரியட்ட மணஞ் செய்யும் மிழலை யாமே.
(நக்கீரர் பாவாலும் உரையாலும் எழுத்தோவியம் வரைவதில் வல்லவர். இங்கே ஓர் உரை ஓவியம் காண்க.)
இப் பாட்டுக்களை நோக்குங்கள்; இவைகளிலே நெஞ்சை விடுங்கள். நெஞ்சம் ஆழ்ந்து ஆழ்ந்து சென்று அவ்வப்பாட்டின் இயற்கைக் கூறுகளில் படிந்து நிற்கும். இதனால் பாட்டுக்கும் இயற்கைக்கும் உள்ள இயைபு நன்கு விளங்கும்.
——————————
[***] சந்தனமும் சண்பகமும் தேமாவும் தீம்பலவும் ஆசினியும் அசோகமும் கோங்கும் வேங்கையும் குரவமும் விரிந்து, நாகமும் திலகமும் நறவும் நந்தியும் மாதவியும் மல்லிகையும் மௌவலோடு மணம் கமழ்ந்து, பாதிரியும் பாவை ஞாழலும் பைங்கொன்றையொடு பிணியவிழ்ந்து, பொரிப் புன்கும் புன்னாகமும் முருக்கொடு முகைசிறந்து, வண்டறைந்து, தேனார்ந்து, வரிக்குயில்கள் இசைபாட, தண் தென்றல் இடைவிராய்த் தனியவரை முனிவு செய்யும் பொழிலது நடுவண், ஒரு மாணிக்கச் செய்குன்றின் மேல், விசும்பு துடைத்துப் பசும்பொன் பூத்து வண்டு துவைப்பத் தண்தேன் துளிப்பதொர் வெறியுறு நறுமலர் வேங்கை கண்டாள்; கண்டு பெரியதோர் காதல் களிகூர்ந்து, தன் செம்மலர்ச் சீறடிமேல் சிலம்பு கிடந்து சிலம்பு புடைப்ப, அம்மலரணிக் கொம்பர் நடை கற்பதென நடந்து சென்று, நறை விரிவேங்கை நாண்மலர் கொய்தாள்; கொய்த இடத்து, மரகதமணி விளிம்படுத்த மாணிக்கச்சுனை மருங்கினதோர் மாதவி வல்லி மண்டபத்துப் போது வேய்ந்த பூநாறு கொழு நிழற்கீழ்க கடிக்குருக்கத்திக் கொடிப்பிடித்துத் தகடுபடு பசும்பொன் சிகரங்களின் முகடு தொடுத்து ஞான்று வந்து இழிதரும் அருவி, பொன் கொழித்து மணி வரன்றி மாணிக்கத்தொடு வயிரமுந்தி அணிகிளரருவி ஆடகப் பாறைமேல் அதிர்குரல் முரசின் கண்ணிரட்ட, வண்டும் தேனும் யாழ் முரல, வரிக்குயிலும் கிளியும் பாட, தண்தாது தவிசு படப் போர்த்ததோர் பளிக்குப்பாறை மணித்தலத்துமிசை, நீல ஆலவட்டம் விரித்தாற் போலத் தன் கோலக்கலாவம் கொள விரித்து, மூளையிளஞாயிற்று இளவெயில் எறிப்ப, ஓர் இளமயில் ஆடுவது நோக்கி நின்றாள். அப்பால், தலைமகனும் பற்பன்னூறாயிரவர் கூர்வேல் இளைஞரொடு நளிர்மாமலைச் சாரல் வேட்டம் போய் விளையாடுகின்றான். ஆண்டெழுந்த தோர் கடுமானின் பின் ஓடி, காவலிளைஞரைக் கையகன்று, நெடுமான் தேரொடு பாகனை நிலவு மணல் கானியாற்று நிற்கப் பணித்து, தொடுகழல் அடியதிரச் சுருளிருங் குஞ்சி பொன் ஞாணிற் பிணித்து, கடிகமழ் நறுங்கண்ணிமேல் கொண்டு வண்டு மணம் அயர , அஞ்சாந்தின் நறுநாற்றம் அகன்பொழிலிடைப் பரந்து நாற , அடுசிலையொடு கணை ஏந்தி வடிவு கொண்ட காமன் போலச் சென்று, அவள் நின்ற இரும்பொழில் புகும். ***
– இறையனார் அகப்பொருள்- உரை: உ.
——————————
(தொடர்கிறது)
$$$